பிதாப்பிதாவாகிய புனித சூசையப்பர்!

புனித சூசையப்பருக்கே உரிய அடைமொழி “ பிதாப்பிதாவாகிய அர்ச்சிஷ்ட்ட சூசையப்பர். “ முன்பெல்லாம் ஜெபமாலையின் முடிவில் “ அதிதூதரான அர்ச். மிக்கேலே, தேவதூதர்களான அர்ச். மிக்கேலே, ரஃபேலே, பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே, புனித ராயப்பரே, சின்னப்பரே, எங்கள் பாதுகாவலரான பினித சந்தியாகப்பரே ( அந்தந்த  பங்கின் ஆலயத்தின் பாதுகாவலரின் பெயரைச் சொல்லுவது வழக்கம்) என்றுதான் ஜெபமாலையின் நிறைவில் சொல்லுவோம்  இன்னும் அந்த வழக்கம் இன்னும் சில இடங்களில் இருக்கிறது .. அப்படிப்பட்ட பேறுக்கு உரியவர் புனித சூசையப்பர். அவரின் சுகிர்த மன்றாட்டுகளிலும் “ பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே என்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியானால் புனித சூசையப்பர் எவ்வளவு பெரியவர்..

அவருக்கு எவ்வளவு பெரிய அந்தஸ்து, பேறுபலன்கள், பொறுப்பு இருக்கிறது..

புனித சூசையப்பரின் நவநாள் ஜெபத்தில் இப்படி ஒரு வாக்கியம் வருகிறது “ ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே ! நரக சத்துருக்களோடு நாங்கள் செய்யும் யுத்தத்திலே நீர் மோட்ச சிம்மாசனத்தில் இருந்து கிருபையாய் எங்களைப் பார்த்து துணையாய் வருவீராக “.. அப்படியானால் அவருக்கு எவ்வளவு வல்லமை இருக்கிறது.. அதாவது நம் கத்தோலிக்க தாய்திருச்சபை தேவமாதாவுக்கு அடுத்த படியாக புனித சூசையப்பருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது…

 மோட்சத்தில் தேவமாதாவுக்கு அடுத்த படியாக மகிமையும், முக்கியத்துவமும், வல்லமையும் கொடுக்கப்பட்டிருப்பதும் புனித சூசையப்பருக்கே…

நிறைய இடங்களில் புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது.. ஆனால் நிறைய பேருக்கு புனித சூசையப்பரின் மகத்துவமும், வல்லமையும் தெரியவில்லை. அவரை சரியாக பயன்படுத்திக்கொள்வதும் இல்லை..

அவருடைய மகிமையில் ஒரு சில…

1.   கடவுளுக்கே சாப்பாடு போட்டவர்..

2.   புனித சூசையப்பர் உழைத்தால்தான் தேவமாதாவுக்கும், ஆண்டவருக்கும் சாப்பாடு..

3.   அன்று அவருக்கு வேலை வரவில்லையென்றால் திருக்குடும்பமே பட்டினி..

4.   கடவுளைப் பாதுகாத்தவர்..

5.   “ குழந்தைக்கு ஆபத்து.. அவரையும் அவர் தாயையும் தூக்கிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போங்கள் “ என்று தேவ உத்தரவுக்கு பணிந்து ஒருவார்த்தை கூட பேசாமல் கடவுளைப் பாதுகாக்க ஓடிப்போனவர்..

“ கடவுள்தானே எங்களைப் பாதுகாக்க வேண்டும். நான் கடவுளைப் பாதுகாக்கவா? “ என்று கேள்வி கேக்கவில்லை.

6.   மாதாவுக்கு அடுத்தபடியாக “ கேள்வியற்ற கீழ்ப்படிதலைக் கடைப்பிடித்தவர்..

7.   அன்று தொழில் இல்லையென்றால் கடவுள் நம்மோடு இருக்கும்போதே நமக்கு தொழில் இல்லையே.. கடவுள்தானே நமக்கு சாப்பாடு போட வேண்டும்.. நம்மோடு இருப்பவர் கடவுள்தானா? “ என்று அவர் கேள்விக்கேட்கவில்லை.. விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம் என்றால் புனித சூசையப்பரும் விசுவாசத்தின் தந்தையே..

8.   ஒரே ஒரு முறை புனித அந்தோணியார் அவரை மார்பில் தாங்கியதற்கு அவருக்கு இத்தனை மகிமையென்றால், ஆண்டவரின் மார்பில் ஒரே ஒரு முறை சாய்ந்த புனித அருளப்பருக்கு ( புனித யோவான். கடைசி இராவுணவு) இத்தனை மகிமையென்றால் பாலன் இயேசு நடக்க ஆரம்பிக்கும் வரையும், அதன் பின்பும் எத்தனை முறை புனித சூசையப்பரின் மார்பின் மீது சாய்ந்திருப்பார். சாய்ந்து தூங்கியிருப்பார்.. அப்படியானால் அவரின் மகிமை எத்தகையதாக இருக்கும்..

9.   மாதாவைப்போல எத்தனைமுறை பாலன் இயேசுவை கொஞ்சியிருப்பார்..

10. ஆண்டவர் சாய்ந்த புனித சூசையப்பரின் இருதயம் எப்பேர்பட்டதாக தூயதாக இருக்கும்.. பரிசுத்தமாக இருக்கும்…

11. திருக் குடும்பத்தையே பாதுகாத்தவர்.. பராமரித்தவர்… திருக்குடுபத்தின் தந்தை என்றால் அவர் எப்பேர்பட்டவராக இருப்பார்..

12. கற்பின் பாதுகாவலர், கற்பிற்கு பாதுகாவலர் எப்பேர்பட்ட நீதிமானாக இருப்பார்.

13. இன்று அனேக கன்னியர் மடங்கள் புனித சூசையப்பரைத்தானே பாதுகாவலாராக கொண்டிருக்கிறது.. “ தேவதாயையே பாதுகாத்தவரல்லவா”
14. புனித சூசையப்பரை விட நன்மரணம் யாருக்கு கிடைக்கும்.. ஒரு பக்கம் தேவ தாய், மறு பக்கம் நம் ஆண்டவராகிய இயேசு. இருவரின் கரங்களைப் பற்றியவாறு ஆண்டவர் இயேசுவின் மடியில் மரிக்கும் பேறு வேறு யாருக்கு கிடைக்கும்...

15. விவிலியத்தில் ஒரே வரியில் அவரை “ நீதிமான் “ என்று ஒரு வார்த்தையில் குறிப்பிட்டாலும், நீதிமானாக இருப்பதும், வாழ்வதும் எவ்வளவு கடினம்.

16. புனித சூசையப்பரைப் பற்றி ஆண்டவரைப் பின் சென்ற அனேக புனிதர்கள் இருக்கிறார்கள்..

17. அதில் ஒருவர் புனித தெரசம்மாள்.. புனிதருடைய சுகிர்த மன்றாட்டில் இப்படி ஒரு வார்த்தை வருகிறது..
“ கிருபை, தயாளம் நிறைந்தவருமாய், எங்கள் பிதாப்பிதாவகிய அர்ச். சூசையப்பரே ! தேவரீரை மன்றாடி தேவரீருடைய அடைக்கலத்தைத் தே மன்றாடி, தேவரீருடைய அடைக்கலத்தைத் தேடி, உம்மிடத்தில் தாமிரந்து கேட்டதை அடையாமல் போனதில்லை” என்று அர்ச். தெரசம்மாள் நிச்சயித்ததை நினைத்தருளும்…

18. இதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ மகிமைகள் உள்ளன..

நன்றி  : புனித சூசையப்பரின் மகிமைகள் உதவி சகோதரர் தன்ராஜ் ரொட்ரிகஸ்,  வாழும் ஜெபமாலை இயக்கம்.

இந்த கடைசிகாலங்களில்.. பாவங்கள் நிறைந்த காலத்தில் நரக சத்துருக்களோடு நாம் போர் செய்ய வேண்டியிருப்பதால்.. புனித சூசையப்பரின் பாதுகாவலையும், அடைக்கலத்தையும் தேடுவோம்…

“ பிதாப்பாகிய புனித சூசையப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் “

“ இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க ! “