தேவமாதாவின் வணக்கமாதம்

முந்தின நாள்

இந்த மாதத்தில் தேவமாதாவைப் பின்பற்றி பக்தியுடனேயும் ஞான சுறுசுறுப்புடனேயும் நடக்கிறதற்காக ஆராய்ந்து பார்க்க வேண்டிய மூன்று முகாந்தரங்கள்.

1- வது தேவமாதாவின் நிகரில்லாத மகத்துவமும்,  

2- வது மோட்ச இராக்கினியின் பேரில் புனிதர்கள் வைத்த பக்தியின் மாதிரிகையும், 

3- வது தேவமாதாவின் பேரில் காட்டும் பக்தியினால் வரும் ஞானப்பிரயோசனமுமாகும். 

1- வது. மனிதரிடத்தில் பணிவான வணக்கத்தை எழுப்புகிற முகாந்தரம் எல்லாம் அதிசயத்துக்குரிய கன்னிமரியிடத்தில் அடங்கியிருக்கிறது. அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாள் படைக்கப்பட்ட வஸ்துக்களுக்குள்ளே மகா பரிசுத்தமுள்ளவருமாய் சர்வேசுரன் உண்டாக்கின மகாத்துமாக்களுக்குள்ளே மேலானவருமாய், பரலோக பூலோகத்தின் இராக்கினியுமாய், மனிதர்களுக்கும், சம்மனசுகளுக்கும் ஆண்டவருமாய், கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலமான தாயானவருமாய் இருக்கிறதுமல்லாமல், அளவில்லாத மகிமை உடைத்தான ஆராதனைக்குரிய இயேசுநாதரைப் பெற்றதினால் எவராலும் கண்டுபிடிக்கக்கூடாத உன்னத மாட்சி பொருந்தியவருமாயிருக்கிறார். தேவதாய் மோட்சவாசிகளுக்குள் மேலான சிம்மாசனத்தையும் மனோவாக்குக் கெட்டாத மகிமையையும் பெற்றிருக்கிறபடியால் அன்னையைச் சிநேகிப்பதும் வாழ்த்துவதும் துதிப்பதும் நியாயம். ஆதலால் புனித பெர்நர்து சொல்லியிருக்கிறபடி தேவமாதாவே முழுமனதுடன் நேசித்து அன்னையை தக்க மேரையோடு சிநேகிக்கக் கடவோம். அன்னை சர்வேசுரனால் உண்டாக்கப்பட்டவருமாய் ஆண்டவருடைய அடிமையானவருமா யிருக்கிறபடியால் சர்வேசுரனுக்குரிய ஆராதனையை மரியன்னைக்குச் செலுத்தக்கூடாது. மற்றபடி மனிதர் மாதாவை எவ்வளவு வணங்கினாலும் அவ்வணக்கம் மாதாவுக்குப் பொருந்தும். ஆகையால் அவருடைய மகிமைக்காகக் குறிக்கப்பட்ட இந்த மே மாதத்தில் அனுதினமும் அன்னையை ஸ்துதித்து நன்றியறிந்த மனதோடு அன்னையை சிநேகிக்கக்கடவோம்.

2-வது - எவ்விடத்திலும் எக்காலத்திலும் புனிதர்களெல்லோரும் இந்த இராக்கினியின் பேரில் மிகுந்த பக்தி நேசத்துடன் விளங்கி வந்தார்கள். அவர்களுக்குள்ளே அன்னையை சிநேகியாதவர்களும் முழுமனதோடு வேண்டிக் கொள்ளாதவர்களும் இல்லை. மனிதர் எல்லோரும் அன்னையின் மகிமையை அறிந்து அதிகமாய்க் கொண்டாடி சிநேகிக்கும்படிக்கு புனிதர்கள் சொன்னதும் செய்ததும் பிரசங்கித்ததும் சொல்லி முடியாது. அவர்கள் தேவமாதாவின் பேரில் வைத்த அத்தியந்த பக்தியினால் சுலபமாய் மோட்சத்தை அடைந்தார்களென்று அறிந்து அவர்களை பின் சென்று தேவமாதாவை வணங்கி அவள் மேல் நம்பிக்கையும் பட்சமும் வைக்கக்கடவோம். விசேஷமாய் இந்த மாதத்தில் ஞான சுறுசுறுப்போடு நாள்தோறும் அன்னைக்கு ஊழியம் செய்ய ஆசையாயிருப்போமாக.

3-வது. வேதபாரகர் சொல்லியிருக்கிறபடி, தேவமாதாவின் பேரில் வைத்திருக்கும் பக்தியினால் திரளான வரப்பிரசாதங்கள் வருகிறதுமல்லாமல், அந்தப் பக்தியானது மோட்ச பாக்கியத்தை அடைகிறதற்கு அடையாளமாயிருக்கின்றது. அந்தத் திவ்விய மாதா தம்மை வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்காகச் சர்வேசுரனுடைய சந்நிதியிலே இடைவிடாமல் மன்றாடி அவர்களுக்கு வேண்டிய சகல உதவியையும் பெற்றுக்கொடுப்பார். பரலோகமும் பூலோகமும் அழிந்து போனாலும் தேவமாதா தமது பேரில் பக்தியுள்ளவர்களுக்கு ஒருக்காலும் உதவி செய்யாமல் இருக்கிறதில்லை என்று ஓர் மகாத்துமா சொல்லியிருக்கிறார். புனித அன்சேல் முஸோவென்றால் "தேவமாதாவுக்கு உண்மையான ஊழியம் செய்கிறவன் நரகத்துக்குப் போகாமல் மோட்சத்தை அடைவான்' என்று உறுதியாக எழுதி வைத்தார். அப்படி இருக்க இந்த மாதத்தில் அன்னைக்கு ஊழியம் செய்து, இனிமேல் சொல்லப்போகும் புத்திமதிகளைப் பிரமாணிக்கமாய் ஏற்று நடப்போமானால், அந்த ஆண்டவளிடத்தினின்று எண்ணிக்கையில்லாத சகாயங்களைப் பெற்றுக்கொள்வோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில் ஒரு காரியம் கவனிக்க வேண்டும். அன்னையுடைய சகாயங்களையும் ஆதரவுகளையும் அடைய வேண்டுமானால் அன்னை நமக்குக் காட்டுகிற புண்ணிய மாதிரிகைகளைக் கண்டு பாவித்து அன்னை நடந்தபடியே கூடின மட்டும் நடக்கக்கடவோம். ஆனதினால் இந்த மாதத்தில் தேவமாதாவைக் குறித்து எந்தப் புண்ணியத்தை விசேஷமாய்ச் செய்வோமென்று தெரிந்து கொண்டு அதை மிகுந்த சுறுசுறுப்போடு அனுசரிப்போம்.

செபம்.

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியே! என் ஆண்டவளே! சர்வேசுரனுடைய மாதாவே! நான் உமது அண்டையில் நிற்கப் பாத்திரவானல்ல; ஆகிலும் உமது திருப்பாதத்தில் விழுந்து உமக்குக் குறிக்கப்பட்ட இந்த மாதத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். மிகுந்த நேசத்துக்குரிய பரிசுத்த தாயாரே! மோட்சத்தினுடைய சந்தோஷமே! உமது மகிமைச் சிம்மாசனத்திலிருந்து என் பேரில் உமது திருக்கண்களைத் திருப்பியருளும். என் ஆத்துமத்தில் சந்தோஷத்தைப் பொழிகிற ஒரேயொரு வார்த்தையைச் சொல்லியருளும். மிகுந்த இரக்கமுமுள்ள கன்னிமரியே! உமது ஊழியர்களில் அடியேன் நீச அடிமையாயிருந்தாலும் இந்த மாதத்தில் உண்மையோடும் ஞான சுறுசுறுப்போடும் உமக்கு ஊழியம் செய்ய ஆசையாயிருக்கிறேன். கூடின மட்டும் உம்மை நினைத்துக்கொண்டு உமது அண்டையில் வந்து ஸ்துதித்து வேண்டிக் கொள்ளுவேன். பட்சமும் இரக்கமுமுள்ள தாயாரே! நான் எடுக்கப்போகும் பிரயாசையை நீர் ஏற்றுக்கொண்டு இந்த மாதத்திலேயும் என் ஜீவிய காலத்திலேயும் என் மரண நேரத்திலேயும் உம்முடைய உதவி சகாயத்தைக் கொடுத்தருளுவீரென்று நம்பிக்கையாயிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளிலும் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது : 

தேவமாதாவே! பரிசுத்த கன்னிகையே, உமது திருமைந்தனிடத்தில் எங்களுக்காக மன்றாடும்.

இந்நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது : 

கோவிலையாவது தேவமாதாவின் பீடத்தையாவது சந்திக்கிறது.

புதுமை!

இந்த மாதத் துவக்கத்திலே எகிப்து நாட்டின் என்னும் புனித மரியம்மாள் மனந்திரும்பின வரலாற்றை விவரிப்பது நன்மையாம்.

இந்தப் புதுமையில் திருச்சபையானது பூர்வீக காலத்திலிருந்து தேவமாதாவின் பேரில் வைத்திருக்கும் நம்பிக்கையும், நிர்ப்பாக்கியமான பாவிகளின் பேரில் பரம நாயகிக்குள்ள எண்ணிறந்த தயாளமும் விளங்கும் இந்த புனித எகிப்து மாரியம்மாள் சோசிஸ் என்னும் ஓர் முனிவருக்கு தான் மனந்திரும்பின வரலாற்றைப் பின்வருமாறு தெரிவித்திருக்கிறாள் :

"நானிருந்த தன்மையும் நடத்தின் கிரிகைகளையும் சொல்லும்போது அதிக வெட்கத்தால் மூர்ச்சையாய் விழுந்து சாகிறவளாய் இருக்கிறேன். நீர் என் கிரிகைகளைக் கேட்டுக் கொண்டு ஓர் விஷப்பாம்பிடமிருந்து விலகி, பயந்து ஓடுகிறது போல என்னை வெறுத்து, ஒடிப்போவீர்களோ! ஆயினும் இவைகளைச் சொல்லுவேன். தீர்வை நாளில் சர்வேசுரன் என்பேரில் இரக்கமாயிருக்கும்படியாய் வேண்டிக்கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்."

"நான் எகிப்து தேசத்தில் பிறந்து பன்னிரெண்டு வயதுள்ளவளாயிருக்கும்போது என் பெற்றோரைவிட்டு அலெக்சாந்திரியா என்னும் நகரத்துக்குப்போய் அதில் பதினேழு ஆண்டளவாக அசுத்த பாவச் சேற்றில் அமிழ்ந்திருந்தேன். கோடைக்காலத்தில் ஒருநாள் கர்த்தருடைய சிலுவை உயர்த்தப்பட்ட திருநாளைக் கொண்டாட ஜெருசலேம் பட்டணத்துக்கு அநேகர் செல்கிறதைக்கண்டு நானும் அவர்களோடு அங்கு செல்ல கப்பலேறினேன். ஆனால் வழிப் பயணத்தில் வாக்கினால் சொல்லக் கூடாத துர்க்கிரிகைகளை நடத்தினேன். திருநாள் வரும்போது மற்ற சனங்களோடு விசுவாசிகளுக்குக் காண்பிக்கப்பட்ட மெய்யான திருச்சிலுவையை வணங்கக் கோவிலுக்குப் போனேன். ஆனால் கோவிலின் வாசலில் காணப்படாத ஓர் வல்லபமுள்ள கையால் தடுக்கப்பட்டு கோவிலுக்குள் பிரவேசிக்கக்கூடாதவளாய் இருந்தேன். அப்படி மூன்று விசை நான்கு விசை சம்பவித்தது. எனது துர்க்கந்தமான நடத்தையால் தேவாலயத்தில் நுழையாதபடி நீதியுள்ள சர்வேசுரன் என்னைத் துரத்துகிறதாக எண்ணினேன். இந்த நினைவினால் என் மனம் இளகிப்போக திரளான கண்ணீர் விட்டழுதேன்.

அதிக கஸ்தியினால் என் நெஞ்சின் மேல் பிழை தட்டிப் பெருமூச்சு விட்டழுகிறபோது எதிரில் உள்ள தேவமாதாவின் படத்தைக் கண்டேன். உடனே அன்னையை நோக்கி: பரம நாயகியே! உம்முடைய மாசற்ற கன்னிமையைப் பார்த்து மிகவும் நிர்ப்பாக்கிய பாவியாயிருக்கிற என்மீதிரங்கி, சர்வேசுரன் என் மனஸ்தாபத்தையும் புலம்பலையும் ஏற்றுக் கொள்ள நீர் தயைசெய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். மீளவும் திருச்சிலுவை மரத்தை வணங்க நான் கோவிலுக்கு போகும்படி செய்தருளும். இன்று முதல் நான் சாகும்வரையிலும் கடின தபம் செய்து இடைவிடாமல் சர்வேசுரனுக்கு ஊழியம் பண்ணுவேன். நான் கொடுக்கிற வார்த்தைப்பாட்டை நிறைவேற்ற நீர் எனக்கு உதவியாய் இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் என்று நான் வேண்டிக்கொண்டவுடனே என் மனதில் ஓர் சந்தோஷமுண்டாயிற்று. பின்பு கோவில் வாசலுக்கு வந்து வருத்தமின்றியும் தடங்கலின்றியும் கோவிலுக்குள் பிரவேசித்து இயேசுநாதர் மனிதர் இரட்சணியத்துக்காக கடின மரணத்தை அடைந்த சிலுவையின் திருமரத்தை மிகுந்த பக்தியோடு வணங்கினேன். சர்வேசுரனுடைய நிகரில்லாத தயையையும், அவர் பாவிகளை ஏற்றுக்கொள்ளுகிற இரக்கத்தையும் நினைத்து தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து மிகவும் அழுதேன். சற்று நேரத்துக்குப் பின்பு கோவிலில் நின்று புறப்பட்டு தான் முன்னர் வேண்டிக்கொண்ட திருப்பீடத்தண்டையில் வந்து அங்கே நான் பண்ணின வேண்டுதலாவது : "எவ்விதத் தயையுமுள்ள தாயாரே! நான் அபாத்திரவாதியாயிருந்தாலும் நீர் என் மன்றாட்டுகளுக்கு இரங்கி உம்முடைய கிருபையைக் காண்பித்தீரே! பரிசுத்த கன்னிகையே உமது உதவியைக் கொண்டு நான் சர்வேசுரனுக்குக் கொடுத்த வார்த்தைப்பாட்டை இப்பொழுதே நிறைவேற்ற வேண்டியது. நீர் நினைத்த இடத்துக்கு என்னை அனுப்பி ஈடேற்றத்துக்குச் செல்லும் தவ வழியிலே எனக்குத் துணையாயிரும்" என்றார்.

அப்போது என் உள்ளத்தில் ஓர் சத்தமுண்டாயிற்று. நீ யோர்தான் நதியைக் கடந்து அப்பால் போவாயாகில் உன் மனதுக்கு சந்தோஷமும் திருப்தியும் உண்டாகுமென்ற வார்த்தைகளைக் கேட்டேன். உடனே தேவமாதாவின் உதவியை மன்றாடிக்கொண்டே சீக்கிரமாய் யோர்தான் நதிக்குப் போகிற வழியாய் நடந்தேன். இந்த நதியின் அருகில் புனித ஸ்நாபக அருளப்பர் பெயர் கொண்ட கோவிலுக்குள் சென்று அதில் திவ்விய நற்கருணை வாங்கினேன். பின்னர் பரிசுத்த கன்னிகையின் தயாளத்தைக் கேட்டுக்கொண்டு நதியைக் கடந்து இந்த பயங்கரமான வனாந்தரத்தில் பிரவேசித்தேன். இப்பொழுது நான் இவ்விடத்துக்கு வந்து நாற்பத்தேழு ஆண்டுகளாயிற்று. பதினேழு ஆண்டு மட்டும் பசாசின் தந்திரத்தினாலும் என் சரீர துர்க்குணத்தினாலும் எனக்கு அகோரமான சோதனையும் வருத்தமும் வந்து கொண்டேயிருந்தது. இந்த வருத்தக் கிலேசமெல்லாம் நான் படும்போது என் துரோகங்களை நினைத்து அழுது நெஞ்சில் அறைந்துகொண்டு, சர்வேசுரனுக்கு நான் கொடுத்த வார்த்தைப்பாட்டைப் புதுப்பித்து, தம் அடைக்கலத்தில் என்னை வைத்திருந்த தேவமாதா அந்த சோதனை தந்திரங்களை எல்லாம் நீக்கும்படியாய் மன்றாடுவேன். அப்பொழுது ஓர் மோட்ச பிரகாசம் என்னைச் சூழ்ந்துவர என் மனதில் அமைதியான சந்தோஷம் வரும்; அப்பிரகாரமாய் என் ஆத்தும சத்துருக்களால் சம்பவித்த போர்களில் மாசற்ற கன்னிகையின் ஆதரவைத் தேடிக் கொண்டிருக்கையில் அன்னை என்னைக் காப்பாற்றினார் என்றாள்.

இந்தப் புதுமையைக் கேட்ட கிறிஸ்தவர்களே, இந்த புனிதை செய்த பிரகாரமே நீங்களும் பாவ வழியை விடவும், நன்னெறியில் வழுவாமல் நடக்கவும் பாவிகளின் அடைக்கலமாயிருக்கிற தேவமாதாவை மன்றாடக்கடவீர்கள்.

புனித பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.

மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.

இப்படி மூன்றுமுறை சொல்லவும் - பர. அருள். பிதா.

ஆமென்.