தேவமாதாவின் வணக்கமாதம் - மே 01

தேவமாதா சர்வேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்டதின் பேரில்!

1. தேவமாதா சர்வேசுரனால் மேலான பதவிக்கு நியமிக்கப்பட்டவராகும்.

சர்வேசுரன் ஆதியில் தமது திருக்குமாரன், மனிதவதாரமெடுத்து உலகத்தை இரட்சிப்பாரென்று தீர்மானித்து, அந்தத் திருக்குமாரனுக்குத் தாயாராக இருக்கும்படிக்கு மற்றப் பெண்களைத் தெரிந்து கொள்ளாமல் பரிசுத்த கன்னிமாமரியாயைத் தெரிந்து கொண்டார். பரலோகத்தில் சம்மனசுக்களும் பூலோகத்தில் மனிதர்களும் பெற்றுக்கொண்ட மகிமையும் பிரதாபமும் அவருகளுடைய மகிமைக்கும் பிரதாபத்துக்கு முன் ஒன்றுமில்லாததுபோல் இருக்கிறது. சர்வேசுரனுடைய திருக்குமாரனுக்குத் தாயாரானதிலேயும், உண்டாக்கப்பட்ட சகல வஸ்துக்களுக்குள்ளே மேலானவருமாய் சம்மனசுக்களுடைய நவவிலாச சபைக்கு இராக்கினியானவருமாய்க் கிறிஸ்தவர்களுக்குத் தாயாருமாய் மனிதர்களுக்காக மனுப்பேசுகிறவருமாய் இருக்கிறதினாலேயும் மாமரி அன்னைக்கு அனந்த பிரதாபமுண்டு. சிநேகத்துக்குரிய தம்முடைய தாயாராகிய பரிசுத்த கன்னிமாமரி அடைந்த மேன்மையும் அன்னை பாவிகளுக்காக வேண்டி சர்வேசுரனிடத்தில் அப்படிப்பட்ட அபிமானத்தை அடைந்திருக்கிறார்கள் என்கிறதையும் பற்றி சர்வேசுரனுக்குத் தோத்திரம் சொல்லி அந்த இராக்கினி பாதத்தில் விழுந்து அன்னைக்கு மேன்மைக்குரிய வணக்கத்தையும் செய்வோமாக.

2. தேவமாதா சர்வேசுரனால் பூரண பரிசுத்தத்தனத்துக்கு நியமிக்கப்பட்டவராகும்.

தேவகுமாரனுக்குத் தாயாரானவரும் பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவரும் தெய்வீகத்துக்குத் தேவாலயமுமாகிய பரிசுத்த கன்னிமாமரியாள் எவ்வளவோ புண்ணியம் உள்ளவர் என்று சொல்லவும் கருதவும் முடியாது. அன்னையிடத்திலே ஓர் அற்பப் பாவமும், அற்பக்குறையும் காணப்படுகிறதில்லை. அன்னையில் சகல புண்ணியங்களும் சகல சுகிர்தங்களும் விளங்குகிறதுமல்லாமல் தேவமாதா ஆத்துமத்தை அலங்கரிக்கிற வரங்களுக்கும் எண்ணிக்கையில்லை. சர்வேசுரனால் சம்மனசுக்களுக்கும் மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதங்களைவிட அன்னை அதிகமாய் பெற்று தேவ இஷ்டப் பிரசாதத்தினால் பூரணமாய் அலங்கரிக்கப்பட்டு தேவ உதவிகளைக் கொண்டு எண்ணப்படாத பேறுபலன்களை அடைந்து, பூர்வீகத்திலும் வருங்காலத்திலும் எப்போதும் சிருஷ்டிகளுள் நிகரில்லாதவராய் இருக்கின்றார்கள். நாமோவெனில் சர்வேசுரன் தேவமாதாவுக்குக் கொடுத்த வரங்களில் கொஞ்சமாகிலும் நமக்கு அவர் கொடுக்க வேண்டுமென்று மன்றாடி நாம் பரிசுத்தராகும்படிக்கு பரிசுத்த கன்னிமாமரி அன்னை காட்டின் புண்ணிய மாதிரிகைகளைக்கூடிய மட்டும் கண்டுபாவிக்கப் பிரயாசைப்படுவோம்.

3. தேவமாதா சர்வேசுரனால் உயர்ந்த மகிமைக்கு நியமிக்கப்பட்டவராகும்.

சிருஷ்டிக்கப்பட்ட வஸ்து மோட்சத்தில் எவ்வளவு உயர்ந்த மகிமையை அடையக்கூடுமோ அவ்வளவு உயர்ந்த மகிமையை பரிசுத்த கன்னிமாமரி அடைந்திருக்கிறார்கள். மோட்ச இராச்சியத்தில் தமது திருக்குமாரனாகிய சேசுநாதர் வலது பாரிசத்தில் புனிதர்களுக்கும் சகல சம்மனசுக்களுக்கும் மேலாய் உன்னத சிம்மாசனத்தில் அமர்ந்து, அதிமிக பிரதாபமுள்ள இராக்கினியாக தேவமாதா விளங்குகிறதைச் சகல மோட்சவாசிகளும் காண்பார்கள். சர்வேசுரனைத் தவிர மற்ற அனைவரும் அந்த ஆண்டவளுக்குக் கீழிருந்து, மோட்சவாசிகள் எல்லோரும் ஊழியுள்ள காலம் மாமரி அன்னையை வணங்கி, சகலரும், நரகத்திலுள்ள பாவாத்துமாக்கள் முதலாய் அன்னையுடைய திருநாமத்தைக் கேட்டுச் சங்கை மேரையாய்த் தெண்டனிடுவார்கள். இவ்வளவு உன்னத மகிமையை அடைந்த நமது தாய்க்கு ஸ்தோத்திரம் சொல்லி அன்னையின் அடைக்கலமான ஆதரவுக்குப் பாத்திரவான்களாகும்படி நாம் பிரயாசைப்பட வேண்டியது நியாயமாகாது? மோட்ச இராக்கினி தமது திருக்குமாரனிடத்தில் ஒரு விசையாகிலும் நமக்காக மன்றாடினால் எவ்வளவோ சகாயங்களை அடைவோம். நாம் அன்னையைத் தாழ்ச்சியோடு வணங்கி, உண்மையான பட்சம் வைத்து, நம்பிக்கையோடும் சுறுசுறுப்போடும் வேண்டிக்கொண்டால் நமக்காக மன்றாடுவார் என்பதற்குச் சந்தேகமில்லை.

செபம்.

சேசுநாதருடைய திவ்விய தாயாரே! அநேகர் தங்கள் பாவத்தினால் கெட்டுப்போய் நரகத்தில் விழுந்து மோட்சத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட மாட்டார்கள் என்ற பரம இரகசியத்தை ஆராய்ந்து எண்ணுகிறபோது நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன். ஆகிலும் வேதபாரகர் எழுதியிருக்கிறபடி உமது பேரில் வைத்த நேசமான பக்தியானது மோட்சம் சேருவதற்கு நிச்சயத்துக்கு அடுத்த அடையாளமாய் இருக்கிறதினால் ஆறுதலடைந்து தேறி சந்தோஷப்படுகிறேன். என் நல்ல தாயாரே! நான் உம்மைச் சிநேகித்து உமது பேரில் என் நம்பிக்கையெல்லாம் வைத்து கூடின மட்டும் எவ்விதத்திலும் உமக்கு ஊழியம் செய்ய ஆசையாயிருக்கிறேன். உமது பேரில் நம்பிக்கை வைத்து, சாகும் வரையிலும் உம்மை சிநேகித்து, உமக்கு ஊழியம் செய்தால் நான் சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டு, உம்முடைய உதவியினால் பேரின்ப பாக்கியத்தை அனுபவிப்பேன் என்று நிச்சயமாயிருக்கிறேன். ஆனால் என் பலவீனமும் என் உறுதியின்மையும் உமக்கு தெரிந்திருக்கின்றதே. என் ஆத்துமத்தில் நீர் மூட்டின பக்தி ஒருக்காலும் குறையாமல் மரணமட்டும் நிலைக்கொண்டு நான் இடைவிடாமல் உம்மை வணங்கி சிநேகித்து மன்றாடி மோட்சத்தை அடைந்து உம்மோடுகூட சதாகாலமும், நானிருக்கும்படிக்கு எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது : 

பரிசுத்த கன்னிகையே! என் தாயே, என் ஆண்டவளே, என்னை வழி நடத்தியருளும்.

முதல் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது : 

தேவமாதாவின் பீடத்துக்கு சில புஷ்பங்களைச் சாற்றுகிறது.

புதுமை!

புனிதர்கள் இவ்வுலகிலிருக்கும்பொழுது தேவமாதாவை மிகுந்த பக்தியோடு வணங்கினதுமல்லாமல், இந்த பரம நாயகியின் பேரில் வைக்க வேண்டிய நம்பிக்கையும் வணக்கமும் எங்கும் பரம்பச் செய்தார்கள். இதில் சில புனிதர்களைப்பற்றி மாத்திரம் இங்கு விவரிப்போம்;

புனித ஞானப்பிரகாசியார் இராஜா தேவமாதாவின் அனுக்கிரகத்தினாலே பிறந்ததுமன்றி இந்தப் பரமநாயகியான இராக்கினியின் விசேஷ உதவியினால், சகல புண்ணியங்களையும் அனுசரித்து, தர்மக்கிரிகைகளைச் செய்து, பிரபல்யமான காரியங்களை நடத்தி, தான் சாகும் வரையிலும் சாவான பாவமின்றி சீவித்தார். அவர் பெரிய இராஜாவாயிருந்தாலும் தேவமாதாவுக்கு குறிக்கப்பட்ட சனிக்கிழமைதோறும் தமது அரண்மனையில் அநேக ஏழைகளை அழைத்து, அவர்கள் பாதங்களைக் கழுவித் துடைத்துச் சாப்பிட உட்காரச் சொல்லி அவர்களுக்குத் தாமே பரிமாறுவார். பிறகு அவர்களுக்கு தானம் கொடுத்துச் சந்தோஷமாய் அனுப்புவார். தேவமாதாவின் பேரில் வைத்த சிநேகத்தின் முகாந்தரமாகத் தாம் ஓர் சனிக்கிழமை சாக வேண்டுமென விரும்பின் அந்நாளிலே மிகுந்த சந்தோஷத்துடன் பாக்கியமாக மரித்தார்.

புனித சவேரியார் தம் வாழ்நாள் எல்லாம் அதிக நேசத்துடன் தேவமாதாவை கொண்டாடி வந்தார். சத்திய வேதத்தை எங்கும் பிரபல்யப்படுத்த தாம் பட்ட அளவுகடந்த பிரயாசை வருத்தங்கள் மத்தியில் எப்போதும் பரிசுத்த கன்னிகையை நம்பி மாதாவினுடைய அனுக்கிரகத்தைத் தேடி வந்ததுமல்லாமல், தாம் மனந்திருப்பின ஜனங்கள் யாவரும் மாதாவின் பேரில் பக்தியாயிருக்கும்படி அவர்களைத் தூண்டுவார். கடைசியாக அவர் சாகும் வேளையில் அதிக பக்தியுடன் அன்னையை மன்றாடி அடிக்கடி அன்னையை நோக்கி, "நீர் எனக்குத் தாயாராயிருக்க வேண்டுமென உம்மை மன்றாடுகிறேன்" என்பார்.

புனித தெரேசம்மாள் தனது சிறு வயதிலேயே தன்னைத் தேவமாதாவுக்கு முழுவதும் ஒப்புக்கொடுத்தாள். தன்னுடைய சிநேகத்தை பரம ஆண்டவளுக்குக் காண்பிக்கும் வகையில் தனது வீட்டில் ஓர் சிறு கோவிலைக் கட்டி அதில் பரிசுத்த கன்னிகையின் படத்தை ஸ்தாபித்து அதை அடிக்கடி சந்தித்து மலர்களையும் மற்றும் காணிக்கைகளையும் வைத்து மிகுந்த பக்தியுடன் செபிப்பாள்.

அவள் தன் பன்னிரண்டாம் வயதில் தன்னைப் பெற்ற தாயை இழந்து போக நேரிட்டதால், உடனே தேவமாதா அண்டையில் வந்து அப்பரம இராக்கினியைத் தனக்குத் தாயாராகத் தெரிந்து கொண்டாள். தேவமாதா அவளை மகளாக ஏற்றுக் கொண்டு, அவளுக்கு எண்ணிறந்த வரங்களை அளித்து, மிகுந்த தயாளத்தோடு அன்னையைக் காப்பாற்றிக் கொண்டு வந்தாள்.

ஏழையாயிருந்த ஓர் ஆயர்குல மாது பரிசுத்த கன்னிகையின் பேரில் அதிக நேசத்தையும் பக்தியையும் வைத்து மலையுச்சியில் பரம ஆண்டவளுக்குக் கட்டப்பட்டிருந்த ஓர் சிறிய கோவிலுக்குச் சென்று அதில் வெகு நேரம் வேண்டிக்கொண்டிருப்பாள். தேவமாதாவின் சுரூபத்தை அலங்கரிக்க சால்வை ஒன்றுமில்லையே எனக்கண்டு வருத்தமுற்று தன்னால் இயன்ற அளவு பணம் சேர்த்து ஓர் நல்ல சால்வையை வாங்கி மாதாவின் சுரூபத்தை அலங்கரித்தாள். ஒரு நாள் காட்டில் கொய்த வண்ண மலர்களைக் கொண்டு ஓர் முடியைச் செய்து தன் கையால் அதை சுரூபத்தின் தலைமேல் வைத்து "என் தாயாரே! இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் பொன்முடி உமது திருச்சிரசில் வைக்க ஆசையாயிருக்கிறேன். ஆனால் நான் மிகவும் ஏழையாக இருக்கிறதினால் இந்தப் பூ முடியை மாத்திரமே என்னால் உமக்குக் கொடுக்கக்கூடும். இதை என் நேசத்தின் சிறியதோர் அடையாளமாக ஏற்றுக்கொள்ளும்" என்றாள். இந்த காணிக்கை பரிசுத்த தாயாருக்கு மிகவும் பிரியமாயிருந்தது. ஆகையினால் அந்தப் பெண்ணுக்கு அனேக உபகார நன்மைகளை வாரி வழங்கியதுமின்றி, அவள் சாகிற வேளையில் அவளுக்குக் காட்சியளித்து, தமது கரங்களால் தலையில் ஒர் முடியை வைத்து அவளுடைய ஆத்துமத்தைத் தன்னோடு மோட்சத்துக்குக் கூட்டிச் சென்றாள்.

கிறிஸ்தவர்களே, நீங்கள் எந்த அந்தஸ்திலிருந்தாலும் நாள்தோறும் செபத்தினாலேயாவது தர்மத்தினாலேயாவது உங்களுடைய நேசத்தைக் காண்பியுங்கள். தேவதாய் தன்னிடம் பக்தியுள்ளவர்களை நரகத்தில் விழாது பாதுகாப்பாள்.