அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 17

இயேசு புனித சூசையப்பருக்கும் மரியன்னைக்கும் கீழ்ப்படிந்ததை தியானிப்போம்.

தியானம்.

இயேசு நாசரேத் வந்து சேர்ந்த பிறகு முப்பது வருடம் மரியன்னைக்கும் புனித சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடந்து வந்தார். இயேசுவின் முப்பது வருட வாழ்வினை தூய ஆவியால் அனுப்பப்பட்ட மறைநூல் வல்லுநர் "கீழ்ப்படிந்து நடந்தார்" என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார். அந்த வார்த்தைகளில் உன்னத தன்மை இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். ஜோசுவா சூரியனைப் பார்த்து 'நில்' என்றதும் நின்றது, மோசே செங்கடலின் மேல் கை நீட்டியதும் இரண்டாக பிரிந்து நின்று இஸ்ராயேல் மக்கள் கால் கூட நனையாமல் கடந்து சென்ற பிறகு மீண்டும் சமநிலை அடைந்து எகிப்து அரசனையும் அவனுடைய படைகளையும் அமிழ்த்திக் கொன்றது.

சூரியனை தோற்றுவித்தவரும், கடல் உட்பட சகலவற்றையும் படைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறவரும் சகல வான தூதர்களையும் சகல தூயவர்களையும் படைத்து மீட்கிறவருமாயிருக்கிற இயேசு, தன்னால் படைத்த தம்முடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வந்தார் என்பதே அருஞ்செயல்களிலும் மேலான அருஞ்செயல்.

அவருடைய தாய் தந்தையர் மிகவும் வறுமையில் வாழ்ந்தவர்கள். சூசையப்பர் தச்சுத் தொழில் செய்து வந்ததால் அவருக்கு உதவியும், கீழ்ப்படிந்தும் வந்தார். சிறுவனாய் இருக்கும்போது தாயாருக்கு தண்ணீர் எடுத்தும், விறகு பொறுக்கியும், அடுப்பு எரித்தும், காய்கறிகளை நறுக்கியும், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற எளிய வேலைகளையும் செய்து வந்தார். வயது வந்த பிறகு தந்தையாருக்கு மரம் இழைத்தல், அடுக்குதல், கூலிக்கு வேலை செய்தல், சுமை சுமத்தல் போன்ற வேலைகளைச் செய்துவந்தார் என பல மறைவல்லுநர்களும் புனித பொன் வெந்தூர் என்பவரும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த எளிய வேலைகளை செய்யாமல் இயேசு புதுமைகளை செய்திருக்கலாமே என நாம் நினைக்கலாம். ஆனால் அவர் அகங்காரம், பெருமைப்படாமல் தாழ்ந்த மனதுடன் கீழ்ப்படிதலையும் நமக்கு போதிக்கவே அவ்வாறு இருந்தார். அதனால் அவருக்கு அதிக வல்லமையுடன் நாம் அவரை கண்டுபாவிக்கும் நிலையும் இருந்தது. இதனால் அவர் ஞானத்தில் அதிகமாக வளர்ந்தார் என நற்செய்தி கூறுகிறது. இவருடைய செயல்களைப் பார்த்து பெற்றோர் நாளுக்கு நாள் பெருமிதமும் புண்ணிய வழியிலும் சென்றனர்.
அவர் ஏழு நாட்களுக்குள் வானுலகம், பூவுலகம் இவற்றினை படைத்து மூன்று ஆண்டுகளாக சத்திய வேதத்தினை போதித்து, மூன்று நாட்களுக்குள்ளே தன்னுடைய பாடுகளையும் திருமரணத்தையும் நிறைவேற்றினார். மனிதனுக்கு தாழ்ச்சியையும் கீழ்ப்படிதலையும் போதித்து தன்னால் படைக்கப்பட்ட மரியன்னைக்கும் புனித சூசையப்பருக்கும் பணிந்து முப்பதாண்டுகள் செலவழித்தார்.

நிறைவேற்றினார்கள் தன்னுடைய பாடுகளை ததினை போதித்து, சகல வல்லமை படைத்த இறைவன் நமக்கு தாழ்ச்சியை போதிப்பதற்காக ஒரு சிற்றூரில் ஏழை தச்சனுக்கு மகனாக தூய ஆவியால் பிறந்தார். அவருடைய சீடர்களாகிய நாம் அவற்றை பின்பற்ற வேண்டாமா? அகங்காரத்தினால் வானதூதர்கள் கூட நரகத்திற்குச் சென்றார்கள். தாழ்ச்சியினால் நம்மை அவர் மீட்டார். மோட்சத்திற்கு செல்லும் வழி நேர்மையும் தாழ்ச்சியும்தான் என்பதை உணர்வோம்.

இவ்வுலகிற்கு வந்த இயேசு முப்பதாண்டுகள் தம் பெற்றோருக்கு கீழ்ப்படிந்ததல்லாமல் இறுதியில் சிலுவைச்சாவுமட்டும் கீழ்ப்படிந்து இறந்தார் என புனித பவுல் கூறியுள்ளார். இவ்வாறு நாம் இயேசு நன்மாதிரியை கொண்டு பெற்றோர்க்கு கீழ்ப்படிய வேண்டும். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், துறவறத்தார், கன்னியர்கள் அவர்களது தலைவர்களுக்கும், அருட்பணியாளர்களுக்கும், பெரியோர் களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அப்படி நடக்கும் போது புண்ணியமும் நல்லொழுக்கமும் அதனால் மோட்சமும் கிடைக்கப் பெறும்.

வான் வீட்டை அடைய மனத்தாழ்ச்சியும், கீழ்ப்படிதலுமின்றி வேறு எதாலும் இல்லை என அறிவோம்.

புதுமை

தமிழ் நாட்டில் புகழ்பெற்ற பேதுரு பெரன் என்னும் அருட்பணியாளர் சிறு வயது முதலே புனித சூசையப்பரின் மேல் மிக்க பக்தியுடன் இருந்தார். அவருக்கு பதினேழு வயதானபோது அவரை இயேசுசபையிலே சேர வழிகாட்டினார்கள். அவர் இயேசுசபையில் சேர்ந்து புனித சூசையப்பரை நன்மாதிரியாய் கொண்டு மிகுந்த பக்தியோடு வணங்கி வந்தார்.

இஸ்பானியா நாட்டிலுள்ள பாசஜென்னும் ஊரிலுள்ள துறவற சபையில் இவர் இருக்கும்போது கடலில் குளிக்க சென்றார். கடல் அலையால் இழுத்து தரைசேர இயலாமற் போனது. அவர் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் புனித சூசையப்பரின் உதவியை நாடினார். அப்போது அங்கே அவருடைய கால் ஒரு பாறைமேல் தொடுவதையும் அருகில் ஒரு படகு வருவதையும் கண்டார். அதன் மூலம் பாதுகாப்பாக கரையை வந்தடைந்தார்.

இவர் இந்தியாவுக்கு வந்த பின்னர் அவரிடம் அதிக பக்தி காட்டியிருந்தபடியால் அவரது திருவிழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினார். மேலும் தான் செய்யும் செயல்களை புனித சூசையப்பர் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் செபித்தார். இறுதியாக சிவகங்கை என்னும் ஊரில் இவர் இறக்கும்போது புனித சூசையப்பர் தோன்றி நல் மரணத்தினை நல்கினார்.

நாமும் நமது சகல ஆபத்துகளிலும் இருந்து நம்மை மீட்க புனித சூசையப்பரிடம் நம்பிக்கையோடு செபிப்போம். வெற்றி கிடைக்கும். (3 பா , அரு, பிதா)

செபம்

முப்பது ஆண்டுகளாக இயேசுவுடன் வாழ்ந்த புனித சூசையப்பரே உம்மை வணங்கி புகழ்கிறோம். இயேசு மனத்தாழ்ச்சியும் கீழ்ப்படிதலுமாக முப்பது ஆண்டுகள் மறைந்த வாழ்வு வாழவும், தூய சூசையப்பருக்கும், மரியன்னைக்கும் கீழ்ப்படிந்து வாழ திருவுளமானாரே! மனத்தாழ்ச்சியும், கீழ்ப்படிதலும் எங்களுக்கு மிகவும் தேவையாய் இருப்பதால் நாங்களும் அவற்றை பெற உதவும். இயேசுவின் தாழ்ச்சியைப் பார்த்து உமது பக்தர்களா யிருக்கிற எங்களுக்கு கிடைக்கும்படி அருள் செய்தருளும். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம் :

புனித சூசையப்பரே! எங்களுக்கு மனத்தாழ்ச்சியை தந்தருளும். புனித சூசையப்பரே! எங்களுக்கு கீழ்ப்படிதலை வரச் செய்தருளும். புனித சூசையப்பரே! தாழ்ச்சியும் கீழ்ப்படிதலும் எங்கும் வளரச் செய்தருளும்.

செய்ய வேண்டிய நற்செயல்

தாழ்ச்சியின் பொருட்டு தாழ்ந்த வேலையை செய்வது.