பொது நிலை நற்செய்திப் பணியாளர்களின் கவனத்திற்கு மற்றும் சில அருட்தந்தையர்களின் கவனத்திற்கு!


நற்கருணை நாதரை பீடத்தில்  நற்கருணைப் பேழையில் ஸ்தாபகம் செய்த பிறகு பொது நிலையினர் யாரும் பீடத்தில் இருக்கக்கூடாது என்பது தாழ்மையான வேண்டுகோள். நற்கருணை நாதர் ஸ்தாபகம் செய்யப்பட்ட பிறகு பொது நிலையினருக்கு அங்கு வேலையில்லை. அதன் பிறகு அவர் ஆராதனை மட்டுமே செய்யப்படவேண்டும். சமீப காலமாக நற்கருணை நாதரை பீடத்தில் ஸ்தாகம் செய்த பின் சில பொதுநிலையினர் பிரசங்கம் செய்வது போன்றும், ஜெபிப்பது போன்றும் புகைப்படங்கள் வருகிறது. இது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். அவர் அருகில் இருக்கும் தகுதி அருட்தந்தையர்களுக்கே உரியது. ஜெபிக்க விரும்பினால் மக்களோடு அமர்ந்து ஜெபிக்கலாம்.

அதே போல் நற்கருணை நாதர் ஸ்தாபகம் செய்யப்பட்டபின் அவர் அருகில் நின்று கொண்டு அருட்தந்தையர்கள் பிரசங்கம் செய்வது சரியோ ? பிரசங்கத்தின்போது மக்களை அவர் முன்பாக சிரிக்க வைப்பது முறையோ?  ஏற்கனவே தமதிருத்துவமாக இருக்கும் நம் நற்கருணை நாதரை நோக்கி “ ஆண்டவரே வாரும்.. வாரும்.. என்று கூச்சல் போடுவது தகுமோ?( சிலர் மட்டுமே) முன்பெல்லாம் திருமணி ஆராதனையின்போது கூட அருட்தந்தையர்கள் பிரசங்கம் எல்லாம் முடித்து மான்புயர் கீதத்திற்கு சற்று முன்தான் தந்தையர்களால் ஸ்தாபிக்கப்படுவார்.

இப்போது நிறைய விசயங்கள் மாறிவிட்டன. முக்கியமாக குணமளிக்கும் வழிபாடுகளில் நற்கருணை நாதர் ஸ்தாபிக்கப்பட்ட பின் குருக்கள் மறையுரை ஆற்றுதல், பேசுதல், என்று போய்விடுகிறார்கள். நற்கருணை நாதர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்படியே இருக்கும் நிலை நிறைய இடங்களில் நடக்கிறது.

நற்கருணை ஸ்தாபகம் (Expose) செய்யப்பட்ட பின்பு அவர் ஆராதனை..ஆராதனை...ஆராதனை.. மட்டுமே செய்யப்பட வேண்டும்.. இதுவே ஒழுங்கு..இதுவே நம் கத்தொலிக்க பாரம்பரியம்.. இதுவே கடவுளுக்கு உகந்த காரியம்..கடவுள் விரும்பும் காரியம்..

சில இடங்களில் கொஞ்சம் அட்வான்சாக  “ தாவிதைப்போல நடனமாடி..” யும் வந்துவிட்டது. நற்கருணை நாதர் உரிய ஆராதனையும், மரியாதையும் செய்யப்படாவிட்டால் அது நம் கத்தொலிக்கத்திற்கு ஏன் உலகிற்கே நல்லது அல்ல.

நற்கருணை நாதர் பேழையில் இருக்கும்போது செய்யப்படும் ஆராதனையும் ஜெபங்களும், திருப்பலியில் நமக்குள் வந்த பிறகு செய்யப்படுகிறதா என்றால் இல்லை. நமக்குள் இருக்கும் ஆண்டவருக்கு ஒரு ஐந்து நிமிடம் கூட ஆராதனை செய்யாமல் பேழையில் இருக்கும் ஆண்டவருக்கு மணிக்கணக்காக ஆராதனை செய்தாலும் பயனில்லை. நற்கருணைப் பேழையில் இருக்கும் இயேசு நம் இயேசு ஆனால் நற்கருணை வாங்கியபின் அவர் என் இயேசு; உன் (உங்கள்) இயேசு. அவருக்கு நாம் எப்படி ஆராதனை செய்கிறோம்; எப்படி போற்றுகிறோம்; எப்படி கொஞ்சுகிறோம் என்று நம் மனதைக் கேட்டால் தெறியும். கணக்கு கேட்கப்படும் நானாக இருந்தாலும் நீங்களாக இருந்தாலும். 

அதே போல் நமக்குள் வரும் ஆண்டவரால் கண்டிப்பாக நம்மை குணமாக்க முடியும், தேற்ற முடியும், ஆறுதல் தர முடியும் ஆனால் நமக்கு அவர்பால் அன்பும், விசுவாசமும் தேவை..

நாங்கள் நம் இயேசு தெய்வத்தை நாம் இப்படித்தான் தொழுவோம் இப்படித்தான் சத்தம்போட்டு ஜெபித்து, அழுதுதான்  ஆராதிப்போம் (அழுகை மென்மையாக ஆராதிக்கும் போதும் வரும்); அதுதான் எங்களுக்கு பிடித்துள்ளது என்றால் தாராளமாக செய்யுங்கள். ஆனால் நற்கருணை நாதர் ஸ்தாகம் செய்யப்படும் முன் உங்கள் கருத்தரங்கையோ, பிரசங்கத்தையோ, மக்களுக்கு போதிப்பதையோ முடித்துவிடுங்கள். அதன் பின் அவரை பேழையில் ஸ்தாபியுங்கள், ஜெபியுங்கள், அழுங்கள், புலம்புங்கள், ஆராதனை செய்யுங்கள், உங்கள் ஆராதனையின் போது மூவொரு கடவுள்  நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணம் இருக்கட்டும். தவறியும் வேறு ஏதும் அவசங்கை வந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில இடங்களில் சாட்சி சொல்லுதல் எல்லாம் நடக்கிறது. அவரை ஆராதித்த பின்பு அவரை நற்கருணை பெட்டிக்குள் வைத்த பின் சாட்சிகளை பேச விடுங்கள்.

பொது நிலை நற்செய்தியாளர்களே ! கொஞ்சம் கவனமாக இருங்கள். இந்த சொல்லுபவனைவிட நீங்கள் எவ்வளவோ பக்தியும், தூய்மையும் உள்ளவர்கள் என்பதை அறிவோம்.

( இக்கட்டுரையில் தவறுகள் இரு ந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்)

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !