பாத்திமா காட்சிகள் - மூன்றாம் காட்சி முடிந்தபின்

நரகத்தைக் கண்ணால் கண்டபின், இம்மூன்று குழந்தைகளும் முன்போல் இருக்க முடியாது அல்லவா?  கபேசோவில் வான தூதரைக் கண்டதிலிருந்தே அவர்கள் வாழ்க்கை எவ்வளவோ மாறி யிருந்தது. நிலையற்ற வினோதங்களில் அவர்களின் ஈடுபாடு நின்று விட்டது. 

ஜெபிப்பதிலும் தேவ காரியங்களைப் பற்றிப் பேசுவதிலும், சிந்திப்பதிலும் தங்கள் வயதுக்கும் மேற்பட்ட அளவில் அவர்கள் ஈடுபட்டார்கள்.  மூன்றாம் காட்சியில் நரகத்தைக் கண்டதிலிருந்து, அவர்கள் நடத்தை மிகவும் மாறிவிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தாங்கள்மோட்சத்திற்குச் செல்வோம் என்ற உறுதி ஒரு பக்கம் அவர்களைத் திடப்படுத்திக்கொண்டிருந்தது.  

மறு பக்கம் பாவிகள் செல்லும் நரகக்காட்சி அவர்களை உலகத்தின் பாவத் தன்மையை மிகவும் உணரச் செய்தது.  அங்கு யாரையுமே போக விடக்கூடாது என்ற தீவிர ஆவல் அவர்களைப் பற்றிக் கொண்டது.  நித்திய உண்மைகளைக் கண்ட அவர்களுடைய நினைவும், பேச்சும், செயலும் நித்தியமானவை பற்றியே இருந்தன.

மூவரும் உலக சந்தடி, மக்களின் ஆரவாரம், இவற்றை விட்டு விலகி, தனிமையையும் மவுனத்தையும் நாடினர்.  சம்மனசு தோன்றிய கபேசோ மேட்டில், அல்லது வாலினோஸ் என்ற இடத்தில், அல்லது கோவா தா ஈரியா பக்கத்திலுள்ள குன்றுகளில்தான் அவர்கள் தேடிய அமைதி கிடைத்தது.  எனவே அவர்கள் அவ்விடங்களில் ஆடுகளை மேய விட்டு விட்டு, அமைதியாக அமர்ந்து ஜெபிப்பார்கள்.  அல்லது அவ்வுண்மைகளைப் பற்றியும், தேவ அன்னையைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்கள். 

நரகம்!  ஆ, அது எவ்வளவு கொடிய இடம்!  உலகத் துன்பங்கள் எதுவும் அதற்கு ஈடாகாது! அதில் போய் விழும் மனிதர்கள் எவ்வளவு நிர்ப்பாக்கியமானவர்கள்!  இன்னொரு உலக யுத்தமா?  எத்தனை மக்கள் வீடிழந்து, உண்ண உணவின்றி, காயப்பட்டு, சித்திர வேதனைப்பட்டுச் சாவார்கள்!  பாவத்தில் அப்படி இறப்பவர்கள் நரகத்தில் புதைக்கப்படுவார்களே!  இந்த உலக மக்கள் எதையுமே கவனிக்காமல் பாவத்தைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள்! கடவுளை யாரும் நேசிப்பதாகக் காண முடியவில்லையே, ஏன்?  

இவர்கள் நரகில் விழாமலிருக்க நாம் அதிக பரித்தியாகம் செய்ய வேண்டும்.  நெருப்பில் சருகு போல் எப்பக்கமும் அள்ளி வீசப்படும் மனித ஆன்மாக்களைப் பார்த் தோமே! நித்திய காலம் இப்படி வேதனைப்பட நேரிடும் என்று அறிந்தால், ஒருவேளை இவர்கள் நல்லவர்களாயிருப்பார்கள் என்ன? இவ்வாறு பலப் பல சிந்தனைகள் எழுந்து இச்சிறுவர்களை ஆட்கொண்டு விடும். லூஸியாவும் ஜஸிந்தாவும் இவ்வித சிந்தனை களிலே மூழ்கிப் போவார்கள்.

பிரான்சிஸ் நினைப்பது கொஞ்சம் வேறாக இருக்கும்.  “சர்வேசுரன் எவ்வளவு ஆச்சரியமுள்ளவர்!” என்று தன்னையும் மறந்து கூறுவான்.  “அவரைப் பற்றிச் சொல்ல முடியாது. கடவுள் எவ்வளவு வியப்புக்குரியவர் என்று சொல்ல முடியாது என்பதைத்தான் நாம் சொல்ல முடியும்!  இந்த சர்வேசுரன் துயரப்படுகிறார் என்றால், அது எவ்வளவு வேதனைக்குரியது!  என்னால் மட்டும் அவரைத் தேற்ற முடியுமானால் எப்படியிருக்கும்!” என்பான்.

இவ்வித மனநிலையில் குழந்தைகள் மூவரும் இருந்ததால், முந்திய ஆடல் பாடல் வினோதங்கள் எல்லாம் அவர்களைக் கவரவே யில்லை.

ஒரு நாள் ஜஸிந்தா ஆடுகளை மேய விட்ட பின் ஒரு கல்லில் போய் நெடுநேரம் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். பின் லூஸியாவைப் பார்த்து:

“அநேக ஆன்மாக்கள் நரகத்துக்குப் போகிறார்கள் என்று அம்மா சொன்னார்கள்தானே லூஸியா?” என்றாள்.

“புழுக்கள் நிறைந்து பெரும் தீ எரியும் நெருப்புக் குழிதான் நரகம்.  பாவம் செய்துவிட்டு நல்ல பாவசங்கீர்த்தனத்தில் அதைச் சொல்லாமல் இருக்கிறவர்கள் அங்கே போகிறார்கள்.  எக்காலமும் அங்கே எரிந்து கொண்டேயிருப்பார்கள்” என்றாள் லூஸியா.

“திரும்ப வெளியே வரவே மாட்டார்களா?” 

“வர மாட்டார்கள்.” 

“பல, பல, அநேக வரு­ம் கழித்தும் வர மாட்டார்களா?” 

“மாட்டார்கள்.  நரகம் ஒருக்காலும் முடிவடையாது. மோட்சமும் அப்படித்தான்.  மோட்சத்திற்குப் போகிறவர்களும் வெளியேற மாட்டார்கள்.  நரகத்துக்குப் போகிறவர்களும் வெளியே வர மாட்டார்கள்.  மோட்சமும் நரகமும் நித்தியமானவை. உனக்கு இது தெரியவில்லையா? ஏனென்றால் அவைகள் ஒருக்காலமும் முடிவடையாதவை.” 

நித்திய நரகம் என்ற உண்மை ஜஸிந்தாவின் உள்ளத்தில் மிகவும் ஆழமாகப் பதிந்து விட்டது. ஏதாவது சிறு விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போதே, திடீரென அதை நிறுத்தி விட்டு, “லூஸியா, இந்த நரகம் ரொம்ம்ம்ப, அநேக, அநே...க வரு­ம் கழித்தும் முடிவடையாதா?” என்பாள்.

“முடிவடையாது” என்பாள் லூஸியா.

“அப்போ, அங்கே போய் எரிகிறவர்கள் சாக மாட்டார் களோ? ஒருக்காலும்?  எரிந்து சாம்பலாகவும் போக மாட்டார்களோ? அவர்களுக்காக வேண்டிக் கொண்டால், நமதாண்டவர் அவர்கள் அதில் விழாமல் காப்பார், என்ன?  ஜெபம் மட்டுமல்ல, பரித்தியாகமும் செய்ய வேண்டும், இல்லையா?  நாம் அவர்களுக் காக ஜெபித்து அதிகமான பரித்தியாகங்கள் செய்ய வேண்டும்” என்று உணர்ந்து கூறுவாள் ஜஸிந்தா.

பாவத்தின் பளு அவளை அதிகமாகத் தாக்குவது போலிருந் தால், “அம்மா எவ்வளவு நல்லவர்கள்!  நம்மை மோட்சத்துக்குக் கொண்டு செல்வதாக வாக்களித்திருக்கிறார்களே!” என்று கூறி ஜஸிந்தா ஆறுதலும் அடைந்து கொள்வாள்.

“சரி, இதைச் சாப்பிடு ஜஸிந்தா” என்பாள் லூஸியா.

“வேண்டாம்.  அளவுக்கு மிஞ்சி சாப்பிடுகிற பாவிகளுக்காக நான் இதை ஒப்புக்கொடுக்கிறேன்” என்று பதிலளிப்பாள் ஜஸிந்தா.

“இதைக் குடியேன்.” 

“வேண்டாம்.  மிதமிஞ்சிக் குடிக்கிறவர்களுக்காக இதை ஒப்புக்கொடுக்கிறேன்.” இப்படிக் கூறும் ஜஸிந்தா திடீரென, 

“லூஸியா, உன்னை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது.  நானும் பிரான்சிஸும் மோட்சத்திற்குப் போகப் போகிறோம். நீ இங்கே தனியாக அல்லவா இருப்பாய்?  உன்னையும் மோட்சத்திற்குக் கொண்டு செல்லும்படி நம் அம்மாவிடம் கேட்பேன். ஆனால் நீ இங்கே கொஞ்சக் காலம் இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பு கிறார்கள் இல்லையா?  லூஸியா, நீ யுத்தத்தைக் காணும்போது பயப்படாதே. உனக்காக நான் மோட்சத்தில் வேண்டிக் கொள்வேன்” என்று இப்படி எதையாவது கூறுவாள் ஜஸிந்தா.  அவள் சிந்தனை அடிக்கடி நரகத்தில் விழும் ஆன்மாக்களைப் பற்றியே இருக்கும்.

“ஜஸிந்தா, நீ எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று ஒருநாள் லூஸியா கேட்டாள்.

“வரப் போகிற யுத்தத்தைப் பற்றித்தான் நினைக்கிறேன்.  யுத்தம்!  அதனால்  சாகப்  போகிறவர்கள்  எத்தனை  பேர்!  செத்து நரகத்திற்குப் போகிற அவர்களைப் பற்றி நினைக்கிறேன்.  இந்த மனிதர்கள் பாவம் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; அதனால் யுத்தம் வரும்; அவர்கள் நரகத்துக்குப் போக வேண்டியிருக்கும்!  எவ்வளவு பரிதாபம்!” என்று இரக்கப்பட்டாள் ஜஸிந்தா.  

திடீர் திடீரென, “நரகம்!  நரகம்!  ஆன்மாக்கள் நரகத்திற்குப் போவதைப் பற்றி நான் எவ்வளவு வருந்துகிறேன்!” என்பாள்.  உடனே எந்த இடம் என்று பார்க்காமல் முழந்தாளிடுவாள்.  கைகளைக் குவித்துக்கொண்டு மிக உருக்கத்துடன், “ஓ என் சேசுவே, எங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆன்மாக்களையும், விசே­மாய், யார் அதிகத் தேவையிலிருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும்” என்று ஜெபிப்பாள்.

தான் தனியே இதைச் சொன்னால் போதாதென்று, “பிரான்சிஸ்! என்னுடன் சேர்ந்து ஜெபிக்க வா.  நரகத்தில் ஆன்மாக்கள் விழாமலிருக்க நாம் அதிகமாக ஜெபிப்பது அவசியம்.  நிறைய பேர் அங்கு செல்கிறார்கள்.  ஆ!  எத்தனை பேர்!” என்று பிரான்சிஸைக் கூப்பிடுவாள். பின் இருவரும் சேர்ந்து அந்த ஜெபத்தைப் பல தடவைகள் சொல்வார்கள்.

இன்னொரு நாள் லூஸியாவைப் பார்த்து: “ஏன் நம் அம்மா பாவிகளுக்கும் நரகத்தைக் காட்டவில்லை?  பாவிகள் நரகத்தைப் பார்த்தார்களானால், அவர்கள் மீண்டும் பாவம் செய்யவே மாட் டார்கள். அங்கே போகவும் மாட்டார்கள். நிச்சயம் அவர்கள் மனந் திரும்பி வருவார்கள் பார்.  இந்த மக்களுக்கு நரகத்தைக் காட்டும்படி அம்மாவிடம் நாம் சொல்ல வேண்டும்” என்றாள் ஜஸிந்தா.  “மோயீச னையும், தீர்க்கதரிசிகளையும் அவர்கள் நம்பாவிட்டால், மரித்த ஒருவன் உயிர் பெற்றுப் போனாலும் நம்ப மாட்டார்கள்” என்று சேசு சொன்னதை ஒருவேளை ஜஸிந்தா இன்னும் கேட்டிருக்க மாட்டாள்.

கொஞ்ச நேர மவுனத்திற்குப் பிறகு, ஜஸிந்தா மீண்டும் லூஸியாவைப் பார்த்து,

“லூஸியா, இந்த மக்களுக்கு நரகத்தைக் காட்டும்படி நீ ஏன் அம்மாவிடம் கேட்கவில்லை?” என்றாள்.

“எனக்கு ஞாபகம் வரவில்லை” என்றாள் லூஸியா.

“எனக்கும் ஞாபகம் இல்லை” என்று துயரமாகக் கூறினாள் ஜஸிந்தா.

வேறு ஒரு நாள் ஜஸிந்தா லூஸியாவிடம், “நரகத்திற்குப் போக இவர்கள் அப்படி என்ன பாவம் செய்கிறார்கள்?” என்றாள்.

“எனக்குத் தெரியாது.  ஒருவேளை, ஞாயிறு பூசைக்குப் போகாமலிருப்பது, களவு செய்வது, கெட்ட வார்த்தை பேசுவது, சபிப்பது, சத்தியம் செய்வது என்று ஏதாவது இருக்கலாம்.” 

“அப்போ ஒரு வார்த்தைக்காகவா நரகத்துக்குப் போவார்கள்?” 

“அது தெரியாது.  ஆனால் அவர்கள் செய்வது பாவம்தானே?  ஏன் அவர்கள் பேசாமலிருக்கட்டுமே.  பூசைக்குச் செல்லட்டுமே.” 

“அவர்களுக்கு நரகத்தை மட்டும் என்னால் காட்ட முடியு மானால்!” என்று கூறிய ஜஸிந்தா சற்று சிந்தித்து விட்டு, “லூஸியா, நம் அம்மா அனுமதித்தால் எல்லா மக்களுக்கும் நரகம் எப்படிப் பட்டது என்று சொல்.  அவர்கள் பாவம் செய்யாதிருந்து நரகத்தில் விழாமலிருக்கும்படி நீ அதைச் சொல்” என்றாள்.

அன்று பகல் மிகவும் வெப்பமாக இருந்தது.  குழந்தைகள் மூவரும் கபேசோ பாறைகளில் அமர்ந்து ஆடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  திடீரென்று ஜஸிந்தா தரையில் முகம் கவிழ விழுந்து, “என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன். உம்மை ஆராதிக்கிறேன். உம்மை நம்புகிறேன். உம்மை நேசிக்கிறேன்.  உம்மை விசுவசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்” என்ற வானவனின் ஜெபத்தைச் சொன்னாள்.

ஓர் ஆழ்ந்த அமைதி சற்று நேரம் நிலவியது.

ஜஸிந்தா எழுந்து லூஸியாவிடம், “லூஸியா, எவ்வளவு நீள மான தெரு! எத்தனை ரோடுகள்! வயல்கள் நிரம்ப ஆட்கள் பசியால் அழுது கொண்டிருக்கிறார்கள்--அவர்கள் உண்பதற்கு ஒன்றுமேயில்லை.  மேலும் பாப்பரசர் ஒரு கோவிலில் மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு முன்பாக ஜெபித்துக் கொண்டிருக்கிறாரே!  எவ்வளவு பேர் அவருடன் ஜெபிக்கிறார்கள்! உனக்கு இது தெரியவில்லையா?” என்றாள்.

லூஸியாவுக்கு ஒன்றும் தெரியவில்லை. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் சில நிகழ்ச்சிகள் இவ்வாறு அச்சிறுமிக்கு உணர்த்தப்பட்டன.  மேற்கண்ட உணர்த்துதல் காட்சி, பாப்பரசர் எல்லா மேற்றிராணிமாருடனும் ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக்கொடுப்பதைக் குறிப்பதாகக் கருதப் படுகிறது.

பாப்பரசரைப் பற்றி மேலும் பல உண்மைகள் ஜஸிந்தாவுக்கு உணர்த்தப்பட்டன.  அவற்றையயல்லாம் மக்களிடம் சொல்லிவிட வேண்டும், அப்போது அவர்கள் பாப்பரசருக்காக வேண்டிக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் அவள், 

“லூஸியா, நான் பாப்பரசரையும், அந்த மக்களையும் கண்டதை வெளியில் சொல்லலாமா?” என்று கேட்டாள்.

“கூடாது.  நமக்கு அளிக்கப்பட்ட இரகசியத்தின் ஒரு பாகம் இது என்று உனக்குத் தெரியவில்லையா?  இதைச் சொன்னால் எல்லாமே வெளிவந்து விடும்” என்று எச்சரித்தாள் லூஸியா.

“சரி, அப்படியானால் நான் சொல்லவில்லை” என்று ஏற்றுக் கொண்டாள் ஜஸிந்தா.

பாப்பரசரைப் பற்றி இன்னொரு முறை ஜஸிந்தாவுக்குத் துலக்கமாக உணர்த்தப்பட்டது.

ஒரு நாள் ஆடுகளை வீட்டுக்குக் கொண்டு வந்தபின், ஜஸிந்தா லூஸியாவின் வீட்டுப் பின்புறத்திலுள்ள கிணற்றங்கரையில் உட்கார்ந்து ஆகாயத்தை நோக்கியபடி இருந்தாள்.  திடீரென, “நீ பரிசுத்த தந்தையைப் பார்க்கவில்லையா? எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பாப்பரசரை நான் பார்க்கிறேன்.  

ஒரு பெரிய வீட்டில் ஒரு மேஜை முன்னால் பாப்பரசர் முழங்காலில் நின்று கையால் முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார்.  வீட்டின் முன்னால் நிறைய பேர் நிற்கிறார்கள்.  சிலர் பாப்பரசர் மீது கல்லெறிகிறார்கள். மற்றவர்கள் அவரைச் சபித்து, மிக மோசமான வார்த்தைகளைச் சொல்லி அவரைத் திட்டுகிறார்கள்.  பாவம் பாப்பரசர்.  நாம் அவருக்காக மிகவும் ஜெபிக்க வேண்டும்” என்றாள்.

எந்தப் பாப்பரசரைப் பற்றி ஜஸிந்தா இவ்வாறு கூறினாள் என்று தெரியாது என லூஸியா கூறியுள்ளாள். “ஒரு பாப்பரசர்” என்றுதான் தெரியும் என்கிறாள்.