இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 9-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் ஆத்தும இரட்சண்ய ஆவலுக்கு மாதிரிகை.

தங்கள் பக்திக் காரியங்களை பிரமாணிக்கமாய் நிறைவேற்றுவதினால் , திவ்விய இரட்சகர் மட்டில் தங்களுக்கு உண்மையான அன்பிருக்கிறதென்று பல கிறித்தவர்கள் எண்ணிக் கொள்ளலாம். இவ்வகைப் பிரமாணிக்கமான அந்தஸ்து நல்லதுதான். என்றாலும் இதில் கிறித்தவர்களுக்குரிய கடமையெல்லாம் அடங்கி விட்டதென்று நினைக்கக் கூடாது. பக்திக்குரிய காரியங்களை பிரமாணிக்கமாய் அனுசரிக்கிறது கிறித்தவர்களுக்குரிய கடமைகளில் ஒரு சிறு பங்குதான். இறைவனின் எண்ணம் முழு இருதயத்தோடு இறைவனை அன்பு செய்கிறதுமல்லாமல் உன் அயலானையும் அவர் நிமித்தம் அன்பு செய் என்பதுதான். இந்த இரண்டு கற்பனைகளும் ஒரே கற்பனை. நாம் மீட்படைய இந்தக் கற்பனையை முழுதும் கடைபிடிக்க வேண்டும். நம்முடைய அயலாரை நாம் அன்புச் செய்யாமலும், அவர்களுடைய ஆத்தும் இரட்சண்யத்துக்காக உழைக்காமலும், பிறரன்பு கற்பனையை அலட்சியம் செய்தால் தேவ சித்தத்திற்கு விரோதமாய் நடக்கிறோம். இறைவனுக்குத் துரோகம் செய்கிறோம்.

இயேசுவின் திரு இருதயமானது நமக்கு காண்பிக்கிற நன்மாதிரிகைகளைச் சற்று ஆராய்வோம். அவர் தமது தேவ பிதாவை அளவு கடந்த விதமாய்ச் சிநேகித்தார். தவிர, தமது பரம பிதாவும் ஆத்துமங்களின் பேரில் வைத்திருந்த அணை கடந்த அன்பை அறிந்த நமதாண்டவர், அந்த ஆத்துமங்களை நித்திய சாபத்திலே நின்று மீட்கவும், தாம் தமது பிதாவின் பேரில் வைத்த சிநேகத்தைக் காண்பிக்கவும், தம்மைத்தாமே பூரண பலியாக ஒப்புக்கொடுத்து மானிட உருவம் கொண்டு நிந்தை அவமானமும் துன்பமும் நிறைந்த வாழ்வு வாழ்ந்து மிகக் கொடூரமான பாடுகளை அனுபவித்து தமது இரத்தமெல்லாம் சிந்தி, நமது மீட்புக்காகச் சிலுவையில் உயிர் விட்டார்.

திவ்விய இயேசு பொதுத்தீர்வை நாளில் திருவுளம் பற்றும் வார்த்தைகளைக் கவனிப்போமானால், நாம் கடவுளை அன்புச் செய்தோமா என்பதைப்பற்றியல்ல, நமது அயலாரை அன்புச் செய்து அவர்களுடைய இரட்சண்யத்துக்காக முயற்சி செய்தோமா என்பதைப் பற்றி அதிகமாய்க் கணக்கு கொடுக்க நேரிடுமென்று நினைக்க வேண்டியிருக்கிறது. நமது அயலாருடைய ஞான நன்மைக்காகவும் ஆத்தும இரட்சண்யத்துக்காகவும், நம்மை முழுதும் கையளிப்பதுதான். இந்த ஞான நன்மையை முற்றிலும் நமக்குப் பிரியமானவர்களுக்குத் தேட வேண்டும். அப்படியே பக்தியுள்ள தாய், தகப்பன் தங்கள் குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காக தங்களாலான முயற்சி எடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளைப் பரிசுத்தத்தனத்திலும், உறுதியான பக்தியிலும் வளரும்படி கவனித்து தீய நண்பர்களுடன் அவர்கள் பழகாதபடியும் அவர்களுக்கு நற்படிப்பினையை நாளுக்குநாள் ஊட்டி, தங்கள் வார்த்தையிலும், செயலிலும் அவர்களுக்குச் சகலத்திலும் நன்மாதிரிகையாயிருந்து நசரேத்தூரில் வாழ்ந்துவந்த திருக்குடும்பத்தைப் போல் நடந்து வர வேண்டும். நமக்கு கிடைக்கும் நல்ல பத்திரிகைகள், புத்தகங்களைக் கிறித்தவர்களிடத்திலும், மற்றவர்களிடத்திலும் கொடுத்து வாசிக்கச் செய்ய வேண்டும். படிப்பில் தேர்ச்சியில்லாத கிறிஸ்தவர்கள் பிறர் ஆத்தும் இரட்சண்யத்துக்காக உழைக்க வேண்டும்.

தர்மம் செய்தல்:

சில கிறிஸ்தவர்களுக்கு இறைவன் மிகுந்த செல்வத்தைக் கொடுத்திருக்கிறார். இதை வீண் செலவு செய்ய அல்ல. ஆனால் நமது செல்வத்தைக் கொண்டு ஆத்தும் இரட்சண்யத்துக்கு உதவியான பிறரை பிறரன்பு பணிகளைச் செய்து நிலைநிறுத்தி அவைகளை வளர்ச்சி செய்யும்படியாகவே கொடுத்தார்கள். சிலரிடம் அவ்வளவு செல்வம் இல்லாவிட்டாலும் அவர்கள் இருதயத்தில் இயேசுவின் திரு இருதய அன்பு பற்றுதலும் ஆத்துமங்களை இரட்சிக்க வேண்டுமென்கிற ஆவலுமுண்டு. அவர்களும் தர்மம் செய்ய பணம் மிச்சம் பிடிக்கலாம். வீண் ஆடம்பர செலவுகளைக் குறைத்து தர்மம் செய்வார்களேயானால் இயேசுவின் திருஇருதய ஆசீர்வாதம் அவர்களுக்கும் குடும்பத்துக்கும் நிறைவாய் கிடைக்கும்.

செபம்:

ஆத்தும இரட்சண்யத்துக்கு செபம் முக்கியம். பாவிகள் மனம் திரும்ப செபத்தால் முடியும். இது எல்லோராலும் கூடும். ஏழைகள் முதலாய் இதைச் செய்யலாம்.

புத்திமதி.

நீ வேலை செய்யும்போது அவர்கள் மத்தியில் இருக்கிறாய். ஆத்தும் இரட்சண்ய அலுவலைப் பற்றி சில வார்த்தைகள் நட்போடும், பிறரன் போடும் சொல்வானேயாகில் உடன் பலன் கிடைக்காவிட்டாலும் அவர்கள் இறக்கும் போதாகிலும் அவர்கள் மனந்திரும்புவர். இவ்வித நல்ல தருணங்களை வீணில் இழந்து போகாதே.

நன்மாதிரிகை:

தங்களைச் சுற்றி வாழும் கிறிஸ்தவர்களுடைய நன்மாதிரிகை அல்லது துர்மாதிரிகையின்படியே பிறமதத்தினர் நமது சத்திய வேதத்தை மதிக்கிறார்கள். தவிர நன்மாதிரிகையானது மற்ற கிறிஸ்தவர்களும் அதிக பக்தியுடன் நடப்பதற்கு மிகவும் ஏதுவுண்டு. வேதத்துக்கடுத்த கடமைகளிலும், கிறிஸ்தவனுக்குரிய புண்ணியப் பயிற்சிகளிலும் தளராத பிரமாணிக்கமாய் நடக்கிற கிறிஸ்தவன், தன் பங்குக் கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு பெரிய நன்மைச் செய்கிறான்.

வரலாறு.

புதுச்சேரியில் இயேசுவின் திரு இருதய ஆலயம் ஒன்றுண்டு. மேதகு காந்தி ஆண்டகை அவர்கள் இந்த ஆலயத்தை 1901 - ஆம் ஆண்டு கட்டினார். இந்த ஆண்டகை இயேசுவின் திரு இருதயத்தின் பேரில் மிகுந்த பக்தி உடையவர். அவர் தமது மேற்றிராசனத்திலுள்ள குருக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்தப் பக்தியைக் கொண்டாடவும், பரப்பவும் போதித்து வந்தார். ஆலயம் கட்ட இடம் தேடினார். ஆனால் இடம் கிடைப்பது சிரமமாக இருந்தது. பின்னர் இடம் விற்கவேமாட்டோமென்று இருந்த நகர பரிபாலன சபையார் அவர்களும் இணங்கி விலைக்குக் கொடுத்தனர். பின்னர் கட்டிடம் ஆரம்பமானது. ஆண்டகை முதல் கல் மந்திரித்து அஸ்திவாரமிட்டார்கள். இக்கல்லில் ஒரு விசேஷம் உண்டு. அதாவது இது ஒரு இந்து கோவிலின் வாசலிலிருந்த கல். இதில் ஒன்பது துவாரம் உண்டு. இந்தத் துவாரங்களின் வழியாகத்தான் தங்கள் தேவதையை பிறமதத்தினர் கண்டு தரிசித்தார்களாம். இப்போது இக்கல்லின் மேல் இயேசுவின் திருஇருதயம் இருக்கிறது. சாத்தானுடைய கோவில் வாசற்கல்லின் மேல் மனிதர்களை புனிதப்படுத்தி இரட்சிக்கத் தம்மிடம் அழைக்கிற இயேசுவின் திரு இருதய ஆலயம் தலைவாசற்படி நிற்கிறது.

தற்போது ஆலயம் புகழ்பெற்று விசுவாசிகளிடம் விளங்கும் திரு இருதயப் பக்தியானது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. முப்பது வருடங்களுக்கு அதிகமாய்ப் பசாசினுடைய ஆளுகையிலிருந்து இந்த இடத்தில் இப்போது இயேசுக்கிறிஸ்துவின் ஆட்சி நிறுவப்பட்டு தமது திருஇருதயத்திலிருந்து நித்திய வாழ்வையும், மீட்பையும் அடைய சகல சனங்களையும் அழைக்கிறதை நாம் பார்ப்பது எவ்வளவோ மன நிறைவைக் கொடுக்கிறது. இந்த ஆலயத்தைத் தரிசிக்க வரும் சகலரும் அலங்கரித்த வடிவு காட்சியைக் கண்டு ஆச்சரியப்பிரமை கொள்ளுகிறார்கள். இவ்வாலயத்தின் விசேஷம் என்னவென்றால் பல வர்ணக் கண்ணாடிகளால் கண்களைப் பறிக்கக் கூடிய இயேசுவின் திருஇருதயச் சாயல் மரியன்னையின் சாயல், பல புனிதர்களின் சாயல் அமையப் பெற்ற சன்னல்களே.

உண்மையின் பிரகாசமும், அன்பின் காந்தியும் வீசும் ஞான சூரியனாகிய இயேசுவின் திருஇருதயமானது ஆத்துமாக்கள் பேரில் வீசி அவைகளைப் பிரகாசிப்படையச் செய்து ஞான வாழ்வை உண்டு பண்ணி நித்திய மோட்ச பாக்கியம் கொண்டு வந்து சேர்ப்பதாகும் சுகிர்த மார்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம்

இயேசுவின் திருஇருதயத்தை அணிகிப்போ, புது ஜீவியத்தை அடைவாய். இந்த சீவியத்தில் திவ்விய இயேசுதான் உன்னிடம் இயேசு வாழ்கிறார். ஆதலால் பார்க்கிறது நீயல்ல, திவ்விய இயேசு பார்க்கிறார். செயல் உன்னுடையதல்ல, திவ்விய இயேசுவின் செயல். பேசுகிறது நீயல்ல திவ்விய இயேசுதான் பேசுகிறார். அன்புச் செய்வது உன் இருதயமல்ல, இயேசுவின் திருஇருதயமே.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.