இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 8-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் பிறரன்புக்கு ஆசிரியர்.

இயேசுகிறிஸ்து நாமும் தம்மைப்போல் இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தகுணமும் உள்ளவர்களாய் பிறரிடம் மிகுந்த பிறரன்பு மிக்கவர்களாய் வாழ வேண்டுமென்று தமது கட்டளைகளிலும் போதனைகளிலும் எடுத்துரைக்கிறார். "இதுவே என்னுடைய கற்பனை " என்கிறார்.

நாம் இயேசுவின் திருஇதயத்தை அன்பு செய்தால் நாம் இயேசுவை மட்டுமல்ல இன்னும் இயேசு தமது சகோதரர்களென்றும், தமது பரம் பிதாவின் மகன்களென்றும் அழைக்கிற மற்றெல்லா மனிதர்களையும் அன்பு செய்வோம். நாம் இயேசுவின் அன்புக்காக எல்லா மனிதர்களையும் மரியாதையோடும், அன்போடும் நடத்துவோம். தவிர அவர்களுடைய மனதைப் புண்ணாக்கி அவர்களுடைய பெயரை களங்கப்படுத்தும் எதையும் தவிர்த்து நடக்க கவனமாயிருப்போம். நல்ல கிறிஸ்தவர்கள் தங்களுடைய பிறரிடத்திலுள்ள குறைகளைப்பார்க்கிலும் அவர்களது புண்ணியங்களைப்பற்றி அதிகமாய் கவனிப்பார்கள். சில சமயங்களில் தங்களுடைய பிறரிடம் குற்றம் உண்டென்று அவர்களுக்கு உறுதியாய் தெரிந்தாலும் அதை அவசரமின்றியும் தக்கக் காரணமின்றியும் வெளியே சொல்லாதிருப்பதோடுகூட அவர்களுடைய நல்ல பெயரையும் தங்களாலியன்ற மட்டும் காப்பாற்றுவார்கள். அன்னப்பறவை நீரைப் பிரித்து பாலை மட்டும் குடிப்பதுபோல் நல்லக் கிறிஸ்தவர்கள் தங்கள் பிறரிடத்தில் எது குற்றம், எது துர்மாதிரிகையென்று பாராமல், அவர்களிடத்திலுள்ள நன்மையை மட்டும் கவனித்து வெளியே பேசுவார்கள்.

அதற்கு மாறாக தீய கிறிஸ்தவர்கள் பிறர் குடும்பங்களில் காணும் புண்ணியங்களை விட்டு விட்டு கண்ணை மூடிக் கொண்டு அவர்களுடைய குறைகளை மட்டும் பேசுவார்கள். பிறரிடம் தீயக் காரியங்களைக் கண்டால் அவர்களைத் திருத்த வேண்டும். அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக தீமையாய் அறிவிப்பார்கள். இப்படியாக அவர்களுடைய நல்ல பெயரை கெடுத்து விடுவார்கள்.

வரலாறு.

நாகரீகமற்ற மக்கள் வாழ்ந்துவந்த ஓர் ஊரில் ஒருவன் தன் மனைவியைக் கொலை செய்து விட்டான். இவர்களுடைய இனத் தலைவன் இதை விசாரித்தான். அதில் அவ்வூரிலுள்ள பெண் அவதூறாய், அநியாயமாய் மேற்கூறிய மனிதனிடம் அவனது மனைவிக்கு விரோதமாய் அவதூறாய் சொல்லி கோபம் மூட்டியதால் தான் கணவன் மனைவியை கொலை செய்திருக்கிறான் என்று அறிந்து கொண்டான். உடனே தன் இன மக்களையெல்லாம் அழைத்து கூட்டம் கூட்டி அந்த மோசமான பெண்ணை அழைப்பித்து, அவளை அங்கு நின்ற மரத்தில் பிடித்துக் கட்டும்படி கட்டளையிட்டான். இனத் தலைவன் தன் கையில் வைத்திருந்த ஈட்டியுடன் அவள் முன் நின்று கொண்டு உன் நாக்கை வெளியே நீட்டு என, நீட்டப்பட்ட நாக்கிலே தன் கையில் வைத்திருந்த ஈட்டியின் முனையால் இலேசாகக் கீறிச் செல்வான் தற்சமயம் உன் நாவில் படர்ந்திருக்கிற அந்த விஷத்தை மட்டும் எடுத்து விடுவது போதுமென்று நினைக்கிறேன்; மறு சமயமோ தப்பாது விஷத்தை மாத்திரமல்ல, உன் நாக்கையே துண்டித்து விடுவேன் என்று கூறினான். இது அங்கிருந்த மக்களின் காதிலேயும் விசேஷமாய் இந்த படுபாதகியின் காதிலேயும் இடியைப் போல் பாய்ந்தது. அதன்பின் அந்த இனத்தாரும், அந்த பெண்ணும் தங்கள் தங்கள் நாவை வெகு எச்சரிக்கையாய்க் காபந்து பண்ணினார்கள்.

பிறர் சிநேகத்துக்கு விரோதமாய்ப் பேசி குடும்பங்களிலும், மடங்களிலும், ஊர்களிலும் பிரிவினையென்கிற விதையை விதைத்த அநேகம் பேர் இறந்தபின் உத்தரிக்கிற இடத்திலே அநேக வருடங்களாய் மிக பயங்கரமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இத்தகைய ஆத்துமங்கள் அந்தப் பயங்கரமான சிறைச்சாலையை விட்டு வெளியே வந்து மற்றவர்களுக்குத் தங்களைக் காண்பித்து தங்களுக்காக அவர்கள் வேண்டிக் கொள்ளும்படி கெஞ்சி மன்றாட இறைவன் சில வேளையில் உத்தரவு கொடுக்கிறதுண்டு. அப்படியே ஒருநாள், புனித மார்கரீத் மரியாவுக்கு ஓர் ஆத்துமம் தன்னைக் காண்பித்து சகோதரியே, நான் பொறுக்க இயலாத வேதனைப்படுகிறேன். பிறரன்புக்கு விரோதமாய் நான் சொன்ன குற்றச்சாட்டும், துர்க்குணமும் நிறைந்த சில வார்த்தைகளுக்கு தண்டனையாக என் நாவானது நெருப்பால் எரிக்கப்படுகிறது. பிரிய சகோதரியே, தயவு செய்து நீங்களும் இந்த மடத்திலுள்ள மற்ற சகோதரிகளும் என் ஆத்தும் இளைப்பாற்றிக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நீங்களும் சொல்லுகிற வார்த்தைகளை மற்ற சகோதரிகள் நம்பும்படியாக, இதோ ஒரு அடையாளம் காட்டுகிறேன் என்று சொல்லி அந்த அறைக் கதவின் மேல் தன் கைகளை வைத்ததும், ஐந்து விரலும் கதவில் பதிந்து நெருப்புப் பற்றியெரிந்து அப்படியே கறுத்துப் போய் அந்த அறை முழுதும் பொறுக்கமுடியாத துர்நாற்றம் வீசியது. அந்தப் புனிதர் விபரத்தை தன் மடத்திலுள்ள அனைவருக்கும் அறிவிக்க, அவர்களெல்லோரும் இந்தப் பயங்கரமான அக்காட்சியை பார்த்து அக்கன்னிகை கண்ட காட்சி மெய்தான் என்று நம்பினார்கள்.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் இவ்வளவு அகோர ஆக்கினை உண்டென்று அறிந்திருக்கிற நாம், பிறரன்புக்கு விரோதமான வார்த்தைகளையும், செயல்களையும் நம்மை விட்டு விலக்குகிறதுமல்லாமல், இயேசுவின் திரு இருதயத்தில் விளங்கும் பிறரன்பு மாதிரிகையைப் பின்பற்றி நடக்க மிக உறுதியான தீர்மானம் செய்ய வேண்டும்.

மற்றவர்களுடைய மனதை புண்படுத்தாமலும், அவர்களுடைய பெயரைக் கெடுக்காமலும் இருந்தால் போதுமென்று இயேசுவின் திரு இருதயப் பக்தர்கள் திருப்தியடையக் கூடாது. நமது திவ்விய இரட்சகர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செயலும் அவர் மனிதர் பேரில் வைத்த மட்டில்லாத அன்பின் அத்தாட்சியே தவிர வேறல்ல. தம்மால் உண்டாக்கப்பட்ட படைப்புகளாகிய தூய மரியன்னை சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து உலகின் கண்களுக்கு மறைந்து வாழச் சித்தமானார். சிறுபிள்ளைகளைத் தம்மிடம் வரவழைத்து தமது பாசம் நிறைந்த ஆசீர்வாதம் தந்தருள்வார். ஜெருசலேம் நகருக்கு சம்பவிக்கப் போகிற கொடிய அழிவை நினைத்து அதன் மேல் கண்ணீர் சிந்தியதோடு நமது துன்ப வேளைகளில் தாமும் நம்மோடு வருத்தப்படுகிறாரென்று காண்பிக்கிறதற்காக இலாசர் என்பவரை அடக்கம் பண்ணிய கல்லறையருகில் மார்த்தாள், மரியாளோடு கண்ணீர் சிந்தியழுதார்.

செயல்.

திவ்விய இயேசு உன்னிருதயத்தில் அடிக்கடி எழுந்தருளிவர ஏதுவாயிருக்கிற உன் நாவால் பிறர் சிநேகத்தைப் பங்கப்படுத்தக்கூடிய எந்தக் குற்றத்தையும் வெகு எச்சரிக்கையோடு அகற்றிவிடும். எல்லார் மட்டிலும் பொறுமையாய் நடந்துகொள். எல்லோரோடும் சிநேகமாயிரு. ஒருவரையும் பகைக்காதே. பரிசுத்த பிறர் சிநேகப் பயிற்சியால் இயேசுவின் திரு இருதயத்துக்குப் பிரியப்பட சமயந்தேடு. உன் அயலானைப்பற்றி எப்போதும் நன்மையாய் நினைக்கவும், பேசவும் கற்றுக் கொள். எளியவர்களிடமாய்த் திவ்விய இயேசு இருக்கிறாரென்றெண்ணி அவர்களுடைய ஆத்தும் சரீரத்துக்கு உன்னாலான உதவியைச் செய். கடைசியாய் உனக்கு மற்றவர்கள் செய்யாதிருக்க விரும்புவதை, நீயும் மற்றவர்களுக்குச் செய்யாதே.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.