இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 10-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் விசுவாச வாழ்விற்கு ஆசிரியர்.

பிதாவாகிய இயேசுகிறிஸ்து நாதர் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டது தமது சத்திய வேதத்தின் உண்மையை மனிதர்களுக்கு அறிவித்து, சுபாவத்துக்கு மேலான வாழ்வையும், ஆத்தும் மீட்பின் அவசியத்தையும் கற்பித்து இவ்வுலக காரியங்களிலிருந்து நமது இருதயப் பற்றுதல்களை நீக்கி நித்திய மோட்சானந்த பாக்கியத்தின் பற்றுதல்களை பலப்படும் படி செய்து விசுவாசமும் அன்பும் நிறைந்த புது வாழ்வை கற்றுக்கொடுக்கவே இவ்வுலகத்துக்கு வந்தார்.

விசுவாசத்தால்தான் நாம் இறைவனையும் இயேசுக் கிறிஸ்துவையும் கடைசி நிலையையும் பரிசுத்த திருச்சபையையும், நமது திவ்விய வேதத்தையும், அதன் சத்தியங்கள் முழுமையையும் அறிகிறோம். உண்மையான விசுவாசத்துக்கும், அந்த விசுவாசத்தை அனுபவத்திற்கு கொண்டு வருகிறதற்கும் பெரிய தடையாயிருப்பது அறியாமைதான். மறைக்கல்வி தெரியாதவர்களுக்கு இயேசுவின் திரு இருதயப் பக்தர்கள் அதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கத்தோலிக்கப் புத்தகங்கள், பத்திரிகைகளை வாசிக்கக் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும். இப்படிச் செய்தால் அறியாமை நீங்கி புதுத் தெளிவு உண்டாகும். இயேசுவின் திருஇருதயத்துக்கு இதைவிட பிடித்தமானது வேறொன்றுமில்லை.

நல்ல கிறிஸ்தவர்களென்று அழைக்கப்படுகிறவர்கள் முதலாய் வேதப் படிப்பினையில் பின் தங்கிய நிலையிலிருக்கிறார்கள். ஆனால் குருக்களின் மறையுரைகளுக்கு காது கொடுத்து, நாளுக்கு நாள் கத்தோலிக்க மறையின் உண்மையை அதிகமதிகமாய் அறிந்து கிறிஸ்தவர்களுடைய கடமைகளைச் செய்து தாங்கள் நன்முறையில் நடந்து மற்றவர்களிடத்தில் உற்சாகமும், பிரகாசமும் வளரப் பண்ணுவது சிறந்த முறையாகும். சில கிறிஸ்தவர்கள் அறியாமையினால் இறைவனுக்குகந்த கடமைகளை நிறைவேற்றாமல் விட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு நன்மையும் தீமையும் நன்றே. ஏதோ மறு உலக வாழ்வு இல்லாதது போலவும், நம் வாழ்வின் முடிவில் கணக்குக் கொடுக்க தேவையில்லையென்றும் வாழ்வார்கள். நித்திய வாழ்வுக்கடுத்த உண்மைகளைப் பற்றி அவர்களுக்கு தெளிந்த அறிவு இல்லை.

புண்ணிய பயிற்சியினாலும், நன்மாதிரிகையினாலும், தங்களுக்கும் பிறருக்கும் ஆத்தும் மீட்பைத் தேடுவதற்குப் பதிலாய் சில பக்தி முயற்சிகளை கடமைக்கு அனுசரிப்பார்கள். திருஇருதய அன்பர்களோவென்றால் தங்களுடைய விசுவாசத்தை உயிர்ப்பித்து, இயேசுவின் திருஇருதய வாழ்வைத் தங்களிடத்தில் பிறப்பிப்பார்கள்.

நசரேத்தூரில் திவ்விய இயேசு வெளிப் பார்வைக்கு மற்ற சாதாரண குழந்தைகளைப்போல் தான் இருந்தார். ஆனால் உண்மையில் அவருடைய வாழ்வு முற்றிலும் வித்தியாசமான தெய்வீக வாழ்வு. தேவ குமாரனுடைய அளவில்லாத பரிசுத்தத்தனத்தால் நிறையப் பெற்ற வாழ்வு. நம்மிடத்தில் உயிருள்ள விசுவாசமிருந்தால் விசுவாசத்துக்குத் தகுந்தது போல் நம்முடைய வாழ்விருக்கும். இயேசுவின் திருஇருதய செயல்களோடு நம்முடைய செயல்களும் ஐக்கியப்படும். உலக நாட்டமும், தீய கிறிஸ்தவர்களுடைய தன்மையும் வேத விரோதிகளது எதிர் போக்கும் நம்மிடம் உண்டாகாமல் இயேசுவின் திருஇருதய நோக்கமும் புனிதர்களின் தன்மையும் நம்மிடம் குடிகொள்ளும்.

தங்களுடைய புண்ணிய மாதிரிகைகளால் மற்றக் கிறிஸ்தவர்களுக்கு மேலாய் தேவ ஊழியத்தில் விளங்கி வாழ்கிற சில கிறிஸ்தவர்கள் நமது பங்குகளிலிருப்பது மிகவும் அவசியமும் பயனுமுள்ளது. உயிருள்ள விசுவாசமும் அன்பும் நிறைந்த இருதயமுடைய இத்தகைய கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு பங்கிலும் இருப்பார்களேயாகில் நம் இந்திய நாட்டில் மாற்றம் உண்டாகும். எத்தனையோ பிற மதத்தினர் மனந்திரும்பி விண்ணரசு செல்ல உதவியாயிருக்கும். இறைவனை அன்புச் செய்து வணங்கவும், அதனால் தங்கள் ஆத்துமத்தை இரட்சிக்கவுமே அவர்கள் நன்றாய் அறிந்திருக்கிறார்கள். "ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33) என்று கூறிய இயேசுக்கிறிஸ்துவின் கற்பனைக்கும் போதனைக்கும் ஒத்தபடி அவர்கள் வாழ்கிறார்கள். தவிர மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத் 16 : 26) என்ற கிறிஸ்துவின் அருள்வாக்கு அவர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

லொயோலா பட்டணத்தில் தூய இஞ்ஞாசியார் இயேசுசபையை நிறுவி மேலான குணங்கள் உள்ள இளைஞனை தன் வசம் சேர்க்க முற்பட்டார். அந்த இளைஞன் உலக ஆசாபாசங்களில் மூழ்கியிருந்தான்.

தூய இஞ்ஞாசியர் அந்த இளைஞனைக் கண்டு மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குப் பயன் என்ன? என்னும் கிறிஸ்துவின் வார்த்தையை அடிக்கடி நினைப்பூட்டுவார். அதனால் அவ்விளைஞன் அதை உணர்ந்து உலகத்தைத் துறந்து தன்னை முழுதும் இயேசுகிறிஸ்துவுக்குக் கையளித்து இயேசு சபையில் நுழைந்து குருவானார். இவர்தான் நாட்டுக்கு மீட்புக் கொண்டு வந்த புனித பிரான்சிஸ் சவேரியாராவார்.

இஸ்பான்ய தேசத்தில் சிறந்த பிரபு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஓர் இளைஞர் இருந்தார். இவருக்கு அரச அரண்மனையில் பொறுப்பான வேலை கிடைத்தது. இச்சமயம் இஸபெல்லா இராணி இறந்து போனார். அரச வம்சத்தாரோடு அடக்கஞ் செய்ய வேண்டியிருந்ததால் இராணியின் சடலத்தோடு இந்த இளைஞனும் போகவேண்டியிருந்தது. குறிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யுமுன் இது இராணியின் சடலந்தானென்று இந்தப் பிரபுவானவர் உறுதி மொழி கூறவேண்டியிருந்ததினால் அந்த சடலப் பெட்டியைத் திறந்தார்கள். அந்த இளைஞர் இராணியின் முகத்தைப் பார்த்தார். சாவானது அழகு முகத்தை எவ்வளவு சீர்குலைத்துவிட்டது என்று அந்த இளைஞர் பிரமித்து நின்றார். திவ்விய இயேசுவின் அருட்கொடை அதே நிமிடத்தில் அவரிருதயத்தில் இறங்கி அவருடைய புத்திக்கு பிரகாசத்தையும் மனதுக்குத் திடனையும் கொடுத்தது. அழிவுக்குரிய உலக மகிமையைப் பெரிதாக எண்ணிப் பின்பற்றுவது என்ன அறியாமை. ஒரு போதும் இறவாத அந்த ஏக இறைவனுக்கு இதே நிமிடம் என்னை முழுதும் கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன் என்று கூறி எல்லாவற்றாயும் துறந்து இயேசு சபையில் நுழைந்து மூன்றாவது தலைவராக நியமிக்கப்பட்டு பெரும் புனிதனானார். அவர்தான் புனித பிரான்சிஸ்கு போர்ஜியார். இறைவனின் அருள்கொடையும் உறுதியுள்ள விசுவாசமும் ஆத்துமங்களில் எவ்வளவு நன்மையை விளைவிக்கிறதென்று மேற்கூறிய சம்பவங்களால் அறிந்து கொள்ளலாம்.

வரலாறு.

ஓர் கொலைக்காரன் மரணத் தீர்ப்பளிக்கப்பட்டான். இந்தத் தீர்ப்பைக் கேட்டு அந்த கொலைக்காரன் கோபங்கொண்டு நீதிபதியை திட்டினான். அதே மூர்க்கத்தனத்தின் நிலையில் திரும்பவும் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டான். அந்தப் பட்டணத்தை விசாரிக்கும் குருவானவர் இந்தக் குற்றவாளியிடம் போய், அவனுக்கு இயேசுவின் திருஇருதயப் படம் ஒன்றைக் காட்டி, அவனோடு பேச ஆரம்பித்தார். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசவுமில்லை, படத்தைப் பார்க்கவுமில்லை. அந்தப்படம் ஆண்டவர் தமது திருஇருதயத்தை மனிதர்களுக்குக் காண்பித்து அன்புக்கு அன்பு கேட்கிற காட்சியாக இருந்தது. இதைக் கண்ட குருவானவர் தற்சமயம் மௌனமாய்ப் போய்விட்டார். மீண்டும் மறுமுறை வந்து அதே படத்தை அவனுக்குக் காண்பித்து அதை அவன் வணங்கவும், ஒரு சிறு செபம் தன்னுடன் சேர்ந்து சொல்லவும் கேட்டுக் கொண்டார். பாவியானவன் அப்போதும் மவுனம் சாதித்தான், என்றாலும் படத்தைத் திரும்பி பார்த்தான். ஆச்சரியம்! உடனே தன்னை அறியாமல் அவன் முழந்தாளிட்டு கண்ணீர் சிந்தி ஒ! என் நேச இரட்சகரே! நீர் உம்முடைய இருதயத்தை இவ்வளவு அன்போடு எனக்கு கொடுத்திருக்கிறதைக் காண்கிற நான் என்னுடைய இருதயத்தை உமக்குக் கொடுக்க தாமதிக்கலாமா? என்று அங்கலாய்த்தான். இது முதல் அந்தத் தீயவன் தீய குணங்களிலிருந்து முழுதும் மாறிவிட்டான். தான் குற்றவாளியென்றும் தான் சாவுக்குரியவன் என்றும், தன் பாவத்துக்குப் பரிகாரம் செய்யத் தயாராயிருப்பதாகவும் தீர்மானம் எடுத்துக் கொண்டான். பிறகு மனஸ்தாபத்தோடு ஒப்புரவு அருட்சாதனம் பெற்று நற்கருணை பெற்றான். தான் காண்பித்த துர்மாதிரிகைக்கும், நியாயாதிபதிகளை அவதூறாய்ப் பேசினதற்கும் பலமுறை மன்னிப்புக் கேட்டான். கடைசியில் குருவானவரை நோக்கி, அன்புள்ள தந்தையே, நீர் இயேசுவின் திருஇருதயப் படத்தை எனக்குக் காண்பித்ததற்காக உமக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். எனக்கு மீட்பு கிடைத்தது. உம்மாலும் இயேசுவின் திருஇருதயத்தினாலுமேயல்லாமல் மற்றப்படியல்ல என்று உறுதியாகக் கூறினான்.

புனித மார்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம்.

சதையிலான இருதயத்தின் சாயலாய் வணக்கம் செலுத்துவது தமக்கு விசேஷ சந்தோசம் வருவிக்கிறதென்று இயேசுவின் திரு இருதயம் எனக்கு தீர்மானமாய்ச் சொன்னது. ஆதலால் மனிதர்களுடைய கல்லான இருதயத்தை இளக்க தமது இருதயப் படங்களை பகிங்கரமாய் ஸ்தாபிக்க வேண்டுமென்று விரும்பியதும் தவிர தமது திரு இருதயத்துக்கு இவ்வகை மரியாதை செய்கிறவர்களுக்கு தமது இருதயத்திலுள்ள ஏராளமான அருட்கொடைகளைப் பொழிவதாகவும் எனக்கு வாக்குக் கொடுத்தார்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.