இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 6-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் புண்ணிய பரிசுத்தத்தின் வாழ்வுக்கு மாதிரிகை. (சாங்கோபாங்கத்துக்கு மாதிரிகை).

இயேசுவின் திரு இருதயமானது சாங்கோபாங்கத்துக்கு ஊற்றும் மாதிரிகையுமாயிருக்கிறது. நமது ஆண்டவர் இவ்வுலகில் வாழ்ந்த முப்பத்து மூன்று ஆண்டுகாலமும் சகல புண்ணியங்களிலும் உலகத்துக்கு மாதிரிகையாயிருந்தார். எவ்வித முயற்சியும், தியாகச் , சிந்தனையுமில்லாமல் இயேசுவின் திருஇருதயப் புண்ணியங்களைப் பின்பற்றி புனிதத் தன்மையடைய பல கிறிஸ்தவர்களுக்கு ஆசையுண்டு. ஆனால் இது சரியான ஆசையல்ல. ஏனென்றால் இவர்கள் சாங்கோபாங்கம் எதிலடங்கியிருக்கிறதென்று கண்டுபிடிக்க வேண்டும்.

இப்போது மோட்ச மகிமையில் தங்கள் புண்ணியங்களுக்காக நித்திய பலனை அனுபவிக்கிற கிறிஸ்தவர்கள் பிறக்கும்போதே புனிதர்களாய்ப் பிறந்தார்களா? தேவ கொடைக்குக் காது கொடுத்து, தங்கள் விருப்பு வெறுப்புகளை வென்று, தேவ காரியங்களிலும், கிறிஸ் தவர்களுக்குரிய புண்ணியப் பயிற்சியிலும் தங்களை முழுதும் தாராளமாய்க் கையளித்ததினாலல்லவா பரிசுத்ததனத்தை அடைந்தார்கள்.

நாமும் எவ்விதத்திலும் உத்தம் கிறிஸ்தவர்களாயிருக்க நல்ல தீர்மானம் செய்து சாகும் மட்டும் அதைக் காப்பாற்ற நம்மாலான முயற்சி செய்வோம். இயேசுகிறிஸ்துவின் அன்புக்காக நமது சாதாரண செயல்களை உத்தமமாய்ச் செய்து நமது அனுதின கடமைகளைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி, கிறித்துவர்களுக்குரிய புண்ணியப் பயிற்சியில் நாள்தோறும் விருத்தியடைவதில் தான் மீட்பு அடங்கியிருக்கிறது. வணிகர்களைப் பாருங்கள். லாபம் அடைய எப்போது மிக்க அபூர்வமான நேரம் வருமென்று காத்துக் கொண்டிருக்கிறதில்லை; தாங்கள் விற்கிற ஒவ்வொரு பொருளிலும் சிறிதளவு லாபமாவது அடையக் கருத்தாயிருந்து வர வர சிறிது சிறிதாய் பெரிய இலாபம் அடைகிறார்கள். விவிலியத்தில் இயேசு இரட்சகர் நாம் இந்த உலகத்தில் ஞான வியாபாரிகளாயிருக்கிறோமென்று எடுத்துக் காண்பித்து, தாம் வருகிறவரையில் நன்றாய் வியாபாரம் பண்ண வேண்டுமென்றும் சொல்லுகிறார்.

இவ்வுலக இன்பத்தைத் தேடித்திரிகிற கிறிஸ்துவர்களுக்கு மேற்கூறிய தியாக வாழ்வு கடுமையானதாயிருக்கும். சுறுசுறுப்புள்ள கிறிஸ்தவர்கள் இவ்வுலகத்திலேயே மிக்க பாக்கியவான்களாய் வாழ்கிறார்கள். சுய பரித்தியாகப்பலியில் உண்மையாகவே இவர்கள் இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றி நடக்கிறார்கள். தேவ அன்புக்காக செய்கிற இந்தப் பலிகளிலுள்ள சுமையை திவ்விய இயேசுவின் கொடை களும் ஆசீர்வாதமும் எளிதாக்குகிறதோடு கூட, தேவ ஊழியத்தில் தாராள குணமுள்ள இவர்களுடைய இதயத்தை ஞான ஆறுதலால் நிரப்பவே இவர்களுடைய முகத்தில் சந்தோஷக் கதிர் வீசுகிறது.

அநேக கிறிஸ்தவர்களுக்கு தாங்கள் வேத படிப்பினைப்படி ஒழுங்காய் நடக்க வேணுமென்கிற ஆசையிருந்தாலும் எனக்கு நேரமில்லை என்பார்கள். உண்மையும் உறுதியுமான நல்ல மனதில்லாமைதான் குறை. உலகத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு வர அல்லது சீரும் செல்வாக்கும் பெற ஓர் அரசு வேலையை பெற அவர்கள் விரும்பும் போது அவர்கள் நடக்கிற விதம் எப்படி என்று பார். தங்கள் உடல் நலத்தையும் பலத்தை யும் கவனியாமல், இராப்பகலாய் எவ்வளவு உற்சாகத்தோடு உழைக்கி றார்கள்! தாங்கள் கொண்ட கருத்து நிறைவேறும்படி என்ன களைப்பு தவிப்பு வந்தாலும் அவர்கள் அதைக் கவனிக்காமல் இருக்கிறார்கள்.

உலகக் காரியங்களில் இவ்வளவு ஆர்வமிருக்கும்போது ஊழியத்தில் திருஇருதயப் பக்தர்களுக்கு எவ்வளவு தாராள குணம் உண்டாக வேண்டும்! இயேசுவின் திரு இருதயத்துக்குப் பிரியப்பட பரித்தியாகங்கள் செய்யாதிருக்கலாமா?

வரலாறு

ஒரு கிராமத்தில் கத்தோலிக்க போர் வீரன் இருந்தான். இவன் நாள்தோறும் தன் ஊருக்குப் பக்கத்திலிருந்த கோவிலுக்குப் போய் அங்கே தேவ நற்கருணை முன்பாக, அரசன் முன்னிலையில் போர் வீரன் பாரா கொடுப்பது போல் அசையாமல் ஒருமணி நேரம் நின்று கொண்டிருப்பான். இவன் நாள்தோறும் இப்படிச் சென்று வருகிறதைக் கண்ட ஒரு குருவானவர் இவனுடைய பக்தியின் அடையாளத்தை பற்றிச் சற்றுப் புகழ்ந்து பேசி , ஏன் இப்படி நாள்தோறும் காவல் காப்பவனைப் போல் நின்று வருகிறாயென்று கேட்டார். போர் வீரன் குருவானவரை நோக்கி சுவாமி, என் படைத்தலைவரின் வீட்டு முன் அவரை மகிமைப்படுத்த காவற்காரன் இருக்கிறான். திவ்விய இயேசு என் படைத்தலைவரைவிட ஆயிரமடங்கு அதிக மகிமைக்குரியவர் என்றாலும் இந்த ஆண்டவருக்கு முன்பாக ஒரு போர்வீரனையும் காணோம். இதனால்தான் நான் நாள்தோறும் என் ஆண்டவருக்கு முன்பாக ஒருமணி நேரம் போய் நிற்கிறேன் என்றான். நீ அப்படி அங்கே நிற்கும்போது ஆண்டவரை நோக்கி என்ன சொல்லுகிறாய்? என்று கேட்கையில், சுவாமி, போர்வீரனாகிய எனக்கு என்ன செபம் தெரியும்? போர்ச்சேவகர்களுக்கு செபமும், பக்தி முயற்சிகளும் அதிகம் தெரியாது. நான் ஆண்டவருக்கு முன்பாக நிற்கும் போது என் ஆண்ட வரே! நீர் அங்கேயிருக்கிறீர், உம்மை மகிமைப்படுத்த நான் இங்கேயிருக்கிறேன் என்கிற வார்த்தைகளைத்தான் சொல்லுகிறேன் என்றான்.

குருவானவர் தன்னால் முடிந்ததை செய்துவந்த இந்த போர்வீரனுக்கு உண்டான நல்ல மனதைக் கண்டு மிக்க ஆச்சரியப்பட்டார். திரு இருதய அன்பர்களும் இந்தப் போர்வீரனைப்போல் தங்கள் சோம்பேறித்தனத்தை ஜெயித்து, கெட்ட கிறிஸ்தவர்கள், பிறமதத்தினர் முதலானவர்களின் கேலிக்குப் பயப்படாமல் திரு இருதயத்துக்குப் பிரியப்பட தங்களாலானதைச் செய்யவும், நல்ல கிறிஸ்தவர்களாய் நடந்து தேவ ஊழியத்துக்கடுத்த ஞானக் காரியங்களையெல்லாம் தாராள குணத்தோடு நிறைவேற்றவும் உறுதியான தீர்மானம் செய்ய வேண்டியது.

தேவ கட்டளைப்படி மகாஉத்தமரான நோவே என்பவர் வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி அந்தப் பிரமாண்டமான பெட்டகத்தைச் செய்யும்போது தீயவர்களும் அவரை இகழ்ந்து கேலி பண்ணினார்கள். நோவே தேவ வார்த்தையின்பேரில் நம்பிக்கை வைத்து அவர்களுடைய கேலிகளுக்குக் காது கொடாமல் தன் வேலையை நடத்திவந்தார். சில நாட்களுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு வந்தது. தன்னை நிந்தித்தவர்கள் படும் துன்பத்தையும் சாவையும் நோவே கண்டதுதவிர, தான் தன் குடும்பத்தோடு பெட்டகத்தின் முகமாய்க் காப்பாற்றப்பட்டதையும் அறிந்தார். அவர்கள் அறிவில்லாமல் நடந்து மடிந்தார்கள். ஆண்டவருக்கு உண்மையாயிருந்து அவர் கட்டளைப்படி நடந்த நோவே காப்பாற்றப்பட்டார்.

நோவே என்பவரின் பெட்டகத்தைவிட, உண்மையான தேவ பெட்டகமும், மனிதர்களுக்கு அடைக்கலமும் மீட்புமாகிய திரு இருதயத்திலிருந்து நம்முடைய விருப்பு வெறுப்புகளை ஜெயிப்போம். நாளுக்கு நாள் பக்தியில் வளர்வோம்.

செயல்

நமக்கு என்ன துன்பம் வந்தாலும் சரி, அன்புக்குரிய இயேசுவின் திருஇருதயத்தை நமது முழு மனதோடு அன்பு செய்வோமாக! ஒரு தடவை அவருக்கு நமக்குள்ள சகலத்தையும் கொடுத்தபிறகு திரும்ப ஒரு போதும் அவைகளில் எதையும் எடுத்துக் கொள்ளாமலும் - நமதென்று யாதொன்றையும் வைத்துக் கொள்ளாமலும், எப்போதும் நாம் அவருக்கு முழுதும் சொந்தமாயிருப்போமாக.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.