இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 5-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயமானது நம் பாவத்தை வெறுத்து விலக்கப் படிப்பிக்கும் ஆசிரியர்

இயேசுவின் திருஇருதயமானது, தமது தேவ பிதாவின் பேரிலும் நமது ஆத்துமங்களின் பேரிலும் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறதும் தவிர பாவமானது கடவுளுக்கு அளவில்லாத நிந்தையையும், ஆத்துமங்களுக்கு நித்திய நாசத்தையும் வருவிக்கிறபடியால், அதையும் மட்டற்ற விதமாய்ப் பகைக்கிறது. பாவத்தின் மேல் வெறுப்பு இருந்தாலொழிய அன்பு இருக்கவே முடியாது. பாவமானது உலகத்திலுள்ள சகல தீங்குகளிலும் பெரிய தீங்கு.

சாவான பாவத்தைக் கட்டிக் கொள்ளுகிறவர்கள், தங்கள் ஆத்துமத்தை தீய ஆவிக்கு விற்கும் பொருட்டு அதற்கு அடிமைகளாகிறார்கள் என்கிறார் புனித அகுஸ்தீன். "பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்" (தோபி 12 : 10) என்று பாவத்தை விலக்கி நடக்கும்படி தொபியாசுக்கு வானதூதர் இரபேல் அறிவுரைக் கூறியுள்ளார்.

இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும், நமது ஆத்துமங்களை மீட்கவும் நமது பாவங்களைத் தன் மேல் சுமந்து பயங்கரமான தண்டனைகளுக்குத் தம்மை முழுதும் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

இயேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்ய வேண்டுமானால், நீ முன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதோடு, இனி மனது பொருந்தி யாதொரு பாவத்தையும் செய்யாமல் விலகி நட. சில தீய கிறிஸ்தவர்கள் தங்கள் உடலுக்கு வரும் நோயை விலக்க மிகக் கவலையோடு தங்கள் ஆத்துமா முழுவதையும் கவனியாமல் விட்டுவிடுவார்கள். இவர்களைப் போல் நீங்கள் நடக்க வேண்டாம். நோய் வந்தால் மருத்துவரைக் கூப்பிட்டு கசப்பான மருந்தையும் உண்டு மிகுந்த வேதனைக்குரிய சிகிச்சை செய்து கொள்ள சம்மதிக்கிறவர்கள், உடல் சுகத்தைவிட விலையுயர்ந்த ஆத்தும் பலத்துக்கான சிறிய வருத்தங்களையும், தியாகத்தையும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

வரலாறு

ஒரு கிராமத்தில் எல்லோரும் நல்ல கிறிஸ்தவர்களாய் வாழ்ந்து வந்தனர். தன் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுத்து மிகவும் மோசமாக நடந்து வந்த தீய கிறிஸ்தவன் ஒருவனை அவனது நண்பர்கள் புத்திச் சொல்லி நல்வழிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவன் அவர்களைக் கேலி செய்தான். நான் முட்டாள் அல்ல, மரணம் வருமுன் நான் ஒப்புரவுப் பெற்றுக் கொள்வேன். இப்போதும் இன்பங்களை என் மனம் போல் அனுபவித்து விட்டு, மறுமையிலும் விண்ணகம் சேருவேன் என்று நாசூக்காகப் பேசுவான். ஆனால் ஒரு நாள் இந்த தீயவன் கீழே விழுந்து ஒரு வார்த்தையும் பேசமுடியாமல் அவலமாய் இறந்தான்.

நாம் செய்த பாவங்களை ஒப்புரவு அருட்சாதனத்தால் கழுவி தபசு செய்து அன்பு நிறைந்த என் இயேசுவின் திருஇருதயத்துக்கு இனி ஒருபோதும் வருத்தம் செய்யவே மாட்டேன் என்று நல்ல தீர்மானம் செய்வோம்.

பிரான்ஸ் நாட்டு பக்தியுள்ள அரசக்குல பெண் இளவரசனான தன் மகனுக்குச் சொன்ன அருமையான வார்த்தைகளை மற்ற பக்தியுள்ள தாய்மார்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்வார்களாக! என் மகனே, நான் உன்னை எவ்வளவு அன்பு செய்கிறேனென்பதை நீ அறிவாய்; என்றாலும் நீ ஒரு சாவான பாவத்தால் இறைவனுக்குத் துரோகம் பண்ணுகிறதை நான் பார்க்கிறதைவிட நீ சாகிறதை நான் பார்க்கிறது எனக்கு நலம் என்பாள். தன் அன்பு தாயாருடைய வாயிலிருந்து புறப்பட்ட இந்த உருக்கமான போதனையால் இந்த இளவரசன் எவ்வளவு பயன் அடைந்தாரென்றால், அவர் புனிதரானார். அவர்தான் பிரான்ஸ் நாட்டு புனித ஞானப் பிரகாசியார்.

நம்முடைய முதல் பிதா மாதாவாகிய ஆதாம் ஏவாள் இன்பத்தால் அலைக்கழிக்கப்படாத தூய அந்தஸ்தில் படைக்கப்பட்டிருந்தாலும் பாவத்தில் விழுந்தார்கள். நாம் நமது ஆத்துமாவை மீட்க வேண்டுமானால் தூய ஆவியானவர் விவிலியத்தில் கூறியுள்ளபடி நடக்கவேண்டும். "உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது." (மத் 5:29) ஆண்டவர் நமது உடலின் வலது கண்ணைப் பிடுங்கி எறியச் சொல்லுவது இல்லை. படைக்கப்பட்ட வஸ்து அல்லது ஒரு அன்பு உன் கண்ணைப் போல் உனக்கு அவ்வளவு அருமையாய் இருந்தாலும் அது உனக்கு பாவ சுமையாய் இருக்கும் போது அதை நீ தாராள குணத்தோடு விட்டுவிலக வேண்டும். இரவில் எரிகிற விளக்கைச் சுற்றி, பறக்கிற விட்டில் பூச்சியைப் பார். அது நெருப்பிலே விழுந்து அதிலே சாகிறது. பாவ நேரங்களும் அப்படித்தான். அதைவிட்டு விலகாவிட்டால் கட்டாயம் பாவத்தில் விழவேண்டியதுதான்.

திருஇருதய அன்பர்களாகிய நீங்கள் பாவ சமயத்துக்கு ஒருபோதும் மனம் பொருந்தி இடம் கொடுப்பதில்லை என்றும் திரு இருதயத்துக்கு வருத்தம் தரக்கூடிய எந்த ஒரு குற்றத்தையும் செய்வதில்லை என்றும், தாராள குணத்தோடு உறுதியான தீர்மானம் செய்யுங்கள். இயேசுகிறிஸ்து தாமே புனித மார்கரீத் மரியா மூலமாய் நமக்குச் சொல்வதாவது : பிசாசு உன்னைச் சோதிக்கும் போது நமது கண்களை உடனே உயர்த்தி இயேசுவின் திருஇருதயமே, நீர் என்னுடைய பலமும் ஆதரவுமாயிரும். நான் உமக்குத் துரோகம் பண்ண விட்டுவிடாதேயும். நான் உமக்கு எப்போதும் சொந்தமாய் இருக்க விரும்புகிறேன். என்னை உம்முடைய உடமையாக வைத்துக் காப்பாற்றியருளும் என்று சொல்லவும்.

புனிதர்கள் பிறக்கும்போதே புனிதர்களாகப் பிறக்கவில்லை. நம்மைப்போல் பலவீனமுள்ள சரீரத்தோடு பிறந்தவர்கள். என்றாலும் துர்க்குணங்களோடு ஓயாமல் போராடினார்கள். ஆதலால் நீங்களும் அவர்களைப்போல் கடைசி பரியந்தம் யுத்தம் செய்யுங்கள். அவர்களைப்போல் நித்திய மகிமை முடியை சுதந்தரித்துக் கொள்வீர்கள். நீங்கள் நம்மைச் சிநேகித்தால் சகலமும் உங்களுக்கு இலகுவாயிருப்பதோடு கூட சகலமும் உங்களுக்கு கைகூடும்.

இயேசுவின் திருஇருதயத்திற்கு தன்னை முழுதும் ஒப்புக் கொடுக்கும் செபம்

இயேசுவின் திரு இருதயமே! உமது மட்டில் எங்களுக்குள்ள அன்பைக் காண்பிக்கவும், எங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணவும், எங்கள் இருதயத்தையும், எங்களை முழுமையாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். உமது உதவியைக் கொண்டு ஒருபோதும் எந்தப் பாவத்தையும் செய்கிறதில்லை என்று பிரதிக்கினை பண்ணுகிறோம். ஆனால் எங்களுடைய பலவீனம் உமக்கு நன்றாய்த் தெரியும். உமது உதவியில்லாமல் ஒரு நன்மையும் எங்களால் செய்யமுடியாது. நீர் செய்ய வேண்டாமென்று விலக்குகிற தீமையை விலக்கி, நீ செய்யென்று கட்டளையிடுகிற நன்மைகளையும், புண்ணியங்களையும் கடைப்பிடிக்க எங்களுக்கு வேண்டிய பலத்தைக் கொடுத்தருளும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.