2 சாமுவேல் ஆகமம்

அதிகாரம் 01

1 சவுல் இறந்தபின், தாவீது அமலேக்கியரின் படுகொலையிலிருந்து திரும்பி சிசெலேகில் இரண்டு நாள் தங்கினான்.

2 மூன்றாம் நாள் சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடையோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒரு மனிதன் வந்தான். அவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணக்கம் புரிந்தான்.

3 தாவீது, "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று அவனை வினவினான். அவன் "இஸ்ராயேல் பாசறையினின்று ஓடிவந்தேன்" என்று அவனுக்குப் பதில் கூறினான்.

4 மீண்டும் தாவீது அவனை நோக்கி "நடந்தது என்ன? எனக்கு அறிவி" என்றான். அதற்கு அவன், "மக்கள் போரை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களில் பலர் மடிந்தனர்; அன்றியும் சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்தார்கள்" என்றான்.

5 அப்போது தாவீது அந்த இளைஞனை நோக்கி, "சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்துவிட்டனர் என்று எவ்வாறு அறிவாய்?" என்று கேட்டான்.

6 அதற்கு, செய்தி கொணர்ந்த இளைஞன், "தற்செயலாய் கெல்போயே மலைக்குப் போனேன்; சவுல் தம் ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் தேர்களும் குதிரை வீரர்களும் அவரை தொடர்ந்து நெருங்கினார்கள்.

7 அவர் திரும்பிப் பார்த்து என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான் 'இதோ இருக்கிறேன்' என்றேன்.

8 அப்பொழுது, 'நீ யார்?' என்று அவர் கேட்க, நான் 'அமலேக்கியன்' என்று சொன்னேன்.

9 அப்பொது அவர் என்னை நோக்கி, 'நீ என் மேல் நின்று என்னைக் கொன்று போடு. ஏனெனில் என் உயிர் என்னிடம் இன்னும் இருப்பதால் எனக்கு இடுக்கண் நேர்ந்துள்ளது' என்றார்.

10 வீழ்ந்தபின் அவர் பிழைக்கமாட்டார் என்று நான் அறிந்திருந்ததால், அவர்மேல் நின்று அவரைக் கொன்றுபோட்டேன். பின்பு அவர் தலைமீது இருந்த மகுடத்தையும், அவர் புயத்திலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு இங்கு என் தலைவராகிய உம்மிடம் கொணர்ந்தேன்" என்றான்.

11 இதை கேட்டு தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,

12 சவுலும் அவர் மகன் யோனத்தாசும், ஆண்டவருடைய மக்களும், இஸ்ராயேல் குடும்பத்தாரும் வாளால் மடிந்து விழுந்தனர் என்று கதறி அழுது, மாலை வரை நோன்பு காத்திருந்தனர்.

13 பிறகு தாவீது தனக்குச் செய்தி அறிவித்த இளைஞனை நோக்கி, "நீ எங்கிருந்து வருகிறாய்? " என்று கேட்டதற்கு அவன், "நான் புறவினத்தானாகிய அமலேக்கியனுடைய மகன்" என்று மறுமொழி உரைத்தான்.

14 தாவீதோ, "ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரைக் கொலை செய்வதற்கு நீ உன் கையை நீட்ட அஞ்சாதது ஏன்?" என்று சொன்னான்.

15 தன் ஊழியர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, "நீ பக்கத்தில் வந்து அவன் மேல் பாய்ந்து அவனை குத்து" என, இவன் அவனைக் குத்தினான்; அவனும் இறந்தான்.

16 தாவீது அவனைப் பார்த்து, "உன் இரத்தப்பழி உன் தலை மேலேயே இருக்கட்டும்; ஏனெனில், 'ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரை நான் கொன்றேன்' என்று உன் வாயே உனக்கு எதிராய்ச் சாட்சி சொன்னது" என்றான்.

17 தாவீதோ சவுலின் மீதும் அவன் மகன் யோனத்தாசின் மீதும் பின்வருமாறு புலம்பல் பாடி,

18 நீதிமான்களின் நூலில் எழுதியுள்ளபடி அதை யூதாவின் புதல்வருக்குக் கற்றுக் கொடுக்கக் கட்டளையிட்டான். அப்பாடலாதது: "இஸ்ராயேலே, உன் உயர்விடங்களில் காயம் அடைந்து இறந்தவர்களை எண்ணிப்பார்.

19 புகழ்பெற்ற இஸ்ராயேலர் உன் மலைகளின் மேல் கொலையுண்டனர்! இவ்வலியோர் எவ்வாறு விழுந்தனர்?

20 கெத்திலும் இதை அறிவிக்காதீர்கள்; அஸ்கலோனின் தெருக்களிலும் இதைத் தெரியப்படுத்தாதீர்கள். தெரிவித்தால், பிலிஸ்தியரின் புதல்விகள் அகமகிழ்வர்; விருத்தசேதனம் செய்யப்படாதவர்களின் பெண்கள் களிகூர்வர்!

21 கெல்போயேயின் குன்றுகளே, பனியோ மழையோ உங்கள்மீது பொழியாதிருப்பதாக! உங்கள் வயல்கள் முதற்பலனைத் தராதிருப்பனவாக! ஏனெனில் அங்கேயன்றோ சவுல் எண்ணெயால் அபிஷுகம் செய்யப்படாதவர் போல் தம் கேடயத்தைத் தரையில் எறிந்துவிட்டார்! வலியோரின் கேடயம் அவமதிக்கப்பட்டதே! சவுலின் கேடயமும் அவமதிக்கப்பட்டதே!

22 இதற்குமுன் யோனத்தாசின் அம்பு கொலையுண்டவர்களின் உதிரத்தைக் குடிக்காமலும், வலியோரின் கொழுப்பை உண்ணாமலும் ஒருபோதும் பின்னிட்டு வந்ததில்லை! சவுலின் வாளோ வெறுமையாய்த் திரும்பினதில்லை!

23 உயிரோடிருக்கையில் சவுலும் யோனத்தாசும் அன்பும் அழகும் உள்ளவர்களாய் இருந்தார்கள். சாவிலும் அவர்கள் பிரிந்து போகவில்லை.அவர்கள் கழுகுகளிலும் வேகம் உள்ளவர்களாய், சிங்கங்களிலும் வலிமை உள்ளவர்களாய் இருந்தார்கள்.

24 இஸ்ராயேலின் புதல்விகளே, சவுலுக்காக அழுங்கள்! ஏனெனில் அவரே ஒண் சிவப்பு மெல்லாடைகளால் உங்களை உடுத்தி உங்கள் உடைகளின் மேல் பொன்னணிகளை அணிவித்தவர்!

25 போர்க்களத்தில் வல்லவர் வீழ்ந்தது எங்ஙனம்? உயர்விடங்களில் யோனத்தாசு கொலையுண்டது எவ்வாறு?

26 தம்பி, யோனத்தாசு! உனக்காகத் துயரப்படுகிறேன். நீ பேரழகனும் பெண்களை விடப் பேரன்பனுமாய் இருந்தாய்! ஒரு தாய் தன் ஒரே மகனுக்கு அன்பு செய்வதுபோலன்றோ நான் உனக்கு அன்பு செய்தேன்!

27 வலியோர் வீழ்ந்தது எங்ஙனம்? போர்க்கருவிகள் அழிந்தது எவ்வாறு?"

அதிகாரம் 02

1 இதன்பின் தாவீது, "நான் யூதாவின் நகர்களில் ஒன்றிற்குப் போகலாமா?" என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டான். அதற்கு ஆண்டவர், "போ" என்றார். "எங்குப் போகலாம்?" என்று தாவீது கேட்டதற்கு அவர், "எபிரோனுக்கு" என்று கூறினார்.

2 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவியராகிய ஜெஸ்ராயேல் ஊராளான அக்கினோவாளோடும், கார்மேலைச் சேர்ந்த நாபாலின் மனைவி அபிகாயிலோடும் புறப்பட்டுப் போனான்.

3 மேலும் தாவீது தன்னோடு இருந்த ஆண்களையும், அவரவர் குடும்பத்தாரையும் கூட்டிக் கொண்டு போனான். அவர்கள் எபிரோனைச் சேர்ந்த நகர்களில் குடியேறினார்கள்.

4 அப்போது யூதாவின் ஆடவர் வந்து அங்குத் தாவீதை யூதா வம்சத்தின் அரசராக அபிஷுகம் செய்தார்கள். காலாத் நாட்டு ஜாபேசு மனிதர் சவுலை அடக்கம் செய்து விட்டனர் என்று பின்னர் தாவீதுக்கு அறிவிக்கப் பட்டது.

5 தாவீது காலாத் நாட்டு ஜாபேசு மனிதரிடம் தூதர்களை அனுப்பி, "உங்கள் அரசரான சவுலின்மீது நீங்கள் இவ்வளவு இரக்கம் வைத்து அவரை அடக்கம் செய்ததினால் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்!

6 இப்பொழுதே ஆண்டவர் உங்களுக்கு இரக்கத்தையும் உண்மையையும் வெகுமதியாகத் தந்தருள்வார் என்பது திண்ணம். அன்றியும் நீங்கள் இக்காரியத்தைச் செய்ததால் நானும் இந்நன்மையைப்பற்றி நன்றி செலுத்துகின்றேன்.

7 உங்கள் கைகள் வலுப்பெற்று, நீங்கள் வீரப் புதல்வராய் இருக்கவும் கடவீர்களாக. ஏனெனில் உங்கள் அரசரான சவுல் இறந்துவிட்டாலும் யூதா கோத்திரத்தார் என்னைத் தங்கள் அரசராக அபிஷுகம் செய்துள்ளார்கள்" என்று சொல்லச் சொன்னார்.

8 ஆனால் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்நேர் சவுலின் மகனான இசுபோசேத் என்பவனைப் பாசறையைச் சுற்றிலும் அழைத்துக்கொண்டு போய்,

9 அவனைக் காலாத், கெசூரி, ஜெஸ்ராயேல், எபிராயீம், பெஞ்சமின் மேலும், இஸ்ராயேல் அனைத்தின் மீதும் அரசனாக ஏற்படுத்தினான்.

10 சவுலின் மகன் இசுபோசேத் இஸ்ராயேலை அரசாளத் துவக்கின போது அவனுக்கு நாற்பது வயது. அவன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். யூதா கோத்திரத்தார் மட்டும் தாவீதைப் பின்பற்றினர்.

11 தாவீது எபிரோனில் யூதா கோத்திரத்தாரை ஆண்டு வந்த காலம் ஏழு ஆண்டும் ஆறுமாதமும் ஆகும்.

12 நேரின் மகன் அப்நேரும், சவுலின் மகன் இசுபோசேத்துடைய சேவகர்களும் பாசறையினின்று காபாவோனுக்குப் புறப்பட்டனர்.

13 அப்பொழுது சார்வியாவின் மகன் யோவாபும் தாவீதின் சேவகர்களும் புறப்பட்டுப் போய், காபாவோனின் குளத்தருகில் அவர்களைச் சந்தித்தனர். இருதிறத்தாரும் ஒன்றாய்க்கூடிக் குளத்தின் இருமருங்கிலும் சிறிது தங்கியிருந்தனர்.

14 அப்பொழுது அப்நேர் யோவாபை நோக்கி, "இளைஞர் எழுந்து நமக்கு முன்பாக விளையாடினால் நலமாயிருக்கும் அன்றோ?" என்றான். அதற்கு யோவாப், "சரி" என்று சம்மதித்தான்.

15 எனவே சவுலின் மகன் இசுபோசேத்துடைய பக்கத்தினின்று பெஞ்சமின் கோத்திரத்தார் பன்னிருவரும், தாவீதுடைய வாலிபரில் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.

16 அவர்கள் ஒருவருக்கொருவர் தலையைப் பிடித்து, விலாவில் வாளால் குத்த அனைவரும் ஒருங்கே இறந்தனர். எனவே, அவ்விடம் வலியோர் இடம் என்று அழைக்கப்பட்டது. அது காபாவோனில் உளது.

17 அன்று கடும்போர் மூளவே, அப்நேரும் இஸ்ராயேல் மனிதரும் தாவீதுடைய சேவகர்களால் முறியடிக்கப்பட்டனர்.

18 ஆனால் அங்கே யோவாப், அபிசாயி, அசாயேல் என்னும் சார்வியாவின் மக்கள் மூவரும் இருந்தனர். அசாயேலோ காட்டு மான் போல் மிக வேகமாய் ஓடக்கூடியவன்.

19 அவன் அப்நேரைப் பின் தொடர்ந்து, வலமோ இடமோ விலகாமல் துரத்திக் கொண்டு போனான்.

20 அப்நேர் திரும்பிப் பார்த்து, "நீ அசாயேல்தானா?" என அவன், "நான் தான்" என்றான்.

21 அப்நேர் அவனை நோக்கி, "நீ வலப்பக்கமாவது இடப்பக்கமாவது விலகி வாலிபரில் ஒருவனைப் பிடித்துக் கொள்ளையிடு" என்றான். அசாயேலோ அவனை விட்டு விட மனதின்றி அவனை விடாது துரத்தினான்.

22 அப்நேர் மீண்டும் அசாயேலைப் பார்த்து, "என்னைப் பின் தொடராதே, விலகு; இல்லாவிடில் நான் உன்னைத் தரையோடு குத்திப் போடுவேன்; பின் நான் உன் சகோதரனாகிய யோவாபின் முகத்தில் விழிப்பது எப்படி?" என்றான்.

23 அவன் அவ்வார்த்தையை அசட்டை செய்து விலகாதிருந்ததைக் கண்டு, அப்நேர் தன் ஈட்டியைத் திருப்பி அவனை அடிவயிற்றில் குத்தினான். ஈட்டி (உடலில் பாய்ந்து) முதுகு வழியே வெளியே வந்தது. அவன் அங்கேயே விழுந்து இறந்தான். அசாயேல் விழுந்து இறந்த இடத்தின் வழியாய் வருபவர்கள் எல்லாரும் அசையாது நிற்பது வழக்கம்.

24 மேலும் யோவாபும் அபிசாயும், தப்பி ஓடிய அப்நேரைத் துரத்திக் கொண்டிருக்கையில் சூரியன் மறைந்த படியால் அவர்கள் காபாவோன் என்ற பாலைவன வழிக்கு எதிரேயுள்ள நீரோடைக் குன்று வரை வந்தார்கள்.

25 அப்போது பெஞ்சமின் புதல்வர் அப்நேரிடம் ஒன்று திரண்டு வந்து ஒரு மேட்டின் உச்சியில் நின்று கொண்டனர்.

26 அப்போது அப்நேர் யோவபைப் பார்த்துக் கூப்பிட்டு, "உம்முடைய வாளுக்கு ஓய்வில்லையா? இது அழிவில் முடியும் என்று நீர் அறியீரோ? தங்கள் சகோதரர்களைப் பின்தொடர்வதை விட்டு விட்டுப் பின்வாங்க வேண்டும் என்று நீர் மக்களுக்கு எத்தனை காலம் சொல்லாது இருப்பீர்?" என்றான்.

27 அதற்கு யோவாப், "ஆண்டவர் மேல் ஆணை! நீர் இவ்விதமாய்ப் பேசியிருந்தீரானால் இன்று காலையிலேயே மக்கள் தங்கள் சகோதரரைப் பின் தொடராது திரும்பியிருப்பார்கள் அன்றோ?" என்று மறுமொழியாகச் சொல்லி,

28 எக்காளம் ஊதினான்; உடனே சேனை அனைத்தும் அப்பால் இஸ்ராயேலைப் பின் தொடராமலும் போர் புரியாமலும் நின்று விட்டது.

29 ஆனால் அப்நேரும் அவன் வீரரும் அன்று இரவு முழுவதும் காட்டு வழியாய்ச் சென்று யோர்தானையும் கடந்து, பெத்தாரோனையும் முழுதும் தாண்டிப் பாசறைக்கு வந்தார்கள்.

30 யோவாபோ அப்நேரைவிட்டுத் திரும்பி வந்து மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டினான். அசாயேலைத் தவிரத் தாவீதின் சேவகரில் பத்தொன்பது பேர் அங்கு வரவில்லை.

31 தாவீதின் சேவகரோ பெஞ்சமின் கோத்திரத்தாரிலும் அப்நேரோடு இருந்த மனிதரிலும் முந்நூற்றறுபது பேரைக் கொன்றிருந்தனர்.

32 பின்பு அசாயேலின் உடலை எடுத்து வந்து பெத்லகேமில் உள்ள அவன் தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்; யோவாபும் அவனுடன் இருந்த மனிதரும் இரவு முழுவதும் நடந்து விடியும்போது எபிரோனை வந்தடைந்தனர்.

அதிகாரம் 03

1 அப்படியிருக்க, சவுலின் குடும்பத்தாருக்கும் தாவீதின் குடும்பத்தாருக்கும் இடையே நெடு நாள் போர் நடந்தது. தாவீது முன்னேறி மேன்மேலும் வலிமை வாய்ந்தவனானான்; சவுலின் குடும்பமோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போயிற்று.

2 எபிரோனில் தாவீதுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். ஜெஸ்ராயேல் ஊராளான அக்கினோவாள் வயிற்றில் பிறந்த அம்னோன் அவன் தலைமகன்.

3 அவனுக்குப் பிறகு கார்மேலைச் சேர்ந்த நாபாலின் மனைவி அபிகாயிலிடம் கெலேயாப் பிறந்தான். மூன்றாவதாக எசூரி அரசனான தொல்மாயியின் மகளாகிய மாக்காளின் வயிற்றில் அப்சலோம் பிறந்தான்.

4 நான்காவதாக ஆகீத்துடைய வயிற்றில் அதோனியாசும், ஐந்தாவதாக அபித்தாளுடைய வயிற்றில் சாப்பாத்தியாவும் அவனுக்குப் பிறந்தனர்.

5 அன்றியும் ஆறாவதாக தன் சொந்த மனைவி ஏகிலாளின் வயிற்றில் தாவீதுக்கு ஜெத்திராம் பிறந்தான். இவர்களே தாவீதுக்கு எபிரோனில் பிறந்தவர்கள்.

6 நிற்க, சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த போது, நேரின் மகனான அப்நேர் சவுலின் குடும்ப காரியங்களைக் கவனித்து வந்தான்.

7 ஆயாவின் மகளாகிய ரெஸ்பா ஏற்கெனவே சவுலின் வைப்பாட்டியாய் இருந்தாள். ஒரு நாள் இசுபோசேத் அப்நேரை நோக்கி,

8 நீ என் தந்தையின் வைப்பாட்டியோடு படுத்தது ஏன்? என்றான். அவன் இசுபோசேத்துடைய வார்த்தையின் பொருட்டு மிகவும் கோபம் கொண்டு, "நான் உம் தந்தை சவுலின் குடும்பத்தின் மேலும், அவருடைய உடன்பிறந்தார், உற்றார் மேலும் இரக்கம் கொண்டு உம்மைத் தாவீதுடைய கையில் ஒப்படைக்காமலிருந்தேன். நான் என்ன நாய்த் தலையனா? இன்று நீரோ என் எதிரியாகிய யூதாவுக்கு முன்பாக அப்பெண் காரியமாய் என்னை விசாரித்துக் குற்றம் கண்டு பிடிக்க வந்துள்ளீரே!

9 ஆண்டவர் தாவீதுக்கு ஆணையிட்டவாறு நான் அவனுக்குச் செய்யாமல் போவேனாகில், கடவுள் அப்நேருக்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பாராக! சவுலின் குடும்பத்தை விட்டு அரசாட்சி பெயர்க்கப்பட்டு,

10 தான் துவக்கி பெர்சபே வரையுள்ள இஸ்ராயேலின் மேலும் யூதாவின் மேலும் தாவீதின் அரியணை எழும்பும்படி செய்வேன்" என்று சபதம் கூறினான்.

11 இசுபோசேத் அப்நேருக்கு அஞ்சியதால் மறுமொழி ஒன்றும் சொல்லக் கூடாதவனாய் இருந்தான்.

12 பின்பு அப்நேர் தன் பெயரால் தாவீதிடம் தூதர்களை அனுப்பி, "நாடு யாருடையது? நீர் என்னோடு நட்புக் கொண்டால் நீர் இஸ்ராயேல் முழுவதையும் வாகை சூடுமாறு நான் உமக்குத் துணை நிற்பேன்" என்று சொல்லச் சொன்னான்.

13 அதற்குத் தாவீது, "மிக்க நல்லது; நான் உன்னோடு நட்புக் கொள்வேன். ஆயினும் உன்னை ஒன்று கேட்பேன்; அதாவது, சவுலின் மகள் மிக்கோலை நீ என்னிடம் அழைத்து வருமுன் நீ என் கண்ணில் விழிக்கக்கூடாது. நீ இவ்வாறு செய்த பின்னரே நீ என்னை காண வரலாம்" என்று பதில் அனுப்பினான்.

14 பிறகு தாவீது சவுலின் மகன் இசுபோசேத்திடம் தூதரை அனுப்பி, "நான் பிலிஸ்தியருடைய நூறு நுனித் தோல்களைப் பரிசமாகக் கொடுத்து மணந்த என் மனைவி மிக்கோலை நீர் என்னிடம் அனுப்பி விடும்" என்று சொல்லச் சொன்னான்.

15 அப்பொழுது இசுபோசேத் ஆள் அனுப்பி அவளை லாயிஸ் மகன் பால்தியேல் என்ற அவளுடைய கணவனிடமிருந்து கொணரச் செய்தான்.

16 அவளுடைய கணவன் அழுது கொண்டு பகுரிம் வரை அவள் பிறகே வந்தான். அப்பொழுது அப்நேர் அவனை நோக்கி, "நீ திரும்பிப் போ" என்றான். அவனும் திரும்பிப் போய்விட்டான்.

17 மீண்டும் அப்நேர் இஸ்ராயேல் மூப்பர்களைப் பார்த்து, "தாவீதை உங்கள் அரசனாக்க வேண்டும் என்று வந்தீர்களே;

18 இப்போழுது அதைச் செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவர் தாவீதை நோக்கி, 'என் ஊழியன் தாவீதின் கையினால் இஸ்ராயேலைப் பிலிஸ்தியருடைய கையினின்றும் பகைவர் அனைவரின் கையினின்றும் மீட்பேன்' என்று சொல்லியிருக்கிறார்" என்றான்.

19 பிறகு அப்நேர் பெஞ்சமீனரோடும் அவ்வாறே பேசினான். பிறகு இஸ்ராயேலரும் பெஞ்சமீனின் எல்லாக் குடும்பத்தினரும் விரும்பியவற்றை எல்லாம் எபிரோனில் இருந்த தாவீதிடம் சொல்லச் சென்றான்.

20 அப்நேரும் அவனோடு இருபது பேரும் எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த போது, தாவீது அப்நேருக்கும் அவனோடு வந்திருந்த மனிதர்களுக்கும் விருந்து செய்தான்.

21 பின்பு அப்நேர் தாவீதை நோக்கி, "நான் எழுந்து சென்று என் தலைவராகிய அரசரிடம் இஸ்ராயேலர் அனைவரையும் கூட்டிக் கொண்டு வருகிறேன். அப்பொழுது நான் உம்மோடு உடன்படிக்கை செய்ய, நீர் விரும்பினபடியே யாவரையும் நீர் அரசாள்வீர்" என்றான். அப்படியே தாவீது அப்நேரை அனுப்பிவிட அவன் சமாதானத்தோடு புறப்பட்டுப் போனான்.

22 அப்பொழுது திருடரை வெட்டிக் கொன்று குவித்த தாவீதின் சேவகரும் யோவாபும் மிகுந்த கொள்ளைப் பொருட்களுடன் வந்தனர். அப்பொழுது அப்நேர் எபிரோனில் தாவீதோடு இல்லை. ஏற்கெனவே தாவீது அவனுக்கு விடை கொடுத்து அனுப்பியிருந்ததால் அவன் சமாதனத்தோடு போய்விட்டான்.

23 யோவாபும் அவனோடு இருந்த எல்லாப் படை வீரரும் அதன் பிறகுதான் வந்தனர். அப்போது நேரின் மகன் அப்நேர் அரசரிடம் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய் அனுப்பிவிட்டார் என்றும் யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.

24 அதைக் கேட்டு யோவாப் அரசரிடம் சென்று, "என்ன செய்தீர்? உம்மிடம் வந்த அப்நேருக்கு நீர் விடை கொடுத்து அனுப்பிவிட்டது ஏன்?

25 நேரின் மகன் அப்நேர் உம்மை ஏமாற்றவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதை எல்லாம் ஆராயவும் தான் உம்மிடம் வந்தான் என்று அறியீரோ?" என்றான்.

26 ஆகையால் யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டு, தாவீதுக்குத் தெரியாமல் அப்நேருக்குத் தூதரை உடனே அனுப்பி அவனை நீரா என்ற ஏரியிலிருந்து திரும்பவும் அழைத்துக் கொண்டு வந்தான்.

27 அப்நேர் எபிரோனுக்குத் திரும்பி வந்ததும் யோவாப் இரகசியமாய் அவனோடு பேசப்போகிறவன் போல் அவனை வாயிலின் நடுவே அழைத்துப் போய் அவனை அடிவயிற்றில் குத்தினான். அவனும் யோவாபின் தம்பி அசாயேலுடைய இரத்தப் பழி தீரும் பொருட்டு உயிர் துறந்தான்.

28 தாவீது நடந்ததைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, "நேரின் மகன் அப்நேரின் இரத்தத்தின் மட்டில் ஆண்டவர் திருமுன் நான் என்றென்றும் குற்றம் அற்றவன்; எனது அரசும் குற்றம் அற்றதே.

29 அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தந்தையின் குடும்பத்தின் மேலும் விழட்டும். மேலும், வெட்டை நோயாளியும் தொழுநோயாளனும் பெண் வெறியனும் வாளால் மடிபவனும் உணவுக்கு வகையற்றவனும் யோவாபின் குடும்பத்தில் குறையாது இருக்கக் கடவர்" என்றான்.

30 அவ்விதமே காபாவோனில் நடந்த போரில் அப்நேர் தங்கள் தம்பி அசாயேலைக் கொன்றதின் பொருட்டு, யோவாபும் அவன் சகோதரன் அபிசாயியும் அவனைக் கொன்று போட்டனர்.

31 அப்போது தாவீது யோவாபையும் அவனோடு இருந்த எல்லா மக்களையும் நோக்கி, "நீங்கள் உங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கோணி உடுத்தி அப்நேருடைய சடலத்தின்முன் துக்கம் கொண்டாடுங்கள்" என்று சொன்னார். தாவீது அரசரும் சவப்பெட்டிக்குப் பிறகே நடந்து போனார்.

32 அவர்கள் அப்நேரை எபிரோனில் அடக்கம் செய்த பிறகு, தாவீது அரசர் அப்நேரின் கல்லறையருகே ஓலமிட்டு அழுதார். எல்லா மக்களும் புலம்பி அழுதனர்.

33 அரசர் அப்நேரின் பொருட்டு ஒப்பாரியிட்டு அழுது, "கோழைகள் சாகிறது போல் அப்நேர் நிச்சயம் சாகவில்லை.

34 உன் கைகளில் விலங்கு போடப்பட்டதும் இல்லை; உன் பாதங்களில் தளை பூட்டப்பட்டதும் இல்லை; அக்கிரமிகளின் கையில் அகப்பட்டு இறக்கிறவர்களைப் போல் நீயும் இறந்தாய்" என்றார். அப்பொழுது மக்கள் எல்லாரும் அரசர் சொன்ன வார்த்தைகளைத் திரும்பச் சொல்லிக் கண்ணீர் விட்டனர்.

35 பொழுது அடையுமுன் மக்கள் எல்லாரும் தாவீதுடன் அப்பம் உண்ண வந்தனர். அப்பொழுது தாவீது, "சூரியன் மறையுமுன் நான் அப்பத்தையாவது வேறெதையாவது சுவை பார்த்தால், கடவுள் எனக்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பாராக" என்று ஆணையிட்டுச் சொன்னார்.

36 மக்கள் எல்லாரும் இதைக் கேட்டார்கள். அரசன் இப்படி வெளிப்படையாய்ச் செய்ததெல்லாம் மக்கள் அனைவரின் கண்களுக்கும் பிடித்திருந்தது.

37 நேரின் மகன் அப்நேர் கொலையுண்டு இறந்தது அரசரால் அல்ல என்று அன்று எல்லா மக்களும் இஸ்ராயேலர் அனைவரும் அறிந்து கொண்டனர்.

38 அன்றியும் அரசர் தம் ஊழியர்களை நோக்கி, "இன்று இஸ்ராயேலின் மாபெரும் தலைவன் மடிந்தான் என்று அறியீர்களோ?

39 நான் அரசனாக அபிஷுகம் பெற்றிருந்தும் வலிமை குன்றியவனாய் இருக்கின்றேன். சார்வியாவின் மக்களாகிய இம்மனிதரோ என்னை விட வலிமை உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆண்டவர் தீமை செய்தவனுக்கு அவனுடைய தீமைக்கு ஏற்றவாறு பிரதிபலன் அளிப்பாராக" என்றான்.

அதிகாரம் 04

1 அப்நேர் எபிரோனில் மடிந்தான் என்று சவுலின் மகன் இசுபோசேத் கேள்வியுற்ற போது, அவன் கைகள் தளர்ந்து போயின. மேலும் இஸ்ராயேலர் அனைவரும் கலங்கினர்.

2 சவுலின் மகனுக்குக் கள்வர் தலைவரான இரண்டு மனிதர் இருந்தனர். இவர்களில் ஒருவனின் பெயர் பாவானா; மற்றொருவனின் பெயர் இரேக்காப். அவர்கள் பெஞ்சமின் புதல்வரில் பெரோத்தியனான ரெம்மோனின் புதல்வர். உண்மையில் பெரோத் பெஞ்சமீனைச் சேர்ந்ததாய்க் கருதப்பட்டு வந்தது.

3 பெரோத்தியரோ கெத்தாயீமுக்கு ஓடிப்போய் அந்நாள் வரை அங்கே அகதிகளாய் இருந்தார்கள்.

4 சவுலின் மகன் யோனத்தாசுக்கு முடமான கால்களை உடைய ஒரு மகன் இருந்தான். சவுலும் யோனத்தாசும் இறந்த செய்தி ஜெஸ்ராயேலிலிருந்து வந்த போது அவனுக்கு வயது ஐந்து. அவனுடைய செவிலித்தாய் அவனை எடுத்து கொண்டு விரைந்தாள். ஓடி வந்த வேகத்தில் அவன் விழவே முடவன் ஆனான். அவனுக்கு மிபிபோசேத் என்று பெயரிடப்பட்டது.

5 இரேக்காப், பாவனா என்னும் பெரோத்தியரான ரெம்மோனின் மக்கள் புறப்பட்டு உச்சி வெயிலில் இசுபோசேத்தின் வீட்டில் நுழைந்தனர். அவனோ தன் படுக்கையின் மீது நண்பகல் தூக்கத்தில் இருந்தான். வீட்டு வாயிற்காரியும் கோதுமையைப் புடைத்து விட்டுத் தூங்கி விட்டாள்.

6 அப்போது இரேக்காப்பும் பாவானா என்ற அவன் சகோதரனும் கோதுமை வாங்க வருகிறவர்களைப் போல் நடுவீடு வரை இரகசியமாக வந்து அவனை அடிவயிற்றில் குத்திவிட்டு ஓடிப்போனார்கள்.

7 அவர்கள் வீட்டில் நுழைந்தபோது அவன் படுக்கை அறையில் தன் கட்டிலின் மேல் படுத்திருந்ததைக் கண்டு அவ்விருவரும் அருகில் சென்று அவனைக் கொன்று போட்டனர். பின் அவன் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் பாலைவனம் வழியாக நடந்து,

8 இசுபோசேத்தின் தலையை எபிரோனில் இருந்த தாவீதிடம் கொணர்ந்தனர்; அரசரை நோக்கி, "உம்முடைய உயிரை வாங்கத் தேடிய உம் மாற்றானாகிய சவுலின் மகன் இசுபோசேத்தின் தலை இதோ! ஆண்டவர் என் தலைவராகிய அரசருக்காகச் சவுலின் மேலும், அவன் குடும்பத்தாரின் மேலும் பழிவாங்கினார்!" என்றனர்.

9 தாவீதோ பெரோத்தியனான ரெம்மோனின் புதல்வர்களாகிய இரேக்காபுக்கும் அவன் சகோதரனான பாவனாவுக்கும் மறுமொழியாக, "என் ஆன்மாவை எல்லா இக்கட்டுகளினின்றும் விடுவித்த ஆண்டவர் மேல் ஆணை!

10 முன்பு ஒருவன் வந்து என்னை நோக்கி, 'சவுல் இறந்து பட்டான்' என்று எனக்கு அறிவித்துத் தான் கொண்டு வந்தது எனக்கு நற்செய்தி என்று எண்ணிக் கொண்டிருக்கையில், நான் அவனைப் பிடித்து அவன் கொண்டு வந்த செய்திக்குப் பரிசாக, சிசெலேக் ஊரில் அவனைக் கொன்று போட்டேன்.

11 அதைவிட, தனது வீட்டுக்குள் படுக்கையின்மேல் உறங்கிக் கொண்டிருந்த குற்றமற்ற மனிதனைக் கொலை செய்த கொடியவருக்கு எவ்வளவு அதிகமாய்த் தண்டனை கொடுக்க வேண்டும்? இப்பொழுது நான் உங்களைப் பூமியினின்று அழித்து அவனுடைய இரத்தப் பழியைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பேனா?" என்று சொல்லி,

12 தன் சேவகர்களுக்குக் கட்டளையிடவே, அவர்களும் அவர்களைக் கொன்றனர். பின்னர் இருவருடைய கைகால்களையும் வெட்டி எபிரோனில் குளத்தருகில் அவர்களைத் தொங்கவிட்டனர். பிறகு அவர்கள் இசுபோசேத்துடைய தலையை எடுத்துச் சென்று எபிரோனில் இருந்த அப்நேரின் கல்லறையிலேயே அடக்கம் செய்தார்கள்.

அதிகாரம் 05

1 இஸ்ராயேலின் கோத்திரங்கள் எல்லாம் எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்து, "இதோ நாங்கள் உமது எலும்பும் தசையுமானவர்கள்;

2 மேலும் நேற்றும் முந்தாநாளும் சவுல் எங்களுக்கு அரசனாய் இருந்தபோது, நீர் இஸ்ராயேலை நடத்திச் செல்பவராக இருந்தீரே; அன்றியும் ஆண்டவர் உம்மை நோக்கி, 'நம் மக்கள் இஸ்ராயேலை நீ பராமரித்து, இஸ்ராயேலுக்குத் தலைவனாய் இருப்பாய்' என்று உம்மிடம் திருவுளம் பற்றினாரே!" என்றனர்.

3 இஸ்ராயேலின் முதியவர்களும் எபிரோனில் இருந்த அரசரிடம் வந்தார்கள். தாவீது அரசர் எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன் படிக்கை செய்து கொண்ட பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்கள்.

4 தாவீது அரச பதவி ஏற்றபோது அவருக்கு வயது முப்பது. அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

5 அவர் எபிரோனில் யூதாவை ஏழரை ஆண்டும், யெருசலேமில் இஸ்ராயேல் முழுவதையும் யூதாவையும் முப்பத்து மூன்று ஆண்டும் அரசாண்டார்.

6 அரசரும் அவருடன் இருந்த மனிதர் அனைவரும் எழுந்து நாட்டில் குடியிருந்த எபிசேயர் மேல் போரிடுவதற்கு யெருசலேமுக்குப் போனார்கள். எபிசேயர் தாவீதிடம், "நீர் குருடர்களையும் முடவர்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் இங்கு உம்மால் நுழைய முடியாது" என்று கூறித் தாவீது நகருள் நுழைவதைத் தடுத்தனர்.

7 ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தார்.

8 அது தாவீதின் நகராயிற்று. குழாய்க் கால்வாய் வழியாகக் கோட்டையின் மேல் ஏறி எபிசேயரையும் தாவீதை வெறுக்கும் முடவர்களையும் குருடர்களையும் அப்புறப்படுத்துபவனுக்குப் பரிசு கொடுப்பதாகத் தாவீது கூறியிருந்தார். இதன் பொருட்டே, 'குருடனும் முடவனும் ஆலயத்தில் வரக்கூடாது' என்று பழமொழி வழங்கலாயிற்று.

9 அக்கோட்டையில் தாவீது வாழ்ந்து வந்தார். அதற்குத் தாவீதின் நகர் என்று பெயரிட்டு, மெல்லோ தொடங்கிச் சுற்றிலும் உட்புறத்தில் மதில் எழுப்பினார்.

10 அவர் நாளுக்கு நாள் சீரும் சிறப்பும் பெற்றார். சேனைகளின் ஆண்டவராகிய கடவுள் அவரோடு இருந்தார்.

11 அன்றியும் தீரின் அரசனாகிய கீராம் தாவீதிடம் தூதர்களையும் கேதுரு மரங்களையும் தச்சர்களையும் கொத்தர்களையும் அனுப்பி வைத்தான். அவர்கள் தாவீதுக்கு ஒரு மாளிகையைக் கட்டினார்கள்.

12 அதனால் ஆண்டவர் இஸ்ராயேலின் அரசராகத் தம்மை உறுதிப்படுத்தினார் என்றும், ஆண்டவருடைய மக்களாகிய இஸ்ராயேல் மேல் தம் அரசை அவரே நிறுவினார் என்றும் தாவீது தெளிவாய்க் கண்டு பிடித்தார்.

13 தாவீது எபிரோனிலிருந்து வந்த பின்பு யெருசலேமில் இன்னும் பல மனைவியரையும் வைப்பாட்டிகளையும் கொண்டார். அவருக்கு வேறு புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

14 சாமுவா, சோபாப். நாத்தான், சாலமோன்,

15 ஜேபவார், ஏலிசுவா, நெபேகு, ஜாபியா,

16 ஏலிசமா, எலியோதா, எலிபலேத் ஆகியோர் யெருசலேமில் அவருக்குப் பிறந்த மக்களாவர்.

17 தாவீதை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்கள் என்று அறிந்தபோது, பிலிஸ்தியர் எல்லாருமே அவரைத் தேடி வந்தார்கள். அதைக் கேள்வியுற்ற தாவீது கோட்டைக்குள் போய்விட்டார்.

18 பிலிஸ்தியரோ இராபாயீம் பள்ளத்தாக்கிற்கு வந்து எங்கும் பரவியிருந்தனர்.

19 அப்போது தாவீது ஆண்டவர் திருமுன் வந்து, "நான் பிலிஸ்தியரோடு போருக்குப் போகலாமா? என் கையில் அவர்களை நீர் ஒப்படைப்பீரா?" என்று கேட்க, ஆண்டவர், "போகலாம், பிலிஸ்தியரை உன் கையில் ஒப்படைப்போம்" என்று மறுமொழி சொன்னார்.

20 அவ்வாறே தாவீது பாவால்- பாரசீமுக்கு வந்து அங்கே அவர்களை முறியடித்தார். அப்போழுது அவர், "தண்ணீர் சிதறுண்டு போவது போல் ஆண்டவர் என் எதிரிகளை எனக்கு முன்பாகச் சிதறடித்தார்" என்றார். எனவே, பாவால்- பாரசீம் என்று அவ்விடம் அழைக்கப் பெற்றது.

21 பிலிஸ்தியர் தங்கள் சிற்பங்களை அங்கு விட்டுச் சென்றனர். தாவீதும் அவருடைய சேவகரும் அவற்றை எடுத்துச் சென்றனர்.

22 மீண்டும் பிலிஸ்தியர் வந்து இராபாயீம் பள்ளத்தாக்கில் பரவியிருந்தார்கள். தாவீது ஆண்டவர் திருமுன் வந்து,

23 பிலிஸ்தியருடன் நான் போருக்குப் போகலாமா? நீர் அவர்களை என் கையில் ஒப்படைப்பீரா? என்று கேட்டதற்கு ஆண்டவர், "நீ அவர்களை முன்னிருந்து எதிர்க்க வேண்டாம். மாறாக அவர்களுக்குப் பின்னால் சுற்றிப்போய்ப் பீர் மரங்களுக்கு எதிரே வந்த பின் அவர்களைப் பின் தொடர்வாய்.

24 மேலும் பீர் மரங்களின் உச்சியில் மனிதர் நடந்து வரும் சத்தத்தை நீ கேட்கும் போது போரைத் தொடங்கு. ஏனெனில் அந்நேரத்தில் பிலிஸ்தியரின் பாசறையை முறியடிக்கும்படி ஆண்டவர் உனக்கு முன்பாகப் போயிருப்பார்" என்றார்.

25 ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடியே தாவீது செய்து, பிலிஸ்தியரைக் காபா தொடங்கி ஜேசர் எல்லை வரை துரத்தி முறியடித்தார்.

அதிகாரம் 06

1 மறுபடியும் தாவீது எல்லா இஸ்ராயேலருக்குள்ளும் தேர்ந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரை ஒன்று திரட்டினார்.

2 தாவீதும் அவரோடு இருந்த யூதாவின் மனிதர்களும் புறப்பட்டுக் கடவுளின் பேழையைக் கொண்டு வரும்படி சென்றார்கள். அப்பேழை கெருபீம்களின் நடுவே வீற்றிருக்கும் சேனைகளின் ஆண்டவருடைய பெயரால் புனிதமாக்கப்பட்டுள்ளமையால் ஆண்டவர் அதன் மேல் தங்கியிருக்கிறார்.

3 அவர்கள் அந்தக் கடவுட் பேழையை ஒரு புதுத் தேரின் மேல் ஏற்றி, அதைக் காபாவில் உள்ள அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தார்கள். அபினதாபுடைய புதல்வர்களான ஓசாவும் ஆகியோவும் அப் புதுத்தேரை ஓட்டினார்கள்.

4 இவர்கள் கடவுட் பேழையை ஏற்றிக் காபாவில் அதை வைத்திருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டு வருகையில், ஆகியோ கடவுட் பேழைக்கு முன் நடக்க,

5 தாவீதும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மரத்தால் செய்யப்பட்ட யாழ், வீணை, சுரமண்டலத்தோடும், மேளதாளம் முதலிய இசைக் கருவிகளோடும் ஆடிப்பாடி வந்து கொண்டிருந்தார்கள்.

6 அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்த போது மாடுகள் மிரண்டு பேழையைக் கீழே சாய்த்துப் போட்டன. இதைக் கண்ட ஓசா அதைத் தன் கையால் தாங்கினான்.

7 அப்பொழுது ஆண்டவருக்கு ஓசாவின் மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவை முன்னிட்டு அவர் அவனை வீழ்த்தினார். ஓசா பேழையின் பக்கத்திலேயே விழுந்து இறந்தான்.

8 ஆண்டவர் ஓசாவை வீழ்த்தியதைப் பற்றித் தாவீது கவலைப் பட்டார். அவ்விடத்திற்கு இன்று வரை ஓசாவின் வீழ்ச்சி என்று பெயர்.

9 அன்று தாவீது ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினவராய், "ஆண்டவருடைய பேழை என்னிடத்தில் வருவது எப்படி" என்று சொல்லி,

10 அதை தாவீதின் நகருக்குக் கொண்டு வர விரும்பாது கேத்தையனான ஒபேதெதோமின் வீட்டிற்கு அதைத் திருப்பி விட்டார்.

11 ஆண்டவருடைய பேழை கேத்தையனான ஒபேதெதோம் வீட்டில் மூன்று திங்கள் தங்கியிருக்கையில், ஆண்டவர் ஒபேதெதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

12 பல நாள் சென்ற பின்பு கடவுட் பேழையின் பொருட்டு ஆண்டவர் ஒபேதெதோமையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது போய் ஒபேதெதோமின் வீட்டிலிருந்து கடவுட் பேழையை மகிழ்ச்சியுடன் தாவீதின் நகருக்குக் கொண்டு வந்தார். தாவீதுடன் ஏழு பாடகர்க் குழுக்களும், பலிக்கு ஓர் இளங்கன்றும் இருந்தன.

13 ஆண்டவருடைய பேழையைத் தூக்கிச் சென்றவர்கள் ஆறு காலடி தூரம் சென்ற பின் அவர் ஒரு மாட்டையும் ஓர் ஆட்டுக் கடாயையும் பலியிடுவார்.

14 தாவீது சணல் நூலால் நெய்யப்பட்ட எபோதை அணிந்து கொண்டு முழு வலிமையோடும் ஆண்டவர் திருமுன் நடனமாடுவார்.

15 அவ்விதமே தாவீதும் இஸ்ராயேல் குடும்பத்தார் அனைவரும் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை மகிழ்ச்சி ஆரவாரத்தோடும் எக்காளத் தொனியோடும் கொண்டு வந்தனர்.

16 ஆண்டவரின் பேழை தாவீதின் நகருக்குள் நுழைந்தபோது சவுலின் மகள் மிக்கோல் பலகணி வழியாய் உற்றுப் பார்த்து, தாவீது அரசர் ஆண்டவர் முன்னிலையில் குதித்துக் கூத்தாடுவதைக் கண்டு தனக்குள்ளே அவரைப் பழித்தாள்.

17 பிறகு அவர்கள் கடவுட் பேழையை உள்ளே கொண்டு வந்து, தாவீது அதற்கெனத் தயாரித்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தார்கள். அப்பொழுது தாவீது ஆண்டவர் திருமுன் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தினார்.

18 அவர் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்திய பின், சேனைகளின் ஆண்டவருடைய பெயரால் மக்களை ஆசீர்வதித்து,

19 பெரும் திரளாய்க் கூடியிருந்த இஸ்ராயேலின் ஆண், பெண் அனைவருக்கும் ஆளுக்கொரு மாட்டுக்கறித் துண்டும் அப்பமும் எண்ணெயில் பொரித்த மிருதுவான மாவுமாகப் பகிர்ந்துகொடுத்தார். பிறகு மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் ஏகினர்.

20 அப்பொழுது தாவீது தம் வீட்டாரை ஆசீர்வதிக்கத் திரும்பி வந்த போது, சவுலின் மகள் மிக்கோல் தாவீதை எதிர் கொண்டு வந்து அவரை நோக்கி, "கோமாளி தன் ஆடைகளைக் கழற்றுவதுபோல் இன்று இஸ்ராயேலின் அரசர் தம் ஊழியர்களுடைய பணிப் பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளை உரிந்து போட்டாரே; இது அவருக்கு எவ்வளவு பெருமை!" என்று சொன்னாள்.

21 அதற்கு தாவீது, "உன் தந்தையையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் விட என்னைத் தேர்ந்துகொண்டு, இஸ்ராயேலில் ஆண்டவரின் மக்களுக்குத் தலைவனாய் இருக்கும்படி எனக்குக் கட்டளையிட்ட ஆண்டவர் திருமுன், நான் ஆடிப்பாடி நடனம் செய்தது முறையே;

22 நான் அதை விட இன்னும் கடையனும், என் கண்களுக்குத் தாழ்ந்தவனும் ஆவேன்; ஆயினும் நீ சொன்ன பணிப் பெண்களுக்கு முன் நான் மாட்சி பெற்றவனாய் விளங்குவேன்" என்று பதில் சொன்னார்.

23 அதனால் சவுலின் மகளாகிய மிக்கோலுக்குச் சாகும் வரை ஒரு பிள்ளை கூடப் பிறக்கவில்லை.

அதிகாரம் 07

1 தாவீது அரசர் தம் மாளிகையில் குடியேறின பிறகு, நாற்புறத்திலுமுள்ள அவருடைய பகைவர் அனைவரும் ஆண்டவருடைய அருளால் அவரோடு சமாதானமாய் இருந்ததைக் கண்டு,

2 அவர் இறைவாக்கினர் நாத்தானை நோக்கி, "கேதுரு மரங்களால் கட்டப்பட்ட வீட்டில் நான் வாழும்போது, ஆண்டவருடைய பேழை தோல் திரைகளின் நடுவில் வைக்கப்பட்டிருப்பதை நீர் பார்ப்பதில்லையா?" என்றார்.

3 அப்பொழுது நாத்தான் அரசரை நோக்கி, "ஆண்டவர் உம்மோடு இருப்பதால் நீர் விரும்பியபடி எல்லாம் செய்யும்" என்றார்.

4 அன்றிரவே ஆண்டவருடைய வார்த்தை நாத்தானுக்கு வந்தது.

5 நீ போய் நம் ஊழியன் தாவீதை நோக்கி 'ஆண்டவர் சொல்லுகிறதாவது: நாம் வாழ்வதற்கு ஒரு வீட்டை நீ கட்டமாட்டாயோ?

6 இஸ்ராயேல் மக்களை எகிப்திலிருந்து மீட்ட நாள் முதல் இன்று வரை நாம் வீட்டில் தங்காது கூடாரத்திலும் பேழையிலும் அன்றோ உலாவி வந்தோம்?

7 இஸ்ராயேல் மக்கள் எல்லாரோடும் நாம் பயணம் செய்து வந்தோம் அன்றோ? நம்முடைய மக்களாகிய இஸ்ராயேலை வழி நடத்த வேண்டும் என்று நாம் கட்டளையிட்டபொழுது எவ்விடத்திலேனும் நம் கோத்திரங்களில் ஒன்றைப் பார்த்து, "நீங்கள் நமக்குக் கேதுரு மரங்களால் ஓர் ஆலயத்தை ஏன் கட்டவில்லை?" என்று எப்போதாவது நாம் சொன்னதுண்டா?'

8 ஆகையால், இப்போது நீ போய் நம் ஊழியன் தாவீதைப் பார்த்து, 'சேனைகளின் ஆண்டவர் சொல்லுகிறதாவது: நீ ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் நாம் உன்னை அழைத்து நம் மக்கள் இஸ்ராயேலுக்குத் தலைவனாய் இருக்கச் செய்தோம்.

9 நீ சென்ற இடங்களில் எல்லாம் நாம் உன்னோடு இருந்து, உன் எதிரிகளை எல்லாம் உனக்கு முன்பாக அழித்துப் பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயருக்கொத்த சிறந்த பெயரை உனக்குத் தந்தோம்.

10 நம் மக்கள் இஸ்ராயேலை ஓர் இடத்தில் நிலை நிறுத்துவோம்; அவர்களை அவ்விடத்தில் உறுதிப்படுத்துவோம். அவர்கள் அங்குக் குடியேறி முன்போல் அலைக்கழிக்கப்படமாட்டார்கள்;

11 நம் மக்கள் இஸ்ராயேலின்மேல் நீதிபதிகளை ஏற்படுத்தின நாள்வரை நடந்தது போல், அக்கிரமிகள் அவர்களை மறுபடியும் துன்பப்படுத்த மாட்டார்கள். உன் எதிரிகளில் யாரும் உன்னைச் சிறுமைப் படுத்தாமல் சமாதானமாய் இருக்கச் செய்வோம். மேலும் ஆண்டவரே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று உனக்கு அநிவிக்கிறார்.

12 பிறகு உன் வாழ்நாள் முடிந்து நீ உன் முன்னோருடன் துயில் கொள்ளும் பொழுது உனக்குப் பிறக்கும் ஒரு மகனை உனக்குப்பின் நாம் உயர்த்தி அவனது அரசை நிலை நாட்டுவோம்.

13 அவனே நமது பெயரால் ஓர் ஆலயத்தைக் கட்டுவான்; நாமோ அவனுடைய அரியணையை என்றும் நிலைநிறுத்துவோம்.

14 நாம் அவனுக்குத் தந்தையாக இருப்போம்; அவனும் நமக்கு மகனாக இருப்பான். அவன் ஏதாவது கொடுஞ்செயல் புரிந்தால், மனிதர்கள் பயன்படுத்தும் கோலால் நாம் அவனை அடிப்போம்; மனிதப் புதல்வருக்கேற்ற வாதையால் கண்டிப்போம்.

15 ஆயினும், இரக்கமே காட்டாது சவுலை நம் திருமுன் அழித்து விட்டது போல் உன் மீதும் இரக்கம் காட்டாது இருக்க மாட்டோம்.

16 உன் வீடோ பிரமாணிக்கமாய் இருக்கும். உன் அரசோ என்றென்றும் உனக்கு முன்பாக இருக்கும்; உன் அரியணை என்றும் நிலைபெற்றிருக்கும்' என்கிறார் என்று சொல்லச் சொன்னார்."

17 நாத்தான் இவ்வார்த்தைகள் எல்லாவற்றையும், காட்சி முழுவதையும் தாவீதிடம் கூறினார்.

18 அப்போது தாவீது அரசர் உட்புகுந்து ஆண்டவர் திருமுன் அமர்ந்து, "ஆண்டவராகிய கடவுளே, இதுவரை நீர் என்னைக் கொண்டு வந்ததற்கு நான் யார்? ஆயினும்,

19 ஆண்டவராகிய கடவுளே, உமது பார்வைக்கு அது எளிதாய் இருப்பது போல், நீண்ட நாட்களுக்குப் பின் நடக்கவிருக்கும் உம் அடியான் வீட்டைப் பற்றிய செய்தியையும் நீர் சொல்லத் திருவுளமானீரே! ஆண்டவராகிய கடவுளே, இது ஆதாமின் சந்ததியாருக்குள்ள முறைமையே.

20 இன்னும் தாவீது உம்மிடம் சொல்லக் கூடியது வேறு என்ன? ஆண்டவராகிய கடவுளே, உம் அடியானை நீர் அறிவீர் அன்றோ?

21 உம் வாக்கின் பொருட்டும், உம் அன்பின் பொருட்டும் உம் அடியானுக்கு அறிவிக்கும் படியன்றோ நீர் இம்மகத்தான காரியங்களைச் செய்தருளினீர்!

22 ஆகையால், ஓ ஆண்டவராகிய கடவுளே! நீர் பெரியவர். ஏனெனில் நாங்கள் காதால் கேட்டவற்றின்படி உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை என்றும், உம்மைத் தவிர வேறு கடவுளும் இல்லை என்றும் அறிந்திருக்கிறோம்.

23 உம்முடைய மக்களாகிய இஸ்ராயேலைப் போல் இவ்வுலகில் வேறு மக்களும் உண்டோ? புறவினத்தாருள் இந்த இனத்தை மட்டுமே கடவுள் மீட்டு, அவர்களைத் தம் சொந்த மக்களாக ஏற்படுத்தித் தமது புகழ் விளங்கச் செய்துள்ளார்; நீர் எகிப்திலிருந்து மீட்ட உம்முடைய மக்களுக்கு முன்பாக மகத்தானவற்றையும் பயங்கரமானவற்றையும் அவர்களுக்காகச் செய்து, அந்த எகிப்தியரையும் அவர்களுடைய தேவர்களையும் வதைத்தீர்!

24 ஏனெனில் உம்முடைய மக்களாகிய இஸ்ராயேலர் என்றும் உமக்குச் சொந்த மக்களாயிருக்கும் படி தேர்ந்து கொண்டீர். ஆண்டவராகிய கடவுளே, நீரே அவர்களுக்குக் கடவுளானீர்.

25 இப்பொழுதும், ஆண்டவாராகிய கடவுளே, உம் ஊழியனையும் அவன் வீட்டையும் குறித்து நீர் அருளிச் செய்த வாக்கியத்தை என்றென்றும் நிறைவேற்றி நீர் சொன்னபடியே செய்தருளும்.

26 அப்படிச் செய்தால், சேனைகளின் ஆண்டவராகிய கடவுள் இஸ்ராயேலின் கடவுள் என்று உமது பெயர் என்றென்றும் புகழப்படும். மேலும் உன் அடியான் தாவீதின் வீடும் ஆண்டவருக்கு முன்பாக நிலைநிற்கும்.

27 ஏனெனில், சேனைகளின் ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, 'நாம் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவோம்' என்று நீரே உம் அடியானுக்கு வெளிப்படுத்தியிருந்ததினாலன்றோ உம் அடியான் நான் உம்மை நோக்கி இத்தகைய வேண்டுதலைச் செய்யத் துணிந்தேன்?

28 இப்பொழுது, ஆண்டவராகிய கடவுளே, நீரே கடவுள்; உமது வார்த்தையே உண்மை; ஏனெனில், நீரே உம் அடியானுக்கு மேற்கூறிய நற்செய்திகளைச் சொன்னீர்.

29 எனவே, நீர் அவ்வார்த்தைகளின்படி செய்யத் தொடங்கி அடியேனுடைய வீடு உம் திருமுன் என்றென்றும் நிலை நிற்கும்படி, அதை ஆசீர்வதித்தருளும். ஏனெனில் ஆண்டவராகிய கடவுளே, நீரே திருவுளம் பற்றியிருக்கிறீர். உம்முடைய ஆசீரால் தான் உம் அடியானுடைய வீடு என்றென்றும் ஆசீர் பெற்றிருக்கும்" என்றார்.

அதிகாரம் 08

1 இதன் பின் நிகழ்ந்ததாவது: தாவீது பிலிஸ்தியரை முறியடித்து அவர்களை அடிமைப் படுத்தினதால் இஸ்ராயேல் அவர்களுக்குக் கப்பம் கட்டும் கடமை ஒழிந்தது.

2 அவர் மோவாபியரையும் தோற்கடித்து, அவர்களைத் தரையில் ஒரே நிரையாய்ப் படுக்க வைத்து அவர்கள்மேல் நூல்போட்டு அளந்தார்; அளக்கப்பட்டவர்களில் ஒரு பகுதி மக்களைக் கொன்றார்; மறுபகுதி மனிதரை உயிரோடு விட்டு வைத்தார். மோவாபியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டி வந்தார்கள்.

3 மறுபடியும் தாவீது யூப்ரட்டீஸ் நதிக்கரையிலுள்ள நாட்டைக் கைப்பற்றச் செல்கையில், ரொகோபின் மகன் ஆதரேஜர் என்ற சோபாவின் அரசனைத் தோற்கடித்தார்.

4 தாவீது அவனது சேனையில் ஆயிரத்து எழுநூறு குதிரை வீரரையும், இருபதினாயிரம் காலாட் படையினரையும் பிடித்து, நூறு தேர்களை இழுப்பதற்கு வேண்டிய குதிரைகளைத் தவிர மற்றக் குதிரைகளின் பின்னங்கால் நரம்புகளை அறுக்கச் செய்தார்.

5 அன்றியும் தமாஸ்கு நகரத்தாராகிய சீரியர் சோபாவின் அரசன் ஆதரேஜருக்கு உதவி செய்ய வந்தார்கள். அவர்களில் இருபத்திரண்டாயிரம் பேர் தாவீதால் கொல்லப்பட்டனர்.

6 அப்போது சீரியாவின் தமாஸ்கு நகரத்தில் தாவீது நிலைப்படைகளை வைத்தார். சீரியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்ட நேரிட்டது. தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவரைக் காப்பாற்றினார்.

7 ஆதரேஜருடைய ஊழியர் வைத்திருந்த பொற்படைக்கலங்களைத் தாவீது எடுத்து யெருசலேமுக்குக் கொண்டு வந்தார்.

8 ஆதரேஜருடைய நகர்களாகிய பெத்தேயிலிருந்தும் பெரோத்திலிருந்தும் தாவீது அரசர் மிகத்திரளான வெண்கலத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்.

9 அப்பொழுது எமாத் அரசனான தோவு என்பவன் ஆதரேஜருடைய சேனைகளை எல்லாம் தாவீது முறியடித்தார் என்று கேள்விப்பட்டான்.

10 தோவுவின் பகைவனான ஆதரேஜருடன் தாவீது போரிட்டு அவனைத் தோற்கடித்ததால் அவன் அவருக்கு மரியாதை செலுத்தவும், வாழ்த்துச் சொல்லவும், நன்றி கூறவும் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பினான். யோராம் தன் கையில் பொன், வெள்ளி, வெண்கலப் பாத்திரங்களை எடுத்துச் சென்றான்.

11 தாவீது இவற்றை வாங்கிக் கொண்டார். முன்பு தாம் முறியடித்த சீரியர், மோவாபியர் அம்மோனியர், பிலிஸ்தியர், அமலேக்கியர் முதலியோரிடமிருந்தும்

12 இராகோப் மகன் ஆதரேஜர் என்ற சோபாவின் அரசனிடத்தினின்றும் பெற்றிருந்த வெள்ளியையும் பொன்னையும் ஆண்டவருக்குக் காணிக்கை செய்தது போல், இவற்றையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கினார்.

13 இவ்வாறு தாவீது தமக்கே புகழ் தேடிக் கொண்டார். அவர் சீரியாவைப் பிடித்த பின் திரும்பி வரும் வழியில் உப்புப் பள்ளத்தாக்கில் பதினெட்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினார்.

14 அன்றியும் தாவீது இதுமேயா நாடெங்கும் காவலர்களையும் பாசறைகளையும் வைத்தபடியால் இதுமேயர் அனைவரும் தாவீதின் அடிமைகள் ஆயினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவரைக் காப்பாற்றினார்.

15 அவ்வாறே தாவீது இஸ்ராயேல் அனைத்தின் மேலும் ஆட்சி புரிந்து எல்லா மக்களுக்கும் நீதி வழங்கி வந்தார்.

16 சார்வியாவின் மகன் யோவாப் படைத்தலைவனாய் இருந்தான். அகிலூத் மகனான யோசபாத் ஆவணங்களைப் பாதுகாக்கும் பதவியில் இருந்தான்.

17 அக்கிதோபின் மகன் சாதோக்கும், அபியாத்தாருடைய மகன் அக்கிமெலேக்கும் குருக்களாகவும், சராயீயாசு எழுத்தனாகவும் இருந்தனர்.

18 யோயியதாவின் மகன் பனாயாசோ கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் தலைவனாய் இருந்தான். தாவீதின் புதல்வரோ குருக்களாய் இருந்தார்கள்.

அதிகாரம் 09

1 தாவீது, "சவுலின் வீட்டாரில் இன்னும் எவனாவது விடுபட்டிருக்கிறானா? இருந்தால் யோனத்தாசின் பொருட்டு நான் அவனுக்கு இரக்கம் காட்டுவேன்" என்றார்.

2 சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்ற ஒருவன் இருந்தான். அரசர் அவனைத் தம்மிடம் வரச் சொல்லி அவனை நோக்கி, "சீபா நீ தானா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அடியேன் தான்" என்றான்.

3 அப்போது அரசர், "கடவுளின் பொருட்டு நான் சவுலின் குடும்பத்தாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேன். அவருடைய வீட்டாரில் யாரேனும் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?" என்று வினவினார். சீபா அரசரை நோக்கி, "ஆம், யோனத்தாசுக்குப் பிறந்து இரு கால்களும் முடமான ஒருவன் இருக்கிறான்" என்றான்.

4 அதற்குத் தாவீது, "அவன் எங்கே?" என, சீபா அரசரைப் பார்த்து, "அவன் அம்மியேலின் மகனாகிய மக்கீருடைய வீட்டிலிருக்கிறான்" என்றான்.

5 அப்போது தாவீது அரசர் ஆட்களை அனுப்பி லோதாபாரிலிருக்கிற அம்மியேலின் மகனாகிய மக்கீருடைய வீட்டிலிருந்து அவனைக் கொண்டுவரச் செய்தார்.

6 சவுலின் மகனான யோனத்தாசின் மகன் மிபிபோசேத் தாவீதிடம் வந்த போது முகங்குப்புற விழுந்து அவரை வணங்கினான். அப்பொழுது தாவீது, "மிபிபோசேத்" என்று கூப்பிட, அவன், "அடியேன் இருக்கிறேன்" என்றான்.

7 தாவீது அவனை நோக்கி, "அஞ்சாதே, உன் தந்தை யோனத்தாசை முன்னிட்டு நான் உனக்குக் கட்டாயம் இரக்கம் காட்டுவேன். உன் பாட்டனாகிய சவுலின் நிலங்களை எல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும், நீ என் பந்தியில் நாளும் உணவு அருந்துவாய்" என்றார்.

8 அவன் அரசரை வணங்கி, "என் போன்ற செத்த நாயின் மேல் நீர் பரிவு காட்டுவதற்கு உம் அடியான் யார்?" என்றான்.

9 அரசரோ சவுலின் ஊழியனான சீபாவைக் கூப்பிட்டு, "சவுலுக்குச் சொந்தமான யாவற்றையும், அவன் வீட்டையும் உன் தலைவரின் மகனுக்குக் கொடுத்துள்ளேன்.

10 ஆகையால் நீயும் உன் புதல்வர்களும் உன் ஊழியர்களும் நிலத்தைப் பயிரிடுங்கள்; அதனால் உன் தலைவரின் மகன் உண்ண உணவு கிடைக்கும். உன் தலைவரின் மகன் மிபிபோசேத் நாளும் என் பந்தியில் உணவு அருந்துவான்" என்றார். சீபாவுக்கோ பதினைந்து மக்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்ததார்கள்.

11 சீபா அரசரை நோக்கி, "என் தலைவராகிய அரசே, நீர் அடியேனுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அடியேன் செய்வேன்" என்றான். அரச புதல்வரில் ஒருவரைப்போல் மிபிபோசேத் தாவீதின் பந்தியில் உணவு அருந்தி வந்தான்.

12 மிபிபோசேத்துக்கு மிக்கா என்ற ஒரு சிறிய மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மிபிபோசேத்துக்கு வேலை செய்து வந்தார்கள்.

13 மிபிபோசேத்தோ யெருசலேமில் வாழ்ந்து வந்தான். ஏனெனில் அவன் அரசரின் பந்தியில் சாப்பிடுவது வழக்கம். அவனுக்கு இரு கால்களும் முடமாயிருந்தன.

அதிகாரம் 10

1 பின்னர் நிகழ்ந்ததாவது: அம்மோனிய அரசன் இறந்தான். அவன் மகன் ஆனோன் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.

2 அப்பொழுது தாவீது, "ஆனோனின் தந்தை நாகாசு என்மீது இரக்கம் காட்டி வந்தது போல், நானும் அவனுக்கு இரக்கம் காட்டுவேன்" என்று சொல்லி அவன் தந்தையின் சாவைக் குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்லத் தம் ஊழியர்களை அனுப்பினார். ஆனால் தாவீதின் ஊழியர்கள் அம்மோனியர் நாட்டை அடைந்த போது,

3 அந்நாட்டுப் பெரியோர் தங்கள் தலைவரான ஆனோனை நோக்கி, "ஆறுதல் சொல்லும்படி தாவீது உம்மிடம் ஆட்களை அனுப்பினது உம் தந்தையைப் போற்றுவதற்காக என்றா நினைக்கிறீர்? அவர் இந்நகரை உளவு பார்த்து அதைப் பிடித்து அழிக்க வேண்டும் என்றல்லோ தம் ஊழியர்களை உம்மிடம் அனுப்பியுள்ளார்?" என்றனர்.

4 எனவே ஆனோன் தாவீதின் ஊழியரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளைப் பாதி கத்தரித்து இடுப்புத் துணியோடு அவர்களை அனுப்பி விட்டான்.

5 அது தாவீதுக்கு அறிவிக்கப்படவே, அம்மனிதர் மிகவும் வெட்கப்பட்டிருந்தது பற்றி அரசர் அவர்களுக்குத் தூதரை அனுப்பி, "உங்கள் தாடி வளரும் வரை நீங்கள் எரிக்கோவில் தங்கியிருந்து பிறகு வாருங்கள்" என்று சொல்லச் சொன்னார்.

6 அம்மோனியரோ தாங்கள் தாவீதுக்கு அவமானம் விளைவித்ததைக் கண்டு, ரோகோப் சீரியர்களிலும் சோபா சீரியர்களிலும் இருபதினாயிரம் காலாட் படையினரையும், மாவக்காவின் அரசனிடமிருந்து ஆயிரம் வீரர்களையும், இசுதோபிலிருந்து பன்னீராயிரம் வீரரையும் கூலிக்கு அமர்த்தினர்.

7 அதை தாவீது கேள்வியுற்றபோது, யோவாபையும் படை வீரர் அனைவரையும் அனுப்பி வைத்தார்.

8 அம்மோனியர் புறப்பட்டு வாயில் அருகே போருக்கு அணிவகுத்து நின்றனர். ஆனால் சோபாவின் சீரியர்களும் ரோகோப்பின் சீரியர்களும், மாவக்காவிலும் இசுதோபிலும் இருந்து வந்திருந்தவர்களும் தனியாகப் பாசறையில் தங்கியிருந்தனர்.

9 தனக்கு எதிராக முன்னும் பின்னும் போர் மூளயிருந்ததைக் கண்ட யோவாப் இஸ்ராயேல் வீரருள் சிலரைப் பொறுக்கி எடுத்து அவர்களைச் சீரியர்களுக்கு எதிராக அணி வகுத்து நிறுத்தினான்.

10 ஏனையவரைத் தன் சகோதரனாகிய அபிசாயிடம் ஒப்புவித்தான். அபிசாயி அம்மோனியருக்கு எதிராக அவர்களை அணிவகுத்து நிறுத்தினான்.

11 யோவாப், "சீரியர் கை மேலோங்கினால் நீ எனக்கு உதவி செய்ய வேண்டும். அம்மோனியர் கை மேலோங்கினால் நான் உனக்கு உதவிக்கு வருவேன்.

12 நீ துணிவுடன் இரு. நம் மக்களுக்காகவும் நம் இறைவனின் நகருக்காகவும் போரிடுவோம். ஆண்டவர் தமக்கு நலம் என்று தோன்றுவதைச் செய்வாராக" என்றான்.

13 எனவே, யோவாபும் அவனோடு இருந்த ஆட்களும் சீரியர் மேல் போரிடத் தொடங்கினவுடன் சீரியர் புறமுதுகு காட்டி ஓடினர்.

14 சீரியர் சிதறி ஓடுவதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயியிக்கு அஞ்சி ஓடி நகருக்குள் நுழைந்தனர். அப்பொழுது யோவாப் அம்மோனியரை விட்டு யெருசலேமுக்கு திரும்பி வந்தான்.

15 இஸ்ராயேலர் முன் தாங்கள் தோற்கடிக்கப் பட்டதைச் சீரியர்கள் கண்ட போது ஒன்று கூடி வந்தனர்.

16 ஆதரேஜேர் தூதரை அனுப்பி நதிக்கு அப்பால் இருந்த சீரியரை வரச் செய்து அவர்கள் படையையும் கொண்டு வந்தான். ஆதரேஜேருடைய படைத்தலைவன் சோபாக் அவர்களுக்குத் தலைவனாய் இருந்தான்.

17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டவுடன் அவர் இஸ்ராயேலர் அனைவரையும் கூட்டிக் கொண்டு யோர்தானைக் கடந்து ஏலாமுக்குப் போனார். அப்போது, சீரியர் தாவீதுக்கு எதிராகத் தங்கள் படைகளை அணிவகுத்து அவரோடு போரிட்டனர்.

18 சீரியர் இஸ்ராயேலுக்குப் புறமுதுகு காட்டி ஓடவே, தாவீது சீரியரில் எழுநூறு தேர் வீரர்களையும் நாற்பதினாயிரம் குதிரை வீரர்களையும் கொன்று, அவர்களின் படைத்தலைவன் சோபாக்கையும் வெட்டி வீழ்த்தினார்.

19 அப்பொழுது ஆதரேஜேரின் தோழமை அரசர் அனைவரும் தாங்கள் இஸ்ராயேலரால் தோற்கடிக்கப் பட்டதைக் கண்டு அஞ்சி நடுங்கி, ஐம்பத்தெட்டாயிரம் வீரரோடு சிதறி ஓடினர். பிறகு அவர்கள் இஸ்ராயேலோடு சமாதானம் செய்து கொண்டு இஸ்ராயேலுக்கு அடிமைகள் ஆயினர். அன்று முதல் அம்மோனியருக்கு உதவி செய்ய அவர்கள் துணியவில்லை.

அதிகாரம் 11

1 மறு ஆண்டு அரசர்கள் போருக்குப் புறப்படும் காலம் வந்த போது, தாவீது யோவாபையும் அவரோடு தம் வீரரையும் இஸ்ராயேலர் அனைவரையும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரை அழித்தொழிந்து, ரபாவை முற்றுகையிட்டனர். தாவீதோ யெருசலேமிலேயே தங்கிவிட்டார்.

2 அன்றொரு நாள் தாவீது நண்பகலுக்குப் பின் தன் படுக்கையினின்று எழுந்து அரண்மனை மாடியில் உலாவுகையில், அவருக்கு எதிரே தம் மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டார். அப்பெண் மிகவும் அழகாக இருந்தாள்.

3 அப்பொழுது அரசர் அப்பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பி, அவள் எலியாமின் மகளும் ஏத்தையனான உரியாசின் மனைவியுமான பெத்சாபே என்ற அறிந்து கொண்டார்.

4 பின்னர் தாவீது ஆள் அனுப்பி அவளை வரவழைத்தார். அவள் அவரிடம் வந்த போது அரசர் அவளோடு படுத்தார். பிறகு அவள் தன் தீட்டு நீங்கத் தன்னைத் தூய்மைப்படுத்தினாள்.

5 கருவுற்றவளாய்த் தன் வீடு திரும்பிய பின், தான் கருவுற்றிருப்பதாகத் தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.

6 அப்போது தாவீது யோவாபிடம் ஆள் அனுப்பி "ஏத்தையனான உரியாசை என்னிடம் அனுப்பிவை" என்று சொன்னார். அப்படியே யோவாப் ஏத்தையனான உரியாசைத் தாவீதிடம் அனுப்பி வைத்தான்.

7 உரியாசு தாவீதிடம் வந்த போது, அவர் அவனை நோக்கி, "யோவாபும் மக்களும் நலமாய் இருக்கிறார்களா ? போர் எவ்வாறு நடந்து வருகிறது?" என்று விசாரித்தார்.

8 பிறகு தாவீது உரியாசை நோக்கி, "உன் இல்லத்திற்குப் போய் உன் கால்களைக் கழுவு" என்றார். உரியாசு அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, அரச உணவு அவனுக்குப் பின்னால் அனுப்பப் பட்டது.

9 உரியாசோ தன் இல்லத்திற்குப் போகாமல் தன் தலைவரின் மற்ற ஊழியர்களோடு அரண்மனை வாயிலில் படுத்துக் கொண்டான்.

10 உரியாசு தன் இல்லத்திற்குச் செல்லவில்லை என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாசை நோக்கி, "நீ பயணத்திலிருந்து வந்தவனல்லவா? நீ உன் வீட்டுக்குப் போகாதது ஏன்?" என்று கேட்டார்.

11 உரியாசு தாவீதைப் பார்த்து, "கடவுள் பேழையும் இஸ்ராயேலும் யூதாவும் கூடாரங்களில் இருக்க, என் தலைவன் யோவாபும் என் அரசரின் சேவகரும் வெளியே தங்கியிருக்க, நான் உண்ணவும் குடிக்கவும், என் மனைவியுடன் படுக்கவும் என் வீட்டிற்குள் போவேனோ? உம்மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்" என்றான்.

12 அப்போது தாவீது உரியாசை நோக்கி, "இன்றும் நீ இங்கேயே இரு; நாளை நான் உன்னை அனுப்பி வைப்பேன்" என்றார். அப்படியே உரியாசு அன்றும் மறுநாளும் யெருசலேமில் தங்கி இருந்தான்.

13 தாவீது அவனைத் தன் முன்னிலையில் உண்ணவும் குடிக்கவும் அழைத்து அவனுக்குப் போதை ஊட்டினார். ஆயினும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் மாலையிலேயே வெளியே போய் அரசரின் சேவகரோடு தன் படுக்கையில் தூங்கினான்.

14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை உரியாசின் கையில் கொடுத்து அனுப்பினார்.

15 அக்கடிதத்தில், "போர் கடுமையாக நடக்கும் இடத்தில் உரியாசை நீர் படை முகத்தில் நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படி விட்டுவிடும்" என்று எழுதப்பட்டிருந்தது.

16 அவ்வாறு யோவாப் நகரை முற்றுகையிடுகையில் மிக்க ஆற்றல் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்திருந்த இடத்தில் உரியாசை நிறுத்தினான்.

17 வீரர் நகரிலிருந்து வெளிப்போந்து யோவாபோடு போரிட்ட போது தாவீதின் வீரருள் பலர் விழுந்து மடிந்தனர். ஏத்தையனாகிய உரியாசும் இறந்தான்.

18 அப்போது போரைப் பற்றித் தாவீதுக்கு அறிவிக்கும்படி யோவாப் ஆள் அனுப்பி,

19 தான் அனுப்பின ஆளை நோக்கி, "போரின் முடிவுகளைப் பற்றி நீ அரசருக்கு அறிவித்த பின்,

20 ஒரு வேளை அவர் சினந்து, 'நீங்கள் நகர மதில்களுக்கு அண்மையில் நின்று போரிட்டது ஏன்? எதிரிகள் நகர மதில்கள் மேலிருந்து ஈட்டியை எறிவார்கள் என்று உங்களுக்குத் தெரியாதோ?

21 யெரோபாவின் மகன் அபிமெலேக்கைக் கொன்றவன் யார்? தேபெசு நகர முற்றுகையின் போது ஒரு பெண் நகர மதிலின் மேலிருந்து எந்திரக் கல்லின் ஒரு துண்டை அவன் மேல் எறிந்ததாலன்றோ அவன் மடிந்தான்? நீங்கள் நகர மதில் அருகே சென்றது ஏன்?' என்று அரசன் உன்னிடம் சொன்னால், நீ அவரைப் பார்த்து, 'உம்முடைய ஊழியனும் ஏத்தையனுமான உரியாசும் மடிந்தான்' என்று சொல்" என்றான்.

22 அவ்வாறே தூதன் புறப்பட்டுத் தாவீதிடம் வந்து, யோவாப் தனக்குக் கட்டளையிட்டிருந்தவற்றை எல்லாம் அவருக்கு அறிவித்தான்.

23 அவன் தாவீதை நோக்கி, "எதிரிகள் மேலோங்கி வயல் வெளியில் எங்களோடு போரிட வந்தனர். நம்மவர்களோ அவர்கள் மேல் விழுந்து நகர் வாயில் வரை அவர்களைத் துரத்தின போது,

24 வில் வீரர் நகர மதில் மேலிருந்து உம் ஊரியர்களின் மேல் அம்பு எய்ததால் அரசரின் சேவகரில் பலர் வீழ்ந்ததோடு உம் ஊழியனாகிய ஏத்தையன் உரியாசும் மாண்டான்" என்றான்.

25 அப்பொழுது தாவீது தூதனை நோக்கி, "நீ யோவாபிடம் சொன்று: 'இது குறித்து நீர் கலங்கவேண்டாம். போரின் போக்கு பலவிதம். வாள் ஒருமுறை ஒருவனையும், மற்றொரு முறை வேறொருவனையும் இரையாக்கிவிடும். நீர் உம் வீரர்களைத் தேற்றி நகரை விரைவில் பிடித்துத் தகர்க்க அவர்களைத் தூண்டும்' என்று சொல்" என்றார்.

26 உரியாசின் மனைவியோ தன் கணவன் உரியாசு இறந்துவிட்டான் என்று கேள்வியுற்று அவனுக்காக இழவு கொண்டாடினாள்.

27 இழவு நாள் முடிந்தவுடன் தாவீது ஆள் அனுப்பி அவளைத் தன் வீட்டிற்குக் கொணர்ந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஒரு மகனைப் பெற்றாள். தாவீதின் இச் செயலோ ஆண்டவருக்கு மனவருத்தம் அளித்தது.

அதிகாரம் 12

1 ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். அவர் அரசரிடம் வந்து அவரை நோக்கி, "ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர். ஒருவன் செல்வந்தன்; மற்றவன் ஏழை.

2 செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிகுதியாக இருந்தன.

3 ஏழை மனிதனுக்கோ விலைக்கு வாங்கி வளர்த்த ஓர் ஆட்டுக் குட்டியைத் தவிர வேறொன்றுமில்லை. அது அவனோடு அவன் பிள்ளைகளோடும் வீட்டில் வளர்ந்து, அவன் அப்பத்தைத் தின்று அவனது கிண்ணத்தில் குடித்து அவன் மடியில் தூங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே இருந்து வந்தது.

4 ஆனால் செல்வந்தனிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்த போது, அவன் தன்னிடம் வந்த அவனுக்கு விருந்து செய்யத் தன் சொந்த ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனமின்றி, அந்த ஏழை மனிதனுடைய ஆட்டைப் பிடித்துத் தன்னிடம் வந்தவனுக்காகச் சமையல் செய்தான்" என்றார்.

5 இதைக் கேட்ட தாவீது அம்மனிதன் மேல் மிகவும் சினந்து நாத்தானை நோக்கி, "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் சாக வேண்டும்.

6 இரக்கமின்றி அவன் இதைச் செய்த படியால் அந்த ஆட்டுக்குப் பதிலாக நான்கு மடங்கு திருப்பிச் கொடுக்க வேண்டும்" என்றார்.

7 அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, "நீரே அந்த மனிதன்; இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் சொல்வதைக் கேளும்: 'இஸராயேலுக்கு அரசனாக உன்னை அபிஷுகம் செய்தவரும் நாமே; சவுலின் கைக்கு உன்னைத் தப்புவித்தவரும் நாமே.

8 உன் தலைவனுடைய வீட்டையும் உனக்குக் கொடுத்தோம். உன் தலைவனின் மனைவியரையும் உன் கையில் அளித்தோம். இஸ்ராயேல் வம்சத்தையும் யூதா வம்சத்தையும் உனக்குத் தந்தோம். இவை எல்லாம் போதாது என்றால் இதை விட அதிகமாகவும் உனக்குத் தந்திருப்போம்.

9 அப்படியிருக்க, ஆண்டவருடைய வார்த்தையைப் புறக்கணித்து நீ என் முன்னிலையில் பாவம் செய்தது ஏன்? ஏத்தையனான உரியாசை நீ வாளால் தாக்கி, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டு, அம்மோனியரின் வாளால் அவனைக் கொன்று போட்டாய்.

10 நீ நன்மைப் புறக்கணித்து ஏத்தையனாகிய உரியாசின் மனைவியை உனக்கு மனைவியாகக் கொண்டபடியால், வாளானது என்றும் உன் வீட்டை விட்டு அகலாது'.

11 ஆகையால் ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'இதோ உன் வீட்டின் தீமை உன்மேல் வரச் செய்வோம்; உன் பார்வையிலேயே நாம் உன் மனைவியரை எடுத்துப் பிறனுக்குக் கையளிப்போம். அவன் இச்சூரிய வெளிச்சத்தில் உன் மனைவிகளோடு படுப்பான்.

12 நீயோ மறைவில் செய்தாய்; நாமோ இஸ்ராயேலர் எல்லாருக்கும் முன்பாகவும் சூரியனுக்கு முன்பாகவும் அதைச் செய்வோம்" என்று கூறினார்.

13 அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்" என்றார். நாத்தான் தாவீதை நோக்கி, "ஆண்டவர் உமது பாவத்தை மன்னிப்பார். நீர் சாகப் போகிறதில்லை.

14 ஆயினும் ஆண்டவருடைய எதிரிகள் அவரைப் பழிக்க நீர் காரணமாயிருந்தீரே; அதன் பொருட்டு உமக்குப் பிறந்திருக்கும் பிள்ளை சாகவே சாவான்" என்று சொல்லி, நாத்தான் தம் வீடு திரும்பினார்.

15 அப்பொழுது ஆண்டவர் உரியாசின் மனைவி தாவீதுக்குப் பெற்ற பிள்ளையை அடித்து வீழ்த்தினார். அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.

16 அதைக் கண்ட தாவீது பிள்ளைக்காக ஆண்டவரிடம் மன்றாடி நோன்பு காத்துத் தம் அறைக்குள் சென்று தரையில் விழுந்து கிடந்தார்.

17 அவரது வீட்டிலுள்ள பெரியோர்கள் வந்து அவரை எழுந்திருக்கச் சொல்லி எவ்வளவோ முயன்றும் அவர் மறுத்து விட்டதுமன்றி, அவர்களோடு சாப்பிடவுமில்லை.

18 ஆனால் ஏழாம் நாளில் குழந்தை இறந்து போயிற்று. அது இறந்து போயிற்று என்று தாவீதின் ஊழியர்கள் அவரிடம் சொல்லத் துணியவில்லை; ஏனென்றால் அவர்கள், "பிள்ளை உயிரோடு இருக்கையில் நாங்கள் அரசரோடு பேசினபோது அவர் எங்கள் வார்த்தையைக் கேட்கவில்லையே. இப்போது நாங்கள் போய்: 'பிள்ளை இறந்து போயிற்று' என்று எப்படிச் சொல்வோம்? பெரிதும் மனமுடைந்து போவாரே" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.

19 தாவீதோ தம் ஊழியர் தங்களுக்குள்ளே இரகசியமாய்ப் பேசிக்கொள்கிறதைக் கண்டு, குழந்தை செத்துப் போயிற்று என்று அறிந்து கொண்டார். எனவே தம் ஊழியரை நோக்கி, "பிள்ளை செத்துப் போயிற்றோ?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'செத்துப் போயிற்று' என்றார்கள்.

20 எனவே தாவீது தரையினின்று எழுந்து, குளித்து, எண்ணெய் பூசிக்கொண்டு, தம் ஆடைகளை மாற்றி ஆண்டவருடைய ஆலயத்தில் நுழைந்து ஆண்டவரைத் தொழுதார். பிறகு தம் வீட்டிற்கு வந்து அப்பம் கொண்டு வரச் சொல்லி அதைச் சாப்பிட்டார்.

21 அதைக் கண்டு அவர் ஊழியர் அவரை நோக்கி, "நீர் என்ன செய்தீர்? பிள்ளை உயிரோடு இருக்கையில் நோன்பு காத்து அழுதீர்; பிள்ளை இறந்த பின்போ நீர் எழுந்து சாப்பிடுகிறீரே?" என்றனர்.

22 அதற்குத் தாவீது, "ஆம்; குழந்தை உயிரோடு இருக்கையில் ஒரு வேளை பிள்ளையை ஆண்டவர் எனக்குக் கொடுக்க அது பிழைக்கலாம் என்று எண்ணி நோன்பு காத்திருந்து அழுதேன்.

23 இப்பொழுது அது இறந்து விட்டது. இனி நான் நோன்பு காக்க வேண்டியது ஏன்? அதைத் திரும்பி வரச் செய்ய என்னால் கூடுமா? நான் அதனிடம் போவேனேயன்றி, அது என்னிடம் கட்டாயம் வரப்போகிறதில்லை" என்று பதில் கூறினார்.

24 தாவீது தம் மனைவியாகிய பெத்சாபேக்கு ஆறுதல் சொல்லி அவளோடு படுத்தார். அவள் ஒரு மகனைப் பெற்று அவனுக்குச் சாலமோன் என்று பெயரிட்டாள். ஆண்டவர் அப்பிள்ளையிடம் அன்பாயிருந்தார்.

25 இறைவாக்கினரான நாத்தானை ஆண்டவர் அனுப்பினார். அவர் வந்து, ஆண்டவருடைய அன்பின் பொருட்டு 'ஆண்டவரின் அன்பன்' என்று பிள்ளைக்குப் பெயரிட்டார்.

26 அதற்குள் யோவாப் அம்மோனியருடைய இராப்பாத் நகரை எதிர்த்துப் போராடி அதன் தலைநகரைப் பிடிக்கப்போகிற வேளையிலே,

27 தாவீதிடம் தூதரை அனுப்பி, "நான் இராப்பாத்தின் மேல் போர் தொடுத்துள்ளேன். தண்ணீர் சூழ்ந்த அந்நகர் விரைவில் பிடிபடவிருக்கிறது.

28 ஆகையால் எஞ்சிய மக்களைத் திரட்டி, நகரை முற்றுகையிட்டுப் பிடியும். நகரை நானே பாழாக்கி விட்டால் வெற்றி உம்மைச் சேராமல் என்னை அன்றோ சாரும்?" என்று சொல்லச் சொன்னான்.

29 எனவே, மக்களை எல்லாம் தாவீது ஒன்று திரட்டி இராப்பாத் நகருக்கு வந்து போரிட்டு அதைப் பிடித்தார்.

30 மேலும் அவர்களுடைய அரசனின் தலையில் இருந்த மகுடத்தை எடுத்து வந்து தம் தலையில் சூடி கொண்டார். அது ஒரு தாலந்து நிறையுள்ள பொன்னாலும் மிகவிலையுயர்ந்த இரத்தினங்களாலும் ஆனது. அத்தோடு நகரிலிருந்து ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் தாவீது கொண்டு சொன்றார்.

31 பிறகு தாவீது நகர மக்களை வெளியே கொண்டு வரச் சொல்லி, அவர்களை வாளால் குத்தவும், இருப்பாயுதங்களைக் கொண்ட வண்டிச் சக்கரங்களால் நசுக்கவும், கோடரியால் வெட்டவும், செங்கற் சூளையில் சுட்டெரிக்கவும் செய்தார். இவ்வாறு அம்மோனியரின் நகரங்களுக்கெல்லாம் செய்த பின், தாவீது தம் சேனைகள் அனைத்தோடும் யெருசலேமுக்குத் திரும்பினார்.

அதிகாரம் 13

1 பின்னர் நிகழ்ந்ததாவது: தாவீதின் மகனான அம்னோன் என்பவன் தாவீதின் மற்றொரு மகனான அப்சலோமின் சகோதரியின் மேல் காதல் கொண்டான். தாமார் என்ற பெயர் கொண்ட இவள் ஒரு பேரழகி.

2 அவன் தாமாரை எவ்வளவு காதலித்தான் என்றால், அவள் மீது கொண்டிருந்த ஏக்கத்தினால் நோயுற்றான். அவள் கன்னிப் பெண்ணானபடியால் அவளுடன் தகாத உறவு கொள்வது கடினம் என அவனுக்குத் தோன்றிற்று.

3 அப்படியிருக்க அம்னோனுக்கு யோனதாப் என்ற நண்பன் இருந்தான். இவன் தாவீதின் சகோதரனான செம்மாவின் மகன்; பெரும் தந்திரசாலி.

4 இவன் அம்னோனைப் பார்த்து, "இளவரசே, நீ நாளுக்கு நாள் இவ்வாறு மெலிந்துபோகக் காரணம் என்ன? எனக்குச் சொல்லமாட்டாயா?" என்றான். அதற்கு அம்னோன், "என் சகோதரனான அப்சலோமின் சகோதரி தாமாரின் மேல் நான் காதல் கொண்டுள்ளேன்" என்றான்.

5 யோனதாப் அவனை நோக்கி, "நீ உன் படுக்கையில் படுத்துக்கொண்டு, நோயுற்றவனைப் போல் பாசாங்கு செய். உன் தந்தை உன்னைப் பார்க்க வரும் போது நீ அவரைப் பார்த்து: 'என் சகோதரி தாமார் எனக்கு உணவு கொடுத்து அவள் கையால் நான் சாப்பிடத்தக்க உணவு சமைத்துத் தரும்படி தாங்கள் தயவுசெய்து அவளை அனுப்பவேண்டும்' என்று சொல்" என்றான்.

6 அதன்படி அம்னோன் நோயாளி போன்று பாசாங்கு செய்தான். அரசர் அவனைப் பார்க்க வந்தார். அம்னோன் அவரை நோக்கி, "என் சகோதரி தாமார் கையினால் நான் சாப்பிடும்படி என் கண்முன் இரண்டு பணியாரங்களைச் செய்து கொடுக்க அவளை அனுப்பும்படி வேண்டுகிறேன்" என்றான்.

7 எனவே, தாவீது தாமாருக்கு ஆள் அனுப்பி, "நீ உன் சகோதரன் அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு" என்று சொல்லச் சொன்னார்.

8 தாமார் தன் சகோதரன் அம்னோன் வீட்டுக்கு வந்தாள். அவன் படுத்திருந்தான். அவள் மாவு எடுத்துப் பிசைந்து கூழாக்கி அவன் கண்முன் பணியாரங்களைச் சுட்டாள்.

9 பின்னர் அவற்றை எடுத்து அவனுக்குப் படைத்தாள். அம்னோன் "எல்லோரும் வெளியே போனாலன்றி நான் சாப்பிட மாட்டேன்" என்றான். அவ்விதமே அனைவரும் வெளியேறினர்.

10 பின்னர், அம்னோன் தாமாரை நோக்கி, "நான் உன் கையால் சாப்பிடும்படி படுக்கை அறைக்குப் பணியாரங்களைக் கொண்டுவா" என்றான். தாமார் தான் செய்த பணியாரங்களைப் படுக்கை அறையில் இருந்த தன் சகோதரன் அம்னோனிடம் கொண்டு வந்து, அவனுக்குக் கொடுக்கையில்,

11 அவன் அவள் கையைப் பிடித்து, "தங்காய், வா; வந்து என்னோடு படு" என்றான்.

12 அதற்கு அவள், "அண்ணா, வேண்டாம், என்னைக் கற்பழிக்காதே. இஸ்ராயேல் மனிதர் இவ்வாறு செய்வதில்லை. இப்படிப்பட்ட மதிகெட்ட செயலை நீ செய்யலாமா?

13 இதனால் வரும் அவமானத்தை என்னால் தாங்க முடியாது. நீயும் இஸ்ராயேலில் மதிகெட்டவர்களுள் ஒருவனாய் இருப்பாய். மாறாக அரசரிடம் நீ கேள். அவர் என்னை உனக்கு மனைவியாகத் தர மறுக்க மாட்டார்" என்றாள்.

14 அவள் எவ்வளவு தான் கெஞ்சியும் அம்னோன் ஒன்றுக்கும் செவிகொடாமல் வலுவந்தமாய் அவளைப் பிடித்து அவளோடு படுத்தான்.

15 அதன் பின் அம்னோன் அவளை மிகவும் வெறுக்கத் தொடங்கினான். முன்பு அவளை எவ்வளவு விரும்பியிருந்தானோ, அதற்கும் அதிகமாக இப்போது அவளை வெறுத்தான். அவளை பார்த்து, "நீ எழுந்து போ" என்றான்.

16 அப்போது அவள், "நீ முன்பு செய்த அநியாத்தை விட, இப்போது நீ என்னைத் துரத்தி விடுகிறது பெரிய அநியாயம்" என்று சொன்னாள். அவனோ அவளுடைய சொல்லைக் கேட்க மனதின்றி,

17 தனக்குப் பணிவிடை செய்து வந்த வேலைக்காரனை அழைத்து, "இவளை இங்கிருந்து வெளியேற்றிக் கதவைத் தாழிடு" என்றான்.

18 அரசருடைய மணமாகாப் புதல்வியர் உடுத்திக் கொள்ளும் நீண்டதொரு மேலங்கியைத் தாமார் அணிந்திருந்தாள். அம்னோனின் வேலைக்காரன் அவளை வெளியே தள்ளிக் கதவை பூட்டினான்.

19 அவள் தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக் கொண்டு, தன் ஆடையைக் கிழித்து, இரு கைகளையும் தன் தலை மேல் வைத்தவளாய் அழுது கொண்டே போனாள்.

20 அப்போது அவளுடைய சகோதரன் அப்சலோம் அவளை நோக்கி, "என்ன, உன் சகோதரன் அம்னோன் உன்னோடு படுத்தானோ? தங்காய், நீ இப்போது ஒன்றும் சொல்லாதே. அவன் உன் சகோதரன் அல்லனோ ? இதன் பொருட்டு நீ மனம் வருந்தாதே" என்றான். அப்படியே துயருற்றிருந்த தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டில் தங்கினாள்.

21 தாவீது அரசர் இதைக் கேள்வியுற்ற போது மிகவும் வருந்தினார். ஆனால் அம்னோனை அவர் வருத்தப்படுத்த விரும்பவில்லை; ஏனெனில், அவன் தம் மூத்த மகனானபடியால் அவனுக்கு அன்பு செய்து வந்தார்.

22 அப்சலோமோ அம்னோனோடு நல்லதோ கெட்டதோ ஒன்றும் பேசவில்லை. ஆனால் அம்னோன் தன் சகோதரி தாமாரை கற்பழித்தது பற்றி அப்சலோம் அவனைப் பகைத்தான்.

23 ஈராண்டுகட்குபின் எபிராயீமுக்கு அருகிலுள்ள பால்- ஆசோரில் அப்சலோமுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் காலம் வந்தது. அப்சலோம் அரச புதல்வர் எல்லாரையும் அழைத்தான்.

24 அவன் அரசரிடம் போய் அவரை நோக்கி, "அடியேனுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கபடுகிறது. அரசரும் அவர் ஊழியர்களும் உம் அடியான் வீட்டுக்கு வரும்படி வேண்டிக்கொள்கிறேன்" என்றான்.

25 அப்போது அரசர் அப்சலோமைப் பார்த்து, "வேண்டாம், மகனே; நாங்கள் எல்லோரும் வந்தால் உனக்கு அதிகச் செலவாகுமே" என்றார். ஆனால் அவன் அவரை வருந்திக் கேட்டுக் கொண்ட படியால் அரசர்வரச் சம்மதிக்காவிடினும் அவனை ஆசீர்வதித்தார்.

26 அப்சலோம் மறுபடியும் தந்தையை நோக்கி, "நீர் வராவிடினும் என் சகோதரன் அம்னோனையாவது எங்களுடன் அனுப்பி வையும்" என்றான். அதற்கு அரசர், "அவன் உன்னுடன் வரவேண்டியதில்லை" என்றார்.

27 அப்சலோம் அவரை வற்புறுத்தியதால் இறுதியில் அரசர் அம்னோனையும் அரச புதல்வர் அனைவரையும் அவனுடன் அனுப்பி வைத்தார். அப்சலோம் அரச விருந்துக்கு ஒப்பான ஒரு விருந்தைத் தயாரித்திருந்தான்.

28 அப்சலோம் தன் ஊழியர்களை நோக்கி, "அம்னோன் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதையில் இருக்கும் நேரத்தை நன்றாகப் பார்த்திருங்கள். அந்நேரத்தில் நான், 'அம்னோனை அடியுங்கள்' என்று சொல்லுவேன். உடனே அவனை நீங்கள் கொன்று போடுங்கள். அஞ்ச வேண்டாம்; ஏனெனில் உங்களுக்குக் கட்டளை இடுவது நானே. நீங்கள் திடம் கொண்டு தைரியமாய் இருங்கள்" என்று சொல்லிக் கட்டளை இட்டிருந்தான்.

29 ஆகையால் அப்சலோம் கட்டளையிட்டிருந்தபடியே அவன் ஊழியர் அம்னோனுக்குச் செய்தனர், அரச புதல்வர் அனைவரும் எழுந்து, தத்தம் கோவேறு கழுதைகளின் மேல் ஏறி ஓடினர்.

30 அவர்கள் இன்னும் வழியில் இருக்கிற போதே, "அப்சலோம் அரச புதல்வர் அனைவரையும் கொன்று போட்டான். அவர்களில் ஒருவராவது தப்பவில்லை" என்ற வதந்தி தாவீதின் காதுக்கு எட்டியது.

31 அப்போது அரசர் எழுந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு தரையில் விழுந்தார். அவருக்கு ஏவல் புரிந்து வந்த அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர்.

32 ஆனால் தாவீதின் சகோதரனான செம்மாவின் மகன் யோனதாப் வந்து, "அரச புதல்வரான இளைஞர் எல்லாரும் கொல்லப்பட்டார்கள் என்று என் தலைவராகிய அரசர் நினக்க வேண்டாம். அம்னோன் மட்டுமே இறந்தான். ஏனெனில் அவன் அப்சலோமின் சகோதரி தாமாரைக் கற்பழித்த நாள் முதல் அப்சலோம் அவனைக் கொல்லச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

33 ஆதலால் அரச புதல்வர் எல்லாரும் இறந்து விட்டனர் என்ற பேச்சை அரசராகிய என் தலைவர் நம்ப வேண்டாம். அம்னோன் ஒருவனே இறந்தான்" என்றான்.

34 அப்சலோமோ ஓடிப்போய் விட்டான். அந்நேரத்தில் காவற் சேவகன் தன் கண்களை உயர்த்திப் பார்க்கையில், அதோ திரளான மக்கள் மலையின் ஓரமாயுள்ள வேற்று வழியாய் வந்து கொண்டிருந்தார்கள்.

35 அப்பொழுது யோனதாப் அரசரை நோக்கி, "இதோ அரச புதல்வர் வருகின்றனர். அடியேன் சொன்னபடியே ஆயிற்று" என்றான்.

36 அவன் பேசி முடியவே, அரச புதல்வர் உள்ளே வந்து ஓலமிட்டு அழுதனர். அரசரும் அவர் ஊழியர்களும் புலம்பி அழுதனர்.

37 அப்சலோமோ ஓடிப்போய் ஜெஸ்சூர் அரசனான அம்மியூதின் மகன் தொலொமாயிடம் சென்றான். தாவீதோ நாளும் தம் மகனை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார்.

38 அப்சலோம் ஜெஸ்சூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று ஆண்டுகள் இருந்தான்.

39 தாவீது அரசர் அம்னோன் இறந்ததை மறந்தார்; அப்சலோமைப் பின்தொடர்வதையும் கைவிட்டார்.

அதிகாரம் 14

1 அரசரின் இதயத்தில் அப்சலோமைப் பற்றிய நினைவு இன்னும் இருக்கிறது என்று சார்வியாவின் மகன் யோவாப் அறிந்தான்.

2 எனவே, தேக்குவாவூருக்கு ஆள் அனுப்பி, அங்கிருந்த அறிவாளியான ஒரு பெண்ணை அழைப்பித்து, "நீ இழவு கொண்டாடுகிறவளைப் போலப் பாசாங்கு செய்து துக்க ஆடைகளை அணிந்து கொண்டு, எண்ணெய் தேய்க்காது, இறந்து போனவனுக்காக நெடுநாள் துக்கித்திருக்கிற பெண்ணைப் போல் வேடம் பூண்டு கொள்.

3 பின் அரசரிடம் சென்று நீ இவ்வாறு அவரிடம் பேசவேண்டும்" என்று சொல்லி, அவள் சொல்ல வேண்டியவற்றை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான்.

4 அவ்விதமே தேக்குவாப் பெண் அரசர் முன் வந்து தரையில் விழுந்து வணங்கி, "அரசே, என்னைக் காப்பாற்றும்" என்றாள்.

5 அரசர் அவளைப் பார்த்து, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டதற்கு அவள்,"ஐயோ, என் கணவன் இறந்து பட்டான்;

6 நான் கைம்பெண் ஆனேன். உம் அடியாளுக்கு இரு புதல்வர் இருந்தனர். அவர்கள் இருவரும் வயல் வெளியில் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்த ஒருவரும் இல்லாததால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்று போட்டான்.

7 இப்போழுதோ சுற்றத்தார் அனைவரும் உம் அடியாளுக்கு எதிராய் எழும்பி 'தன் சகோதரனைக் கொன்றவனை ஒப்புவித்துவிடு; தன் சகோதரனைக் கொன்றதற்குப் பதிலாய் நாங்கள் அவனைக் கொன்று அவன் வாரிசை அழிப்போம்' என்கிறார்கள். இப்படி என் கணவனுக்குப் பெயருமின்றிப் பிள்ளையுமின்றிப் போகும்படியாக எனக்கு இன்னும் விடப்பட்ட சிற்றொளியையும் அணைத்துவிடப் பார்க்கிறார்களே" என்றாள்.

8 அரசர் அப்பெண்ணைப் பார்த்து, "நாம் உன் காரியத்தைக் குறித்துக் கட்டளை கொடுப்போம்;

9 நீ உன் வீட்டுக்குப் போகலாம்" என்றார். அத்தேக்குவாப் பெண் அரசரை நோக்கி, "என் தலைவரான அரசே, பழி இருந்தாலும் அது என் மேலும், என் தந்தை வீட்டின் மேலும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமின்றி இருக்கட்டும்" என்றாள்.

10 அதற்கு அரசர், "உன்னை எதிர்ப்பவனை என்னிடம் கொண்டுவா. அவன் இனி உன்னைத் தொடமாட்டான்" என,

11 அவள், "இரத்தப்பழி வாங்க முற்படும் என் சுற்றத்தாரின் எண்ணிக்கை பெருகாதபடியும், என் மகனை யாரும் அழிக்காதபடியும் அரசர் தம்முடைய ஆண்டவராகிய கடவுளை நினைத்துப் பார்க்கக்கடவாராக" என்றாள். இதற்கு அரசர், "ஆண்டவர் மேல் ஆணை! உன் மகனுடைய தலைமயிர்களில் ஒன்றாவது தரையில் விழாது" என்று ஆணையிட்டுச் சொன்னார்.

12 அப்பொழுது அப்பெண், "அடியாள் என் தலைவராகிய அரசரிடம் ஒரு வார்த்தை சொல்லட்டுமா?" என்று வினவ, அவர் "சொல்" என்றார்.

13 அப்பொழுது அப்பெண், "பின் ஏன் கடவுளின் மக்களுக்கு எதிராய் நீர் இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்? துரத்தப் பெற்ற தம் மகனை அரசர் திரும்ப அழைக்காவிட்டால் அவர் இப்போது சொன்ன சொல் அவருக்குப் பாவம் ஆகாதா?

14 தரையில் சிந்திய தண்ணீரைத் திரும்பவும் ஒன்று சேர்க்க முடியாதது போல் நாம் அனைவரும் செத்து மடிவோம். உயிர்கள் அழிவது இறைவனின் திருவுளம் அன்று. எனவே, தள்ளுண்டவன் முற்றிலும் கெட்டுப் போகாதபடி அவர் கண்டும் பொறுத்துக் கொண்டு வருகிறார்.

15 அப்படியிருக்க, நான் என் தலைவராகிய அரசரிடம் நான்கு பேர் கேட்க இக்காரியத்தைப் பற்றிப் பேச வந்தேன். 'நான் அரசரிடம் போய்ப் பேசுவேன். அவர் ஒருவேளை தம் அடியாளுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வார்' என்று உம் அடியாள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

16 ஏற்கெனவே அரசர் அடியாளுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னையும் என் புதல்வனையும் ஒன்றாய்க் கடவுளின் உரிமைக்குப் புறம்பாக்கி அழிக்கக் கருதின அனைவரின் கைக்கும் தம் அடியாளைத் தப்புவித்தார்.

17 ஆகையால், என் தலைவரான அரசே, பலியைப் போல் இதுவும் நிறைவேற வேண்டும் என்று அடியாள் வேண்டுகின்றேன். கடவுளின் தூதனைப்போல் என் தலைவராகிய அரசர் புகழ்ச்சியாலோ இகழ்ச்சியாலோ நிலைபெயர மாட்டார். இதனால் தான் உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்" என்றாள்.

18 இதற்கு மறுமொழியாக அரசர் அப் பெண்ணை நோக்கி, "நான் உன்னை ஒரு காரியம் கேட்கிறேன். ஒன்றும் மறைக்காதே" என்றார். அதற்கு அப் பெண், "என் தலைவராகிய அரசே, கேளும்" என்றாள்.

19 அப்போழுது அரசர், "இதற்கெல்லாம் யோவாப் உனக்குக் கையாளாய் இருக்கவில்லையா?" என்று கேட்டார். அதற்கு மறுமொழியாக அப்பெண் "என் தலவராகிய அரசே, உம் உயிர்மேல் ஆணை! அரசராகிய என் தலைவர் சொன்னதெல்லாம் சரியே. உம் ஊழியன் யோவாபே இதைச் செய்யும்படி என்னைப் பணித்தான். நான் சொன்ன இவ்வார்த்தைகளை எல்லாம் அவனே உம் அடியாளுக்குச் சொல்லிக் கொடுத்தான்.

20 நான் இவ்வார்த்தைகளை உவமையாய்ச் சொல்ல வேண்டும் என்று உம் ஊழியன் யோவாப் கட்டளையிட்டான். ஆயினும் இவ்வுலகில் உள்ளவற்றை எல்லாம் நீர் அறிந்திருக்கிறீரே! ஏனெனில், என் தலைவராகிய அரசே, கடவுளின் தூதனைப் போல் நீர் ஞானம் நிறைந்தவராய் இருக்கிறீர்" என்றாள்.

21 பிறகு அரசர் யோவாபைப் பார்த்து, "இதோ, என் கோபம் தீர்ந்து போயிற்று. நீ கேட்டபடியே செய்கிறேன். நீ போய் என் மகன் அப்சலோமை அழைத்துக் கொண்டு வா" என்றார்.

22 அப்பொழுது யோவாப் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கி அரசரைப் போற்றி வாழ்த்தினான். பிறகு தாவீதை நோக்கி, "என் தலைவராகிய அரசே, நீர் உன் ஊழியனுடைய வார்த்தையைக் கேட்டதினால் உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று நான் இன்று அறிந்து கொண்டேன்" என்றான்.

23 பின்பு யோவாப் எழுந்து ஜெஸ்சூருக்குப் போய் அப்சலோமை யெருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தான்.

24 ஆனால் அரசர், "அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் என் முகத்தில் விழிக்க வேண்டாம்" என்று சொன்னார். எனவே அப்சலோம் அரசரின் முகத்தைப் பாராமலே தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றான்.

25 இஸ்ராயேலருள் அப்சலோமைப் போல் அழகு வாய்ந்தவன் ஒருவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவன்பால் ஒரு குறையும் இல்லை.

26 அவனுடைய முடி அவன் தலைக்கு அதிகப் பாரமாயிருந்ததினால், ஆண்டு தோறும் அதைக் கத்தரிக்க வேண்டியதாயிருக்கும். கத்தரிக்கும் போது அவன் தலைமயிர் அரச நிறையின்படி இருநூறு சீக்கல் நிறை உள்ளதாய் இருக்கும்.

27 அப்சலோமுக்கு மூன்று புதல்வரும், தாமார் என்ற பேரழகியான ஒரு மகளும் இருந்தனர்.

28 அப்சலோம் அரசரின் முகத்தைக் காணாமலே ஈராண்டுக் காலமாய் யெருசலேமில் வாழ்ந்து வந்தான்.

29 இறுதியில் அவன் யோவாபுக்கு ஆள் அனுப்பி அரசரிடம் போய்ப் பேசும்படி தன்னிடம் வரச் சொன்னான். யோவாபோ அவனிடம் வர விரும்பவில்லை. அப்சலோம் மறு முறையும் அவனைக் கூப்பிட ஆள் அனுப்பினதற்கு, அவன், "இல்லை, வரமாட்டேன்" என்று பதில் கூறி அனுப்பி விட்டான்.

30 அப்பொழுது அப்சலோம் தன் ஊழியரைப் பார்த்து, "என் வயலுக்கு அருகே யோவாபின் நிலம் இருப்பதும், அதில் வாற்கோதுமை விளைந்திருக்கிறதும் உங்களுக்குத் தெரியுமே. நீங்கள் போய் அதைத் தீக்கு இரையாக்குங்கள்" என்றான். அப்படியே அவர்கள் புறப்பட்டுப் போய்ப் பயிர்களைத் தீக்கு இரையாக்கினர். யோவாபின் வேலைக்காரரோ தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு தலைவரிடம் வந்து, "அப்சலோமின் ஊழியர் உம் நிலத்தின் ஒரு பகுதியைத் தீக்கு இரையாக்கி விட்டனர்" என்று கூறினர்.

31 இதைக் கேட்ட யோவாப் எழுந்து அப்சலோமின் வீட்டிற்குள் சென்று, "உன் ஊழியர் என் நிலத்துப் பயிரைத் தீக்கு இரையாக்கியது ஏன்?" என்று கேட்டான்.

32 அப்சலோம் யோவாபை நோக்கி, "ஜெஸ்சூரிலிருந்து நான் ஏன் வந்தேன்? 'அங்கு இருப்பதே எனக்கு நலம்' என்று நீர் அரசரிடம் சொல்லும்படி உம்மைக் கேட்க ஆள் அனுப்பினேன். ஆகையால், நான் அரசரின் முகத்தைப் பார்க்கும்படி நீர் செய்யவேண்டும் என்று உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். அரசர் என் குற்றத்தை மறக்காது இருந்தால், அவர் என்னைக் கொன்று போடட்டும்" என்று சொன்னான்.

33 பின்னர் யோவாப் அரசரிடம் சென்று எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தான். அப்போது அப்சலோம் அழைக்கப்பட, அவனும் அரசரிடம் வந்து அவர்முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினான். அரசர் அப்சலோமை முத்தமிட்டார்.

அதிகாரம் 15

1 பின்னர் அப்சலோம் ஒரு தேரையும், குதிரை வீரர்களையும், தனக்கு முன் செல்லத்தக்க ஐம்பது சேவகர்களையும் தனக்குச் சேர்த்துக் கொண்டான்.

2 அன்றியும் அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாயிலில் நின்று கொண்டு எவனாவது தனக்குள்ள வழக்கை முன்னிட்டு அரசரிடம் முடிவு கேட்க வருவதைக் கண்டால், அவனை அழைத்து, "உனக்கு எந்த ஊர்?" என்று கேட்பான். அவன், "உம் அடியான் இஸ்ராயேலின் இன்ன கோத்திரத்தான்" என்று சொல்லுவான்.

3 அப்போது அப்சலோம் அவனைப் பார்த்து, "உன் வழக்கு நல்லதும் நியாயமானதுமே என எனக்குப் படுகிறது. ஆனால் உன் வழக்கை விசாரிக்க அரசரால் ஏற்படுத்தப் பட்டவர் ஒருவரும் இல்லை" என்று சொன்ன பின்,

4 நீதி வேண்டுவோர் அனைவரும் என்னிடம் வரவும், நான் அவர்களுக்கு நீதி வழங்கவும் என்னை நாட்டில் நீதிபதியாக நியமிப்பவர் யாரோ!" என்று சொல்வான்.

5 அதுவுமன்றி எவனாவது அவனிடம் வந்து வணங்கினால், அப்சலோம் தன் கையை நீட்டி அவனைக் கட்டி அணைத்து முத்தமிடுவான்.

6 அவ்விதமே அப்சலோம் அரசரிடம் நீதிகோரி வரும் இஸ்ராயேலர் அனைவர்க்கும் செய்து, இஸ்ராயேலரின் இதயங்களைக் கவர்ந்து வந்தான்.

7 ஆனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பின் அப்சலோம் தாவீது அரசரை நோக்கி, "நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்றும் பொருட்டு எபிரோனுக்குப் போக எனக்கு அனுமதி அளியும்.

8 ஏனெனில் உம் அடியான் சீரியா நாட்டின் ஜெஸ்சூரில் இருந்த போது ஆண்டவரை நோக்கி, 'ஆண்டவர் என்னை யெருசலேமுக்குத் திரும்பிவர அருள் செய்தால் நான் ஆண்டவருக்குப் பலியிடுவேன்' என்று நேர்ச்சை செய்து கொண்டேன்" என்றான்.

9 தாவீது அரசர் அவனை நோக்கி, "சமாதானமாய் போ" என்றார். அவன் எழுந்து எபிரோனுக்குச் சொன்றான்.

10 அப்சலோம் இஸ்ராயேலின் கோத்திரங்களுக்கெல்லாம் இரகசியமாகத் தூதரை அனுப்பி, "நீங்கள் எக்காளம் முழங்கக் கேட்டவுடன், 'அப்சலோம் எபிரோனின் அரசன்' என்று கூறுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தான்.

11 யெருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த இருநூறுபேர் அப்சலோமுடன் சென்றார்கள். அவர்கள் வஞ்சமில்லாமலும் ஒன்றும் அறியாதவருமாய் இருந்தனர்.

12 மறுபடியும் அப்சலோம் கிலோனிலிருந்து தாவீதுடைய ஆலோசனைக்காரனான அக்கித்தோப்பேல் என்ற கிலோனியனை அழைத்துவரச் செய்தான். சதித்திட்டமும் வலுப்பெற்றது; அப்சலோமுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

13 அப்போது ஒரு தூதன் தாவீதிடம் வந்து, "இஸ்ராயேலர் அனைவரும் இப்போது முழுமனத்தோடு அப்சலோமைப் பின்பற்றி வருகின்றனர்" என்றான்.

14 இதைக் கேட்டுத் தாவீது யெருசலேமில் தம்முடன் இருந்த தம் ஏவலர்களை நோக்கி, "எழுந்திருங்கள், நாம் தப்பி ஓடுவோம்; இல்லாவிடில் நாம் அப்சலோமின் கைக்குத் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள். நாம் புறப்படுவதற்குமுன் ஒருவேளை அவன் வருவானாகில் நம்மையும் கொன்று நகரையும் வாளால் அழித்து விடுவான்" என்றார்.

15 அரசரின் ஏவலர்கள் அவரைப் பார்த்து, "எம் தலைவராம் அரசர் இடும் கட்டளைகளை எல்லாம் அடியோர் செய்ய இதோ தயாராய் இருக்கிறோம்" என்று மறுமொழி சொன்னார்கள்.

16 அதன்படி அரசரும் அவர் வீட்டார் அனைவரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள். அரசர் வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டிகள் பத்துப்பேரை இருக்கச் செய்தார்.

17 அரசரும் இஸ்ராயேலர் அனைவரும் கால்நடையாய்ப் புறப்பட்டு வீட்டினின்று வெகுதூரம் சென்று அங்குத் தங்கினார்கள்.

18 அவருடைய ஊழியர் எல்லாரும் அவருக்குப் பக்கத்தே நடந்து போனார்கள். கெரேத்தியருடையவும் பெலாத்தியருடையவும் சேனைகளும், கேத்திலிருந்து வந்திருந்த ஆற்றல் வாய்ந்த அறுநூறு கேத்தைய வீரர்களும் அரசருக்குமுன் நடந்து போனார்கள்.

19 அப்போது அரசர் கேத்தையனான எத்தாயியை நோக்கி, "நீ எங்களோடு வருவது ஏன்? நீ திரும்பி போய் அரசரோடு தங்கி இரு. உன் சொந்த நாட்டை விட்டு வந்துள்ள அகதி அன்றோ நீ?

20 நேற்றுத் தானே நீ இங்கு வந்தாய்? இன்று எங்களுடன் வரும்படி நான் உன்னை வற்புறுத்துவது முறையா? நான் மட்டும் போகவேண்டிய இடத்திற்குப் போவேன். நீயும் உன் சகோதரரும் திரும்பிப்போங்கள்; நீ ஊக்கமும் பிரமாணிக்கமுமுள்ளவனுமாய் இருந்தால், ஆண்டவரும் உனக்கு இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் காட்டுவார்" என்றார்.

21 எத்தாயி அரசரை நோக்கி, "ஆண்டவர்மேல் ஆணை! என் தலைவராகிய அரசரின் உயிர்மேல் ஆணை! என் தலைவரான அரசே, நீர் எங்கு இருப்பீரோ அங்கே உம் அடியானாகிய நானும் இருப்பேன்; வாழ்ந்தாலும் மடிந்தாலும் இங்கேயே இருப்பேன்" என்று கூறினான்.

22 அதைக் கேட்டு தாவீது எத்தாயியை நோக்கி, "நீ என்னோடு வா" என்றார். அப்படியே கேத்தையனாகிய எத்தாயியும், அவனோடு இருந்த வீரர்களும் மற்ற மக்களும் நடந்து போனார்கள்.

23 அங்கு இருந்தோர் அனைவரும் கூக்குரலிட்டு அழுது கொண்டிருக்க எல்லாரும் புறப்பட்டனர். அரசரும் நடந்து கெதிரோன் ஆற்றைக் கடந்தார். பிறகு மக்கள் எல்லாரும் பாலைவனத்திற்குப் போகும் வழியே சென்றார்கள்.

24 அபியாத்தாரும் அரசரைப் பின் தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து சாதோக் என்ற குருவும் அவரோடு லேவியரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கி வந்தனர். நகரினின்று புறப்பட்டு வந்த மக்கள் அனைவரும் கடந்து தீரும் வரை பேழையை இறக்கி வைத்தார்கள்.

25 அப்போது அரசர் சாதோக்கைப் பார்த்து, "கடவுட் பேழையை நகருக்குத் திரும்பக் கொண்டு போங்கள். ஆண்டவருடைய கண்களில் எனக்குக் கருணை கிடைக்குமாகில், அவர் என்னைத் திரும்ப வரச் செய்து கடவுட் பேழையையும் கடவுள் வாழும் இடத்தையும் காணும் பேற்றை எனக்கு அளிப்பார்.

26 ஆனால் அவர், 'உன் மேல் எனக்குப் பிரியமில்லை' என்பாராகில், இதோ நான் தயாராயிருக்கிறேன். அவர் தம்முடைய கண்களுக்கு நல்லது என்று பட்டதை எனக்குச் செய்வாராக" என்றார்.

27 பிறகு அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, "ஓ திருக்காட்சியாளரே, நீர் சமாதானமாய் நகருக்குத் திரும்பிப் போம். உன் மகன் அக்கிமாசும், அபியாத்தாரின் மகன் யோனத்தாசும் ஆகிய உங்கள் மக்கள் இருவரும் உங்களோடு இருக்கக்கடவார்கள்.

28 எனக்குச் செய்தி அனுப்புங்கள். இதோ நான் பாலைவனத்தின் வெளிகளிலே மறைந்திருப்பேன்" என்றார்.

29 அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் கடவுட் பேழையை யெருசலேமுக்குக் கொண்டு சென்று அங்குத் தங்கினார்கள்.

30 ஆனால் தாவீது மூடிய தலையுடன் அழுது கொண்டு வெறுங்காலாய் ஒலிவ மலைமேல் ஏறிச் செல்ல, அவரோடு இருந்த மக்கள் அனைவரும் அவ்விதமே தலையை மூடிகொண்டு அழுதவராய் நடப்பார்கள்.

31 அக்கித்தோபேலும் அப்சலோமோடு சேர்ந்து கொண்டு சதி செய்தான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்ட போது தாவீது, "ஆண்டவரே, அக்கித்தோபேலின் திட்டத்தை மடமையாக மாற்றியருளும்" என்று மன்றாடினார்.

32 ஆண்டவரை வழிபட வேண்டிய மலையின் உச்சிக்குத் தாவீது ஏறிப்போகையில், இதோ கிழிந்த ஆடையுடனும் புழுதி படிந்த தலையுடனும் அரக்கித் ஊரானான கூசாயி அவரை எதிர் கொண்டு வந்தான்.

33 தாவீது அவனைப் பார்த்து, "நீ என்னுடன் வருவது எனக்குப் பாரமாய் இருக்குமே;

34 மாறாக நீ நகருக்குத் திரும்பிப் போய், அப்சலோமை நோக்கி: 'அரசே, நானும் உம்முடைய ஊழியன்தான். முன்பு நான் உம் தந்தைக்கு ஊழியனாய் இருந்தது போல் இப்போது உமக்கும் ஊழியனாய் இருப்பேன்' என்று சொல்வாயாகில், நீ அக்கித்தோபேலின் திட்டத்தை அழித்து விடுவாய்.

35 எப்படியெனில், உன்னோடு சாதோக், அபியாத்தார் என்ற குருக்கள் இருக்கிறார்களே. அரண்மனையைப் பற்றி நீ கேள்வியுறுவது அனைத்தையும் குருக்களாகிய சாதோக், அபியத்தார் என்பவர்களுக்கு நீ தெரிவி.

36 அன்றியும், அங்கே அவர்களோடு இருக்கும் சாதோக்கின் மகன் அக்கிமாசு, அபியத்தாரின் மகன் யோனத்தாசு மூலமாய் நீங்கள் கேட்ட செய்திகள் அனைத்தையும் என்னிடம் அனுப்புங்கள்" என்றார்.

37 அப்படியே தாவீதின் நண்பன் கூசாயி நகருக்குத் திரும்பிப் போனான். அப்சலோமும் யெருசலேமுக்கு வந்தான்.

அதிகாரம் 16

1 தாவீது மலையின் உச்சியைக் கடந்து சற்று தூரம் சென்ற போது, மிபிபோசேத்தின் ஊழியன் சீபா இரண்டு கழுதைகளுடன் அவரைச் சந்தித்தான். கழுதைகள் இருநூறு அப்பங்களையும், வற்றலான நூறு அத்திப்பழக் குலைகளையும் ஒரு துருத்தி திராட்சை இரசத்தையும் சுமந்து நின்றன.

2 அப்போது அரசர் சீபாவை நோக்கி, "இவை யாருக்கு?" என, சீபா, "கழுதைகள் அரசரின் வீட்டார் ஏறுவதற்கும், அப்பங்களும் அத்திப்பழங்களும் உம் ஊழியர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சை இரசம் பாலைவனத்தில் களைத்துப் போய் இருப்போர் குடிப்பதற்கும் தான்" என்று மறுமொழி சொன்னான்.

3 அதைக் கேட்டு அரசர், "உன் தலைவனின் மகன் எங்கே?" என்று கேட்க, சீபா, "யெருசலேமில் இருக்கிறார். 'இன்று இஸ்ராயேல் வீட்டார் என் தந்தையின் அரசை எனக்குக் கொடுப்பர்' என்று கூறுகிறார்" என்றான்.

4 அப்போது அரசர் சீபாவை நோக்கி, "மிபிபோசேத்தின் உடைமைகள் எல்லாம் உன் உடைமைகள் ஆயிற்று" என சீபா, "என் தலைவரான அரசே, உம் முன்னிலையில் நான் தயவு பெற வேண்டுகிறேன்" என்றான்.

5 பிறகு தாவீது பாகூரிம் வரை வந்தார். அந்நேரத்தில் சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த கேராவின் மகனான செமேயி என்ற பெயருடைய ஒரு மனிதன் அங்கிருந்து புறப்பட்டு வசைமொழி கூறியவண்ணமாய் நடந்து வந்தான்.

6 எல்லா மக்களும் வீரர்களும் தாவீதின் வலப்புறமும் இடப்புறமுமாக நடந்து போகையில், அவன் தாவீதையும், அவருடைய எல்லா ஊழியர்களையும் கல்லால் எறியத் தொடங்கினான்.

7 செமேயி அரசரைப் பழித்துப் பேசி, "இரத்த வெறியனே, அப்பாலே போ! பெலியாலின் மனிதா, தொலைந்து போ!

8 சவுலின் அரியணையை நீ அபகரித்துக் கொண்டதினால் அன்றோ, ஆண்டவர் சவுலின் வீட்டாருடைய இரத்தப் பழியை உன் மேல் வரச் செய்து, உன் அரசை உன் மகன் அப்சலோமுக்குக் கொடுத்திருக்கிறார்? இதோ, உன் தீச் செயல்களின் பாரம் உன்னை அழுத்துவது முறையே. ஏனெனில், நீ ஓர் இரத்த வெறியன்" என்று அரசரைத் திட்டினான்.

9 அப்போது சார்வியாவின் மகன் அபிசாயி அரசரைப் பார்த்து, "இந்தச் செத்த நாய் என் தலைவரான அரசரைப் பழிப்பது ஏன்? நான் போய் அவன் தலையைக் கொய்து வருகிறேன்" என்றான்.

10 அதற்கு அரசர், "சார்வியாவின் புதல்வர்களே, உங்களுக்கும் எனக்கும் என்ன? அவன் என்னைப் பழிக்கட்டும். தாவீதைப் பழிக்க வேண்டும் என்று ஆண்டவர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்க, 'அவன் இவ்வாறு செய்வானேன்?' என்று சொல்லத் துணிகிறவன் யார்?" என்றார்.

11 மீண்டும் அரசர் அபிசாயியையும் தம் ஊழியர்கள் அனைவரையும் நோக்கி, "இதோ, எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடும் போது, இந்த ஜெமினியின் மகன் அதிகமாய்ச் செய்தாலும் வியப்புற வேண்டாம். ஆண்டவருடைய கட்டளையின்படி அவன் என்னைப் பழிக்கட்டும்; தடை செய்யாதீர்கள்.

12 ஒருவேளை ஆண்டவர் நான் படும் இன்னல்களைக் கண்ணோக்கி இன்றைய இச் சாபத்துக்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார்", என்றார்.

13 அதன்படியே தாவீதும் அவரோடு இருந்த அவர் தோழர்களும் தம் வழியே நடந்து போனார்கள். செமேயியோ மலையுச்சியிலிருந்து அரசரைப் பின்தொடர்ந்து அவரைப் பழித்துக் கொண்டும், அவர் மேல் கற்களை எறிந்து கொண்டும், மண்ணை வாரித் தூற்றிக் கொண்டும் நடந்து வருவான்.

14 அரசரும் அவரோடு இருந்த எல்லா மக்களும் களைப்புற்றவர்களாய் அவ்விடத்தில் தங்கி இளைப்பாறினார்கள்.

15 அப்சலோமும் அவனோடு இருந்த எல்லா மக்களும் யெருசலேமில் நுழைந்தார்கள். அக்கித்தோபேலும் அவனுடன் நுழைந்தான்.

16 தாவீதின் நண்பனும் அரக்கித்தனுமான கூசாயி அப்சலோமிடம் வந்து அவனை நோக்கி, "அரசே வாழ்க! அரசே வாழ்க!" என்று அவனை வணங்கினான்.

17 அப்சலோம் அவனைப் பார்த்து, "உன் நண்பன் மேல் உனக்கு இருக்கும் பரிவு இவ்வளவு தானோ? உன் நண்பனோடு நீயும் ஏன் போகவில்லை? " என்று கேட்டான்.

18 கூசாயி அப்சலோமை நோக்கி, "அப்படியன்று; ஆண்டவரும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் எவரைத் தேர்ந்து கொண்டார்களோ, அவரோடு நான் இருக்க வேண்டும்; அவரோடு தான் இருப்பேன்.

19 இன்னும் ஒரு வார்த்தை: இப்போது நான் யாரிடம் பணிபுரிய வந்தேன்? அரசரின் மகனிடம் தானே! ஆம், உம் தந்தைக்கு எப்படிப் பணிபுரிந்து வந்தேனோ, அப்படியே உமக்கும் பணிபுரிவேன்" என்று மறுமொழி சொன்னான்.

20 அப்போது அப்சலோம் அக்கித்தோபேலை நோக்கி, "நாம் செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்" என்றான்.

21 அதற்கு அக்கித்தோபேல் அப்சலோமிடம், "வீட்டைக் காக்க உம் தந்தை விட்டுச் சென்ற வைப்பாட்டிகளோடு நீர் படுக்கவேண்டும். நீர் உம் தந்தைதையை இழிவுபடுத்தின செய்தியை இஸ்ராயேலர் எல்லாரும் கேள்விப்படும் போது உம்முடன் இருக்க மனந்துணிவார்கள்" என்றான்.

22 அப்படியே அப்சலோமுக்கு மாடியின் மேல் ஒரு கூடாரத்தை அமைத்தார்கள். அங்கே அப்சலோம் இஸ்ராயேலர் யாவரும் பார்க்கத் தன் தந்தையின் வைப்பாட்டிகளோடு படுத்தான்.

23 அந்நாட்களில் அக்கித்தோபேல் கூறின அறிவுரை எல்லாம் கடவுளிடமிருந்து பெற்ற அறிவுரை போல் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அக்கித்தோபேல் கூறிய அறிவுரை அனைத்தையும் தாவீதும் அப்சலோமும் இவ்வாறே மதித்து வந்தனர்.

அதிகாரம் 17

1 அப்போது அக்கித்தோபேல் அப்சலோமை நேக்கி, "நான் பன்னீராயிரம் மனிதரைத் தேர்ந்து கொண்டு இன்றிரவே புறப்பட்டுத் தாவீதைப் பின் தொடர்வேன்.

2 இளைத்துக் களைத்துக் கைதளர்ந்துள்ள அவர் மேல் நான் பாய்ந்து, அவருடன் இருக்கிற மக்கள் அனைவரும் அவரை விட்டு ஓடிப்போகச் செய்வேன். பின்னர் அவரை வெட்டி வீழ்த்துவேன்.

3 பிறகு ஒரு மனிதன் திரும்பி வருவது போல் நான் மக்கள் எல்லாரையும் கொண்டு வருவேன். நீர் அவர் ஒருவரையே தேடுகிறீர் அன்றோ? அவ்விதம் செய்தால் மக்கள் எல்லாரும் சமாதானமாய் இருப்பார்கள்" என்றான்.

4 அவனது இக்கூற்று அப்சலோமுக்கும் இஸ்ராயேலின் பெரியோர் அனைவருக்கும் பிடித்திருந்தது.

5 ஆயினும் அப்சலோம், "அரக்கித்தனான கூசாயியை வரச் சொல்லுங்கள்; அவன் வாய்மொழியையும் கேட்போம்" என்றான்.

6 கூசாயி அப்சலோமிடம் வந்த போது, அப்சலோம் அவனைப் பார்த்து, "அக்கித்தோபேல் இவ்வாறு கூறியிருக்கிறாரே, நாம் அவ்வாறு செய்யலாமா? நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டான்.

7 கூசாயி அப்சலோமை நோக்கி, "அக்கித்தோபேல் இம்முறை சொன்ன ஆலோசனை நல்லதன்று" என்றான்.

8 மீண்டும் கூசாயி, "உம் தந்தையும் அவருடன் இருக்கிற மனிதரும் மிக்க வல்லமை வாய்ந்தவர்கள் என்றும், தன் குட்டிகளைப் பறிகொடுத்த பெண் கரடி காட்டைப் பாழாக்கி விடுவதுபோல் அவர்கள் அவ்வளவு வயிற்றெரிச்சல் கொண்டிருக்கிறார்கள் என்றும், சிறப்பாக உம் தந்தை போரில் சிறந்தவர் என்றும், அவர் மக்களோடு தங்குவதில்லை என்றும் நீர் அறிவீரே.

9 அவர் இப்பொழுது ஒரு குகையிலாவது தனக்குப் பிடித்தமான வேறெந்த இடத்திலாவது ஒளிந்திருப்பார். நம் வீரர்களில் யாரேனும் ஆரம்பத்திலேயே அடிபட்டு விழுந்தால் அதைக் கேட்கிற யாவரும் என்ன சொல்வார்கள்? அப்சலோமைப் பின்செல்லும் மக்களிடயே வீழ்ச்சி உண்டாயிற்று என்று அன்றோ சொல்லுவார்கள்?

10 அப்போது ஏறு போன்ற வீரர்கள் முதலாய்த் திடுக்கிட்டு அஞ்சி நடுங்குவார்கள். ஏனெனில் உம் தந்தை வலிமை வாய்ந்தவர் என்றும், அவரோடு இருக்கிறவர்கள் அனைவரும் ஆற்றல் படைத்தவர்கள் என்றும் இஸ்ராயேலர் எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.

11 ஆதலால் இது நல்ல யோசனை என்று எனக்குத் தோன்றுகிறது: அதாவது, தான் முதல் பெர்சபே வரை உள்ள கடற்கரை மணலைப்போல் இஸ்ராயேலர் எல்லாரும் முதன் முதல் உம்மிடம் திரண்டு வரட்டும்; நீர் அவர்களோடு இருக்க வேண்டும்.

12 அப்போது தாவீது எந்த இடத்தில் இருந்தாலும் சரி, நாம் அனைவரும் போய், பனி பூமியின் மேல் பெய்வது போல், அவர் மேல் பாய்ந்து அவரோடு இருக்கிற மனிதரில் ஒருவரையும் விட்டுவையோம்.

13 அவர் ஏதாவது ஒரு நகருக்குள் நுழைய நேரிட்டால், இஸ்ராயேலர் எல்லாரும் கூடி அந்நகரின் மதிலைச் சுற்றிலும் கயிறுகளைப் போட்டு அதன் ஒரு கல்கூட அங்கே நிற்காதபடி அதை முழுவதும் இடித்து ஆற்றில் போடுவார்கள்" என்றான்.

14 அப்சலோமும் இஸ்ராயேல் மனிதர் அனைவரும், "அக்கித்தோபேலின் ஆலோசனையை விட அரக்கித்தனான கூசாயியுடைய இந்த ஆலோசனையே சிறந்தது" என்றனர். இவ்வாறு ஆண்டவர், அப்சலோமுக்குத் தீங்கு நேரிடும் படி, அக்கித்தோபேலின் பயனுள்ள ஆலோசனை எடுபடாது போகச் செய்தார்.

15 பின்னர் கூசாயி குருக்களாகிய சாதோக்கையும் அபியாத்தாரையும் நோக்கி, "இவ்வாறெல்லாம் அக்கித்தோபேல் அப்சலோமுக்கும் இஸ்ராயேலின் பெரியோர்களுக்கும் அறிவுரை கூறியிருக்கிறார்; அதற்கு மாறாக நான் இவ்வாறெல்லாம் சொல்லியிருக்கிறேன்.

16 இப்பொழுதாவது நீங்கள் விரைவாய்த் தாவீதுக்கு ஆள் அனுப்பி, 'நீர் இன்று இரவு பாலைவனத்தின் வெளிகளில் தங்க வேண்டாம்; உமக்கும் உம்மோடு இருக்கிற மக்கள் எல்லாருக்கும் தீங்கு நேரிடாதபடிக்கு நீர் தாமதஞ் செய்யாமல் அக்கரைக்குப் போக வேண்டும்' என்று சொல்லச் சொல்லுங்கள்" என்றான்.

17 அந்நேரத்தில் யோனத்தாசும் அக்கிமாசும் ரோகேல் நீரூற்றண்டையில் இருந்தார்கள். ஓர் ஊழியக்காரி போய் அவர்களிடம் அதைச் சொல்ல, அவர்கள் தாவீது அரசருக்கு அச்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுப் போனார்கள். ஏனெனில் யாரும் காணாமலே அவர்கள் நகரில் நுழைதல் வேண்டும்.

18 ஆனால் ஒரு சிறுவன் அவர்களைக் கண்டு அதை அப்சலோமுக்கு அறிவித்தான். அவர்களோ விரைந்து சென்று பாகூரிமில் இருந்த ஒரு மனிதன் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கே கிணறு ஒன்று முற்றத்தில் இருந்தது; அதில் இறங்கினார்கள்.

19 அப்பொழுது வீட்டுக்காரி ஒரு போர்வையை எடுத்துக் கிணற்று வாயில் மேல் விரித்து அதன் மேல் தானியங்களைக் காயவைப்பது போல் அவற்றைப் பரப்பி வைத்தாள். இவ்வாறு அவர்கள் மறைந்திருந்த இடம் ஒருவருக்கும் தெரியாமல் போனது.

20 அப்சலோமின் ஊழியர்கள் அவ்வீட்டிற்குள் வந்து அப்பெண்ணை நோக்கி, "அக்கிமாசும் யோனத்தாசும் எங்கே?" என்று கேட்டனர். அவர்களுக்கு அப்பெண், "அவர்கள் இங்கே வந்து சிறிது நீர் பருகி விட்டு விரைவாய் வெளியேறி விட்டனர்" என்றாள். இவர்கள் தேடியும் காணாது யெருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.

21 இவர்கள் போனபிறகு, அவர்கள் கிணற்றிலிருந்து மேலே ஏறிவந்து, தாவீது அரசரிடம் போய், "எழுந்து உடனே நதியைக் கடந்து போங்கள்; ஏனென்றால் அக்கித்தோபேல் தங்களுக்கு எதிராய் இவ்வாறெல்லாம் ஆலோசனை சொல்லி இருக்கிறான்" என்றார்கள்.

22 அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தார்கள். பொழுது விடியு முன் ஆற்றைக் கடக்காதவன் ஒருவனுமில்லை.

23 அக்கித்தோபேல் தான் கூறியபடி அவர்கள் நடக்கவில்லை என்று கண்டு, தன் கழுதைக்குச் சேணம் இட்டு அதன் மேலேறித் தன் ஊரிலிருக்கிற வீட்டுக்குப் போய் தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்கு படுத்தி விட்டு, நான்று கொண்டு மடிந்தான். அவன் தந்தையின் கல்லறையில் அவனைப் புதைத்தார்கள்.

24 தாவீது தம் பாளையத்திற்கு வந்து சேர்ந்தார். அப்சலோமோ இஸ்ராயேலின் எல்லா மனிதரோடும் யோர்தானைக் கடந்து சென்றான்.

25 அப்சலோம் யோவாபுக்கு பதிலாக அமாசாவைப் படைத் தலைவனாக ஏற்படுத்தினான். அமாசாவோ எஸ்ராயேலியனான எத்திரா என்றதொரு மனிதனுக்குப் பிறந்தவன். இவன் அபிகாயிலை மணந்திருந்தான். இவள் நாவாசின் மகளும் யோவாபைப் பெற்ற தாயாகிய சார்வியாவின் சகோதரியும் ஆவாள்.

26 இஸ்ராயேல் மக்களும் அப்சலோமும் காலாத் நாட்டில் பாளையம் இறங்கினார்கள்.

27 தாவீது கஸ்திரா என்ற பாளையத்தை அடைந்த போது, அம்மோன் புதல்வருடைய நாட்டின் இராப்பாத் ஊரானாகிய சோபி என்ற நாகாசின் மகனும், லோதேபார் ஊரானான மாகீர் என்ற அம்மியேலின் மகனும், ரோகிலிம் ஊரானும் காலாத் நாட்டானுமாகிய பெர்ஜலாயியும்,

28 தாவீதிடம் வந்து அவருக்கு மெத்தைகள், கம்பளங்கள், மண்பாண்டங்கள், கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம்,

29 மொச்சை, அவரை, சீசேர் பயறு, தேன், வெண்ணெய், ஆடுகள், கொழுத்த கன்றுகள் முதலியவற்றைக் காணிக்கையாய்க் கொடுத்தார்கள். அவர்கள் இவற்றை எல்லாம் தாவீதும் அவரோடு இருந்த மக்களும் உண்ணும்படி கொண்டு வந்திருந்தார்கள். ஏனெனில், அம் மக்கள் பாலைவனத்தில் களைத்துப் பசியும் தாகமுமாய் இருப்பார்கள் என்று அவர்கள் எண்ணியிருந்தனர்.

அதிகாரம் 18

1 அப்போது தாவீது தம்மோடு இருந்த மக்களைக் கணக்கிட்டு, அவர்களுக்குப் படைத் தலைவர்களையும் நூற்றுவர்த் தலைவர்களையும் ஏற்படுத்தினார்.

2 மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒன்றை யோவாபின் கையிலும், மற்றொன்றைச் சார்வியாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயியின் கையிலும், மூன்றாவதைக் கேத்தையனான எத்தாயியின் கையிலும் ஒப்படைத்தார். பிறகு தாவீது மக்களை நோக்கி, "இதோ நானும் உங்களோடு புறப்பட்டு வருகிறேன்" என்றார்.

3 அதற்கு மக்கள், "நீர் வர வேண்டாம். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடினாலும் அவர்கள் அதைப்பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள். எங்களில் பாதிப்பேர் மடிந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; நீர் ஒருவரே பதினாயிரம் பேருக்கு இணையாக மதிக்கப்படுகிறீர். ஆதலால் நீர் எங்களுக்கு உதவியாக நகரில் இருப்பதே சிறந்தது" என்று சொன்னார்கள்.

4 அரசர் அவர்களை நோக்கி, "உங்களுக்கு நல்லதெனத் தோன்றுகிறதைச் செய்வேன்" என்றார். அதன்படி அரசர் வாயில் அருகே நின்று கொண்டிருக்க, மக்கள் நூறு நூறாகவும் ஆயிரமாயிரமாகவும் புறப்பட்டுப் போனார்கள்.

5 அப்பொழுது அரசர் யோவாப், அபிசாயி, எத்தாயி ஆகியோரை நோக்கி, "என் மகன் அப்சலேமை என் பொருட்டு உயிரோடு காப்பாற்ற வேண்டும்" என்று கட்டளையிட்டார். அரசர் அப்சலோமைக் குறித்து இவ்வாறு கட்டளையிட்டதை மக்கள் எல்லாரும் கேட்டனர்.

6 பின்பு மக்கள் இஸ்ராயேலருக்கு எதிராகப் புறப்பட்டார்கள். எபிராயிமின் காட்டில் போர் நடந்தது.

7 அங்கே இஸ்ராயேல் மக்கள் தாவீதின் சேனையால் தோற்கடிக்கப்பட்டனர். அன்று பெரிய படுகொலை உண்டாயிற்று.

8 இருபதினாயிரம் பேர் கொலையுண்டனர். அந்தப் போர் நாடு எங்கும் பரவியது. அன்று வாளால் மடிந்தவர்களை விடக் காட்டால் அழிக்கப்பட்டவர்களே அதிகம்.

9 அப்போது நிகழ்ந்ததாவது: அப்சலோம் கோவேறு கழுதை மேல் ஏறி வரும் போது, தாவீதின் வீரர்களைக் கண்டான். அந்நேரத்தில் அக்கோவேறு கழுதை பெரிய, அடர்ந்ததொரு கருவாலி மரத்தின் அடியில் சென்று கொண்டிருக்கும் போது, அப்சலோமுடைய தலை அம்மரத்தில் சிக்கிக் கொண்டது. அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருக்க, அவன் ஏறி வந்த கோவேறு கழுதை அப்பால் ஓடிப் போயிற்று.

10 இதை ஒருவன் கண்டு, யோவாபிடம் சென்று, "கருவாலி மரத்தில் அப்சலோம் தொங்கக் கண்டேன்" என்று அறிவித்தான்.

11 யோவாப் தனக்குச் செய்தி கொண்டுவந்த அம் மனிதனை நோக்கி, "நீ அவனைக் கண்டாயே; பின் ஏன் அவனை வெட்டி வீழ்த்தவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிச் சீக்கல்களையும், ஓர் அரைக்கச்சையையும் கொடுத்திருப்பேனே" என்றான்.

12 அதற்கு அவன் யோவாபை நோக்கி, "நீர் ஆயிரம் வெள்ளிக் காசுகளை எனக்குக் கொடுத்தாலும், நான் அரசரின் மகன் மேல் கை வைக்க மாட்டேன்: 'என் பொருட்டு அப்சலோமை உயிரோடு காப்பாற்ற வேண்டும்' என்று அரசர் உமக்கும் அபிசாயியிக்கும் எத்தாயியிக்கும் கட்டளையிட்டதை நாங்கள் காதால் கேட்டோமே.

13 அன்றியும் நான் துணிந்து என் உயிருக்குக் கேடாக நடந்திருப்பேனாகில், அது பிறகு அரசருக்கு அறிவிக்கப்படுமன்றோ? நீரும் அதை மீறி நடக்கலாமோ?" என்றான்.

14 அதற்கு யோவாப், "உன் விருப்பப்படி நன் நடக்க போவதில்லை. உன் கண் முன்னேயே நான் சென்று அவனைக் கொன்று போடுகிறேன், பார்" என்று சொல்லி, தன் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்து வந்து அவற்றை அப்சலோமின் இதயத்தில் பாய்ச்சினான். குத்திய பின்னும் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோம் உயிரோடிருக்கக் கண்டு,

15 யோவாபின் பரிசையரான பத்து இளைஞர்கள் ஓடிவந்து அப்சலோமை வெட்டிக் கொன்றார்கள்.

16 பிறகு சாதாரண மக்களைக் கொல்லாமல் விடும் படி விரும்பி யோவாப் எக்காளம் ஊதி தப்பி ஓடின இஸ்ராயேலரை மக்கள் தொடாரதபடி செய்தான்.

17 பிறகு அவர்கள் அப்சலோமைத் தூக்கிச் சென்று காட்டிலுள்ள மிகவும் ஆழமான ஒரு பள்ளத்தில் எறிந்தனர். பின் அவன் மேல் கற்களைப் பெருமளவில் குவித்தனர். இஸ்ராயேலர் அனைவரும் தத்தம் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

18 சாகுமுன் அப்சலோம், "எனக்கு மகன் இல்லை. எனவே இது என் பெயரின் நினைவுச் சின்னமாய் இருக்கும்" என்று கூறி அரசரின் பள்ளத்தாக்கில் ஒரு தூணை நிறுத்தி அதற்குத் தன் பெயரை இட்டிருந்தான். அது இன்று வரை 'அப்சலோமின் கை' என்று அழைக்கப்பெற்று வருகிறது.

19 அப்பொழுது சாதோக்கின் மகன் அக்கிமாசு, "நான் அரசரிடம் சென்று ஆண்டவர் அவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார் என்று விரைவாய் அறிவிக்கப் போகிறேன்" என்றான்.

20 யோவாப் அவனை நோக்கி, "இன்று நீ ஒன்றும் அறிவிக்க வேண்டாம். வேறொரு நாள் அறிவிக்கலாம். அரசரின் மகன் இறந்ததால், இன்று நீ அதை அறிவிக்க நான் அனுமதியேன்" என்றான்.

21 பின்பு யோவாப் கூசாயியை நோக்கி, "நீ போய், கண்டவற்றை அரசருக்கு அறிவி" என்றான். கூசாயி யோவாபை வணங்கி, பின் விரைந்தான்.

22 அப்பொழுது சாதோக்கின் மகன் அக்கிமாசு மேலும் யோவாபை நோக்கி, "கூசாயிக்குப் பிறகே நானும் செல்லத் தடை என்ன?" என்றான். அதற்கு யோவாப், "மகனே, இது நல்ல செய்தியன்று. ஆதலால் நீ ஏன் அவசரப்பட வேண்டும்?" என்றான்.

23 அக்கிமாசு, "நான் போனால் என்ன?" என்க, யோவாப், "சரி, போ" என்றான். அதன் படியே அக்கிமாசு குறுக்கு வழியாய்ச் சென்று, கூசாயிக்கு முந்திப் போனான்.

24 தாவீது இரண்டு வாயில்களுக்கு இடையே உட்கார்ந்திருந்தார். ஆனால் நகர மதிலின் வாயிலுக்கு மேல் இருந்த காவலன் தன் கண்களை உயர்த்தி தனிமையாய் ஓடிவந்த ஒரு மனிதனைக் கண்டதும்,

25 அரசரைக் கூவி அழைத்து அவருக்கு அதை அறிவித்தான். அப்பொழுது அரசர், "அவன் தனியாய் வந்தால் அவன் கூறவிருப்பது நல்ல செய்தியாகத் தானே இருக்கும்" என்றார். பிறகு அவன் ஓடி வந்து கிட்ட நெருங்கும் போது,

26 காவலன் வேறெருவன் ஓடிவருவதைக் கண்டு, "அதோ இன்னும் ஒருவன் தனியே ஓடி வருகிறான்" என்று மேலிருந்து சப்தமிட்டுச் சொன்னான். அதற்கு அரசர், "அவன் கொண்டு வருவதும் நற்செய்தியே" என்றார்.

27 அன்றியும் காவலன், "முந்தினவனின் ஓட்டத்தைக் கவனித்துப் பார்த்தால் அவன் சாதோக்கின் மகன் அக்கிமாசு போல் தோன்றுகிறது" என்றான். அதற்கு அரசர் "அவன் நல்லவன்; நற்செய்தி சொல்ல வருகிறான்" என்றார்.

28 அக்கிமாசோ அரசரை நோக்கி, "அரசே வாழி!" என்ற கூவித் தரையில் முகம் குப்புற விழுந்து அரசரை வணங்கினான். "அரசராகிய என் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த மனிதரை முறியடித்த உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!" என்றான்.

29 அப்பொழுது அரசர், "என் மகன் கேட்டதற்கு, அக்கிமாசு, "பேரரசே! தங்கள் ஊழியன் யோவாப் அடியேனை அனுப்பின போது, ஒரு பெரும் குழப்பம் இருந்தது; அது தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது" என்றான்.

30 அப்போது அரசர், "நீ அங்கே போய் நில்" என்றார். அவன் அப்படியே போய் நின்று கொண்டிருக்கையில் கூசாயி அவர் கண்ணில் பட்டான்.

31 அவன் நெருங்கி வந்து, "என் தலைவராகிய அரசே, நான் நற்செய்தி கொண்டு வருகிறேன். அதாவது, ஆண்டவர் உமது பக்கத்திலிருந்து உமக்கு எதிராய் எழுந்த அனைவருடைய கைகளினின்றும் இன்று உம்மைக் காப்பாற்றினார்" என்றான்.

32 அப்பொழுது அரசர் கூசாயியை நோக்கி, "என் மகன் அப்சலோம் நலந்தானா?" என்று கேட்டார். கூசாயி, "அவனுக்கு நேரிட்டது போல் என் தலைவராகிய அரசரின் எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு எதிராய் எழும்பின யாவருக்கும் நிகழ்வதாக!" என்று மறுமொழி சொன்னான்.

33 அதைக் கேட்டு அரசர் மிகவும் துயருற்று, மேல் மாடியில் இருந்த தம் அறைக்குச் சென்று அழுதார். அவர் ஏறிப்போகையில், "என் மகன் அப்சலோம்! அப்சலோம், என் மகனே! உனக்குப் பதிலாக நான் சாவேன். என் மகனே, அப்சலோம்!" என்று புலம்பி அழுதார்.

அதிகாரம் 19

1 அரசர் தம் மகனைக் குறித்து அழுகிறார்" என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.

2 அரசர் தம் மகனுக்காகப் புலம்புகிறார் என்ற செய்தியை அன்று மக்கள் கேள்விப்பட்டதின் பொருட்டு மக்கள் அனைவர்க்கும் அன்றைய வெற்றி துக்கமானதாக மாறிப்போறிற்று.

3 போரில் புறமுதுகு காட்டி ஓடும் வீரர்கள் போன்று மக்களும் அன்று நகருக்குத் திரும்பினார்கள்.

4 அரசர் தம் தலையை மூடிக்கொண்டு உரத்த சத்தமாய், "என் மகனே! அப்சலோம், என் மகனே, மகனே!" என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

5 அப்பொழுது யோவாப் வீட்டினுள் சென்று, அரசரை நோக்கி, "இன்று உமது உயிரையும், உம் புதல்வர் புதல்வியரின் உயிரையும், உம் மனைவியர் வைப்பாட்டிகளின் உயிரையும் காப்பாற்றிய உம் ஊழியர்கள் எல்லாரையும் வெட்கப்படுத்தி முகம் நாணச் செய்தீரே.

6 நீர் உம்மைப் பகைக்கிறவர்களுக்கு அன்பு செய்து, உமக்கு அன்பு செய்கிறவர்களைப் பகைக்கிறீரே; உம் படைத்தலைவர்களையும் ஏவலர்களையும் நீர் பொருட்படுத்துவதில்லை என்று இன்று காட்டிவிட்டீரே! இன்று அப்சலோம் வாழ நாங்கள் அனைவரும் மடிந்திருந்தாலும் அதுவே உம் மனத்திற்குப் பிடித்திருந்திருக்கும் என்று நான் இப்போது அறிந்து கொண்டேன்.

7 ஆதலால் நீர் எழுந்து வெளியே வந்து உம் ஊழியர்களோடு பேசி அவர்களுக்கு மனநிறைவு அளிக்க வேண்டும். இன்றேல் இன்றிரவே ஒருவன் கூட உம்மோடு இராது எல்லாரும் உம்மை விட்டுப் போவார்கள் என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். அப்பொது உம் இளமை முதல் இதுவரை உமக்கு நேரிட்ட எல்லாத் தீமைகளையும் விட இது உமக்கு அதிகத் தீமை பயப்பதாய் இருக்குமே" என்றான்.

8 அதைக் கேட்ட அரசர் எழுந்து வாயிலில் அமர்ந்தார். "அரசர் வாயிலில் அமர்ந்திருக்கிறார்" என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படவே, மக்கள் திரள் திரளாய் அரசர் முன்னிலையில் வந்து கூடினார்கள். இஸ்ராயேல் மனிதர்களோ தத்தம் கூடாரங்களுக்கு ஓடினார்கள்.

9 இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்து, "எங்கள் எதிரிகளிடமிருந்தும் பிலிஸ்தியரின் கையிலிருந்தும் எங்களை மீட்ட அரசரே இப்பொழுது அப்சலோமைக் குறித்து நாட்டை விட்டு ஓடி விட்டாரே!

10 நாங்கள் எங்கள் அரசராய் இருக்கும்படி அபிஷுகம் செய்து ஏற்படுத்தின அப்சலோம் போர்க்களத்தில் உயிர் இழந்தாரே. அப்போது அரசரைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் வாளாயிருப்பதேன்?" என்று கூறி வந்தார்கள்.

11 இஸ்ராயேலர் அனைவரும் பேசின பேச்சு தம் வீட்டில் இருந்த அரசரின் காதுகளுக்கு எட்டவே, அரசர் குருக்களான சாதோக், அபியாத்தாரிடம் ஆள் அனுப்பி, "நீங்கள் போய் யூதாவின் மூப்பரோடு பேசிச் சொல்ல வேண்டியதாவது: 'அரசரைத் தம் வீட்டுக்குத் திரும்ப அழைத்து வருவதில் நீங்கள் கடையராய் இருக்கிறது ஏன்?

12 நீங்களல்லோ என் சகோதரரும் என் எலும்பும் என் தசையுமாய் இருக்கிறீர்கள்? அரசரை அழைத்து வர மற்ற எல்லாரையும் விடப் பிந்தி வரலாமா?' என்று சொல்லுங்கள்.

13 பிறகு நீங்கள் அமாசாவையும் பார்த்து: 'நீ என் எலும்பும் என் தசையுமாய் இருக்கவில்லையா? நீ யோவாபுக்குப் பதிலாக என் முன்னிலையில் எந்நாளும் படைத்தலைவனாய் இராவிட்டால் கடவுள் அதற்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பார்' என்று சொல்லுங்கள்" என்றார்.

14 இப்படி அவர் யூதா மனிதர் அனைவரின் மனத்தையும், ஒரே மனிதனுடைய மனத்தைப்போல் இணங்கச் செய்ததனால், அவர்கள், "நீர் உம் எல்லா ஊழியர்களோடும் வாரும்" என்று அரசருக்குச் சொல்லி அனுப்பினார்கள்.

15 அரசர் திரும்பி யோர்தான் வரை நடந்து வந்தார். யூதா மக்கள் அனைவரும் கல்கலா வரை வந்து அரசரைச் சந்தித்த பின் அவர் யோர்தானைக் கடக்கச் செய்தனர்.

16 பாகூரின் ஊரானான ஜெமினி மகன் கோரவின் புதல்வனான செமேயி என்பவனும் விரைந்து யூதா மனிதரோடு தாவீது அரசரைச் சந்திக்கச் சென்றான்.

17 அவனோடு பெஞ்சமின் கோத்திரத்தாரில் ஆயிரம் மனிதரும், சவுலின் வீட்டு வேலைக்காரன் சீபாவும், அவன் புதல்வர் பதினைவரும், இருபது ஊழியர்களும் இருந்தனர். அவர்கள் அரசர் வருமுன்பே யோர்தானை வந்தடைந்து, துறைவழியாக ஆற்றைக் கடந்து சென்று,

18 அரச குடும்பத்தினரை அக்கரைக்குக் கொண்டு சேர்த்ததோடு அவர் கட்டளையிட்டவற்றையும் செய்தார். அரசர் யோர்தானுக்கு இக்கரையில் வந்து சேர்ந்த பின்பு, கேராவின் மகன் செமேயி அரசர் முன் நெடுங்கிடையாய் விழுந்து,

19 அவரை நோக்கி, "என் தலைவரே, நான் செய்த கொடுமையை என் மேல் சுமத்த வேண்டாம். நீர் யெருசலேமிலிருந்து புறப்பட்டு வந்த போது, என் தலைவராகிய அரசருக்கு அடியேன் செய்த துரோகத்தை ஒரு பொருட்டாக எண்ணவும் உமது மனத்தில் வைக்கவும் வேண்டாம், அரசே.

20 அடியேன் செய்த குற்றத்தை அறிந்திருக்கிறேன். எனவே அரசராகிய என் தலைவரை எதிர் கொண்டுவர சூசை வீட்டார் அனைவருக்குள்ளே, நான் முதல்வனாக இன்று வந்தேன்" என்றான்.

21 சார்வியாவின் மகன் அபிசாயி அதற்கு மறுமொழியாக, "ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரைச் செமேயி பழித்தான். இப்போது தான் சொன்ன வார்த்தைகளின் பொருட்டு அவன் கொல்லப்படுவது நீதியன்றோ?" என்றான்.

22 அதற்கு தாவீது, "சார்வியாவின் புதல்வரே, அதைப் பற்றி உங்களுக்கும் எனக்கும் என்ன? இன்று நீங்கள் எனக்குச் சாத்தானாய் இருக்க வேண்டியது என்ன? இன்று இஸ்ராயேலில் யாரையாவது கொல்லலாமா? நான் இஸ்ராயேலின் அரசர் என்று இன்று எனக்குத் தெரியாதா?" என்றார்.

23 பிறகு அரசர் செமேயியை நோக்கி, "நீ சாகப் போவதில்லை" என்று அவனுக்கு உறுதி அளித்தார்.

24 சவுலின் மகன் மிபிபோசேத்தும் கழுவாத காலும் சிரையாத தாடியுமாய் அரசரை எதிர் கொண்டு வந்தான். ஏனெனில் அரசர் வெளியேறின நாள் முதல் அவர் சமாதானத்தோடு திரும்பி வந்த நாள் வரை அவன் தன் ஆடைகளை வெளுத்ததே இல்லை.

25 அவன் யெருசலேமில் அரசரைச் சந்தித்த போது, அரசர் அவனைப் பார்த்து, "மிபிபோசேத் நீ ஏன் என்னோடு வரவில்லை?" என்றார்.

26 அதற்கு அவன், "என் தலைவராகிய அரசே! என் வேலைக்காரன் என்னை இழிவாகப் பேசினான். உம் அடியானாகிய நான் முடவனானபடியால், 'ஒரு கழுதை மேல் சேணம் போட்டு, நான் அதன் மேல் ஏறி அரசருடன் போகிறேன்' என்று சொல்லியும் அவன் கேட்கவில்லை.

27 அதுவுமின்றி, அவன் என் தலைவரும் அரசருமாகிய உம்மிடம் உம் அடியானைப் பற்றிப் பழி சொன்னான். என் தலைவராகிய அரசே, நீர் கடவுளின் தூதனைப் போல் இருக்கிறீரே. உமக்குப் பிடித்ததைச் செய்யும்.

28 ஏனெனில் அரசராகிய என் தலைவருக்கு முன்பாக என் வீட்டார் அனைவரும் சாவுக்குத் தகுதியானவரேயன்றி வேறில்லை. இருந்த போதிலும் உமது பந்தியில் விருந்து உண்பாரோடு உம் அடியானையும் அமரச் செய்தீர். ஆதலால் குறை சொல்லவும், அரசரிடம் முறையிட்டுக் கெஞ்சவும் இனி எனக்கு நியாயம் உண்டோ?" என்றான்.

29 அதைக் கேட்டு அரசர், "நீர் வீணில் பேச வேண்டாம். நான் முன் சொன்ன தீர்ப்பே உறுதி. நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்றார்.

30 மிபிபோசேத் அரசருக்கு மறுமொழியாக, "என் தலைவராகிய அரசர் சமாதானமாய்த் தம் வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கும் போது, அவன் எல்லாவற்றையுமே எடுத்துக் கொள்ளட்டும்" என்றான்.

31 கலாத்தியனான பெர்செல்லாயியும் உரோகேலிமிலிருந்து யோர்தானின் இக்கரை வரை அரசரை வழிப்படுத்தின பின்னும், அரசரைப் பின் தொடரத் தயாராய் இருந்தான்.

32 இந்தக் கலாத்திய பெர்செல்லாயி மிகவும் வயது முதிர்ந்தவன்; அவனுக்கு வயது எண்பது. அரசர் பாளையத்தில் தங்கியிருக்கும்வரை, அவன் அவருக்கு உணவு முதலியன கொண்டு வந்து கொடுப்பான். ஏனெனில் அவன் பெருஞ் செல்வம் படைத்தவன்.

33 அரசர் பெர்செல்லாயியை நோக்கி, "நீ என்னோடு வா, யெருசலேமில் என்னுடன் கவலையின்றி வாழலாம்" என்று சொன்னார்.

34 பெர்செல்லாயி அரசரை நோக்கி, "நான் அரசரோடு யெருசலேமுக்குச் செல்லும்படி இன்னும் எத்தனை நாட்கள் நான் உயிரோடு இருப்பேன்?

35 இன்று எனக்கு வயதோ எண்பது, இனிப்பையும் கசப்பையும் வேறுபடுத்த என் புலன்கள் செயலற்று விட்டன. உண்பதும் குடிப்பதும் உம் அடியானுக்குச் சுவைக்குமா? பாடகர் பாடகிகளின் குரல் இனி எனக்குக் கேட்குமா? அடிமையாகிய நான் அரசராகிய என் தலைவருக்கு பாரமாய் இருக்க வேண்டியது ஏன்?

36 அடியேன் யோர்தானிலிருந்து இன்னும் சிறிது தூரம் உம்மோடு நடந்து வருவேன். ஆனால் அரசர் எனக்கு இத்தகு கைம்மாறு செய்வதற்கு நான் தகுதியற்றவன்.

37 உம் ஊழியனாகிய நான் திரும்பிப் போகவிடும். நான் என் ஊரிலேயே இறந்து என் தாய் தந்தையர் கல்லறைக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்படும்படி, தாங்கள் விடை தர வேண்டும், இதோ, காமாம் என்ற உம் அடியான். அவன் என் தலைவரும் அரசருமாகிய உம்மோடு போகட்டும். உமக்கு நல்லதென்று தோன்றுகிறதை அவனுக்குச் செய்யும்" என்றான்.

38 அப்பொழுது அரசர், "காமாம் என்னோடு வரட்டும். உன் விருப்பப்படியே நான் அவனுக்குச் செய்வேன். நீயும் என்னிடம் என்ன கேட்டாலும் நான் அதன்படி உனக்கு செய்வேன்" என்றார்.

39 அரசரும் எல்லா மக்களும் யோர்தானைக் கடந்தபிறகு அரசர் பெர்செல்லாயியை முத்தமிட்டு அவனுக்கு ஆசீர் அளித்தார். பிறகு பெர்செல்லாயி தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.

40 அரசர் கல்கலாவை அடைத்தார். காமாம் அவரோடு இருந்தான். யூதா மக்கள் அனைவரும் அரசரை அக்கரைக்குக் கூட்டிச் சென்றிருந்தார்கள். ஆனால் இஸ்ராயேல் மனிதருள் பாதிப்பேர் மட்டுமே அங்கு இருந்தனர்.

41 எனவே இஸ்ராயேல் மனிதர் எல்லாரும் அரசரிடம் வந்து கூடி அவரை நோக்கி, "எங்கள் சகோதரராகிய யூதா மனிதர் திருட்டுத்தனமாய் உம்மை அழைத்து வந்து அரசரையும் அவர் வீட்டாரையும் அவரோடு தாவீதின் மனிதர்கள் அனைவரையும் யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்?" என்றனர்.

42 யூதா மனிதர் இஸ்ராயேல் மனிதர்களுக்கு மறுமொழியாக, "அரசர் எங்களைச் சேர்ந்தவர். அதனால் தான் நாங்கள் அவ்வாறு செய்தோம். இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் அரசரின் கையில் ஏதாவது வாங்கித் தின்றோமா? அல்லது நாங்கள் அவர் கையில் பரிசுகள் பெற்றுக் கொண்டோமா?" என்று கேட்டனர்.

43 அதற்கு இஸ்ராயேல் மனிதர் யூதா மனிதர்களை நோக்கி, "அரசரிடம் உங்களை விடப் பத்து மடங்கு அதிகமாக நாங்கள் இருக்கின்றோம். ஆகவே, உங்களைவிட எங்களுக்குத் தாவீதிடம் அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களுக்குத் தீங்கு இழைத்தீர்கள்? அரசரைத் திரும்ப அழைத்து வருவதற்கு முதலில் ஏன் எம்மிடம் கூறவில்லை?" என்றனர். யூதா மனிதர் இஸ்ராயேல் மனிதரைவிடக் கடுமையான முறையில் மறுமொழி பகன்றனர்.

அதிகாரம் 20

1 அப்பொழுது நடந்ததாவது: ஜெமினி மனிதனான பொக்கிரியின் மகன் சேபா என்ற பெயருள்ள ஒருவன் அவ்விடம் இருந்தான். அவன் பெலியாலின் ஊழியன். அவன் எக்காளம் ஊதி, "தாவீதிடம் எங்களுக்குப் பங்குமில்லை; இசாயி மகனிடம் எங்களுக்கு மரபுரிமையும் இல்லை. இஸ்ராயேலரே! நீங்கள் உங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள்" என்று கூறினான்.

2 இதைக் கேட்டு இஸ்ராயேலர் அனைவரும் தாவீதை விட்டுப் பிரிந்து, பொக்கிரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தார்கள். ஆனால் யோர்தான் முதல் யெருசலேம் வரை வாழ்ந்து வந்த யூதா மனிதர்கள் தங்கள் அரசரைச் சார்ந்திருந்தார்கள்.

3 அரசர் யெருசலேமிலுள்ள தம் வீட்டுக்கு வந்த போது, முன்பு தம் மாளிகையைக் காப்பதற்காக அவர் வைத்திருந்த பத்து வைப்பாட்டிகளையும் வரவழைத்தார். அவர்களைச் காவலில் வைத்து அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தார். அதன் பிறகு அவர் அவர்களோடு உறவு வைத்துக் கொள்ளவில்லை. தங்கள் இறுதி நாள்வரை அவர்கள் விதவைகளாய் அடைபட்டிருந்தனர்.

4 பின்பு அரசர் ஆமாசாவை நோக்கி, "நீ யூதா மனிதர்களை மூன்று நாளுக்குள் என்னிடம் வரவழை. நீயும் வந்து இங்கே இரு" என்றார்.

5 அதன்படியே ஆமாசா யூதா மனிதர்களைக் கூப்பிடச் சென்று, அரசர் தனக்குக் குறித்திருந்த கால வரைக்குள் வராமல் தமாதம் செய்தான்.

6 அப்போது தாவீது அபிசாயியைப் பார்த்து, "அப்சலோமை விடப் பொக்கிரி மகன் சேபா இனி நமக்கு அதிகத் தொந்தரவு செய்யப் போகிறான். ஆகையால் நீ உன் தலைவனின் சேவகர்களைக் கூட்டிக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து போ. இல்லாவிட்டால் அவன் அரண் செய்யப்பட்ட நகர்களில் தஞ்சம் அடைந்து நம் கைக்குத் தப்புவான்" என்றார்.

7 அப்படியே யோவாபின் மனிதரும் கெரேத்தியரும் பெலேத்தியரும் வலியோர் அனைவரும் அபிசாயியோடு சென்று பொக்கிரியின் மகன் சேபாவைப் பின்தொடர யெருசலேமிலிருந்து வெளிப்போந்தனர்.

8 அவர்கள் காபாவோனிலுள்ள பெரும் பாறை அருகே இருந்த போது, ஆமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டு வந்தான். யோவாபோ தன் உடல் அளவுக்குச் சரியான ஓர் அங்கியை அணிந்திருந்தான். அதன் மேல் உறையோடு கூடிய ஒரு வாள் அவன் இடுப்பில் தொங்கியது. அவ்வுறை எவ்வாறு பொருத்தப்பட்டிருந்தது என்றால், வாளை இலகுவாக உருவவும். அதனால் வெட்டவும் முடிந்தது.

9 அப்படியிருக்கையில் யோவாப் ஆமாசாவைப் பார்த்து, "என் சகோதரனே, நலமாய் இருக்கிறாயா?" என்று கேட்டுத் தன் வலக்கையை நீட்டி முத்தம் செய்யப் போகிறவன் போல் அவனுடைய தாடையைப் பிடித்தான்.

10 ஆமாசோ யோவாப் வைத்திருந்த வாளைக் கவனிக்கவில்லை, யோவாப் அவனை வயிற்றில் குத்தினான். அதனால் ஆமாசவின் குடல் தரையில் சரிந்தது. அந்த ஒரே குத்தினால் அவன் இறந்தான். யோவாபும் அவன் சகோதரன் அபிசாயியும் பொக்கிரி மகன் சேபாவைப் பின் தொடர்ந்தனர்.

11 அதற்கிடையில் ஆமாசாவின் சவத்தருகே நின்று கொண்டிருந்த யோவாபுடைய சேவகர்களில் சிலர், "யோவாபுக்குப் பதிலாகத் தாவீதுடைய தோழனாய் இருக்க நாடியவனை இதோ பாருங்கள்" என்றனர்.

12 இரத்தத்தில் மூழ்கிய ஆமாசவின் உடல் நடுவழியில் கிடந்ததால், மக்கள் எல்லாரும் அங்கே தாமதித்து நிற்கக் கண்டு, ஒருவன் ஆமாசாவை வழியிலிருந்து இழுத்து வயலில் கிடத்தி, மக்கள் இனி அங்குத் தாமதித்து நிற்காதபடி, ஒரு துணியால் அவன் சடலத்தை மூடினான்,

13 அவன் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபின், பொக்கிரியின் மகன் சோபாவைப் பின்தொடரும்படி யோவாபின் துணைவர் எல்லாரும் சென்றார்கள்.

14 சேபாவோ இஸ்ராயேல் கோத்திரங்கள் எல்லாவற்றையும் கடந்து அபேலாவையும் பெத்மாக்கையும் அடைந்தான். தேர்ந்துகொள்ளப்பட்ட வீரர்கள் அனைவரும் அவனிடம் திரண்டு வந்தார்கள்.

15 தாவீதின் வீரர்கள் அபேலாவுக்கும் பெத்மாவுக்கும் சென்று அவனைத் தாக்கி, சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டி நகரை முற்றுகையிட்டனர். யோவாபுடன் இருந்த படையினர் எல்லாரும் நகர மதிலை வீழ்த்தும்படி முயன்று கொண்டிருந்தனர்.

16 அப்போது நகரில் வாழ்ந்து வந்த அறிவாளியான ஒரு பெண் நகர மதிலுக்கு அப்பாலிருந்து உரக்கக் கூவி, "கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேச வேண்டும். அவரை இங்கே வரச் சொல்லுங்கள்" என்றாள்.

17 அவன் அவள் அண்டை வந்த போது அப்பெண், "யோவாப் என்பவர் நீர்தானா?" என்று வினவினாள். அவன், "நான் தான்" என்று பதில் உரைத்தான். அப்பொழுது அவள், "அடியாள் சொல்லப் போகிறதை நீர் கவனித்துக் கேட்பீரா?" என்று கேட்டாள். அதற்கு அவள், "கேட்கிறேன்" என்றான்.

18 மீண்டும் அவள், "முற்காலத்தில் ஒரு பழமொழி வழக்கில் இருந்து வந்தது. 'ஆலோசனை கேட்க விரும்புகிறவர் ஆபேலாவில் தான் கேட்க வேண்டும்' என்பதே அது, அவ்வாறு மக்களும் தங்கள் வழக்குகளுக்குத் தீர்வு கண்டு வந்தனர்.

19 இஸ்ராயேலில் உண்மை உரைப்பவள் நான் அன்றோ? நீரோ இஸ்ராயேலின் தலைநகராகிய இந் நகரை அழித்தொழிக்கத் தேடுகிறீர். ஆண்டவருடைய உரிமையை நீர் என் அழிக்க வேண்டும்?" என்று கேட்டாள். யோவாப் மறுமொழியாக.

20 அப்படிப்பட்ட எண்ணம் எனக்குத் தூரமாய் இருப்பதாக; நான் உரிமையை அழிக்கவோ ஒழிக்கவோ எண்ணவில்லை.

21 காரியம் அப்படியன்று; பொக்கிரியின் மகனும் எபிராயீம் மலையில் வாழ்ந்து வந்தவனுமான சேபா தாவீது அரசருக்கு எதிராய் எழும்பினான். அவனை மட்டும் எங்களுக்கு ஒப்படையுங்கள்; நாங்களும் நகரை விட்டு உடனே போய்விடுவோம்" என்றான். அப்பொழுது அப்பெண் யோவாபைப் பார்த்து, "இதோ அவன் தலை நகர மதிலின் மேலிருந்து உம்மிடம் போடப்படும்" என்றாள்.

22 அதன்படியே அவள் எல்லா மக்களிடத்திலும் போய் அவர்களுடன் மதிநுட்பத்துடன் பேச, அவர்கள் பொக்கிரியின் மகன் சேபாவுடைய தலையைக் கொய்து, அதை யேவாபிடம் வீசி எறிந்தார்கள். யோவாப் எக்காளம் ஊதினான். அவர்கள் கலைந்து தத்தம் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப் போனார்கள். யோவாபோ அரசரின் இடமாகிய யெருசலேமுக்குத் திரும்பிப்போனான்.

23 பின்னர் யோவாப் இஸ்ராயேலின் படை முழுவதற்கும், யோயியாதாவின் மகன் பனாயாசு கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் படைத் தலைவர்கள் ஆயினர்.

24 அதுறாம் கப்பங்களை வாங்கும் அலுவலிலும், அகிலூதின் மகன் யோசபாத் பதிவு செய்பவர் பதவியிலும் இருந்தனர்.

25 சீவா எழுத்தனாகவும், சாதோக்கும் அபியாத்தாரும் குருக்களாகவும் இருந்தனர்.

26 ஜெய்ரீத்தனான ஈறாவோ தாவீதின் குருவாக இருந்தார்.

அதிகாரம் 21

1 தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரை ஆலோசனை கேட்டபோது ஆண்டவர், "சவுலின் பொருட்டு, இரத்த வெறியரான அவன் வீட்டார் பொருட்டும் இது உண்டாயிற்று; ஏனென்றால் சவுல் காபாவோனியரைச் கொலை செய்தான் அல்லவா?" என்று விடை பகர்ந்தார்.

2 ஆகையால் அரசர் காபாவோனியரை வரவழைத்தார். இந்தக் காபாவோனியர் இஸ்ராயேல் மக்கள் அல்லர்; எஞ்சியிருந்த அமோறையரே. இஸ்ராயேல் மக்கள் அவர்களைக் காப்பதாக வாக்களித்திருந்தனர். சவுலோ இஸ்ராயேல் புதல்வர்பாலும், யூதா புதல்வர்பாலும் ஆர்வம் கொண்டவர் போன்று அவர்களை அழிக்க விரும்பினார்.

3 தாவீது காபாவோனியரைப் பார்த்து, "நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவருடைய உரிமைப் பங்கை ஆசீர்வதிக்கும் பொருட்டு நான் செய்யவேண்டிய பரிகாரம் என்ன?" என்று கேட்டார்.

4 காபாவோனியர் அவரை நோக்கி, "எங்கள் பிரச்சனை பொன்னைப் பற்றியோ வெள்ளியைப் பற்றியோ அன்று; சவுலையும் அவர் வீட்டாரையும் பற்றியதே. அன்றியும் இஸ்ராயேலரில் யாராவது சாக வேண்டும் என்று நாங்கள் விரும்புவதில்லை" என்றார்கள். அப்பொழுது அரசர், "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார்.

5 அவர்கள் அரசரை நோக்கி, "எங்களை நசுக்கி அநீதியாய்த் துன்பப்படுத்தின மனிதன் எவனோ அவனுடைய வம்சத்தில் ஒருவன் முதலாய் இஸ்ராயேலின் எல்லைகளுக்குள் இராதபடி நாங்கள் அழித்தொழிக்க வேண்டும்.

6 சவுலின் புதல்வரில் எழுவரை எங்கள் கையில் ஒப்படைக்கட்டும் எற்கெனவே ஆண்டவர் தேர்ந்து கொண்ட சவுலின் நகராகிய காபாவோன் நகரத்திலேயே நாங்கள் ஆண்டவருக்கென்று அவர்களைச் சிலுவையில் அறைவோம்" என்றனர். அதற்குத் தாவீது, "அவர்களை நான் ஒப்படைப்பேன்" என்றார்.

7 ஆயினும் தாவீது சவுலின் மகனான யோனத்தாசுக்குப் பிறந்த மிபிபோசேத்தை உயிருடன் காப்பாற்றினார். ஏனெனில், சவுலின் மகனான யோனத்தாசும் தாவீதும் மிபிபோசேத்தைக் குறித்து ஆண்டவர் பெயரில் ஆணையிட்டு ஒருவருக்கு ஒருவர் வாக்குறுதி அளித்திருந்தனர்.

8 ஆயாவின் மகளான ரெசுபா சவுலுக்குப் பெற்ற இரு புதல்வரான ஆர்மோனியையும் மிபிபோசேத்தையும், சவுலின் புதல்வியான மிக்கோலாள் மோலாத்தியனான பெர்செல்லாயின் மகன் ஆதரியேலுக்குப் பெற்ற ஐந்து புதல்வரையும் அவர் பிடித்து,

9 அவர்களைக் காபாவோனியரின் கையில் ஒப்படைத்தார். காபாவோனியர் அவர்களை ஆண்டவர் திருமுன் மலையின் மேல் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் எழுவரும் வாற்கோதுமை அறுவடைக் கால ஆரம்ப நாட்களில் கொலை செய்யப்பட்டனர்.

10 அப்போது ஆயாவின் புதல்வியான ரெசுபா ஒரு கம்பளித் துணியை எடுத்து ஒரு பாறையின் மேல் அதை விரித்து, அறுவடை தொடங்கிய நாள் முதல் மழைக்காலம் வரை காவல் காவல் பூண்டு, பகலில் வானத்துப் பறைவகளாகிலும், இரவில் காட்டு விலங்குகளாகிலும் அவர்களின் உடல்களை உண்ணாதபடி பார்த்து வந்தாள்.

11 சவுலின் வைப்பாட்டியும் ஆயாவின் மகளுமான ரெசுபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

12 முன்பு பிலிஸ்தியர் கெல்போயே மலையில் சவுலைக் கொன்ற பிற்பாடு, சவுலையும் அவர் மகன் யோனத்தாசையும் பெத்சான் நகர வீதியில் தொங்க விட்டிருந்தனர்; யாபேசு காலாத் மனிதரோ அவர்களுடைய எலும்புகளைத் திருடிச் சென்றிருந்தனர். எனவே தாவீது புறப்பட்டுச் சென்று அவர்களிடமிருந்து அவற்றை மீட்டு வந்தார்.

13 சவுலின் எலும்புகளையும், அவர் மகன் யோனத்தாசின் எலும்புகளையும் அங்கிருந்து கொணர்ந்து, சிலுவையில் அறையப்பட்டோரின் எலும்புகளோடு அவற்றைச் சேர்த்து வைத்தார்.

14 இவற்றோடு சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தாசின் எலும்புகளையும் பெஞ்சமின் நாட்டில் சவுலின் தந்தையான சீசு என்பவருடைய கல்லறைக்குப் பக்கத்தில் புதைத்தார். அரசர் கட்டளையிட்டபடி எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான் ஆண்டவர் நாட்டின் மீது இரக்கம் காட்டினார்.

15 பின்பு பிலிஸ்தியர் இஸ்ராயேலரோடு திரும்பவும் போர் தொடுத்தனர். எனவே, தாவீதும் அவர் படைவீரர்களும் புறப்பட்டு வந்து பிலிஸ்தியரோடு போராடிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் தாவீது களைப்புற்று இருந்தார்.

16 அந்நேரத்தில் முந்நூறு பலம் நிறையுள்ள வெண்கல ஈட்டியைக் கையிலேந்திப் புது வாளை அரையிலே கட்டிக் கொண்டிருந்த எஸ்பிபெனோப் என்னும் அரபா குலத்தினன் ஒருவன் தாவீதைக் கொல்ல முயன்றான்.

17 ஆனால் சார்வியாவின் மகன் அபிசாயி தாவீதுக்கு உதவியாக வந்து பிலிஸ்தியனைக் கொன்று போட்டான். அப்போது தாவீதுடைய மனிதர், "நீர் இஸ்ராயேலின் ஒளி விளக்கு; அது அணைந்து போகாதபடி நீர் இனி எங்களோடு போருக்கு வர வேண்டாம்" என்று அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.

18 பிலிஸ்தியரோடு திரும்பவும் கோபில் போர் நடந்தது. அப்போது உசாத்தியனான சொபொக்காயி என்பவன் அரக்கர் இனத்தைச் சேர்ந்த அரபா குலத்தினனான சாப் என்பவனைக் கொன்று போட்டான்.

19 பிலிஸ்தியரோடு மூன்றாம் முறையும் போர் மூண்டது, அதில் பெத்லகேம் ஊரைச் சேர்ந்த பலவண்ண நெசவாளனான சால்தூசின் மகன் அதேயோதாத் என்பவன் கேத்தையனான கோலியாத்தை வெட்டி வீழ்த்தினான். கோலியாத்தினுடைய ஈட்டியின் கோல் நெசவாளர் பயன் படுத்தும் படைமரம் போல் இருக்கும்.

20 கேத்தில் நான்காவது போர் நடந்தது. அதில் அரபா குலத்தைச் சேர்ந்த மிக வளர்த்தியான ஒரு மனிதன் இருந்தான். கைகளிலும் கால்களிலும் ஆறு ஆறு விரல்களிருந்ததால் அவனுக்கு மொத்தம் இருபத்து நான்கு விரல்கள் இருந்தன.

21 அவன் இஸ்ராயேலரைப் பழித்துப் பேசினான். தாவீதின் சகோதரனான சாமாவின் மகன் யோனத்தான் அவனைக் கொன்று போட்டான்.

22 இந் நால்வரும் கேத்தில் அரபா குலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் தாவீதின் கையினாலும் அவர்தம் வீரருடைய கையினாலும் கொலையுண்டு மடிந்தனர்.

அதிகாரம் 22

1 ஆண்டவர் தாவீதைச் சவுலின் கைக்கும், அவருடைய எல்லா எதிரிகளின் கைக்கும் தப்புவித்தபின் தாவீது ஆண்டவருக்குப் பண் இசைத்த பாடலாவது:

2 ஆண்டவரே என் பாறையும் என் வலிமையும் என் மீட்பரும் ஆவார்.

3 கடவுளே வல்லவர்; அவரையே நான் நம்பியிருக்கிறேன். என் கேடயமும் என் மீட்பின் அணிகலனும் என் புகழும் என் தஞ்சமும் அவரே. என் மீட்பரே பாவத்திலிருந்து என்னை மீட்டருளும்.

4 ஆண்டவர் புகழ்ச்சிக்கு உரியவர்; அவரை நோக்கிக் கூப்பிடுவேன். அதனால் என் எதிரிகளிடமிருந்து காக்கப் பெறுவேன்.

5 ஏனெனில் மரண பயங்கரம் என்னைச் சூழ்ந்து கொண்டது. பெலியாலின் வெள்ளங்கள் என்னை அச்சுறுத்தின.

6 பாதாளத்தின் கயிறுகள் என்னைச் சுற்றி வளைத்தன. மரணக் கண்ணிகள் என் மேலே விழுந்தன.

7 என் இக்கட்டு வேளையில் ஆண்டவரைக் கூவியழைப்பேன். என் கடவுளை நோக்கி அபயமிடுவேன். அவர் தமது ஆலயத்தினின்று என் கூக்குரலைக் கேட்பார். என் அழுகுரல் அவருடைய செவிகளில் ஏறும்.

8 பூமி அதிர்ந்து நடுங்கினது. அவர் கோபம் கொண்டபடியால் மலைகளின் அடித்தளங்களே நடுங்கிக் குலுங்கின.

9 அவருடைய நாசிகளினின்று புகை கிளம்பியது. அவருடைய வாயினின்று தீ புறப்பட்டது. அதனால் கரிகளும் தீப்பற்றிக் கொண்டன.

10 அவர் வானங்களைத் தாழ்த்தி இறங்கினார். அவருடைய பாதங்களின் கீழ் காரிருள் படர்ந்திருந்தது.

11 அவர் கெருபீம் மேல் ஏறிப் பறந்தார். காற்றின் இறக்கைளின் மேல் தாவிப் போய் விட்டார்.

12 இருளால் தம்மைச் சுற்றிலும் மறைத்தார். வான மேகங்களினின்று மழை பொழியச் செய்தார்.

13 அவர் திருமுன் ஒளியினால் கரிகளும் பற்றி எரிந்தன.

14 ஆண்டவர் வானினின்று இடிமுழங்கச் செய்வார். உன்னதமானவர் தம் குரல் தொனிக்கச் செய்வார்.

15 அவர் அம்புகளை எய்து அவர்களைச் சிதறடித்தார். மின்னல்களைப் பயன்படுத்தி அவர்களை அழித்து விட்டார்.

16 ஆண்டவர் அதட்டிக் கண்டித்ததினாலும், அவர் தமது கோபமூச்சை வீசினதினாலும் கடலின் பாதாளங்களும் தென்பட்டன; பூமியின் அடித்தளங்களும் காணப்பட்டன.

17 அவர் உயர்த்திலிருந்து பாய்ந்து வந்து என்னைத் தூக்கி வெள்ளப் பெருக்கினின்று மீட்டார்.

18 அவர் வல்லமைமிக்க என் எதிரிகளிடமிருந்தும், என்னிலும் வலிமை வாய்ந்தவராய் இருந்ததால் என்னைப் பகைத்தவர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றினார்.

19 என் துயர நாளில் அவர் எனக்கு எதிரே வந்தார். ஆண்டவரே என் ஊன்றுகோல்.

20 பரந்த இடத்திற்கு என்னைக் கொணர்ந்தார். நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னை விடுவித்தார்.

21 ஆண்டவர் என் நேர்மைக்குத் தகுந்தது போல் எனக்குப் பிரதிபலன் அளிப்பார். என் கைகளின் தூய்மைக்கு ஏற்றது போல் எனக்குக் கைம்மாறு அளிப்பார்.

22 ஏனெனில் நான் ஆண்டவருடைய வழி நின்று ஒழுகினேனே அன்றி, கடவுளை விட்டு விலகி தீச் செயல் ஒன்றும் புரியவில்லை.

23 அவருடைய தீர்ப்புகள் எல்லாம் என் கண்முன் இருக்கின்றன. அவருடைய சட்டங்களை மீறி நடந்தேனில்லை.

24 அவரோடு நான் நிறைவுள்ளவனாய் இருப்பேன். என் தீச் செயல்களினின்றும் என்னைச் காத்துக் கொள்வேன்.

25 ஆண்டவர் என் நேர்மைக்குத் தகுந்தது போல், தம் கண்முன் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறு எனக்குக் கைம்மாறு அளிப்பார்.

26 நீர் தூயோருக்குத் தூயோராயும், வலியோர்க்கு நிறைவுள்ளவராயும் இருப்பீர்.

27 தேர்ந்து கொள்ளப்பட்டவருள் தேர்ந்து கொள்ளப்பட்டவராய் இருப்பீர்.

28 நீர் எளியோரை மீட்டீர். செருக்குற்றோரை உம் கண்களில் சிறுமைப்படுத்தினீர்.

29 ஆண்டவராகிய நீரே என் ஒளி விளக்கு.

30 நீரே என் இருளை ஒளிரச் செய்கிறீர். ஏனெனில் உம் பெயரால் நான் ஓடத் தயாராய் இருக்கிறேன். என் இறைவன் துணையால் நான் மதிலையும் தாண்டுவேன்.

31 இறைவனுடைய வழி மாசற்றது. ஆண்டவருடைய வார்த்தை புடமிடப்பட்டது. தம்மேல் நம்பிக்கை கொள்வோர் அனைவர்க்கும் அவர் கேடயமாய் இருக்கின்றார்.

32 ஆண்டவர் அன்றி வேறு கடவுள் யார்? நம் கடவுளைத் தவிர வல்லபமுள்ளவர் யார்?

33 அவரன்றோ என்னையும் திடப்படுத்தினார், என் வழியையும் செவ்வைப்படுத்தினார்?

34 அவரன்றோ என் கால்களை மான்களின் கால்களைப்போல் ஆக்கினார், உயர்ந்த இடங்களில் என்னை நிறுத்தி வைத்தார்?

35 அவரன்றோ என் கைகளைப் போருக்குப் பழக்குகின்றார், என் புயங்களையும் வெண்கல வில்லைப்போல் ஆக்குகின்றார்?

36 உம்முடைய மீட்பின் கேடயத்தை எனக்குத் தந்தீர். உமது கருணையே என்னைத் தழைத்தோங்கச் செய்தது.

37 என் காலடிகளை விரிவுபடுத்துவீர். நான் இடறி விழாதபடி என் கால்களை உறுதிப்படுத்துவீர்.

38 என் எதிரிகளை நான் பின்தொடர்ந்து அவர்களை நசுக்குவேன். அவர்களை அழித்தொழிக்காமல் நான் திரும்பி வரமாட்டேன்.

39 எழ முடியாதபடி அவர்களை நொறுக்கி அழித்துப் போடுவேன். அவர்கள் என் காலடியில் விழுவார்கள்.

40 ஆற்றல் அளித்து நீர் என்னைப் போருக்கு ஆயத்தமாக்கினீர். என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.

41 என் எதிரிகளை எனக்குப் புறமுதுகு காட்டி ஓடச் செய்தீர். என் பகைவர்களை நான் அழித்து விடுவேன்.

42 அவர்கள் கூக்குரலிடுவார்கள்; ஆயினும் அவர்களைக் காப்பாற்ற ஒருவரும் இரார். ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்புவார்கள்; அவரோ அவர்களுக்குச் செவி கொடார்.

43 பூமியின் புழுதியைப் போல் அவர்களைச் சிதறடிப்பேன். தெருக்களின் சேற்றைப்போல் அவர்களை மிதித்து அழிப்பேன்.

44 என் மக்களின் போராட்டங்களினின்று என்னை விடுவித்துப் புறவினத்தாருக்கு என்னைத் தலைவனாக ஏற்படுத்துவீர். நான் அறியாத மக்களே எனக்கு அடிபணிவார்கள்.

45 அன்னியர் என்னை எதிர்த்து நிற்பார்கள். ஆனால் அவர்கள் என் குரலைக் காதால் கேட்டவுடன் எனக்குக் கீழ்ப்படிவார்கள்.

46 அன்னியர் மடிந்து போனார்கள்; தங்கள் இடுக்கண்களில் அவர்கள் நெருக்கப்படுவார்கள்.

47 ஆண்டவர் உயிருள்ளவர்; என் கடவுள் புகழப்படுவாராக! என் மீட்பராம் வலிமை மிக்க கடவுள் உயர்த்தப் பெறுவாராக!

48 எனக்காகப் பழிக்குப்பழி வாங்குகிற கடவுள், மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகின்ற கடவுள் நீரே!

49 என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும், என்னை எதிர்க்கிறவர்களின்மேல் என்னை உயர்த்துகிறவரும், தீயோரிடமிருந்து என்னை மீட்கிறவரும் நீரே!

50 அதன் பொருட்டு, என் ஆண்டவரே, புறவினத்தார் மத்தியில் உம்மைப் புகழ்ந்தேத்தி உமது யெருக்குப் பண் இசைப்பேன்.

51 அவரே அரசனின் மீட்பை மிகுதிப்படுத்தி, தாம் அபிஷுகம் செய்த தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றும் இரக்கம் காட்டுவாராக!"

அதிகாரம் 23

1 தாவீதின் இறுதி மொழிகள் வருமாறு: இசாயியின் மகனான தாவீது என்பவரும், யாக்கோபுடைய கடவுளால் அபிஷுகம் பெற நியமிக்கப்பட்டவரும், இஸ்ராயேலின் புகழ் பெற்ற இசை வல்லுநருமாகிய அவர் சொன்னதாவது:

2 ஆண்டவருடைய ஆவியானவர் என் மூலம் பேசினார். அவருடைய வார்த்தை என் நாவில் இருந்தது.

3 இஸ்ராயேலின் கடவுளும், இஸ்ராயேலில் வல்லவருமானவர் என்னைப் பார்த்து, 'மக்களை ஆண்டு வருகிறவனும், நீதியோடும் தெய்வ பயத்தோடும் அரசாள்கிறவனும் எப்படி இருப்பான் என்றால்,

4 காலையில் சூரியன் உதிக்கவே, காலை வெளிச்சம் மேகமின்றித் தோன்றுவது போலவும், மழைக்குப்பின் பூமியின் கண் புல் முளைப்பது போலவும் இருப்பான்' என்றருளினார்.

5 எல்லாவற்றிலும் உறுதியானதும் அசைக்கக் கூடாததுமான ஒரு நித்திய உடன் படிக்கையைக் கடவுள் என்னோடு செய்வதற்கு, என் வீடு இறைவன் திருமுன் அவ்வளவு மேன்மை வாய்ந்தது அன்று. அப்படியிருந்தும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் அவர் என்னைக் காப்பாற்றினார். நான் விரும்பியதெல்லாம் அவர் எனக்குத் தந்தருளினார். அவற்றுள் எனக்குக் கிடைக்காத நன்மை ஒன்றும் இல்லை.

6 ஆனால் என் கட்டளைகளை மீறுகிறவர்கள் அனைவரும், கையால் எடுக்கப்படாத முட்களைப் போல் பிடுங்கப்படுவார்கள்.

7 அவற்றை ஒருவன் தொடவிரும்பினால் அவன் இரும்பையும் ஈட்டியின் பிடியையும் கொண்டு அவற்றைத் தீயிலிட்டு முழுதும் சுட்டெரிப்பான்."

8 தாவீதுக்கு இருந்த வல்லமையுள்ள மனிதர்களின் பெயர்களாவன: மூவரில் மிகுந்த ஞானமுடைய தலைவனாய்த் தலைமை இருக்கையில் வீற்றிருந்தவனே முதல்வனாம். அவன் மிகவும் நுண்ணிய மரப்பூச்சியைப் போல் எண்ணுறு பேரை ஒரே சமயத்தில் வெட்டி வீழ்த்தினான்.

9 அவனுக்கு அடுத்தவன் அகோயி ஊரானும் முந்தினவனுடைய சிற்றப்பன் மகனுமான எலெயசார் என்பவன். தாவீதோடு போர்க்களத்தில் பிலிஸ்தியரை எதிர்த்து நின்ற மூன்று வல்லவர்களுள் இவனும் ஒருவன்.

10 இஸ்ராயேல் மனிதர் ஓடிவிட்ட பின் இவன் மட்டும் நின்று தன் கை சோர்ந்து வாளோடு ஒட்டிக்கொள்ளும் வரை பிலிஸ்தியரை எதிர்த்து நின்றான். அன்று ஆண்டவர் பெரும் வெற்றி அளித்தார். முன்பு ஓட்டம் பிடித்த மக்களோ வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடத் திரும்பி வந்தனர்.

11 இவனுக்கு அடுத்தவன் ஆராரி ஊரானான ஆகேயின் மகன் செம்மா என்பவன். அவரைப் பயிர் நிறைந்த ஒரு வயலில் பிலிஸ்தியர் பெரும் திரளாய்க் கூடியிருந்தனர். அவர்களைக் கண்டு மக்கள் ஓட்டம் பிடிக்கையில்,

12 இவன் ஒருவனே வயலின் நடுவே நின்று அதைக் காப்பாற்றிப் பிலிஸ்தியரைத் தோற்கடித்தான். ஆண்டவர் அன்று பெரும் வெற்றி அளித்தார்.

13 அன்றியும் முப்பது பேரில் முதல்வரான இந்த மூவரும் முன்பு அறுவடைக் காலத்தில் தாவீதை பார்க்க ஓதுலாம் குகைக்கு வந்திருந்தனர். பிலிஸ்தியரின் பாளையமோ அரக்கரின் பள்ளத்தாக்கில் இருந்தது.

14 தாவீது ஒரு கோட்டையில் தங்கியிருந்தார். பிலிஸ்தியருடைய பாளையமோ அப்போது பெத்லகேமில் இருந்தது.

15 அப்போது தாவீது, "ஓ! பெத்லகேமின் வாயில் அருகே இருக்கிற கிணற்றிலிருந்து என் தாகம் தீர்க்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருபவன் யார்?" என்று ஆவலுடன் கேட்டார்.

16 அதைக் கேட்ட அந்த மூன்று வல்லவர்களும் பிலிஸ்தியருடைய பாளையத்தில் புகுந்து பெத்லகேமின் வாயில் அருகே இருந்த கிணற்றிலிருந்து நீர் மொண்டு தாவீதிடம் கொண்டு வந்தனர். தாவீதோ அதைக் குடிக்க மனமின்றி ஆண்டவருக்கென்று அதைக் கீழே ஊற்றி விட்டார்.

17 நான் இதைச் செய்யாதவாறு ஆண்டவர் என்மேல் இரக்கம் வைப்பாராக! தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாய் எண்ணாது சென்ற இம் மனிதரின் இரத்தத்தை நான் குடிப்பதா?" என்று கூறி அதன் பொருட்டு அவர் அதைப் பருகவில்லை. இந்த மூன்று வல்லவர்களும் இவற்றைச் செய்தனர்.

18 சார்வியாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயியும் மூவரில் முதல்வனாய் இருந்தான், அவனே முந்நூறு பேரைத் தன் ஈட்டியால் தாக்கி அவர்களைக் கொன்றான். இவன் மூவருள் பெயர் பெற்றவனாகவும், பெரும் புகழ் படைத்தவனாகவும்,

19 அவர்களுக்குத் தலைவனாகவும் இருந்தான். ஆயினும் முதல் மூவருக்கு ஒப்பானவன் அல்லன்.

20 ஆற்றல் வாய்ந்தவனும் அரும் பெரும் செயல்கள் செய்தவனும், காப்சீலைப் சேர்ந்தவனுமான யோயியாதாவின் மகன் பனாயாசு இரு மோவாபிய சிங்கங்களைக் கொன்றான். அவன் பனிக்காலத்தில் ஒரு கேணியில் இறங்கி மற்றெரு சிங்கத்தையும் கொன்றான்.

21 மேலும் பார்வைக்கு அழகான ஓர் எகிப்திய வீரனைப் கொன்றான். இவன் ஓர் ஈட்டியை வைத்திருந்தாலும் பனாயாசு ஒரு தடியை மட்டும் கொண்டு அவன் மேல் பாய்ந்து வலுக்கட்டாயமாய் அவனுடைய ஈட்டியைப் பறித்து அதைக் கொண்டே அவனைக் கொன்று போட்டான்.

22 யோயியாதாவின் மகனான பனாயாசு செய்த வீரச் செயல்கள் இவையே.

23 புகழ் பெற்ற முப்பது பேருக்குள் இருந்த வல்லவரான மூவருள் இவன் மதிப்புக்குரியவன். ஆயினும் அந்த மூவருக்கும் இவன் இணை ஆகான். இவனைத் தாவீது தம் அணுக்கச் செயலராக்கினார்.

24 முப்பது பேரில் யோவாபின் சகோதரனாகிய அசாயேலும் ஒருவன். அவனுடைய சிற்றப்பனின் மகனும் பெத்லகேமில் பிறந்தவனுமான எலெயானான்,

25 ஆரோதி ஊரானான செம்மா, ஆரோதியில் பிறந்த எலிக்கா,

26 பால்தியானான எலேசு, தேக்குவா ஊரில் பிறந்த அக்கேசின் மகனாகிய ஈரா,

27 அனத்தோத்தியனான அபியேசர், உசாத்தியனான மோபொன்னாய்,

28 ஆகோயித்தியனான செல்மோன், நேத்தோ பாத்தியனான மகராயி,

29 நேத்தோ பாத்தியனான பாவானாவின் மகன் ஏலேது, பெஞ்சமின் புதல்வரில் ஒருவனும் காபாவத்தியனும் ரீபாயி மகனுமான இத்தாயி,

30 பாரத்தோனியனான பனாயியா, காவாசு நீரோடை அருகே வாழ்ந்து வந்த எத்தாயி,

31 ஆர்பாத்தியனான அபியல்போன், பேரோமியனான அசுமவேத்,

32 சலபோனி ஊரானும் இயாசேன் மகனும், யோனத்தான் என்று அழைக்கப் பெற்றவனுமான எலியபா, ஓரோரியனான செம்மா,

33 ஆரோரியனான சாராரின் மகன் ஆயியாம்,

34 மக்காத்தி மகனான ஆசுபாய்க்குப் பிறந்த எலிபலேத்து, கேலோனியனான அக்கித்தோப்பேலின் மகன் எலியாம்.

35 கார்மேலிலிருந்து வந்த எஸ்ராயி, அர்பியிலிருந்து வந்த பாராயி,

36 சோபவிலிருந்த நாத்தானின் மகன் இகாவால், காதியனான பொன்னி,

37 அம்மோனியனான சேலேக், பேரோத்தியனும் சார்வியாவின் மகன் யோவாபின் பரிசையனுமாய் இருந்த நகராயி,

38 எத்திரீத்தியனான ஈரா,

39 அதே ஊரானான கரேபு, ஏத்தையனான உரியாசு- ஆக மொத்தம் முப்பத்தேழு பேர்.

அதிகாரம் 24

1 ஆண்டவருடைய கோபம் திரும்பவும் இஸ்ராயேல் மேல் மூண்டது. அவர்களுக்கு எதிராகத் தாவீதை அவர் ஏவிவிட்டு, "நீ இஸ்ராயேலையும் யூதாவையும் கணக்கிடு" என்றார்.

2 அப்படியே அரசர் படைத்தலைவனான யோவாபை நோக்கி, "நான் மக்களின் எண்ணிக்கையை அறியும்படி நீ தான் முதல் பெர்சபே வரை உள்ள இஸ்ராயேலின் கோத்திரங்கள் முழுவதும் சென்று மக்களைக் கணக்கிடு" என்றார்.

3 யோவாப் அரசரை நோக்கி, "உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் இப்போது இருக்கிற மக்களை என் தலைவராகிய அரசரின் கண்களுக்கு முன்பாகப் பலுகச் செய்து நூறு மடங்காய்ப் பெருகச் செய்வாராக! ஆனால் என் தலைவராகிய அரசர் இக்காரியத்தை விரும்பக் காரணம் யாதோ?" என்றான்.

4 இருப்பினும் யோவாபும் படைத் தலைவர்களும் கூறிய சொற்கள் ஏற்றுகொள்ளப் படவில்லை. எனவே, அரசரின் கட்டளையே உறுதியாயிற்று. யோவாபும் படைத்தலைவர்களும் மக்கட் தொகை எடுப்பதற்காக அரசரிடமிருந்து விடை பெற்றனர்.

5 அவர்கள் யோர்தானைக் கடந்து, காத் பள்ளத்தாக்கிலிருந்த நகருக்கு வலப்பக்கத்தில் இருந்த ஆரோயோர்க்குப் போனார்கள்.

6 பின்னர் அவர்கள் யாசேரைக் கடந்து காலாத்துக்கும் ஓத்சி என்ற கீழ்நாட்டுக்கும் தானைச் சேர்ந்த காட்டு நிலங்களுக்கும் சென்று, சிதோனைச் சுற்றி வந்து,

7 தீர் நகரின் கோட்டையின் அருகே நடந்து ஏவையர், கனானையருடைய நாடுகளில் காலெடுத்து வைத்த பின், யூதாவிற்குத் தெற்கே இருந்த பெர்சபேயிக்குச் சென்றனர்.

8 இவ்வாறு அவர்கள் நாடு முழுவதும் சுற்றி வந்து ஒன்பது மாதம் இருபது நாளுக்குப் பிறகு யெருசலேமுக்குத் திரும்பி வந்தனர்.

9 அப்போது யோவாபு மக்கட் தொகையை அரசரிடம் சமர்ப்பித்தான். இஸ்ராயேலில் வாள் எடுக்கத்தக்க போர் வீரர் எட்டு லட்சம் மனிதரும், யூதாவில் ஐந்து லட்சம் போர் வீரர்களும் இருந்தனர்.

10 ஆனால் மக்களைக் கணக்கிட்ட பின் தாவீதின் இதயம் அவரை வாட்டியது. அவர் ஆண்டவரை நோக்கி, "நான் இப்படிச் செய்ததினால் பெரும் பாவம் செய்தேன். ஆயினும் ஆண்டவரே, நான் மதிகேடான முறையில் நடந்து கொண்டபடியால் அடியேனின் தீச்செயலை அகற்றியருள வேண்டுகிறேன்" என்றார்.

11 தாவீது அதிகாலையில் எழுந்திருந்தபோது இறைவாக்கினரும் தாவீதின் திருக்காட்சியாளருமான காத் என்பவருக்கு ஆண்டவருடைய வார்த்தை வந்தது.

12 நீ தாவீதிடம் போய், 'இம் மூன்று காரியங்களில் ஒன்றை நீ தேர்ந்து கொள்ளலாம். அதில் உனக்குப் பிடித்தமானது எதுவோ அதை நான் உனக்குச் செய்வேன்' என்று ஆண்டவர் சொன்னார் என்று சொல்" என்பதாம்.

13 அதன்படியே காத் தாவீதிடம் வந்து அவரை நோக்கி, "உம்முடைய நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும் அல்லது மூன்று மாதம் நீர் உம் எதிரிகளுக்குப் பயந்து ஓட, அவர்கள் உம்மைப் பின் தொடர நேரிடும். இன்றேல் மூன்று நாட்களுக்கு உமது நாட்டில் கொள்ளை நோய் இருக்கும். எனவே, நீர் சிந்தனை செய்து, என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டுமென்று சொல்லும்" என்றார்.

14 அப்பொழுது தாவீது காத் என்பவரை நோக்கி, "நான் பெரும் இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன். ஆயினும் மனிதர்களுடைய கையில் விழுவதை விட ஆண்டவரின் கைகளில் விழுவது நலம். (ஏனெனில் அவர் பேரிரக்கம் உள்ளவர்)" என்றார்.

15 அப்பொழுது ஆண்டவர் அன்று காலை தொடங்கி குறித்த காலம் வரை கொள்ளை நோய் வரச் செய்தார். அதனால் தான் முதல் பெர்சபே வரை மக்களில் எழுபதினாயிரம் பேர் இறந்தனர்.

16 மேலும் ஆண்டவரின் தூதர் யெருசலேமை அழிக்கும் பொருட்டுத் தம் கையை அதன் மேல் நீட்டின போது, ஆண்டவர் மக்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, மக்களைக் கொன்று குவித்த வானவரை நோக்கி, "போதும், இப்போது உன் கையை நிறுத்து" என்றார். அந்நேரத்தில் ஆண்டவரின் தூதர் எபூசையனான அரெவுனா என்பவனுடைய களத்திற்கு அருகில் இருந்தார்.

17 தூதர் மக்களை வதைக்கிறதைக் கண்டபோது, தாவீது ஆண்டவரை நோக்கி, "பாவம் செய்தது நானன்றோ? தீச் செயல் புரிந்தது நான் அன்றோ? இந்த ஆடுகள் என்ன செய்தன? ஆதலால் உம்முடைய கை என்னையும் என் தந்தை வீட்டாரையும் வதைக்கக் கடவதாக" என்று விண்ணப்பம் செய்தார்.

18 அன்று காத் தாவீதிடம் வந்து அவரை நோக்கி, "எபூசையனான அரெவுனாவின் களத்திற்குப் போய் அங்கு ஆண்டவருக்கு ஒரு பலி பீடத்தைக் கட்டி எழுப்பும்" என்றார்.

19 காத் சொற்படி தாவீது ஆண்டவர் கட்டளையிட்டவற்றைச் செய்தார்.

20 அரசரும் அவர் ஊழியர்களும் தன்னிடம் வருகிறதைக் கண்ட அரெவுனா,

21 வெளியே வந்து தரையில் முகம் குப்புற விழுந்து பணிந்து அரசரை நோக்கி, "அரசராகிய என் தலைவர் அடியேனிடம் வரவேண்டிய காரணம் என்ன?" என்றான். அதற்குத் தாவீது, "கொள்ளை நோய் மக்களை விட்டு நீங்கும்படி நான் ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டுவதற்காக இந்தக் களத்தை உன்னிடமிருந்து விலைக்கு வாங்க வந்துள்ளேன்" என்றார்.

22 அப்போது அரெவுனா தாவீதை நோக்கி, "என் தலைவராகிய அரசர் அதை வாங்கிக்கொண்டு தமது விருப்பப்படியே பலியிடுவாராக! இதோ தகனப்பலிக்கு வேண்டிய வண்டியும் மாடுகளும் இங்கேயே இருக்கின்றன" என்றான்.

23 அரெவுனா அவை எல்லாவற்றையும் அரசர் என்ற முறையில் அவருக்குக் கொடுத்தான். பின்பு அரெவுனா அரசரைப் பார்த்து, "தாங்கள் செய்து கொண்ட நேர்ச்சையை உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் ஏற்றுக்கொள்வாராக!" என்றான்.

24 அரசர் அவனுக்கு மறுமொழியாக, "நீ விரும்புகிறபடி நான் இலவசமாய் வாங்க மாட்டேன். அதை உன்னிடமிருந்து விலை கொடுத்தே வாங்குவேன். என் ஆண்டவருக்கு இலவசமான தகனப் பலியை நான் செலுத்த மாட்டேன்" என்றார். அப்படியே தாவீது ஐம்பது சீக்கல் நிறையுள்ள வெள்ளி கொடுத்து அந்தக் களத்தையும் அந்த மாடுகளையும் வாங்கிக் கொண்டர்.

25 அங்கே தாவீது ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் படைத்தார். ஆண்டவர் நாட்டின்மேல் இரக்கம் காட்டினார். கொள்ளை நோயும் இஸ்ராயேலிலிருந்து நீங்கிற்று.