1 சாமுவேல் ஆகமம்

அதிகாரம் 01

1 எபிராயீம் என்ற மலையில் சொப்பீம் என அழைக்கப்பட்ட ராமாத்தாயீம் ஊரானாகிய ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் ஏல்கானா. அவன் எரோவாம் மகன்; இவன் எலியூ மகன்; இவன் தோயு மகன்; இவன் எபிராயீம் கோத்திரத்தானான சூபுடைய மகன்.

2 அவனுக்கு இரு மனைவிகள்: ஒருத்தியின் பெயர் அன்னா, மற்றொருத்தியின் பெயர் பெனென்னா. பெனென்னாவுக்குப் பிள்ளைகள் இருந்தனர். அன்னாவுக்கோ பிள்ளைகள் இல்லை.

3 அம்மனிதன் குறிக்கப்பட்ட நாட்களில் சேனைகளின் ஆண்டவரை வழிபடவும், அவருக்குப் பலி செலுத்தவும் தன் ஊரினின்று சீலோவுக்குப் போவான். ஏலியின் புதல்வர் ஓப்னி, பினேசு இருவரும் அங்கே ஆண்டவரின் குருக்களாய் இருந்தனர்.

4 ஒரு நாள் ஏல்கானா பலி செலுத்திய பின் அப்பலியின் பங்குகளைத் தன் மனைவி பெனென்னாவுக்கும், அவளுடைய புதல்வர் புதல்வியர் எல்லாருக்கும் கொடுத்தான்.

5 அன்னாவுக்கோ ஒரு பங்கு கொடுத்தான். தான் அன்னாவுக்கு அன்பு செய்து வந்ததைப் பற்றி வருந்தினான். ஆண்டவரோ அவளை மலடியாக்கியிருந்தார்.

6 அவளுடைய சக்களத்தி அவளை வருத்தி மிகவும் துன்பப்படுத்துவாள். ஆண்டவர் அவளை மலடியாக்கியிருந்ததைப் பற்றியே பலமுறை அவளை ஏசுவாள்.

7 ஆண்டவரின் ஆலயத்திற்குப் போக வேண்டிய காலம் வரும்போதெல்லாம் ஆண்டுதோறும் அவ்வாறு செய்வாள்; அவளைப் பரிகாசம் செய்வாள். ஆகவே அன்னா அழுவாள்; உண்ணமாட்டாள்.

8 இதனால் அவள் கணவன் ஏல்கானா அவளை நோக்கி, "அன்னா, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் உன் உள்ளம் துன்பப்படுகிறது? பத்துப் பிள்ளைகளை விட உனக்கு நான் மேலன்றோ?" என்பான்.

9 அன்னா சீலோவில் உண்டு குடித்த பின் எழுந்தாள். ஏலி என்ற குரு ஆண்டவரின் ஆலயத்து வாசற்படி முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த போது,

10 அன்னா துயரம் நிறைந்தவளாய் வெகுவாய் அழுது ஆண்டவரை நோக்கி,

11 சேனைகளின் ஆண்டவரே, உம் அடியாளின் துன்பத்தைக் கண்ணோக்கிப் பாரும். உம் அடிமையை மறவாது நினைவு கூர்ந்தருளும். உம் அடியாளுக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பேன். சவரக்கத்தி அவன் தலை மேல் படாது" என்று பொருத்தனை செய்து கொண்டாள்.

12 அவள் ஆண்டவர் திருமுன் அதிகம் வேண்டிக்கொண்டிருக்க, ஏலி அவளது வாயைக் கவனிக்க நேரிட்டது.

13 ஏனெனில், அன்னா தன் மனதுக்குள்ளே பேசுவாள். அவள் உதடுகள் மட்டும் அசைந்தன; ஆனால் குரல் ஒலி கேட்கப்படவில்லை. அவள் குடிவெறியில் இருப்பதாக ஏலி எண்ணி,

14 அவளை நோக்கி, "எத்தனை காலம் குடிவெறியில் இருப்பாய்? உனக்குப் போதை தரும் திராட்சை இரசத்தைக் கொஞ்சம் செரிக்கும்படி விடக் கூடாதா?" என்றார்.

15 அன்னா மறுமொழியாக, "குருவே அப்படியன்று, நானோ மிகவும் அபாக்கியவதி. திராட்சை இரசத்தையோ, போதை தரும் வேறு எதையுமோ நான் குடிக்கவில்லை. என் ஆன்மாவை ஆண்டவர் திருமுன் திறந்து காட்டினேன்.

16 பெலியால் புதல்விகளில் ஒருத்தியாக அடியாளை எண்ண வேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரத்தின் மிகுதியால் நான் இதுவரை பேசினேன்" என்றாள்.

17 அப்போது ஏலி, "இஸ்ராயேலின் ஆண்டவரிடத்தில் நீ கேட்ட மன்றாட்டை அவர் உனக்குத் தந்தருள்வார். நீ சமாதானமாய்ப் போய் வா" என்று பதில் உரைத்தார்.

18 அவளோ மறுமொழியாக, "உம் அடியாள் மேல் உமது அருள் இருப்பதாக" என்றாள். மேலும் அப்பெண் தன் இல்லம் சென்று சாப்பிட்டாள். அதற்குப் பின் அவள் முகம் துக்கமின்றி இருந்தது.

19 அவர்கள் அதிகாலையில் எழுந்து, ஆண்டவரை வழிபட்டபின் புறப்பட்டு ராமாத்தாவிலுள்ள தம் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மேலும் ஏல்கானா தன் மனைவி அன்னாவோடு கூடினான். ஆண்டவர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.

20 உண்மையில், சில நாள் கழித்து அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள். ஆண்டவரிடத்தில் அவனைக் கேட்டு அடைந்த படியால், அவனுக்குச் சாமுவேல் என்று பெயரிட்டாள்.

21 மேலும், அவள் கணவன் ஏல்கானா தன் வீட்டார் அனைவருடனும் ஆண்டவருக்கு வழக்கமான பலியையும் தன் பொருத்தனையும் செலுத்தப் போனான்.

22 அன்னா அவனுடன் போகவில்லை; அவளோ, "பிள்ளை பால்குடி மறக்கும் வரை நான் போகமாட்டேன்" என்றும், "அதன் பிறகு அவனை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கவும், அவன் எப்பொழுதும் அங்கு இருக்கவும் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போவேன்" என்றும் தன் கணவனுக்குச் சொன்னாள்.

23 அவள் கணவன் ஏல்கானா அவளை நோக்கி, "உனக்கு நலம் என்று தோன்றுகிறபடியே செய்; பிள்ளை பால்குடி மறக்கும் வரை இரு. ஆண்டவர் தம் வாக்கை நிறைவேற்ற மன்றாடுகிறேன்" என்றான். ஆகவே அன்னா வீட்டில் தங்கிவிட்டாள். பிள்ளை பால்குடி மறக்கும் வரை அவனைப் பாலூட்டி வளர்த்தாள்.

24 பால்குடி மறந்தபின் அன்னா தன்னுடன் மூன்று கன்றுகளையும் மூன்று மரக்கால் மாவையும் ஒரு சாடி திராட்சை இரசத்தையும் எடுத்துக் கொண்டு சீலோவிலுள்ள கோயிலுக்குத் தன் மகனை எடுத்துக்கொண்டு போனாள்; பிள்ளையோ மிகச் சிறியவனாய் இருந்தான்.

25 அவர்கள் ஒரு கன்றைப் பலியிட்டபின் பிள்ளையை ஏலி என்பவரிடம் ஒப்படைத்தனர்.

26 அன்னா அவரை நோக்கி, "குருவே, நீர் உயிரோடு இருப்பது எப்படி உண்மையோ, அப்படியே உண்மையாகச் சொல்கிறேன்: இங்கு நின்று உமக்கு முன் ஆண்டவரை மன்றாடி வந்த அப்பெண் நானே.

27 இப்பிள்ளைக்காக மன்றாடினேன்; ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டருளினார். ஆகவே, இவனை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தேன்; இவன் வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்குச் சொந்தமாய் இருப்பான்" என்று சொன்னாள். பிறகு அவர்கள் அங்கு ஆண்டவரை வழிபட்டனர். அன்னா வேண்டிக்கொண்ட செபமாவது:

அதிகாரம் 02

1 ஆண்டவரிடத்தில் என் இதயம் அக்களிக்கின்றது. என் ஆண்டவரால் என் ஆற்றல் உயர்வடைந்துள்ளது. என் பகைவர்க்கு எதிராக என் வாய் திறக்கப்பட்டது; ஏனெனில் உமது மீட்பினால் நான் அகமகிழ்ந்தேன்.

2 ஆண்டவரைப்போல தூயவர் இல்லை; உம்மையன்றி வேறு ஒருவரும் இல்லை; நம் கடவுளுக்கு இணையான வல்லமை உள்ளவரும் இல்லை;

3 மாட்சிமைப்படுத்திக் கொண்டு மேன்மையானவற்றைப்பற்றி நீங்கள் அதிகம் பேச வேண்டாம். பழையன உங்கள் செவியினின்று அகலட்டும். ஏனெனில் ஆண்டவர் அனைத்தையும் அறிந்த இறைவன். எண்ணங்கள் எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கின்றன.

4 வலியோரின் வில் முறிந்து போனது; வலிமையற்றோர் வலிமையுற்றனர்.

5 முன்பு நிறைவு கொண்டிருந்தவர்கள் உணவிற்காகக் கூலிக்கு அமர்ந்தனர்; பசித்திருந்தவர்களோ பசி தீர்ந்தனர். மலடி பல மக்களைப் பெற்றாள்; பல பிள்ளைகளைப் பெற்றவளோ பலவீனமுற்றாள்.

6 ஆண்டவர் உயிரைப் பறிக்கிறார்; உயிரைக் கொடுக்கிறார். பாதாளங்களுக்குக் கொண்டு போகிறார்; அதினின்று மீண்டும் கொண்டு வருகிறார்.

7 ஆண்டவர் எளியவனாக்குகிறார்; செல்வராக்குகிறார். தாழ்த்துகிறார்; திரும்பவும் உயர்த்துகிறார்.

8 பெருமக்களுடன் அமர்ந்து புகழ் அரியனை ஏற ஏழையைத் தூசியினின்றும், எளியோனைக் குப்பையினின்றும் உயர்த்துகிறார். பூமியின் அடித்தளங்கள் ஆண்டவருக்குச் சொந்தம், அவற்றின் மேல் உலகை நிறுவினார்.

9 அவர் தம் புனிதர்களின் பாதங்களைக் காப்பார். தீயவர் இருளில் மௌனமாய் இருப்பர்; ஏனெனில், மனிதன் தன் வலிமையைக் கொண்டு தன்னைத் திடப்படுத்திக் கொள்ளமாட்டான்.

10 ஆண்டவரின் எதிரிகள் அவருக்கு அஞ்சி நடுங்குவர். அவர் விண்ணிலிருந்து அவர்கள் மேல் இடி இடிக்கச் செய்வார். ஆண்டவர் பூமியின் எல்லைகளைத் தீர்வையிடுவார்; அதன் ஆட்சியைத் தம் அரசனுக்குக் கொடுப்பார். தம் கிறிஸ்துவின் வல்லமையை உயர்த்துவார்."

11 பின்பு, ஏல்கானா ராமாத்தாவில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். பிள்ளையோ ஆண்டவர் திருமுன் ஏலி என்ற குருவின் முன்னிலையில் ஊழியம் செய்து வந்தான்.

12 ஆனால் ஏலியின் புதல்வர்கள் ஆண்டவரைப் பொருட்படுத்தாது பெலியாலின் புதல்வர்களாய் இருந்தனர்.

13 மக்கள்பால் நமக்கு உள்ள கடமைகளைக் குருக்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் பலியிடும் வேளையில் இறைச்சி வேகும் போது குருவின் ஊழியன் எவனாவது மூன்று பல்லுடைய கொக்கியைக் கைளோடு கொணர்ந்து,

14 கொப்பறையிலாவது அண்டாவிலாவது பானையிலாவது சட்டியிலாவது விடுவான். கொக்கியில் வருவதை எல்லாம் குரு தமக்கு எடுத்துக்கொள்வார். சீலோவிற்கு வருகிற எல்லா இஸ்ராயேலரிடத்தும் அவர்கள் இவ்வாறே செய்வார்கள்.

15 பலியின் கொழுப்பை எரிப்பதற்கு முன் குருவின் ஊழியன் வந்து பலியிடுபவனை நோக்கி, "குருவுக்குச் சமைக்க எனக்கு இறைச்சி கொடு, வெந்த இறைச்சியை உன்னிடத்தில் வாங்கமாட்டேன். வேகாததையே வாங்குவேன்" என்பான்.

16 பலியிடுபவன் அவனுக்கு மறுமொழியாக, "வழக்கப்படி இன்று கொழுப்பு முதலில் எரிந்து போகட்டும்; பிறகு நீ விரும்பும் அளவுக்கு எடுத்துக்கொள்" என்பான். ஊழியன் அவனுக்குப் பதில் மொழியாக, "அப்படியன்று, இப்போதே கொடுத்து விடு; இல்லாவிட்டால் நான் வலுக்கட்டாயமாய் எடுப்பேன்" என்பான்.

17 இவ்வாறு ஏலியின் புதல்வர்கள் ஆண்டவரின் பலியினின்று மக்களின் மனத்தைக் திருப்பினர். எனவே அவர்களுடைய குற்றம் ஆண்டவருக்கு முன் மிகப் பெரியதாயிருந்தது.

18 சிறுவன் சாமுவேல் மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட எபோதை உடுத்திக்கொண்டு ஆண்டவர் திரு முன் பணிவிடை செய்வான்.

19 அவன் தாய் அவனுக்கு ஒரு சிறு அங்கி தைத்து, வழக்கமான பலியைச் செலுத்தும்படி தன் கணவனுடன் தான் போகையில், குறித்த நாட்களில் அதைக் கொண்டு வந்து கொடுப்பாள்.

20 மேலும் ஏலி, ஏல்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து, அவனை நோக்கி, "நீ ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த இப்பிள்ளைக்காக ஆண்டவர் இப்பெண் மூலம் உனக்கு ஒரு வாரிசைக் கொடுப்பாராக!" என்றார். அவர்களும் தமது இல்லம் ஏகினர்.

21 ஆகையால் ஆண்டவர் அன்னாவைச் சந்தித்தார். அவள் கருவுற்று மூன்று புதல்வரையும் இரண்டு புதல்விகளையும் பெற்றாள். சிறுவன் சாமுவேல் ஆண்டவர் திருமுன் புகழ்பெற்றான்.

22 ஆனால் ஏலி முதிர் வயதினரான போது, தம் புதல்வர்கள் இஸ்ராயேலர் அனைவருக்கும் செய்து வந்த அனைத்தையும், கூடார வாயிலைக் காத்துவந்த பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததையும் கேள்விப்பட்டு, அவர்களை நோக்கி,

23 "எல்லா மக்களிடமிருந்தும் நான் கேள்விப்படும் இப்படிப்பட்ட இழி செயலை ஏன் செய்கிறீர்கள்?"

24 என் புதல்வரே, அப்படிச் செய்யவேண்டாம்; ஆண்டவரின் மக்கள் அவர் கட்டளையை மீறி நடக்கும்படி நீங்கள் செய்வதாக நான் கேள்விப்படுவது நல்லதன்று.

25 ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குத் தீமை செய்தால் கடவுள் அவனை மன்னிக்க முடியும்; ஆனால் மனிதன் ஆண்டவருக்கு எதிராகவே தீமை செய்தால் அவனுக்காக மன்றாடுவது யார்? என்றார். அவர்களோ தம் தந்தையின் சொல்லைக் கேட்கவில்லை. அதற்காக ஆண்டவர் அவர்களைக் கொல்லத் திருவுளம் கொண்டார்.

26 சிறுவன் சாமுவேலோ வளர்ந்து முன்னேறி ஆண்டவருக்கும் மனிதருக்கும் பிரியமானவனாய் இருந்து வந்தான்.

27 அப்போது கடவுளின் மனிதர் ஒருவர் ஏலியிடம் வந்து அவரை நோக்கி, "ஆண்டவர் சொல்லுவதாவது: 'எகிப்து நாட்டில் பரவோன் வீட்டில் இருந்த போது நாம் உன் தந்தை வீட்டாருக்கு நம்மை வெளிப்படுத்தவில்லையா?

28 அவர்கள் நமது பலிபீடத்தில் ஏறவும், நமக்குத் தூபம் காட்டவும், நம் முன்னிலையில் எபோதை அணியவும், இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களுக்குள்ளும் அவர்களைக் குருவாக நாம் தேர்ந்து கொண்டோம். உன் தந்தை வீட்டாருக்கு இஸ்ராயேல் மக்களின் எல்லாப் பலிகளிலும் பங்கு கொடுத்தோம்.

29 ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கும்படி நாம் கட்டளையிட்டிருந்த எம் பலியையும் காணிக்கைகளையும் நீங்கள் காலால் உதைத்துத் தள்ளியது ஏன்? நம் மக்களாகிய இஸ்ராயேலின் எல்லாப் பலிகளிலும் முந்தினவற்றை நீங்கள் உண்ணும்படி, நம்மை விட உன் பிள்ளைகளை அதிகமாய் மதித்தாயோ?'

30 ஆகையால் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'உன் வீடும் உன் தந்தை வீடும் என்றென்றும் நமது திருமுன் ஊழியம் செய்யும்படி உறுதியாகக் கூறியிருந்தோம்; இப்போதோ அவ்வாக்கு நம்மை விட்டு அகலக்கடவது. ஆனால் நம்மை மாட்சிப் படுத்துபவனை நாமும் மாட்சிப் படுத்துவோம். நம்மை பழிப்பவர் பழிக்கு ஆளாவர்.

31 இதோ, நாட்கள் வரும்; உன் வீட்டில் வயது முதிர்ந்தோர் இல்லாதபடி உன் புயத்தையும் உன் தந்தை வீட்டின் புயத்தையும் வெட்டுவோம்;

32 இஸ்ராயேலர் மேன்மையுற்றிருக்கையில் ஆலயத்தில் உன் பகைவரை நீ பார்ப்பாய்; என்றென்றும் உன் வீட்டில் முதியவர் இரார்.

33 ஆயினும் உன் கோத்திரத்தில் எல்லாரையும் நம் பீடத்தின்று நீக்கமாட்டோம். ஆனால் உன் கண்களைக் குருடாயும் உன் ஆன்மாவைச் சோர்வுள்ளதாயும் ஆக்குவோம். உன் வீட்டின் பெரும்பாலோர் ஆளாகும் போதே இறந்துபடுவர்;

34 ஒப்னி, பினேசு என்ற உன் இரு புதல்வர்களுக்கும் நடக்க விருப்பதே அதற்கு அடையாளமாகும்: இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.

35 பிறகு நம்மனதுக்கேற்றபடி நடக்கும் பிரமாணிக்கம் உள்ள குரு ஒருவனை நம் விருப்பப்படி ஏற்படுத்துவோம். அவனுக்கு நிலைத்து நிற்கும் வீடு ஒன்றைக் கட்டி எழுப்புவோம். அவன் நம் கிறிஸ்துவுக்கு முன் எந்நாளும் நடப்பான்.

36 அப்போது நடக்கவிருப்பதாவது: உன் வீட்டில் எஞ்சியிருப்பவன் எவனும் வந்து தனக்காக வேண்டிக்கொள்ளும்படி சொல்வான்; ஒரு வெள்ளிக்காசும் ஒரு ரொட்டியும் ஒப்புக்கொடுப்பான்; அப்போது அவன், "நான் ஒருவாய் ரொட்டி சாப்பிடும்படி நீங்கள் தயவு செய்து குருவுக்குரிய ஒரு பாகத்தை எனக்குக் கொடுங்கள்" என்று கெஞ்சி மன்றாடுவான்'" என்றார்.

அதிகாரம் 03

1 ஆனால் சிறுவன் சாமுவேல் ஏலிக்கு முன்பாக ஆண்டவருக்குப் பணிவிடை செய்து வந்தான். அந்நாட்களில் ஆண்டவரின் வாக்கு மிகவும் அருமையாய் இருந்தது. வெளிப்படையான காட்சியும் இல்லை.

2 ஒரு நாள் ஏலி தமக்கு உரிய இடத்தில் படுத்திருக்க, இதோ, அவரது பார்வை மங்கிப் போயிற்று. அவரால் பார்க்க முடியவில்லை.

3 கடவுளின் விளக்கு அணைக்கப்படுமுன்பே, கடவுளின் பேழை இருந்த ஆலயத்தில் சாமுவேல் தூங்கிக் கொண்டிருந்தான்.

4 ஆண்டவர் சாமுவேலைக் கூப்பிட்டார். அவன் மறுமொழியாக, "இதோ, இருக்கிறேன்" என்றான்.

5 உடனே ஏலியின் அருகில் ஓடி, "என்னைக் கூப்பிட்டீரே: இதோ, நிற்கிறேன்" என்றான். அவர் "நான் கூப்பிடவில்லை; திரும்பிப் போய் தூங்கு" என்றார். அப்படியே சாமுவேல் திரும்பிப் போய்த் தூங்கினான்.

6 ஆண்டவர் மறுமுறையும் சாமுவேலைக் கூப்பிட்டார். சாமுவேல் எழுந்து ஏலியின் அருகே போய், "என்னைக் கூப்பிட்டீரே: இதோ, நிற்கிறேன்" என்றான். ஏலி, "மகனே, நான் உன்னை அழைக்கவில்லை; திரும்பிப்போய்த் தூங்கு" என்று பதிலுரைத்தார்.

7 சாமுவேலோ ஆண்டவரை இன்னும் அறியவில்லை; ஆண்டவரின் வாக்கு அவனுக்கு தெரிவிக்கப்பட்டதுமில்லை.

8 மேலும் ஆண்டவர் மூன்றாம் முறை சாமுவேலைக் கூப்பிட்டார். அவன் எழுந்து ஏலியருகில் வந்து,

9 என்னை அழைத்தீரே; இதோ, நிற்கிறேன் என்றான். அப்போது ஆண்டவர் சிறுவனை அழைக்கிறதை ஏலி கண்டறிந்து சாமுவேலை நோக்கி, "நீ போய்த் தூங்கு. திரும்பவும் நீ அழைக்கப்பட்டால், 'ஆண்டவரே பேசும்; உம் அடியான் கேட்கிறான்' என்று சொல்வாயாக" என்றார். சாமுவேல் திரும்பிப்போய்த் தனது இடத்தில் தூங்கினான்.

10 ஆண்டவர் வந்து சாமுவேல் அருகே நின்று, "சாமுவேல், சாமுவேல்!" என்று முன் போலவே கூப்பிட்டார். சாமுவேல், "ஆண்டவரே, பேசும்; உம் அடியான் கேட்கிறான்' என்றான்.

11 ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "நாம் இஸ்ராயேலரிடையே ஒரு காரியம் செய்யவிருக்கிறோம். அது எத்தன்மைத்து என்றால் அதைக் கேட்போர் அனைவரும் அதிர்ச்சி அடைவர்.

12 அந்நாளில் ஏலியைப் பற்றியும் அவன் வீட்டைப்பற்றியும் நாம் கூறினவற்றை எல்லாம் நிகழச் செய்வோம்; துவக்கி முடிப்போம்.

13 ஏனெனில், தன் புதல்வர்கள் மதிகெட்டு நடந்ததை அறிந்திருந்தும், அவன் அவர்களைக் கண்டிக்காததால், அக் கொடுமைக்காக அவனையும் அவன் வீட்டையும் என்றென்றும் தீர்ப்பிட்டுத் தண்டிப்போம் என்று முன்பே அவனுக்குத் தெரிவித்திருந்தோம்.

14 ஆகவே, ஏலியின் பாவத்திற்குப் பலிகளாலும் காணிக்கைகளாலும் ஒருபோதும் பரிகாரம் செய்ய முடியாது என்று நாம் அவனுடைய வீட்டுக்கு ஆணையிட்டோம்" என்றார்.

15 சாமுவேல் காலை வரை தூங்கிய பின் ஆண்டவருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான். சாமுவேல் ஏலிக்குத் தான் கண்ட காட்சியைக் கூற அஞ்சினான்.

16 ஏலி சாமுவேலை அழைத்து, "சாமுவேல், என் மகனே!" என்றார். அதற்கு அவன், "இதோ நிற்கிறேன்" என்றான்.

17 ஏலி அவனைப் பார்த்து, "ஆண்டவர் உன்னிடம் பேசியது என்ன? ஒன்றையும் மறைக்காதபடி சொல்ல உன்னை வேண்டுகிறேன். உனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளில் எதையாவது நீ என்னிடம் மறைத்தால், கடவுள் உன்னைத் தண்டிப்பாராக" என்றார்.

18 அவருக்குச் சாமுவேல் எல்லாக் காரியங்களையும் ஒளிக்காது வெளிப்படுத்தினான். அப்பொழுது ஏலி, "அவர் ஆண்டவர்; அவர் தமக்கு நன்மை எனத் தோன்றுவதைச் செய்வாராக" என்று பதிலுரைத்தார்.

19 சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவரும் அவனுடன் இருந்தார். அவர் சொன்ன சொல்லில் ஒன்றும் வீண் போகவில்லை.

20 சாமுவேல் ஆண்டவரின் பிரமாணிக்கமான இறைவாக்கினர் என்று தான் துவக்கிப் பெத்சாபே வரை இஸ்ராயேலர் எல்லாரும் அறிந்து கொண்டனர்.

21 சாமுவேலுக்கு ஆண்டவர் முதலில் சீலோவில் தோன்றியதால் அவர் சொற்படி மறுமுறையும் சீலோவிலேயே அவனுக்குத் தோன்றலானார். சாமுவேல் இஸ்ராயேலர் அனைவருக்கும் கூறியவை நிறைவேறின.

அதிகாரம் 04

1 அந்நாட்களில் நிகழ்ந்ததாவது: பிலிஸ்தியர் போரிட ஒன்றுதிரண்டனர். இஸ்ராயேலர் பிலிஸ்தியரோடு போருக்குப் புறப்பட்டு, சனுகுப் பாறைக்கு அருகில் பாசறை அமைத்தனர். பிலிஸ்தியரோ அபேக் என்ற இடத்திற்கு வந்து,

2 இஸ்ராயலேருக்கு எதிராகப் போருக்கு அணிவகுத்து நின்றனர். போர் தொடங்கவே, இஸ்ராயேலர் பிலிஸ்தியருக்குப் புறங்காட்டி ஓடினார். அப்போரில் அங்குமிங்கும், நிலங்களிலும் ஏறக்குறைய நாலாயிரம் பேர் வெட்டுண்டு மாண்டனர்.

3 மக்கள் பாளையத்திற்குத் திரும்பி வந்தனர். அப்போது இஸ்ராயலேருக்குள் வயதில் முதிர்ந்தோர், "ஆண்டவர் பிலிஸ்தியருக்கு முன் இன்று நம்மை ஏன் தண்டித்தார்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியைச் சீலோவிலிருந்து நம்மிடம் கொண்டு வருவோமாக. நம் எதிரிகளின் கையினின்று நம்மை மீட்க நமது நடுவில் அது வருவதாக" என்றனர்.

4 மக்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பினர்; அங்கிருந்து கெரூபிம் மேல் அமர்ந்திருக்கும் சேனைகளின் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தனர். கடவுளின் உடன்படிக்கைப் பெட்டியோடு ஏலியின் புதல்வர் ஒப்னி, பினேசு இருவரும் இருந்தனர்.

5 ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டி பாளையத்திற்கு வந்த போது இஸ்ராயேலர் அனைவரும் நிலம் அதிர ஆர்ப்பரித்தனர்.

6 பிலிஸ்தியர் இப்பெரும் கூச்சலைக் கேட்டு, "எபிரேயர் பாளையத்தில் இப்பெரிய ஆரவாரத்திற்குக் காரணம் என்ன?" என்று சொல்லிக் கொண்டனர். ஆண்டவரின் பேழை பாளையத்தில் வந்திருந்ததாகப் பிறகு அறிந்து கொண்டனர்.

7 பிலிஸ்தியர் அஞ்சி, "கடவுள் பாளையத்திற்கு வந்துவிட்டார்" என்று சொல்லிக் கொண்டனர். மேலும், அவர்கள் பெருமூச்சு விட்டு,

8 "நமக்குக் கேடு வந்துற்றது! நேற்றும் முந்தாநாளும் இத்தனை மகிழ்ச்சி இருந்ததில்லையே! இத்தனை வல்லபமுள்ள கடவுள்களின் கைகளினின்று நம்மை மீட்பவன் யார்? பாலைவனத்தில் எகிப்து நாடு முழுவதையும் வதைத்த கடவுள் அவரே1

7294 626 9 4 9 பிலிஸ்தியரே, திடம்கொண்டு ஆண்மையுள்ளவர்களாய் இருங்கள்; எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாய் இருந்ததுபோல் நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இராதீர்கள். திடம் கொண்டு போரிடுங்கள் என்றனர்."

10 பிலிஸ்தியர் போரிட்டனர். இஸ்ராயேலர் தோல்வி அடைந்தனர். அனைவருமே தத்தம் கூடாரங்களுக்கு ஓடிப்போயினர். அப்போது கணக்கற்ற பேர் கொல்லப்பட்டனர்; இஸ்ராயேரில் முப்பதாயிரம் காலாட் படையினர் மடிந்தனர்.

11 கடவுளின் பேழையும் பிடிப்பட்டது. ஏலியின் புதல்வர்களாகிய ஒப்னியும் பினேசும் மாண்டனர்.

12 பெஞ்சமின் கோத்திரத்தான் ஒருவன் கிழிந்த சட்டைகளை உடுத்தியவனாயும், தலையில் புழுதி படிந்தவனாயும் அன்றே சீலோவுக்கு ஓடிவந்தான்.

13 அவன் வரும்போது ஏலி தன் இருக்கையில் அமர்ந்து வழியைப் பார்த்துக் கொண்டிருந்தார். கடவுளின் பேழையைப்பற்றி அவர் உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டிருந்தது. அம்மனிதன் நகரில் நுழைந்தபின் நடந்த போரைப்பற்றிக் கூறினான்; நகர் முழுவதும் புலம்பி அழுதது.

14 ஏலி அழுகைக் குரலைக் கேட்டு, "இத்தனை பெரிய கூக்குரல் ஏன்?" என்றார். அப்போது அம்மனிதன் விரைந்து வந்து ஏலிக்குச் செய்தியைக் கூறினான்.

15 ஏலிக்கு அப்போது தொண்ணுற்றெட்டு வயது. பார்வை மங்கிப் போனதால் அவரால் பார்க்க முடியவில்லை.

16 போரினின்று வந்தவன் நானே; இன்று படையினின்று ஓடிவந்தவன் நானே என்று அம்மனிதன் ஏலிக்குச் சொன்னான். "மகனே, என்ன நடந்தது?" என்று ஏலி அவனைக் கேட்டார்.

17 செய்தி தெரிவிக்க வந்தவன் மறு மொழியாக, "பிலிஸ்தியருக்குப் புறமுதுகு காட்டி இஸ்ராயேலர் ஓடிப்போனார்கள்; மக்களில் பலர் மாண்டுபோனார்கள். மிகவும் வருத்தத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சி என்னவென்றால், உம் இரு புதல்வர்களாகிய ஒப்னியும் பினேசும் இறந்து பட்டனர்; கடவுளின் பேழை பிடிபட்டுவிட்டது" என்றான்.

18 கடவுளின் பேழை என்ற சொல்லை அவன் சொன்னவுடனே, ஏலி இருக்கையினின்று கதவு அருகே மல்லாக்க விழுந்து தலை உடைய உயிர் நீத்தார். இவர் முதிர்ந்த வயதினர்; இஸ்ராயேலருக்கு நாற்பது ஆண்டுகளாக நீதி வழங்கி வந்தவர்.

19 அவருடைய மருமகளாகிய பினேசின் மனைவி கருவுற்றிருந்தாள்; பேறுகாலம் நெருங்கியிருந்தது; கடவுளின் பேழை பிடிபட்டதையும், தன் மாமனாரும் கணவனும் இறந்துபட்டதையும் கேள்விப்பட்டவுடனே திடீரென்று அவளுக்கு வேதனைகள் உண்டாகக் குனிந்து ஒரு மகவை ஈன்றெடுத்தாள்.

20 அவள் சாகும் தறுவாயில் அவள் அருகில் இருந்தவர்கள், "அஞ்சாதே, நீ ஒரு மகனைப் பெற்றாய்" என்றனர். அவள் அதைக் கவனிக்கவுமில்லை; மறுமொழி சொல்லவுமில்லை.

21 கடவுளின் பேழை பிடிபட்டுத் தன் மாமனாரும் கணவனும் இறந்து போனதால் இஸ்ராயேலரை விட்டுப் புகழ் நீங்கினது என்று சொல்லி, தன் குழந்தைக்கு இகாபோத் என்று பெயரிட்டாள்.

22 கடவுளின் பேழை பிடிபட்டதால் இஸ்ராயேலரை விட்டுப் புகழ் நீங்கினது" என்று சொன்னாள்.

அதிகாரம் 05

1 பிலிஸ்தியரோ கடவுளின் பேழையை எடுத்துக்கொண்டு சனுகுப் பாறையினின்று அசோத்துக்கு வந்தனர்.

2 பிலிஸ்தியர் கடவுளின் பேழையை எடுத்துக்கொண்டு தாகோன் கோவிலினுள் அதைக் கொணர்ந்து தாகோன் அருகில் இருந்தினர்.

3 அசோத்தியர் மறுநாள் அதிகாலையில் எழுந்தபோது, இதோ, ஆண்டவரின் பேழைக்கு முன் தாகோன் முகங்குப்புற விழுந்து கிடக்கக் கண்டனர். தாகோனைத் தூக்கி அந்த இடத்தில் வைத்தனர்.

4 மீண்டும் மறுநாள் காலையில் எழுந்த போது தாகோன் ஆண்டவரின் பேழைக்கு முன் முகங்குப்புற விழுந்து கிடக்கக் கண்டனர். தாகோன் தலையும் அதன் இரு உள்ளங்கைகளும் வாயிற்படியில் வெட்டுண்டு கிடந்தன.

5 தாகோனின் முண்டம் மட்டும் தன் இடத்தில் இருந்தது. இதன் காரணமாக, இன்று வரை தாகோன் குருக்களும் அதன் கோவிலில் நுழைபவர்கள் எல்லாருமே அசோத்திலுள்ள அந்தத் தாகோன் கோவிலின் வாயிற் படியை மிதிக்கிறதில்லை.

6 மேலும், ஆண்டவரின் கை அசோத்தியர்மேல் வன்மையாக விழுந்தது. அவர் அவர்களைத் தண்டித்தார். அசோத்திலும் அதன் எல்லைகளிலும் இருந்தவர்களுக்கு மறைவிடத்தில் நோய் வரச்செய்தார். அன்றியும் அந்நாட்டின் நடுவேயிருந்த ஊர்களிலும் வயல்களிலும் மக்கள் கலங்கும்படி கணக்கற்ற எலிப்படை தோன்றினது; ஊரிலும் சாவின் குழுப்பம் அதிகமாயிருந்தது.

7 அசோத் மனிதர் இத்துன்பத்தைப் பார்த்து, "இஸ்ராயேல் கடவுளின் பேழை நம்மிடம் இருக்கக்கூடாது. ஏனெனில் அவருடைய கை நம்மேலும் நம் தெய்வமாகிய தாகோன் மேலும் வன்மையாக விழுந்துள்ளது" என்றனர்.

8 பிலிஸ்தியர் ஆட்களை அனுப்பி, தம் நாட்டுத் தலைவர்களைக் கூட்டி, "இஸ்ராயேல் கடவுளின் பேழையை என்ன செய்யலாம்?" என்றனர். "இஸ்ராயேல் கடவுளின் பேழை இங்கே ஊர்வலமாக வரட்டும்" என்று கெத் நகர மக்கள் கூறினர். அதன்படியே இஸ்ராயேல் கடவுளின் பேழையை ஊர்வலமாய் எடுத்துச் சென்றனர்.

9 அதை அவர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்கையில் ஆண்டவரின் கை ஒவ்வொரு நாட்டிலும் பலரை மடியச் செய்தது. குழந்தை முதல் கிழவன் வரை ஒவ்வொரு நகரிலும் மனிதரை அவர் தண்டித்தார். அவர்கள் குடல்கள் வெளிப்பட்டு நாற்றம் வீசினது. கெத் நகரத்தார் ஆலோசனை செய்து தங்களுக்குத் தோலால் இருக்கைகள் செய்து கொண்டனர்.

10 பிறகு கடவுளின் பேழையை அக்கரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை அக்கரோனுக்கு வந்தபோது அக்கரோனியர், "எங்களையும் எங்கள் மக்களையும் கொல்ல இஸ்ராயேல் கடவுளின் பேழையை எங்களிடம் கொண்டு வந்துள்ளனர்" என்று சொல்லிக் கூச்சலிட்டார்கள்.

11 அப்பொழுது அவர்கள் பிலிஸ்தியருடைய ஆளுநர்களை வரவழைத்தனர். அவர்கள் வந்து கூட்டம் கூடி, "இஸ்ராயேல் கடவுளின் பேழை எங்களையும் எங்கள் மக்களையும் கொல்லாதபடி அதன் இருப்பிடத்திற்குத் திரும்ப அனுப்பி விடுங்கள்" என்றனர்.

12 உண்மையில், ஒவ்வொரு நகரிலும் சாவைப்பற்றிய அச்சம் இருந்து வந்தது. கடவுளின் கைவன்மை மிகக் கொடூரமாய் இருந்தது. சாகாத ஆண் பிள்ளைகள் தம் மறைவிடங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஒவ்வொரு நாட்டின் அழுகைக் குரலும் வான்மட்டும் எழும்பியது.

அதிகாரம் 06

1 ஆண்டவருடைய பேழை பிலிஸ்தியர் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.

2 பிலிஸ்தியர் தங்கள் குருக்களையும் சூனியக்காரர்களையும் அழைத்து, "ஆண்டவருடைய பேழையைப் பற்றி என்ன செய்யலாம்? அதை அதன் இருப்பிடத்திற்கு எப்படி அனுப்பலாம்?" என்று கேட்டனர்.

3 அதற்கு அவர்கள், "இஸ்ராயேல் கடவுளின் பேழையை அனுப்ப வேண்டுமானால், அதை வெறுமையாய் அனுப்ப வேண்டாம். ஆனால், நீங்கள் உங்கள் பாவங்களுக்காக அவருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்துங்கள். அப்போது நலம் பெறுவீர்கள். அவருடைய கை உங்களை விட்டு நீங்காது இருந்ததின் காரணத்தை அறிந்து கொள்வீர்கள்" என்றனர்.

4 பாவத்திற்காக அவருக்கு நாங்கள் செலுத்தவேண்டியது என்ன?" என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அதற்கு மறுமொழியாகக் கூறினதாவது:

5 உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரே நோய் கண்டிருப்பதனால், பிலிஸ்தியர் மாநிலங்களின் கணக்குப்படி ஐந்து பொன் குதங்களும் ஐந்து பொன் எலிகளும் செய்யக்கடவீர்கள். உங்கள் குதங்களின் உருவங்களையும், நிலத்தைப் பாழ்படுத்தி வரும் எலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ராயேல் கடவுளுக்கு ஒப்பு கொடுத்து அவரை மாட்சிப்படுத்துங்கள். ஒருவேளை அவர் உங்களிடமிருந்தும் உங்கள் தேவர்களினின்றும் உங்கள் பூமியினின்றும் தமது கைவன்மையை நீக்குவார்.

6 எகிப்து நாட்டாரும் பாரவோனும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்தினதுபோல், உங்கள் இதயங்களை ஏன் கடினப்படுத்துகிறீர்கள்? அவர்கள் வதைக்கப்பட்ட பின் இஸ்ராயேலர்களை அனுப்பிவிட நேரிட்டதே! அவர்களும் புறப்பட்டுச் செல்லவில்லையா?

7 இப்பொழுது புதுவண்டி ஒன்றைச் செய்து இன்னும் நுகத்தடி வைக்கப்படாத இரண்டு கறவைப் பசுக்களை அதில் பூட்டுங்கள்; அவற்றின் கன்றுகளை வீட்டில் அடைத்து வையுங்கள்.

8 ஆண்டவருடைய பேழையை எடுத்து வண்டியில் ஏற்றுங்கள். குற்றத்துக்குப் பரிகாரமாக அதற்குச் செலுத்துகிற தங்கப் பொருட்களைச் சிறு பெட்டியில் அடக்கி அதன் பக்கத்திலே வைத்துப் போகும்படி விடுங்கள்.

9 அப்பொழுது, அது தன் எல்லைகளின் வழியாய்ப் பெத்சாமேசை நோக்கி போனால், இப்பெரிய தீங்கை அவரே நமக்குச் செய்தார். வேறுவிதமானால், அவடைய கை ஒருபோதும் நம்மை தொட்டதில்லை; தற்செயலாய் நடந்தது என்று அறிந்து கொள்வீர்கள்."

10 அவ்விதமாய் அவர்கள் செய்தார்கள். கன்றுகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்த இரு பசுக்களைக் கொணர்ந்து வண்டியில் பூட்டி, அவற்றின் கன்றுகளை வீட்டில் அடைத்து வைத்தார்கள்.

11 ஆண்டவருடைய பெட்டகத்தையும், பொன் எலிகளும் குதங்களின் உருவங்களும் வைத்திருந்த பெட்டியையும் வண்டியில் வைத்தார்கள்.

12 பசுக்களோ பெத்சாமேசுக்குச் செல்லும் வழியாய் நேரே சென்று நடந்து கொண்டும் கதறிக்கொண்டும் ஒரே நடையாய் முன்சென்றன. வலமோ இடமோ திரும்பவேயில்லை. பிலிஸ்தியரின் ஆளுநர்களோ பெத்சாமேஸ் எல்லைகள் வரை பின் சென்றனர்.

13 அப்போது பெத்சாமித்தர் பள்ளத்தாக்கில் கோதுமை அறுத்துக் கொண்டிருந்தனர். கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது பேழையைக் கண்டனர். அதைப் பார்த்ததினால் மகிழ்ச்சி அடைந்தனர்.

14 வண்டி பெத்சாமித்தனாகிய யோசுவாவின் வயலுக்கு வந்து அங்கே நின்று விட்டது. அங்கு ஒரு பெரும் பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரங்களைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றின் மேல் பசுக்களை வைத்து ஆண்டவருக்குத் தகனப்பலி செலூததினார்கள்.

15 லேவியர் கடவுளின் பேழையையும் அதன் அருகில் தங்கப் பொருட்கள் இருந்த சிறு பெட்டியையும் இறக்கி, அந்தப் பாறைகளின் மேல் வைத்தனர். பெத்சாமித்த மனிதர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலிகளை ஒப்புக் கொடுத்தனர். அன்றே சமாதானப் பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.

16 பிலிஸ்தியரில் ஐந்து ஆளுநர்கள் இதைப் பார்த்து விட்டு அன்றே அக்கரோனுக்குத் திரும்பிப் போனார்கள்.

17 பிலிஸ்தியர் குற்றத்திற்காக அசோத், காஜா, அஸ்கலோன், கெத், அக்கரோன் ஆகிய நகர்கள் பொன் குதங்களைச் செலுத்தின.

18 பிலிஸ்தியர் தங்கள் நகர்களின் எண்ணிக்கைப்படி பொன் எலிகளையும் செலுத்தினர். கடல் துவக்கி ஆண்டவரின் பேழை இறக்கி வைக்கப்பட்ட பெரிய ஆபேல் வரையிலுமுள்ள ஐந்து மாநிலங்களில் இருந்த மதில் உள்ளதும், இல்லாததுமான நகர்கள் எல்லாம் பொன் எலிகளைச் செலுத்தி வந்தன. கடவுளின் பேழை இன்று வரை பெத்சாமித்தனாகிய யோசுவாவின் வயலில் இருக்கின்றது.

19 தம்முடைய பேழையைப் பார்த்தபடியால், ஆண்டவர் பெத்சாமேஸ் மனிதர்களைத் தண்டித்தார். பெருமக்களில் எழுபது பேரையும், சாதாரண மக்களில் ஐம்பதாயிரம் பேரையும் கொன்றார். ஆண்டவர் மக்களைப் பெரும் கொள்ளை நோயால் தண்டித்ததால், ஊரார் அழுதனர்.

20 பெத்சாமேஸ் மனிதர்கள், "ஆண்டவராகிய இத்தூய கடவுள் திருமுன் நிற்கக் கூடியவன் யார்? அவர் நம்மை விட்டு வேறுயாரிடம் செல்வார்?" என்றனர்.

21 பிறகு அவர்கள் கரியாத்தியாரிம் குடிகளுக்குத் தூதர்களை அனுப்பி, "பிலிஸ்தியர் ஆண்டவருடைய பேழையைத் திரும்பக் கொண்டு வந்துள்ளார்கள். நீங்கள் வந்து அதை உங்கள் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று சொல்லச் சொன்னார்கள்.

அதிகாரம் 07

1 அப்படியே கரியாத்தியாரிம் மனிதர்கள் வந்து ஆண்டவருடைய பேழையை எடுத்துப் போய்க் காபாவிலே அபினதாப் வீட்டில் நிறுவினார்கள். மேலும் அவன் மகன் எலெயசாரை ஆண்டவருடைய பேழையைக் காத்துக் கொள்ளும்படி அபிஷுகம் செய்தார்கள்.

2 ஆண்டவருடைய பேழை கரியாத்தியாரிமில் நிறுவப்பட்டபின், வெகுகாலம் அதாவது இருபது ஆண்டுகள் கடந்து போயின. அப்போது இஸ்ராயேல் வீடு முழுவதும் ஆண்டவருக்காக ஏங்கி நின்றது.

3 அக்காலத்தில் சாமுவேல் எல்லா இஸ்ராயேலர்களையும் பார்த்து, "நீங்கள் முழு இதயத்துடன் ஆண்டவரிடம் திரும்பி வருவதாயிருந்தால், உங்கள் நடுவிலிருந்து பாவால், அஸ்தரோத் என்ற அன்னிய தெய்வங்களை அகற்றிவிடுங்கள். ஆண்டவர்பால் உங்கள் இதயத்தைத் திருப்பி, அவரை மட்டும் வழிபட்டு வாருங்கள். அவரும் பிலிஸ்தியர் கையினின்று உங்களை மீட்பார்" என்றார்.

4 ஆகையால் இஸ்ராயேல் மக்கள் பாவாலையும் அஸ்தரோத்தையும் தள்ளிவிட்டு, ஆண்டவரை மட்டும் தொழுது வந்தனர்.

5 பிறகு சாமுவேல், "நான் உங்களுக்காக ஆண்டவரை மன்றாடும்படி, மாஸ்பாவில் இஸ்ராயேலர் அனைவரையும் ஒன்று திரட்டுங்கள்" என்று சொன்னார்.

6 அப்படியே அவர்கள் மாஸ்பாவில் கூடி, நீரை மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றினார்கள். அன்று நோன்பு காத்து, "ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தோம்" என்று அங்குச் சொன்னார்கள். சாமுவேல் மாஸ்பாவில் இஸ்ராயேல் மக்களுக்கு நீதி வழங்கினார்.

7 அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவில் கூடியிருக்கிறார்கள் என்று பிலிஸ்தியர் கேள்விப்பட்டு பிலிஸ்தியரின் ஆளுநர்கள் இஸ்ராயேல் மேல் படையெடுத்தார்கள். இஸ்ராயேல் மக்கள் அதைக் கேள்விப்பட்டுப் பிலிஸ்தியருக்கு அஞ்சினார்கள்.

8 மேலும், சாமுவேலை நோக்கி, "பிலிஸ்தியர் கையினின்று எங்களை மீட்கும்படி நம் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் நீர் எமக்காக மன்றாடுவதை விட்டு விடாதேயும்" என்று கூறினர்.

9 அப்போது சாமுவேல் பால் குடிக்கிற ஓர் ஆட்டுக்குட்டியைப் பிடித்து அதை ஆண்டவருக்குத் தகனப்பலியாக ஒப்புக்கொடுத்தார். இஸ்ராயேலுக்காக ஆண்டவரை நோக்கி மன்றாடினார். ஆண்டவரும் அவரது மன்றாட்டைக் கேட்டருளினார்.

10 சாமுவேல் பலி ஒப்புக் கொடுக்கையில் பிலிஸ்தியர் இஸ்ராயேலருடன் போரிடும்படி நேரிட்டது; அன்று ஆண்டவர் பிலிஸ்தியர் மேல் பேரோசையுடன் இடி இடிக்கச் செய்து அவர்களை அச்சுறுத்தினார். அவர்கள் இஸ்ராயேலர் முன் மாண்டார்கள்.

11 இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவினின்று புறப்பட்டுப் பெத்காருக்குக்கீழ் இருந்த இடம் வரை பிலிஸ்தியரைப் பின்தொடர்ந்து வெட்டி வீழ்த்தினார்கள்.

12 சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மாஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவில் அதை நிறுத்திவைத்து, அந்த இடத்திற்குச் சனுகுப்பாறை என்று பெயரிட்டார்: "இதுவரை ஆண்டவர் நமக்கு உதவியாய் இருந்தார்" என்று சொன்னார்.

13 பிலிஸ்தியர் தாழ்வுற்றனர். அதற்குமேல் அவர்கள் இஸ்ராயேலின் எல்லைகளில் வரத் துணியவில்லை; சாமுவேலின் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருடைய கை பிலிஸ்தியர்மேல் இருந்தது.

14 பிலிஸ்தியர் இஸ்ராயேல் கையிலிருந்து கெத் முதல் அக்கரோன் வரை கைப்பற்றின நகர்களும் அவற்றின் எல்லைகளும் இஸ்ராயேலுக்குக் கொடுக்கப்பட்டன. பிலிஸ்தியர் கையினின்று சாமுவேல் இஸ்ராயேலை மீட்டார். அமோறையருக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே அமைதி நிலவி வந்தது.

15 சாமுவேல் தம் வாழ்நாள் முழுதும் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்தார்.

16 ஆண்டுதோறும் அவர் பேத்தல், கல்கலா, மாஸ்பாவிற்குச் சுற்றுப்பயணம் செய்து, அவ்விடங்களில் இஸ்ராயேலுக்கு நீதி வழங்குவார்.

17 பிறகு ராமாத்தாவுக்குத் திரும்பி வருவார். அங்கு அவருடைய வீடு இருந்தது. அங்கும் அவர் இஸ்ராயேலுக்கு நீதி வழங்குவது வழக்கம். அங்கு அவர் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

அதிகாரம் 08

1 பின்னர் நிகழ்ந்ததாவது: சாமுவேல் முதியவரானபோது தம் புதல்வர்களை இஸ்ராயலுக்கு நீதிபதிகளாக நியமித்தார்.

2 பெர்சபேயில் நீதிபதிகளான அவருடைய மூத்த மகனின் பெயர், ஜோயேல், இரண்டாவது மகனின் பெயர் அபியா.

3 அவர் சென்ற வழியிலே அவருடைய புதல்வர்கள் செல்லவில்லை; பண ஆசைகொண்டு, கையூட்டுகளைப் பெற்றுக் கொண்டு நியாயத்தைத் திரித்துக் கூறினார்கள்.

4 அப்போது இஸ்ராயேலின் முதியோர் அனைவரும் ஒன்று கூடி ராமாத்தாவில் இருந்த சாமுவேலிடம் வந்தனர்.

5 அவரை நோக்கி "இதோ நீர் முதியவரானீர். உம் மக்கள் நீர் நடந்த வழியில் நடக்கிறதில்லை; எமக்கு நீதி வழங்க, மற்ற நாடுகளுக்கெல்லாம் இருப்பது போல் எங்களுக்கும் ஓர் அசரனை ஏற்படுத்தும்" என்று சொன்னார்கள்.

6 'நீதி வழங்க ஓர் அரசனை எங்களுக்குக் கொடும்' என்ற அவர்களின் முறையீடு சாமுவேலுக்குப் பிடிக்கவில்லை. சாமுவேல் ஆண்டவரை மன்றாடினார்.

7 ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "மக்கள் உன்னிடம் சொல்வதை எல்லாம் கேள். உன்னை அவர்கள் புறக்கணித்து விடவில்லை; நாம் அவர்களை ஆளவிடாதபடி நம்மைத்தான் புறக்கணித்து விட்டார்கள்.

8 அவர்களை நாம் எகிப்து நாட்டினின்று மீட்ட நாள் முதல் இன்று வரை அவர்கள் செய்த செயல்கள் எல்லாம் இப்படித்தான். நம்மை விட்டு அன்னிய தெய்வங்களை வழிபடுவது போல உனக்கும் செய்கிறார்கள்.

9 இப்போது அவர்கள் சொல்லுக்குச் செவிகொடு: ஆயினும், அவர்களுடன் விவாதித்து அவர்களை ஆளப்போகிற அரசனின் உரிமையை அவர்களுக்கு முன்னறிவி" என்றார்.

10 எனவே ஆண்டவர் கூறியவற்றை எல்லாம் சாமுவேல் தங்களுக்கு அரசன் வேண்டுமென்று கோரிய மக்களிடம் கூறினார்.

11 மீண்டும், "உங்களை ஆளப்போகிற அரசனின் உரிமை இதோ. அவன் உங்கள் பிள்ளைகளை எடுத்துத் தன் தேர்களை ஓட்ட வைத்துக் கொள்வான்; தனக்குக் குதிரை வீரர்களாகவும், தன் நான்கு குதிரைத் தேருக்கு முன் ஓடுகிறவர்களாகவும் செய்வான்.

12 அவன் அவர்களை ஆயிரம்பேருக்கும் நூறுபேருக்கும் தலைவர்களாகவும், தன் நிலங்களை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், ஆயுதங்கள், தேர்கள் செய்கிறவர்களாகவும் ஏற்படுத்துவான்.

13 உங்கள் புதல்விகளையோ தனக்குப் பரிமளக்காரிகளாகவும் சமையற்காரிகளாகவும் உரொட்டி செய்கிறவர்களாகவும் வைத்துக் கொள்வான்.

14 மேலும் உங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையம், ஒலிவ மரங்களில் நல்லவற்றையும் எடுத்துக் கொண்டு தம் ஊழியர்களுக்குக் கொடுப்பான்.

15 தன் அண்ணகர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொடுக்கும் பொருட்டு, உங்கள் விளைச்சல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் பத்தில் ஒரு பங்கு கேட்பான்.

16 உங்கள் வேலைக்காரர் வேலைக்காரிகளையும், நல்ல இளைஞர்களையும் கழுதைகளையும் தன் வேலைக்கு வைத்துக்கொள்வான்.

17 உங்கள் மந்தைகளிலே பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான்; நீங்கள் அவனுக்கு ஊழியர்களாய் இருப்பீர்கள்.

18 நீங்களே தேர்ந்து கொண்ட உங்கள் அரசனுக்கு எதிராய் நீங்கள் முறையிடும் நாள் வரும். ஆனால், நீங்களே அரசனை விரும்பினதால் ஆண்டவர் அந்நாளில் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டார்" என்றார்.

19 மக்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனமின்றி, "அப்படியன்று; எங்களுக்கு ஓர் அரசன் இருக்கத்தான் வேண்டும்" என்றனர்.

20 எல்லா இனத்தையும் போல நாங்களும் இருப்போம்; எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவான்; எங்களுக்கு முன் சென்று எங்கள் பொருட்டுப் போரிடுவான்" என்றனர்.

21 சாமுவேல் மக்கள் கூறியவற்றை எல்லாம் கேட்டு அவற்றை ஆண்டவருக்குத் தெரியப்படுத்தினார்.

22 ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "நீ அவர்கள் சொல்லைக்கேட்டு அவர்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்து" என்றார். அப்போது சாமுவேல் மக்களைப் பார்த்து, "அனைவரும் தத்தம் நகருக்குச் செல்லலாம்" என்று கூறினார்.

அதிகாரம் 09

1 பெஞ்சமின் கோத்திரத்தில் சீஸ் என்ற பெயருள்ள ஆற்றல் வாய்ந்த ஒரு மனிதன் இருந்தான். இவன் அபயேல் மகன்; இவன் சேரோர் மகன்; இவன் பெக்கோராத் மகன்; இவன் அபியா மகன்; இவன் பெஞ்சமின் கோத்திரத்தானான ஒரு மனிதனின் மகன்.

2 அவனுக்குச் சவுல் என்ற பெயருள்ள மகன் ஒருவன் இருந்தான். இவன் மிகவும் சிறந்தவன், நல்லவன். இஸ்ராயேல் மக்களில் இவனைவிட அழகு வாய்ந்தவன் வேறு ஒருவனும் இல்லை. அவர்கள் அனைவரும் இவருடைய தோள் உயரமே இருந்தனர்; இவன் அவர்களை விட உயர்ந்தவன்.

3 சவுலின் தந்தை சீஸ் என்பவனின் கழுதைகள் காணாமல் போயின. சீஸ் தன் மகன் சவுலை நோக்கி, "வேலைகாரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு போய்க் கழுதைகளைத் தேடு" என்றான்.

4 அவர்கள் இருவரும் எபிராயீம் மலையிலும் சலிசா நாட்டிலும் அவற்றைத் தேடி அங்குக் காணாததால், அவற்றைக் கடந்து சலிம் நாட்டுக்கு வந்தார்கள். அங்கேயும் காணவில்லை. ஜெமினி நாட்டில் கூடத்தேடியும் அகப்படவில்லை.

5 அவர்கள் சூப் என்ற நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னுடன் இருந்த ஊழியனை நோக்கி, "என் தந்தை ஒருவேளை கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு நம் பேரில் ஏக்கமாயிருக்கலாம். எனவே, வா, திரும்பிப் போவோம்" என்றான்.

6 அதற்கு அவன், "இந்த ஊரிலே கடவுளின் மனிதர் ஒருவர் இருக்கிறார்; அவர் பெருமகனார். அவர் சொல்வதெல்லாம் தவறாது நடக்கும். இப்போது அங்குப் போவோம். நாம் எதற்காக வந்தோமோ அந்த வழியை அவர் ஒருவேளை நமக்குக் காட்டுவார்" என்றான்.

7 அப்போது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து, "சரி, வா, போவோம். ஆனால் கடவுளின் மனிதருக்கு என்ன கொண்டு போவது? நம் சாக்குகளில் உரொட்டி இல்லை. கடவுளின் மனிதருக்குக் கொடுக்கப் பணமும் இல்லை" என்று சொன்னான்.

8 திரும்பவும் ஊழியன் சவுலுக்கு மறுமொழியாக, "ஸ்தாதேர் என்ற வெள்ளிக் காசில் கால்பங்கு என்னிடம் இருக்கிறது. நமக்கு வழி காட்டும்படி கடவுளின் மனிதருக்கு அதைக் கொடுப்போம்" என்றான்.

9 முற்காலத்தில் இஸ்ராயேலில் கடவுளிடம் ஆலோசனை கேட்கப்போகிற எவனும், "திருக்காட்சியாளரிடம் போவோம். வாருங்கள்" என்பான்; ஏனெனில், இன்று இறைவாக்கினர் என்று சொல்லப்படுகிறவர் அக்காலத்திலே திருக்காட்சியாளர் என்று அழைக்கப்பட்டு வந்தார்.

10 சவுல் வேலைக்காரனை நோக்கி, "நீ சொல்வது தான் நல்லது; வா, போவோம்" என்று சொன்னான். அப்படியே அவர்கள் கடவுளின் மனிதரிருந்த நகருக்குப் போனார்கள்.

11 அவர்கள் நகரின் மேட்டில் ஏறினபோது பெண்கள் தண்ணீர் மொள்ள வரக்கண்டு, "இங்குத் திருக்காட்சியாளர் இருக்கிறாரா?" என்று அவர்களைக் கேட்டனர்.

12 அவர்கள் அதற்கு மறுமொழியாக, "ஆம், இதோ உங்களுக்கு முன் இருக்கிறார்; உடனே விரைந்து போங்கள்; இன்று மக்கள் மேட்டில் பலியிடுவதனால் அவர் இன்று நகருக்கு வந்திருக்கிறார்.

13 நீங்கள் நகரில் நுழைந்தவுடன் அவர் சாப்பிட மேட்டிற்கு ஏறிச் செல்லும் முன் அவரைக் காண்பீர்கள்; அவர் வரும் வரை மக்கள் சாப்பிடாது இருப்பார்கள்; ஏனெனில் அவர் பலியை ஆசீர்வதித்த பின்பே அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள். இப்போது ஏறிச்செல்லுங்கள். அவரை இன்று காணலாம்" என்றனர்.

14 அவர்கள் நகருக்குள் போய் நகரின் நடுவே வந்து சேர்ந்தனர். அப்போது சாமுவேல் மேட்டின் மேல் ஏறுகிறதற்குப் புறப்பட்டு வரக் கண்டனர்.

15 மேலும் சவுல் வர ஒரு நாளைக்கு முன்பே ஆண்டவர் சாமுவேலுக்கு வெளிப்படுத்தி,

16 நாளை இதே நேரத்தில் பெஞ்சமின் நாட்டானாகிய ஒரு மனிதனை உன்னிடம் அனுப்புவோம்; நம் மக்களாகிய இஸ்ராயேலுக்குத் தலைவனாக அவனை அபிஷுகம் செய்வாய். அவன் பிலிஸ்தியர் கையினின்று நம் மக்களை மீட்பான். ஏனெனில், நம் மக்களைக் கண்ணோக்கினோம்; அவர்கள் குரலொலி நமக்கும் எட்டியது" என்று சொல்லியிருந்தார்.

17 சாமுவேல் சவுலைக் கண்ட போது, "இதோ, நாம் உனக்குச் சொன்ன மனிதன்; அவன் தான் நம் மக்களை ஆளுவான்" என்று ஆண்டவர் அவருக்குச் சொன்னார்.

18 சவுல் வாயில் நடுவில் சாமுவேலை அணுகி, "திருக்காட்சியாளருடைய வீடு எது எனத் தயவு செய்து காண்பியும்" என்றான்.

19 சாமுவேல் சவுலுக்கு மறுமொழியாக, "திருக்காட்சியாளர் நானே. என்னுடன் இன்று சாப்பிடும்படி எனக்கு முன் மேட்டிற்கு ஏறிப்போ; நாளை உன்னை அனுப்பி வைப்பேன்; உன் உள்ளத்தில் இருப்பவற்றை எல்லாம் உனக்குச் சொல்வேன்.

20 மூன்று நாளுக்கு முன் இழந்த கழுதைகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவை கிடைத்து விட்டன. இஸ்ராயேலில் சிறந்தவை யாருக்கு இருக்கும்? உனக்கும் உன் தந்தை வீட்டுக்கும் அல்லவா?" என்றார்.

21 சவுல் மறுமொழியாக, "நானோ இஸ்ராயேலின் மிகச்சிறிய கோத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி மகன். என் சந்ததியும் பெஞ்சமின் கோத்திரத்து வம்சங்களில் எல்லாம் மிகவும் அற்புதமானது. அப்படியிருக்க நீர் இவ்வாறு என்னிடம் பேசுவது ஏன்?" என்றான்.

22 சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் கூட்டிக்கொண்டு அவர்களை உணவறைக்குள் அழைத்துக் போய், அழைக்கப்பட்டவர்களுக்குள் முதலிடத்தை அவர்களுக்குக் கொடுத்தார். ஏறக்குறைய முப்பது மனிதர்கள் அங்கு இருந்தனர்.

23 சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து, "நான் உன் கையிலே ஒரு பாகத்தைக் கொடுத்து அதைப் பாதுகாத்து வைக்கச் சொல்லியிருந்தேனே, அதைக் கொண்டு வந்து வை" என்றார்.

24 அதற்குச் சமையற்காரன் ஒரு முன்னந் தொடையை எடுத்துச் சவுல்முன் வைத்தான். அப்பொழுது சாமுவேல், "இதோ, அது உனக்கென்று வைக்கப்பட்டது; அதை உன்முன் வைத்துச் சாப்பிடு. நான் மக்களை அழைத்த போது அது உனக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டது" என்று சொன்னார். அன்று சவுல் சாமுவேலுடன் சாப்பிட்டான்.

25 பிறகு அவர்கள் மேட்டிலிருந்து நகருக்கு இறங்கி வந்தனர். சாமுவேல் மேல் மாடியில் சவுலோடு பேசினார். சவுல் மேல் மாடியில் படுக்கை தயாரித்துத் தூங்கினான்.

26 இருவரும் காலையில் எழுந்திருந்தனர். வெளிச்சமான போது, சாமுவேல் மேல் மாடியிலிருந்த சவுலைக் கூப்பிட்டு, "உன்னை அனுப்பி வைக்க வேண்டும்; எழுந்து வா" என்றார். சவுலும் அப்படியே எழுந்து வந்தான். பிறகு இருவரும் புறப்பட்டு சென்றனர்.

27 அவர்கள் நகர எல்லையை அடைந்த போது சாமுவேல் சவுலைப் பார்த்து, "உன் வேலைக்காரனை நமக்கு முன் நடந்து போகச்சொல். நீ சற்று நில்; நான் ஆண்டவருடைய வார்த்தையை உனக்குத் தெரிவிப்பேன்" என்றார்.

அதிகாரம் 10

1 அப்போது சாமுவேல் ஓர் எண்ணெய்ச் சிமிழை எடுத்து அவன் தலையின் மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு, "இதோ ஆண்டவர் தமது உரிமையின் பேரில் மன்னனாக உன்னை அபிஷுகம் செய்தார். நீ அவருடைய மக்களைச் சூழ்ந்திருக்கும் எதிரிகளின் கையிலிருந்து அவர்களை மீட்பாய்; ஆண்டவர் உன்னை மன்னனாக அபிஷுகம் செய்ததற்கு அடையாளம் இதுதான்:

2 இன்று நீ என்னை விட்டுப் போகும் போது நண்பகல் வேளையில் பெஞ்சமின் எல்லைகளில் இராக்கேல் கல்லறை அருகே இரண்டு மனிதர்களைக் காண்பாய். அவர்கள் உன்னைப் பார்த்து, 'நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டன; உன் தந்தை கழுதைகளைப் பற்றிய கவலையை விடுத்து உங்களைப் பற்றிக் கவலையோடு, "என் மகனைக் குறித்து என்ன செய்வேன்?" என்கிறார்' என்று சொல்வார்கள்.

3 நீ அவ்விடம் விட்டு அப்பால் சென்று தாபோரிலுள்ள கருவாலி மரத்தருகே வரும் போது கடவுளைத் தொழுது வரும்படி பேத்தலுக்குச் சென்று கொண்டிருக்கும் மூன்று மனிதர்களை அங்குக் காண்பாய். அவர்களுள் ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று வட்டமான அப்பளங்களையும், மூன்றாமவன் ஒரு துருத்திச் திராட்சை இரசத்தையும் கொண்டிருப்பார்கள்.

4 அவர்கள் உனக்கு வாழ்த்துக் கூறினபின் உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவர்கள் கையினின்று அவற்றைப் பெற்றுக் கொள்.

5 அதற்குப்பின் பிலிஸ்தியர் பாளையம் இருக்கிற கடவுளின் மலைக்கு வா. அங்கு நீ ஊரில் நுழையும் போது, மேட்டினின்று இறங்கும் இறைவாக்கினர்கள் கூட்டத்தைச் சந்திப்பாய்.

6 அவர்களுக்கு முன் யாழ், மேளம், குழல், சுரமண்டலம் முதலியன செல்லும். அவர்கள் இறைவாக்கினர்கள். அப்பொழுது ஆண்டவருடைய ஆவி உன்மேல் இறங்கும். அவர்களுடன் நீயும் இறைவாக்கு உரைத்து, புது மனிதனாவாய்.

7 இந்த அடையாளங்கள் எல்லாம் உனக்கு நேரிடும் போது உன்னால் செய்ய முடிந்தவற்றை எல்லாம் செய். ஏனெனில் ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.

8 தகனப் பலியை ஒப்புக்கொடுக்கவும், சமாதானப் பலிகளைச் செலுத்தவும், நீ எனக்கு முன் கல்கலாவுக்கு இறங்கிப்போ. நான் உன்னிடம் வருவேன். நான் உன்னிடம் வரும் வரை ஏழுநாள் காத்திருப்பாய்; நீ செய்ய வேண்டியதை நான் உனக்குக் காண்பிப்பேன்" என்றார்.

9 அவன் சாமுவேலை விட்டுப் போகத் திரும்பினவுடன் கடவுள் அவன் உள்ளத்தை மாற்றினார். அன்று அந்த அடையாளங்கள் எல்லாம் நிறைவேறின.

10 அவர்கள் முன் கூறப்பட்ட மலைக்கு வந்த போது, இதோ இறைவாக்கினர் கூட்டம் அவனுக்கு எதிரே வந்தது. ஆண்டவருடைய ஆவி அவர் மேல் இறங்கினது. அவரும் அவர்கள் நடுவில் இறைவாக்கு உரைத்தார்.

11 நேற்றும் முந்தின நாளும் அவரை அறிந்திருந்தவர்கள் எல்லாம் அவர் இறைவாக்கினர் நடுவில் இருப்பதையும், இறைவாக்கு உரைப்பதையும் கண்டனர்; "சீஸ் மகனுக்கு என்ன நேர்ந்தது? சவுலும் இறைவாக்கினர்களில் ஒருவனோ?" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.

12 அதற்கு ஒருவருக்கு ஒருவர் மறுமொழியாக, "அவர்கள் தகப்பன் யார்?" என்றனர். இதனால், "சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?" என்ற பழமொழி வழங்கிற்று.

13 பிறகு அவர் இறைவாக்கு உரைப்பதை விட்டு விட்டு மேட்டை அடைந்தார்.

14 சவுலுடைய சிற்றப்பன் அவரையும் அவர் ஊழியனையும் கண்டு, "நீங்கள் எங்கே போனீர்கள்?" என்று கேட்டான். அவர்கள், "கழுதை தேடப்போனோம்; அவற்றைக் காணாததால் சாமுவேலிடம் போனோம்" என்று மறுமொழி சொன்னார்கள்.

15 அவருடைய சிற்றப்பன், "சாமுவேல் உனக்குச் சொன்னதை எனக்குத் தெரிவி" என்று அவரைக் கேட்டுக் கொண்டான்.

16 சிற்றப்பனைப் பார்த்து சவுல், "கழுதைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் எங்களுக்குத் தெரிவித்தார்" என்றார். சாமுவேல் தம்மிடத்தில் கூறியிருந்த அரசாங்க காரியங்களைப் பற்றி அவனுக்கு ஒன்றும் அறிவிக்கவில்லை.

17 பிறகு சாமுவேல் மக்களை மாஸ்பாவில் ஆண்டவர் திருமுன் வரவழைத்தார்.

18 இஸ்ராயேல் மக்களை நோக்கி, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்வதாவது: 'இஸ்ராயேலை எகிப்தினின்று புறப்படச் செய்து எகிப்தியர் கையினின்றும், உங்களைத் துன்பப்படுத்தின எல்லா அரசர்கள் கையினின்றும் உங்களை மீட்டது நாமே.

19 நீங்களோ எல்லாத் தீமைகளினின்றும் இன்னல்கள் அனைத்தினின்றும் உங்களை மீட்ட உங்கள் கடவுளையே இன்று புறக்கணித்துத் தள்ளி, எங்களை ஆள எங்களுக்கு அரசனை ஏற்படுத்தும் என்று சொன்னீர்கள்' என்றார். இப்போது உங்கள் கோத்திரப்படியும் குடும்பப்படியும் ஆண்டவர் திருமுன் நில்லுங்கள்" என்றார்.

20 சாமுவேல் இஸ்ராயேல் கோத்திரத்துக்கெல்லாம் சீட்டுப்போட்டார். சீட்டு பெஞ்சமின் கோத்திரத்தின் மேல் விழுந்தது.

21 பெஞ்சமின் கோத்திரத்துக்கும் அவன் உறவினர்களுக்கும் சீட்டுப்போட்டார். அது மேத்ரி வம்சத்தின் மேல் விழுந்தது. இவ்விதமாகச் சீஸ் மகனாகிய சவுல் வரை வந்தது. அவர்கள் அவரைத் தேடினார்கள்; ஆனால் காணவில்லை.

22 அதன் பின், "அவர் இங்கு வருவாரா?" என்று ஆண்டவரைக் கேட்டார்கள். "இதோ, அவன் வீட்டில் ஒளிந்திருக்கிறான்" என்று ஆண்டவர் மறுமொழி சொன்னார்.

23 அவர்கள் ஓடி அவரை அங்கிருந்து கொண்டு வந்தார்கள். அவர் மக்களின் நடுவில் நின்றார்; எல்லா மக்களும் அவர் தோள் உயரமே இருந்தார்கள்.

24 அப்பொழுது சாமுவேல் எல்லா மக்களையும் நோக்கி, "மக்கள் அனைவரிலும் அவருக்கு இணை யாரும் இல்லாததால், ஆண்டவர் யாரைத் தேர்ந்து கொண்டுள்ளார் என்று நன்றாய்க் கண்டுகொண்டீர்கள்" என்றார். அப்பொழுது மக்கள் எல்லாரும், "அரசே, வாழி!" என்று ஆர்ப்பரித்தனர்.

25 சாமுவேல் அரச சட்டத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி அதை ஒரு நூலில் எழுதி ஆண்டவருக்கு முன் வைத்தார். சாமுவேல் மக்கள் அனைவரையும் ஒவ்வொருவராய் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

26 சவுலும் காபாவிலுள்ள தம் வீட்டுக்குப் போனார். படையில் சேரும்படி எவரெவரைக் கடவுள் தூண்டினாரோ அவர்கள் அவருடன் போனார்கள்.

27 ஆனால் பெலியாலின் மக்கள், "இவனா நம்மைக் காப்பாற்றப்போகிறான்?" என்று சொன்னார்கள். இவர்கள் அவரை இகழ்ந்து அவருக்குப் பரிசில்கள் அளிக்கவில்லை. அவரோ காது கோளாதவர் போல் இருந்தார்.

அதிகாரம் 11

1 ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பின் நிகழ்ந்ததாவது: அம்மோனியனாகிய நாவாஸ் எழுந்து காலாதில் ஜாபேசுக்கு எதிராகப் போரிடத் தொடங்கினான். ஜாபேசின் மனிதர்கள் எல்லாம் நாவாசை நோக்கி, "எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்; அப்போது நாங்கள் உனக்குப் பணிவிடை செய்வோம்" என்று சொன்னார்கள்.

2 அம்மோனியனாகிய நாவாஸ் மறுமொழியாக, "உங்கள் எல்லோருடைய வலக்கண்களையும் பிடுங்குவேன்; இஸ்ராயேலர்அனைவரும் உங்களைப் பழிக்கச் செய்வேன். இது தான் நான் உங்களுடன் செய்யும் உடன்படிக்கை" என்றான்.

3 அதற்கு ஜாபேசின் மூப்பர்கள், "இஸ்ராயேல் எல்லைகள் முழுவதற்கும் தூதர்களை அனுப்பும்படி எங்களுக்கு ஏழுநாள் தவணை கொடு. எங்களைக் காப்பாற்ற ஒருவனும் இல்லாவிட்டால் உன்னிடம் திரும்பி வருவோம்" என்றனர்.

4 தூதர்கள் சவுலின் ஊராகிய காபாவிற்கு வந்து, மக்கள் கேட்க அந்தச் செய்திகளை எல்லாம் சொன்னார்கள். மக்கள் அனைவரும் கதறி அழுதார்கள்.

5 அவர்கள் அழுது கொண்டிருந்த நேரத்தில் சவுல் வயலினின்று எருதுகளை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். "மக்கள் அழக் காரணம் என்ன?" என்றார். அவர்கள் ஜாபேசின் மனிதர்கள் தங்களுக்குச் சொன்னவற்றை அவருக்கு விவரித்தார்கள்.

6 சவுல் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், ஆண்டவருடைய ஆவி அவர் மேல் இறங்கினது. அவர் மிகுந்த கோபமுற்று,

7 தன் இரு எருதுகளையும் பிடித்துத் துண்டு துண்டாய் வெட்டி அந்தத் தூதர்கள் கையில் கொடுத்து, இஸ்ராயேல் எல்லைகள் முழுவதற்கும் அனுப்பி, "சவுலையும் சாமுவேலையும் பின்செல்லாதவனுடைய மாடுகளுக்கு இவ்வாறே நேரும்" என்று சொல்லச் சொன்னார். மக்கள் ஆண்டவர்பால் அச்சம் கொண்டனர். ஒரே மனிதனைப்போல் அவர்கள் வெளிப்போந்தனர்.

8 சவுல் அவர்களைப் பெசேக்கில் கணக்கிட்டார். இஸ்ராயேல் மக்கள் மூன்று இலட்சம் பேரும், யூதா புதல்வர்கள் முப்பதாயிரம் பேரும் இருந்தனர்.

9 அவர்கள் வந்த தூதர்களைப் பார்த்து, "நீங்கள் 'நாளைக்கு வெயில் கடுமையாய் இருக்கும் போது உங்களுக்கு மீட்புக் கிடைக்கும்' என்று காலாத்தின் ஜாபேசிலிருக்கிற மனிதர்களுக்குச் சொல்வீர்கள்" என்று சொன்னார்கள். தூதர்கள் வந்து ஜாபேஸ் மனிதர்களுக்குத் தெரிவிக்க அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

10 பிறகு ஜாபேசியர், "காலையில் உங்களிடம் வருவோம். உங்களுக்கு விருப்பமானபடி நீங்கள் எங்களுக்குச் செய்யுங்கள்" என்று சொன்னார்கள்.

11 மறுநாள் சவுல் மக்களை மூன்று படையாகப் பிரித்து விடியற் காலையில் பாளையத்திற்குள் வந்து வெயில் கடுமையாகும் வரை அம்மோனியரை முறியடித்தார். எஞ்சியோர் இருவர் இருவராய்ச் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறடிக்கப்பட்டார்கள்.

12 அப்பொழுது மக்கள் சாமுவேலை நோக்கி, 'சவுலா நம்மை ஆளப்போகிறான்' என்று கேட்டவர்கள் யார்? அம்மனிதர்களைக் கொண்டு வாருங்கள்; அவர்களைக் கொல்வோம்" என்றனர்.

13 அதற்குச் சவுல், "இன்று ஆண்டவர் இஸ்ராயேலை மீட்டபடியால் ஒருவனையும் கொல்லக் கூடாது" என்று சொன்னார்.

14 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து, வாருங்கள், கல்கலாவுக்குப் போவோம்; அங்கே சவுலை அரசனாக ஏற்படுத்துவோம்" என்று சொன்னார்.

15 மக்கள் அனைவரும் கல்கலாவுக்குப் போய் அங்கு ஆண்டவர் திருமுன் சவுலை அரசனாக்கினார்கள்; ஆண்டவருக்குச் சமாதானப் பலிகளைச் செலுத்தினார்கள். அங்கே சவுல் மகிழ்ச்சி கொண்டாடினார்; இஸ்ராயேல் மனிதர்கள் எல்லாரும் இன்னும் அதிகமாய் இன்புற்றனர்.

அதிகாரம் 12

1 அப்போது சாமுவேல் இஸ்ராயேலர் அனைவரையும் நோக்கி, "இதோ நீங்கள் என்னிடம் சொன்னபடி உங்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்திவிட்டேன்.

2 இனி அரசரே உங்களை வழிநடத்துவார். நானோ நரைத்த கிழவனாகி விட்டேன். என் மக்களும் உங்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, என் இளமை முதல் இன்று வரை உங்களுடன் வாழ்ந்து வந்த நான் இதோ உங்கள் முன் நிற்கிறேன்.

3 நான் எவனுடைய மாட்டையாவது கழுதையையாவது கவர்ந்து கொண்டதுண்டா? எவனுக்காவது இடுக்கண் விளைவித்ததுண்டா? எவனைப்பற்றியாவது அவதூறு சொன்னதுண்டா? எவன் கையிலாவது பரிசில் பெற்றதுண்டா என்பதைக் குறித்து நீங்கள் ஆண்டவருக்கு முன்பாகவும், அவரால் அபிஷுகம் செய்யப்பட்டவருக்கு முன்பாகவும் என்னைப்பற்றிச் சொல்லுங்கள். அப்படி எதுவும் உண்டானால் அதை நான் வெறுத்து இன்றே உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்" என்றார்.

4 அதற்கு அவர்கள், "நீர் எங்கள்மேல் பொய்க்குற்றம் சாட்டியதுமில்லை; எங்களுக்கு இடுக்கண் விளைவித்ததுமில்லை; எவர் கையிலும் எதுவும் வாங்கினதுமில்லை" என்று சொன்னார்கள்.

5 மீண்டும் அவர், "என் கையில் நீங்கள் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு இன்று ஆண்டவரும் சாட்சி; அவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரும் சாட்சி" என்றார். அதற்கு அவர்கள், "அவரே சாட்சி" என்று சொன்னார்கள்.

6 அப்பொழுது சாமுவேல் மக்களை நோக்கி, "மோயீசனையும் ஆரோனையும் ஏற்படுத்தி எகிப்து நாட்டினின்று நம் முன்னோரை மீட்டவர் ஆண்டவரே.

7 ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் முன்னோருக்கும் செய்துள்ள இரக்கச் செயல்களுக்கெல்லாம் நான் ஆண்டவர் முன் உங்களோடு வழக்காடுவேன், நில்லுங்கள்.

8 யாக்கோபு எகிப்தில் நுழைந்தார். உங்கள் முன்னோர் துன்புறுத்தப்படுகையில் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். ஆண்டவர் ஆரோனையும் மோயீசனையும் அனுப்பி உங்கள் முன்னோர்களை எகிப்து நாட்டினின்று மீட்டு இவ்விடத்தில் அவர்கள் குடியிருக்கச் செய்தார்.

9 அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்ததினால், அவர் ஆசோரின் படைத்தலைவனாகிய சிசராவின் கையிலும் பிலிஸ்தியர் கையிலும் மோவாபிய அரசன் கையிலும் அவர்களை ஒப்படைத்தார். இவர்களோடு அவர்கள் போர் புரிந்தனர்.

10 பின்பு அவர்கள் ஆண்டவரை நோக்கி, 'நாங்கள் ஆண்டவரை விட்டுப் பாவாலையும் அஸ்தரோத்தையும் வழிபட்டதினால் பாவிகளானோம்; இப்போது எங்களை எதிரிகளின் கையினின்று மீட்டு விடும்; உமக்குத் தொழுகை செய்வோம்' என்று குரல் எழுப்பினார்கள்.

11 அப்பொழுது ஆண்டவர் ஜெரோபாவாலையும் பாதானையும் ஜெப்தேயையும் சாமுவேலையும் அனுப்பிச் சுற்றிலுமிருந்த உங்கள் எதிரிகளின் கையினின்று உங்களை விடுவித்தார்; நீங்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தீர்கள்.

12 பிறகு அம்மோன் புதல்வர்களின் அரசனாகிய நாவாஸ் உங்களை எதிர்த்து வருவதைக் கண்ட போது உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களை ஆண்டு வந்தாலும், நீங்கள் என்னை நோக்கி: 'அப்படியன்று; ஓர் அரசன் எங்களை ஆள வேண்டும்' என்று சொன்னீர்கள்.

13 இதோ, நீங்கள் கேட்டுத் தேர்ந்து கொண்ட அரசர்! ஆண்டவர் உங்களுக்கு ஓர் அரசரைக் கொடுத்துள்ளார்.

14 நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி அவருக்கு ஊழியம் செய்தும், அவருடைய குரலைக் கேட்டு அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யாமலும் இருப்பீர்களாகில், நீங்களும் உங்களை ஆள்கிற அரசரும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்பீர்கள்.

15 ஆண்டவருடைய குரலை கேளாமல், அவரது சொல்லை மீறிக் கிளர்ச்சி செய்வீர்களாகில், ஆண்டவருடைய கைவன்ணம் உங்கள் மேலும் உங்கள் முன்னோர் மேலும் இருக்கும்.

16 ஆனால் இப்போது ஆண்டவர் உங்கள் முன்னிலையில் செய்யவிருக்கும் மாபெரும் செயலை நின்று பாருங்கள்.

17 இன்று கோதுமை அறுவடை நாள் அன்றோ? நான் ஆண்டவரை மன்றாடுவேன்; அவர் இடி முழக்கங்களையும் மழைகளையும் அனுப்புவார். நீங்கள் உங்களுக்கு ஓர் அரசரைக் கேட்டதினால், ஆண்டவர் திருமுன் பெரிய தீமையை நீங்கள் செய்துகொண்டீர்கள் என்று இதனால் கண்டறிவீர்கள்" என்றார்.

18 அப்படியே சாமுவேல் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்ப, அன்றே ஆண்டவர் இடி முழக்கங்களையும் மழைகளையும் அனுப்பினார்.

19 மக்கள் அனைவரும் ஆண்டவருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் அனைவரும் சாமுவேலைப்பார்த்து, "எங்கள் எல்லாப் பாவங்களுடன் எங்களுக்கு அரசன் வேண்டும் என்று கேட்டதினால் செய்த தீமையையும் சேர்த்துக்கொண்டோமே; இதனால் நாங்கள் சாகாதபடி உம் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் உம் அடியார்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று வேண்டினார்கள்.

20 சாமுவேல் அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள், இந்தத் தீமை எல்லாம் நீங்கள் செய்தீர்கள்; ஆயினும் ஆண்டவரை விட்டு அகலாது உங்கள் முழு இதயத்தோடு ஆண்டவருக்கு ஊழியம் செய்யுங்கள்.

21 வீணானவற்றைத் தேடிப்போக வேண்டாம்; வீணாணவையாய் இருப்பதால் அவை உங்களுக்குப் பயனற்றனவும், உங்களை மீட்கமாட்டாதனவுமாய் இருக்கின்றன.

22 ஆண்டவர் தமது மகத்தான பெயரை முன்னிட்டுத் தம் மக்களைக் கைவிடமாட்டார். ஏனெனில், ஆண்டவர் உங்களைத் தம் மக்களாகக் கொள்வதாக வாக்களித்துள்ளார்.

23 உங்களுக்காக மன்றாடுவதை விட்டுவிடுவதால் நான் கட்டிக்கொள்ளும் பாவம் ஆண்டவர் முன் எனக்கு இல்லாது போவதாக! நான் நல்ல நேரியவழியை எப்பொழுதும் உங்களுக்குப் போதிப்பேன்.

24 ஆகையால் நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி உங்கள் முழு இதயத்தோடும் உண்மையாகவே அவரை வழிபட்டு வாருங்கள். அவர் உங்களுக்குச் செய்த அரும் பெரும் செயல்களைப் பார்த்தீர்கள்.

25 ஆனால் உங்கள் தீய நடத்தையில் நீங்கள் நிலை நிற்பீர்களேயாகில், நீங்களும் உங்கள் அரசரும் ஒன்றாக அழிந்து போவீர்கள்" என்றார்.

அதிகாரம் 13

1 சவுல் அரியணை ஏறியபோது அவர் ஒரு வயதுப்பிள்ளை. அவர் இஸ்ராயேலை ஈராண்டுகள் ஆண்டு வந்தார்.

2 சவுல் இஸ்ராயேலரில் மூவாயிரம் பேரைத் தமக்குத் தேர்ந்து கொண்டார். ஈராயிரம் பேர் சவுலுடன் மக்மாசிலும் பேத்தல் மலையிலும், ஆயிரம் பேர் யோனத்தாசோடு பெஞ்சமின் நாடாகிய காபாவிலும் இருந்தார்கள். மற்ற மக்களை அவரவர் கூடாரத்திற்கு அனுப்பி விட்டார்.

3 யோனத்தாசு காபாவிலிருந்த பிலிஸ்தியர் பாளையத்தை முறியடித்தான். இதைப் பிலிஸ்தியர் கேள்விப்பட்ட போது, சவுல், "இதை எபிரேயரும் கேட்கக்கடவர்" என்று நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்தார்.

4 பிலிஸ்தியரின் பாளையத்தைச் சவுல் முறியடித்தார் என்ற செய்தியை இஸ்ராயேலர் அனைவரும் கேள்விப்பட்டனர். இஸ்ராயேலர் பிலிஸ்தியருக்கு எதிராய்க் கிளம்பினார்கள். மக்கள் கல்கலாவிலிருந்த சவுலுக்குப்பின் ஆர்ப்பரித்துச் சென்றார்கள்.

5 பிலிஸ்தியரில் முப்பதாயிரம் தேர்ப்படையினரும் ஆறாயிரம் குதிரைப் படையினரும் கடற்கரை மணல் போன்ற எண்ணற்ற மற்ற மக்களும் இஸ்ராயேல் மேல் போரிடக் கூடினார்கள். அவர்கள் புறப்பட்டுப் பெத்தாவனுக்குக் கிழக்கே மக்மாசில் பாளையம் இறங்கினர்.

6 இஸ்ராயேல் மனிதர்கள் தங்களுக்குண்டான நெருக்கடியைக் கண்டபோது (மக்கள் துன்புற்றனர்). கெபிகளிலும் மறைவிடங்களிலும் கற்பாறைகளிலும் குகைகளிலும் பாழ்ங்கிணறுகளிலும் ஒளிந்து கொண்டனர்.

7 எபிரேயரில் பலர் யோர்தான் நதியைக் கடந்து காத், காலாத் நாடுகளுக்கு வந்து நேர்ந்தனர். இதுவரை சவுல் கல்கலாவில் இருந்தார்; அவரைப் பின்சென்ற மக்கள் அனைவரும் நடுக்கமுற்று இருந்தனர்.

8 அவர் தமக்குச் சாமுவேல் குறித்திருந்தபடி ஏழுநாள் வரை காத்திருந்தார். சாமுவேலும் கல்கலாவுக்கு வரவில்லை. மக்களும் அவரை விட்டுச் சிதறுண்டு போயினர்.

9 அப்போது சவுல், "தகனப்பலியையும் சமாதானப்பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, தகனப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

10 அவர் தகனப்பலியை ஒப்புக்கொடுத்து முடிக்கும் வேளையில் சாமுவேல் வந்தார். சவுல் அவரை வரவேற்கச் சென்றார்.

11 நீர் என்ன செய்தீர் என்று சாமுவேல் அவரைக் கேட்டார். சவுல் மறுமொழியாக, "மக்கள் என்னை விட்டுச் சிதறிப்போகிறதையும், நீர் குறித்த நாளில் வராததையும், பிலிஸ்தியர் மக்மாசில் ஒன்று திரண்டிருப்பதையும் நான் கண்டேன்.

12 எனவே, 'பிலிஸ்தியர் இந்நேரம் கல்கலாவில் இறங்கியிருப்பர். நானோ ஆண்டவருடைய இரக்கத்தை இன்னும் பெறவில்லை' என்று எனக்குள் சொல்லிக் கொண்டு, தேவையை முன்னிட்டு தகனப் பலியை ஒப்புக்கொடுத்தேன்' என்றார்.

13 சாமுவேல் சவுலைப்பார்த்து, "மூடத்தனம் செய்தீர்; உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு இட்ட கட்டளையை நீர் காப்பாற்றவில்லை; இவ்விதம் செய்யாமல் இருந்திருப்பீரானால் ஆண்டவர் இஸ்ராயேல் மேல் உமது அரசை என்றென்றும் உறுதிப்படுத்தி இருந்திருப்பார்.

14 இனி உமது அரசு நிலைத்து நிற்காது. ஆண்டவர் கட்டளையை நீர் மீறினதால் அவர் தமக்குப் பிடித்த மனிதனைத் தேர்ந்து கொண்டு, அவனைத் தம் மக்களுக்குத் தலைவனாய் இருக்கக் கட்டளையிட்டுள்ளார்" என்றார்.

15 சாமுவேல் கல்கலாவிலிருந்து புறப்பட்டுப் பெஞ்சமின் நாடாகிய காபாவுக்கு வந்தார். எஞ்சியோர் தங்களுடன் போர்புரிய வந்திருந்த மக்களுக்கு எதிராகச் சவுலைப்பின் தொடர்ந்து, கல்கலாவிலிருந்து பெஞ்சமின் குன்றிலுள்ள காபாவுக்குப் போனார்கள். சவுல் மக்களை எண்ணிப் பார்த்தார். ஏறக்குறைய அறுநூறு பேர் இருந்தனர்.

16 சவுலும் அவர் மகன் யோனத்தாசும் அவர்களைச் சார்ந்திருந்த மக்களும் பெஞ்சமின் நாடாகிய காபாவில் இருந்தனர். அப்போது பிலிஸ்தியர் மக்மாசில் பாளையம் இறங்கியிருந்தனர்.

17 பிலிஸ்தியர் பாளையத்தினின்று முப்பிரிவினர் கொள்ளையடிக்கப் புறப்பட்டனர். ஒரு பிரிவு சுவால் நாட்டிலுள்ள எப்ராவை நோக்கிப் போனது.

18 மற்றொன்று பெத்தரோன் வழியாய் நடந்தது. மூன்றாம் பிரிவும் பாலைவனத்துக்கு எதிரில் செபோயீம் பள்ளத்தாக்கை அடுத்த எல்லை வழியாய்ச் சென்றது.

19 நிற்க, இஸ்ராயேல் நாடு முழுவதிலும் ஒரு கொல்லன் கூடக் காணப்படவில்லை. எபிரேயர் வாள், ஈட்டி செய்யாதபடி, பிலிஸ்தியர் எச்சரிக்கையாய் இருந்தனர்.

20 ஆகையால் இஸ்ராயேலர் யாவரும் தத்தம் கொழு, மண்வெட்டி, கோடரி, களைவெட்டிகளைக் கூராக்குவதற்குப் பிலிஸ்தியரிடத்திற்குப் போக வேண்டியதாயிருந்தது.

21 ஆகவே, அவர்களுடைய கொழுக்கள், மண்வெட்டிகள், முப்பல் கொண்ட ஆயுதங்கள் முதலியன மழுங்கிப் போயிருந்தன. தார்க்குச்சியைக் கூடச் சீர்படுத்த வழியில்லை.

22 போர் தொடங்கின போது சவுலுக்கும் அவர் மகன் யோனத்தாசுக்குமேயன்றி அவர்களுடன் இருந்த மக்களில் ஒருவர் கையிலும் வாளோ ஈட்டியோ இல்லை.

23 பிலிஸ்தியரின் பாளையம் மக்மாசைக் கடந்து போகப் புறப்பட்டது.

அதிகாரம் 14

1 ஒரு நாள் சவுலின் மகன் யோனத்தாசு தன் பரிசையனான இளைஞனை நோக்கி, "அப்பால் இருக்கிற பிலிஸ்தியர் பாளையத்திற்குப் போவோம், வா" என்றான். அதை அவன் தன் தந்தைக்குத் தெரிவிக்கவில்லை.

2 அந்நேரத்தில் சவுல் காபாவின் கடைசி எல்லையாகிய மக்ரோனிலிருந்த ஒரு மாதுள மரத்தின் கீழ்த் தங்கியிருந்தார். அவருடன் இருந்த ஆட்கள் ஏறக்குறைய அறுநூறு பேர்.

3 சீலோவில் ஆண்டவருடைய குருவாயிருந்த ஏலிக்குப் பிறந்த பினேஸின் மகனாகிய இக்காபோதின் சகோதரனான அக்கிதோபின் மகன் ஆக்கியோஸ் ஏபோதை அணிந்திருந்தான். ஆனால் யோனத்தாசு எங்குச் சென்றிருந்தான் என்று மக்கள் அறியாதிருந்தனர்.

4 யோனத்தாசு பிலிஸ்தியர் பாளையம் வரை ஏற முயன்ற கணவாயின் இருமருங்கும் செங்குத்தான பாறைகளும் பற்களைப் போன்ற சிகரங்களும் அங்குமிங்கும் இருந்தன; அவற்றில் ஒன்றுக்குப் போசெஸ் என்றும், மற்றொன்றுக்குச் சேனே என்றும் பெயர்;

5 ஒன்று வடக்கே மக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே காபாவுக்கு எதிராகவும் இருந்தன.

6 யோனத்தாசு தன் பரிசையனான இளைஞனைப் பார்த்து, "விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய பாளையத்துக்குப் போவோம், வா. ஒருவேளை ஆண்டவர் நமக்குத் துணைபுரிவார். ஏனெனில் பலரைக் கொண்டோ சிலரைக் கொண்டோ மீட்பது ஆண்டவருக்குக் கடினம் அன்று" என்றான்.

7 அவனுடைய பரிசையன், "உமக்குப் பிடித்தவற்றை எல்லாம் செய்யும்; உமது விருப்பப்படியே போகலாம்; எங்குச் சென்றாலும் நானும் உம்மோடு வருவேன்" என்று அவனுக்குச் சொன்னான்.

8 அதற்கு யோனத்தாசு, "இதோ நாம் அம்மனிதர்களிடம் போகிறோம். நாம் அவர்கள் கண்ணில் படும்போது,

9 'நாங்கள் உங்களிடம் வரும்வரை நீங்கள் நில்லுங்கள்' என்று அவர்கள் நமக்குக் கூறினால், நம் இடத்தை விட்டு அவர்களிடம் போக வேண்டாம்.

10 அவர்கள் 'எங்களிடம் வாருங்கள்' என்று சொன்னால் போவோம். ஏனெனில் ஆண்டவர் அவர்களை நம் கைகளில் ஒப்படைத்தார் என்பதற்கு அதுவே அடையாளம்" என்றான்.

11 அப்படியே இருவரும் பிலிஸ்தியர் பாளையத்தை அடுத்து வந்தபோது, பிலிஸ்தியர், "இதோ எபிரேயர் ஒளிந்திருந்த குழிகளை விட்டுப் புறப்படுகிறார்கள்" என்று சொன்னார்கள்.

12 பின், பாளையத்தினின்று யோனத்தாசோடும் அவனுடைய பரிசையனோடும் பேசி, "எங்களிடத்திற்கு ஏறி வாருங்கள்; உங்களுக்கு ஒரு காரியம் சொல்வோம்" என்று சொன்னார்கள். அப்போது யோனத்தாசு, "போவோம், என்னைப் பின்தொடர்; ஆண்டவர் இஸ்ராயேல் கையில் அவர்களை ஒப்புவித்து விட்டார்" என்று பரிசையனுக்குச் சொல்லி,

13 யோனத்தாசு கைகளாலும் கால்களாலும் நகர்ந்து ஏறினார்; அவனுடைய பரிசையனும் அவனுக்குப்பின் ஏறினான். அப்பொழுது சிலர் யோனத்தாசு முன் மடிந்து விழுந்தார்கள். அவன் பின் வந்த அவனுடைய பரிசையனும் பலரை வெட்டிக்கொன்றான்.

14 யோனத்தாசும் அவனுடைய பரிசையனும் அடித்த இந்த முதல் அடியிலேயே ஏறக்குறைய இருபதுபேர் அரை ஏர் நிலப்பரப்பில் மடிந்து விழுந்தனர்.

15 பாளையத்திலும் நாட்டிலும் ஒரே பீதி உண்டாயிற்று. கொள்ளையிடப் போயிருந்த கூட்டத்தினர் எல்லாம் திடுக்கெனத் திகில் அடைந்தனர்; நிலமும் அதிர்ந்தது. இது கடவுள் ஆற்றிய அருஞ்செயல் போல் நிகழ்ந்தது.

16 இதோ, மக்களுள் பலர் விழுந்து கிடக்கிறதையும், அங்குமிங்கும் ஓடுகிறதையும் பெஞ்சமினுடைய காபாவிலிருந்த சவுலின் காவலர் கண்டனர்.

17 சவுல் தம்மோடு இருந்தவர்களை நோக்கி, "நம்மை விட்டுப் போனவன் யார்? விசாரித்துப் பாருங்கள்" என்று சொன்னார். விவரம் ஆராய்கையில் யோனத்தாசும் அவனுடைய பரிசையனும் அங்கு இல்லை எனத் தெரிய வந்தது.

18 அப்போது சவுல் அக்கியசைப் பார்த்து, "கடவுளின் பேழையைக் கேட்டுப்பாரும்" என்றார். (ஏனெனில் அப்பொழுது கடவுளின் பேழை இஸ்ராயேல் மக்களிடம் இருந்தது).

19 சவுல் குருவிடம் பேசிக் கொண்டிருக்கையில், பிலிஸ்தியர் பாளையத்தில் பெரும் முழக்கம் எழும்பிற்று. அது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து வெகு தெளிவாய்க் கேட்டது. அப்போது சவுல், "உம் கையை மடக்கும்" என்று குருவுக்குச் சொன்னார்.

20 சவுலும் அவரோடு இருந்த எல்லா மக்களும் ஆர்ப்பரித்துப் போர்க்களம் வரை போனார்கள். இதோ! அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டனர். அதனால் பலர் மடிந்தனர்.

21 இதைக் கண்டு நேற்றும் முந்தாநாளும் பிலிஸ்தியரோடு பாளையத்தில் தங்கியிருந்த எபிரேயர்கள் சவுல், யோனத்தாசோடு இருந்த இஸ்ராயேலருடன் சேர்ந்து கொள்ளத் திரும்பி வந்தார்கள்.

22 எபிராயீம் மலையில் பதுங்கியிருந்த இஸ்ராயேலர் அனைவரும் பிலிஸ்தியர் புறமுதுகு காட்டினர் என்று கேள்விப்பட்டுப் போரில் இவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அப்பொழுது ஏறக்குறைய பதினாயிரம் பேர் சவுலோடு இருந்தனர்.

23 அன்று ஆண்டவர் இஸ்ராயேலை மீட்டார். போர் பெத்தாவன்வரை நடந்தது.

24 இஸ்ராயேல் மனிதர்கள் அன்று ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். அப்பொழுது சவுல் மக்களைப் பார்த்து, "நான் என் எதிரிகளின்மீது பழி வாங்கப் போகிறேன். மாலை மட்டும் எவன் சாப்பிடுவானோ அவன் சபிக்கப்பட்டவன்" என்று ஆணையிட்டுச் சொன்னார். அன்று மக்களில் ஒருவரும் சாப்பிடவில்லை.

25 அவர்கள் எல்லாரும் காடு சென்றனர். அங்குத் தரை மேல் தேன் இருந்தது.

26 இவ்வாறு மக்கள் ஒரு காட்டினுள் நுழைந்தனர். அங்குத் தேன் வடியக் கண்டனர். ஆனால் எவனும் தன் கையை வாயில் வைக்கவில்லை. ஏனெனில் மக்கள் ஆணைக்கு அஞ்சியிருந்தனர்.

27 ஆனால் யோனத்தாசு தன் தந்தை மக்களுக்கு இட்டிருந்த ஆணையை அறியாதிருந்தான். அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டித் தேன் கூட்டில் குத்தி, தன் கையை வளைத்து அதை வாயில் வைத்தான். அவன் கண்கள் தெளிவுற்றன.

28 அப்பொழுது மக்களில் ஒருவன், "இன்று சாப்பிடும் மனிதன் சபிக்கப்பட்டவன் என்று உன் தந்தை பசியாயிருந்த மக்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்" என்றான்.

29 அதற்கு யோனத்தாசு, "என் தந்தை அதனால் மக்களுக்குத் தொல்லை கொடுத்தார். அந்தத் தேனில் கொஞ்சம் நான் சாப்பிட்டதினால் என் கண்கள் தெளிவானதை நீங்களே கண்டீர்கள்.

30 மக்களுக்கு அகப்பட்ட எதிரிகளின் கொள்ளைப் பொருட்களில் அவர்கள் ஏதாவது சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்! பிலிஸ்தியருக்குள் உண்டான படுகொலை இன்னும் கொடூரமாய் இருந்திருக்கும் அன்றோ?" என்று மறுமொழி சொன்னான்.

31 அன்று அவர்கள் மக்மாசுமுதல் அயியாலோன்வரை பிலிஸ்தியரை முறியடித்தனர்.

32 மக்கள் மிகவும் களைப்புற்றியிருந்தனர். அவர்கள் கொள்ளைப் பொருட்களின் மேல் பாய்ந்து ஆடு மாடுகளையும் கன்றுகளையும் கொணர்ந்து தரையில் போட்டு அடித்து இரத்தத்துடன் சாப்பிட்டனர்.

33 அப்பொழுது, "இதோ இரத்தத்துடன் சாப்பிட்டதனால் மக்கள் ஆண்டவருக்கு எதிராய் பாவம் செய்தார்கள்" என்று சவுலுக்குத் தெரியவந்தது. அதற்கு அவர், "நீங்கள் கடவுளின் கட்டளையை மீறினீர்கள்; இப்பொழுதே ஒரு பெரிய கல்லை என்னிடம் உருட்டிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

34 மறுமுறையும் சவுல் சிலரை அனுப்பி, "நீங்கள் சாதாரண மக்களுக்குள் போய், 'இரத்தத்தோடு இறைச்சியை உண்பது ஆண்டவருக்கு ஏற்காத பாவம். எனவே, மக்களில் ஒவ்வொருவனும் தன் மாட்டையாவது ஆட்டுக்கடாயையாவது சவுலிடம் கொணர்ந்து அங்கே அடித்துப் பின்பு சாப்பிடலாம்' என்று சொல்லுங்கள்" என்றார். ஆகையால் மக்கள் எல்லாரும் தத்தம் மாட்டை அன்று இரவு தாங்களே கொண்டு வந்து அங்கே அடித்தனர்.

35 அதன் பிறகு சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டினார். அது அவர் ஆண்டவருக்குச் கட்டின முதலாவது பலிபீடம்.

36 மீண்டும் சவுல், "நாம் இரவில் பிலிஸ்தியர் மேல் பாய்ந்து விடியும் வரை அவர்களைக் கொன்று குவிப்போம். அவர்களில் ஒருவனையும் விட்டு வைக்கக் கூடாது" என்று சொன்னார். அதற்கு மக்கள், "உமக்கு நலம் என்று தோன்றுவதை எல்லாம் செய்யும்" என்றனர். குருவோ, "நாம் இங்குக் கடவுளை அண்டி போக வேண்டும்" என்று சொன்னார்.

37 பிலிஸ்தியரைப் பின்தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ராயேல் கையில் விடுவீரா?" என்று சவுல் ஆண்டவரிடம் கேட்டார். அவர் அன்று அவருக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.

38 இதைக் கண்ட சவுல், "இன்று யாரால் இப்பாவம் வந்தது என்று மக்கட் தலைவர்கள் அனைவரிடமும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

39 இஸ்ராயேலின் மீட்பராம் ஆண்டவர் வாழி! என் மகன் யோனத்தாசால் இது நடந்திருந்தால் தடை ஏதுமின்றி அவன் சாகக்கடவான்" என்று சொன்னார். மக்களில் ஒருவனும் அவனுக்கு எதிராகப் பேசவில்லை.

40 சவுல் இஸ்ராயேலர் அனைவரையும் பார்த்து, "நீங்கள் ஒரு பக்கத்தில் இருங்கள், நானும் என் மகன் யோனத்தாசும் மறுபக்கத்தில் இருப்போம்" என்றார். அதற்கு மக்கள், "உமக்கு நன்மை எனத் தோன்றுவதைச் செய்யும்" என்று சவுலுக்கு மறுமொழி சொன்னார்கள்.

41 சவுல், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, இன்று உம் அடியானுக்கு நீர் மறுமொழி சொல்லாதிருப்பது ஏன்? அடையாளம் கொடும். இந்தப் பாவம் என்மேலாவது என் மகன் யோனத்தாசு மேலாவது இருந்தால் அதை விளங்கச் செய்யும்; அல்லது அந்தப் பாவம் உம் மக்கள்மேல் இருந்தால் அவர்களைத் தூயவராக்கும்" என்றார். அப்போது யோனத்தாசும் சவுலும் பிடிபட்டனர்; மக்கள் நீங்கினார்கள்.

42 அப்போது சவுல், "எனக்கும் என் மகன் யோனத்தாசுக்கும் இடையே சீட்டுப் போடுங்கள்" என்றார்.

43 யோனத்தாசு பிடிபட்டான். சவுல் யோனத்தாசைப் பார்த்து, "நீ செய்ததை எனக்கு வெளிப்படுத்து" என, யோனத்தாசு, "என் கையிலிருந்த கோலின் நுனியினால் கொஞ்சம் தேனை எடுத்துச் சுவை பார்த்தேன். இதோ அதற்காகச் சாகிறேன்" என்று அவருக்கு வெளிப்படுத்தினான்.

44 அதற்கு சவுல், "யோனத்தாசு, நீ சாகவே சாவாய்; இல்லாவிட்டால் கடவுள் எனக்கு தகுந்த கைம்மாறு அளிப்பாராக" என்று சொன்னார்.

45 அதற்கு மக்கள், "இஸ்ராயேலில் இவ்வளவு பெரிய மீட்பைக் கொணர்ந்த யோனத்தாசும் சாவானோ? அது கூடாது. ஆண்டவர்மேல் ஆணை! அவன் தலைமயிரில் ஒன்றும் தரையில் விழாது. ஏனெனில் கடவுள் துணை நிற்க அவன் இன்று அதைச் செய்தான்" என்று சொல்லி யோனத்தாசு சாகாதபடி அவனைத் தப்புவித்தனர்.

46 சவுல் பிலிஸ்தியரைப் பின் தொடராது, திரும்பிப் போனார். பிலிஸ்தியரும் தங்கள் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்.

47 இவ்வாறு இஸ்ராயேலின் மேல் சவுலின் அரசு உறுதிப்பட்ட பின், அவர் சுற்றிலுமுள்ள மோவாப், அம்மோன், ஏத்தோம் புத்திரர், சொபா அரசர், பிலிஸ்தியர் ஆகிய எல்லா எதிரிகளோடும் சண்டை செய்து வந்தார்; அவர் எங்குச் சென்றாலும் வெற்றியுடன் திரும்புவார்.

48 பிறகு அவர் படை திரட்டி அமலேக்கியரை முறியடித்தார். தங்களைக் கொள்ளையிட்டு வந்தோருடைய கையினின்று இஸ்ராயேலரை மீட்டார்.

49 யோனத்தாசு, யெசுயி, மெல்கிசுவா ஆகியோர் சவுலின் புதல்வர்கள். அவருடைய இரு புதல்வியரில் மூத்தவள் பெயர் மெரோப், இளையவள் பெயர் மிக்கோல்.

50 சவுலுடைய மனைவியின் பெயர் அக்கினோவாம்; அவள் அக்கிமாசின் புதல்வி. அவருடைய படைத் தலைவனின் பெயர் அப்நேர்; இவன் சவுலின் சிற்றப்பனான நேரின் மகன்.

51 சவுலின் தந்தை பெயர் சீஸ். அப்நேரின் தந்தையின் பெயரோ நேர்; இவன் அபியேலின் மகன்.

52 சவுலின் வாழ்நாள் முழுவதும் பிலிஸ்தியரோடு கடும்போர் நடந்து வந்தது. ஆற்றல் படைத்தவனையோ போருக்குத் தகுதி படைத்தவனையோ சவுல் கண்டால் அவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்வார்.

அதிகாரம் 15

1 பிறகு சாமுவேல் சவுலை நோக்கி, "ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ராயேலின் அரசனாக உம்மை அபிஷுகம் செய்யும்படி என்னை அனுப்பினார். இப்போது ஆண்டவர் சொல்வதைக் கேளும்.

2 சேனைகளின் ஆண்டவர் சொல்கிறதாவது: 'அமலேக் இஸ்ராயேலருக்குச் செய்தவற்றையும், இவர்கள் எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த போது அமலேக் அவர்களை வழியில் எதிர்த்து நின்றதையும் மனத்தில் வைத்திருக்கிறேன்.

3 இப்போது நீ போய் அமலேக்கைக் கொன்று அவன் உடைமைகள் அனைத்தையும் அழித்து விடு; அவன் மேல் இரக்கம் கொள்ளாதே; அவனுடைய சொத்துக்களில் ஒன்றையும் விரும்பாதே. ஆனால் ஆண் பிள்ளைகள் முதல் பெண் பிள்ளைகள் வரை, சிறுவர், பால் குடிக்கிற பிள்ளைகள், மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலியவற்றைக் கொன்று விடு' என்பதாம்" என்றார்.

4 சவுல் மக்களுக்குக் கட்டளையிட்டு, அவர்களை ஆட்டுக் குட்டிகளைப் போல் கணக்கிட்டார். காலாட் படையினர் இருநூறாயிரம் பேரும் யூதா கோத்திரத்தார் பதினாயிரம் பேரும் இருந்தனர்.

5 சவுல் அமலேக் நகர் வரை வந்த போது ஓர் ஓடையில் பதிவிடை வைத்தார்.

6 சவுல் கினையர்களைப் பார்த்து, "போங்கள்; அவனிடமிருந்து போய்விடுங்கள். அமலேக்கோடு நான் உங்களையும் அழிக்காதபடி அவனை விட்டுப் போய்விடுங்கள்; ஏனென்றால் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் எகிப்திலிருந்து வரும் போது நீங்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டினீர்கள் அன்றோ?" என்றார். கினையர் அதைக்கேட்டு அமலேக்கை விட்டுச் சென்றனர்.

7 ஏவிலா முதல் எகிப்துக்கு எதிரே இருக்கிற சூரு வரை சவுல் அமலேக்கியரை முறியடித்தார்.

8 அவர்களுடைய அரசன் ஆகாகை உயிரோடு சிறைப்படுத்தினார்; மக்கள் அனைவரையும் வாள் முனையால் கொன்று குவித்தார்.

9 சவுலும் மக்களும் ஆகாகையும், ஆட்டு மாட்டு மந்தைகளில் நல்லவற்றையும் ஆட்டுக் கடாய்களையும் ஆடைகளையும், எல்லாவற்றிலும் அழகானவற்றையும் அழிக்காமல் விட்டு வைத்தனர்; அவற்றை அழிக்கவும் அவர்களுக்கு மனம் இல்லை. ஆனால் அற்பமானவை, பயனற்றவை அனைத்தையும் அழித்துப் போட்டனர்.

10 அப்போது ஆண்டவருடைய வார்த்தை சாமுவேலுக்குக் கேட்டது.

11 அவர்: "நாம் சவுலை அரசனாக ஏற்படுத்தினதைப் பற்றி வருந்துகிறோம். ஏனெனில், அவன் என்னைப் புறக்கணித்து என் சொற்களையும் நிறைவேற்றவில்லை" என்றார். அதைக் கேட்டு சாமுவேல் வருந்தி இரவு முழுவதும் ஆண்டவரிடம் மன்றாடினார்.

12 வைகறை வேளையில் சவுலைச் சந்திக்கலாம் என்று எண்ணிச் சாமுவேல் அதிகாலையில் எழுந்திருந்த போது, சவுல் கார்மேலுக்குப் போய் தனக்கு ஒரு வெற்றித்தூண் நாட்டினதாகவும், அங்கிருந்து கல்கலாவுக்கு இறங்கிச் சென்றதாகவும் சாமுவேலுக்குத் தெரிவிக்கப்பட்டது. சாமுவேல் சவுலிடம் வந்தார். சவுலோ அமலேக்கியரிடமிருந்து கொண்டு வந்திருந்த கொள்ளைப் பொருட்களில் முதலானவற்றை ஆண்டவருக்குத் தகனப்பலியாக ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

13 சாமுவேல் சவுலிடம் வரவே, சவுல் அவரை நோக்கி, "ஆண்டவரின் ஆசீர் பெற்றவர் நீரே. நான் ஆண்டவருடைய வார்த்தையை நிறைவேற்றியுள்ளேன்" என்றார்.

14 அதற்குச் சாமுவேல், "என் காதுகளில் ஒலிக்கின்ற ஆடு மாடுகளின் இச்சத்தம் என்ன?" என்று கேட்டார்.

15 அதற்குச் சவுல், "அவற்றை அமலேக்கியரிடமிருந்து கொண்டு வந்தார்கள்; உம் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்தும்படி மக்கள் ஆடுமாடுகளில் மேலானவற்றை அழிக்காது விட்டுவைத்தார்கள்; மற்றவற்றைக் கொன்றுபோட்டோம்" என்றார்.

16 அப்பொழுது சாமுவேல், "எனக்கு விடை கொடுத்தால் இந்த இரவில் ஆண்டவர் எனக்குச் சொன்னதை உமக்குச் சொல்வேன்" என்றார். அவர், "சொல்லும்" என்றார்.

17 சாமுவேல், "நீர் உமது பார்வைக்குச் சிறியவராய் இருந்த போதன்றோ இஸ்ராயேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்.

18 பிறகு அவர் உம்மை வழி நடத்தி, 'போ, பாவிகளாகிய அமலேக்கியரைக் கொல்; அவர்கள் அழியும் வரை அவர்களுடன் போரிடுவாய்' என்று அனுப்பினார்.

19 ஆனால், நீர் ஆண்டவருடைய சொல்லைக் கேளாமல் கொள்ளைப் பொருட்களின் மேல் ஆசை வைத்து ஆண்டவர் கண் முன் பாவம் செய்தது ஏன்?" என்றார்.

20 சவுல் சாமுவேலை நோக்கி, "நான் ஆண்டவருடைய சொற்படிதான் நடந்தேன். ஆண்டவர் என்னை அனுப்பின வழியில் தான் சென்றேன். அதன்படி அமலேக்கியரின் அரசனான ஆகாகைக் கொண்டு வந்தேன்; அமலேக்கியரைக் கொன்று குவித்தேன்.

21 மக்களோ கொள்ளைப்பொருட்களில் முதற்பலன் என்று ஆடுமாடுகளில் மேலானவற்றைத் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கல்கலாவிலே பலியிடுவதற்காகக் கொண்டுவந்தார்கள்" என்று மறுமொழி சொன்னார்.

22 அதற்கு சாமுவேல், "ஆண்டவர் தகனப் பலிகளையும் வேறு பலிகளையுமா ஆசிக்கிறார்? அதை விட மனிதன் ஆண்டவரின் குரல் சத்தத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கேட்கிறாரன்றோ? பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே மேலானது. ஆட்டுக் கடாக்களின் கொழுப்பை அவருக்கு ஒப்புக்கொடுக்கிறதை விட அவருக்குச் செவிகொடுத்தலே சிறந்தது.

23 ஆகவே கிளர்ச்சி செய்வது சூனியம் பார்ப்பதற்குச் சமம்; கீழ்படியாமை சிலை வழிபாட்டுக்குச் சமம். நீர் ஆண்டவருடைய வார்த்தையைத் தள்ளினதால் நீர் அரசராய் இராதபடி ஆண்டவர் உம்மைத் தள்ளிவிட்டார்" என்று சொன்னார்.

24 அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி, "நான் மக்களுக்கு அஞ்சி அவர்களுடைய குரலுக்குச் செவி சாய்த்து, ஆண்டவருடைய சொல்லையும் உம் வாக்குகளையும் மீறினதினால் பாவம் செய்தேன்.

25 ஆனால் இப்போது நீர் தயவு செய்து என் பாவத்தை மன்னித்து, நான் ஆண்டவரை வழிபடும் படி என்னுடன் திரும்பி வாரும்" என்று கெஞ்சினார்.

26 அதற்குச் சாமுவேல், "ஆண்டவருடைய வாக்கைத் தள்ளி விட்ட இஸ்ராயேலின் மேல் நீர் அரசராய் இராதபடிக்கு ஆண்டவர் உம்மையும் தள்ளி விட்டார்; ஆதலால் உம்முடன் நான் வரமாட்டேன்" என்றார்.

27 பின்னர், சாமுவேல் போகத் திரும்பினார்; அவர் இவருடைய போர்வையின் மேற்புறத்தைப் பிடித்தார்; உடனே அது கிழிந்து போயிற்று.

28 சாமுவேல் அவரைப் பார்த்து, "இன்றே ஆண்டவர் உமது கையிலிருந்த இஸ்ராயேல் அரசைக் கிழித்து உம்மை விட மேலான உம் அயலானுக்குக் கொடுப்பார்.

29 இஸ்ராயேலுக்கு வெற்றி கொடுத்தவர் இரக்கம் காட்ட மாட்டார்; மனம் மாறவும் மாட்டார்; வருத்தப்படுவதற்கு அவர் மனிதர் அல்லர்" என்றார்.

30 அதற்கு அவர், "நான் பாவம் செய்தேன்; ஆயினும் இப்போது என் மக்களின் மூப்பர்கள் முன்பாகவும் இஸ்ராயேலுக்கு முன்பாகவும் நீர் என்னை மாட்சிப்படுத்தி, உம் கடவுளாகிய ஆண்டவரை வழிபடப் போகிற என்னுடன் திரும்பி வாரும்" என்று கெஞ்சிக் கேட்டார்.

31 ஆகையால் சாமுவேல் திரும்பிச் சவுலைப் பின் தொடர்ந்தார். சவுல் ஆண்டவரை வழிபட்டார்.

32 பின்பு சாமுவேல், "அமலேக்கியருடைய அரசன் ஆகாகை என்னிடம் கூட்டி வாருங்கள்" என்றார். அப்படியே மிகவும் தடித்த ஆகாக் கொண்டு வரப்பட்டான். இவன் உடல் நடுங்கி, "ஐயோ! கசப்பான சாவு என்னை இப்படி எல்லாவற்றிலுமிருந்து பிரிக்கிறதே!" என்றான்.

33 அவனைப் பார்த்துச் சாமுவேல், "உன் வாள் பெண்களைப் பிள்ளைகள் அற்றவர்களாய்ச் செய்தது போல, பெண்களுக்குள் உன் தாயும் பிள்ளைகள் இல்லாதவளாய் இருப்பாள்" என்று சொல்லி, கல்கலாவின் ஆண்டவர் திருமுன் ஆகாகைத் துண்டு துண்டாய் வெட்டினார்.

34 பின்பு சாமுவேல் ராமாத்தாவுக்குப் போனார். சவுல் காபாவில் இருந்த தம் வீட்டுக்குத் திரும்பினார்.

35 அதற்குப் பின் சவுல் சாகும் வரை சாமுவேல் அவரைப் பார்க்கவே இல்லை. ஆயினும் இஸ்ராயேலின் அரசனாகச் சவுலை ஏற்படுத்தியது குறித்து ஆண்டவர் வருத்தப்படவே, சாமுவேல் சவுலைப்பற்றி மிகவும் வேதனைப்பட்டார்.

அதிகாரம் 16

1 ஆண்டவர் சாமுவேலைப் பார்த்து, "சவுல் இஸ்ராயேலின் அரசனாய் இராதபடி நாம் அவனைத் தள்ளியிருக்க, நீ எத்தனை காலம் அவனுக்காக ஏங்கிக் கொண்டிருப்பாய்? கொம்பினால் செய்யப்பட்ட உன் கிண்ணத்தை எண்ணெய்யால் நிரப்பிக் கொண்டு வா; பெத்லகேமைச் சேர்ந்த இசாயினிடம் நாம் உன்னை அனுப்புவோம். நாம் அவன் புதல்வர்களில் ஒருவனை அரசனாகத் தேர்ந்து கொண்டுள்ளோம்" என்றருளினார்.

2 அதற்குச் சாமுவேல், "எப்படிப் போவேன்? சவுல் கேள்விப்பட்டால் என்னைக் கொன்றுவிடுவானே?" என்றார். மறுபடியும் ஆண்டவர், "நீ மாட்டு மந்தையில் ஒரு கன்றுக்குட்டியைப் பிடித்துக் கொண்டு: 'ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன்' என்று சொல்லி, இசாயியைப் பலிக்கு அழைப்பாய்.

3 பின்னர் நீ செய்ய வேண்டியதை உனக்கு நாம் காட்டுவோம். நாம் உனக்கு எவனைக் காண்பிப்போமோ, அவனை நீ அபிஷுகம் செய்வாய்" என்று சொன்னார்.

4 ஆண்டவர் தமக்குச் சொன்னபடி சாமுவேல் செய்து பெத்லகேமுக்குப் போனார். அவ்வூரின் மூப்பர்கள் வியப்புற்று அவர் முன் ஓடிவந்து, "உமது வருகை எங்களுக்குச் சமாதானத்தைத் தருமா?" என்று கேட்டனர்.

5 அதற்கு அவர், "ஆம், ஆண்டவருக்குப் பலிசெலுத்த வந்துள்ளேன். நீங்கள் உங்களைத் தூயவராக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்" என்று சொன்னார். மேலும் இசாயையும் அவனுடைய புதல்வர்களையும் தூய்மைப்படுத்தி அவர்களைப் பலிக்கு அழைத்தார்.

6 அவர்கள் வந்த போது சாமுவேல் எலியாபைக் கண்டு, "ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவன் தானோ?" என்று கேட்டார்.

7 ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "அவனுடைய முகத்தையும் உடல் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நாம் அவனைத் தள்ளி விட்டோம். மனிதன் பார்க்கிறது ஒருவிதம், நாம் தீர்ப்பிடுவது வேறுவிதம். மனிதன் வெளிக்குத் தோன்றுபவற்றை மட்டும் பார்க்கிறான்; ஆண்டவரோ இதயத்தை பார்க்கிறார்" என்று சொன்னார்.

8 அப்போது இசாயி அபினதாபை அழைத்து அவனைச் சாமுவேல் முன்பாகக் கூட்டி வந்தான். அவர், "இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார்.

9 இசாயி சம்மாவைக் கூட்டி வந்தான். அவர், "இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்று சொல்லி விட்டார்.

10 இவ்வாறு இசாயி தன் புதல்வர்களில் எழுவரைச் சாமுவேல் முன் கொண்டு வந்தான். "இவர்களுள் ஒருவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்று சாமுவேல் இசாயினிடம் சொன்னார்.

11 அப்பொழுது இசாயியைப் பார்த்துச் சாமுவேல், "உன் பிள்ளைகள் எல்லாம் இவ்வளவுதானா?" என்று கேட்டார். அதற்கு அவன், "இன்னும் ஒரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று மறுமொழி சொன்னான். அப்பொழுது சாமுவேல் இசாயியை நோக்கி, "நீ ஆள் அனுப்பி அவனை வரச்சொல்; அவன் வரும் வரை நான் உண்ணாது இருப்பேன்" என்றார்.

12 இசாயி ஆள் அனுப்பி அவனை அழைத்துவரச் செய்தான். அவனோ சிவந்த மேனியும், பார்வைக்கு அழகும், முகப்பொலிவும் உள்ளவனாய் இருந்தான். அப்பொழுது ஆண்டவர், "இவன் தான்; எழுந்து இவனை அபிஷுகம் செய்" என்று சொன்னார்.

13 அப்பொழுது சாமுவேல் கொம்பினால் செய்யப்பட்ட எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து அவனுடைய சகோதரர் நடுவில் அவனை அபிஷுகம் செய்தார். அன்று முதல் ஆண்டவருடைய ஆவி தாவீதின் மேல் இறங்கி எப்பொழுதும் இருந்தது. சாமுவேல் எழுந்து ராமாத்தாவுக்குத் திரும்பினார்.

14 ஆண்டவருடயை ஆவி சவுலை விட்டு நீங்கினதுமன்றி ஆண்டவரால் அனுப்பப்பட்ட தீய ஆவி அவரை அலைக்கழித்துக் கொண்டுமிருந்தது.

15 அப்பொழுது சவுலின் ஊழியர்கள் அவரை நோக்கி, "கடவுளால் அனுப்பப்பட்ட தீய ஆவி இதோ உம்மை வதைக்கிறதே;

16 எங்கள் தலைவராகிய நீர் அனுமதி அளித்தால் உமது முன்னிலையில் ஏவல் புரியும் நாங்கள் சென்று யாழிசைஞன் ஒருவனைத் தேடிக் கொண்டு வருவோம். ஆண்டவரால் அனுப்பப்பட்ட தீய ஆவி உம்மைப் பிடிக்கையில் அவன் தன் கையினால் அதை மீட்டுவான். உமது துன்பம் ஓரளவு குறையும்" என்றனர்.

17 சவுல் தம் ஊழியர்களைப் பார்த்து, "நீங்கள் போய் யாழிசைஞன் ஒருவனை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.

18 அப்பொழுது அவருடைய ஊழியர்களில் ஒருவன் மறுமொழியாக, "இதோ பெத்லகேம் ஊரானான இசாயி மகனைப் பார்த்தேன். அவனுக்கு யாழ் மீட்டத் தெரியும்; அவன் வலிமை வாய்ந்தவன்; போர் வீரன்; பேச்சுத் திறமுள்ளவன்; அழகானவன். ஆண்டவர் அவனுடன் இருக்கிறார்" என்று சொன்னான்.

19 அதைக்கேட்டு, "ஆட்டு மந்தைகளோடு இருக்கிற உன் மகன் தாவீதை எம்மிடம் அனுப்பு" என்று சொல்லச் சவுல் இசாயிக்குத் தூதர்களை அனுப்பினார்.

20 அப்பொழுது இசாயி ஒரு கழுதையைக் கொணர்ந்து, அதன் மேல் அப்பங்களையும், ஒரு துருத்தித் திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் சுமத்தித் தன் மகன் தாவீதின் மூலம் அவற்றைச் சவுலுக்கு அனுப்பி வைத்தான்.

21 அப்படியே தாவீது சவுலிடம் வந்து அவர்முன் நின்றான். சவுல் அவன் மீது மிகவும் அன்பு கொண்டு: அவனைத் தம் பரிசையனாக நியமித்தார்.

22 தாவீது எம் அவையில் இருப்பான். ஏனெனில் எம் கண்களில் அவனுக்கு தயை கிடைத்துள்ளது என்று சவுல் இசாயிக்குச் சொல்லி அனுப்பினார்.

23 பின்பு ஆண்டவரால் அனுப்பப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடிக்கும் போதெல்லாம் தாவீது யாழை எடுத்து மீட்டுவான். அதனால் சவுல் தேறி ஒருவாறு நலம் பெறுவார். தீய ஆவி அவரை விட்டு நீங்கும்.

அதிகாரம் 17

1 பிலிஸ்தியர் மறுபடியும் போருக்குப் படைகளைத் திரட்டிக் கொண்டு யூதாவினுடைய சொக்கோவுக்கு வந்து, சொக்கோவுக்கும் அசேக்காவுக்கும் நடுவில் தொம்மீம் எல்லைகளில் பாசறை அமைத்தனர்.

2 சவுலும் இஸ்ராயேல் மக்களும் ஒன்று கூடித் தேரேபேந்து பள்ளத்தாக்கிற்கு வந்து பிலிஸ்தியருக்கு எதிராக போரிடுவதற்கு அணிவகுத்து நின்றனர்.

3 பிலிஸ்தியர் மலையின் அப்பக்கத்திலும், இஸ்ராயேலர் மலையின் இப்பக்கத்திலும் இருந்தனர். அவர்களுக்கு இடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.

4 அப்போது கெத் நாட்டானாகிய கோலியாத் என்ற பெயருடைய ஓர் இழிகுல மனிதன் பிலிஸ்தியர் பாசறையினின்று வெளியே வந்தான். அவன் உயரம் ஆறு முழம் ஒரு சாண்.

5 தலையில் வெண்கலத் தொப்பியும், மீன் செதிலைப் போன்ற ஒரு போர்க்கவசமும் அணிந்திருந்தான். அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சீக்கல் வெண்கலமாம்.

6 அவன் கால்களில் வெண்கலக் கவசத்தையும், தோள்களின் மேல் ஒரு வெண்கலக் கேடயத்தையும் அணிந்திருந்தான்.

7 அவனுடைய ஈட்டிக் கம்பு நெசவுக்காரனின் தறிமரம் போல் இருந்தது. அவன் ஈட்டியின் முனை அறுநூறு சீக்கல் இரும்பாலானது. அவனுடைய பரிசையன் அவனுக்கு முன் நடப்பான்.

8 அவன் இஸ்ராயேல் படைகளுக்கு எதிரே நின்று கூக்குரலிட்டு, "ஏன் போருக்குத் தயாராய் வந்தீர்கள்? நான் பிலிஸ்தியன் அன்றோ? நீங்கள் சவுலின் ஊழியர்கள் அல்லவா? உங்களுக்குள் ஒருவனைத் தேர்ந்து கொள்ளுங்கள். அவன் என்னுடன் தனியே சண்டை செய்ய வரட்டும்.

9 அவன் என்னுடன் சண்டை போட்டு என்னைக் கொன்றால், நாங்கள் உங்கள் அடிமைகளாய் இருப்போம்; நான் அவனைக் கொன்று போட்டாலோ, நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு ஊழியம் செய்வீர்கள்" என்பான்.

10 மேலும் அந்தப் பிலிஸ்தியன், "நான் இன்று இஸ்ராயேலின் சேனைகளை இழிவு படுத்தியிருக்கிறேன். எனவே, ஒரு வீரனை என்னிடம் அனுப்புங்கள். அவன் என்னுடன் தனித்துப் போரிடட்டும்" என்று சொல்வான்.

11 பிலிஸ்தியனுடைய இத்தகு சொற்களைச் சவுலும் இஸ்ராயேலர் அனைவரும் கேட்டுக் கலங்கி, அதிக அச்சம் கொண்டிருந்தனர்.

12 முன் சொல்லப்பட்ட தாவீது யூதா நாட்டுப் பெத்லகேம் ஊரானும், இசாயி என்ற பெயருடைய எபிராத்திய மனிதனின் மகனும் ஆவான். இசாயிக்கு எட்டுப் புதல்வர்கள் இருந்தனர். இவன் சவுலின் காலத்தில் மற்ற மனிதர்களுக்குள்ளே வயது சென்ற கிழவனாய் இருந்தான்.

13 இவனுடைய மூத்த புதல்வர்கள் மூவரும் சவுலோடு கூடப் போருக்குச் சென்றிருந்தனர். போருக்குப் போயிருந்த இவனுடைய மூன்று புதல்வர்களுள் மூத்தவன் பெயர் எலியாப்; இரண்டாமவன் அபினதாப்; மூன்றாமவன் சம்மா.

14 தாவீது எல்லாருக்கும் இளையவன். மூத்தவர்களாகிய அம்மூவரும் சவுலைப் பின் சென்றிருந்தனர்.

15 எனவே தாவீது சவுலை விட்டுத் திரும்பிப் போய்ப் பெத்லகேமில் தன் தந்தையின் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தான்.

16 அந்தப் பிலிஸ்தியனோ, காலையிலும் மாலையிலும் நாற்பது நாட்களாக இவ்வாறு செய்து வந்தான்.

17 இசாயி தன் மகன் தாவீதை நோக்கி, "உன் சகோதரர்களுக்காக இந்த ஒரு மரக்கால் வறுத்த மாவையும், இப் பத்து அப்பங்களையும் எடுத்துக் கொண்டு பாசறையில் இருக்கிற உன் சகோதரர்களிடம் விரைந்து செல்.

18 இப் பத்துப் பாலாடைக் கட்டிகளையும் படைத் தலைவருக்குக் கொண்டு போய்க் கொடுத்து, உன் சகோதரர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்று பார்த்து, அவர்கள் எவரெவருடன் அணி வகுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்" என்று சொல்லி, அவனை அனுப்பி வைத்தான்.

19 அப்போது சவுலும் இவர்களும் இஸ்ராயேலின் எல்லா மக்களும் தெரேபிந்துப் பள்ளத்தாக்கில் பிலிஸ்தியரோடு போரிட்டுக் கொண்டிருந்தனர்.

20 ஆகையால் தாவீது அதிகாலையில் எழுந்து, மந்தையைக் காவலனிடம் ஒப்படைத்து விட்டு, இசாயி தனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மகலாவில் இருந்த சேனையை நோக்கிச் சென்றான். படைவீரர் போருக்குச் சென்று போர்க் குரல் எழுப்பினர்.

21 இப்பக்கத்தில் இஸ்ராயேலர் அணிவகுத்து நிற்க, அப்பக்கத்தில் பிலிஸ்தியர் போருக்குத் தயார் பண்ணிக் கொண்டிருந்தனர்.

22 தாவீது தான் கொண்டு வந்த மூட்டையை இறக்கி அவற்றைக் காவலன் ஒருவனிடம் ஒப்புவித்தான். பின் போர் களத்திற்கு ஓடித் தன் சகோதரர்களின் உடல் நலம் பற்றி விசாரித்தான்.

23 அவன் அவர்களோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், பிலிஸ்தியர் பாசறையினின்று கோலியாத் என்ற பெயருடைய பிலிஸ்தியனும், கெத் நாட்டானும் இழிகுலத்தவனுமான அம்மனிதன் வந்து நின்றான். அவன் முன் சொன்ன வார்த்தைகளையே சொல்ல தாவீது அதைக் கேட்டான்.

24 அம்மனிதனைக் கண்டபோது இஸ்ராயேலர் அனைவரும் மிகவும் அஞ்சி, அவன் முகத்தில் விழிக்காது ஓடிப்போனார்கள்.

25 இஸ்ராயேலரில் ஒருவன், "இப்போது வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா? இவன் இஸ்ராயேலை இழிவுபடுத்த வந்துள்ளான். இவனைக் கொல்பவன் எவனோ, அவனை அரசர் செல்வந்தனாக்கித் தம் மகளையும் அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்து, அவன் தந்தை வீட்டாரையும் இஸ்ராயேலில் வரி இல்லாதபடி ஆக்குவார்" என்றான்.

26 அதைக் கேட்ட தாவீது தன்னுடன் இருந்த மனிதர்களை நோக்கி, "இப் பிலிஸ்தியனைக் கொன்று, இஸ்ராயேலுக்கு ஏற்பட்டுள்ள இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும்? உயிருள்ள கடவுளின் சேனைகளைப் பழிக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இப் பிலிஸ்தியன் யார்?" என்றான்.

27 அதற்கு மக்கள், "அவனைக் கொல்கிறவனுக்கு இவை அனைத்தும் கொடுக்கப்படும்" என்று முன்சொன்ன வார்த்தைகளையே அவனுக்கு மறுபடியும் சொன்னார்கள்.

28 தாவீதின் மூத்த சகோதரனாகிய எலியாப் தாவீது மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறதைக் கேட்டு அவன் மேல் கோபமுற்று, "ஏன் இங்கு வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலைவனத்தில் விட்டு விட்டு ஏன் இங்கு வந்தாய்? உன் செருக்கையும் தீய எண்ணத்தையும் நான் அறிவேன். ஏனெனில் போரைப் பார்ப்பதற்காக வந்துள்ளாய்" என்று சொன்னான்.

29 அதற்கு தாவீது, "நான் என்ன செய்து விட்டேன்? நான் பேசக்கூடாதா?" என்றான்.

30 பின் அவனைவிட்டுச் சற்று விலகி வேறொருவனிடத்தில் அதேபோல் கேட்டான். மக்கள் முன்சொன்ன வார்த்தைகளையே அவனுக்கு மறுமொழியாகச் சொன்னார்கள்.

31 தாவீது கூறியவற்றைக் கேட்டவர்கள் அவற்றைச் சவுலுக்கு அறிவித்தனர்.

32 அவரருகில் அவன் அழைக்கப்பட்டபோது தாவீது சவுலை நோக்கி, "கோலியாத்தின் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை. உம் அடியானாகிய நானே போய் அப்பிலிஸ்தியனோடு சண்டையிடுவேன்" என்றான்.

33 அதற்குச் சவுல், "அப் பிலிஸ்தியனை எதிர்க்கவும், அவனுடன் சண்டையிடவும் உன்னால் முடியாது. நீயோ சிறுவன்; அவனோ இளமை முதல் போரில் பயிற்சி உள்ளவன்" என்றார்.

34 தாவீது சவுலை நோக்கி, "உம் அடியான் தன் தந்தையின் மந்தையை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமாவது கரடியாவது வரும். மந்தை நடுவிலிருந்து கடாவைத் தூக்கிக் கொண்டு போகும்.

35 நான் அவற்றைப் பின்தொடர்ந்து அடித்து அவற்றின் வாயினின்று பிடுங்குவேன். அவை என் மேல் பாயும். நானோ அவற்றின் மூஞ்சியைப் பிடித்து, மூச்சு விடாத படி அமுக்கி அவற்றைக் கொல்வேன்.

36 உம் அடியானாகிய நான் ஒரு சிங்கத்தையும் ஒரு கரடியையும் இவ்வாறு கொன்றிருக்கிறேன்; அவற்றில் ஒன்றைப் போலவே விருத்தசேதனம் செய்யப்படாத இப்பிலிஸ்தியனும் இருப்பான். இப்பொழுதே நான் போய் மக்களுக்கு வந்துள்ள இழிவை நீக்குவேன். ஏனெனில் உயிருள்ள கடவுளின் சேனையைப் பழிக்க விருத்தசேதனமற்ற இப்பிலிஸ்தியன் யார்?" என்றான்.

37 மறுபடியும் தாவீது, "என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர், இப்பிலிஸ்தியன் கையினின்றும் என்னை மீட்பார்" என்றான். "சென்றுவா; ஆண்டவர் உன்னோடு இருப்பார்!" என்று சவுல் தாவீதுக்குச் சொன்னார்.

38 சவுல் தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவன் தலை மேல் வைத்து, ஒரு மார்க்கவசத்தையும் அவனுக்கு அணிவித்தார்.

39 தாவீது அவரது வாளைத் தன் ஆடையின்மேல் கட்டிக்கொண்டு, இப்படி ஆயுதம் அணிந்து நடக்க முடியுமா என்று சோதித்துப் பார்த்தான்; ஏனெனில் அவனுக்குப் பழக்கம் இல்லை. தாவீது சவுலை நோக்கி, "எனக்குப் பழக்கம் இல்லாததால் இவ்விதம் நடக்க என்னால் முடியாது" என்று சொல்லி, அவற்றைக் களைந்து போட்டான்.

40 எப்பொழுதும் கையில் வைத்திருக்கும் தன் தடியைப் பிடித்துக்கொண்டு ஓடையில் ஐந்து கூழாங்கற்களைப் பொறுக்கி எடுத்துத் தன் மேலிருந்த இடையனுக்குரிய சட்டைப் பையில் போட்டுக் கவணையும் கையில் எடுத்துக் கொண்டு பிலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டான்.

41 பிலிஸ்தியனும் நடந்து தாவீதின் அருகில் வந்தான்; அவனுடைய பரிசையனும் அவன் முன் நின்றான்.

42 பிலிஸ்தியன் சுற்றிப்பார்த்துத் தாவீதைக் கண்டு, அவன் இளைஞனாயும் செந்நிறமாயும் பார்க்க அழகாயும் இருந்ததைப் பற்றி அவனை ஏளனம் செய்தான்.

43 பிலிஸ்தியன் அவனை நோக்கி, "நீ என்னிடம் ஒரு கோலுடன் வர நான் என்ன ஒரு நாயா?" என்று சொல்லி, தன் தேவர்களின் மேல் ஆணையிட்டுத் தாவீதைச் சபித்தான்.

44 மேலும் அவன் தாவீதை நோக்கி, "என் அருகில் வா; நான் வானத்துப் பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் உன் தசைகளைக் கொடுப்பேன்" என்றான்.

45 அதற்குத் தாவீது பிலிஸ்தியனைப் பார்த்து, "நீ வாளோடும் ஈட்டியோடும் கேடயத்தோடும் என்னிடம் வருகிறாய்; நானோ சேனைகளின் ஆண்டவருடைய பெயராலே, நீ அவமதித்த இஸ்ராயேலுடைய படைகளின் கடவுளுடைய பெயராலே உன்னிடத்தில் வருகிறேன்.

46 இன்று ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னைக் கொன்று உன் தலையைத் துண்டிப்பேன். இஸ்ராயேலரில் கடவுள் இருக்கிறதை உலகெல்லாம் அறிந்து கொள்ளும்படி, இன்று பிலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் கொடுப்பேன்.

47 அதனால் ஆண்டவர் மீட்பது வாளாலும் அன்று, ஈட்டியாலும் அன்று என்று இந்த மக்கட் கூட்டம் எல்லாம் தெரிந்து கொள்ளும்; ஏனெனில் போர் அவருடையது. அவர் உங்களை எங்கள் கைகளில் ஒப்படைப்பார்" என்று சொன்னான்.

48 பிலிஸ்தியன் எழுந்து தாவீதுக்கு எதிரே நெருங்கி வருகையில் தாவீது விரைந்து பிலிஸ்தியனுக்கு எதிராகச் சண்டையிட ஓடினான்.

49 தன் பையில் கையைவிட்டு ஒரு கல்லை எடுத்துக் கவணில் போட்டு அதைச் சுழற்றிப் பிலிஸ்தியன் நெற்றியில் எறிந்தான். கல் அவன் நெற்றியில் பதிந்து போனதால், அவன் தரையில் முகங்குப்புற விழுந்தான்.

50 இப்படித் தாவீது ஒரு கவணாலும் கல்லாலும் பிலிஸ்தியனை வென்று, அடிபட்ட பிலிஸ்தியனைக் கொன்றான். தாவீதின் கையில் வாள் இல்லாததால்,

51 அவன் ஓடிப் பிலிஸ்தியன் மேல் ஏறி நின்று, அவன் வாளைப் பிடித்து அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையைக் கொய்தான். அப்போது பிலிஸ்தியர் தங்களுக்குள் அதிக ஆற்றல் படைத்தவன் மாண்டதைக் கண்டு புறமுதுகு காட்டி ஓடினர்.

52 எனவே இஸ்ராயேலரும் யூதா மனிதர்களும் எழுந்து ஆர்ப்பரித்துக் கொண்டு பள்ளத்தாக்கின் எல்லை வரைக்கும் அக்காரோன் நகர் வாயில் வரைக்கும் பிலிஸ்தியரைத் துரத்தினார்கள். பிலிஸ்தியரில் காயம் அடைந்தவர்கள் சாராயிம் வழியிலும் கேத், அக்காரோன் வரைக்கும் விழுந்து கிடந்தனர்.

53 இஸ்ராயேல் மக்கள் பிலிஸ்தியரைப் பின்தொடர்ந்த பின், திரும்பி வந்து, அவர்களின் பாசறையைக் கொள்ளையடித்தார்கள்.

54 தாவீது பிலிஸ்தியனுடைய தலையை எடுத்து யெருசலேமுக்குக் கொண்டு வந்தான். அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்தில் வைத்தான்.

55 தாவீது பிலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போனதைக் கண்ட போது சவுல் தன் படைத்தலைவனாகிய அப்நேரை நோக்கி, "அப்நேர், இவ்விளைஞன் எக்குடும்பத்தில் பிறந்தவன்?" என்று கேட்டார். அப்நேர், "அரசே, உம் உயிர் மேல் ஆணை, அதை நான் அறியேன்" என்றான்.

56 அரசர், "இவ்விளைஞன் யாருடைய மகன் என்று கேள்" என்று சொன்னார்.

57 பிலிஸ்தியனைக் கொன்று தாவீது திரும்பி வந்தபோது அப்நேர் அவனைச் சவுல்முன் அழைத்துச் சென்றான். பிலிஸ்தியனுடைய தலை அவன் கையில் இருந்தது.

58 சவுல் அவனை நோக்கி, "இளைஞனே, நீ யாருடைய மகன்?" என்று கேட்டார். அதற்கு தாவீது, "நான் பெத்லகேம் ஊரானாகிய உம் அடியான் இசாயினுடைய மகன்" என்றான்.

அதிகாரம் 18

1 சவுலிடம் பேசி முடிந்தபோது, யோனத்தாசின் உள்ளமும் தாவீதின் உள்ளமும் ஒன்று பட்டன. யோனத்தாசு அவனைத் தன் உயிர் போல் அன்பு செய்தான்.

2 அந்நாளில் சவுல் தாவீதைத் தம்முடன் வைத்துக் கொண்டார்; அவனுடைய தந்தை வீட்டுக்குத் திரும்பிப் போக அவனுக்கு விடை கொடுக்கவில்லை.

3 யோனத்தாசும் தாவீதும் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். ஏனென்றால், அவன் இவனைத் தன்னுயிர் போல் அன்பு செய்தான்.

4 யோனத்தாசு தான் அணிந்திருந்த உள் சட்டையைக் கழற்றி அதைத் தாவீதுக்குக் கொடுத்தான். தன் வாள், வில், கச்சை, மற்றும் சட்டைகளையும் கொடுத்தான்.

5 சவுல் தனக்கு இட்ட அலுவல்கள் அனைத்தையும் தாவீது விவேகமுடன் செய்து வந்தான். எனவே சவுல் அவனைப் போர் வீரர்களுக்குத் தலைவனாக்கினார். எல்லா மக்களும் சிறப்பாகச் சவுலுடைய ஊழியர்களும் தாவீதைப் பெரிதும் விரும்பினர்.

6 தாவீது பிலிஸ்தியனை வென்று திரும்பி வருகையில் இஸ்ராயேலின் எல்லா நகரங்களிலுமிருந்தும் பெண்கள் கஞ்சிராக்களுடனும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சியாய் ஆடிப்பாடிச் சவுல் அரசரை எதிர்கொண்டு வந்தார்கள்.

7 அப்பெண்கள், "சவுல் கொன்றது ஆயிரம் பேர்; தாவீது கொன்றதோ பதினாயிரம் பேர்" என்று ஆடிப்பாடிக் கொண்டு சென்றனர்.

8 அது கேட்ட சவுல் மிகுந்த எரிச்சல் அடைந்தார். ஏனெனில் அது அவர் மனத்துக்குப் பிடிக்கவில்லை. அவர்கள், தாவீதுக்குப் பதினாயிரமும் எமக்கு ஆயிரமும் கொடுத்தார்களே; இன்னும் ஆட்சியை விட அவனுக்கு என்ன குறைவாய் இருக்கிறது?" என்று அவர் சொன்னார்.

9 அன்று முதல் சவுல் தாவீதை நல்ல கண் கொண்டு பார்க்கவில்லை.

10 மறுநாள் ஆண்டவரால் அனுப்பப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடித்துக் கொண்டது. அவர் தம் வீட்டிற்குள்ளே அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். தாவீது நாள்தோறும் செய்வது போலத் தன் கையால் யாழை மீட்டிக் கொண்டிருந்தான்.

11 சவுல் ஈட்டியைக் கையில் எடுத்து, தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த எண்ணி ஈட்டியை அவன் மேல் எறிந்தார். தாவீதோ இருமுறையும் தந்திரமாகத் தப்பித்துக் கொண்டான்.

12 ஆண்டவர் தம்மை விட்டுத் தாவீதுடன் இருப்பதினால் சவுல் அவனுக்குக் அஞ்சினார்.

13 சவுல் அவனைத் தம் பார்வையினின்று அகற்றி அவனை ஆயிரம் வீரர்களுக்குத் தலைவராக ஏற்படுத்தினார். எனவே, தாவீது மக்கள் முன்னிலையில் போகவர இருந்தான்.

14 தாவீது தான் செய்தவற்றில் எல்லாம் விவேகமாய் நடந்து கொண்டான். ஆண்டவர் அவனுடன் இருந்தார்.

15 அவன் மிகவும் விவேகத்துடன் நடந்து வரக்கண்டு சவுல் அவன் பால் எச்சரிக்கையாயிருக்கத் தொடங்கினார்.

16 இஸ்ராயேலரும், யூதாவின் மக்கள் அனைவரும் தாவீதுக்கு அன்பு செய்து வந்தனர். ஏனெனில் அவனே அவர்களுக்கு முன்பாகப் போகவர இருந்தான்.

17 ஒருநாள் சவுல் தாவீதை நோக்கி, "இதோ என் மூத்த மகள் மேரோபை உனக்கு மண முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் மாவீரனாய் இருந்து ஆண்டவருடைய போர்களை நடத்து" என்றார். "என் கை அவன் மேல் படாமல், பிலிஸ்தியர் கையே அவன் மேல் விழட்டும்" என்று சவுல் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

18 தாவீது சவுலை நோக்கி, "அரசரின் மருமகன் ஆவதற்கு நான் யார்? என் வாழ்க்கை என்ன? என் தந்தையின் வம்சமும் என்ன?" என்றான்.

19 சவுலின் மகள் மேரோபைத் தாவீதுக்குக் கொடுக்க வேண்டியிருக்க அவள் மோலாதித்தனாகிய அதிரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

20 சவுலின் வேறொரு மகளான மிக்கோல் தாவீதுக்கு அன்பு செய்தாள். இச்செய்தி சவுலுக்கு அறிவிக்கப்பட்ட போது அவர் மகிழ்வுற்றார்.

21 நான் அவளை அவனுக்கு கொடுப்பேன். ஏனெனில் அவள் அவனுக்கு இடையூறாய் இருப்பாள். பிலிஸ்தியர் கையும் அவன் மேல் விழும் என்று சவுல் சொன்னார். மேலும் அவனைப் பார்த்து, "நீ இரண்டு காரியங்களை முன்னிட்டு இன்று எனக்கு மருமகனாய் இருப்பாய்" என்றார்.

22 பிறகு சவுல் தம் ஊழியக்காரரை நோக்கி, "நீங்கள் தாவீதோடு இரகசியமாய்ப் பேசி, 'அரசர் உன் மேல் பிரியமாய் இருக்கிறார். அவருடைய ஊழியர் எல்லாம் உன்மேல் அன்பு கொண்டுள்ளனர். ஆதலால் நீ அரசனுக்கு மருமகனாய் இரு' என்று சொல்லுங்கள்" என்றார்.

23 அவ்விதமே அவர்கள் இச்சொற்களை எல்லாம் தாவீதிடம் கூறினார்கள். அதற்குத் தாவீது, "அரசனின் மருமகனாய் இருப்பது உங்களுக்கு அற்பமென்று தோன்றுகின்றதா? நானோ எளியவனும் தாழ்ந்த நிலையில் உள்ளவனுமாய் இருக்கிறேனே" என்றான்.

24 தாவீது இவ்வாறு சொன்னான்" என்று சவுலின் ஊழியர்கள் அவருக்குத் தெரிவித்தார்கள்.

25 அதைக் கேட்டுச் சவுல், "நீங்கள் அவனைப் பார்த்து, 'அரசருக்குப் பரிசம் அவசியமில்லை; அரசருடைய எதிரிகளைப் பழிவாங்கிப் பிலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கொண்டு வந்தால் போதும்' என்று சொல்லுங்கள்" என்றார். ஏனெனில் தாவீதை பிலிஸ்தியரின் கையில் ஒப்படைக்கச் சவுல் எண்ணியிருந்தார்.

26 சவுல் சொன்ன வார்த்தைகளை அவருடைய ஊழியர்கள் தாவீதுக்குத் திரும்பத் தெரிவித்த போது தாவீது மகிழ்வுற்று அரசருடைய மருமகனாய் இருக்க மனம் இசைந்தான்.

27 சில நாட்களுக்குப் பின் தாவீது எழுந்து தனக்குக் கீழிருந்த மனிதர்களோடு போய்ப் பிலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்று அவர்களுடைய நுனித்தோல்களைக் கொண்டு வந்து அரசரின் மருமகனாகும் பொருட்டு அவற்றை அவர்முன் எண்ணி வைத்தான். ஆகையால் சவுல் தம் மகள் மிக்கோலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தார்.

28 ஆண்டவர் தாவீதோடு இருப்பதாக சவுல் உணர்ந்து கொண்டார். சவுலின் மகள் மிக்கோல் தாவீதிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள்.

29 சவுல் தாவீதுக்கு அதிகம் அஞ்சத் தொடங்கினார். அது முதல் எந்நாளும் தாவீதின் பகைவரானார்.

30 பிலிஸ்தியரின் தலைவர்கள் போருக்குப் புறப்பட்டனர். அவர்கள் புறப்பட்டது முதல் தாவீது சவுலின் ஊழியர்களை விட விவேகமாய் நடந்து கொண்டான். அவனுடைய பெயர் மிகப் புகழடைந்தது.

அதிகாரம் 19

1 தாவீதைக் கொல்லவேண்டும் என்று சவுல் தம் மகன் யோனத்தாசிடமும், தம் எல்லா ஊழியர்களிடமும் கூறினார். ஆனால் சவுலின் மகன் யோனத்தாசு தாவீதுக்கு மிகவும் அன்பு செய்து வந்தான்.

2 யோனத்தாசு தாவீதுக்கு இதைத் தெரிவித்து, "என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்; ஆகையால் நாளைக் காலையில் விழிப்பாய் இரு; இரகசியமான இடத்தில் தங்கி மறைவாக இரு.

3 நான் எழுந்து, நீ வெளியில் எங்கெங்கு இருப்பாயோ, அங்கெல்லாம் என் தந்தை அருகில் நான் நிற்பேன். நான் உன்னைக் குறித்து என் தந்தையிடம் பேசி எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் உனக்கு அறிவிப்பேன்" என்றான்.

4 யோனத்தாசு தன் தந்தை சவுலிடத்தில் தாவீதைக் குறித்து நல்லன பேசி, "அரசே, தாவீது உமக்குத் துரோகம் செய்ததில்லை; அவன் செயல்கள் எல்லாம் உமக்கு மிகவும் பயன்படுகிற படியால், நீர் உம் அடியானாகிய அவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்ய வேண்டாம்.

5 அவன் தன் உயிரை ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பிலிஸ்தியனைக் கொன்றான். ஆண்டவர் இஸ்ராயேல் முழுவதற்கும் பெரும் மீட்பைத் தந்தார். நீர் அதைப் பார்த்து மகிழ்வுற்றீர். காரணமின்றித் தாவீதைக் கொன்று குற்றமற்ற இரத்தத்தைச் சிந்த நினைத்துப் பாவம் செய்ய வேண்டுமா?" என்று சொன்னான்.

6 சவுல் யோனத்தாசின் சொற்களைக் கேட்டு அமைதி அடைந்து, "ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப் படமாட்டான்" என்று சத்தியம் செய்தார்.

7 யோனத்தாசு தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவனுக்குத் தெரிவித்தான். பின்னர் தாவீதைச் சவுலிடம் கூட்டி வந்தான். அவனும் முன்போலவே சவுலின் அவையில் பணியாற்றினான்.

8 மீண்டும் போர் மூண்டது. தாவீது புறப்பட்டுப் பிலிஸ்தியரோடு சண்டையிட்டு அவர்களில் எண்ணற்றோரைக் கொன்று குவித்தான். அவர்கள் அவனுக்கு முன்பாகச் சிதறியோடினார்கள்.

9 ஆண்டவரால் அனுப்பப்பெற்ற தீய ஆவி சவுலின் மேல் வந்தது. அவர் அரண்மனையில் ஈட்டியைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார். தாவீது தன் கையால் யாழை மீட்டிக் கொண்டிருந்தான்.

10 சவுல் ஈட்டியால் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றார்; ஆனால் தாவீது அதைத் தவிர்த்து விலக்கினதால், அது குறி தவறிச் சுவரில் பாய்ந்தது. தாவீது அன்று இரவே ஓடிப்போய்த் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.

11 தாவீதைக் காவல் செய்து அவனை மறுநாட் காலையில் கொல்லும் படி சவுல் அவன் வீட்டுக்குத் தம் காவலரை அனுப்பினார். தாவீதின் மனைவி மிக்கோல் இதை அவனுக்குத் தெரிவித்து, "நீர் இன்று இரவே உம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளாவிட்டால், நாளைச் சாவீர்" என்று சொன்னாள்.

12 பின் அவனைச் சன்னல் வழியே இறக்கிவிட்டாள். அவன் அவ்விதமே தப்பி ஓடினான்.

13 மிக்கோலோ ஒரு பொம்மையை எடுத்துக் கட்டிலின்மேல் கிடத்தி வெள்ளாட்டு மயிர்த்தோலை அதன் தலைமாட்டில் வைத்து அதைப் போர்வையால் மூடினாள்.

14 தாவீதைப் பிடிக்கச் சவுல் காவலரை அனுப்பின போது, அவன் நோயுற்றிருப்பதாக மறுமொழி சொல்லப்பட்டது.

15 மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும்படி தூதர்களை அனுப்பி, "அவனைக் கொன்று போடும்படி கட்டிலுடன் அவனை எம்மிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.

16 தூதர்கள் வந்த போது கட்டிலின் மேல் பொம்மையும் அதன் தலைமாட்டில் இருந்த வெள்ளாட்டுத் தோலும் இருக்கக் கண்டனர்.

17 பிறகு சவுல் மிக்கோலைப் பார்த்து, "என்னை ஏன் இப்படி ஏமாற்றினாய்? என் பகைவனை ஏன் தப்பவிட்டாய்?" என்று கேட்டார். மிக்கோல் அவரை நோக்கி, "'அவர் என்னைப் போகவிடு, இல்லாவிட்டால் நான் உன்னைக் கொன்று போடுவேன்' என்று என்னிடம் சொல்லி மிரட்டினார்" என்றாள்.

18 தாவீது தப்பியோடி ராமாத்தாவிலிருந்த சாமுவேலிடம் வந்து சவுல் தனக்குச் செய்தவற்றை எல்லாம் அவருக்குச் சொன்னான். அப்பொழுது அவனும் சாமுவேலும் போய் நயோத்தில் தங்கியிருந்தனர்.

19 தாவீது ராமாத்தாவுக்கு அடுத்த நயோத்தில் இருக்கிறான்" என்ற செய்தி சவுலின் காதுகளுக்கு எட்டியது.

20 அப்போது தாவீதைப் பிடிக்கச் சவுல் காவலரை அனுப்பினார். அவர்கள் இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்த இறைவாக்கினர் கூட்டத்தையும், இவர்களுக்குத் தலைவராகச் சாமுவேல் உட்கார்ந்திருந்ததையும் கண்ட போது, அவர்கள் மேலும் ஆண்டவருடைய ஆவி இறங்க, அவர்களும் இறைவாக்கு உரைக்கத் தொடங்கினார்கள்.

21 இது சவுலுக்கு தெரிவிக்கப்பட்ட போது அவர் வேறு தூதர்களை அனுப்பினார். அவர்களும் இறைவாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள். மறுபடியும் சவுல் தூதரை அனுப்ப, இவர்களும் இறைவாக்கு உரைக்கத் தொடங்கினார். சவுல் கடுங்கோபம் கொண்டு,

22 தாமே ராமாத்தா நோக்கிப் புறப்பட்டு, செக்கோத்தில் இருந்த ஒரு பெரும் கிணற்றருகே வந்து, "சாமுவேலும் தாவீதும் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?" என்று கேட்டார். "அதோ ராமாத்தாவுக்கடுத்த நயோத்தில் இருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது.

23 அப்போது அவர் ராமாத்தாவுக்கடுத்த நயோத்துக்குச் சென்றார். அவர் மேலும் ஆண்டவருடைய ஆவி இறங்கினது; அவரும் ராமாத்தாவிலிருந்து நயோத் வரும் வரை இறைவாக்கு உரைத்துக் கொண்டே நடந்து சென்றார்.

24 தம் சட்டைகளைக் கழற்றிவிட்டுச் சாமுவேலுக்கு முன்பாக மற்றவர்களோடு அவரும் இறைவாக்கு உரைத்தார். அன்று பகல் முழுவதும் இரவிலும் ஆடையில்லாமல் விழுந்து கிடந்தார். இதனால், "சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ ?" என்னும் பழமொழி வழங்கலாயிற்று.

அதிகாரம் 20

1 தாவீது ராமாத்தாவிலிருந்த நயோத்தை விட்டு ஓடி, யோனத்தாசிடம் வந்து, "உன் தந்தை என் உயிரைப் பறிக்கத் தேடுகிறாரே! நான் என்ன செய்தேன்? நான் என்ன தீங்கு செய்தேன்? நான் உன் தந்தைக்கு இழைத்த பழி என்ன?" என்று முறையிட்டான்.

2 அதற்கு அவன், "அப்படி நடவாதிருக்கட்டும்; நீ சாகமாட்டாய். எனக்கு தெரியப்படுத்தாமல் என் தந்தை பெரிய காரியமேனும் சிறிய காரியமேனும் ஒன்றும் செய்யமாட்டார். இக்காரியத்தை மட்டும் என் தந்தை எனக்குச் சொல்லாமல் மறைப்பாரோ? அப்படி நடக்காது" என்று அவனுக்குச் சொல்லி,

3 மறுபடியும் தாவீதுக்கு ஆணையிட்டான். அதற்கு அவன், "எனக்கு உன் கண்களில் தயவு கிடைத்துள்ளது என்று உன் தந்தை நன்றாய் அறிந்திருக்கிறார்; இது யோனத்தாசுக்குத் தெரிய வந்தால் அவன் மனம் வருந்துவானே என்பதற்காக அதை உனக்கு அறிவிக்கவில்லை போலும். எனக்கும் சாவுக்கும் ஓர் அடி தூரம் தான் இருக்கிறது என்று ஆண்டவரின் உயிரின் மேலும் உன் உயிரின் மேலும் ஆணையிடுகிறேன்" என்றான்.

4 அப்பொழுது, யோனத்தாசு தாவீதை நோக்கி, "நீ சொல்வதை எல்லாம் நான் செய்யத் தயார்" என்றான்.

5 தாவீது யோனத்தாசை நோக்கி, "இதோ நாளை மாதத்தின் முதல் நாள். அன்று நான் அரசரின் பந்தியில் அமர்வது வழக்கம். ஆனால் நான் மூன்றாம் நாள் மாலை வரை வெளியே ஒளிந்திருக்கும்படி நீ எனக்கு விடை கொடு.

6 உன்னுடைய தந்தை என்னைக் குறித்து விசாரித்தால், அதற்கு நீ, 'அவன் தன் சொந்த நகராகிய பெத்லகேமில் தன் குடும்பத்தார் அனைவருடனும் சிறப்புப் பலிகள் ஒப்புக்கொடுக்கச் சென்றிருக்கிறான். எனவே, அங்கு விரைந்து போக என்னிடம் அனுமதி கேட்டான் என்று சொல்.'

7 அவர், 'நல்லது' என்றால் உம் அடியான் நான் அமைதியுடன் இருப்பேன். அவர் கோபித்துக் கொண்டால், அவருடைய தீயகுணம் அதன் சிகரத்தை அடைந்து விட்டது என்று அறிந்து கொள்.

8 நான் ஆண்டவர் திருமுன் உன்னுடன் உடன்படிக்கை செய்தபடியால், உன் அடியான் மேல் இரக்கம் வை. என் மேல் ஏதாவது குற்றம் இருந்தால், உன் தந்தையிடம் என்னைக் கொண்டு போக வேண்டாம்; நீயே என்னைக் கொன்றுவிடு" என்றான்.

9 அதற்கு யோனத்தாசு, "அப்படி உனக்கு நேரிடாதிருப்பதாக! உனக்குத் தீங்கு செய்ய என் தந்தை முடிவு செய்திருக்கிறார் என்று நான் திட்டமாய் அறிந்தால், அதை உனக்குத் தெரிவிக்காமல் இருப்பேனா?" என்றான்.

10 தாவீது யோனத்தாசை நோக்கி, "ஒருவேளை உன் தந்தை என்னைக் குறித்து உன்னிடம் கடுமையாய் மறுமொழி சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார்?" என்று கேட்டான்.

11 அதற்கு, யோனத்தாசு தாவீதை நோக்கி, "ஊருக்கு வெளியே வயலுக்குப் போவோம், வா" என்றான். இருவரும் வயலை அடைந்தனர்.

12 யோனத்தாசு தாவீதிடம், "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, நாளையாவது மறுநாளாவது என் தந்தையின் கருத்தை நான் அறிந்து கொண்டு, அது தாவீதுக்கு நன்மை பயப்பதாய் இருக்குமென்றால் அதை அவனுக்கு உடனே தெரியப்படுத்துவேன்.

13 இல்லாவிடில் ஆண்டவர் எனக்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பாராக! என் தந்தை உன்மேல் கொண்டிருந்த பகையை விட்டு விடாதிருந்தால், நான் உனக்கு அதை வெளிப்படுத்துவேன். அப்பொழுது நீ சமாதானமாய் ஓடிப் போகும்படியும், ஆண்டவர் என் தந்தையோடு இருந்தது போல் உன்னுடனும் இருக்கும்படியும் உனக்குச் சொல்லி அனுப்புவேன்.

14 நான் இன்னும் உயிரோடு இருந்தால் ஆண்டவரை முன்னிட்டு நீ எனக்குத் தயை செய்; அதற்குள் நான் இறந்து போனால்,

15 ஆண்டவர் தாவீதின் எதிரிகள் அனைவரையும் பூமியினின்று அழித்தொழிக்கட்டும். அப்போது நீ அருள் கூர்ந்து என் வீட்டில் மேல் என்றும் இரக்கமாய் இருக்க வேண்டும். நான் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்தால், ஆண்டவர் என் வீட்டிலிருந்து என்னை அழித்தொழித்துத் தாவீதைத் தன் எதிரிகளின் கையினின்று மீட்பாராக" என்றான்.

16 இவ்விதமாய் யோனத்தாசு தாவீதின் குடும்பத்தாரோடு உடன்படிக்கை செய்து கொண்டான். ஆண்டவரும் தாவீதின் எதிரிகளைப் பழிவாங்கினார்.

17 யோனத்தாசு தாவீதின்மேல் அன்பு கூர்ந்திருந்தபடியால் பல முறை அப்படியே ஆணையிட்டுச் சத்தியம் செய்தான். ஏனெனில் தாவீதைத் தன்னுயிர் போல் அவன் அன்பு செய்து வந்திருந்தான்.

18 பிறகு யோனத்தாசு தாவீதை நோக்கி, "நாளை மாதத்தின் முதல் நாள். என் தந்தை உன்னைப் பற்றிக் கேட்பாரே.

19 இரண்டு நாள்வரை நீ அங்கு இருக்க வேண்டும் அன்றோ? வேலை செய்யக் கூடுமான மூன்றாவது நாளில் நீ உடனே இறங்கி மறைவிடத்திற்கு வந்து எசேல் என்னும் பெயர் கொண்ட கல் அருகில் அமர்ந்திரு.

20 அப்பொழுது அம்பு எய்யப் பழகுவது போல் நான் அந்தக் கல் இருக்கும் திசையில் மூன்று அம்புகளை எய்வேன்.

21 பிறகு ஒரு சிறுவனை நோக்கி, 'நீ போய் அம்புகளை எடுத்துவா' என்று சொல்லி அனுப்புவேன்.

22 அப்போது நான் அவனைப் பார்த்து, 'இதோ அம்புகள் உனக்கு இப்பக்கத்தில் இருக்கின்றன; அவற்றை எடுத்துவா' என்று சொல்வேனேயாகில், நீ என்னிடம் வா; ஏனெனில் உனக்கு அமைதி கிடைக்கும். ஆண்டவர் மேல் ஆணை, உனக்குத் தீங்கு ஒன்றும் நேரிடாது. ஆனால், 'இதோ அம்புகள் உனக்கு அப்பால் இருக்கின்றன' என்று நான் சிறுவனுக்குச் சொல்வேனேயாகில், நீ அமைதியுடன் ஓடிப்போக வேண்டியது தான். ஏனெனில் ஆண்டவரே உன்னை அனுப்பி வைக்கிறார்.

23 நீயும் நானும் செய்து கொண்ட இவ்வுடன்படிக்கைக்கு ஆண்டவரே என்றென்றும் நம் இருவருக்கும் இடையே சாட்சியாய் இருப்பாராக" என்றான்.

24 ஆகையால் தாவீது வயலில் ஒளிந்து கொண்டான். மாதத்தின் முதல் நாளும் வந்தது.

25 அரசர் உணவருந்த உட்கார்ந்தார். அவர் தம் வழக்கப்படி சுவர் அருகே இருந்த தம் இருக்கையில் அமர்ந்தபோது யோனத்தாசு எழுந்தான். அப்நேர் சவுலின் பக்கத்தில் உட்கார்ந்தான்; அப்பொழுது தாவீதின் இடம் காலியாயிருந்தது.

26 அன்று சவுல் ஒன்றும் சொல்லவில்லை; 'ஒருவேளை அவன் தீட்டுப்பட்டு இன்னும் தூய்மையாகவில்லை போலும்' என்று சவுல் நினைத்திருந்தார்.

27 மாதத்தின் இரண்டாம் நாளும் வந்தது; தாவீதின் இடம் இன்னும் காலியாகவே இருந்தது. அதைக் கண்ட சவுல் தம் மகன் யோனத்தாசை நோக்கி, "இசாயி மகன் நேற்றும் இன்றும் சாப்பிட வராதது ஏன்?" என்று கேட்டார்.

28 அதற்கு யோனத்தாசு, "அவன் பெத்லகேமுக்குப் போக என்னை வருத்திக் கேட்டுக் கொண்டு:

29 'என் ஊரில் ஆடம்பரப்பலி இருக்கிறது; என் சகோதரர்களில் ஒருவன் தன்னிடம் வரும்படி கேட்டுள்ளான்; இப்பொழுது உமது கண்ணில் எனக்குத் தயை கிடைத்துள்ளதால், என்னை அனுப்பி வையும்; நான் விரைவில் சென்று என் சகோதரர்களைப் பார்த்து வருகிறேன்' என்றான். இதனால் தான் அவன் அரச பந்திக்கு வரவில்லை" என்றான்.

30 சவுல் யோனத்தாசு மேல் கோபமுற்று, "வேசி மகனே பேசாதே! உனக்கும் உன் மானம் கெட்ட தாய்க்கும் வெட்கமாய் இருக்கும் அளவுக்கு நீ இசாயி மகனுக்கு அன்பு செய்கிறாய் என்று எனக்குத் தெரியாதோ?

31 இசாயி மகன் பூமியின் மேல் உயிரோடு இருக்கும் வரை, நீயும் நிலைத்திருக்க மாட்டாய்; உன் ஆட்சியும் நிலைத்திருக்காது. ஆகையால் இப்போதே அவனை அழைத்து என்னிடம் கொண்டுவா; ஏனெனில் அவன் சாகவேண்டும்" என்று சொன்னார்.

32 யோனத்தாசு தன் தந்தை சவுலுக்கு மறுமொழியாக, "அவன் ஏன் சாக வேண்டும்? அவன் என்ன செய்தான் ? என்றான்.

33 சவுல் அவனைக் குத்திப் போட ஈட்டியை எடுத்தார். தாவீதைக் கொன்று போடத் தன் தந்தை தீர்மானித்திருக்கிறார் என்று யோனத்தாசு அறிந்து கொண்டான்.

34 எனவே கோபத்தோடு பந்தியை விட்டு எழுந்து மாதத்தின் இரண்டாம் நாளாகிய அன்று ஒன்றும் சாப்பிடாது இருந்தான். ஏனெனில் தன் தந்தை தன்னை அவமானப் படுத்தினதைப் பற்றியும் தாவீதைப் பற்றியும் மனம் வருந்திக் கொண்டிருந்தான்.

35 பொழுது விடிந்த போது யோனத்தாசு தாவீதுடன் உடன்பாடு செய்திருந்தபடி தன்னுடன் ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு வயலுக்குப் போனான்.

36 சிறுவனை நோக்கி, "நீ போய் நான் எறியும் அம்புகளை எடுத்து வா" என்றான். சிறுவன் ஓடிய போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தான்.

37 யோனத்தாசு விட்ட அம்பு கிடந்த இடத்திற்குச் சிறுவன் வந்த போது, யோனத்தாசு சிறுவனுக்குப் பின்னால் குரல் எழுப்பி, "அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது" என்றான்.

38 மறுபடியும் யோனத்தாசு சிறுவனுக்குப் பின்னால் கூவி, "நிற்காதே, விரைந்து போ" என்றான். யோனத்தாசின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி எடுத்துத் தன் தலைவனிடம் கொண்டு வந்தான்.

39 யோனத்தாசும் தாவீதும் மட்டுமே அதன் பொருளை அறிந்திருந்தார்களேயன்றிச் சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

40 அப்பொழுது யோனத்தாசு சிறுவனிடம் தன் ஆயுதங்களைக் கொடுத்து விட்டு, "இவற்றை நீ நகருக்குக் கொண்டு போ" என்றான்.

41 சிறுவன் சென்ற பின், தாவீது தெற்கே இருந்த இடத்திலிருந்து எழுந்து, தரைமட்டும் குனிந்து விழுந்து மும்முறை அவனை வணங்கினான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அழுதார்கள்.

42 பின்பு யோனத்தாசு தாவீதை நோக்கி, "நீ அமைதியோடு போ. ஆண்டவர் பெயரால் நாம் இருவரும் செய்து கொண்ட உடன்படிக்கையைப் பொருத்த மட்டில், ஆண்டவர் உனக்கும் எனக்கும், உன் சந்ததிக்கும் என் சந்ததிக்கும் நடுவே என்றும் சாட்சியாய் இருப்பாராக!" என்று சொன்னான்.

43 பிறகு தாவீது எழுந்து சென்றான். யோனத்தாசு தன் நகர் திரும்பினான்.

அதிகாரம் 21

1 தாவீது நோபே ஊரிலிருந்த குரு அக்கிமெலேக்கிடம் வந்து சேர்ந்தான். அக்கிமெலேக் தாவீதின் வருகையைப் பற்றித் திடுக்கிட்டு, "ஒருவரும் உன்னோடு வராமல் நீ தனியாய் வந்தது ஏன்?" என்று வினவினார்.

2 தாவீது குரு அக்கிமெலேக்கை நோக்கி, "அரசர் எனக்கு ஒரு கட்டளை விடுத்துள்ளார்: 'நீ அனுப்பப் பட்டதன் நோக்கமும், நான் உனக்குக் கொடுத்துள்ள கட்டளையும் இன்னதென்று ஒருவரும் அறியலாகாது' என்றான். இந்தந்த இடத்திற்கு வர வேண்டும் என்று நான் என் ஊழியருக்குச் சொல்லியிருக்கிறேன்.

3 இப்பொழுது உம்மிடம் ஐந்து அப்பங்கள் இருந்தால் அவற்றை எனக்குக் கொடும், இல்லாவிடில் வேறு எதுவானாலும் கொடும்" என்று கெஞ்சினான்.

4 குரு தாவீதுக்கு மறுமொழியாக, "என் கையில் பரிசுத்த அப்பங்களேயன்றிச் சாதாரண அப்பங்கள் இல்லை. இளைஞரான நீங்கள் பெண்களோடு சேராது தூய்மையாய் இருந்தால் சரி" என்றார்.

5 அதற்குத் தாவீது குருவை நோக்கி, "பெண்களைப் பொருத்த மட்டில் எங்களுக்குத் தீட்டு இல்லை. நாங்கள் புறப்பட்டது முதல் நேற்றும் முந்தா நாளும் அவர்களைத் தொட்டதில்லை. ஆதலால் இளைஞருடைய ஆடை முதலியவை பரிசுத்தமாகவே இருந்தன. இப்பயணத்தில் ஏதாவது தீட்டுப்பட்டிருந்தால் இன்றுதான் தூய்மை பெறும்" என்றான்.

6 ஆகையால் குரு பரிசுத்த அப்பத்தை அவனுக்குக் கொடுத்தார். உண்மையில் சூடான அப்பங்களை வைக்கும்படி ஆண்டவர் முன்னிலையிலிருந்து எடுக்கப்பட்ட காணிக்கை அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் இல்லை.

7 அந்நேரத்தில் சவுலின் ஊழியர்களிலே ஒருவன் ஆண்டவருடைய கூடாரத்துக்குள் இருந்தான். அவனுடைய பெயர் தோயேக். அவன் இதுமேயன்; சவுலுடைய இடையர்களுக்குத் தலைவன்.

8 தாவீது அக்கிமெலேக்கை நோக்கி, "இங்கு ஈட்டிகளாவது வாளாவது உன் கையில் உண்டா? அரசனின் கட்டளை அவசரமானதாய் இருந்தது. எனவே, என் வாளையும் ஆயுதங்களையும் நான் எடுத்துக் கொண்டு வரவில்லை" என்று சொன்னான்.

9 அதற்குக் குரு, "தெரேபிந்த் பள்ளத்தாக்கில் நீ கொன்ற பிலிஸ்தியன் கோலியாத்தினுடைய வாள் அதோ எபோத்துக்குப் பின்னால் துணியில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு வாள் இங்கு இல்லை" என்று சொன்னார். அப்போது தாவீது, "அதற்கு நிகரானது வேறில்லை; அதை எனக்குக் கொடும்" என்று சொன்னான்.

10 அன்றே தாவீது எழுந்து சவுல் முன்னிலையினின்று ஓடிப்போனான்; கேத் அரசன் அக்கீசிடம் போய்ச் சேர்ந்தான்.

11 அக்கீசின் ஊழியர்கள் தாவீதைப் பார்த்த போது அவனைக் குறித்து, "இவன் நாட்டின் அரசனான தாவீது அல்லனோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று சொல்லி ஆடிப்பாடிக் கொண்டாடியது இவனைப் பற்றித்தானே?" என்றனர்.

12 தாவீது இச்சொற்களைத் தன் மனதில் வைத்துக் கொண்டு, கேத் அரசன் அக்கீசுக்கு மிகவும் அஞ்சினான்.

13 அவர்களுக்கு முன்பாகத் தன் முகத் தோற்றத்தை வேறுபடுத்திக் கொண்டு, திடீரென அவர்கள் மேல் பாய்ந்து விழுவதும், வாயிற் கதவுகளில் மோதிக் கொள்வதுமாயிருந்தான். உமிழ் நீர் அவனுடைய தாடியின் வழியே ஒழுகிக் கொண்டிருந்தது.

14 அக்கீசு தன் ஊழியர்களை நோக்கி, "இம்மனிதன் பைத்தியக்காரன் என்று நீங்கள் காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடம் கொண்டு வந்தது ஏன்?

15 என் முன்னிலையில் பைத்தியக்காரனாய் நடிக்க இவனை நீங்கள் கொண்டு வந்தீர்களே; நம்மிடம் பைத்தியக்காரர்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா" என்று சினந்து கொண்டான்.

அதிகாரம் 22

1 தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஒதொல்லாம் என்னும் குகைக்கு ஓடிப்போனான். அவனுடைய சகோதரரும் அவன் தந்தை வீட்டார் அனைவரும் இதைக் கேள்விப்பட்டு அங்கு அவனிடம் வந்து சேர்ந்தனர்.

2 துன்புற்றோர், கடன்பட்டோர், மனத்துயருற்றோர் அனைவரும் அவனோடு சேர்ந்து கொண்டாடினார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான். இப்படி அவனோடு ஏறக்குறைய நானூறு பேர் இருந்தனர்.

3 தாவீது அங்கிருந்து மோவாபியரைச் சேர்ந்த மாஸ்பாவுக்குப் போய் மோவின் அரசனைப் பார்த்து, "நான் செய்ய வேண்டியது இன்னதென்று கடவுள் எனக்குத் தெரிவிக்கும் வரை என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்கும் படி அனுமதி கொடும்" என்று வேண்டினான்.

4 பின் அவர்களை அழைத்து வந்து மோவாப் அரசன் முன் நிறுத்தினான். தாவீது கோட்டையில் இருந்த நாட்கள் முழுவதும் அவர்கள் மோவாப் அரசனோடு தங்கி இருந்தார்கள்.

5 பின்பு இறைவாக்கினரான காத் என்பவன் தாவீதை நோக்கி, "நீ கோட்டையில் தங்காது யூதேயா நாட்டிற்குப் புறப்பட்டுப் போ" என்றார். தாவீது புறப்பட்டு அரேத் என்ற காட்டை அடைந்தான்.

6 தாவீதும் அவனுடன் இருந்த மனிதர்களும் கண்டுபிடிக்கப்பெற்ற செய்தியைச் சவுல் கேள்விப்பட்டார். சவுல் காபாவைச் சேர்ந்த ராமாவில் இருக்கிற ஒரு தோப்பில் கையில் ஈட்டியை ஏந்தியவாறுக் காத்திருந்தார். அவருடைய ஊழியர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள்.

7 சவுல் தமக்கு உதவி செய்து வந்த ஊழியர்களை நோக்கி, "ஜெமினி புதல்வர்களே, கேளுங்கள். இசாயி மகன் உங்கள் எல்லோருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்கள் எல்லோரையும் படைத் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்துவானோ?

8 அப்படியிருக்க, நீங்கள் அனைவரும் எனக்கு எதிராகச் சதி செய்தது ஏன்? சிறப்பாக, என் மகன் இசாயி மகனோடு உடன்படிக்கை செய்து கொண்ட போது உங்களில் யாராவது அதை எனக்குத் தெரிவித்ததுண்டோ? இல்லையே. எனது அவல நிலைக்கு இரங்கி உங்களில் ஒருவனும் அச்செய்தியை எனக்கு அறிவிக்கவில்லை. ஆம், என் சொந்த மகனே என் வேலைக்காரனை எனக்கு விரோதமாய்த் தூண்டி விட்டதால், அவன் இன்று வரை எனக்குச் சதி செய்யப் பார்க்கிறான்" என்றார்.

9 அப்பொழுது அங்கிருந்த சவுலின் ஊழியர்களில் முக்கிய வேலைக்காரனான இதுமேயனாகிய தோயேக் என்பவன் எழுந்து, "நோபேயில் இருக்கிற அக்கிதோபின் மகன் அக்கிமெலேக் என்ற குருவிடம் இசாயியின் மகன் வரக்கண்டேன்.

10 அக்கிமெலேக் அவனுக்காக ஆண்டவரை மன்றாடி, அவனுக்கு வழிக்கு உணவும், பிலிஸ்தியனாகிய கோலியாத்தின் வாளும் கொடுத்தார்" என்றான்.

11 அதைக் கேட்டு அரசர் நோபேய்க்கு ஆட்களை அனுப்பி, அக்கிதோபின் மகனும் குருவுமான அக்கிமெலேக்கையும் அவர் தந்தை வீட்டாரான குருக்கள் எல்லோரையும் அழைத்து வரச் செய்தார். அவர்கள் எல்லாரும் அரசரிடம் வந்து சேர்ந்தனர்.

12 அப்போது, சவுல் அக்கிமெலேக்கை நோக்கி, "அக்கிதோபின் மகனே, கேள்" என்றார். அதற்கு அவர், "இதோ நிற்கிறேன் அரசே!" என்று மறுமொழி சொன்னார்.

13 சவுல் அவரைப் பார்த்து, "நீரும் இசாயியின் மகனும் எனக்கு விரோதமாய்ச் சதி செய்ய நினைத்தது ஏன்? நீர் அவனுக்கு அப்பங்களையும் வாளையும் கொடுத்து, இன்று வரை பிடிவாதச் சதிகாரனான அவன் எனக்கு விரோதமாய்க் கிளர்ச்சி செய்யும்படி, கடவுள் திருமுன் அவனுக்காக விசாரித்ததும் ஏன்?" என்று கேட்டார்.

14 அதற்கு அக்கிமெலேக், "உம் எல்லா ஊழியர்களிலும் தாவீதைப் போல் பிரமாணிக்கம் உள்ளவன் யார்? அவன் அரசருக்கு மருமகனும் உம் கட்டளையின்படி செய்து வருகிறவனும், உம் வீட்டிலே மகிமை பெற்றவனும் அல்லனோ?

15 இன்று நானாகவே அவனுக்காகக் கடவுளிடம் விசாரிக்கத் தொடங்கினேன். அரசர் தம் அடியான் மேலும், என் தந்தை வீட்டார் மேலும் இப்படிப்பட்ட காரியத்தைக் குறித்துச் சந்தேகப்படலாகாது. உம் ஊழியனாகிய நான் இக்காரியத்தைப் பற்றி ஒரு சிறிதும் அறியேன்" என்றார்.

16 அரசரோ, "அக்கிமெலேக்கே, நீயும் உன் தந்தை வீட்டாரும் சாகவே சாவீர்கள்" என்று சொன்னார்.

17 அப்பொழுது அரசர் தம்மைச் சூழ்ந்திருந்த சேவகர்களை நோக்கி, "நீங்கள் போய் ஆண்டவருடைய குருக்களை வெட்டி வீழ்த்துங்கள்; ஏனேனில் அவர்கள் தாவீதிற்குப் பக்க பலமாய் இருக்கிறார்கள். அவன் ஓடிப்போனதை அறிந்திருந்தும் அவர்கள் எனக்குத் தெரியப்படுத்தவில்லை" என்றார். ஆனால் அரசரின் ஊழியர்கள் ஆண்டவருடைய குருக்கள் மேல் கைபோட விரும்பவில்லை.

18 அப்பொழுது அரசர் தோயேக்கை நோக்கி, "நீயாவது குருக்களைக் கொன்று போடு" என்றார். இதுமேயனாகிய தோயேக் திரும்பிக் குருக்கள் மேல் பாய்ந்து சணல் நூல் எபோத்து அணிந்திருந்த எண்பத்தைந்து பேரை அன்று வெட்டினான்.

19 குருக்களின் நகராகிய நோபேயில் ஆண், பெண், சிறுவர், கைக்குழந்தைகள், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளினால் வெட்டி வீழ்த்தினான்.

20 அக்கிதோபின் மகன் அக்கிமேலேக்குடைய புதல்வர்களில் அபியாத்தார் என்று அழைக்கப்பட்ட ஒருவன் மட்டும் உயிர் தப்பித் தாவீதிடம் ஓடிப்போனான்.

21 சவுல் ஆண்டவருடைய குருக்களை கொன்று விட்டார் என்று தாவீதுக்கு அறிவித்தான்.

22 தாவீது அபியாத்தாரை நோக்கி, "இதுமேயனாகிய தோயேக் அங்கு இருந்ததால் அவன் கட்டாயம் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றே அறிந்திருந்தேன். உன் தந்தை வீட்டார் இறப்பதற்கு நானே காரணம்.

23 என்னுடனேயே இரு. அஞ்சாதே! என் உயிரை வாங்கத் தேடுகிறவன் உன் உயிரையும் வாங்கத் தேடுவான். என்னோடு நீயும் காப்பாற்றப்படுவாய்" என்றான்.

அதிகாரம் 23

1 'இதோ, பிலிஸ்தியர் கெயிலாவில் போர் புரிந்து களஞ்சியங்களை கொள்ளையிடுகிறார்கள்' என்ற தாவீதுக்குத் தெரிவிக்கப்பட்டது.

2 அப்பொழுது தாவீது, "நான் போய் அப் பிலிஸ்தியரை முறியடிக்க வேண்டுமா?" என்று ஆண்டவரிடத்தில் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர், "நீ போ; பிலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவை மீட்பாய்" என்று சொன்னார்.

3 ஆனால் தாவீதுடன் இருந்த மனிதர்கள் அவனை நோக்கி, "இதோ நாங்கள் இங்கு யூதேயாவில் இருந்துமே அஞ்சிக் கொண்டிருக்கிறோம்; பிலிஸ்தியருடைய படைகளை எதிர்க்கிறதற்குக் கெயிலாவுக்குப் போனால் இன்னும் எவ்வளவோ அஞ்ச நேரிடும்?" என்றனர்.

4 ஆதலால் தாவீது மறுபடியும் ஆண்டவரிடத்தில் ஆலோசனை கேட்டான். அவர் மறுமொழியாக, "நீ எழுந்து கெயிலாவுக்குப் போ; நாம் பிலிஸ்தியரை உன் கையில் ஒப்புவிப்போம்" என்று அவனுக்குச் சொன்னார்.

5 அப்படியே தாவீது தன் மனிதர்களோடு கெயிலாவுக்குப் போய்ப் பிலிஸ்தியருக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களில் எண்ணற்ற பேரைக் கொன்று குவித்தான்; அவர்களுடைய பொதி மிருகங்களையும் ஓட்டிக் கொண்டு போனான். தாவீது இவ்விதமாய் கெயிலாக் குடிகளை மீட்டான்.

6 ஆனால் அக்கிமெலேக்குடைய மகன் அபியாத்தார் கெயிலாவில் இருந்த தாவீதிடம் ஓடி வந்த போது தன்னுடன் ஒரு எபோதை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

7 பிறகு, 'தாவீது கெயிலாவுக்கு வந்துள்ளான்' என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது. சவுல் அதைக் கேள்விப்பட்டு, "கதவுகளும் பூட்டுகளும் உள்ள நகரில் நுழைந்தான், அடைப்பட்டான்; கடவுள் அவனை என் கைகளில் ஒப்படைத்துள்ளார்" என்று சொல்லி,

8 கெயிலா மேல் படை எடுத்துச் செல்லவும், தாவீதையும் அவன் ஆட்களையும் தாக்கவும் தம் மக்களுக்கெல்லாம் கட்டளையிட்டார்.

9 தனக்குத் தீங்கு செய்யச் சவுல் இரகசியமாய் முயல்கிறார் என்று தாவீது அறிந்த போது, குருவான அபியாத்தாரை நோக்கி, "எபோதை அணிந்து கொள்" என்று சொன்னான்.

10 பின்பு தாவீது, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, சவுல் என் பொருட்டுக் கெயிலாவுக்கு வந்து நகரை அழிக்கத் தயாராயிருப்பதை உன் ஊழியன் நான் கேள்விப்பட்டேன்.

11 கெயிலா மனிதர்கள் என்னை அவர் கையில் ஒப்படைப்பார்களா? உம் ஊழியன் கேள்விப்பட்டது போல், சவுல் வருவாரா? இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, இதை உம் அடியானுக்குத் தெரிவியும்" என்று வேண்டினான். அதற்கு, "அவன் வருவான்" என்று ஆண்டவர் சொன்னார்.

12 மறுபடியும் தாவீது, "கெயிலா மனிதர்கள் என்னையும் என்னுடன் இருக்கிற மனிதர்களையும் சவுல் கையில் ஒப்படைப்பார்களா?" என்று கேட்டான். அதற்கு ஆண்டவர், "ஒப்படைப்பார்கள்" என்று சொன்னார்.

13 ஆகையால் தாவீதும் அவனோடு இருந்த ஏறக்குறைய அறுநூறு பேர்களும் கெயிலாவை விட்டுப் புறப்பட்டு, திட்டமின்றி அங்கு மிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். 'தாவீது கெயிலாவிலிருந்து ஓடித் தப்பிவிட்டான்' என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது; எனவே அவர் வெளியேறாதது போல் பாசாங்கு செய்தார்.

14 தாவீதோ, பாலைவனத்திலுள்ள மிகப் பாதுகாப்பான இடங்களில் தங்கி, ஜிப் என்ற பாலைவனத்தில் காடு அடர்ந்த ஒரு மலையில் தங்கியிருந்தான். சவுல் அவனைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று ஓயாமல் வழி தேடிக் கொண்டிருந்தார். ஆனால் ஆண்டவர் தாவீதை அவர் கையில் ஒப்படைக்கவில்லை.

15 பின்பு தன் உயிரை வாங்குவதற்குச் சவுல் புறப்பட்டார் என்று அறிந்து கொண்டதால் தாவீது பாலைவனத்திலுள்ள ஜிப் என்ற காட்டிலேயே இருந்து விட்டான்.

16 சவுலின் மகன் யோனத்தாசு காட்டிலிருந்த தாவீதிடம் வந்து கடவுளின் பெயரால் அவனைத் தேற்றி, "நீ எதற்கும் அஞ்சவேண்டாம்; என் தந்தை சவுல் கட்டாயம் உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார்.

17 நீ இஸ்ராயேலை ஆண்டு வருவாய்; அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன். இவையெல்லாம் என் தந்தை சவுலுக்குத் தெரியும்" என்று மொழிந்தான்.

18 அப்பொழுது அவர்கள் இருவரும் ஆண்டவருக்கு முன்பாக உடன்படிக்கை செய்து கொண்டார்கள். பிறகு தாவீது அந்தக் காட்டிலேயே தங்கினான்; யோனத்தாசோ தன் இல்லம் ஏகினான்.

19 பிறகு ஜிப் ஊரார் காபாவிலிருந்த சவுலிடம் போய், "தாவீது எங்கள் நாட்டை சேர்ந்த பாலைவனத்துக்குத் தெற்கேயுள்ள அக்கிலா மலையின் ஒரு காட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான்.

20 அது மிகப் பாதுகாப்புள்ள இடம். நீர் விரும்பியது போல் இப்போதே வாரும். வருவீராயின், அவனை உம்மிடம் ஒப்படைப்பது எங்கள் பொறுப்பு" என்றனர்.

21 அதைக் கேட்டுச் சவுல், "நீங்கள் எனக்கு இரக்கம் காட்டினதால் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

22 நீங்கள் தயவு செய்து அங்குச் சென்று எல்லாவற்றையும் முன்னெச்சரிக்கையுடன் தயார் செய்யுங்கள். அவன் நடமாடுகிற இடம் எது என்றும், அவ்விடத்தில் அவனைக் கண்டவர்கள் எவர் என்றும் அக்கறையுடன் ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் நான் அவனைப் பிடிக்க வழிதேடிக் கொண்டிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியும்.

23 அவன் ஒளிந்து கொண்டிருக்கிற மறைவிடங்களை எல்லாம் ஆராய்ந்து உறுதிப்படுத்தினவுடனே நீங்கள் திரும்பி வந்து என்னிடம் சொல்லுங்கள். அப்பொழுது நான் உங்களோடு வருவேன். அவன் மண்ணுக்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டாலும் யூதாவின் எல்லா வீரர்களையும் நாம் கொண்டு வந்து கட்டாயமாய் அவனைக் கண்டு பிடிப்போம்" என்றார்.

24 அவர்கள் எழுந்து சவுலுக்கு முந்தியே ஜிப்புக்குப் போனார்கள். அந்நேரத்தில் தாவீதும் அவன் மனிதர்களும் எசிமோனுக்குத் தென்புறத்து வெளியிலுள்ள மாவோன் பாலைவனத்தில் இருந்தனர்.

25 அவனைத் தேடிச் சவுலும் அவர் ஆட்களும் புறப்பட்டுப் போனார்கள். இது தாவீதுக்குத் தெரிய வந்தது. உடனே அவன் பாறை அருகில் வந்து மாவோன் பாலைவனத்தில் தங்கினான். சவுல் இதைக் கேள்விப்பட்ட போது மாவோன் பாலைவனத்தில் தாவீதைத் தொடர்ந்து போனார்.

26 சவுல் மலையின் இப்பக்கத்திலும், தாவீதும் அவன் ஆட்களும் மலையின் அப்பக்கத்திலுமாக நடந்து கொண்டிருந்தார்கள். சவுலிடமிருந்து தப்பி விடலாம் என்ற நம்பிக்கை தாவீதுக்கு இல்லை; ஏனெனில் சவுலும் அவர் ஆட்களும் தாவீதையும் அவன் ஆட்களையும் பிடிக்கும் படி அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.

27 அப்போது ஒரு தூதன் சவுலிடம் வந்து, "பிலிஸ்தியர் உம் நாட்டைப் பிடிக்க வந்திருக்கிறார்கள். நீர் விரைந்து வாரும்" என்று சொன்னான்.

28 ஆகையால் சவுல் தாவீதைப் பின் தொடர்வதை விட்டுப் பிலிஸ்தியரை எதிர்க்கும்படி திரும்பினார். எனவே, அவ்விடத்திற்கு 'பிரிக்கிற கல்' என்று பெயரிடப்பட்டது.

அதிகாரம் 24

1 தாவீது அங்கிருந்து புறப்பட்டு எங்காதில் அதிகப் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்தான்.

2 சவுல் பிலிஸ்தியரைத் தொடர்ந்த பின் திரும்பி வந்த போது, "இதோ தாவீது எங்காதி பாலைவனத்தில் இருக்கிறான்" என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.

3 அப்பொழுது சவுல் இஸ்ராயேல் அனைத்திலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களில் மூவாயிரம் பேரை அழைத்துக் கொண்டு காட்டாடுகள் மட்டுமே ஏறக்கூடிய செங்குத்தான பாறைகளில் கூடத் தாவீதையும் அவனுடைய ஆட்களையும் தேடிப்போனர்.

4 வழியோரத்தில் ஆட்டு மந்தைகளின் தொழுவங்கள் காணப்பட்டன. அவ்விடத்தில் ஒரு குகை இருந்தது. அதில் சவுல் வெளிக்கிருக்கப் போனார். தாவீதும் அவனுடைய ஆட்களும் குகையினுள் ஒளிந்து கொண்டிருந்தனர்.

5 தாவீதின் ஆட்கள் அவனை நோக்கி, "இதோ, 'நாம் உன் எதிரியை உன் கையில் ஒப்படைத்தோம். உன் மனத்துக்குப் பிடித்தபடி அவனுக்குச் செய்வாய்' என்று ஆண்டவர் உனக்குச் சொன்ன நாள் இதுவே" என்று அவனுக்குச் சொன்னார்கள். தாவீது எழுந்து சவுலுடைய போர்வையின் விளிம்பை அறுத்துக் கொண்டான்.

6 அதன் பின், சவுலின் போர்வை விளிம்பை அறுத்தது பற்றி தாவீது மிகவும் வருந்தினான்.

7 அவன் தன் ஆட்களை நோக்கி, "ஆண்டவர் அவரை அபிஷுகம் செய்துள்ளார். அவர் ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவராகவும் என் தலைவராகவும் இருக்கிறபடியால் அவர்மேல் கைபோடும்படியான இப்படிப்பட்ட செயலை நான் செய்யாதபடி ஆண்டவர் என்மேல் இரக்கம் கொள்வாராக" என்று சொல்லி,

8 தன் ஆட்கள் சவுலின் மேல் பாயாதபடி தன் சொற்களால் அவர்களைத் தடுத்தான். பிறகு சவுல் குகையை விட்டுப் புறப்பட்டுத் தம் வழியே நடந்து போனார்.

9 அப்போது தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறி சவுலுக்குப் பின்னே சென்று, "அரசே, என் தலைவா!" என்று கூப்பிடச் சவுல் திரும்பிப் பார்த்தார். உடனே தாவீது தரை மட்டும் குனிந்து வணங்கி,

10 சவுலை நோக்கி, 'தாவீது உமக்குத் தீங்கு செய்யப் பார்க்கிறான்' என்று சொல்லும் மனிதருடைய பேச்சை நீர் கேட்கலாமா?

11 இதோ ஆண்டவர் குகையில் உம்மை என் கையில் ஒப்படைத்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன. நான் உம்மைக் கொல்ல வேண்டும் என்று நினைத்தது மெய்யே; ஆனால் என் கண் உம்மைக் காப்பாற்றியுள்ளது. நீர் ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவராய் இருக்கிறபடியால் என் தலைவர் மேல் கை போடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டேன்.

12 ஆதாரம் என்ன என்று கேட்கிறீரா? என் தந்தையே, என் கையில் உள்ள உமது போர்வையின் நுனியைப் பார்த்து அறிந்து கொள்ளும்; ஏனெனில் உம்மைக் கொன்று போடாமலே உம் போர்வையின் நுனியை அறுத்துக் கொண்டேன். ஆதலால், நீர் யோசித்துப் பார்ப்பீராயின் நான் யாதொரு குற்றமோ துரோகமோ நினைக்கவில்லை என்றும், நான் உமக்கு விரோதமாய்த் தீங்கு செய்ததில்லை என்றும் நீர் அறிந்து கொள்வீர். பின் நீர் என் உயிரை வாங்க வழி தேடுவது ஏன்?

13 உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! உம் பொருட்டு ஆண்டவரே என்னைப் பழி வாங்கட்டும்! ஆனால் உம்மேல் நான் கைபோட மாட்டேன்.

14 முதுமொழி வழங்குவது போல், 'தீயோனிடமிருந்து தீமை பிறக்கும்'. ஆதலால் நான் உம்மேல் கை வைக்க மாட்டேன்.

15 இஸ்ராயேலின் அரசே! யாரைப் பின்தொடர்கிறீர்? யாரைப் பிடிக்க வந்துள்ளீர்? ஒரு செத்த நாயை, ஓர் உண்ணியை அன்றோ?

16 ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவர் என் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு சொல்லி, என்னை உமது கையினின்று விடுவிப்பாராக" என்று சொன்னான்.

17 தாவீது சவுலை நோக்கி இச்சொற்களைச் சொல்லி முடித்தபோது, சவுல் "என் மகனாகிய தாவீதே, இது உன் குரல் தானா?" என்று சொல்லி ஓலமிட்டு அழுதார்.

18 பின்பு தாவீதை நோக்கி, "நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்குத் தீமை செய்தேன்.

19 ஆண்டவர் என்னை உன் கையில் ஒப்படைத்திருந்தும் நீ என்னை கொன்று போடவில்லை. நீ எனக்கு நன்மையே செய்து வந்துள்ளாய் என நன்கு விளங்குகிறது.

20 ஒருவன் தன் எதிரியைக் கண்டு பிடிப்பானாகில், அவனை நலமுடன் போக விடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காக ஆண்டவர் உனக்கு நன்மை செய்வாராக!

21 நீ உறுதியாக அரசாள்வாய் என்றும், இஸ்ராயேலின் ஆட்சியைக் கட்டாயம் அடைவாய் என்றும் இப்போது அறிவேன்.

22 ஆதலால் நீ எனக்குப் பின்வரும் என் சந்ததியை அழிப்பதில்லை என்றும், என் தந்தை வீட்டினின்று என் பெயரை அகற்றுவதில்லை என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆனையிட்டுச் சொல்" என்றார்.

23 தாவீது அவ்விதமே சவுலுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான். பின்னர் சவுல் தம் வீடு திரும்பினார். தாவீதும் அவன் ஆட்களும் பாதுகாப்பான இடங்களுக்கு ஏறிப்போனார்கள்.

அதிகாரம் 25

1 சாமுவேல் இறந்தார். அதன் பொருட்டு இஸ்ராயேலர் அனைவரும் ஒன்று கூடித் துக்கம் கொண்டாடினர். பின்னர் ராமாத்தாவிலுள்ள அவரது வீட்டில் அவரை அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டுப் பாரான் பாலைவனத்திற்குச் சென்றான்.

2 மாவோன் பாலைவனத்தில் ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய காணியாட்சி கார்மேலில் இருந்தது; அம் மனிதன் பெரும் செல்வந்தன்; அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. கார்மேலில் அவன் மந்தைக்கு மயிர் கத்தரிக்க நேரிட்டது.

3 அம் மனிதனின் பெயர் நாபால். அவன் மனைவியின் பெயர் அபிகாயில், அப்பெண் மிக அழகானவள்; விவேகமுள்ளவள். அவளுடைய கணவனோ கொடியவன், தீயவன், கபடுள்ளவன், காலேப் குலத்தினன்.

4 நாபால் தன் மந்தைக்கு மயிர் கத்தரிக்க வந்த செய்தியைத் தாவீது கேள்விப்பட்டான்.

5 அப்போது பத்து இளைஞரை அழைத்து, "நீங்கள் கார்மேலுக்குச் சென்று நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்குச் சமாதான வாழ்த்துக் கூறுங்கள்.

6 அவனை நோக்கி, 'என் சகோதரர்களுக்கும் உமக்கும் உம் வீட்டுக்கும் உமக்கு உள்ள எல்லாவற்றிற்கும் சாமாதானம் உண்டாவதாக.

7 எங்களுடன் பாலைவனத்தில் இருந்த உம்முடைய இடையர்கள் ஆடுகளுக்கு மயிர் கத்தரித்து வருகின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். நாங்கள் அவர்களை ஒரு முறையேனும் துன்பப் படுத்தினதுமில்லை; கார்மேலில் அவர்கள் இருந்த காலமெல்லாம் அவர்களுடைய மந்தையில் ஓர் ஆடு கூடக் காணாமற் போனதுமில்லை.

8 உம் வேலைக்காரரைக் கேளும்; உமக்குச் சொல்வார்கள். ஆதலால் உம் அடியார் எங்களுக்கு உம் கண்களில் தயை கிடைப்பதாக. நல்ல நாளிலன்றோ வந்தோம்? உமது கையில் அகப்படுவதை உம் அடியார்களுக்கும் உம் மகனாகிய தாவீதுக்கும் கொடும்' என்று சொல்வீர்கள்" என்று சொல்லி அனுப்பினான்.

9 தாவீதினுடைய ஊழியர்கள் நாபாலிடம் சென்று அவ்வார்த்தைகளை எல்லாம் தாவீது பெயரால் சொன்ன பின்பு ஒன்றும் பேசாதிருந்தார்கள்.

10 நாபாலோ தாவீதின் ஊழியர்களுக்கு மறுமொழியாக, "தாவீது என்பவன் யார்? இசாயி மகன் யார்? தங்கள் தலைவர்களை விட்டு ஓடிப்போகிற ஊழியர்களில் எண்ணிக்கை இன்று பெருகி வருகிறது.

11 நான் என் அப்பங்களையும், தண்ணீரையும், மயிர் கத்தரித்தவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியையும் எடுத்து எங்கிருந்தோ வந்துள்ள மனிதர்களுக்குக் கொடுப்பதா?" என்றான்.

12 தாவீதின் ஊழியர்கள் தங்கள் வழியே திரும்பி வந்து நாபால் சொன்ன வார்த்தைகளை எல்லாம் தாவீதுக்குச் சொன்னார்கள்.

13 அப்போது தாவீது தன் ஆட்களை நோக்கி, "நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான். அப்படியே அவர்கள் தங்கள் வாளை எடுத்துக் கொண்டார்கள். தாவீதும் தன் வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். ஏறக்குறைய நானூறு பேர் தாவீதைப் பின் தொடர்ந்தனர். இருநூறு பேர் சாமான்கள் அருகில் இருந்து கொண்டனர்.

14 அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலை நோக்கி, "இதோ நம் தலைவனுக்கு வாழ்த்துச் சொல்லத் தாவீது பாலைவனத்திலிருந்து தூதர்களை அனுப்பியிருக்க, அவர்கள் மேல் அவர் கோபித்துக் கொண்டாரே;

15 அம்மனிதர்களோ எங்களுக்குக் கூடியமட்டும் நல்லவர்களாய் இருந்தார்கள்; எங்களுக்குத் தொந்தரை செய்ததுமில்லை; நாங்கள் பாலைவனத்தில் அவர்களோடு நடமாடின காலமெல்லாம் நம் பொருட்களில் ஒன்றும் காணமற் போனதுமில்லை.

16 நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த நாள் முழுவதும் அவர்கள் இரவிலும் பகலிலும் எங்களுக்குச் சுவர்போல் இருந்தார்கள்.

17 எனவே நீர் யோசித்து என்ன செய்யக் கூடும் என்று பாரும்; ஏனெனில் உம் கணவர் மீதும் உம் வீட்டின் மீதும் பெரும் துன்பம் வரக்கூடும்; அவர் பெலியாலின் மகன்; அவரிடத்தில் பேசக்கூட ஒருவனும் துணிய மாட்டான்" என்றான்.

18 இதைக் கேட்டு அபிகாயில் விரைந்து இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தித் திராட்சை இரசத்தையும், சமைக்கப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், மாவையும் வற்றல் செய்த நூறு கட்டுத் திராட்சைப் பழங்களையும், வற்றலான இருநூறு கூடை அத்திப் பழங்களையும் எடுத்துக் கழுதைகள் மேல் ஏற்றினாள்.

19 தன் வேலைக்காரரைப் பார்த்து, "நீங்கள் எனக்கு முன் செல்லுங்கள்; இதோ நான் உங்களுக்குப் பின் வருகிறேன்" என்று சொல்லி அனுப்பினாள். தன் கணவன் நாபாலுக்கு இதைத் தெரியப்படுத்தவில்லை.

20 அவள் கழுதை மேல் ஏறி மலையடிவாரத்தில் இறங்கி வரும் போது, இதோ தாவீதும் அவனுடைய ஆட்களும் தனக்கு எதிரே வரக்கண்டு இவளும் அவர்களுக்கு எதிரே சென்றாள்.

21 தாவீது தன் ஆட்களை நோக்கி, "அந்த மனிதனுக்குப் பாலைவனத்தில் இருந்தவற்றை எல்லாம் வீணில் காப்பாற்றினேன். அவனுக்குச் சொந்தமானவை அனைத்திலும் ஒன்றுமே அழியவில்லை. அவனோ நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்தான்.

22 அவனுக்குச் சொந்தமானவர்களில் ஓர் ஆண் மகனை முதலாய் பொழுது விடியுமட்டும் நான் உயிரோடு விட்டு வைப்பேனாயாகில், கடவுள் தாவீதின் எதிரிகளுக்கு அதற்குத் தகுந்த பிரதி பலன் அளிப்பார்" என்று சபதம் கூறினான்.

23 அபிகாயில் தாவீதைப் பார்த்த போது விரைந்து கழுதையினின்று இறங்கித் தாவீதுக்கு முன் முகங்குப்புற விழுந்து வணங்கினாள்.

24 பிறகு அவன் காலில் விழுந்து, "என் தலைவ, இப்பழி என்மேல் இருக்கட்டும். உம் அடியாள் சொல்லப் போகிறதை நீர் காது கொடுத்துக் கேட்டருள வேண்டும் என்று உம்மைக் கெஞ்சுகிறேன்.

25 என் தலைவராகிய அரசே, நீர் அக்கெட்ட மனிதனாகிய நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம். ஏனெனில் அவருடைய பெயருக்கு ஏற்றபடி அவர் ஓர் அறிவிலி. அவருக்கு அறிவின்மையும் உண்டு. என் தலைவ, உம் அடியாளாகிய நான் நீர் அனுப்பின உம் ஊழியர்களைக் கண்டதில்லை.

26 இப்போது என் தலைவ, நீர் இரத்தத்தைச் சிந்தாதபடி உம்மைத் தடுத்து அப்பழியினின்று உமது கையைக் காப்பாற்றினவர் ஆண்டவரே. ஆண்டவர் மேலும் உம் மேலும் ஆணை! உம் எதிரிகளும் என் தலைவராகிய உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களும் நாபாலைப் போல் ஆகக்கடவார்கள்!

27 எனவே, என் தலைவராகிய உமக்கு உம் அடியாள் கொண்டு வந்துள்ள ஆசி மொழியை நீரும் ஏற்றுக்கொள்ளும்; என் தலைவராகிய உம்மைப் பின்தொடர்ந்து வந்துள்ள உம் ஊழியர்களுக்கும் கொடும்.

28 உம் அடியாளுடைய குற்றத்தை மன்னியும்; என் தலைவ, நீர் ஆண்டவருடைய போர்களைச் செய்கிறபடியால், என் தலைவராகிய உமக்கு என் ஆண்டவர் பிரமாணிக்கமான வீட்டைக் கட்டாயம் கட்டுவார். உமது வாழ்நாள் முழுவதும் ஒரு தீங்கும் உம்மை அணுகாதிருப்பதாக.

29 உம்மைத் துன்பப்படுத்தவும், உமது உயிரை வாங்க வகை தேடவும் யாரேனும் எப்போதாவது துணிந்தால், என் தலைவரின் உயிர், வாழ்வோரின் கட்டுகளில் கட்டியிருப்பது போல, உம் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் காப்பாற்றப்படும். உம் எதிரிகளின் உயிர்களோ கவணில் சுழற்றப்படுவது போல் சுழற்றப்படுவனவாக!

30 ஆண்டவர் உம்மைக் குறித்துத் தாம் சொன்ன நன்மைகளை எல்லாம் என் தலைவராகிய உமக்குச் செய்து உம்மை இஸ்ராயேலின் தலைவராக ஏற்படுத்துவார்.

31 அப்பொழுது மாசற்ற இரத்தத்தைச் சிந்திப் பழி வாங்கினதைக் குறித்து என் தலைவராகிய உமக்குத் துக்கம் இராது; மனவருத்தமும் உண்டாகாது. ஆண்டவர் என் தலைவராகிய உமக்கு நன்மை செய்யும் போது உம் அடியாளை நினைத்துக் கொள்ளும்" என்றாள்.

32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி, "இன்று என்னிடம் உன்னை அனுப்பின இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! உன் வார்த்தைகளும் ஆசீர்வதிக்கப்படுவனவாக!

33 நான் இரத்தத்தைச் சிந்தி என் கையால் பழிவாங்குவதை இன்று தடை செய்த நீயும் ஆசீர்வதிக்கப் படக்கடவாய்!

34 நான் உனக்குத் தீங்கு இழைக்காதபடி என்னைத் தடுத்த இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழி! நீ விரைந்து என் எதிரில் வந்திராவிட்டாள், பொழுது விடியுமுன் நாபாலுடைய வீட்டாரில் ஓர் ஆண்பிள்ளை முதலாய் உயிரோடு இருந்திரான்" என்றான்.

35 அவள் தனக்குக் கொண்டு வந்தவற்றை எல்லாம் தாவீது அவள் கையினின்று பெற்றுக் கொண்டு, "நீ சமாதானமாய் வீட்டிற்குப் போ. இதோ நான் உனக்குச் செவிமடுத்து, உனது வேண்டுகோளுக்கு இசைந்துள்ளேன் என இதன் மூலம் அறிந்து கொள்" என்று சொல்லி, அவளை அனுப்பி வைத்தான்.

36 அபிகாயில் நாபாலிடம் வந்தபோது, இதோ அரச விருந்து போன்று ஒரு பெரிய விருந்து அவன் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. நாபாலுடைய உள்ளம் களித்திருந்தது. அவன் மிகவும் குடிவெறியில் இருந்தான். ஆகையால் பொழுது விடியும் வரை அவள் அதைப் பற்றி ஒன்றும் அவனிடம் கூறவில்லை.

37 அதிகாலையில் நாபால் உட்கொண்ட திராட்சை இரசம் செரித்த பின், அவனுடைய மனைவி இவ்வார்த்தைகளை எல்லாம் அவனுக்குத் தெரிவித்தாள். அப்பொழுது அவனது உயிர் பிரிந்தது; அவனும் கல்லாய் சமைந்தான்.

38 பத்து நாள் கடந்தபின் ஆண்டவர் நாபாலைத் தண்டித்தார்; அவன் இறந்தான்.

39 நாபால் இறந்ததைத் தாவீது கேள்விப்பட்ட போது, "நாபால் கையினால் எனக்கு வந்த பழி கேட்டிற்குத் தக்க நீதி வழங்கித் தம் அடியானைத் தீமையினின்று காப்பாற்றின கடவுள் புகழப்படுவாராக! நாபாலின் தீய குணத்தை ஆண்டவர் அவன் தலையின் மேல் வரச் செய்தார்" என்றான். பிறகு தாவீது அபிகாயிலைத் தன் மனைவியாக்கிக் கொள்ளும் படி அவளிடம் தூது அனுப்பினான்.

40 தாவீதின் ஊழியர்கள் கார்மேலில் இருந்த அபிகாயிலிடம் வந்து, அவளிடம் பேசி, "தாவீது உம்மைத் தம் மனைவி ஆக்கிக் கொள்வதற்காக எங்களை உம்மிடம் அனுப்பியுள்ளார்" என்று சொன்னார்கள்.

41 அவள் எழுந்திருந்து தரைமட்டும் குனிந்து வணங்கி, "இதோ உம் அடிமையான நான் என் தலைவரின் ஊழியர்களுடைய கால்களைக் கழுவும் பணியாளாய் இருப்பேனாக" என்றாள்.

42 அபிகாயில் விரைந்து கழுதை மேல் ஏறினாள். அவளுடைய தோழியர் ஐவர் அவளுடன் போனார்கள். அவள் தாவீதினுடைய ஊழியர்களைப் பின் தொடர்ந்து சென்று அவனுக்கு மனைவியானாள்.

43 மேலும் தாவீது ஜெஸ்ராயேல் ஊரைச் சார்ந்த அக்கினோவாமையும் மணம் செய்து கொண்டான். அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளாய் இருந்தார்கள்.

44 சவுலோ தம் புதல்வியும் தாவீதின் மனைவியுமான மிக்கோலைக் காலிம் ஊரானான லாயீசின் மகன் பால்திக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார்.

அதிகாரம் 26

1 ஜிப் ஊரார் காபாவில் இருந்த சவுலிடம் வந்து, "இதோ தாவீது பாலைவனத்துக்கு எதிரான அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்" என்று சொன்னார்கள்.

2 சவுல் எழுந்து ஜிப் பாலைவனத்துக்குப் புறப்பட்டார். இஸ்ராயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் மனிதர்கள் அவரோடு ஜிப் பாலைவனத்தில் தாவீதைத் தேடச் சென்றார்கள்.

3 சவுல் பாலைவனத்துக்கு எதிரே அக்கிலா வழி அருகே இருந்த காபாவில் பாசறை அமைத்தார். தாவீதோ பாலைவனத்தில் தங்கியிருந்தான். சவுல் பாலைவனத்தில் தன்னைப் பின் தொடர்ந்து வரக் கண்டு,

4 ஒற்றரை அனுப்பி, உண்மையில் சவுல் அங்கு வந்திருந்தார் என்று அறிந்து கொண்டான்.

5 அப்பொழுது தாவீது இரகசியமாய் எழுந்து சவுல் இருந்த இடத்திற்கு வந்தான், சவுலும் அவர் படைத் தலைவனாகிய நேரின் மகனான அப்நேரும் தூங்கும் இடத்தை அறிந்து, சவுல் பாசறையிலும் மற்ற ஆட்கள் அவரைச் சுற்றிலும் தூங்குவதைக் கண்டான்.

6 தாவீது எத்தையனாகிய அக்கிமெலேக்கையும், யோவாபின் சகோதரனும் சார்வியாவின் மகனுமாகிய அபிசாயியையும் நோக்கி, "சவுல் இருக்கும் பாளையத்திற்கு என்னோடு வருவது யார்?" என்று கேட்டான். அதற்கு அபிசாயி, "நான் உம்முடன் வருகிறேன்" என்றான்.

7 அப்படியே தாவீதும் அபிசாயியும் இரவில் ஆட்கள் இருந்த இடத்திற்கு வந்து, சவுல் தம் கூடாரத்தில் படுத்துத் தூங்குகிறதையும், அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தரையில் குத்தியிருக்கிறதையும், அப்நேரும் மற்ற ஆட்களும் அவரைச் சுற்றிலும் தூங்குகிறதையும் கண்டனர்.

8 அபிசாயி தாவீதைப் பார்த்து, "இன்று கடவுள் உம் எதிரியை உமது கையில் ஒப்படைத்தார். இப்பொழுது நான் அவனை ஈட்டியினால் இரண்டாம் முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பாயக் குத்தப்போகிறேன்" என்றான்.

9 தாவீது அபிசாயியை நோக்கி, "அவரைக் கொல்லாதே, ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரின் மேல் கை வைப்பவன் குற்றவாளி அன்றோ?" என்று சொன்னான்.

10 மேலும் தாவீது, "ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் அவரை அடித்தாலோ காலம் வந்ததனாலோ போரிலோ அவர் மாண்டால் அன்றி,

11 நான் ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரின் மேல் கை வைக்காதபடி ஆண்டவர் என் மேல் இறங்குவாராக! எனவே இப்போது அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும் தண்ணீர்ப் பாத்திரத்தையும் நீ எடுத்துக்கொள், போவோம்" என்றான்.

12 ஆகையால் தாவீது ஈட்டியையும், சவுல் தலைமாட்டிலிருந்த தண்ணீர்ப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு இருவரும் புறப்பட்டுப் போயினர். ஒருவரும் காணவுமில்லை, அறியவுமில்லை, விழிக்கவுமில்லை. ஆண்டவர் அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை அனுப்பியிருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

13 தாவீது நடந்து சற்றுத் தொலைவிலிருந்த மலையுச்சியை அடைந்தான். இரு திறத்தாருக்கும் இடையே அதிக தூரம் இருந்தது.

14 அவ்விடத்திலிருந்து தாவீது ஆட்களையும், நேரின் மகனாகிய அப்நேரையும் பலத்த குரலில் கூப்பிட்டு, "அப்நேர், நீ மறுமொழி சொல்லமாட்டாயா?" என்றான். அதற்கு அப்நேர், "சப்தமிட்டு அரசரின் தூக்கத்தைக் கெடுப்பவன் யார்?" என்று கேட்டான்.

15 தாவீது அப்நேரை நோக்கி, "நீ ஓர் ஆண்மகன் அன்றோ? இஸ்ராயேலில் உனக்கு இணையானவர் உளரோ ? பின் நீ உன் தலைவராகிய அரசரை ஏன் காக்கவில்லை? ஒருவன் உன் தலைவராகிய அரசரைக் கொல்லும் படி வந்திருந்தானே!

16 நீ செய்தது நல்லதன்று. ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவராகிய உங்கள் தலைவரைக் காக்காத நீங்கள் சாவின் மக்களாய் இருக்கிறீர்கள். இப்போது அரசருடைய ஈட்டி எங்கே என்றும், அவர் தலைமாட்டில் இருந்த தண்ணீர்ப் பாத்திரம் எங்கே என்றும் பார்" என்று சொன்னான்.

17 அந்நேரத்தில் சவுல் தாவீதின் குரலை அறிந்து கொண்டு, "என் மகன் தாவீதே, இது உன் குரல் தானே?" என்று சொன்னார். அதற்குத் தாவீது, "என் தலைவராகிய அரசே, இது என் குரல் தான்" என்று சொன்னான்.

18 மேலும் அவன், "என் தலைவர் தம் ஊழியனைத் துன்பப்படுத்த வேண்டியதன் காரணம் என்ன? நான் என்ன செய்தேன்? நான் புரிந்த குற்றம் தான் என்ன?

19 என் தலைவராகிய அரசே, உம்மை மன்றாடுகிறேன். உம் அடியானின் வார்த்தைகளை கேளும். ஆண்டவர் உம்மை எனக்கு விரோதமாய் ஏவி விட்டிருப்பின் அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்! ஆனால் மனிதர்கள் உம்மை அப்படி ஏவி விட்டிருந்தார்களேயாகில், அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் இன்று ஆண்டவருடைய உரிமையிலிருந்து என்னைத் துரத்தி விட்டு, 'நீ போ, அன்னிய தெய்வங்களை வழிபடு' என்று என்னைத் தள்ளிப்போட்டார்கள் அன்றோ?

20 இன்று ஆண்டவர் திருமுன் என் இரத்தம் தரையில் சிந்தப் படாமலிருப்பதாக! மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவது போல், இஸ்ராயேலின் அரசர் ஓர் உண்ணியைத் தேடி வந்தாரே!" என்றான்.

21 அப்பொழுது சவுல், "என் மகன் தாவீதே, நான் பாவம் செய்தேன்; நீ திரும்பி வா. என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்த படியால், இனி மேல் உனக்கு நான் தீங்கு இழைக்க மாட்டேன். மூடத்தனமாய் நடந்து கொண்டேன் என்றும், பல காரியங்களை அறியாதிருந்தேன் என்றும் எனக்குத் தெரியவருகிறது" என்று சொன்னார்.

22 தாவீது மறுமொழியாக, "இதோ, அரசருடைய ஈட்டி இங்கே இருக்கிறது. அரசரின் ஊழியர்களில் ஒருவன் இவ்விடம் வந்து அதை எடுத்துக் கொண்டு போகட்டும்.

23 ஆனால் அவனவன் நீதிக்கும் பிரமாணிக்கத்திற்கும் தகுந்தபடி ஆண்டவர் ஒவ்வொருவனுக்கும் பலன் கொடுப்பார். ஆண்டவர் உம்மை இன்று என் கையில் ஒப்படைத்தார். நானோ ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவர் மேல் கை வைக்கத் துணியவில்லை.

24 உமது உயிர் இன்று என் கண்களுக்கு அருமையாய் இருந்தது போல, என் உயிர் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருக்கக்கடவது. அவர் எல்லா இக்கட்டிலுமிருந்தும் என்னை மீட்பாராக" என்று சொன்னான்.

25 சவுல் தாவீதை நோக்கி, "என் மகன் தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பாய்; ஆற்றல் படைத்தவன் ஆவாய்" என்று சொன்னார். பின்பு தாவீது தன் வழியே சென்றான். சவுல் தம் இடத்திற்குத் திரும்பி வந்தார்.

அதிகாரம் 27

1 தாவீது தனக்குள், "நான் என்றாவது ஒரு நாள் சவுல் கையில் அகப்படுவேன். சவுல் இனி இஸ்ராயேலின் எல்லா எல்லைகளிலும் என்னைக் கண்டு பிடிக்கலாம் என்ற நம்பிக்கையே அற்றுப் போகும்படி, நான் பிலிஸ்தியர் நாட்டுக்கு ஓடிப் போய்த் தப்பித்துக் கொள்வது மிகவும் நல்லது. இவ்வாறு நான் அவர் கைக்குத் தப்புவேன்" என்று சொல்லிக் கொணடான்.

2 தாவீது தன்னோடு இருந்த அறுநூறு பேரையும் அழைத்துக் கொண்டு கேத் அரசனாகிய மாவோக்கின் மகன் ஆக்கீசிடம் போனான்.

3 அங்கே தாவீதும் அவன் ஆட்களும் அவரவர் வீட்டாரும், தாவீதோடு அவனுடைய இரு மனைவியரான ஜெஸ்ராயேல் ஊராளான அக்கினோவாளும், நாபாலின் மனைவியும் கார்மேலைச் சேர்ந்தவளுமான அபிகாயிலும் கேத் நகரத்தில் ஆக்கீசிடம் தங்கியிருந்தார்கள்.

4 தாவீது கேத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் அதன் பிறகு அவனைத் தேடுவதை விட்டு விட்டார்.

5 தாவீது ஆக்கீசை நோக்கி, "உம் கண்களில் எனக்குத் தயை கிடைத்தால், நான் வாழும்படி இந்நாட்டு ஊர்களுக்குள் ஒன்றில் எனக்கு இடம் கொடும்; உம் அடியான் உம்மோடு தலைநகரில் வாழ்வது முறையன்று" என்றான்.

6 அதைக் கேட்டு ஆக்கீசு, அவனுக்குச் சிசெலேக்கைக் கொடுத்தான். அதன் பொருட்டுச் சிசெலேக்கு இன்று வரை யூதாவின் அரசர்களுக்குச் சொந்தமாயிருக்கிறது.

7 தாவீது பிலிஸ்தியர் நாட்டில் நான்கு திங்கள் தங்கியிருந்தான்.

8 தாவீதும் அவனுடைய ஆட்களும் புறப்பட்டு, ஜெசூரியர் மேலும் கெர்சியர் மேலும் அமலேக்கியர் மேலும் படை எடுத்து அவர்களுடைய நகரங்களைக் கொள்ளையிடுவதுண்டு. சூர் துவக்கி எகிப்து நாடு வரை உள்ள அந்த நாட்டில் பண்டு தொட்டுக் குடியிருந்தவர்கள் இவர்களே.

9 தாவீது அந்த நாடு முழுவதையும் கொள்ளையடித்து வந்த போது ஆண்களையும் பெண்களையும் உயிரோடு தப்ப விடுவதில்லை. ஆடு மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு ஆக்கீசிடம் திரும்பி வருவான்.

10 நீர் இன்று எங்குக் கொள்ளையிடச் சென்றீர்? என்று கேட்கையில் அவன், "யூதாவின் தெற்குப் பகுதியில் அல்லது ஜெராமேலின் தெற்குப் பகுதியில் அல்லது சேனியின் தெற்குப் பகுதியில் கொள்ளையிட்டேன்" என்று மறுமொழியாகச் சொல்வான்.

11 தாவீது ஆண்களையோ பெண்களையோ உயிருடன் விட்டு வைத்ததில்லை. காரணம், அவர்களில் யாரையாவது கேத்துக்குக் கொண்டு வந்தால் அவர்கள், 'இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்' என்று தன்னைப்பற்றி அரசனிடம் கூறிவிடுவார்கள் என்று தாவீது அறிந்திருந்தான். அவன் பிலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த காலமெல்லாம், இதுவே அவன் தொழிலாய் இருந்தது.

12 எனவே, ஆக்கீசு தாவிதை நம்பி, "தாவீது தன் மக்களாகிய இஸ்ராயேலுக்கு அதிகத் தீமைகளைச் செய்துள்ளபடியால் என்றென்றும் அவன் எனக்கு ஊழியனாய் இருப்பான்" என்று சொன்னான்.

அதிகாரம் 28

1 அந்நாட்களில் நிகழ்ந்ததாவது: இஸ்ராயேலரை எதிர்த்துப் போரிடப் பிலிஸ்தியர் படை திரட்டினர். ஆக்கீசு தாவீதை நோக்கி, "நீயும் உன் மனிதர்களும் என்னோடு போர்க்களம் வர வேண்டும் என்று அறியக்கடவாய்" என்றான்.

2 அதற்குத் தாவீது, "அப்படியானால் உம் ஊழியன் செய்யப்போகிறதை விரைவில் அறிந்து கொள்வீர்" என்று சொன்னான். அப்பொழுது ஆக்கீசு தாவீதை நோக்கி, "இதற்காக நான் உன்னை எந்நாளும் என் மெய்க்காவலனாக ஏற்படுத்துவேன்" என்று சொன்னான்.

3 சாமுவேல் இறந்தார். மக்கள் எல்லாம் அவருக்காகத் துக்கம் கொண்டாடி அவர் நகராகிய ராமாத்தாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியக்காரரையும் குறி சொல்பவர்களையும் நாட்டில் இராதபடித் துரத்தியிருந்தார்.

4 பிலிஸ்தியர் ஒன்று திரண்டு சூனாமில் பாசறை அமைத்தனர். சவுலும் இஸ்ராயேலர் அனைவரையும் சேர்த்துக் கொண்டு கெல்போயேயில் பாசறை அமைத்தார்.

5 சவுல் பிலிஸ்தியரின் பாசறையைப் பார்த்து அஞ்சினர். அவர் உள்ளம் மிகவும் திகிலடைந்தது.

6 அவர் ஆண்டவரைக் கலந்து பேசினார். ஆனால் ஆண்டவர் கனவு வழியாகவோ குருக்கள் மூலமாகவோ இறைவாக்கினர் வழியாகவோ அவருக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.

7 அப்பொழுது சவுல் தம் ஊழியர்களை நோக்கி, "நீங்கள் பித்தோனீசு என்னும் குறிகாரிகளில் ஒருத்தியைத் தேடிப்பாருங்கள். நான் அவளிடம் போய் ஆலோசனை கேட்பேன்" என்றார். அவர் ஊழியர்கள் அவரை நோக்கி, "எந்தோரில் அவ்விதக் குறிகாரி ஒருத்தி இருக்கிறாள்" என்று சொன்னார்கள்.

8 அப்பொழுது அவர் மாறுவேடம் பூண்டு கொண்டு இரு மனிதர்களுடன் சென்றார். அவர்கள் இரவிலே அப்பெண்ணிடம் வந்தார்கள். சவுல் அவளை நோக்கி, "நீ பித்தோனைக் கேட்டு எனக்குக் குறி சொல்லி, நான் எவனைச் சொல்வேனோ அவனை எழுந்து வரச் செய்" என்றார்.

9 அப்பெண் அவரை நோக்கி, "சவுல் குறி சொல்லுகிறவர்களையும், சூனியக்காரர்களையும் நாட்டில் இராதபடி செய்ததெல்லாம் உமக்குத் தெரியும். அவர்களை அழித்தார் என்றும் உமக்குத் தெரியும். என்னைக் கொல்லத் தானே என் உயிருக்குக் கண்ணி வைக்கிறீர்?" என்றாள்.

10 அப்பொழுது சவுல், "ஆண்டவர் மேல் ஆணை! இக்காரியத்தைப்பற்றி உனக்கு யாதொரு தீங்கும் நேரிடாது" என்றார்.

11 அதைக் கேட்ட அப்பெண், "உமக்கு நான் யாரை எழுப்ப வேண்டும்?" என்றதற்கு, அவர், சாமுவேலை எழுப்பு" என்று சொன்னார்.

12 அப்பெண் சாமுவேலைக் கண்டவுடன், உரத்த சத்தமாய்க் கூவி, சவுலை நோக்கி, "நீர் தானே சவுல்; ஏன் என்னை ஏமாற்றினீர்?" என்றாள்.

13 அரசர் அவளைப் பார்த்து, "அஞ்சாதே! நீ கண்டது என்ன?" என்று கேட்டார். அதற்கு அப்பெண் சவுலை நோக்கி, "தேவர்கள் பூமியினின்று எழுந்து வரக் கண்டேன்" என்றாள்.

14 அவர்களுடைய உருவம் என்ன?" என்று அவளைக் கேட்டார். அதற்கு அவள், "வயது முதிர்ந்த ஒருவர் எழுந்து வந்தார். அவர் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறார்" என்றாள். அவர் சாமுவேல் என்று சவுல் கண்டு கொண்டு முகம் தரையில் படக் குனிந்து வணங்கினார்.

15 சாமுவேல் சவுலை நோக்கி, "நான் எழுந்து வரும்படி நீ என்னைத் தொந்தரை செய்தது ஏன்?" என்று கேட்டார். அதற்குச் சவுல், "நான் மிகவும் துன்புறுகிறேன். பிலிஸ்தியர் என்னோடு போருக்கு வந்துள்ளார்கள். கடவுளும் என்னை விட்டு அகன்று போய்விட்டார். இறைவாக்கினர் மூலமாவது, கனவுகள் வழியாவது அவர் எனக்குப் பதில் சொல்ல மனதில்லாது போனார். எனவே, நான் செய்ய வேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படி உம்மை அழைத்தேன்" என்றார்.

16 அதற்குச் சாமுவேல், "ஆண்டவர் உன்னை விட்டு விலகி உன் எதிரியின் பக்கம் இருப்பதால், நீ என்னைக் கேட்க வேண்டியது என்ன இருக்கிறது?

17 ஆண்டவர் என் மூலம் உனக்குச் சொன்னபடியே செய்வார்; உன் அரசை உன் கையினின்று பறித்து உன் அயலான் தாவீதுக்குக் கொடுப்பார்.

18 நீ ஆண்டவருடைய சொல்லைக் கேளாமலும், அமலெக்கின் மேல் அவருக்கு இருந்த கோபத்தின் கொடுமையைத் தீர்க்காமலும் போனபடியால், நீ படும் துன்பங்களை எல்லாம் ஆண்டவரே இன்று உனக்கு அனுப்பியுள்ளார்.

19 மேலும், ஆண்டவர் உன்னோடு இஸ்ராயேலரையும் பிலிஸ்தியர் கையில் ஒப்படைப்பார். நாளை நீயும் உன் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள். இஸ்ராயேலரின் பாசறையையும் ஆண்டவர் பிலிஸ்தியர் கையில் ஒப்படைப்பார்" என்றார்.

20 அதைக் கேட்டவுடன் சவுல் நெடுங்கிடையாய்த் தரையில் விழுந்தார். ஏனெனில் சாமுவேலின் வார்த்தைகளைப் பற்றி அஞ்சியிருந்தார். மேலும், அவர் அன்று முழுவதும் சாப்பிடாது இருந்தபடியால், அவர் வலிமை குன்றி இருந்தார்.

21 சவுல் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு அப்பெண் அவர் அருகில் வந்து அவரை நோக்கி, "இதோ உம் அடியாள் உமது சொல்லைக் கேட்டு என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நீர் எனக்குச் சொன்னவற்றைக் கேட்டேன்.

22 இப்போது நீரும் உம் அடியாளுடைய வார்த்தைகளைக் கேளும்; நான் உமக்கு முன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன். நீர் பயணம் செய்வதற்கு வலிமை பெறும்படி அதை உண்ணும்" என்றாள்.

23 அவர் தடுத்து, "சாப்பிட மாட்டேன்" என்றார். ஆனால் அவர் ஊழியர்களும் அப்பெண்ணும் அவரை மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டதனால் கடைசியாய் அவர் அவர்கள் வார்த்தையைக் கேட்டுத் தரையிலிருந்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.

24 அப்பெண் ஒரு கொழுத்த கன்றுக் குட்டியைத் தன் வீட்டிலே வைத்திருந்தாள். விரைவில் சென்று அதை அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து, புளியாத அப்பங்களைச் சுட்டு,

25 சவுலுக்கும் அவர் ஊழியர்களுக்கும் முன்பாக வைத்தாள். சாப்பிட்ட பின் அவர்கள் எழுந்து அன்று இரவு முழுவதும் நடந்தனர்.

அதிகாரம் 29

1 பிலிஸ்தியர் படைகள் எல்லாம் அபேக்கில் கூடின. ஆனால் இஸ்ராயேலர் ஜெஸ்ராயேலில் இருந்த நீரூற்றின் அருகில் பாசறை அமைத்தனர்.

2 பிலிஸ்திய ஆளுநர்கள் ஆயிரக்கணக்கான தங்கள் படை வீரர்களுடன் நடந்து போவார்கள். தாவீதும் அவனுடைய ஆட்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் இருந்தனர்.

3 பிலிஸ்தியத் தலைவர்கள் ஆக்கீசை நோக்கி, "இந்த எபிரேயர்களுக்கு என்ன வேண்டும்?" என்றனர். ஆக்கீசு பிலிஸ்தியத் தலைவர்களை நோக்கி, "இஸ்ராயேலின் அரசர் சவுலின் ஊழியனாய் இருந்த இந்தத் தாவீது நீண்ட நாட்களாய், பல ஆண்டுகளாய் என்னோடு இருக்கிறான். நீங்கள் அவனை அறியாதிருக்கிறீர்களோ? அவன் என்னிடம் வந்த நாள் முதல் இன்று வரை நான் ஒரு குற்றமும் அவனிடம் கண்டதில்லை" என்றான்.

4 பிலிஸ்தியத் தலைவர்கள் மிகவும் கோபமுற்று அவனை நோக்கி, "இந்த தாவீதுக்கு நீர் கொடுத்துள்ள ஊருக்கு அவன் திரும்பிப் போக வேண்டும். நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போர் தொடங்கியவுடன் அவன் நமக்கு எதிரியாகி விடக்கூடுமன்றோ? ஏனெனில் அவன் நம்முடைய தலைகளை வெட்டி வீழ்த்துவதால் அன்றி வேறு எதனால் தன் தலைவனுக்குப் பிரியப்பட நடந்து கொள்ளமுடியும்?

5 'சவுல், ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று சொல்லி இஸ்ராயேலர் ஆடிப்பாடி வாழ்த்தினார்களே! இவன் தானே அந்தத் தாவீது?" என்று சொன்னார்கள்.

6 ஆக்கீசு தாவீதை அழைத்து அவனை நோக்கி, "ஆண்டவர் மேல் ஆணை! நீர் நேர்மை மிக்கவர்; என் முன்னிலையில் நல்லவராய் இருக்கிறீர். நீர் பாசறையில் என்னோடு போகவர இருக்கிறீர். நீர் என்னிடம் வந்த நாள் முதல் இன்று வரை உம்மில் தீமை ஒன்றையும் நான் கண்டதில்லை. ஆனால் ஆளுநர்களுக்கு உம்மைப் பிடிக்கவில்லை.

7 ஆகையால், பிலிஸ்திய ஆளுநர்கள் உம் எதிரிகளாய்த் திரும்பாதபடி இப்போதே சமாதானமாய்ப் போய்விடும்" என்றான்.

8 தாவீது ஆக்கீசை நோக்கி, "ஏன்? நான் செய்த தவறு என்ன? அரசராகிய என் தலைவரின் எதிரிகளோடு போரிடாதபடி, நான் உம்மிடம் வந்த நாள் முதல் இன்று வரை உம் ஊழியனாகிய என்னிடம் என்ன குற்றம் கண்டீர்?" என்றான்.

9 ஆக்கீசு தாவீதைப் பார்த்து, "ஆண்டவரின் தூதரைப் போல் நீர் என் பார்வைக்கு நல்லவராய் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். ஆயினும் 'இவன் எங்களோடு போருக்கு வரலாகாது' என்று பிலிஸ்தியத் தலைவர்கள் சொல்லுகிறார்கள்.

10 ஆகையால், நீரும் உம்முடன் வந்த உம் தலைவரின் ஊழியர்களும் நாளை அதிகாலையில் எழுந்திருங்கள்; இப்படி இரவில் எழுந்து விடியும் நேரத்தில் புறப்பட்டுப் போங்கள்" என்றான்.

11 அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் அதிகாலையில் எழுந்து பிலிஸ்தியர் நாட்டுக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டார்கள். பிலிஸ்தியரோ ஜெஸ்ராயேலுக்குப் போனார்கள்.

அதிகாரம் 30

1 தாவீதும் அவனுடைய மனிதர்களும் மூன்றாம் நாள் சிசெலேக்கை அடைந்த பொழுது, அமலேக்கியர் நாட்டின் தென்பகுதிக்கு வந்து சிசெலேக்கைப் பிடித்து அதைத் தீக்கிரையாக்கினர்.

2 அதிலிருந்த பெண்கள், சிறியோர், பெரியோர் அனைவரையும் சிறைப்படுத்தி ஒருவரையும் கொன்று போடாமல் எல்லாரையும் கூட்டிக் கொண்டு தங்கள் வழியே போய்விட்டார்கள்.

3 தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்த ஊருக்கு வந்தபோது அது நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியரும், புதல்வர் புதல்வியரும் சிறைப்பட்டிருப்பதையும் கண்டனர்.

4 எனவே தாவீதும் அவனுடனிருந்த மக்களும் அழக் கண்ணீர் அற்றுப் போகும் வரை ஓலமிட்டு அழுதனர்.

5 ஜெஸ்ராயேலைச் சேர்ந்த அக்கினோவாளும் கார்மேலைச் சேர்ந்த நாபாலின் மனைவி அபிகாயிலுமான தாவீதினுடைய இரு மனைவியரும் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தனர்.

6 எனவே தாவீது மிகவும் வருந்தினான். எல்லா மக்களும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால், அவனைக் கல்லால் எறிய வேண்டும் என்று இருந்தனர். ஆனால் தாவீது தன் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் நம்பிக்கை வைத்துத் திடம் கொண்டிருந்தான்.

7 அவன் அக்கிமெலேக்கின் மகனும் குருவுமான அபியாத்தாரை நோக்கி, "எபோதை என்னிடம் கொண்டு வாரும்" என்றான். அபியாத்தார் எபோதைத் தாவீதிடம் கொண்டு வந்தார்.

8 தாவீது ஆண்டவரை நோக்கி, "அந்தக் கள்ளர்களைப் பின் தொடர வேண்டுமா? நான் அவர்களைப் பிடிப்பேனா?" என்று கேட்டான். அதற்கு அவர், "பின் தொடர்ந்து போ; ஐயமின்றி நீ அவர்களைப் பிடித்துக் கொள்ளைப் பொருட்களை திருப்பிக் கொள்வாய்" என்றார்.

9 தாவீதும் அவனுடன் இருந்த அறுநூறு மனிதர்களும் புறப்பட்டுப் பேசோர் ஓடைக்கு வந்து சேர்ந்தனர்; சிலர் களைப்படைந்து அங்கேயே தங்கி விட்டனர்.

10 தாவீதோ நானூறு பேர்களோடு அவர்களைத் தொடர்ந்து போனான். ஏனெனில் பின்தங்கின இருநூறு பேரும் களைப்புற்று இருந்ததால், பேசோர் ஆற்றை அவர்களால் கடக்க முடியவில்லை.

11 அவர்கள் எகிப்தியன் ஒருவனை வழியில் கண்டு அவனைத் தாவீதிடம் கூட்டி வந்தனர். அவனுக்குச் சாப்பிட அப்பத்தையும் குடிக்க நீரையும்,

12 மிஞ்சின அத்திப் பழங்களையும் வற்றலான இரண்டு திராட்சைப் பழக் குலைகளையும் கொடுத்தனர். அவற்றை அவன் சாப்பிட்ட பின் புத்துயிர் பெற்றான். ஏனெனில் இரவு பகல் மூன்று நாளாய் அவன் சாப்பிடாமலும் குடியாமலும் இருந்தான்.

13 பிறகு தாவீது அவனை நோக்கி, "நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்? எங்குப் போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு அவன், "நான் எகிப்திய இளைஞன். ஓர் அமலேக்கிய மனிதனுடைய வேலைக்காரன். முந்தா நாள் நான் நோய்வாய்ப்பட்டபோது என் தலைவன் என்னைக் கைவிட்டுவிட்டான்.

14 நாங்கள்தான் கேரேத்துக்குத் தென் நாட்டின் மேலும், யூதாவின் மேலும், காலேபுக்குத் தென் புறத்தின் மேலும் படையெடுத்துச் சிசெலேக்கைத் தீக்கிரையாக்கினோம்" என்றான்.

15 தாவீது அவனைப் பார்த்து, "அந்த கூட்டத்தினரிடம் என்னைக் கூட்டிக் கொண்டு போக உன்னால் கூடுமா ?" என்று கேட்டான். அதற்கு அவன், "நீர் என்னைக் கொல்லுவதில்லை என்றும், என் தலைவன் கையில் ஒப்படைப்பதில்லை என்றும் கடவுள் பெயரால் ஆணையிடும்: அப்பொழுது நான் உம்மை அக்கூட்டத்தினரிடம் கூட்டிக் கொண்டு போவேன்" என்றான். தாவீதும் அப்படியே ஆணையிட்டான்.

16 அவன் தாவீதை அங்குக் கூட்டிச் சென்றபோது, அம்மக்கள் வெளியில் எங்கும் அமர்ந்து உண்டு குடித்து, பிலிஸ்தியர் நாட்டிலும் யூதா நாட்டிலுமிருந்து எடுத்து வந்திருந்த கொள்ளைப் பொருட்களுக்காக ஒரு திருவிழாவைப் போல் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

17 தாவீது அன்று மாலை தொடங்கி மறுநாள் மாலை வரை அவர்களை முறியடித்தான். ஓட்டகங்கள் மேல் ஏறி ஓடிப் போன நானூறு இளைஞர்களைத் தவிர அவர்களில் வேறு ஒருவனும் தப்பவில்லை.

18 தாவீது அமலேக்கியர் எடுத்துச் சென்றிருந்தவற்றை எல்லாம் மீட்டான். தன் இரு மனைவியரையும் விடுவித்தான்.

19 அவர்கள் கொள்ளையிட்டு வந்த எல்லாவற்றிலும் சிறியதும் பெரியதும், புதல்வரும் புதல்வியரும், பறிபொருள் முழுவதும், இன்னும் அவர்கள் கொள்ளையிட்டிருந்த அனைத்தும் ஒன்றும் குறையாமல் மீட்கப்பட்டன. அவை எல்லாவற்றையும் தாவீது திருப்பிக் கொண்டு வந்தான்.

20 அவன் ஆடுமாடு முதலிய கால்நடைகளை எல்லாம் பிடித்து தனக்கு முன் அவற்றை ஓட்டிச் சென்றான். 'இது தாவீதின் கொள்ளைப் பொருள்' என்று மக்கள் சொல்லிக் கொண்டனர்.

21 களைத்துச் சோர்ந்து போனதினால் தாவீதைப் பின் தொடர முடியாது அவன் கட்டளையிட்ட படி பேசோர் ஓடை அருகே தங்கியிருந்த இருநூறு மனிதர்களிடம் தாவீது வந்தபோது, இவர்கள் அவனையும் அவனுடன் இருந்த மக்களையும் எதிர்கொண்டு வந்தார்கள். தாவீது அவர்களை அணுகி அவர்களோடு சமாதான வாழ்த்துக் கூறினான்.

22 ஆனால் தாவீதைப் பின் தொடர்ந்து வந்த மனிதர்களில், ஒழுக்கமற்றவர்களும் கயவர்களுமாய் இருந்தவர்கள், "அவர்கள் எங்களுடன் வராததால் நாங்கள் திருப்பிக் கொண்டு வந்த கொள்ளைப் பொருட்களில் ஒன்று கொடுக்கமாட்டோம். அவர்களில் ஒவ்வொருவனும் தம்தம் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போவது போதும்" என்றனர்.

23 அதற்கு தாவீது, "என் சகோதரரே, ஆண்டவர் நம்மைக் காப்பாற்றி, நம்மீது பாய்ந்து தாக்கிய அந்தத் திருடர்களை நமது கையில் ஒப்படைத்தாரே. ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ளவற்றைப்பற்றி இப்படிச் செய்ய வேண்டாம்.

24 இது காரியத்தில் உங்கள் சொல்லைக் கேட்க யாரும் சம்மதிக்க மாட்டார்கள். போருக்குப் போனவர்களுக்கும், தட்டுமுட்டு முதலிய பொருட்களைக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் வேறுபாடு இன்றி எல்லாருக்கும் சமமான பங்கு கிடைக்கும்" என்றான்.

25 ஏனெனில், பண்டு தொட்டு அப்படியே நடந்து வந்தது. அது இந்நாள் வரை இஸ்ராயேலருக்குள் ஒரு சட்டமும் கட்டளையுமாக ஏற்பட்டு நிலைபெற்றுள்ள மாமூல்.

26 தாவீது சிசெலேக்குக்கு வந்தபோது தான் கொள்ளையடித்திருந்த பொருட்களில் சிலவற்றை எடுத்துத் தன் உறவினர்களாகிய யூதாவின் மூப்பர்களுக்கு அனுப்பி, "ஆண்டவருடைய எதிரிகளிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களில் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லச் சொன்னான்.

27 மேலும், பேத்தலில் இருந்தவர்களுக்கும், தெற்கே ராமாத்தாவில் இருந்தவர்களுக்கும், ஜேத்தேரில் இருந்தவர்களுக்கும்,

28 அரோயேரில் இருந்தவர்களுக்கும், செப்பாமோத்தில் இருந்தவர்களுக்கும், எஸ்தாமோவில் இருந்தவர்களுக்கும்,

29 இராக்காலில் இருந்தவர்களுக்கும், ஜெராமேயேல் நகர்களில் இருந்தவர்களுக்கும், சேனி நகர்களில் இருந்தவர்களுக்கும்,

30 அராமாவில் இருந்தவர்களுக்கும், ஆசான் ஏரியண்டை இருந்தவர்களுக்கும், அத்தாக்கில் இருந்தவர்களுக்கும்,

31 எபிரோனில் இருந்தவர்களுக்கும், தாவீதும் அவனுடைய மனிதர்களும் வாழ்ந்து வந்த இடங்களில் இருந்த மற்றவர்களுக்கும் (அவன் அவ்விதமே பரிசுகளை அனுப்பி வைத்தான்).

அதிகாரம் 31

1 நிற்க, பிலிஸ்தியர் இஸ்ராயேலரோடு போர் புரிந்தனர். இஸ்ராயேல் மனிதர்கள் பிலிஸ்தியருக்குப் புறமுதுகு காட்டி ஓடி, கெல்போயே மலையில் வெட்டுண்டு விழுந்தார்கள்.

2 பிலிஸ்தியர் சவுல் மேலும், அவர் மக்கள் மேலும் பாய்ந்து சவுலின் புதல்வர்களாகிய யோனத்தாசையும் அபினதாபையும் மெல்கிசுவாயையும் வெட்டி வீழ்த்தினர்.

3 சவுல் இருந்த இடத்தில் சண்டை மிகவும் கொடூரமாய் இருந்தது. வில் வீரர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அவரும் பெரும்காயம் அடைந்தார்.

4 அப்பொழுது சவுல் தம் பரிசையனை நோக்கி, "அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் ஒருவேளை என்னை அவமானப்படுத்திக் கொல்லாதபடி, நீயே உன் வாளை உருவி என்னை வெட்டிப் போடு" என்றார். அச்ச மிகுதியால் பரிசையன் அதற்கு இணங்கவில்லை. ஆகையால் சவுல் தம் வாளைத் தரையில் குத்தி வைத்துத் தாமாகவே அதன் மேல் விழுந்தார்.

5 சவுல் இறந்ததைக் கண்ட பரிசையனும் தன் வாள்மேல் விழுந்து அவரோடு மடிந்தான்.

6 ஆகையால், அன்று சவுலும் அவருடைய மூன்று புதல்வர்களும் அவருடைய பரிசையனும் எல்லா மனிதர்களும் ஒருங்கே அதே நாளில் உயிர் துறந்தனர்.

7 இஸ்ராயேலர் ஓடிப்போனார்கள் என்றும், சவுலும் அவர் புதல்வர்களும் மடிந்தார்கள் என்றும் பள்ளத்தாக்குக்கு அப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ராயேல் மக்கள் கண்ட போது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டு ஓடிப்போனார்கள். அப்போது பிலிஸ்தியர் அங்கு வந்து குடியேறினர்.

8 மறுநாள் பிலிஸ்தியர் வெட்டுண்டவர்களைக் கொள்ளையிட வந்த போது, சவுலும் அவருடைய மூன்று புதல்வர்களும் கெல்போயே மலையில் மடிந்து கிடக்கக் கண்டனர்.

9 சவுலின் தலையைக் கொய்து, அவருடைய ஆயுதங்களைக் கொள்ளையிட்ட பின், தங்கள் சிலைகள் இருந்த கோவிலிலும், மக்களுக்குள்ளும் செய்தியைப் பறைசாற்றும் பொருட்டு அவற்றைப் பிலிஸ்திய நாடெங்கினும் அனுப்பினார்கள்.

10 கடைசியில் அவர்கள் அவருடைய ஆயுதங்களை அஸ்தரோத்தின் ஆலயத்தில் வைத்தனர். அவரது உடலையோ பெத்சான் நகர மதிலில் தொங்கவிட்டனர்.

11 பிலிஸ்தியர் சவுலுக்குச் செய்தவற்றைக் காலாத் நாட்டு யாபேசுக் குடிகள் கேள்விப்பட்ட போது,

12 அவர்களுள் ஆற்றல் படைத்தவர் அனைவரும் எழுந்து இரவு முழுவதும் நடந்து சென்று பெத்சானின் நகர் மதிலிலிருந்து சவுலின் சடலத்தையும், அவருடைய புதல்வர்கள் சடலங்களையும் எடுத்துக் காலாதில் இருந்த யாயேசுக்குக் கொண்டு வந்து, அங்கு அவற்றைச் சுட்டெரித்தனர்.

13 பின் அவர்களுடைய எலும்புகளைப் பொறுக்கி எடுத்து யாபேசு நாட்டில் அடக்கம் செய்து ஏழு நாட்கள் நோன்பு காத்தனர்.