1 அரசர் ஆகமம்

அதிகாரம் 01

1 தாவீது அரசர் முதியவரானபோது பல போர்வைகளைப் போர்த்தியும் சூடு உண்டாகவில்லை.

2 அப்போது அவருடைய ஊழியர்கள் அவரை நோக்கி, "நம் அரசர் முன்னிலையில் நிற்கவும், அரசராகிய நம் தலைவருக்குச் சூடு உண்டாக்கும்படி அவரது மார்பின் மீது படுத்துறங்கவும் ஓர் இளங்கன்னியை நம் அரசராகிய தலைவருக்குத் தேடுவோம்" என்று சொன்னார்கள்.

3 எனவே இஸ்ராயேல் முழுவதும் ஓர் அழகிய இளம் பெண்ணுக்காகத் தேடித் திரிந்து, சுனாமித் ஊராளாகிய அபிசாகைக் கண்டு அவளை அரசரிடம் கூட்டி வந்தனர்.

4 அந்நங்கை ஒரு பேரழகி, அவள் அரசருக்குப் பணிவிடை செய்து அவரோடு படுத்துறங்கியும் அரசர் அவளை அறியாதிருந்தார்.

5 ஆகீத்துக்குப் பிறந்த அதோனியாசு, "நான் அரசன் ஆவேன்", என்று சொல்லித் தற்பெருமை கொண்டு, தனக்கெனத் தேர்களையும் குதிரை வீரர்களையும், தனக்கு முன் ஓடத்தக்க ஐம்பது வீரர்களையும் தயார் படுத்தினான்.

6 அவன் தந்தை, "நீ ஏன் அப்படிச் செய்கிறாய்?" என்று அவனை ஒருகாலும் கடிந்துகொள்ளவில்லை. அவன் அப்சலோமுக்குப் பிறகு பிறந்தவனும் மிக அழகுள்ளவனுமாய் இருந்தான்.

7 அவன் சாப்வியாவின் மகன் யோவாபோடும், குருவாகிய அபியாத்தாரோடும் ஆலோசனை செய்திருந்தான். இவர்கள் அதோனியாசின் பக்கம் நின்று அவனுக்கு உதவி புரிந்து வந்தனர்.

8 ஆனால் குரு சாதோக்கும், யோயியாதாவின் மகன் பனாயாசும், இறைவாக்கினர் நாத்தானும், செமேயி, ரேயி மற்றும் தாவீதின் வலிமை வாய்ந்த படை வீரர்களும் அதோனியாசை ஆதரிக்கவில்லை.

9 ஆனால் அதோனியாசு ரோகேல் நீரூற்றருகே உள்ள சோகெலெத் என்ற கல்லின் அருகில் ஆட்டுக் கடாக்களையும் கன்றுகளையும் கொழுத்த எல்லா வித உயிரினங்களையும் பலியிட்ட பின் அரசரின் புதல்வராகிய தன் சகோதரர் எல்லாரையும், அரசருக்கு ஏவல் புரிந்து வந்த யூதா கோத்திரத்தார் அனைவரையும் அழைத்தான்.

10 ஆனால் இறைவாக்கினர் நாத்தானையும் பனாயாசையும் வலிமை வாய்ந்த படைவீரர்களையும் தன் சகோதரன் சாலமோனையும் அவன் அழைக்கவில்லை.

11 அப்போது நாத்தான் சாலமோனின் தாய் பெத்சபேயை நோக்கி, "நம் தலைவராம் தாவீதுக்குத் தெரியாமல் ஆகீத்னின் மகன் அதோனியாசு அரசனாய் இருப்பதை நீர் அறியீரோ?

12 ஆகவே, இப்பொழுது உமது உயிரையும் உம் மகன் சாலமோனின் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நீர் வந்து நான் உமக்குச் சொல்லும் ஆலோசனையின்படி நடப்பீர்.

13 நீர் தாவீது அரசரிடம் சென்று, 'அரசராகிய என் தலைவ, "எனக்குப்பின் உம் மகன் சாலமோனே அரசாள்வான்; அவனே எனக்குப்பின் அரியணை ஏறுவான்" என்று நீர் உம் அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க அதோனியாசு அரசனாய் இருக்கிறது எப்படி?' என்று அவரிடத்தில் நீர் கேளும்.

14 நீர் அரசருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, நானும் உமக்குப்பின் வந்து உம் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன்" என்றார்.

15 அப்படியே பெத்சபே அரசரைக் காணப்படுக்கை அறைக்குள் சென்றாள். அரசர் மிகவும் வயது சென்றவராய் இருந்தார். சுனாமித் ஊராகிய அபிசாக் அரசருக்குப் பணிவிடை செய்து சொண்டிருந்தாள்.

16 பெத்சபே நெடுங்கிடையாய் விழுந்து அரசரை வணங்கி நிற்க, அரசர், "உனக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார்.

17 அதற்கு அவள், "என் தலைவ, 'எனக்குப்பின் உன் மகன் சாலமோனே அரசாள்வான்; அவனே எனக்குப் பின் அரியணை ஏறுவான்' என்று நீர் உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உம் அடியாளுக்கு ஆணையிட்டீரே.

18 அப்படியிருக்க, என் தலைவராகிய அரசே, இதோ உமக்குத் தெரியாதபடி அதோனியாசு அரசனாய் இருக்கிறான்.

19 அவன் மாடுகளையும் நன்கு கொழுத்த பலவித உயிரினங்களையும் பல ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டு, அரசரின் புதல்வர் அனைவரையும் குருவாகிய அபியாத்தாரையும், யோவாப் என்ற படைத் தலைவனையும் அழைத்தான். உம் ஊழியன் சாலமோனை மட்டும் அவன் அழைக்கவில்லை.

20 அரசராகிய என் தலைவ, தங்களுக்குப் பின் அரியணை ஏறுபவன் யார் என்று தாங்களே அறிவிக்க வேண்டும் என்று இஸ்ராயேலர் அனைவரும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

21 அப்படி அறிவிக்காமற் போனால், அரசராகிய என் தலைவர் தம்முடைய முன்னோரோடு துஞ்சிய பிறகு, நானும் என் மகன் சாலமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம்" என்றாள்.

22 இவ்வாறு இவள் அரசரோடு பேசிக்கொண்டிருக்கும் போது, இறைவாக்கினர் நாத்தான் வந்தார்.

23 இதோ, இறைவாக்கினர் நாத்தான் வந்திருக்கிறார் என்று அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அவரும் அரசர் முன் சென்று நெடுங்கிடையாய் விழுந்து அவரை வணங்கினார்.

24 அரசராகிய என் தலைவ, 'அதோனியாசு எனக்குப் பின் ஆளவும் அவனே என் அரியணையில் அமரவும் வேண்டும்' என்று நீர் சொன்னீரா?

25 இதோ, அதோனியாசு இன்று மாடுகளையும் கொழுத்த உயிரினங்களையும், பல கடாக்களையும் பலியிட்டு, அரசரின் புதல்வர் அனைவரையும் படைத் தலைவரையும், குரு அபியாத்தாரையுங் கூட அழைத்திருந்தான். அவர்கள் அவனோடு உண்டு குடித்து, 'அரசனாகிய அதோனியாசு வாழி!' என்று முழங்கினார்கள்.

26 ஆனால் உம் அடியானாகிய என்னையும் குரு சாதோக்கையும் யோயியாதாவின் மகன் பனாயாசையும் உம் அடியான் சாலமோனையும் அவன் அழைக்கவில்லை.

27 அரசராகிய என் தலைவர் இக்கட்டளையைப் பிறப்பித்ததுண்டோ? அரசராகிய என் தலைவருக்குப்பிறகு தமது அரியணை ஏறுபவன் யார் என்பது உம் அடியானாகிய எனக்கு நீர் தெரிவிக்கவில்லையா?" என்றார்.

28 தாவீது அரசர் மறுமொழியாக, "பெத்சபேயை என் முன்பாக வரவழையுங்கள்" என்றார்.

29 அவளும் அரசர் முன் வந்து நின்றாள். அரசர் அவளை நோக்கி, "எல்லாவித இடுக்கண்களிலுமிருந்து என் உயிரைக் காப்பாற்றிய ஆண்டவர் மேல் ஆணை!

30 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் பேரில் நான் ஆணையிட்டு, 'உன் மகன் சாலமோனே எனக்குப் பிறகு அரசாள்வான்; அவனே எனக்குப்பின் அரியணை ஏறுவான்' என்று முன்பு உனக்குச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவ்வாறே இன்று அதைச் செய்து முடிப்பேன்" என்றார்.

31 அப்போது பெத்சபே முகம் குப்புற விழுந்து அரசருக்கு வணக்கம் செய்து, "என் தலைவராம் தாவீது நீடுழி வாழ்க!" என்றாள்.

32 பின்பு தாவீது அரசர், "குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும் யோயியாதாவின் மகன் பனாயாசையும் என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார். அப்படியே அவர்கள் அரசர் முன் வந்து நிற்க,

33 அரசர் அவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் தலைவரின் ஊழியர்களைக் கூட்டிக் கொண்டு என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின் மேல் ஏற்றி அவனைக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

34 அங்கே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும், அவனை இஸ்ராயேலின் அரசனாக அபிஷுகம் செய்யக்கடவார்கள்; பின்பு எக்காளம் ஊதி, 'அரசனாகிய சாலமோன் வாழி!' என்று வாழ்த்துங்கள்.

35 அதன்பின் அவனோடு திரும்பி வாருங்கள். அவனோ வந்து என் அரியணையில் வீற்றிருந்து எனக்குப் பதிலாய் அரசாள்வான். இஸ்ராயேல் மீதும் யூதா மீதும் அவனைத் தலைவனாக நியமிப்பேன்" என்றார்.

36 அப்போது யோயியாதாவின் மகன் பனாயாசு அரசருக்கு மறுமொழியாக, "அப்படியே ஆகக்கடவது. அரசராகிய என் தலைவரின் ஆண்டவராகிய கடவுளின் திருவுளமும் அவ்வாறே இருக்கக்கடவது.

37 ஆண்டவர் என் அரசராகிய தலைவரோடு இருந்தது போல், அவர் சாலமோனோடும் இருந்து, தாவீது அரசராகிய என் தலைவரின் அரியணையை மேன்மைப் படுத்தினதை விட அவரது அரியணையை மேன்மைப் படுத்துவாராக" என்றான்.

38 அப்படியே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் யோயியாதாவின் மகன் பனாயாசும் கெரேத்தியரும் பெலேத்தியரும் சேர்ந்து சாலமோனைத் தாவீது அரசரின் கோவேறு கழுதையின் மேல் ஏற்றி அவனைக் கீகோனுக்கு நடத்திச் சென்றார்கள்.

39 குரு சாதோக் கொம்பாலான எண்ணெய்ச் சிமிழைப் பரிசுத்த கூடாரத்திலிருந்து எடுத்து வந்து சாலமோனை அபிஷுகம் செய்தார். அப்போது எக்காளம் ஊதி மக்கள் எல்லாரும், "அரசன் சாலமோன் வாழி!" என்றனர்.

40 பிறகு மக்கள் அவனைப் பின்தொடர்ந்தனர். பலர் குழல் ஊத அனைவரும் மகிழ்ச்சி கொண்டாடி ஆர்ப்பரித்தனர். அப்பேரிரைச்சல் மண்ணகம் எங்கும் ஒலித்தது.

41 அதோனியாசும் அவனால் அழைக்கப் பெற்றிருந்தவர்களும் விருந்தாடிக் கொண்டிருந்தனர். அதன் முடிவில் அவ்விரைச்சலைக் கேட்டனர். எக்காளம் முழங்கக் கேட்ட யோவாப், "நகரில் இத்தனை கூக்குரலும் ஆர்ப்பரிப்பும் ஏன்?" என்று வினவினான்.

42 அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, குரு அபியாத்தாரின் மகன் யோனத்தாசு வந்தான். அப்போது அதோனியாசு அவனை நோக்கி, "உள்ளே வா, ஏனெனில் நீ ஆற்றல் மிக்கவன். நல்ல செய்தி கொண்டு வருபவன்" என்றான்.

43 யோனத்தாசு அதோனியாசுக்கு மறுமொழியாக, "அப்படியன்று. நம் தலைவராம் தாவீது அரசர் சாலமோனை அரசனாக நியமித்து விட்டார்.

44 குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும் யோயியாதாவின் மகன் பனாயாசையும் கெரேத்தியரையும் பெலேத்தியரையும் அவனோடு அனுப்பினார். அவர்கள் அவனை அரசரின் கோவேறு கழுதையின் மேல் ஏற்றினார்கள்.

45 அப்பொழுது குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனைக் கீகோனில் அரசனாக அபிஷுகம் செய்தார்கள். பிறகு நகரெங்கும் முழங்கும்படி அங்கிருந்து பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புறப்பட்டுப் போனார்கள்.

46 நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான். சாலமோனும் இப்போது அரியணையில் வீற்றிருக்கிறான்.

47 அரசரின் ஊழியரும் நம் தலைவராம் தாவீது அரசருக்கு வாழ்த்துச் சொல்ல வந்து, 'கடவுள் சாலமோனின் பெயரை உமது பெயரை விட அதிகமாய் மேன்மையுறச் செய்து, அவரது அரசை உமது அரசை விடப் பெரிதாக்குவாராக' என்றனர். படுக்கையில் இருந்த அரசரும் ஆண்டவரை வணங்கி,

48 என் கண்கள் காணும்படி இன்று என் அரியணையில் என் மகனை வீற்றிருக்கச் செய்த இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக' என்று கூறினார்" என்றான்.

49 அப்போது அதோனியாசின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று தத்தம் வழியே போய் விட்டனர்.

50 அதோனியாசும் சாலமோனுக்கு அஞ்சி எழுந்து சென்று பலி பீடத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டான்.

51 அப்போது, "இதோ சாலமோன் அரசருக்கு அஞ்சி அதோனியாசு பலி பீடத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்" என்றும் "சாலமோன் அரசர் தம் ஊழியனை வாளால் கொன்று போடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக' என்கிறான்" என்றும் சாலமோனுக்கு அறிவிக்கப்பட்டது.

52 அப்போது சாலமோன், "அவன் நல்லவனாய் நடந்து கொண்டால், அவன் தலை மயிரில் ஒன்றாவது தரையில் விழப் போவதில்லை; தீயவனாய் நடந்து கொண்டாலோ அவன் சாகவே சாவான்" என்றார்.

53 சாலமோன் அரசர் ஆள் அனுப்பிப் பலிபீடத்தினின்று அவனைக் கொண்டு வந்தார். அவனும் வந்து அரசர் சாலமோனை வணங்கினான். சாலமோன் அவனைப் பார்த்து, "உன் வீட்டிற்குப் போ" என்றார்.

அதிகாரம் 02

1 தாவீதின் இறுதிக்காலம் நெருங்கின போது, தம் மகன் சாலமோனுக்குக் கட்டளையிட்டுக் கூறிய அறிவுரையாவது:

2 எல்லாரையும் போல் நானும் இறக்கும் காலம் வந்து விட்டது; நீ மனத்திடம் கொள்; ஆண்மையோடு நட.

3 உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடி; அவரைப் பின்பற்றி நட. மோயீசனின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ளது போல், நீ செய்வதையெல்லாம் விவேகத்தோடு செய்ய, கடவுளுடைய திருச்சடங்குகளையும் அவர் கட்டளைகளையும் முடிவுகளையும் சான்றுகளையும் கடைப்பிடி.

4 ஏனெனில் என்னை நோக்கி, 'உன் புதல்வர்கள் தங்கள் முழு இதயத்தோடுடம் முழு ஆன்மாவோடும் நம் திருமுன் நேர்மையுடன் நடந்து வருவார்களானால், இஸ்ராயேலின் அரியணை ஒரு போதும் அரசன் இன்றிக் காலியாக விடப்பட மாட்டாது' என்று ஆண்டவர் எனக்குக் கொடுத்த வாக்குறுதி அப்போது தான் நிறைவேறும்.

5 சார்வியாவின் மகன் யோவாப் இஸ்ராயேலின் இரு படைத்தலைவர்களான நேரின் மகன் அப்நேருக்கும் எத்தேரின் மகன் ஆமாசாவுக்கும் செய்ததையும், எனக்குச் செய்ததையும் நீ அறிவாய்: அவன் அவர்களைக் கொன்று சமாதான காலத்தில் போர் தொடுத்து இரத்தத்தைச் சிந்தி, அந்த இரத்தத்தைத் தன் அரைக் கச்சையிலும், தம் மிதியடிகளிலும் இட்டுக் கொண்டான்.

6 ஆகையால் உனது விவேகத்தின்படி அவன் வயதானவனாகி அமைதியுடன் சாகவிடாதே.

7 காலாதித்தனாகிய பெர்செல்லாவின் புதல்வருக்கு இரக்கம் காட்டு. அவர்கள் உன்னோடு பந்தியில் அமரட்டும். ஏனெனில் உன் சகோதரன் அப்சலோமுக்கு நான் அஞ்சி ஓடும் போது, அவர்கள் எனக்கு ஆதரவாக வந்தனர்.

8 மேலும், உன்னோடு இருக்கும் பாகூரிம் ஊரானாகிய ஜெமினியின் மகன் ஜேராவின் மகனான செமேயி, நான் பாளையத்துக்குச் சென்ற போது இழி சொல் கூறி என்னைச் சபித்தான்; ஆயினும் அவன் யோர்தானில் என்னை எதிர் கொண்டு வந்ததினால், 'நான் உன்னை வாளால் வெட்ட மாட்டேன்' என்று ஆண்டவர் பெயரால் அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னேன்.

9 இருந்தபோதிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணிவிடாதே. நீ அறிவாளியானதால் அவன் இறுதிக் காலத்தில் அவலமாய்ச் செத்து, நரகம் போகச் செய்ய வேண்டியதை அறிவாய்" என்றார்.

10 பிறகு தாவீது தம் மூதாதையரோடு துயில் கொண்டு தாவீதின் நகரில் புதைக்கப்பட்டார்.

11 தாவீது இஸ்ராயேலரை நாற்பது ஆண்டுகள் ஆண்டு வந்தார். எபிரோனில் ஏழு ஆண்டுகளும் யெருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி புரிந்தார்.

12 சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் வீற்றிருக்க அவருடைய ஆட்சி மிகவும் உறுதியடைந்தது.

13 ஆகீத்தின் மகன் அதோனியாசு சாலமோனின் தாய் பெத்சபேயிடம் வரவே, "நீ சமாதானமாய் வருகிறாயா?" என்று அவள் கேட்டாள். அதற்கு அவன், "சமாதானமாய்த் தான் வருகிறேன்" என்றான்.

14 பின் அவன், "நான் உம்மிடம் ஒன்று சொல்ல வேண்டும்" என்று சொல்ல, அவள், "சொல்" என்றாள்.

15 அதற்கு அவன், "அரசு என்னுடையது என்றும், நான் அரசனாக வேண்டும் என்று இஸ்ராயேல் மக்கள் அனைவரும் விரும்பினர் என்றும் நீர் அறிவீர்; இருந்தபோதிலும் அரசு என் கையினின்று எடுக்கப் பெற்று என் சகோதரருக்குக் கொடுக்கப்பெற்றது. அது அவருக்கு ஆண்டவரால் அருளப்பட்டது. ஆயினும் ஒரு வேண்டுகோள்;

16 அதை நீர் எனக்கு மறுக்கக் கூடாது" என்றான். அதற்கு அவள், "அது என்ன?" என்றாள்.

17 அப்போது அவன், "அரசர் சாலமோன் உம் வார்த்தைகளை மறுக்கமாட்டார்; சுனாமித் ஊராளாகிய அபிசாகை எனக்கு அவர் மணமுடித்து வைக்கும்படி அவரிடம் சொல்லும்" என்றான்.

18 அதற்குப் பெத்சபே, "நல்லது, நான் உனக்காக அரசனிடம் பரிந்து பேசுவேன்" என்றாள்.

19 பெத்சபே, அதோனியாசுக்காக அரசர் சாலமோனிடம் பரிந்து பேசும்படி போனாள். அப்போது அரசர் எழுந்து, அவளை எதிர் கொண்டு வந்து வணங்கித் தம் அரியணையில் அமர்ந்தார். அரசரின் தாய்க்கு அவர் வலப் புறத்தில் ஓர் இருக்கைப் போடப்பட்டது. அவளும் அதில் அமர்ந்தாள்.

20 அப்போது அவள், "நான் உன்னிடம் ஒரு சிறு வேண்டுகோள் விடுக்க விழைகிறேன்; நீ அதை மறுக்கக் கூடாது" என்றாள். அதற்கு அரசர், "கேளுங்கள் அம்மா! நான் உங்கள் வேண்டுகோளை மறுக்க மாட்டேன்" என்றார்.

21 அப்பொழுது அவள், "சுனாமித் ஊராளாகிய அபிசாகை உன் சகோதரன் அதோனியாசுக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும்" என்றாள்.

22 சாலமோன் அரசர் தம் தாய்க்கு மறுமொழியாக, "சூனாமித் ஊராளாகிய அபிசாகை அதோனியாசுக்கு நீர் கேட்பானேன்? அதோடு ஆட்சியையும் அவனுக்குக் கேளும். ஏனெனில் அவன் எனக்கு மூத்த சகோதரன்; அன்றியும் குரு அபியாத்தாரையும் சார்வியாவின் மகன் யோவாபையும் தனக்குப் பக்கபலமாக வைத்திருக்கிறான்" என்று சொன்னார்.

23 பிறகு சாலமோன் அரசர் ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு, "அதோனியாசு இவ்வார்த்தையைச் சொன்னதால் அவன் உயிருக்கே ஆபத்து. இல்லாவிடில், கடவுள் எனக்குத் தகுந்த பிரதி பலன் அளிக்கட்டும்.

24 எனவே என்னை உறுதிப்படுத்தினவரும், என்னை என் தந்தை தாவீதின் அரியணையில் அமரச் செய்து, தாம் சொன்னபடி என் வீட்டை நிறுவினவருமாகிய ஆண்டவர் மேல் ஆணை! இன்றே அதோனியாசு கொல்லப்படுவான்!" என்று சொன்னார்.

25 சாலமோன் அரசர் யோயியாதாவின் மகன் பனாயாசுக்குக் கட்டளை கொடுக்க, இவன் அவனை வெட்டி வீழ்த்தினான்; அவனும் இறந்தான்.

26 மேலும் அரசர் குரு அபியாத்தாரை நோக்கி, "நீர் உம் நிலங்கள் இருக்கிற அனாதோத்திற்குப் போய்விடும்; ஏனெனில் நீர் சாவுக்குரியவர். இருப்பினும் நீர் என் தந்தை தாவீதுக்கு முன்பாக, ஆண்டவராகிய கடவுளின் பேழையைத் தூக்கி வந்ததினாலும், என் தந்தை பட்ட துன்பங்களை எல்லாம் நீரும் அவரோடு சேர்ந்து அனுபவித்ததினாலும், இன்று நான் உம்மைக் கொல்ல மாட்டேன்" என்றார்.

27 எனவே, கடவுள் சீலோவில் ஏலியின் சந்ததியாருக்குச் சொல்லியிருந்த வார்த்தையை நிறைவேற்றும்படியாக அபியாத்தார் குருவாய் இராதபடி சாலமோன் அவரை விலக்கி வைத்தார்.

28 இதைக் கேள்வியுற்ற யோவாப், தான் சாலமோன் பக்கமாய் இராது அப்சலோம் பக்கம் இருந்ததினால் கடவுளின் கூடாரத்திற்கு ஓடிப்போய்ப் பீடத்தின் கொம்புகளைப் பிடித்துக் கொண்டான்.

29 யோவாப் கடவுளின் கூடாரத்திற்கு ஓடிப் போனான் என்றும், அவன் பலி பீடத்தின் அருகே நிற்கிறான் என்றும் சாலமோன் அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சாலமோன் யோயியாதாவின் மகன் பனாயாசை அனுப்பி, "நீ போய் அவனைக் கொன்று போடு" என்றார்.

30 பனாயாசு ஆண்டவரின் கூடாரத்திற்குப் போய் அவனைக் கண்டு, "வெளியே வா, இது அரச கட்டளை" என்றான். அதற்கு அவன் மறுமொழியாக, "நான் இவ்விடத்தை விட்டு அசையமாட்டேன்; இங்கேயே சாவேன்" என்றான். ஆகையால் பனாயாசு அரசரிடம் சென்று யோவாப் தனக்குக் கூறிய மறுமொழியை அரசருக்குத் தெரிவித்தான்.

31 அப்போது அரசர் அவனை நோக்கி, "அவன் சொன்னபடியே நீ அவனைக் கொன்று அடக்கம் செய். இவ்வாறு யோவாப் சிந்தின மாசற்ற இரத்தத்தின் பழி என்னையும் என் தந்தை வீட்டையும் விட்டு நீங்கச்செய்.

32 அவன் தன்னை விட நல்லவர்களும் நீதிமான்களுமான நேரின் மகன் அப்நேர் என்ற இஸ்ராயேல் படைத் தலைவன், எத்தோரின் மகன் ஆமாசா என்ற யூதாவின் படைத்தலைவன் ஆகிய இருவரையும் என் தந்தை தாவீதுக்குத் தெரியாமல் வாளால் கொன்ற இரத்தப்பழியை ஆண்டவர் அவன் தலை மேலேயே திரும்பச் செய்வாராக.

33 இவ்வாறு அவர்களின் இரத்தப்பழி யோவாபின் தலை மேலும், அவன் சந்ததியாரின் தலை மேலும் என்றென்றும் இருக்கக்கடவது. தாவீதின் மீதும் அவர் சந்ததியார், வீட்டார் மீதும், அவரது அரியணை மீதும் என்றென்றும் கடவுளின் சமாதானம் இருக்கக் கடவது" என்றார்.

34 எனவே, யோயியாதாவின் மகன் பனாயாசு சென்று யோவபைக் கொன்றான். அவன் பாலைவனத்தில் இருந்த தனது வீட்டிலேயே புதைக்கப்பட்டான்.

35 அப்போது அரசர் யோவாபுக்குப் பதிலாக யோயியாதாவின் மகன் பனாயாசைப் படைத்தலைவனாகவும், அபியாத்தாருக்குப் பதிலாகச் சாதோக்கைக் குருவாகவும் நியமித்தார்.

36 பிறகு அரசர் செமேயியை வரவழைத்து அவனை நோக்கி, "யெருசலேமில் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு இங்கும் அங்கும் அலைந்து திரியாமல் அங்கேயே நீ குடியிரு.

37 என்று நீ வெளியேறிக் கெதுரோன் ஆற்றைக் கடப்பாயோ, அன்றே நீ கொல்லப்படுவாய் என்று அறிந்து கொள். உன் இரத்தப்பழி உன் தலை மேலேயே விழும்" என்றார்.

38 செமேயி அரசரைப் பார்த்து, "நல்லது, அரசராகிய என் தலைவர் சொன்னபடியே உம் அடியானாகிய நான் செய்வேன்" என்று சொல்லி நெடுநாள் யெருசலேமில் குடியிருந்தான்.

39 மூன்று ஆண்டுகளுக்குப் பின் செமேயியின் ஊழியர் மக்காவின் மகன் ஆக்கீசு என்ற கேத்தின் அரசனிடம் ஓடிப்போகவே, அவ் ஊழியர்கள் கேத்தில் இருப்பதாகச் செமேயியிக்கு அறிவிக்கப்பட்டது.

40 உடனே செமேயி கழுதைக்குச் சேணம் பூட்டித் தன் ஊழியர்களைத் தேடக் கேத்திலிருந்த ஆக்கீசிடம் சென்று தன் ஊழியர்களை அங்கிருந்து கூட்டிக் கொண்டு வந்தான்.

41 செமேயி யெருசலேமிலிருந்து கேத்துக்குப் போய்த் திரும்பி வந்தான் என்று சாலமோனுக்கு அறிவிக்கப்பட்டது.

42 அப்போது அரசர் செமேயியை வரவழைத்து, "நீ வெளியே புறப்பட்டு இங்குமங்கும் போகிற நாளிலே நீ சாவாய் என்று அறிந்து கொள்' என்று ஆண்டவர் பெயரில் நான் ஆணையிட்டு உனக்கு முன்பே எச்சரிக்கை செய்யவில்லையா? அதற்கு நீ, 'சரி' என்றும் கூறவில்லையா?

43 அப்படியிருக்க, ஆண்டவர் பெயரால் நான் கொடுத்த ஆணையையும், நான் உனக்குக் கொடுத்த கட்டளையையும் மீறியது ஏன்?" என்றார்.

44 மேலும் அரசர் செமேயியைப் பார்த்து, "நீ என் தந்தை தாவீதுக்குச் செய்ததும் உன் மனச்சாட்சிக்குத் தெரிந்திருக்கிறதுமான தீங்கு அனைத்தும் நீ அறிவாய். ஆகையால் கடவுள் உன் கொடுமையை உன் தலை மேலேயே திரும்பச் செய்தார்.

45 அரசராகிய சாலமோனோ, ஆசீர்வதிக்கப்பட்டவராய் இருப்பார். தாவீதின் அரியணையோ கடவுளுக்கு முன்பாக என்றென்றும் நின்று நிலவும்" என்று சொன்னார்.

46 பின்னர் அரசர் யோயியாதாவின் மகன் பனாயாசுக்குக் கட்டளை கொடுக்க, இவன் சென்று அவனைக் கொன்றான்.

அதிகாரம் 03

1 இவ்வாறு சாலமோனின் அரசு அவர் கையில் உறுதிப்படுத்தப்பட்டது. பின் சாலமோன் எகிப்திய அரசன் பாரவோனோடு உறவு கொண்டு பாரவோனின் மகளை மணந்து, தம் அரண்மனையையும் கடவுளின் ஆலயத்தையும் யெருசலேமின் சுற்று மதிலையும் கட்டி முடிக்கும் வரை அவளைத் தாவீதின் நகரில் வைத்திருந்தார்.

2 ஆனால் அன்று வரை ஆண்டவருடைய பெயரால் ஆலயம் கட்டப்படாமல் இருந்ததினால், மக்கள் மேடுகளின் மேல் பலியிட்டு வந்தனர்.

3 சாலமோன் ஆண்டவர் மேல் அன்பு கூர்ந்து தம் தந்தையின் கட்டளைகளின்படி நடந்து வந்தார். அவரும், மேடுகளில் தான் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தார்.

4 காபோவாம் மிக உயர்ந்த மேடாய் இருந்ததால் சாலமோன் ஒருநாள் அங்குச் சென்று, அந்தக் காபாவோன் பலிபீடத்தில் ஆயிரம் தகனப் பலிகளைச் செலுத்தினார்.

5 அன்றிரவு ஆண்டவர் கனவில் தோன்றி, "நீ விரும்புவதைக் கேள்" என்றார்.

6 அதற்கு சாலமோன், "உம் அடியாராகிய என் தந்தை தாவீது உம் திருமுன் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் உம்மோடு நடந்து வந்ததற்கு ஏற்ப நீர் அவர் மேல் பேரிரக்கம் கொண்டீர். அப்பேரிரக்கத்தை என்றும் அவருக்குக் காட்டி இன்று உள்ளது போல் அவரது அரியணையில் வீற்றிருக்க ஒரு மகனை அவருக்குத் தந்துள்ளீர்.

7 இப்போது, என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் உம் அடியானை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரியணையில் ஏற்றினீர். நானோ சிறுவன்; எதையும் தலைமை ஏற்று நடத்தும் ஆற்றல் அற்றவன்.

8 நீர் தேர்ந்து கொண்டவர்களும், எண்ணிக்கைக்குள் அடங்காத, மதிப்பிட முடியாதவர்களுமான திரளான மக்களாகிய உம் மக்கள் நடுவில் அடியேன் இருக்கிறேன்.

9 ஆகையால் உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமையைப் பகுத்தறியவும் வேண்டிய ஞானத்தை அடியேனுக்கு அளித்தருளும்; ஏனெனில், கணக்கற்ற இந்த உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?" என்றார்.

10 சாலமோன் சொன்ன சொற்களும், செய்து கொண்ட விண்ணப்பமும் ஆண்டவருக்குப் பிடித்திருந்தன.

11 ஆகையால் ஆண்டவர் அவரை நோக்கி, "உனக்கென நீடிய ஆயுளையும் மிகுந்த செல்வத்தையும் உன் எதிரிகளின் உயிர்களையும் கேளாமல், நீ இதையே கேட்டு, நீதி வழங்குவதற்கு ஏற்ற ஞானத்தை உனக்குத் தர வேண்டும் என்று நீ மன்றாடினதால்,

12 உன் வார்த்தையின்படியே நாம் உனக்குச் செய்தோம். ஞானமும் அறிவும் உள்ள இதயத்தை உனக்குத் தந்தோம். இதில் உனக்கு இணையானவன் இதற்கு முன் இருந்ததுமில்லை; இதற்குப் பின் இருக்கப் போவதுமில்லை.

13 இதுவுமன்றி, நீ நம்மிடம் கேளாத செல்வத்தையும் புகழையும் நாம் உனக்குத் தந்தோம். இதற்கு முன் இருந்த அரசர்களில் ஒருவன் கூட உனக்கு இணையாய் இருந்ததில்லை.

14 அன்றியும் உன் தந்தை தாவீது நடந்தது போல் நீயும் நம் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்து நம்வழி நடப்பாயாகில், உனக்கு நீடிய ஆயுளை அருள்வோம்" என்றார்.

15 சாலமோன் கண்விழித்த போது, தான் கண்ட கனவின் பொருளைப் புரிந்து கொண்டார். உடனே யெருசலேமுக்கு வந்து ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தித் தம் ஊழியர் அனைவருக்கும் பெரும் விருந்து செய்தார்.

16 அக்காலத்தில் விலைமாதர் இருவர் அரசரிடம் வந்து அவருக்கு முன்பாக நின்றனர்.

17 அவர்களில் ஒருத்தி, "என் தலைவ, கேளும்; நானும் இப் பெண்ணும் ஒரே வீட்டில் குடியிருந்தோம்; நான் படுக்கையறையில் இவளருகில் இருந்த போது ஒரு பிள்ளையைப் பெற்றேன்.

18 நான் பிள்ளை பெற்ற மூன்றாம் நாளில் இவளும் ஒரு பிள்ளையைப் பெற்றாள். எங்கள் இருவரைத் தவிர வீட்டில் வேறு ஒருவரும் இல்லை.

19 இரவுத் தூக்கத்தில் இப் பெண் தன் பிள்ளையின் மேல் புரண்டு அமுக்கினதினாலே அது இறந்து போயிற்று.

20 அப்பொழுது உம் அடியாளாகிய நான் தூங்கிக் கொண்டிருக்க இவள் நள்ளிரவில் எழுந்து என் பக்கத்தில் கிடந்த என் பிள்ளையை எடுத்துத் தன் மடியில் கிடத்திக் கொண்டு, இறந்த தன் பிள்ளையை எடுத்து என்னருகே கிடத்தி விட்டாள்.

21 பிள்ளைக்குப் பால் கொடுக்கக் காலையில் நான் எழுந்த போது அது இறந்து கிடக்கக் கண்டேன். பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப்பார்த்த போது, அது நான் பெற்ற பிள்ளையன்று எனக் கண்டேன்" என்றாள்.

22 அதற்கு மற்ற பெண் மறுமொழியாக, "அப்படியன்று, உயிரோடு இருக்கிறது என் பிள்ளை; இறந்தது உன் பிள்ளைதான்" என்றாள். இவளோ, "இல்லை, ஏன் பொய் சொல்கிறாய்? இறந்தது உன் பிள்ளை; உயிரோடிருக்கிறது என் பிள்ளை தான்" என்றாள். இவ்வாறு அவர்கள் அரசர் முன் வாதாடிக் கொண்டிருந்தனர்.

23 அப்பொழுது அரசர், " உயிரோடு இருக்கிறது என் பிள்ளை; இறந்தது உன் பிள்ளை' என்று இவள் சொல்கிறாள். 'அப்படியன்று, இறந்தது உன் பிள்ளை; உயிரோடு இருக்கிறது என் பிள்ளை' என்று அவள் சொல்லுகிறாள்" என்று சொன்னார்.

24 பின்னர், "ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்" என்று அரசர் பணித்தார். அப்படியே ஒரு வாளை அரசரிடம் கொண்டு வந்தார்கள்.

25 அவர், "உயிரோடு இருக்கிற பிள்ளையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாகக் கொடுங்கள்" என்றார்.

26 அப்போது உயிரோடு இருந்த பிள்ளையின் தாய் தன் பிள்ளைக்காக வயிறு துடித்தவளாய் அரசரை நோக்கி, "வேண்டாம் தலைவ, உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும்" என்றாள். மற்றவள் அதற்கு மாறாக, "அது எனக்கும் வேண்டாம், அவளுக்கும் வேண்டாம். இரு கூறாக்குங்கள்" என்றாள்.

27 அப்பொழுது அரசர் முடிவாக, "உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லாமல் அவளுக்குக் கொடுத்து விடுங்கள்; அவள் தான் அதன் தாய்" என்றார்.

28 அரசர் அளித்த இத்தீர்ப்பை இஸ்ராயேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நீதி வழங்கத்தக்க ஞானத்தைக் கடவுள் அரசருக்கு அளித்திருக்கிறார் என்று கண்டு, அவருக்கு அஞ்சி நடந்தனர்.

அதிகாரம் 04

1 சாலமோன் அரசர் எல்லா இஸ்ராயேலரையும் ஆண்டு வந்தார்.

2 அவருடன் இருந்த அதிகரிகள் வருமாறு: சாதோக்கின் மகன் அசாரியாசு குருவாயிருந்தார்.

3 சிசாவின் புதல்வர்கள் எலியோரேபும், அகியாவும் எழுத்தர்களாய் இருந்தனர். அகிலுதின் மகன் யோசபாத் பதிவு செய்பவனாய் இருந்தான்.

4 யோயியாதாவின் மகன் பனாயாசு படைத்தலைவனாய் இருந்தான். சாதோக்கும் அபியாத்தாரும் குருக்களாய் இருந்தனர்.

5 குரு நாத்தானின் மகன் அசாரியாசு அரச அலுவலர்களுக்குத் தலைவனாய் இருந்தான். நாத்தானின் மகன் சாபுத் அரசரின் நண்பனாய் இருந்தான்.

6 ஐயிசார் அரண்மனைக்கும், அப்தாவின் மகன் அதோனிராம் கப்பங்களுக்கும் மேற்பார்வையாளராய் இருந்தனர்.

7 அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுக்க இஸ்ராயேல் நாடெங்கும் பன்னிரு கண்காணிப்பாளர்கள் சாலமோனுக்கு இருந்தனர். அவர்கள் ஆண்டு முழுவதற்கும் மாதத்திற்கும் வேண்டியவற்றை எல்லாம் அனுப்பி வைத்தனர்.

8 அவர்களின் பெயர்களாவன: பென்குர்- இவன் எபிராயீம் மலையில் இருந்தான்.

9 பெந்தேக்கர்- இவன் மாக்சசு, சலேபிம், பெத்சாமேசு, எலோன், பெத்தானான் நாடுகளில் இருந்தான்.

10 பெனேசேத்- இவன் அருபோத்தில் இருந்தான்; சொக்கோவும் எபேர் நாடு முழுவதும் இவனது கண்காணிப்பில் இருந்தன.

11 பேனாபினாதாப்- இவனுக்கு நெப்பாத்தோர் நாடு முழுவதும் சொந்தமாய் இருந்தது; சாலமோனின் மகள் தாபேத் இவன் மனைவி.

12 அகிலுதின் மகன் பானா- இவன் தானாக், மகேத்தோ, சர்தானுக்கு அருகிலுள்ள பெத்சான் நாடெல்லாவற்றிற்கும், பெத்சான் முதல் ஜெஸ்ராயேல் நாட்டுக்குக் கீழ் உள்ள எக்மானுக்கு எதிரில் இருக்கும் அபேல்மேயுலா வரையிலுள்ள நாடுகளுக்கும் ஆளுநனாய் இருந்தான்.

13 பென்கபேர்- இவன் ராமோத் காலாதில் இருந்தான்; காலாதிலுள்ள மனாசேயின் மகன் யாயீரின் ஊர்களுக்கும், சுற்றுமதில்களும் வெண்கலக் கதவுகளுமுள்ள பாசான் நாட்டின் அறுபது மாநகர்களுள்ள ஆர்கோப் நாட்டுக்கும் தலைவனாய் இருந்தான்.

14 அத்தோவின் மகன் அயினாதாப்- இவன் மனாயிம் நாட்டின் தலைவனாய் இருந்தான்.

15 அக்கிமாசு- இவன் நெப்தலியில் இருந்தான். சாலமோனின் மகள் பசேமாத் இவனுக்கு மனைவியாய் இருந்தாள்.

16 உசிவின் மகன் பவானா- இவன் ஆசேர், பாலோத் நாடுகளுக்கும்,

17 பருவேயின் மகன் யோசபாத் என்பவன் இசாக் காரின் நாடுகளுக்கும் ஆளுநராய் இருந்தனர்.

18 ஏலாவின் மகன் செமேயி பெஞ்சமின் நாடுகளுக்குக் கண்காணிப்பாளனாய் இருந்தான்.

19 ஊரியின் மகன் காபேர்- இவன் அமோறையரின் அரசன் சேகோனுக்கும், பாசானின் அரசன் ஓகூக்கும் இருந்த நாடாகிய காலாதில் உள்ள எல்லா நாடுகளுக்கும் தலைவனாய் இருந்தான்.

20 யூதா மக்களும் இஸ்ராயேலரும் கடற்கரை மணலைப் போல் பெருகி, உண்டும் குடித்தும் மகிழ்ந்திருந்தனர்.

21 நதி தொடங்கிப் பிலிஸ்தியர் நாடு வரை உள்ள எல்லா நாடுகளையும் சாலமோன் ஆண்டு வந்தார். அவர்கள் சாலமோனுக்குப் பரிசுகள் கொடுத்து, அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு அடிபணிந்து வந்தனர்.

22 நாள்தோறும் சாலமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு: முப்பது மரக்கால் மிருதுவான மாவும், அறுபது மரகால் சாதாரண மாவும்,

23 கலைமான்கள், சிறுமான்கள், கவரிமான்கள், கொழுத்த பறவைகள் முதலியவற்றைத் தவிர கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும், நூறு ஆடுகளுமாகும்.

24 ஏனெனில், நதிக்கு அப்புறத்திலுள்ள தாப்சா முதல் காசா வரை உள்ள எல்லா நாட்டையும் அவர் ஆண்டு வந்தார். இந்நாட்டரசர் அனைவரும் அவருக்கு அடிபணிந்து வந்தனர். சுற்றுப்புறம் எங்கனும் சமாதானம் நிலவிற்று.

25 சாலமோனின் வாழ்நாளெல்லாம், தான் முதல் பெர்சாபே வரையிலும், யூதாவிலும் இஸ்ராயேலிலும் இருந்த மக்கள் அச்சமின்றித் தத்தம் திராட்சைத் தோட்டத்திலும் அத்திமரச் சோலைகளிலும் நலமே வாழ்ந்து வந்தனர்.

26 தேர்க் குதிரைகளுக்கென நாற்பதினாயிரம் தொழுவங்களும், சேணங்களை வைப்பதற்கெனப் பன்னீராயிரம் கூடங்களும் சாலமோனுக்கு இருந்தன.

27 மேற்சொன்ன அரச கண்காணிப்பாளர்கள் குதிரைகளுக்குத் தீனி போட்டு வந்தனர்; அத்தோடு சாலமோன் அரசரின் பந்திக்குத் தேவையானவற்றையும் மிகுந்த கவனத்துடன் குறித்த காலத்தில் கொடுத்து வந்தனர்.

28 மேலும், இவர்கள் தத்தமக்குக் குறிக்கப்பட்டிருந்தபடி அரசர் செல்லுமிடமெல்லாம் குதிரைகளுக்கும் மற்றக் கால்நடைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமை, வைக்கோல் முதலியவற்றைக் கொண்டு வருவது வழக்கம்.

29 கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும், மேலான அறிவையும், கடற்கரை மணலைப் போல் பரந்த உள்ளத்தையும் கொடுத்திருந்தார்.

30 கீழை நாட்டார், எகிப்தியர் அனைவரின் ஞானத்தையும் விட சாலமோனின் ஞானம் சிறந்து விளங்கிற்று.

31 ஏசுராயித்தனாகிய எத்தானிலும், ஏமான், ஷல்கோல், தொர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட அவர் அறிவில் சிறந்து விளங்கினார். அண்டை நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று.

32 சாலமோன் மூவாயிரம் பழமொழிகளையும் ஆயிரத்தைந்து பாடல்களையும் எழுதினார்.

33 லீபானிலிருக்கும் கேதுரு மரமுதல் சுவர் மேல் முளைக்கிற ஈசோப்புப் புல் வரை உள்ள மரவகைகளைக் குறித்தும், மிருகங்கள், பறவைகள், ஊர்வன, மீன்கள் முதலியவற்றைக் குறித்தும் பேசினார்.

34 சாலமோனின் ஞானத்தைக் கேட்க எல்லா நாடுகளிலுமிருந்து மக்கள் வருவார்கள். அவருடைய ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற அரசர்கள் அனைவரும் அவரிடம் வருவார்கள்.

அதிகாரம் 05

1 சாலமோனை அவருடைய தந்தைக்குப் பின் அரசராக அபிஷுகம் செய்துள்ளார்கள்" என்று தீரின் அரசன் ஈராம் கேள்விப்பட்டுத் தன் ஊழியரை அவரிடம் அனுப்பினான். ஏனெனில் ஈராம் என்றும் தாவீதின் நண்பனாய் இருந்து வந்திருந்தான்.

2 அப்பொழுது சாலமோனும் ஈராமிடம் தம் ஆட்களை அனுப்பி,

3 என் தந்தை தாவீதின் எதிரிகளை ஆண்டவர் அவர் தம் தாள் பணியச் செய்யும் வரை சுற்றிலும் நடந்து வந்த போரின் காரணத்தால், அவர்தம் ஆண்டவராகிய கடவுளின் பெயருக்கு ஆலயம் எழுப்ப அவரால் முடியவில்லை என்று நீர் அறிவீர்.

4 இப்பொழுதோ என் கடவுளாகிய ஆண்டவர் சுற்றிலும் எனக்குச் சமாதானத்தைத் தந்துள்ளார். எனக்கு எதிரியுமில்லை; இடையூறுமில்லை.

5 ஆகையால் 'உனக்குப்பின், உன் அரியணையில் நாம் அமர்த்தும் உன் மகனே நமது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவான்' என்று ஆண்டவர் என் தந்தை தாவீதுக்குச் சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஆலயம் எழுப்ப எண்ணியுள்ளளேன்.

6 ஆதலால், லீபானின் கேதுரு மரங்களை எனக்கென்று வெட்டிவர உம் ஊழியர்களுக்குக் கட்டளையிடும்; சீதோனியரைப் போல் மரம் வெட்ட அறிந்தவர்கள் என் குடிகளுள் ஒருவரும் இல்லை என்று உமக்குத் தெரியுமே. ஆதலால் என் ஊழியர் உம் ஊழியரோடு வேலை செய்வார்கள்; நீர் கேட்கும் கூலியை உம் ஊழியர்களுக்குக் கொடுப்பேன்" என்று சொல்லச் சொன்னார்.

7 ஈராம் சாலமோனின் வார்த்தைகளைக் கேட்ட போது, மிகவும் மகிழ்ச்சியுற்று, "இத்தனை ஏராள மக்களை ஆளும்படி தாவீதுக்கு ஞானமுள்ள ஒரு மகனைக் கொடுத்த ஆண்டவராகிய கடவுள் இன்று வாழ்த்தப் பெறுவாராக" என்று சொன்னான்.

8 மேலும் சாலமோனிடம் ஆட்களை அனுப்பி, "நீர் எனக்குச் சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்; கேதுரு மரங்களைக் குறித்தும், சப்பீன் மரங்களைக் குறித்தும் உமது விருப்பப்படியே செய்வேன்.

9 என் வேலைக்காரர் லீபானிலிருந்து அவற்றைக் கொண்டு வந்து கடலோரத்தில் சேர்ப்பார்கள்; அங்கே நான் அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் குறிக்கும் இடத்திற்குக் கடல் வழியாய் அனுப்பி அவற்றைக் கரையேற்றுவேன். அவற்றை நீர் பெற்றுக் கொண்டு என் வீட்டாருக்குத் தேவையான உணவுப் பொருட்களை நீர் எனக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்று சொல்லி அனுப்பினான்.

10 அப்படியே ஈராம் சாலமோனுக்கு வேண்டிய மட்டும் கேதுரு மரங்களையும் சப்பீன் மரங்களையும் கொடுத்து வந்தான்.

11 சாலமோனோ ஈராமின் அரண்மனைக்கு உணவுக்காக இருபதாயிரம் மரக்கால் கோதுமையும் இருபது மரக்கால் சுத்தமான ஒலிவ எண்ணெயும் கொடுத்தார். இவ்வாறு சாலமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்து வந்தார்.

12 ஆண்டவரும் தாம் சாலமோனுக்கு வாக்களித்திருந்தபடி அவருக்கு ஞானத்தைத் தந்தருளினார். ஈராமுக்கும் சாலமோனுக்கும் இடையே அமைதி நிலவிற்று; இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

13 சாலமோன் அரசர் இஸ்ராயேலர் அனைவரிலும் வேலை செய்வதற்காக முப்பதாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார்.

14 ஒவ்வொரு மாதமும் அவர்களுள் பத்தாயிரம் பேரை மாற்றி மாற்றி லீபானுக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு அவர்கள் இரண்டு மாதம் வீட்டில் இருக்க வாய்ப்புக் கிட்டியது. அதோனிராம் அக்கூலியாட்களுக்குக் கண்காணிப்பாளனாய் இருந்தான்.

15 சாலமோனிடம் சுமை சுமப்பவர்கள் எழுபதாயிரம் பேரும், மலையில் கல் வெட்டுகிறவர்கள் எண்பதாயிரம் பேரும் இருந்தனர்.

16 இவர்களைத் தவிர ஒவ்வொரு வேலையையும் கவனிக்க மூவாயிரம் மேற்பார்வையாளர்கள் இருந்தனர்; மக்களையும் வேலையாட்களையும் கவனித்து வர முந்நூறு ஆளுநரும் இருந்தனர்.

17 ஆலயத்துக்கு அடித்தளம் இட மிக விலையுர்ந்த கற்களைக் கொண்டு வந்து அவற்றைச் சீர்படுத்த அவர் கட்டளையிட்டார்.

18 ஆலயத்தைக் கட்டுவதற்காக சாலமோனின் கொத்தர்களும், ஈராமின் கொத்தர்களும் கற்களைச் செதுக்க, கிப்லியர் மரங்களையும் கற்களையும் தயார்படுத்தினார்கள்.

அதிகாரம் 06

1 இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்றெண்பதாம் ஆண்டிலும், சாலமோன் இஸ்ராயேலின் அரசரான நான்காம் ஆண்டு சியோ மாதமாகிய இரண்டாவது மாதத்திலும் ஆண்டவருடைய ஆலய வேலை ஆரம்பமானது.

2 சாலமோன் அரசர் கட்டின ஆலயத்தின் நீளம் அறுபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் முப்பது முழம்.

3 ஆலய முன்மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபது முழ நீளமும், பத்து முழ அகலமும் கொண்டிருந்தது.

4 அவர் ஆலயத்திற்கு வளைவான சன்னல்களை அமைத்தார்.

5 கோயிலைச் சுற்றிலும் கோயிலுக்கும் கடவுள் சந்நிதிக்கும் அருகில் அடைப்பு மதிலின் மேல் அறைகளையும், கோயிலைச் சுற்றித் தாழ்வாரங்களையும் கட்டினார்.

6 முதலடுக்கு அறைகள் ஐந்து முழ அகலமும், இரண்டாமடுக்கு அறைகள் ஆறு முழ அகலமும், மூன்றாமடுக்கு அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அவை கோயிலின் சுவர்களிலே தாங்காத படி அவர் சுற்றிலும் வெளிப்புறமாக உத்திரங்களை அமைத்தார்.

7 செதுக்கிச் சீர்படுத்தப்பெற்ற கற்களால் கோயில் கட்டப்பட்டது. ஆகையால், அது கட்டப்பட்ட போது, சுத்தியல்கள், கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அங்கே கேட்கப்படவில்லை.

8 இரண்டாம் மாடிக்கு போகிற வாயில் கோயிலின் வலப்புறம் இருந்தது. சுழற்படிகளால் இரண்டாம் மாடிக்கும், இரண்டாம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிக்கும் ஏற வசதி அமைக்கப் பெற்றிருந்தது.

9 இவ்விதமாய் அவர் கோயிலைக் கட்டிக் கேதுரு மரப்பலகைகளால் அதை மச்சுப்பாவி முடித்தார்.

10 அவர் ஐந்து முழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின் மேல் எங்கும் கட்டுவித்தார். அவை கேதுரு மரங்களால் மூடப்பட்டிருந்தன.

11 அப்போது கடவுள் சாலமோனுடன் உரையாடி அவரை நோக்கி,

12 நீ நம் கட்டளைகளின்படி ஒழுகி, நம் தீர்ப்புக்களை நிறைவேற்றி, நம் கற்பனைகளின்படி அணுப்பிசகாது நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோயிலைக் குறித்து நாம் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன நமது வார்த்தையை உன்னில் நிறைவேற்றுவோம்.

13 இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழ்ந்து நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் கைவிடாதிருப்போம்" என்றார்.

14 அப்படியே சாலமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தார்.

15 ஆலயச் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் தொடங்கி மேல் மச்சு வரை கேதுருப் பலகைகளால் மூடினார். மேலும் கோயிலின் கீழ்த்தளத்தைச் சப்பீன் பலகைகளால் பாவினார்.

16 ஆனால் ஆலயத்தின் பின்புறத்தில், கீழ்த்தளம் முதல் மேல் தளம் வரை இருபது முழ உயரத்துக்குக் கேதுரு மரப் பலகைகளால் மூடப்பட்ட ஓர் இடத்தை அமைத்துத் திருத்தலத்தின் உட்புறத்தை அதிபரிசுத்த தலமாக ஏற்படுத்தினார்.

17 அவ்விடத்திற்கு முன்னிருந்த ஆலய நீளம் நாற்பது முழம்.

18 இப்படி ஆலயத்தின் உட்புறமெங்கும் கேதுரு மரப்பலகைகளால் மூடியிருந்ததும் தவிர, பலகைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் இடங்கள் சிற்ப சித்திரக் கலைகளால் அழகு செய்யப் பட்டிருந்தன. இப்படியே பார்வைக்கு ஒரு கல்லாவது காணப்படாமல் கோயில் முழுவதும் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது.

19 ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை வைக்க அவர் ஆலயத்தின் உட்புறத்தில் திருத்தலத்தை அமைத்திருந்தார்.

20 திருத்தலம் மட்டும் இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது; அதைப் பசும் பொன்னால் மூடினார்; பலி பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார்.

21 திருத்தலத்திற்கு முன் இருந்த ஆலயத்தையும் பசும் பொன்னால் மூடி, பொன் அணிகள் தொடுக்கப்பட்ட தகடுகளைத் தொங்க விட்டார்.

22 இப்படி ஆலயம் முழுவதும் பொன்னால் மூடப்படாத இடம் ஒன்றும் இல்லை. திருத்தலத்திற்கு முன் இருந்த பலிபீடம் முழுவதையும் பொன்னால் மூடினார்.

23 அவர் திருத்தலத்தில் ஒலிவ மரங்களால் பத்து முழ உயரமான இரு கெருபீம்களைச் செய்து வைத்தார்.

24 கெருபீம்களின் இறக்கைகளுடைய நீளம் ஐந்து முழம்; இறக்கைகளின் முனைகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம். மற்றக் கெருபீமும் பத்து முழம்.

25 இரு கெருபீம்களும் ஒரே அளவாயும், ஒரே வேலைப்பாடுடையனவாயும் இருந்தன.

26 அதாவது ஒரு கெருபீமும் அதே அளவாய் இருந்தது.

27 அவர் அக்கெருபீம்களை உள் ஆலயத்தின் நடுவே வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்திருந்ததினால், ஒரு கெருபீமின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரிலும், மற்றக் கெருபீமின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியாயிருந்தன. ஆலயத்தின் நடுவில் அவற்றின் இறக்கைகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன.

28 அவர் அக்கெருபீம்களையும் பொன்னால் மூடினார்.

29 ஆலயத்தின் சுவர்கள் முழுவதும், சுற்றிலும் தொங்கிக்கொண்டிருந்த கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளால் அழகு செய்யப்பட்டிருந்தன.

30 ஆலயத்துத் தளங்களையும் அவர் உள்ளும் புறமும் பொன்னால் மூடினார்.

31 திருத்தலத்தின் வாயிலுக்கு ஒலிவ மரங்களால் கதவுகளையும், ஐந்து கோணமுள்ள தூண்களையும் செய்துவைத்தார்.

32 ஒலிவ மரத்தாலான அந்த இரட்டைக் கதவுகளைக் கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளாலும் அழகு செய்து இவை அனைத்தையும் பொன்னால் அலங்கரித்தார்.

33 அவர் ஆலயத்தின் வாயிலுக்கும் ஒலிவ மரத்தினால் நான்கு கோணமுள்ள தூண்களை நிறுத்தினர்.

34 மேலும் அதன் பக்கத்தில் சப்பீன் மரத்தால் இரு கதவுகளைச் செய்து வைத்தார். ஒவ்வொரு கதவும் இரண்டு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது; எனவே, கதவுகளைத் திறக்கும் போது இரு மடிப்புப் பலகைகள் ஒன்றோடொன்று சேர்ந்தே திறக்கப்படும்.

35 அவற்றைக் கெருபீம்களும் ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைப்பாடுகளால் அழகு செய்து, அவற்றின் அளவுப்படி அவற்றைப் பொன்னால் அலங்கரித்தார்.

36 உள்முற்றத்தை மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும் ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் அமைத்தார்.

37 நான்காம் ஆண்டு சியோ மாதத்தில் ஆண்டவருடைய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

38 பதினோராம் ஆண்டு பூல் என்ற எட்டாம் மாதத்தில் ஆலயத்தின் எல்லா வேலைகளும் முற்றுப் பெற்றன. அதற்குத் தேவையான எல்லாத் தட்டுமுட்டுச் சாமான்களும் தயாராகின. அவர் அதைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.

அதிகாரம் 07

1 சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்கப் பதின் மூன்று ஆண்டுகள் ஆயின.

2 அவர் 'லீபானின் வனம்' என்ற மாளிகையையும் கட்டினார். அது நூறு முழ நீளமும், ஐம்பது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாய் இருந்தது. மேலும் அதற்குக் கேதுரு மரத் தூண்களின் நடுவே நான்கு நடைபாதைகள் இருந்தன. ஏனெனில் அவர் கேதுரு மரங்களைத் தூண்களாக வெட்டியிருந்தார்.

3 ஒவ்வொரு வரிசையிலும் பதினைந்து தூண்கள் இருந்தன. அந்த நாற்பத்தைந்து தூண்களின் மேல் அமைந்திருந்த வளைவு கேதுரு மரங்களாலேயே மூடப்பட்டிருந்தது.

4 அத்தூண்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்ததுமன்றி,

5 ஒரே அளவு இடைவெளியில் நாட்டப்பட்டிருந்ததால் அவை ஒன்றுக்கொன்று நேராக இருந்தன. அத்தூண்களின் மேல் ஒரே அளவுள்ள சதுர உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

6 அவர் ஐம்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமான தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தையும் கட்டினார். இப்பெரிய மண்டபத்திற்கு எதிரில் வேறு தூண்களை நிறுத்தி, அத்தூண்களின் மேல் உத்திரங்களிட்டு வேறொரு மண்டபத்தையும் கட்டினார்.

7 நீதியிருக்கை அமைந்திருக்கிற அரியணை மண்டபத்தையும் கட்டினார். அதைக் கீழ்த்தளம் முதல் மேல்தளம் வரை கேதுருப் பலகைகளால் பாவினார்.

8 அம்மண்டபத்தின் நடுவே அதே மாதிரியாகச் செய்யப்பட்ட ஒரு நீதியிருக்கை மண்டபம் இருந்தது. சாலமோன் தாம் மணந்து கொண்ட பாரவோனின் மகளுக்கும் அம்மண்டபத்தைப் போன்று வேறொரு மண்டபத்தைக் கட்டினார்.

9 இக்கட்டடங்கள் எல்லாம், உள்ளும் புறமும், தரை முதல் சுவரின் உச்சி வரை, வெளியே அமைந்த பெரிய முற்றம் வரைக்கும், ஒரே அளவுப்படி செதுக்கப் பெற்ற விலையேறப் பெற்ற கற்களால் கட்டப்பட்டிருந்தன.

10 அடித்தளமோ பத்து முழமும் எட்டு முழமுமான விலையேறப் பெற்ற பெரிய கற்களால் கட்டப்பட்டிருந்தது.

11 அதன் மேல் ஒரே அளவுள்ள விலையேறப்பெற்ற கற்களும் போடப்பட்டிருந்தன. கேதுரு பலகைகளும் அதே அளவின்படி அறுக்கப்பட்டிருந்தன.

12 பெரிய முற்றம் வட்ட வடிவமாய் இருந்தது. அதில் மூன்றுவரிசை செதுக்கப் பெற்ற கற்றூண்களும், ஒரு வரிசை இழைத்த கேதுரு மரத்தூண்களும் நாட்டப்பட்டிருந்தன. ஆண்டவருடைய ஆலயத்தின் உள் முற்றமும் அதன் முன் மண்டபமும் அவ்வாறே அமைக்கப் பெற்றிருந்தன.

13 சாலமோன் அரசர் தீரிலிருந்து ஈராம் என்பவனை வரவழைத்திருந்தார்.

14 இவன் நெப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு விதவையின் மகன். இவன் தந்தை தீர் நகரத்தான். இவன் பித்தளை வேலையில் கைதேர்ந்தவன். எல்லாவிதப் பித்தளை வேலையையும் செய்யத்தக்க மதி நுட்பம் வாய்ந்தவன். ஈராம் சாலமோன் அரசரிடம் வந்து அவர் சொன்ன வேலையை எல்லாம் செய்தான்.

15 இவன் இரண்டு பித்தளைத் தூண்களைச் செய்தான். ஒவ்வொரு தூணும் பதினெட்டு முழ உயரமும், பன்னிரண்டு முழச் சுற்றளவும் உள்ளதாய் இருந்தது.

16 அத்தூண்களின் உச்சியில் வைக்கப் பித்தளையினால் வார்க்கப்பட்ட இரண்டு தூண் முகடுகளைச் செய்தான். ஒவ்வொரு முகடும் ஐந்து முழ உயரமாய் இருந்தது.

17 அவ்விரு பித்தளை முகடுகளுக்கும் வலைபோன்ற பின்னல்களும், சங்கிலி போன்ற தொங்கல்களும், முகட்டிற்கு ஏழாக அமைந்திருந்தன.

18 தூண்களைச் செய்த விதமாவது: தூண்களின் உச்சியின் மேலுள்ள முகடுகளை மூடும்படிக்கு முகடு ஒவ்வொன்றிலும் பின்னலின் மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதுளம் பழங்களை அமைத்தான்.

19 மண்டபத்தின் முன்புறத்திலிருக்கும் தூண்களுடைய உச்சியின் மேலுள்ள முகடுகளோ லீலிமலர் வேலைப்பாடுடன் நான்கு முழ உயரமுடையனவாய் இருந்தன.

20 மேலும், இரண்டு தூண்களின் மேலுள்ள முகடுகளின் பின்னல்களுக்கு அருகே தூண்களின் அளவுக்குத் தகுந்தபடி வேறு முகடுகளும் மேலே வைக்கப்பட்டிருந்தன. இவ்விரண்டாம் வகை முகடுகளைச் சுற்றிலும் இரண்டு வரிசையாய் இருநூறு மாதுளம் பழங்கள் அமைக்கப்பட்டன.

21 இந்த இரண்டு தூண்களை ஆலய மண்டபத்தில் நாட்டினான். அவன் வலப்புறத்தில் நாட்டின தூணுக்கு ஜாக்கின் என்றும், இடப்புறத்தில் நாட்டின தூணுக்குப் போசு என்றும் பெயரிட்டான்.

22 தூண்களின் முகட்டில் லீலி மலரால் செய்யப்பட்ட வேலைப்பாட்டை வைத்தான். இவ்விதமாய்த் தூண்களின் வேலை முடிந்தது.

23 அவன் வார்ப்புக் கடல் என்ற வட்டமான தொட்டியையும் கட்டினான். அதன் அகலம் பத்து முழம், உயரம் ஐந்து முழம், சுற்றளவு முப்பது முழம்.

24 அதன் கீழே சுற்றிலும் பத்து முழத்திற்குக் கொத்து வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொட்டி வார்க்கப்பட்ட போது பல இரு வரிசைச் சித்திரமும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தன.

25 அக்கடல் தொட்டி பன்னிரு எருதுகளின் மேல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் மூன்று வடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும், மூன்று கிழக்கையும், நோக்கி இருந்தன. கடல் தொட்டி எருதுகளின் மேலேயும், இவற்றின் பின்புறங்கள் அதற்கடியிலும் இருந்தன.

26 தொட்டியின் கனம் மூன்று அங்குலமும், அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும், மலர்ந்த லீலிமலரின் இதழைப்போலவும் இருந்தன. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.

27 அது தவிர ஈராம் பத்து வெண்கலச் சதுரப் பாதங்களையும் செய்தான். ஒவ்வொரு பாதமும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமுமாய் இருந்தது.

28 அந்தப் பாதங்கள் வலை வேலைப்பாட்டால் இணைக்கப்பட்டு, இணைப்புக்களில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

29 வளையம் முதலிய சிற்ப அணிகளுக்குள் சிங்கங்களும் காளைகளும் கெருபீம்களும் வைக்கப்பட்டிருந்தன. சந்துகளின் மேலும் கீழும் அவ்விதமான சிங்கங்களும் காளைகளும், நீர்த்தாரைபோல் தொங்கிக் கொண்டிருந்த பித்தளைத் தகடுகளும் இருந்தன.

30 ஒவ்வொரு பாதத்துக்கும் நான்கு பித்தளை அச்சுகளும் உருளைகளும் இருந்தன. தொட்டியின் கீழ் நான்கு கோடிகளுக்கும் கொப்பரையைத் தாங்க வார்க்கப்பட்ட புயங்களின் நான்கு காதுகளும் ஒன்றுக்கொன்று நேராய் இருந்தன.

31 பாதத்தின்மேல் தொட்டி நிலைகொள்ள ஒரு பள்ளம் இருந்தது. வெளியேயிருந்து பார்த்தால் அது ஒரு முழ உயரமான வடிவுபோல் இருந்தது. தூண்களின் கோணங்களுக்குள் பல சிற்பங்களும் செய்யப்பட்டிருந்தன. இரு தூண்களின் இடைவெளிகளோ வட்டமாய் இல்லாது சதுரமாய் இருந்தன.

32 பாதத்தின் நான்கு கோணங்களோடு சேர்ந்த நான்கு உருளைகள் பாதத்தின் கீழே ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். ஒவ்வொன்றும் ஒன்றரை முழ உயரம்.

33 உருளைகளின் வேலைப்பாடு தேர் உருளைகளின் வேலைப்பாட்டை ஒத்திருந்தது. அவற்றின் அச்சுகளும் சுற்று வட்டங்களும் சுற்றுக்கட்டைகளும் குடங்களும் வார்க்கப்பட்டிருந்தன.

34 பாதத்தினுடைய நான்கு மூலைகளிலும் தாங்கும் கால்கள் பாதத்திலிருந்து புறப்படுகிற தனி வார்ப்பாக இருந்தது பாதத்தோடு இணைக்கப்பட்டிருந்தன.

35 ஒவ்வொரு பாதத்தின் தலைப்பிலும் அரை முழ உயரமுள்ள வளைவான வரம்பு இருந்தது. அதன் மேற்பகுதி தொட்டி பதியத்தக்க விதமாயும், பலவித கொத்து வேலைபாட்டுச் சிற்பங்களால் அமைந்ததாயும் இருந்தது. இவை பாதத்தோடு சேர்ந்த ஒரே வார்ப்பாய் இருந்தன.

36 அவன் வெண்கலங்களின் இடையிலும், கோணங்களின் இடையிலும் கெருபீம்கள், சிங்கங்கள், பேரீச்சஞ் சோலைகளுடைய சிற்பங்களைச் செதுக்கினான். ஆனால் செதுக்கப்பட்ட இவை எல்லாம் சிற்பம் போலில்லாமல், உயிருடன் நிற்பது போல, சுற்றிலும் உருவங்கள் பதிக்கப்பட்டனவாயிருந்தன.

37 இப்படியாக ஈராம் அந்தப் பத்துப் பாதங்களையும் செய்தான். அவை எல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரே விதக் கொத்து வேலைப்பாடுமாயிருந்தன.

38 அவன் பத்து வெண்கலத் தொட்டிகளையும் செய்தான். ஒவ்வொரு தொட்டியும் நாற்பது 'பாட்' என்ற குடம் கொள்ளும். ஒவ்வொரு தொட்டியும் நான்கு முழ அகலமாய் இருந்தது. அந்தப் பத்தும் ஒவ்வொரு பாதத்தின்மேல் வைக்கப்பட்டிருந்தன.

39 அவன் ஐந்து பாதங்களை ஆலயத்தின் வலப்புறத்திலும், ஐந்து பாதங்களை ஆலயத்தின் இடப்புறத்திலும் வைத்தான். ஆனால் கடல் என்ற தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலப்புறத்திலே தெற்கு நோக்கி வைத்தான்.

40 ஈராம் கொப்பரைகளையும் அண்டாக்களையும் கலயங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் ஆண்டவருடைய ஆலயத்துக்காகச் சாலமோன் அரசர் செய்யச் சொல்லியிருந்த மற்ற வேலைகளையும் செய்து முடித்தான்.

41 அவையாவன: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின் மேலிருக்கும் சிற்ப அணியான கிண்ணங்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கும் இரண்டு வலைப்பின்னல்களும்,

42 தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கிண்ணங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் அமைத்த இரண்டு வரிசை மாதுளம் பழங்களும் ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதுளம் பழங்களும், பத்து பாதங்களும்,

43 பாதங்களின் மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,

44 ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற பன்னிரு எருதுகளும்,

45 கொப்பரைகளும் அண்டாக்களும் கலயங்களுமாம். ஆண்டவருடைய ஆலயத்துக்காகச் சாலமோன் அரசருக்கு ஈராம் செய்த தட்டுமுட்டுகள் எல்லாம் சுத்தமான பித்தளையால் செய்யப்பட்டிருந்தன.

46 யோர்தானுக்கடுத்த சமவெளியில் சொக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவேயுள்ள களிமண் தரையில் அரசர் இவற்றை வார்ப்பித்தார்.

47 இந்த தட்டு முட்டுகள் எல்லாவற்றையும் சாலமோன் ஆலயத்தில் வைத்தார். இந்தத் தட்டு முட்டுகள் மிக அதிகமாய் இருந்தமையால், அவற்றின் பித்தளையின் எடை கணிக்கப்படவில்லை.

48 மேலும் சாலமோன், ஆண்டவடைய ஆலய ஊழியத்திற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்தார். அதாவது பொன் பீடத்தையும், சமூகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேசையையும்,

49 திருத்தலத்திற்கு முன்பாகப் பசும்பொன் விளக்குத் தண்டுகள் வலப்புறம் ஐந்தையும், இடப்புறம் ஐந்தையும், அவற்றின் மேல் பொன்னால் லீலிமலர் விளக்குகளையும், பொன் குறடுகளையும் செய்து வைத்தார்.

50 பசும்பொன் குடங்களையும் கத்திரிகளையும் கலசங்களையும் கிண்ணங்களையும் தூபக்கலசங்களையும், மகா பரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான முளைகளையும், ஆலய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும் செய்தார்.

51 இவ்விதமாய்ச் சாலமோன் அரசர் ஆண்டவருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தன. அப்பொழுது சாலமோன் தம் தந்தை தாவீது பரிசுத்த காணிக்கையாக நேர்ந்து கொண்ட வெள்ளியையும், பொன்னையும் தட்டுமுட்டுகளையும் கொண்டுவந்து ஆண்டவருடைய ஆலயத்தின் கருவூலங்களில் வைத்தார்.

அதிகாரம் 08

1 அப்பொழுது கடவுளுடைய உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டு வரும்படி இஸ்ராயேலின் மூப்பரும் இஸ்ராயேலின் கோத்திரத் தலைவர்களும் குடும்பத் தலைவர்களும் யெருசலேமிற்கு சாலமோன் அரசரைக் காண வந்தனர்.

2 இஸ்ராயேலர் அனைவரும் ஏழாம் மாதமாகிய எத்தானீம் மாதப் பண்டிகையின் போது சாலமோன் அரசரிடம் வந்தனர்.

3 இஸ்ராயேலின் மூப்பர் அனைவரும் வந்தவுடன் குருக்கள் ஆண்டவருடைய பேழையை எடுத்து,

4 ஆண்டவருடைய பேழையையும் வாக்குறுதியின் பேழையையும் திருத்தலத்தின் பரிசுத்த தட்டு முட்டுகள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் தூக்கிச் சென்றனர்.

5 சாலமோன் அரசரும் அவரோடு இஸ்ராயேல் மக்கள் அனைவரும் பேழைக்கு முன்பாக நடந்து சென்றனர். கணக்கற்ற ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டனர்.

6 அப்படியே குருக்கள் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை ஆலயத்தின் திருத்தலமாகிய மகா பரிசுத்த இடத்தில் கெருபீம்களுடைய இறக்கைகளின் கீழ் கொண்டுவந்து வைத்தனர்.

7 அக்கெருபீம்கள் பேழையிருக்கும் இடத்தில் தங்கள் இரு இறக்கைகளையும் விரித்து, மேலிருந்து பேழையையும் அதன் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன.

8 திருத்தலத்திற்கு முன்னால் பரிசுத்த இடத்தில் காணப்படக்கூடிய தண்டுகள் இப்போது வெளியே காணப்படவில்லை. அவை இன்று வரை அங்கே தான் இருக்கின்றன.

9 இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்ட பின் கடவுள் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட போது, மோயீசன் ஒரேபில் அப்பேழையில் வைத்த இரு கற்பலகைகளேயன்றி அதில் வேறொன்றும் இல்லை.

10 குருக்கள் பரிசுத்த இடத்திலிருந்து புறப்படவே ஒரு மேகம் கடவுளுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

11 அம் மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்கக் கூடாமல் போயிற்று. ஆண்டவருடைய மாட்சி ஆண்டவருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

12 அப்பொழுது சாலமோன், "நாம் மேகத்தில் தங்கி வாழ்வோம்' என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

13 ஆண்டவரே, நீர் தங்கி வாழத் தகுந்த வீடும், நீர் என்றென்றும் இருக்கத்தக்க அரியணையுமான ஆலயத்தை நான் கட்டியுள்ளேன்" என்று சொன்னார்.

14 பின்னர் இஸ்ராயேல் மக்கள் பக்கம் திரும்பி அவர்களை ஆசீர்வதித்தார். அவர்கள் எல்லாரும் அவ்விடத்திலேயே நின்றனர்.

15 சாலமோன் சொன்னதாவது: "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவர் என் தந்தை தாவீதுக்குத் தம் வாயினால் சொல்லியிருந்ததைத் தம் கைகளினால் நிறைவேற்றியுள்ளார்.

16 அவர், 'நம் மக்களாகிய இஸ்ராயேலை நாம் எகிப்திலிருந்து மீட்ட நாள்முதல், நமது பெயர் விளங்கும்படி ஓர் ஆலயம் எழுப்புவதற்காக இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள ஒரு நகரை நாம் தேர்ந்து கொள்ளாமல், நம் இஸ்ராயேல் மக்கள்மேல் தலைவனாய் இருக்கும்படி தாவீதையே தேர்ந்துகொண்டோம்' என்றார்.

17 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயருக்குக் கோயிலைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் என் தந்தை தாவீதுக்கு இருந்தது.

18 ஆயினும் ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, 'நம் பெயருக்கு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று நீ உன் மனத்தில் விரும்பினதும், அதுபற்றி யோசித்ததும் நல்ல காரியந்தான்.

19 ஆயினும் நீ அவ்வாலயத்தைக் கட்டப் போகிறதில்லை. உன்னிலிருந்து உதிக்கும் உன் மகனே நம் பெயருக்கு அவ்வாலயத்தைக் கட்டுவான்' என்றார்.

20 இப்பொழுது ஆண்டவர் தாம் கூறிய வார்த்தையை நிறைவேற்றினார். ஆண்டவர் சொன்னபடியே நான் என் தந்தை தாவீதின் வழித்தோன்றலாய் இஸ்ராயேலின் அரியணையில் வீற்றிருந்து இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயருக்கு ஆலயத்தைக் கட்டினேன்.

21 ஆண்டவர் நம் முன்னோர்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டு வந்த போது அவர்களோடு அவர் செய்து கொண்ட உடன்படிக்கை பேழைக்குள் இருக்கின்றதே; அதற்காக ஓர் இடத்தை ஏற்படுத்தினேன்' என்றார்.

22 பின்பு சாலமோன் ஆண்டவருடைய பீடத்துக்கு முன் இஸ்ராயேல் சபையார் முன்னிலையில் நின்று வானத்தை நோக்கித் தம் கைகளை விரித்து சொன்னதாவது:

23 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உமக்கு இணையான கடவுள் இல்லை. உம் திருமுன் தங்கள் முழு இதயத்தோடும் நடந்த உம் அடியார்களோடு நீர் உடன்படிக்கை செய்து உமது இரக்கத்தையும் அவர்களுக்குக் காட்டி வருகிறீர்.

24 நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காத்தருளினீர். அதை உம் வாயினால் சொல்லி உம் கைகளினால் நிறைவேற்றினீர்.

25 அதற்கு இந்நாளே சாட்சி. இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதை நோக்கி, 'நீ நமக்கு முன்பாக நடந்ததுபோல் உன் புதல்வரும் நமக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால் இஸ்ராயேலின் அரியணையில் வீற்றிருக்கும் உரிமையாளன் நமக்கு முன்பாக உனக்கு இல்லாமல் போவதில்லை' என்று சொன்னதை இப்பொழுது நிறைவேற்றும்.

26 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு நீர் சொன்ன உமது வார்த்தையை உறுதிப்படுத்தியருளும்.

27 கடவுள் உண்மையில் பூமியில் தங்கி வாழ்வாரா? வானகங்களும் வானாதி வானகங்களும் உம்மைக் கொள்ள இயலாதென்றால், நான் கட்டியுள்ள இவ்வாலயம் எம்மாத்திரம்!

28 என் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியான் இன்று உம் திருமுன் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு உம் அடியானுடைய மன்றாட்டுக்கும் வேண்டுதலுக்கும் இரங்கியருளும்.

29 உம் அடியான் இவ்விடத்தில் செய்யும் விண்ணப்பத்தை நீர் கேட்டருளும்படி, 'நம்முடைய பெயர் இவ்விடத்தில் விளங்கும்' என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மீது இரவும் பகலும் உமது திருக்கண் நோக்கியருளும்.

30 உம் அடியானும், இவ்விடத்தில் விண்ணப்பம் செய்யவிருக்கிற உம் மக்கள் இஸ்ராயேலரும் எவ்வித விண்ணப்பத்தைக் கொண்டுவந்தாலும், அவர்களுக்குச் செவிமடுத்தருளும். விண்ணகமாகிய உமது உறைவிடத்தில் அதை நீர் கேட்பீராக; கேட்டு, அவர்களை மன்னிப்பீராக.

31 ஒருவன் தன் அயலானுக்குத் தீங்கு இழைத்ததன் பொருட்டு அந்த அயலான் அவன் மீதுபழி சுமத்தி, ஆலயப் பீடத்தின் முன் அவன் ஆணையிடும்படி செய்தால்,

32 அப்போது நீர் விண்ணில் அவனது வழக்கை விசாரித்து, நீதி வழங்கி, அநியாயக்காரனைக் கண்டித்து. அவனது கெட்ட நடத்தையை அவன் தலையின்மேல் சுமத்தி, அவனைக் குற்றவாளியாகத் தீர்த்து, நீதிமானுக்கு அவனது நீதிக்குத் தகுந்தபடி அவனை நீதிமானாக்கி, இவ்வாறு உம் அடியாருக்கு நீதி வழங்குவீராக.

33 உம் மக்களாகிய இஸ்ராயேலர் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததினால் எதிரிகளுக்குப் புறமுதுகு காட்டி ஓடி, பிறகு மனம் வருந்தி உம்மிடம் திரும்பி, உம் பெயரை அறிக்கையிட்டு இவ்வாலயத்துக்கு முன்பாக வந்து, உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,

34 விண்ணிலிருந்து நீர் அவர்களது மன்றாட்டைக் கேட்டு, உம் மக்களாகிய இஸ்ராயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் முன்னோர்க்கு நீர் கொடுத்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பி வரச்செய்வீராக.

35 அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததினால் வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும் போது, அவர்கள் இவ்விடத்திற்கு வந்து மன்றாடி உமது பெயர் விளங்கத் தவம் புரிந்து தாங்கள் படும் துன்பத்தின் பொருட்டுத் தங்கள் பாவங்களை விட்டு மனம் திரும்பினால்,

36 விண்ணிலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் அடியாரும் உம் மக்களுமாகிய இஸ்ராயேலர் செய்த பாவத்தை மன்னித்தருளும். அவர்கள் நடக்க வேண்டிய நல்வழியை அவர்களுக்குக் காட்டி நீர் உம் மக்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த உமது நாட்டில் மழை பொழியச் செய்தருளும்.

37 நாட்டில் பஞ்சம், கொள்ளைநோய், வறட்சி, சாவி, வெட்டுகிளி, பூஞ்சுணம் உண்டாகிற போதும், அவர்களின் எதிரிகள் நகர்களை முற்றுகையிட்டு அவர்களைத் துன்புறுத்தும் போதும், கொள்ளை நோயாவது வேறெந்த நோயாவது வருகிற போதும்,

38 உம் மக்கள் இஸ்ராயேலருக்கு எவ்விதச் சாபமோ துன்பமோ வருகிற போதும், அவர்கள் தங்கள் இதய நோயை உணர்ந்து இவ்வாலயத்துக்கு வந்து தங்கள் கைகளை விரித்துச் செய்யும் எல்லா விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும்,

39 உமது உறைவிடமாகிய விண்ணினின்று நீர் கேட்டு மன்னித்து, அவனவன் இதய நோக்கத்துக்கும் விருப்பத்துக்கும் செய்கைகளுக்கும் தகுந்தபடி பிரதிபலன் அளிப்பீராக. ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மனிதரின் இதயத்தையும் அறிந்தவர்.

40 அவ்விதம் செய்தால், நீர் எங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உமக்கு அஞ்சி நடப்பார்கள்.

41 உம் மக்களாகிய இஸ்ராயேல் அல்லாத புறவினத்தார் உமது புகழ்பெற்ற பெயரையும் உமது கைவன்மையையும் உமது தோள் வலிமையையும் கேள்வியுற்று, உம் பெயரின் பொருட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து,

42 எங்கும் புகழ் பெற்ற இச்செய்தியால் அவர்கள் இங்கு வந்து விண்ணப்பம் செய்யும் போது,

43 உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவர்களது குரலைக் கேட்டு, அவர்கள் கேட்பவற்றை எல்லார்ம அருள்வீராக. இதனால் பூமியின் மக்கள் எல்லாரும் உம் மக்கள் இஸ்ராயேலைப் போல் உமக்கு அஞ்சி, நான் கட்டின இவ்வாலயத்தில் உமது பெயர் விளங்குகிறதென்று அறிந்து கொள்வார்கள்.

44 நீர் உம் மக்களை அனுப்பும் வழியிலேயே அவர்கள் தங்கள் பகைவர்களோடு போரிடப் புறப்படும் போது, நீர் தேர்ந்துகொண்ட இந்நகருக்கும், உமது பெயர் விளங்க நான் கட்டியுள்ள இவ்வாலயத்துக்கும் நேராக அவர்கள் திரும்பி உம்மை நோக்கி விண்ணப்பம் செய்தால்,

45 விண்ணிலிருந்து நீர் அவர்களது விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு அவர்களுக்கு நீதி செலுத்துவீராக.

46 அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்து (ஏனெனில் பாவம் செய்யாத மனிதன் ஒருவனுமில்லை), நீர் அவர்கள்மேல் கோபம் கொண்டு, அவர்களை எதிரிகள் கையில் ஒப்படைத்து, அப்பகைவர்கள் அவர்களைத் தூரத்திலாவது அருகிலாவது இருக்கிற தங்கள் நாட்டிற்குச் சிறை பிடித்துக் கொண்டு போகும் போதும்,

47 அவர்கள் சிறைப்படுத்தப்பட்ட நாட்டில் தாங்கள் மனம் வருந்தி மனந்திரும்பி, 'நாங்கள் பாவம் செய்து, அக்கிரமம் புரிந்து, தீயவழியில் நடந்தோம்' என்று தங்கள் அடிமைத் தளையிலிருந்து உம்மை நோக்கி வேண்டும்போதும்,

48 தாங்கள் சிறைப்படுத்தப்பட்ட தங்கள் பகைவரின் நாட்டில், தங்கள் முழு இதயத்தோடும் தங்கள் முழு ஆன்மாவோடும் உமது பக்கம் திரும்பி நீர் அவர்களின் முன்னோர்களுக்குக் கொடுத்த நாட்டிற்கும், நீர் தேர்ந்துகொண்ட இந்நகருக்கும், உமது பெயர் விளங்கும் பொருட்டு நான் கட்டியுள்ள இந்த ஆலயத்திற்கும் நேராகத் திரும்பி உம்மை மன்றாடும்போதும்,

49 உமது அரியணையின் நிலையான இடமாகிய விண்ணிலிருந்து நீர் அவர்களது விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு அவர்களுக்கு நீதி வழங்கும்.

50 உம் மக்கள் உமக்கு எதிராய்ச் செய்த பாவத்தையும், உமது கட்டளையை மீறிய அவர்களுடைய எல்லாத் துரோகங்களையும் மன்னியும். அவர்களைச் சிறைபிடித்தவர்கள் அவர்கள் மேல் இரங்க உம் இரக்கத்தை அவர்களுக்கு காட்டியருளும்.

51 ஏனென்றால், அவர்கள் எகிப்து எனும் இரும்புக் காளவாயின் நடுவிலிருந்து நீர் புறப்படச் செய்த உம் மக்களும் உமது வாரிசுமாய் இருக்கிறார்கள் அன்றோ?

52 அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக் கொள்வதின்படி எல்லாம், நீர் அவர்களுக்குச் செய்யும்படி உம் அடியானின் வேண்டுதலுக்கும், உம் மக்கள் இஸ்ராயேலின் வேண்டுதலுக்கும் நீர் செவி சாய்ப்பீராக.

53 ஏனென்றால், என் கடவுளாகிய ஆண்டவரே! நீரே, எம் முன்னோர்களை எகிப்திலிருந்து மீட்ட போது, உம் ஊழியன் மோயீசன் மூலம் சொன்னபடி நீர் பூமியின் எல்லா மக்களிலும் அவர்களை உமக்குச் சொந்தமாகத் தேர்ந்தெடுத்தீர்."

54 சாலமோன் ஆண்டவரை நோக்கி இச் செபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்த பின்பு, ஆண்டவருடைய பலிபீடத்திற்கு முன்பாக எழுந்து நின்றார். ஏனெனில் அவர் முழந்தாட்படியிட்டு வானத்தை நோக்கித் தம் கைகளை விரித்திருந்தார்.

55 அவர் நின்றுகொண்டு இஸ்ராயேல் சபைபை எல்லாம் ஆசீர்வதித்து உரத்த குரலில் சொன்னதாவது:

56 தாம் மொழிந்தபடியே தம் மக்கள் இஸ்ராயேலுக்குச் சமாதானத்தை அருளிய ஆண்டவர் போற்றி! அவர்தம் அடியான் மோயீசன் மூலம் சொன்ன நல்வாக்குகளில் ஒன்றாவது வீண்போகவில்லை.

57 நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மைக் கைவிடாமலும், நம்மைத் தள்ளிவிடாமலும், நம் முன்னோரோடு இருந்ததுபோல் நம்மோடும் இருப்பாராக.

58 நாம் அவருடைய வழிகளிலெல்லாம் நடப்பதற்கும், அவர் நம் முன்னோருக்குக் கொடுத்த கட்டளைகளையும் சடங்கு முறைகளையும் தீர்ப்புகளையும் கைக்கொள்வதற்கும் அவர் நம் இதயங்களைத் தம் பக்கம் திருப்புவாராக.

59 அவர் தம் ஊழியனுக்கும் தம் மக்களாம் இஸ்ராயேலுக்கும் அந்தந்த நாளில் நீதி வழங்குவதற்கு நான் ஆண்டவர் முன் சமர்ப்பித்த இவ்விண்ணப்பங்கள் இரவும் பகலும் நம் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் இருப்பனவாக.

60 அப்போதல்லோ நீர் ஆண்டவர் என்றும், உம்மை அன்றி வேறொரு கடவுள் இல்லை என்றும் எல்லா மக்களும் அறிவார்கள்!

61 ஆதலால் நாம் இன்று செய்கிறது போல் அவருடைய கட்டளைகளின் படி நடக்கவும், அவருடைய சட்டங்களைக் கைக்கொள்ளவும் நம் இதயம் நம் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிறைவுள்ளதாய் இருக்கக் கடவதாக" என்பதாம்.

62 பின்பு அரசரும் அவருடன் இருந்த இஸ்ராயேலர்அனைவரும் ஆண்டவர் திருமுன் பலிகளைச் செலுத்தினார்கள்.

63 சாலமோன் ஆண்டவருக்குச் சமாதானப் பலிகளாக இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்து இருபதினாயிரம் ஆடுகளையும் வெட்டிப் பலியிட்டார். இவ்விதமாய் அரசரும் இஸ்ராயேல் மக்களும் ஆண்டவருடைய ஆலயத்தை அபிஷுகம் செய்தார்கள்.

64 ஆண்டவர் திருமுன் இருந்த பித்தளைப் பலிபீடம் தகனப்பலிகளையும் உணவுப் பலிகளையும் சமாதானப் பலிகளின் கொழுப்பையும் கொள்ள மாட்டாமல் சிறியதாயிருந்தபடியால், அரசர் ஆலயத்துக்கு முன்னிருந்த முற்றத்தின் நடுப்பகுதியைப் பரிசுத்தப்படுத்தி, அன்று அங்கே தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளின் கொழுப்பையும் செலுத்தினார்.

65 அக்காலத்தில் தான் சாலமோனும், ஏமாத்தின் எல்லை முதல் எகிப்தின் நதி வரை அவரோடு வாழ்ந்து வந்த இஸ்ராயேலர் அனைவரும் நம் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் ஏழு நாளும் அதற்குப் பின்பு வேறு ஏழு நாளும், ஆகப் பதிநான்கு நாட்களாக ஆடம்பரமான திருவிழாக் கொண்டாடினார்கள்.

66 எட்டாம் நாளில் அவர் மக்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். அவர்கள் வேந்தனை வாழ்த்தி, ஆண்டவர் தம் ஊழியன் தாவீதுக்கும் தம் மக்கள் இஸ்ராயேலுக்கும் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அக்களித்து மனமகிழ்ச்சியோடு தத்தம் இல்லம் ஏகினர்.

அதிகாரம் 09

1 சாலமோன் ஆண்டவரின் ஆலயத்தையும் அரண்மனையும், தான் செய்ய விரும்பின எல்லாவற்றையும் கட்டிமுடித்த பின்பு நிகழ்ந்ததாவது:

2 ஆண்டவர் சாலமோனுக்குக் காபாவோனில் தோன்றினது போல், இன்னொரு முறையும் அவருக்குத் தோன்றி, சொன்னதாவது:

3 நமது முன்னிலையில் நீ செய்த விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டோம். நீ கட்டின இவ்வாலயத்தில் நமது பெயர் என்றென்றும் விளங்கத் தக்கதாக அதைப் பரிசுத்தமாக்கினோம். நமது இதயமும் நமது கண்ணும் எந்நாளும் அதன் மேலேயே இருக்கும்.

4 நாம் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, நம் கட்டளைகளையும் தீர்ப்புகளையும் கடைப்பிடிக்கும்படி நமது திருமுன் எளிய மனத்துடனும் இதய நேர்மையுடனும் உன் தந்தை தாவீது நடந்ததுபேல் நீயும் நடப்பாயானால்,

5 'இஸ்ராயேலின் அரியணையில் வீற்றிருக்கும் உரிமையாளன் உனக்கு இல்லாமல் போவதில்லை' என்று உன் தந்தை தாவீதுக்கு நாம் சொன்னபடியே, இஸ்ராயேலின்மேல் உன் ஆட்சி என்றென்றும் நிலைக்கச் செய்வோம்.

6 ஆனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நம்மை விட்டுப் பின்வாங்கி நாம் உங்களுக்கு விதித்த நம் கட்டளைகளையும் சடங்கு முறைகளையும் பின்பற்றாது அன்னிய தேவர்களை வழிபட்டு ஆராதித்தால்,

7 நாம் இஸ்ராயேலுக்குக் கொடுத்துள்ள நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றுவோம். நமது பெயர் விளங்க நாம் பரிசுத்தமாக்கின இவ்வாலயத்தை நம் முன்னிலையில் இராதபடி தகர்த்தெறிவோம். அது இஸ்ராயேல் மக்கள் அனைவருக்குமே பழமொழியாகவும் இழி சொல்லாகவும் இருக்கும்.

8 அதற்கு இவ்வாலயமே மேற்கோளாய் இருக்கும். இவ்வாலயத்தைக் கடந்து போகிற எவரும் வியப்புற்று இழிவாய்ப் பேசி, 'ஆண்டவர் இந்நாட்டிற்கும் இவ்வாலயத்திற்கும் இப்படிச் செய்தது ஏன்?' என்று கேட்பர்.

9 அதற்கு மற்றவர்கள், 'இவ்வினத்தார் தங்கள் முன்னோர்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டு வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை விட்டு விட்டு அன்னிய தேவர்களைப் பின்பற்றி அவர்களை வணங்கி வழிபட்டனர். எனவே, ஆண்டவர் இத்தீமைகள் அனைத்தும் அவர்கள்மேல் வரச் செய்தார்' என்று மறுமொழி சொல்வர்" என்றருளினார்.

10 ஆலயம், அரண்மனை ஆகிய இவ்விரண்டையும் சாலமோன் கட்டி முடித்த இருபதாம் ஆண்டு முடிந்த பின்னர்,

11 தீரின் அரசன் ஈராம் சாலமோனுக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் கேதுரு, சப்பீன் மரங்களையும் பொன்னையும் கொடுத்து வந்தான். அதன் பொருட்டுச் சாலமோன் அரசர் ஈராமுக்குக் கலிலேயா நாட்டிலுள்ள இருபது நகர்களைக் கொடுத்தார்.

12 தனக்குச் சாலமோன் கொடுத்திருந்த நகர்களைப் பார்வையிட ஈராம் தீவிலிருந்து புறப்பட்டு வந்தான். ஆனால் அவை அவனுக்குப் பிடிக்கவில்லை.

13 எனவே அவன், "என் சகோதரனே, நீ எனக்குக் கொடுத்துள்ள நகர்கள் இவைதானா?" என்று கேட்டு அவற்றிற்குக் காபுல் என்று பெயரிட்டான்; அப்பெயர் இன்று வரை வழங்கி வருகிறது.

14 மேலும் ஈராம் சாலமோன் அரசருக்கு நூற்றிருபது தாலந்து நிறையுள்ள பொன்னும் அனுப்பினான்.

15 சாலமோன் அரசர் ஆலயத்தையும் அரண்மையையும் மெல்லோவையும் யெருசலேமின் மதிலையும் எசேரையும் மகத்தோவையும் காசேரையும் கட்டுவதற்குச் செய்த மொத்தச் செலவு இதுவே.

16 எகிப்திய மன்னன் பாரவோன் புறப்பட்டு வந்து காசேரைப் பிடித்து அதைத் தீக்கிரையாக்கி, அதில் குடியிருந்த கானானையரைக் கொன்று போட்டு அந்நகரைச் சாலமோனின் மனைவியாகிய தன் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தான்.

17 மேலும் சாலமோன் அக்காசேர் நகரையும் கீழ்பெத்தோரோனாவையும் கட்டினார்.

18 பாகாலாத்தையும் பாலைவன வெளியிலுள்ள பல்மீராவையும்,

19 தமக்கிருந்த அரணற்ற ஊர்களையும் அரணித்து, தேர்கள் இருக்கும் நகர்களையும், குதிரை வீரர் இருக்கும் நகர்களையும் யெருசலேமிலும் லீபானிலும் தம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு எங்கணும் தமக்கு விருப்பமான எல்லாவற்றையும் கட்டினார்.

20 இஸ்ராயேல் மக்கள் அல்லாத அமோறையர், ஏத்தையர், பெரேசையர், ஏவையர், எபுசேயர் ஆகிய எல்லா மக்களையும்,

21 இஸ்ராயேல் மக்கள் அழித்து விடாது நாட்டில் விட்டு வைத்திருந்த அவர்களின் பிள்ளைகளையும் சாலமோன் தமக்குக் கப்பம் கட்டச் செய்தார். இன்று வரை அவர்கள் கப்பம் கட்டி வருகிறார்கள்.

22 இஸ்ராயேல் மக்களில் ஒருவரையும் சாலமோன் அடிமையாய் இருக்க விடவில்லை. அவர்கள் போர் வீரரும் அலுவலரும் தலைவர்களும் படைத்தலைவர்களும் தேர்வீரரும் குதிரை வீரருமாய் இருந்தனர்.

23 சாலமோனின் வேலைகள் எல்லாவற்றையும் மேற்பார்த்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு ஐந்நூற்றைம்பது பேர் தலைமை அலுவலராய் இருந்தனர்.

24 பாரவோனின் மகள் தாவீதின் நகரிலிருந்து புறப்பட்டுச் சாலமோன் தனக்குக் கட்டியிருந்த தன் மாளிகைக்கு வந்தாள். அப்போது தான் அரசர் மெல்லோவைக் கட்டி முடித்தார்.

25 சாலமோன் ஆண்டவருக்குக் கட்டியிருந்த பலிபீடத்தின் மேல் ஆண்டிற்கு மூன்று முறை தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தி ஆண்டவர் திருமுன் உள்ள பலிபீடத்தின் மேல் தூபம் காட்டி வந்தார். ஆலய வேலை எல்லாம் முடிவு பெற்றது.

26 மன்னர் சாலமோன் இதுமேயா நட்டில் செங்கடல் ஓரத்திலுள்ள அயிலாத்திற்கு அருகில் இருக்கும் அசியோன்கபேரில் கடற்படை அமைத்தார்.

27 அக்கடற் படைகளுக்கு கடற்பயணத்தில் திறமை வாய்ந்தவரான தன் ஊழியரைச் சாலமோனின் உழியரோடு ஈராம் அனுப்பி வைத்தான்.

28 இவர்கள் ஒபீருக்குப் போய் அங்கிருந்து நானூற்றிருபது தாலந்து நிறையுள்ள பொன்னைச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்தனர்.

அதிகாரம் 10

1 ஆண்டவர் பெயரால் சாலமோன் அடைந்ததிருந்த புகழைச் சாபா நாட்டு அரசி கேள்வியுற்று பல புதிர்களால் அவரைச் சோதிக்க வந்தாள்.

2 மிகுந்த பரிவாரத்தோடும், நறுமணப் பொருட்களையும் மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமந்து வந்த ஒட்டகங்களோடும் யெருசலேமை அடைந்தாள். அவள் சாலமோனிடம் வந்து தன் மனத்திலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவரிடம் உரையாடினாள்.

3 சாலமோன் அவள் கேட்டவற்றை எல்லாம் அவளுக்கு விளக்கிக் கூறினார். அவள் கேட்டவற்றுள் ஒன்றாகிலும் மன்னருக்குப் புதிராக இருக்கவில்லை; அனைத்திற்கும் தக்க பதில் கொடுத்தார்.

4 சாபாவின் அரசி சாலமோனின் ஞானத்தையும், அவர் கட்டியிருந்த அரண்மனையையும், அவர் உண்டு வந்த உணவு வகைகளையும்,

5 அவர் ஊழியரின் வீடுகளையும், அவர் அலுவலரின் ஊர்களையும், அவர்களின் ஆடைகளையும், குடிகலம் பரிமாறுபவரையும், அவரால் தேவாலயத்தில் செலுத்தப் பெற்று வந்த தகனப்பலிகளையும் கண்ட போது, வியப்பில் ஆழ்ந்தாள்.

6 அவள் மன்னரை நோக்கி, "உமது பேச்சுத்திறனைப் பற்றியும் உமது ஞானத்தைப் பற்றியும் என் நாட்டில் நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையே!

7 நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை அவர்கள் சொன்னவற்றை நம்பவில்லை. இப்பொழுதோ நான் கண்டவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை என அறிந்துகொண்டேன். உம் ஞானமும் சாதனைகளும் நான் கேள்விப்பட்டதை விட மேலானவையாய் இருக்கின்றன.

8 உம் மக்களும் உம் ஊழியரும் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் எப்போதும் உம்முன் நின்று உமது ஞானத்தைக் கேட்டு வருகிறார்கள்.

9 உம்மீது பிரியம் கொண்டு உம்மை இஸ்ராயேல் அரியணையில் ஏற்றிய உம் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! ஆண்டவர் இஸ்ராயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டதினால் அன்றோ, நீதி செலுத்துவதற்கு உம்மை மன்னராக ஏற்படுத்தினார்!" என்றாள்.

10 அவள் அரசருக்கு நூற்றிருபது தாலந்து நிறையுள்ள பென்னையும் மிகுந்த நறுமணப் பொருட்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள். சாபாவின் அரசி சாலமோனுக்குக் கொடுத்த அத்துணை நறுமணப் பொருட்கள் அதன் பிறகு யெருசலேமுக்கு வந்ததே கிடையாது.

11 ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் நறுமணம் தரும் மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டு வந்தன.

12 அவ்வருமையான மரங்களால் அரசர் கோயிலுக்கும் அரண்மனைக்கும் கிராதிகளும், பாடகருக்கு இசைக் கருவிகளும் யாழ்களும் செய்தார். அப்படிப்பட்ட மரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, எவனும் கண்டதுமில்லை.

13 சாலமோன் அரசர் தாமே சாபாவின் அரசிக்கு அரச மகிமைக்குத் தக்க வெகுமதிகளைக் கொடுத்ததோடு, அவள் விரும்பிக் கேட்டவற்றை எல்லாம் கொடுத்தார். பிறகு அவள் தன் ஊழியர்களுடன் தன் நாடு திரும்பினாள்.

14 ஒவ்வொரு ஆண்டும் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையுள்ள பொன் சாலமோனுக்கு வந்து கொண்டிருந்தது.

15 அதைத் தவிரச் சாலமோனுக்குக் கோத்திரத் தலைவர்களும் வியாபாரிகளும் வணிகர்களும் அராபிய அரசர்களும் மாநில ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு.

16 சாலமோன் அரசர் இருநூறு கேடயங்கள் செய்தார். ஒவ்வொரு கேடயத்துக்கும் அறுநூறு சீக்கல் நிறையுள்ள பசும் பொன் செலவானது.

17 மேலும் முந்நூறு சிறிய கேடயங்களைச் செய்தார். ஒவ்வொரு கேடயத்திற்கும் முந்நூறு மீனா என்ற நாணயப் பொன் செலவானது. அவற்றை மன்னர் லீபானின் வனம் என்ற மாளிகையில் வைத்தார்.

18 மேலும் அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் அலங்கரித்தார்.

19 அவ்வரியணைக்கு ஆறுபடிகள் இருந்தன. அரியணையின் மேற்பாகம் பின்னால் வளைவாய் இருந்தது. உட்காருமிடத்திற்கு இருபுறமும் கைபிடிகள் இருந்தன. இரு சிங்கங்கள் அவற்றின் அருகே நின்றன.

20 ஆறுபடிகளின் மேல் பக்கத்திற்கு ஆறாகப் பன்னிரு சிங்கக் குட்டிகள் நின்றன. எந்த நாட்டிலும் இத்தகு வேலைப்பாடு செய்யப்பட்டதில்லை.

21 சாலமோன் அரசருக்கு இருந்த பான பாத்திரங்கள் எல்லாம் பொன்னாலும், லீபானின் வனம் என்ற மாளிகையின் தட்டுமுட்டுப் பொருட்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் செய்யப்பட்டிருந்தன. ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை. சாலமோனின் காலத்தில் வெள்ளி விலையுயர்ந்த ஒரு பொருளாய் எண்ணப்படவுமில்லை.

22 ஏனெனில் அரசரின் கப்பல்கள் ஈராமின் கப்பல்களோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தார்சுக்குப் பயணமாகி அவ்விடமிருந்து பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் முதலியவற்றைக் கொண்டுவரும்.

23 மண்ணின் எல்லா மன்னர்களையும் விடச் சாலமோன் மன்னர் செல்வத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினார்.

24 சாலமோனுக்கு ஆண்டவர் அருளியிருந்த ஞானத்தைக் கேட்பதற்காக மண்ணுலக மாந்தர் அனைவரும் அவர் முகம் காண ஏங்கி நின்றனர்.

25 ஆண்டுதோறும் வெள்ளிப்பாத்திரங்கள், துணி, போர்க்கருவிகள், குதிரைகள், கோவேறு கழுதைகள் முதலியவற்றை மக்கள் அவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வருவார்கள்.

26 சாலமோன் தேர்களையும் குதிரை வீரரையும் ஒன்று திரட்டினார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தனர். அத்தேர்களிலும் குதிரை வீரர்களிலும் சிலரைத் தம்மோடு வைத்துக்கொண்டு மற்றவரை அரணிக்கப் பெற்ற நகர்களுக்கு அனுப்பி வைத்தார்.

27 யெருசலேமிலே சாலமோன் காலத்தில் வெள்ளி கற்களைப் போலவும், கேதுரு மரங்கள் காட்டத்தி மரங்கள் போலவும் மிகுதியாய் இருந்தன.

28 எகிப்திலிருந்தும் கோவாவிலிருந்தும் சாலமோனுக்குக் குதிரைகள் வந்து கொண்டிருந்தன. எப்படியெனில், அரசரின் வியாபாரிகள் அவற்றைக் கோவாவில் விலைக்கு வாங்கிக் குறித்த விலைக்கு அரசரிடம் விற்று விடுவார்கள்.

29 அப்படியே எகிப்திலிருந்து அறுநூறு சீக்கல் நிறையுள்ள வெள்ளிக்கு நாற்குதிரைத் தேர் ஒன்றும், நூற்றைம்பது சீக்கல் நிறையுள்ள வெள்ளிக்கு ஒரு குதிரையுமாகக் கொண்டு வருவார்கள். இவ்விதமாக ஏத்தைய அரசர்களும் சீரிய மன்னர்களும் தங்கள் நாட்டுக் குதிரைகளை விற்று வந்தார்கள்.

அதிகாரம் 11

1 சாலமோன் மன்னர் பாரவோனின் மகளுக்கு அன்பு செய்ததுமன்றி, மோவாபியர், அம்மோனியர், இதுமேயர், சீதோனியர், ஏத்தையர் ஆகிய புறவினத்தாரின் பல பெண்களின் மேலும் இச்சை வைத்தார்.

2 அப்புறவினத்து மக்களைக் குறித்து ஆண்டவர் இஸ்ராயேல் மக்களை நோக்கி, "நீங்கள் அந்நாடுகளிலிருந்து பெண் கொள்ளவும் வேண்டாம்; கொடுக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர்கள் நிச்சயமாய்த் தம் தேவர்களை வணங்கும்படி உங்கள் இதயங்களை மாற்றி விடுவார்கள்" எனக் கூறியிருந்தார். இருந்த போதிலும் அந்நாட்டுப் பெண்களின் மேல் சாலமோன் ஆசை வைத்தார்.

3 தம் மனைவியரும் அரசிகளுமாக எழுநூறு பெண்களையும், வைப்பாட்டிகளாக முந்நூறு பெண்களையும் சாலமோன் வைத்திருந்தார். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தீய வழியில் திருப்பிவிட்டனர்.

4 சாலமோன் முதிர்ந்த வயதினராயிருந்த போது அவருடைய மனைவிகள் அவர் இதயத்தை அன்னிய தேவர்களைப் பின்பற்றும்படி கெடுத்து விட்டார்கள். அதனால் அவரது இதயம் அவர் தந்தை தாவீதின் இதயத்தைப்போல் தம் கடவுளாகிய ஆண்டவரோடு முழுவதும் ஒன்றித்திருக்கவில்லை.

5 சாலமோன் சீதோனியரின் தேவதையாகிய அஸ்தார்த்தையும், அம்மோனியரின் குல தெய்வமாகிய மோலோக்கையும் வழிபட்டார்.

6 சாலமோன் தம் தந்தையைப் போல் ஆண்டவரை முழுவதும் பின்பற்றாது ஆண்டவருக்கு ஏற்காததைச் செய்தார்.

7 அப்பொழுது சாலமோன் யெருசலேமுக்கு எதிரான மலையில் மோவாபியரின் தெய்வமாகிய காமோசுக்கும் அம்மோனியரின் தெய்வமாகிய மோலோக்குக்கும் கோயில்களைக் கட்டினார்.

8 இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுகிற புறவினத்தாரான தம் மனைவியர் எல்லாருக்கும் சாலமோன் செய்தார்.

9 ஆகையால் சாலமோனுக்கு இன்னொரு முறை தோன்றின ஆண்டவர், அவரது இதயம் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து விலகியிருந்ததால் சாலமோன் மீது கோபமுற்றார்.

10 அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்த போதிலும் அவர் அக்கட்டளைப்படி நடக்கவில்லை.

11 ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, "நாம் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நாம் உனக்கு இட்ட கட்டளைகளையும் மீறி இவ்வாறு நடந்து கொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்துக் கூறுகூறாக்கி உன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடுப்போம்.

12 ஆயினும் உன் தந்தை தாவீதின் பொருட்டு நீ உயிரோடு இருக்கும் போது நாம் இதைச் செய்ய மாட்டோம். உன் மகன் கையினின்று அதைப் பிரித்துக் துண்டு துண்டாக்குவோம்.

13 இருந்தபோதிலும் அரசு முழுவதையும் பறித்தெடுக்காது நம் அடியான் தாவீதின் பொருட்டும் நாம் தேர்ந்து கொண்ட யெருசலேமின் பொருட்டும் ஒரு கோத்திரத்தை உன் மகனுக்குக் கொடுப்போம்" என்றார்.

14 பிறகு ஆண்டவர் ஏதோமில் அரசகுல இதுமேயனாகிய ஆதாத் என்பவனை சாலமோனுக்கு எதிராய் எழும்பச் செய்தார்.

15 ஏனெனில் தாவீது இதுமேயாவில் இருந்த காலத்தில், படைத்தலைவன் யோவாப் கொல்லப்பட்டவர்களைப் புதைக்கச் சென்ற வேளையில் இதுமேய ஆண் மக்களை எல்லாம் கொன்று குவித்தான்.

16 (ஏனெனில் அங்கே யோவாபும் இஸ்ராயேல் வீரரும் ஆறுமாதம் தங்கியிருந்து இதுமேயாவிலிருந்த ஆண்மக்களைக் கொன்று குவித்தனர்.)

17 அப்போது ஆதாதும் அவனோடு அவன் தந்தையின் ஊழியரில் சில இதுமேயரும் எகிப்திற்கு ஓடிப் போனார்கள். ஆதாதோ அப்போது சிறுவனாய் இருந்தான்.

18 அவர்கள் மதியானிலிருந்து புறப்பட்டுப் பாரானுக்குச் சென்று, பாரானில் சில மனிதரைக் கூட்டிக்கொண்டு எகிப்திய அரசன் பாரவோனிடம் சென்றார்கள். இவன் ஆதாதுக்கு ஒரு வீடு கொடுத்து அவன் உணவுக்கு வகை செய்து நிலத்தையும் அவனுக்குக் கொடுத்தான்.

19 ஆதாத் பாரவோனுக்கு எவ்வளவு பிரியமாய் இருந்தான் என்றால், பாரவோன் அரச மாது தாப்னேசு என்ற தன் மனைவியின் உடன் பிறந்த சகோதரியை அவனுக்கு மணமுடித்து வைத்தான்.

20 தாப்னேசின் தங்கையாகிய இவள் அவனுக்குக் கெனுபாத் என்ற ஒரு மகனைப் பெற்றாள். அவனைத் தாப்னேசு பாரவோன் வீட்டில் வளர்த்தாள். அப்படியே கெனுபாத் பாரவோன் வீட்டில் அவனுடைய மக்களுடன் வளர்ந்து வந்தான்.

21 தாவீது தம் முன்னோரோடு துயில்கொண்டார் என்றும், படைத் தலைவன் யோவாப் இறந்துபட்டான் என்றும் எகிப்தில் ஆதாத் கேள்விப்பட்ட போது அவன் பாரவோனை நோக்கி, "நான் என் சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறேன். என்னை அனுப்பி வைக்கவேண்டும்" என்றான்.

22 அதற்குப் பாரவோன், "நீ உன் சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறதற்கு என்னிடத்தில் உனக்கு என்ன குறை இருக்கிறது?" என்று கேட்டான். அதற்கு அவன், "ஒரு குறையுமில்லை. ஆகிலும் என்னை அனுப்பி விட வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறேன்" என்றான்.

23 ஆண்டவர் எலியாதாவின் மகன் ராசோனையும் சாலமோனுக்கு எதிராய் எழுப்பினார். அவன் தன் தலைவனாகிய அதரீசர் என்னும் சோபாவின் அரசனிடமிருந்து தப்பி ஓடியவன்.

24 தாவீது அவர்களைக் கொன்று போடுகையில், அவன் தன்னோடு சிலரைச் சேர்த்துக்கொண்டு அந்தத் திருடர் கூட்டத்திற்குத் தலைவன் ஆனான். இவர்கள் தமாஸ்கு நகரை அடைந்து அங்குக் குடியேறி இவனைத் தமாஸ்குவின் அரசனாக ஏற்படுத்தினர்.

25 ராசோன் சாலமோன் வாழ்நாள் முழுவதும் இஸ்ராயேலின் எதிரியாய் இருந்தான். ஆதாத் போல் இஸ்ராயேலைப் பகைத்து, அதற்குத் தீங்கு இழைத்தான்; அவன் சீரியாவை ஆண்டு வந்தான்.

26 சரேதா ஊரிலுள்ள எப்ராத்தையனான நாபாத் மகன் எரோபோவாம் என்ற சாலமோனின் ஊழியரில் ஒருவன் மன்னருக்கு எதிராய் எழும்பினான். அவனுடைய தாய் சர்வா என்னும் பெயருடைய ஒரு விதவை.

27 அவன் அரசருக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்யக் காரணம், சாலமோன் மெல்லோவைக் கட்டித் தம் தந்தை தாவீதின் நகரில் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்திருந்தான்.

28 ஏரோபோவாம் ஆற்றல் வாய்ந்தவனாய் இருந்தான். அவன் அறிவாளியும் கரும வீரனுமான இளைஞன் என்று சாலமோன் கண்டு சூசையின் கோத்திரம் முழுவதற்கும் கப்பம் வசூலிப்பவனாக அவனை ஏற்படுத்தினார்.

29 அக்காலத்தில் எரோபோவாம் யெருசலேமிலிருந்து வெளியே போகிற போது புதுச் சால்வையைப் போர்த்தியிருந்த சிலோனித்தராகிய அகியாசு என்ற இறைவாக்கினர் வழியிலே அவனைக் கண்டார். இருவரும் வயல் வெளியில் தனித்திருக்கையில்,

30 அகியாசு தாம் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்து, எரோபோவாமை நோக்கி,

31 இதில் பத்துத் துண்டுகளை எடுத்துக் கொள்; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறதாவது: 'இதோ நாம் சாலமோனுடைய கையிலிருந்து ஆட்சியைப் பிடுங்கிப் பிரித்து உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்போம்.

32 ஆயினும் என் ஊழியன் தாவீதுக்காகவும், இஸ்ராயேல் கோத்திரங்களிலெல்லாம் நாம் தேர்ந்துகொண்ட யெருசலேம் நகருக்காகவும் ஒரு கோத்திரம் அவன் கையில் இருக்கும்.

33 ஏனெனில் சாலமோன் நம்மை விட்டு விலகி சீதோனியரின் தேவதை அஸ்தார்த்தையும், மோவாபியரின் தெய்வமான காமோசையும், அம்மோனியரின் தெய்வம் மோலோக்கையும் தொழுது கொண்டு, அவன் தன் தந்தை தாவீதைப்போல் நம் திருமுன் நம் கட்டளை, சட்டங்களையும் தீர்ப்புகளையும் கைக்கொண்டு நம் வழிகளில் நடவாமற்போனதினால் அப்படிச் செய்தோம்.

34 ஆயினும் ஆட்சி முழுவதையும் நாம் அவன் கையிலிருந்து எடுத்து விடோம். நம்மால் தேர்ந்து கொள்ளப் பட்டவனும், நம் கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடித்தவனுமான நம் ஊழியன் தாவீதின் பொருட்டு, அவன் உயிரோடிருக்கும் வரை நாம் அவனைத் தலைவனாக வைத்திருப்போம்.

35 எனினும், ஆட்சியை அவன் மகன் கையிலிருந்து எடுத்து அதில் பத்துக் கோத்திரங்களை உனக்குக் கொடுப்போம்.

36 நமது பெயர் விளங்கும்படி நாம் தேர்ந்துகொண்ட நகராகிய யெருசலேமில் நம் திருமுன் நம் ஊழியன் தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் அவன் மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்போம்.

37 நீயோ, உனது விருப்பத்தின்படி இஸ்ராயேலில் அரசோச்சி அதன் மன்னனாய் இருப்பதற்காக நாம் உன்னைத் தேர்ந்துகொள்வோம்.

38 நாம் உனக்குக் கட்டளையிட்டவற்றை எல்லாம் நீ கேட்டு நம் வழிகளில் நடந்து, நம் ஊழியன் தாவீது செய்ததுபோல், நம் கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொண்டு, நம் திருமுன் நல்லவனாய் ஒழுகி வருவாயானால், நாம் உன்னோடு இருந்து நாம் தாவீதுக்குக் கட்டினதுபோல் உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ராயேலை உனக்குத் தருவோம்.

39 இப்படிச் செய்வதால் நாம் தாவீதின் குலத்தைத் துன்புறுத்துவோம். எனினும், எந்நாளும் அப்படியிராது' என்று சொன்னார்" என்றார்.

40 இதன் பொருட்டுச் சாலமோன் எரோபோவாமைக் கொல்ல விரும்பினார். ஆனால் அவன் எகிப்திற்கு ஓடிப்போய் எகிப்திய மன்னன் செசாக்கிடம் தஞ்சம் அடைந்து சாலமோன் இறக்கும் வரை அங்கேயே தங்கி இருந்தான்.

41 சாலமோனின் பிற செயல்களும், அவர் செய்த அனைத்தும், அவரது ஞாமும் சாலமோனின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.

42 சாலமோன் யெருசலேமில் இருந்து கொண்டு நாற்பது ஆண்டுகள் இஸ்ராயேல் முழுவதையும் ஆண்டு வந்தார்.

43 பின்பு சாலமோன் தம் முன்னோரோடு துயில் கொண்டு தம் தந்தை தாவீதின் நகரில் அடக்கம் செய்யப் பட்டார். அவருடைய மகன் ரொபோவாம் அவருக்குப் பின் அரசோச்சினான்.

அதிகாரம் 12

1 ரொபோவாமை அரசனாக்கும்படி இஸ்ராயேலர் அனைவரும் சிக்கேமில் ஒன்று கூடியிருந்ததால், அவனும் சிக்கேமுக்கு வந்தான்.

2 சாலமோன் அரசருக்கு அஞ்சி ஓடிப்போய் எகிப்தில் குடியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாமோ, சாலமோன் இறந்ததைக் கேள்வியுற்று அங்கிருந்து திரும்பி வந்தான்.

3 ஏனெனில் அவர்கள் எரோபோவாமுக்கு ஆள் அனுப்பி அவனை வரவழைத்திருந்தனர். அப்படியே அவனும் வர, இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ரொபோவாமிடம் வந்து அவனை நோக்கி,

4 உம் தந்தை பாரமான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார். இப்போது நீர் உம் தந்தை கொடுங்கோன்மையாய் ஆண்ட விதத்தைச் சற்று மாற்றி அவர் எங்கள் மேல் வைத்த பளுவான நுகத்தையும் இலகுவாக்க வேண்டும். அப்படிச் செய்வீராகில் நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்" என்றனர்.

5 அதற்கு ரொபோவாம், "நீங்கள் போய் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்" என்றான். அப்படியே மக்கள் சென்றனர்.

6 அப்பொழுது அரசன் ரொபோவாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அவர் முன்னிலையில் நின்ற முதியோரோடு கலந்து ஆலோசித்து, "இம்மக்களுக்கு மறுமொழி சொல்ல நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான்.

7 அதற்கு அவர்கள், "நீர் இன்று இம்மக்களைச் சகித்து, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் கேட்டபடி செய்து, நயமான வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்வீரானால் எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியராய் இருப்பார்கள்" என்றனர்.

8 முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை ரொபோவாம் தள்ளி விட்டுத் தன்னோடு வளர்ந்து தன்னோடு வாழ்ந்து வந்த வாலிபரோடு ஆலோசனை செய்து, அவர்களை நோக்கி,

9 உம் தந்தை எம்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும்' என்று என்னிடம் சொன்ன இம்மக்களுக்கு மறுமொழி கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?" என்றான்.

10 அப்போது அவனோடு வளர்ந்து வந்த வாலிபர் அவனை நோக்கி, "உம் தந்தை கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். நீர் எங்கள் துன்பம் துடைத்தருளும்' என்று உம்மிடம் சொன்ன இம்மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: 'என் சுண்டு விரல் என் தந்தையின் உடலை விடப் பருமனாயிருக்கிறது.

11 இப்பொழுது என் தந்தை பாரமான நுகத்தை உங்கள் மேல் சுமத்தியுள்ளார்; நானோ அதன் பளுவை இன்னும் அதிகப் படுத்துவேன். என் தந்தை உங்களைச் சாட்டைகளினால் தண்டித்தார்; நானோ உங்களை முள் சாட்டைகளினால் தண்டிப்பேன்' என்று நீர் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்" என்றனர்.

12 மூன்றாம் நாள் என்னிடம் வாருங்கள்" என்று மன்னன் சொல்லியிருந்தபடியே எரோபோவாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளில் ரொபோவாமிடம் வந்தனர்.

13 அப்பொழுது அரசன் முதியோர் தனக்குச் சொல்லியிருந்த ஆலோசனையைத் தள்ளி விட்டு மக்களோடு மிகக் கடுமையாய்ப் பேசினான்.

14 வாலிபர்களின் ஆலோசனையின்படி அவன் அவர்களைப் பார்த்து, "என் தந்தை உங்கள் நுகத்தைப் பளுவாக்கினார்; நான் உங்கள் நுகத்தை இன்னும் பளுவுள்ளதாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டைகளினால் தண்டித்தார்; நானோ உங்களை முள் சாட்டைகளினால் தண்டிப்பேன்" என்று மக்களுக்குப் பதில் கூறினான்.

15 இவ்வாறு அரசன் மக்களுக்குச் செவிகொடாமல் போனான். ஏனெனில் சிலோனித்தராகிய அகியாசைக் கொண்டு ஆண்டவர் நாபாத்தின் மகன் எரோபொவாமுக்குச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறும்படி ஆண்டவரே இவ்வாறு செய்தார்.

16 மன்னன் தங்களுக்குச் செவி கொடாததைக் கண்ட மக்கள் அரசனுக்கு மறுமொழியாக, 'தாவீதோடு எங்களுக்குப் பங்கு ஏது? இசாயியின் மகனிடம் எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இஸ்ராயேலே உன் கூடாரத்திற்குப் போய்விடு. தாவீதே உன் வீட்டுக் காரியத்தை நீயே கவனித்துக் கொள்" என்று சொல்லி இஸ்ராயேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டனர்.

17 எனினும், யூதாவின் நகர்களில் குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் மேல் ரொபோவாம் ஆட்சி செய்து வந்தான்.

18 பின்பு அரசன் ரொபோவாம் கப்பம் வசூலித்து வந்த அதுராமை அனுப்பினான். இஸ்ராயேலர் எல்லாரும் அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர். அப்போது அரசன் ரொபோவாம் விரைந்து தேர்மேல் ஏறி யெருசலேமுக்கு ஓடிப்போனான்.

19 அப்படியே இன்று வரை இஸ்ராயேலர் தாவீதின் வம்சத்தை விட்டுப் பிரிந்து போயிருக்கிறார்கள்.

20 எரோபோவாம் திரும்பி வந்தான் என்று இஸ்ராயேலர் அனைவரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் ஒரு பெரும் சபையைக் கூட்டி அவனை வரவழைத்து இஸ்ராயேல் முழுவதற்கும் அவனை அரசனாக ஏற்படுத்தினார்கள். அன்று முதல் யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு எவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.

21 ரொபோவாமோ யெருசலேமுக்கு வந்து இஸ்ராயேல் வம்சத்தாரோடு போரிடவும், நாட்டைத் தன் கைவயப்படுத்திக் கொள்ளவும், யூதாவின் வீட்டாரையும் பெஞ்சமின் கோத்திரத்தாரையும் ஒன்று திரட்டினான். தேர்ந்தெடுத்த இலட்சத்து எண்பதினாயிரம் போர்வீரர்கள் இருந்தனர்.

22 அப்போது கடவுளின் மனிதராகிய செமேயியாவுக்கு ஆண்டவர் சொன்னதாவது:

23 நீ யூதாவின் அரசன் ரொபோவாம் என்ற சாலமோனின் மகனையும், யூதா கோத்திரத்தார் அனைவரையும் பெஞ்சமீனரையும், மற்ற மக்களையும் நோக்கி, 'ஆண்டவர் சொல்கிறதாவது:

24 நீங்கள் படையெடுக்கவும் இஸ்ராயேல் மக்களான உங்கள் சகோதரரோடு போரிடவும் வேண்டாம். எல்லாரும் வீடு திரும்புங்கள். இதைச் சொன்னது நாமே' என்று சொல்" என்பதாம். அப்போது அவர்கள் ஆண்டவர் சொன்னதைக் கேட்டு ஆண்டவரின் கட்டளைப்படியே திரும்பிப் போய் விட்டனர்.

25 எரோபோவாமோ, எபிராயீம் மலையின் மேல் சிக்கேமைக் கட்டி அதில் வாழ்ந்து வந்தான். பிறகு அங்கிருந்து போய்ப் பானுவேலையும் அவ்வாறே கட்டினான்.

26 அப்பொழுது எரோபோவாம் தனக்குள் சொல்லிக்கொண்டதாவது: "இப்போது அரசு தாவீதின் குலத்திற்குத் திரும்பி வரும்.

27 இம் மக்கள் யெருசலேமில் உள்ள ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப் போனால் அவர்கள் யூதாவின் அரசன் ரொபோவாம் என்ற தங்கள் தலைவனோடு சேர்ந்து கொண்டு என்னைக் கொன்று போடுவர்".

28 தனக்குள் ஆலோசித்த பின் பொன்னால் இரு கன்றுக்குட்டிகளைச் செய்து, மக்களை நோக்கி, "இனி நீங்கள் யெருசலேமுக்குப் போகாதீர்கள். இஸ்ராயேலரே, இதோ எகிப்து நாட்டிலிருந்து உங்களை மீட்டு வந்த உங்கள் தெய்வங்கள்" என்று சொன்னான்.

29 பின்னர் ஒன்றைப் பேத்தலிலும் மற்றொன்றைத் தானிலும் வைத்தான்.

30 இது பாவத்திற்கு ஏதுவாயிற்று. மக்கள் இக் கன்றுக்குட்டியை வணங்க தான் வரை போவார்கள்.

31 அது தவிர எரோபோவாம் மேடுகளில் கோயில்களைக் கட்டி லேவியின் புதல்வராயிராத மக்களில் தாழ்ந்தவர்களைக் குருக்களாக்கினான்.

32 யூதாவில் கொண்டாடப்படும் திருவிழாவிற்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரோபோவாம் ஒரு விழாக் கொண்டாடச் செய்தான். அவ்வாறே பேத்தலிலும் செய்து, தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளையும் பீடத்தில் ஏற்றி, அவற்றிற்குப் பலியிட்டுத் தான் அமைத்திருந்த மேடுகளில் இருந்த குருக்களையும் பேத்தலில் ஏற்படுத்தினான்.

33 மேலும் தன் மனம் போல் குறித்த எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் பேத்தலில் தான் கட்டியிருந்த பலிபீடத்தில் ஏறினான். இஸ்ராயேல் மக்களுக்கென்று விழா அமைத்துப் பலிபீடத்தின் மேல் ஏறித் தூபம் காட்டினான்.

அதிகாரம் 13

1 எரோபோவாம் தூபம் காட்டப் பலிபீடத்தண்டையில் நிற்கையில், இதோ கடவுளின் மனிதர் ஒருவர் ஆண்டவரின் கட்டளைப்படியே யூதாவிலிருந்து பேத்தலுக்கு வந்தார்.

2 ஆண்டவருடைய பெயரால் அப்பலிபீடத்தை நோக்கி, "பலிபீடமே, பலிபீடமே, இதோ, தாவீதின் கோத்திரத்தில் யோசியாசு என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்; அவன் உனக்கு இன்று தூபம் காட்டுகிற மேடுகளில் இருக்கும் குருக்களை உம்மேல் பலியிடுவான். மனித எலும்புகளையும் உன்மேல் சுட்டெரிப்பான் என்று கடவுள் உரைக்கிறார்" எனக் கூறினார்.

3 இது ஆண்டவரின் வாக்கு என்று அரசன் உணரும்படி, அன்றே அதற்கு ஓர் அடையாளம் காண்பித்து, "இதோ, இப்பலிபீடம் இடிய அதன் மேல் உள்ள சாம்பல் கீழே சிந்தும்" என்றார்.

4 பேத்தலில் இருந்த அப்பலிபீடத்திற்கு எதிராய்க் கடவுளின் மனிதர் கூறின வார்த்தையை அரசன் எரோபோவாம் கேட்டவுடன் பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, "அவனைப் பிடியுங்கள்" என்றான். அவருக்கு எதிராய் அரசன் நீட்டிய கை மரத்துப் போக அவனால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

5 கடவுளின் மனிதர் ஆண்டவரின் பெயரால் முன்னறிவித்த அடையாளத்தின் படியே பலிபீடம் இடிய அதன் மேல் இருந்த சாம்பல் கீழே சிந்தியது.

6 அப்போது அரசன் கடவுளின் மனிதரைப் பார்த்து, "நீர் உம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி எனக்காக இறைஞ்சி என் கை வழங்குமாறு மன்றாடும்" என்றான். எனவே கடவுளின் மனிதர் ஆண்டவரை நோக்கி மன்றாட, மன்னனுக்கு முன்போல் கை வழங்கிற்று.

7 அப்பொழுது அரசன் கடவுளின் மனிதரை நோக்கி, "நீர் என்னோடு உணவு அருந்த என் வீட்டுக்கு வாரும். நான் உமக்குப் பரிசில் தருவேன்" என்றான்.

8 ஆனால் கடவுளின் மனிதர், "நீர் எனக்கு உம் வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடு வரவும் மாட்டேன்; வந்து உம்மோடு உண்டு குடிக்கவும் மாட்டேன்.

9 ஏனென்றால், 'நீ அப்பம் உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும், போன வழியாய்த் திரும்பாமலும் இருப்பாயாக' என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்" என்று சொன்னார்.

10 பின்னர், தான் வந்த வழியாய்த் திரும்பாமல் வேறு வழியாய்ப் பேத்தலிலிருந்து போய்விட்டார்.

11 வயது முதிர்ந்த ஓர் இறைவாக்கினர் பேத்தலில் வாழ்ந்து வந்தார். அவர் புதல்வர்கள் வந்து, கடவுளின் மனிதர் அன்று பேத்தலில் செய்தவை அனைத்தையும், அவர் அரசனுக்குக் கூறினவற்றையும் தம் தந்தைக்கு அறிவித்தனர்.

12 அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, "அம் மனிதன் எவ்வழியாய்ச் சென்றான்?" என, அதற்கு அவர்கள், யூதாவிலிருந்து வந்த கடவுளின் மனிதர் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள்.

13 அவர் தம் புதல்வரிடம், "கழுதைக்குச் சேணமிடுங்கள்" என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணமிட்டுக் கொண்டுவர,

14 அவர் அதன்மேல் ஏறி, கடவுளின் மனிதரைத் தொடர்ந்து சென்றார். அவர் ஒரு தெரேபிந்த் மரத்தடியில் அமர்ந்திருக்கக் கண்டு, "யூதாவிலிருந்து வந்த கடவுளின் மனிதர் நீர் தானா?" என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், "நான் தான்" என்றார்.

15 அதைக் கேட்ட அவர், "நீர் என்னோடு வீட்டுக்கு வாரும்; வந்து உணவருந்தும்" என்றார்.

16 அதற்கு அவர், "நான் உம்மோடு திரும்பவும் மாட்டேன்; உமது வீட்டுக்குள் நுழையவும் மாட்டேன்; அவ்விடம் உண்டு குடிக்கவும் மாட்டேன்.

17 ஏனென்றால், 'நீ அப்பம் உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பாமலும் இருப்பாயாக' என்று ஆண்டவர் எனக்கு கட்டளையிட்டிருக்கிறார்" என்றார்.

18 அதற்கு அவர், "உம்மைப்போல நானும் ஓர் இறைவாக்கினர் தான். 'அவர் சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்க நீ அவரை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ' என்று ஒரு தூதர் ஆண்டவருடைய பெயரால் எனக்குச் சொன்னார்" என்று உரைத்து அவரை ஏமாற்றினார்.

19 அப்போது கடவுளின் மனிதர் அவரோடு திரும்பிப் போய் அவரது வீட்டில் உண்டு குடித்தார்.

20 அவர்கள் பந்தியில் அமர்ந்திருந்த போது அவரைத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்த இறைவாக்கினர் மூலம் ஆண்டவர் பேசினார்.

21 யூதாவிலிருந்து வந்த கடவுளின் மனிதரை நோக்கிச் சத்தமிட்டு, "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு இட்ட கட்டளையை நீர் கைக் கொள்ளாமல், ஆண்டவரின் வாக்கை மீறி,

22 'அப்பம் உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் வேண்டாம்' என்று கடவுள் உமக்குக் கட்டளை கொடுத்திருக்க, நீர் அவர் விலக்கின இடத்திற்குத் திரும்பி வந்து அப்பம் உண்டு தண்ணீர் பருகினதால், 'உமது சடலம் உம் முன்னோரின் கல்லறையில் வைக்கப்பட மாட்டாது' என்று ஆண்டவர் திருவுளம்பற்றினார்" என்றார்.

23 அவர் உண்டு குடித்த பிறகு தாம் திருப்பி அழைத்து வந்திருந்த இறைவாக்கினருக்காகத் தம் கழுதைக்குச் சேணமிட்டுக் கொடுத்தார்.

24 அவர் திரும்பிப் போகையில், ஒரு சிங்கம் வழியில் அவரைக் கண்டு அவரைக் கொன்றது. அவரது சடலம் வழியில் கிடந்தது. கழுதை அதனருகில் நின்றது. சிங்கமும் அங்கேயே நின்று கொண்டிருந்தது.

25 அவ்வழியே சென்ற சில மனிதர்கள் வழியில் கிடந்த சவத்தையும் சவத்தருகில் நின்று கொண்டிருந்த சிங்கத்தையும் கண்டு வயது சென்ற அவ்விறைவாக்கினர் வாழ்ந்து வந்த நகரில் அதைப் பறைசாற்றினர்.

26 அவ்வழியினின்று அவரைத் திரும்பச் செய்த இறைவாக்கினர் அதைக் கேள்விப்பட்டபோது, "அவர் ஆண்டவரின் வாக்கை மீறினதாலன்றோ ஆண்டவர் அவரை ஒரு சிங்கத்துக்கு இரையாக்க, அது ஆண்டவருடைய வாக்கின்படி அவரை அடித்துக் கொன்று போட்டது1" என்று சொன்னார்.

27 பின்னர் தம் புதல்வரை நோக்கி, "கழுதைக்குச் சேணமிடுங்கள்" என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணமிட்டுக் கொண்டு வந்தார்கள்.

28 அப்பொழுது அவர் புறப்பட்டுச் சென்று வழியில் அவரது சவம் கிடப்பதையும், அதனருகில் கழுதையும் சிங்கமும் நிற்பதையும் கண்டார். அந்தச் சிங்கமோ சவத்தைத் தின்னவுமில்லை, கழுதைக்குத் தீங்கு செய்யவுமில்லை.

29 அப்போது வயது சென்ற அவ்விறைவாக்கினர் கடவுளின் மனிதருடைய சவத்தை எடுத்துக் கழுதையின் மேல் ஏற்றி, துக்கம் கொண்டாடத் தம் நகருக்குக் கொண்டுவந்தார்.

30 அவர்கள் அவரது சவத்தைத் தங்களுடைய கல்லறையில் வைத்து, "ஐயோ, ஐயோ, என் சகோதரனே!" என்று புலம்பித் துக்கம் கொண்டாடினார்கள்.

31 அவர்கள் துக்கம் கொண்டாடின பின்பு அவர் தம் புதல்வரை நோக்கி, "நான் இறந்த பின் இக் கடவுளின் மனிதர் அடக்கம் செய்யப்படும் கல்லறையிலேயே என்னையும் நீங்கள் அடக்கம் செய்து, அவர் எலும்புகள் அருகே என் எலும்புகளையும் வையுங்கள்.

32 பேத்தலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் நகர்களிலிருக்கிற மேட்டுக் கோயில்கள் எல்லாவற்றிற்கும் எதிராய் அவர் கூறின ஆண்டவருடைய வார்த்தை கட்டாயம் நிறைவேறும்" என்றார்.

33 இவற்றின் பின்னும் எரோபோவாம் தன் கெட்ட நடத்தையை மாற்றிக் கொள்ளாது, மறுபடியும் மக்களில் ஈனமானவர்களை மேட்டுக்கோயில்களின் குருக்களாக்கினான். யார் யார் விரும்பினரோ அவர்கள் அனைவரையும் மேட்டுக் கோயில்களின் குருக்களாக அவன் அபிஷுகம் செய்தான்.

34 எரோபோவாமின் சந்ததி பூமியின் மேல் நிலை கொள்ளாது சிதறுண்டு அழிந்து போனதற்கு இப்பாவமே காரணமாய் இருந்தது.

அதிகாரம் 14

1 அக்காலத்தில் எரோபோவாமின் மகன் அபியா நோயுற்றான்.

2 அப்போது எரோபோவாம் தன் மனைவியைப் பார்த்து, "நீ எரோபோவாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடி மாறுவேடம் பூண்டு, நான் இம்மக்களுக்கு மன்னன் ஆவேன் என்று எனக்குச் சொன்ன இறைவாக்கினர் அகியாசு குடியிருக்கிற சீலோவுக்கு நீ போகவேண்டும்.

3 உன்னோடு பத்து அப்பங்களையும் பலகாரங்களையும், ஒரு கலயம் தேனையும் எடுத்துக்கொண்டு அவரிடம் போ. பின்ளைக்கு நிகழவிருப்பதை அவர் உனக்கு அறிவிப்பார்" என்றான்.

4 அப்படியே எரோபோவாமின் மனைவி சீலோவுக்குப் புறப்பட்டு அகியாசின் வீட்டுக்கு வந்தாள். அகியாசோ முதியவராய் இருந்ததால் கண்கள் மங்கிப் பார்க்க முடியாதவராய் இருந்தார்.

5 அந்நேரத்தில் ஆண்டவர் அகியாசை நோக்கி, "இதோ, எரோபோவாமின் மனைவி நோயுற்றிருக்கிற தன் மகனைப்பற்றி உன்னிடம் கலந்து பேச வருகிறாள். நீ அவளுக்கு இவ்வாறெல்லாம் சொல்ல வேண்டும்" என்றார். பிறகு அவள் அவரிடம் வந்து ஓர் அன்னிய பெண் போன்று நடிக்கத் தொடங்கினாள்.

6 அப்படியே அவள் வாயிற்படிக்குள் நுழைந்தாள். அகியாசு அவளது நடையின் சத்தத்தைக் கேட்டவுடனே, "எரோபோவாமின் மனைவியே, உள்ளே வா. நீ உன்னை அன்னிய பெண்ணாகக் காட்டிக் கொள்வது ஏன்? நான் உனக்கு ஒரு துக்க செய்தியை அறிவிக்க அனுப்பபட்டுள்ளேன்.

7 எரோபோவாமிடம் போய் நீ அவனுக்குச் சொல்ல வேண்டியதாவது: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதென்னவென்றால்: "மக்கள் நடுவே நாம் உன்னை உயர்த்தி நம் இஸ்ராயேல் மக்களுக்கு உன்னைத் தலைவனாக ஏற்படுத்தினோம்.

8 தாவீதின் குலத்தில் இருந்து வந்த ஆட்சியைப் பிரித்து அதை உன் கையில் கொடுத்தோம். எனினும், நம் கட்டளைகளைக் கைக்கொண்டு, தன் முழு இதயத்தோடும் நம்மைப் பின்பற்றி, நம் திருமுன் நல்லவனாய் ஒழுகி வந்த நம் ஊழியன் தாவீதைப்போல் நீ இராமல்,

9 உனக்கு முன் இருந்த எல்லாரையும் விட நீ அதிகத் தீங்கு புரிந்தாய். நமக்குக் கோபம் வருவிக்க, வார்க்கப் பட்ட சிலைகளால் அன்னிய தேவர்களை உனக்கு உண்டாக்கிக் கொண்டு நம்மைப் புறக்கணித்து விட்டாய்.

10 ஆகையால் எரோபோவாம் சந்ததியின் மேல் கேடு வரச் செய்து, எரோபோவாமின் வீட்டிலுள்ள ஆண்மகனையும், அடைத்து வைக்கப்பட்டவனையும், இஸ்ராயேலிலுள்ள கடைசியானவனையும் ஆக எல்லாரையுமே கொன்று குவிப்போம்; தூய்மையாகும் வரை குப்பையைத் துடைப்பத்தால் பெருக்கிக் கூட்டுவது போல், எரோபோவாமின் சந்ததியை அறவே அழித்தொழிப்போம்.

11 எரோபோவாமின் சந்ததியாரில் எவரெவர் நகரில் சாவார்களோ அவர்கள் நாய்களுக்கு இரையாவார்கள்; நகருக்கு வெளியே சாகிறவர்களோ வானத்துப் பறவைகளுக்கு இரையாவார்கள். இது ஆண்டவரின் வாக்கு."

12 ஆகையால் நீ புறப்பட்டு உன் வீட்டுக்குப் போ; நீ எந்நேரத்தில் நகரினுள் கால் வைப்பாயோ அந்நேரமே உன் பிள்ளை சாகும்.

13 அப்பிள்ளைக்காக இஸ்ராயேலர் எல்லாரும் துக்கம் கொண்டாடி அதை அடக்கம் செய்வார்கள். ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் எரோபோவாமின் சந்ததியில் அந்த ஒரு பிள்ளையின் மேல் கருணைக் கண் கொண்டதினால், அந்த ஒரு பிள்ளை மட்டும் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.

14 ஆண்டவர் தமக்காக, இஸ்ராயேலுக்கு ஓர் அரசனை ஏற்படுத்தினார். அவன் தன் காலத்திலே எரோபோவாமின் சந்ததியை அடியோடு அழித்து போடுவான். அது இக்காலத்திலேயே நடக்கும்.

15 தண்ணீரில் நாணல் அசைவது போல் ஆண்டவர் இஸ்ராயேலை அசைத்துத் துன்புறுத்துவார்; அவர்கள் முன்னோருக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து இஸ்ராயேலை வேரோடு பிடுங்குவார்; அவர்களை நதிக்கு அப்பால் சிதறடிப்பார். ஏனெனில் விக்கிரக ஆராதனைக்காகப் பெரும் தோப்புகளை அமைத்து ஆண்டவருக்குக் கோபம் வருவித்திருந்தனர்.

16 எரோபோவாம் கட்டிக்கொண்டதும், இஸ்ராயேலைக் கட்டிக் கொள்ளச் செய்ததுமான பாவங்களின் பொருட்டு ஆண்டவர் இஸ்ராயேலைக் கைவிட்டு விடுவார்" என்றார்.

17 அப்போது எரோபோவாமின் மனைவி புறப்பட்டுத் தேர்சாவுக்கு வந்தாள். தன் வீட்டு வாயிற்படியில் கால் வைத்தவுடனே பிள்ளை இறந்து விட்டது.

18 ஆண்டவர் இறைவாக்கினரான அகியாசு என்ற தம் அடியார் மூலம் சொல்லியிருந்த வாக்கின்படியே, அப்பிள்ளையை அடக்கம் செய்து இஸ்ராயேலர் எல்லாரும் துக்கம் கொண்டாடினார்கள்.

19 எரோபோவாம் போரிட்டதும் ஆண்டதுமான அவனுடைய மற்றச் செயல்கள் இஸ்ராயேலிய அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.

20 எரோபோவாம் இருபத்திரண்டு ஆண்டுகள் அரசோச்சினான். அவன் தன் முன்னோரோடு துயில் கொண்ட பின் அவன் மகன் நாதாப் அரியணை ஏறினான்.

21 சாலமோனின் மகன் ரொபோவாமோ யூதாவில் ஆட்சி செய்தான். ரொபோவாம் அரசனான போது அவனுக்கு வயது நாற்பத்தொன்று. பின்னர் ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி இஸ்ராயேல் கோத்திரங்களிலெல்லாம் தேர்ந்து கொண்ட நகராகிய யெருசலேமில் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். 'அம்மோனியளாகிய அவனுடைய தாயின் பெயர் நாமா.

22 யூதா மக்கள் ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்து தாங்கள் செய்த பாவங்களினால் தங்கள் முன்னோர் செய்த எல்லாவற்றையும் விட அவருக்கு அதிகக் கோபத்தை மூட்டினார்கள்.

23 அவர்களும் எல்லா மேடுகள் மேலும், எல்லா அடர்ந்த மரங்களின் கீழும் பலிபீடங்களையும் சிலைகளையும் தோப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

24 நாட்டில் பெண் தன்மையுடைய ஆடவரும் இருந்தனர். ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக அழித்துப் போட்ட மக்கள் செய்திருந்த எல்லாவித அக்கிரமங்களையும் அவர்கள் கட்டிக் கொண்டார்கள்.

25 ரொபோவாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் அரசனாகிய சீசாக் யெருசலேமுக்கு விரோதமாய் எழுந்தான்.

26 ஆண்டவருடைய ஆலயத்தின் கருவூலங்களையும் அரண்மனையின் கருவூலங்களையும், சாலமோன் செய்து வைத்த பொன் கேடயங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றான்.

27 அவற்றிற்குப் பதிலாக அரசன் ரொபோவாம் பித்தளைக் கேடயங்களைச் செய்து அவற்றைக் கேடய வீரர் தலைவர்கள் கையிலும் அரண்மனை வாயிற்காப்போர் கையிலும் கொடுத்தான்.

28 அரசன் ஆலயத்துக்குள் நுழையும் போது, அரண்மனைச் சேவகர் அவற்றைப் பிடித்துக் கொண்டு அரசனுக்கு முன் நடந்து போவார்கள். பின்பு அவற்றை ஆயுதக் கிடங்கில் திரும்ப வைப்பார்கள்.

29 ரொபோவாமின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.

30 ரொபோவாமுக்கும் எரோபோவாமுக்கும் இடையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போர் நடந்து வந்தது.

31 ரொபோவாம் தன் முன்னோரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் தன் முன்னோர் அருகே அடக்கம் செய்யப்பட்டான். அம்மோனியளாகிய அவன் தாய்க்கு நாமா என்று பெயர். அவனுடைய மகன் அபியாம் அவனுக்குப்பின் அரசு கட்டில் ஏறினான்.

அதிகாரம் 15

1 நாபாத்தின் மகன் எரோபோவாம் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அபியாம் யூதாவின் அரசன் ஆனான்.

2 மூன்று ஆண்டுகள் யெருசலேமில் ஆட்சி செலுத்தினான். அபெசலோனின் மகள் மாக்கா என்பவளே அவனுடைய தாய்.

3 அபியாம் தன் தந்தை தனக்கு முன் செய்திருந்த எல்லாப் பாவங்களிலும் வீழ்ந்தான். அவனது இதயம் தன் தந்தையாகிய தாவீதின் இதயத்தைப்போல் தன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிறைவுள்ளதாய் இருக்கவில்லை.

4 ஆயினும், தாவீதின் பொருட்டு அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் யெருசலேமில் அவனுக்கு ஒரு விளக்கை அளித்தார்; இவ்வாறு யெருசலேமை நிலைநாட்ட அவனுக்குப் பிறகு ஒரு மகன் உதிக்கச் செய்தார்.

5 தாவீது ஏத்தையனான உரியாசின் மட்டில் நடந்து கொண்டதைத் தவிர, தம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் கட்டளைகளினின்று வழுவாது அவர் திருமுன் நேர்மையாக நடந்து வந்திருந்தார்.

6 எனினும் ரொபோவாம் தன் வாழ்நாள் முழுவதும் எரோபோவாமோடு போரிட்டு வந்தான்.

7 அபியாமின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. அபியாமுக்கும் எரோபோவாமுக்கும் இடையே போர் நடந்தது.

8 அதன் பிறகு அபியாம் தன் முன்னோரோடு துயில் கொண்டான். அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தார்கள். அவன் மகன் ஆசா அவனுக்குப் பிறகு அரியணை ஏறினான்.

9 இஸ்ராயேலின் அரசன் எரோபோவாம் ஆட்சியின் இருபதாம் ஆண்டில் ஆசா யூதாவின் அரசன் ஆனான்.

10 அவன் நாற்பத்தோர் ஆண்டுகள் யெருசலேமில் அரசாண்டான். அபெசலோனின் மகள் மாக்கா என்பவளே அவனுடைய தாய்.

11 ஆசா தன் தந்தை தாவீதைப் போல் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான்.

12 அவன் பெண் தண்மையுள்ள ஆடவரைத் தன் நாட்டிலிருந்து துரத்தி விட்டுத் தன் முன்னோர் செய்து வைத்திருந்த அருவருப்பான சிலைகளை எல்லாம் தகர்த்தெறிந்தான்.

13 அன்றியும் ஆசாவின் தாய் மாக்கா, பிரியாப் என்ற சிலைக்கு ஒரு தோப்பை நேர்ந்துவிட்டு, அங்கே அதற்குச் செலுத்தப்பட்ட பலிகளை நடத்தி வந்தாள். அது நடவாதவாறு ஆசா அவளை நீக்கிவிட்டு கோயிலை இடித்து அதனுள் இருந்த அந்த அருவருப்பான சிலையைத் தவிடுபொடியாக்கிக் கெதிரோன் நதிக்கரையில் அதைச் சுட்டெரித்தான்.

14 ஆனால் மேட்டுக் கோயில்களை ஆசா அழிக்கவில்லை. எனினும் ஆசா தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவர் திருமுன் உத்தமனாய் நடந்து வந்தான்.

15 அவன் தந்தை புனிதப்படுத்தி ஆண்டவருக்கு நேர்ந்து கொண்ட பொன்னையும் வெள்ளியையும் தட்டு முட்டுகளையும் ஆசா ஆண்டவரின் ஆலயத்துக்குக் கொண்டுவந்தான்.

16 ஆசாவுக்கும் இஸ்ராயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போர் நடந்து கொண்டிருந்தது.

17 இஸ்ராயேலின் அரசன் பாசா யூதாவுக்கு வந்து மன்னன் ஆசாவின் நாட்டில் ஒருவரும் காலெடுத்து வைக்க முடியாதபடி ராமா நகரைக் கட்டி எழுப்பினான்.

18 அப்பொழுது ஆசா ஆலயத்தின் கருவூலங்களிலும், அரண்மனையின் கருவூலங்களிலும் எஞ்சியிருந்த பொன் வெள்ளி முழுவதையும் எடுத்து அவற்றைத் தன் ஊழியர் கையில் கொடுத்து அவர்களைத் தமாஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகன் தப்ரேமோனுக்குப் பிறந்த பெனாதாத் என்ற சீரியாவின் மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.

19 எனக்கும் உமக்கும், என் தந்தைக்கும் உம் தந்தைக்கும் உடன்படிக்கை இருந்ததே. அதை முன்னிட்டுப் பொன், வெள்ளி முதலியவற்றை உமக்கு அனுப்புகிறேன். மேலும், இஸ்ராயேலின் அரசன் பாசா என் எல்லையை விட்டு விலகிப் போகும்படி நீர் தயவு செய்து வந்து அவனோடு நீர் செய்துகொண்ட உடன்படிக்கையை முறித்து விடும் என்று சொல்லச் சொன்னான்.

20 பெனாதாத் அரசன் ஆசாவுக்கு இணங்கித் தன் படைத்தலைவர்களை இஸ்ராயேலின் நகர்கள்மேல் படையெடுக்குமாறு அனுப்பினான். அவர்கள் ஐயோனையும் தானையும், மாக்கா என்ற அபேல்தோமையும், கென்னரோத் முழுவதையும், அதாவது நெப்தலி நாடு முழுவதையும் தாக்கி முறியடித்தார்கள்.

21 பாசா அதைக் கேள்வியுற்ற போது ராமா நகரைக் கட்டுவதை விட்டுவிட்டுத் தேர்சாவுக்குத் திரும்பி வந்தான்.

22 அப்பொழுது அரசன் ஆசா யூதாவெங்கும் ஆள் அனுப்பி, எல்லாரும் போய் ராமாவைக் கட்டி எழுப்பப் பாசா பயன்படுத்தி வந்த கற்களையும் மரங்களையும் எடுத்துவரச் சொன்னான். பிறகு அவற்றைக் கொண்டு அரசன் ஆசா பெஞ்சமின் நாட்டில் காபாவையும் மாஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.

23 ஆசாவின் மற்ற எல்லாச் செயல்களும், அவனுடைய எல்லாச் சாதனைகளும் அவன் செய்தவை யாவும், அவன் கட்டின நகர்களின் வரலாறும் யூதாவின் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. அவனுடைய இறுதி நாட்களில் அவன் கால்களில் நோய் கண்டது.

24 ஆசா தன் முன்னோரோடு துயில் கொண்ட பின் தன் தந்தை தாவீதின் நகரில் தன் முன்னோருக்கருகில் புதைக்கப்பட்டான். அவன் மகன் யோசபாத் அவனுக்குப்பின் ஆட்சி பீடம் ஏறினான்.

25 யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறின இரண்டாம் ஆண்டில் எரோபோவாமின் மகன் நாதாப் இஸ்ராயேலுக்கு அரசனாகி ஈராண்டுகள் அதை ஆண்டு வந்தான்.

26 அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து தன் தந்தையின் வழியிலும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவனுடைய தீய வழியிலும் நடந்து வந்தான்.

27 இசாக்கார் குடும்பத்தைச் சேர்ந்த ஆகியாசின் மகன் பாசா நாதாபுக்கு எதிராகச் சதி செய்து கெபெதோனில் அவனைக் கொலை செய்தான். கெபெதோன் என்பது நாதாபும் இஸ்ராயேலர் அனைவரும் முற்றுகை இட்டிருந்த ஒரு நகர்.

28 இப்படி யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபைச் கொன்றுவிட்டு அவனுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து வந்தான்.

29 பாசா அரசனானவுடன், ஆண்டவர் சிலோனித்தராகிய ஆகியாசு என்ற தம் ஊழியர் மூலம் சொல்லியிருந்த வார்த்தையின் படியே, எரோபோவாமின் வீட்டார் அனைவரையும் கொன்று குவித்தான். அதோடு அவன் பிள்ளைகளில் ஒன்றையும் விட்டு வைக்காது, அவனது குலத்தையே அடியோடு அழித்தான்.

30 ஏனெனில் எரோபோவாம் செய்த பாவங்களை முன்னிட்டும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவன் பாவங்களை முன்னிட்டும், அவர்கள் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வருவித்த பாவத்தின் பொருட்டும் இது நிறைவேறிற்று.

31 நாதாபின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ராயேல் மன்னர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.

32 ஆசாவுக்கும் இஸ்ராயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போர் நடந்து வந்தது.

33 யூதாவின் அரசன் ஆசா அரசனான மூன்றாம் ஆண்டில் ஆகியாசின் மகன் பாசா இஸ்ராயேல் அனைத்துக்கும் தேர்சாவில் அரசனாகி இருபத்து நான்கு ஆண்டுகள் அரசோச்சி வந்தான்.

34 ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து எரோபோவாமின் வழியிலும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவனுடைய தீய வழியிலும் நடந்து வந்தான்.

அதிகாரம் 16

1 பாசாவுக்கு எதிராக ஆண்டவர் அனானியின் மகன் ஏகுவின் மூலம் திருவுளம் பற்றினதாவது:

2 நாம் தூசியிலிருந்து உன்னைக் கை தூக்கி, நம் மக்கள் இஸ்ராயேல்மேல் உன்னைத் தலைவனாக ஏற்படுத்தினோம்; நீயோ எரோபோவாமின் வழிநடந்து நம் மக்களாகிய இஸ்ராயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி, அவர்களுடைய பாவங்களால் நமக்குக் கோபம் வருவித்தாய்.

3 எனவே, இதோ நாம் பாசாவின் சந்ததியாரையும், அவன் வீட்டாரின் சந்ததியாரையும் அழித்து, நாபாத்தின் மகன் எரோபோவாமின் வீட்டைப் போல் உன் வீட்டையும் பாழாக்குவோம்.

4 பாசாவின் சந்ததியாரில் நகருள் இறப்பவன் நாய்களுக்கு இரையாவான்; நகருக்கு வெளியே இறப்பவன் வானத்துப் பறவைகளுக்கு இரையாவன்.

5 பாசாவின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் நிகழ்த்திய போர்களும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.

6 பாசா தன் முன்னோரோடு துயிலடைந்து தேர்சாவில் புதைக்கப்பட்டான். அவன் மகன் ஏலா அவனுக்குப் பின் அரசு கட்டில் ஏறினான்.

7 பாசா தன் செயல்களால் ஆண்டவருக்குக் கோபமுண்டாக்கி, அவர் திருமுன் செய்த எல்லாப் பாவங்களின் பொருட்டு ஆண்டவர் எரோபோவாம் வீட்டாரைப் பாழாக்கினது போல் இவன் வீட்டாரையும் பாழாக்கிப் போடுவார் என்று, அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினர் பாசாவுக்கும் அவன் வீட்டாருக்கும் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்திருந்தார். எனவே, அரசன் சினம் கொண்டு அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினரைக் கொலை செய்தான்.

8 யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய இருபத்தாறாம் ஆண்டில் பாசாவின் மகனான ஏலா இஸ்ராயேலின் அரசனாகித் தேர்சாவில் ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.

9 அவனது பாதிக் குதிரைப் படைக்குத் தலைவனாய் இருந்த சாம்பிரி என்ற அவனுடைய ஊழியன் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். தேர்சாவின் ஆளுநனான அர்சாவின் வீட்டில் ஏலா குடி போதையில் இருந்தான்.

10 அப்போது திடீரென சாம்பிரி உட்புகுந்து ஏலாவைக் கொன்றான். இவ்வாறு யூதாவின் அரசன் ஆசா ஆட்சி பீடம் ஏறின இருபத்தேழாம் ஆண்டில் அவன் அரசன் ஆனான்.

11 அவன் அரசனாக அரியணை ஏறியவுடன், பாசாவின் வீட்டார் அனைவரையும் கொன்றான். இவனுடைய உற்றாரிலாவது நண்பரிலாவது யாரையும் அவன் விட்டு வைக்கவில்லை.

12 இவ்வாறு இறைவாக்கினரான ஏகுவின் மூலம் ஆண்டவர் பாசாவுக்குச் சொல்லியிருந்த வாக்கின்படியே சாம்பிரி பாசாவின் வீட்டார் அனைவரையும் அழித்தான்.

13 பாசாவும் அவன் மகன் ஏலாவும் தங்கள் வீண் பகட்டால் தாங்களும் பாவிகளாகி, இஸ்ராயேலையுல் பாவத்தில் ஆழ்த்தி இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வரச் செய்தனர். அதன் காரணமாகவே இது நிகழ்ந்தது.

14 ஏலாவின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி ஆகமத்தில் எழுதப்பட்டன.

15 யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய இருபத்தேழாம் ஆண்டில் சாம்பிரி தேர்சாவில் இருந்துகொண்டு ஏழுநாள் அரசாண்டான். அப்போது பிலிஸ்தியருக்குச் சொந்தமாய் இருந்த கெப்பெத்தோன் என்ற நகரை இஸ்ராயேலரின் படை வளைத்து முற்றுகையிட்டது.

16 அப்போது, 'சாம்பிரி கலகம் செய்து அரசனைக் கொன்று விட்டான்' என்று கேள்விப்பட்டவுடன் இஸ்ராயேலர் எல்லாரும் கூடி, அன்று பாளையத்தில் இருந்த இஸ்ராயேலின் படைத்தலைவனாகிய அம்ரியை அரசனாக்கினார்கள்.

17 அப்போது அம்ரி கெப்பெத்தோனை விட்டுப் புறப்பட்டு இஸ்ராயேல் படையோடு வந்து தேர்சாவை வளைத்து முற்றுகையிட்டான்.

18 நகர் பிடிபடப்போகிறது எனச் சாம்பிரி அறிந்து, அரண்மனைக்குள் புகுந்து அதைத் தீக்கிரையாக்கினான்; தானும் தீக்குளித்தான்.

19 அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து எரோபோவாமின் வழியிலும், இஸ்ராயேலரைப் பாவத்துக்கு ஆளாக்கிய அவனுடைய தீயவழியிலும் நடந்து, தன் பாவங்களிலே மடிந்தான்.

20 சாம்பிரியின் மற்றச் செயல்களும் அவன் செய்த சூழ்ச்சிகளும் புரிந்த கொடுமைகளும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.

21 அப்போது இஸ்ராயேல் மக்கள் இரு வகுப்பாய்ப் பிரிந்து ஒருசாரார் கினேத்தின் மகன் தெப்னியை அரசனாக்கி அவனைப் பின் சென்றனர்.

22 ஆயினும் கினேத்தின் மகன் தெப்னியைப் பின்பற்றினவர்களை விட அம்ரியைப் பின்பற்றினவர்களே அதிக வலிமையுற்றனர். தெப்னி இறந்தான்; அம்ரியோ இன்னும் ஆட்சி செலுத்தி வந்தான்.

23 யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறின முப்பத்தோராம் ஆண்டில் அம்ரி அரசைக் கைப்பற்றி, இஸ்ராயேலில் பன்னிரு ஆண்டுகளும், தேர்சாவில் ஆறு ஆண்டுகளும் ஆட்சி புரிந்தான்.

24 அப்பொழுது அவன் சோமேர் என்பவனிடமிருந்து சமாரியர் மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி அம்மலையில்மேல் ஒரு நகரைக் கட்டி, மலையின் உரிமையாளன் சோமேரின் பெயரின்படியே அதற்குச் சமாரியா என்று பெயர் இட்டான்.

25 அம்ரி ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட மிகவும் இழிவான முறையில் நடந்து வந்தான்.

26 இவன் நாபாத்தின் மகன் எரோபோவாமின் எல்லா வழிகளிலும், இஸ்ராயேலைப் பாவத்துக்கு உள்ளாக்கிய அவனுடைய பாவ வழிகளிலும் நடந்து வந்தான். இவ்வாறு தன் வீண் பகட்டால் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வருவித்தான்.

27 அம்ரியின் மற்றச் செயல்களும், அவன் செய்த போர்களும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.

28 அம்ரி தன் முன்னோரோடு துயில் கொண்டு சமாரியாவில் புதைக்கப்பட்டான். அவன் மகன் ஆக்காப் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.

29 யூதாவின் அரசன் ஆசா ஆட்சியைக் கைப்பற்றின முப்பத்தெட்டாம் ஆண்டில் அம்ரியின் மகன் ஆக்காப் இஸ்ராயேலின் அரசனாகிச் சமாரியாவில் இஸ்ராயேலின் மேல் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.

30 அம்ரியின் மகன் ஆக்காப் தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட ஆண்டவர் திருமுன் அதிகப் பாவங்கள் புரிந்தான்.

31 நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளில் நடந்ததுமின்றி, சீதோனியரின் அரசன் எத்பாலின் மகள் ஜெசாபேலை மணந்து கொண்டான். பின்னர் பாவாலுக்கு ஊழியம் செய்து அதை வழிபட்டான்.

32 அவன் சமாரியாவில் கட்டியிருந்த பாவாலின் கோயிலில் பாவாலுக்கு ஒரு பலிபீடத்தையும் அமைத்திருந்தான். (விக்கிரக ஆராதனைக்காக)

33 ஒரு தோப்பையும் அமைத்திருந்தான். இப்படி ஆக்காப் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் உண்டாகும்படி, தனக்கு முன் இருந்த இஸ்ராயேலின் அரசர்கள் எல்லாரையும் விடப் பாவத்திற்கு மேல் பாவம் செய்து வந்தான்.

34 அவனது ஆட்சிக் காலத்தில் பேத்தல் ஊரானாகிய ஈயேல் எரிக்கோவைக் கட்டினான். நூனின் மகன் யோசுவா மூலம்ஆண்டவர் அறிவித்திருந்தபடியே, அவன் அதற்கு அடிக்கல் நாட்டும் போது அபிராம் என்ற அவன் தலை மகனும், அதன் வாயில்களை அமைத்தபோது சேகுப் என்ற அவன் இளைய மகனும் இறந்தனர்.

அதிகாரம் 17

1 காலாதிலுள்ள குடிகளில் தெசுபித்தரான எலியாசு ஆக்காபை நோக்கி, "நான் வழிபட்டு வரும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினால் அன்றி இவ்வாண்டுகளில் பனியும் மழையும் பெய்யா" என்றார்.

2 மேலும் ஆண்டவர் எலியாசை நோக்கி,

3 நீ இவ்விடத்தை விட்டுக் கிழக்கு நோக்கிச் சென்று யோர்தானுக்கு எதிரேயுள்ள காரீத் ஆற்றோரத்தில் ஒளிந்துகொள்.

4 அவ்வாற்றின் தண்ணீரைப் பருகு. அவ்விடத்தில் உனக்கு உணவளிக்கக் காகங்களுக்குக் கட்டளை இட்டுள்ளோம்" என்றார்.

5 இதைக் கேட்டதும் எலியாசு புறப்பட்டு, ஆண்டவர் திருவுளம்பற்றினபடியே யோர்தானுக்கு எதிரே இருந்த காரீத் ஆற்றோரத்தில் தங்கியிருந்தார்.

6 காகங்கள் அவருக்குக் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தன. அவர் அவ்வாற்றின் நீரைப் பருகி வந்தார்.

7 நாட்டில் மழை பெய்யாததால் சில நாட்களுக்குப் பின் அந்த ஆறு வற்றிப் போயிற்று.

8 அப்போது ஆண்டவர் அவரை நோக்கி,

9 நீ சீதோனியரின் ஊராகிய சரேப்தாவுக்குச் சென்று அங்கே தங்கி இரு. உனக்கு உணவூட்டும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டுள்ளோம்" என்றார்.

10 அதன்படி எலியாசு புறப்பட்டுச் சரேப்தாவுக்குப் போனார். அந்நகரின் வாயிலை அடைந்த போது அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவர் அவளைக் கூப்பிட்டு, "நான் குடிக்க ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்றார்.

11 அவள் தண்ணீர் கொண்டுவரச் செல்கையில் பின்னிருந்து சத்தமிட்டு, "எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வா" என்றார்.

12 அவள் அவருக்கு மறுமொழியாக, "உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என்னிடம் அப்பம் இல்லை. என் பானையில் ஒரு சிறங்கை மாவும், கலயத்தின் அடியில் கொஞ்சம் எண்ணெயுமே இருக்கின்றன. அப்பம் சுடத்தான் இந்த இரண்டொரு விறகைப் பொறுக்கினேன். அதைச் சாப்பிட்ட பின் நானும் என் மகனும் மீண்டும் உண்ண ஒன்றுமில்லாமல் சாவோம்" என்றாள்.

13 அப்போது எலியாசு அவளைப் பார்த்து, "அஞ்சாதே; போய், நீ சொன்னபடியே செய். எனினும் முதலில் அதில் ஒரு சிறிய அப்பம் சுட்டு எனக்குக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் அப்பம் தயார் செய்யலாம்.

14 ஏனென்றால், 'ஆண்டவர் நிலத்தில் மழை பொழியச் செய்யும் வரை உன் பானையின் மாவு செலவழிந்து போவதுமில்லை; கலயத்தின் எண்ணெய் குறைந்து போவதுமில்லை' என்று இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறார்" என்றார்.

15 அவள் போய் எலியாசின் சொற்படி செய்தாள். அவரும் உண்டார்; அவளும் அவள் வீட்டாரும் உண்டனர்.

16 ஆண்டவர் எலியாசின் மூலம் சொன்ன வார்த்தையின் படியே அன்று முதல் பானையின் மாவு செலவழிந்ததும் இல்லை; கலயத்தின் எண்ணெய் குறைந்ததுமில்லை. இதன் பிறகு,

17 குடும்பத் தலைவியாகிய அப் பெண்ணின் மகன் நோயுற்றான். அந்நோய் எவ்வளவு கொடுமையாயிருந்ததென்றால், அவன் உயிர் நீத்தான்.

18 அப்போது அப் பெண் எலியாசை நோக்கி, "கடவுளின் மனிதரே, உமக்கும் எனக்கும் என்ன? நீர் என் தீச் செயல்களை நினைவூட்டவும், என் மகனைச் சாகடிக்கவுமா என்னிடம் வந்தீர்?" என்றாள்.

19 அதற்கு எலியாசு, "உன் மகனை என்னிடம் கொடு" என்று சொன்னார். பின்னர் அவளது மடியிலிருந்த அப்பிள்ளையைத் தாமே வாங்கிக் கொண்டு தமது அறைக்குச் சென்றார். அங்கே அவனைத் தம் படுக்கையில் மேல் கிடத்தினார்.

20 என் கடவுளாகிய ஆண்டவரே, தன்னால் முடிந்த வரை என்னைப் பேணிவந்த இவ்விதவையின் மகனைச் சாகடித்து அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ?" என்று கடவுளை நோக்கிக் கதறியழுதார்.

21 பிறகு பிள்ளையின் உடலை அளந்தாற்போல் அவர் மும்முறை அதன்மேல் படுத்து, "என் கடவுளாகிய ஆண்டவரே, இப்பிள்ளையின் உயிர் இதன் உடலில் திரும்ப நுழையுமாறு செய்தருளும்" என்று ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.

22 ஆண்டவர் எலியாசின் விண்ணப்பத்திற்கு இரங்கினார். பிள்ளையின் உயிர் திரும்பி வர அவன் உயிர் பிழைத்தான்.

23 அப்பொழுது எலியாசு பிள்ளையை எடுத்துக் கொண்டு மேல் மாடியிலிருந்து கீழ்வீட்டுக்கு வந்து அவனை அவன் தாயின் கையிலே கொடுத்து, "இதோ, உன் மகன் உயிரோடு இருக்கின்றான்" என்றார்.

24 அப்பொழுது அம்மாது எலியாசை நோக்கி, "நீர் கடவுளின் மனிதர் என்றும், உமது வாயிலிருந்து பிறக்கும் ஆண்டவருடைய வாக்கெல்லாம் உண்மை என்றும் இதன் மூலம் அறிந்து கொண்டேன்" என்றாள்.

அதிகாரம் 18

1 நாட்கள் பல நகர்ந்தன. மூன்றாவது ஆண்டில் ஆண்டவர் எலியாசை நோக்கி, "நீ ஆக்காபிடம் செல். நாம் நாட்டின் மேல் மழை பொழியச் செய்வோம்" என்று திருவுளம் பற்றினார்.

2 அப்படியே எலியாசு ஆக்காபிடம் போனார். சமாரியாவில் கொடும் பஞ்சம் நிலவியது.

3 எனவே, ஆக்காப் தன் அரண்மனை மேற்பார்வையாளனாகிய அப்தியாசை வரவழைத்தான். அப்தியாசோ தெய்வ பயம் உள்ளவன்.

4 ஜெசாபேல் ஆண்டவரின் இறைவாக்கினர்களைக் கொன்று வந்த போது, அப்தியாசு நூறு இறைவாக்கினர்களைக் கூட்டி வந்து, ஐம்பது ஐம்பது பேராக அவர்களைக் குகைகளில் ஒளித்து வைத்தான்; அதோடு உணவு அளித்து அவர்களைக் காப்பாற்றி வந்தான்.

5 ஆக்காப் அப்தியாசை நோக்கி, "நீ நாட்டிலுள்ள எல்லாப் பள்ளத்தாக்குகளுக்கும் ஊருணிகளுக்கும் சென்று, நம் கால்நடைகளை எல்லாம் இழந்துபோகாமல் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடு காப்பாற்றும்படி நமக்குப் புல் அகப்படுமா என்று பார்த்து வா" என்றான்.

6 இருவரும் நாட்டைச் சுற்றிப் பார்க்கும்படி அதை இரு பகுதிகளாகப் பிரித்த பின்னர், ஆக்காப் ஒரு வழியாயும் அப்தியாசு வேறு வழியாயும் போனார்கள்.

7 அப்தியாசு போகும் வழியில் எலியாசைச் சந்தித்தான். அப்தியாசு அவரை அடையாளம் அறிந்து நெடுந் தெண்டனிட்டு வணங்கி, "நீர் என் தலைவர் எலியாசு தானா?" என்று கேட்டான்.

8 அதற்கு அவர், "நான் தான். நீ போய், 'இதோ எலியாசு வந்திருக்கிறார்' என்று உன் தலைவனுக்குச் சொல்" என்றார்.

9 அதற்கு அப்தியாசு, "ஆக்காப் என்னைக் கொன்று போடும்படி நீர் உம் அடியானை அவன் கையில் ஒப்படைக்க நான் என்ன பாவம் செய்துள்ளேன்?

10 உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என் தலைவன் உம்மைத் தேடும்படி மனிதரை அனுப்பாத இனமுமில்லை, நாடுமில்லை. நீர் ஓரிடத்திலும் காணப்படவில்லை என்று அவர்கள் சொன்ன போது, அவன் அந்தந்த நாட்டிடமிருந்தும் இனத்தாரிடமிருந்தும், உம்மைக் காணவில்லை என்று உறுதி பெற்றுக் கொண்டான்.

11 இப்பொழுது, 'நீ போய் உன் தலைவனிடம்: "இதோ எலியாசு வந்திருக்கிறார்" என்று சொல்' என்று நீர் சொல்லுகிறீரே.

12 நான் உம்மைவிட்டு அகன்றவுடனே, ஒருவேளை ஆண்டவருடைய ஏவுதலால் நான் அறியாத இடத்திற்கு நீர் சென்றுவிடலாம். அப்போது நான் ஆக்காபிடம் போய் உமது வருகையை அறிவிக்க, அவன் உம்மைக் காணாவிட்டால் என்னைக் கொன்று போடுவானே. உம் அடியானாகிய நான் இளமை தொட்டு ஆண்டவருக்கு அஞ்சி நடக்கிறேன்.

13 ஜெசாபேல் ஆண்டவரின் இறைவாக்கினரைக் கொன்று வந்த போது நான் அவர்களில் நூறு பேரை இரண்டு குகைகளிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்து வைத்து, உணவு அளித்து அவர்களைக் காப்பாற்றி வந்தேன் என்று என் தலைவராகிய உமக்குத் தெரியாதா?

14 இப்பொழுது என் தலைவன் என்னைக் கொன்று விடும்படியாகவா நீர், 'இதோ எலியாசு வந்திருக்கிறார்' என்று அவனிடம் போய்ச் சொல்லச் சொல்லுகிறீர்?" என்றான்.

15 அதற்கு எலியாசு, "நான் வழிபட்டு வரும் சேனைகளின் ஆண்டவர் மேல் ஆணை! இன்றே நான் ஆக்காபிடம் செல்வேன்" என்றார்.

16 அப்போது அப்தியாசு போய் ஆக்காபைக் கண்டு அவனுக்கு அதை அறிவிக்கவே, உடனே ஆக்காப் எலியாசைச் சந்திக்க வந்தான்.

17 ஆக்காப் எலியாசைக் கண்டவுடன் அவரை நோக்கி, "இஸ்ராயேலில் கலகம் செய்து வருபவன் நீ தானே?" என்றான்.

18 அதற்கு எலியாசு, "இஸ்ராயேலில் கலகம் செய்தவன் நான் அன்று. ஆண்டவரின் கட்டளையை மீறிப் பாவாலைப் பின்பற்றினதால் நீரும் உம் தந்தை வீட்டாருமே இஸ்ராயேலில் கலகம் செய்தீர்கள்.

19 இப்போது கார்மேல் மலையின் மேல் இஸ்ராயேலர் அனைவரையும், பாவாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பது பேரையும், ஜெசாபேலின் பந்தியில் உணவருந்தி வரும் பரந்த தோப்புகளின் தீர்க்கதரிசிகளான நானூறு பேரையும் என்னிடம் அழைத்து வர ஆட்களை அனுப்பும்" என்றார்.

20 அப்படியே ஆக்காசு இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் கூட்டி வர ஆட்களை அனுப்பி, கார்மேல் மலையிலிருந்த அந்தத் தீர்க்கதரிசிகளையும் அழைத்து வரும்படி செய்தான்.

21 அப்போது எலியாசு மக்களுக்கு முன் சென்று, "நீங்கள் எதுவரை இருபக்கமும் சாய்ந்து நடக்கும் நொண்டியைப் போல் இருப்பீர்கள்? ஆண்டவர் கடவுளானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாவால் கடவுளானால் அவனைப் பின்பற்றுங்கள்" என்றார். மக்கள் மறுமொழியாக ஒன்றும் சொல்லவில்லை.

22 எலியாசு மறுமுறையும் மக்களை நோக்கி, "ஆண்டவரின் இறைவாக்கினரில் எஞ்சியிருப்பவன் நான் ஒருவனே. பாவாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பது பேர் உள்ளனர்.

23 இருப்பினும், இரண்டு காளைகளை எம்மிடம் கொண்டு வாருங்கள். ஒரு காளையை அவர்கள் தேர்ந்து கொண்டு அதைத் துண்டு துண்டாய் வெட்டித் தீப்போடாமல் விறகுகளின் மேல் வைக்கட்டும். நானோ மற்றக் காளையை அப்படியே செய்து தீப்போடாமல் விறகுகளின் மேல் வைக்கிறேன்.

24 நீங்கள் உங்கள் தெய்வங்களைப் பெயர் சொல்லி அழைத்து வேண்டிக்கொள்ளுங்கள். நானும் என் கடவுளைப் பெயர் சொல்லி அழைத்து வேண்டிக்கொள்கிறேன். அப்போது தீயை உண்டுபண்ணுவதின் மூலம் நம் மன்றாட்டுகளுக்குச் செவி மடுக்கும் கடவுளே உண்மைக் கடவுள்" என்றார். அதற்கு மக்கள் எல்லாரும், "இதுவே சரியான யோசனை" என்றனர்.

25 அப்போது எலியாசு பாவாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி, "நீங்கள் பலராய் இருப்பதால், நீங்களே முதலில் ஒரு காளையைத் தேர்ந்து கொண்டு அதைத் தயார் செய்து தீப்போடாமல் உங்கள் தெய்வங்களின் பெயரை மட்டும் சொல்லி அழைத்து வேண்டிக்கொள்ளுங்கள்" என்றார்.

26 அத்தீர்க்கதரிசிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை வாங்கி அதைத் தயார் செய்து, "பாவாலே, எங்களுக்குச் செவிகொடும்" என்று காலை முதல் நண்பகல் வரைத் தங்கள் பலிபீடத்தைப் பலமுறை சுற்றிவந்து பாவாலின் பெயரைச் சொல்லி அழைத்து வேண்டிக் கொண்டனர். இருப்பினும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை; மறுமொழி கொடுப்பாரும் இல்லை.

27 நண்பகல் வேளையில் எலியாசு கிண்டலாக அவர்களை நோக்கி, "இன்னும் உரத்த குரலில் செபியுங்கள்; அவர் கடவுள் அல்லரோ? சிலவேளை அவர் உரையாடிக் கொண்டிருப்பார்; அல்லது சத்திரத்தில் தங்கியிருப்பார்; அல்லது அவர் பயணம் சென்றிருக்கக் கூடும்; ஒருவேளை, அவர் தூங்கிக் கொண்டிருப்பார்; எனவே, அவரை எழுப்ப வேண்டியிருக்கலாம்" என்றார்.

28 அவர்கள் உரத்த குரலில் கூப்பிட்டுத் தம் வழக்கத்தின் படியே, இரத்தம் மிகுதியாக வடியும் வரைக் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களையே குத்திக் கொண்டனர்.

29 பிற்பகலிலும் அவர்கள் கத்திக் கொண்டுதான் இருந்தார்கள். இதோ பலி செலுத்தும் நேரமும் வந்தது. இருப்பினும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை; மறுமொழி கொடுப்பாரும் இல்லை; அவர்களது மன்றாட்டைக் கவனிப்பாரும் இல்லை.

30 அப்போது எலியாசு எல்லா மக்களையும் நோக்கி, "எல்லாரும் என்னிடம் வாருங்கள்" என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகே வந்தனர். உடனே எலியாசு முன்னே இடிந்து கிடந்த ஆண்டவருடைய பலிபீடத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்.

31 உனக்கு இஸ்ராயேல் என்ற பெயர் இருப்பதாக" என்று ஆண்டவர் யாக்கோபுக்குச் சொல்லியிருந்ததின் பொருட்டு, எலியாசு யாக்கோபின் புதல்வர்களுடைய கோத்திரங்களின் கணக்குப்படியே பன்னிரு கற்களை எடுத்தார்.

32 பின்னர் அக்கற்களைக் கொண்டே ஆண்டவருடைய பெயரால் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். மேலும் பலிபீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுசால் அகலம் உள்ள ஒரு வாய்க்காலை வெட்டினார்.

33 விறகுகளை அடுக்கி, ஒரு காளையைத் துண்டு துண்டாய் வெட்டி, விறகுகளின் மேல் வைத்தார்.

34 மக்களை நோக்கி, "நான்கு குடம் தண்ணீர் கொணர்ந்து தகனப் பலியின் மேலும் விறகுகளின் மேலும் ஊற்றுங்கள்" என்றார். பிறகு, "இன்னும் ஒருமுறை அப்படியே ஊற்றுங்கள்" என்றார். "மூன்றாம் முறையும் அப்படியே ஊற்றுங்கள்" என்று அவர் கூற, அவர்கள் மூன்றாம் முறையும் ஊற்றினார்கள்.

35 அப்போது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடி வாய்க்காலையும் நிரப்பிற்று.

36 தகனப்பலி செலுத்தும் நேரமானவுடன் இறைவாக்கினர் எலியாசு பீடத்தருகே வந்து, "ஆபிரகாம், ஈசாக், யாக்கோப் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் இஸ்ராயேலின் கடவுள் என்றும், நான் உம்முடைய ஊழியன் என்றும், இவற்றை எல்லாம் நான் உமது வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்யும்.

37 நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும், நீரே இம்மக்களின் மனத்தை மாற்றியுள்ளீர் என்றும் இவர்கள் அறியும்படி என் மன்றாட்டைக் கேட்டருளும்; ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்" என்றார்

38 உடனே ஆண்டவரிடமிருந்து தீ இறங்கிவந்து அந்தத் தகனப் பலியையும் விறகுகளையும் கற்களையும் மணலையும் சுட்டெரித்து, வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது.

39 மக்கள் அனைவரும் இதைக் கண்டவுடனே நெடுந்தெண்டனிட்டு விழுந்து, "ஆண்டவரே கடவுள், ஆண்டவரே கடவுள்" என்றனர்.

40 அப்போது எலியாசு அவர்களை நோக்கி, "நீங்கள் பாவாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப் போகாதபடி அவர்களைப் பிடியுங்கள்" என்றார். மக்கள் அவர்களைப் பிடிக்க, எலியாசு அவர்களைக் கிசோன் ஆற்றுக்குக் கொண்டு போய் அங்கே அவர்களைக் கொன்றார்.

41 பின்பு எலியாசு ஆக்காபை நோக்கி, "நீர் போய் உணவு அருந்தும்; ஏனெனில், பெரு மழையின் இரைச்சல் கேட்கிறது" என்றார்.

42 ஆக்காப் சாப்பிடப் போகவே, எலியாசு கார்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கே முழந்தாளிட்டுத் தம் முகத்தைத் தம் முழங்கால்களுக்கு இடையில் வைத்தவாறு,

43 தம் ஊழியனை நோக்கி, "நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்" என்றார். அவன் போய்ப் பார்த்து, "ஒன்றும் இல்லை" என்றான். எலியாசு அவனைப் பார்த்து, "ஏழு முறை சென்று பார்" என்றார்.

44 ஏழாம் முறை அவன் சென்று பார்த்தபோது, இதோ மனிதனின் அடிச் சுவட்டை ஒத்த ஒரு சிறிய மேகம் கடலிலிருந்து எழும்பி வந்தது. அப்போது எலியாசு தம் ஊழியனை நோக்கி, "நீ போய் ஆக்காபுக்கு: 'நீர் மழையில் அகப்பட்டுக் கொள்ளாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்' என்று சொல்" என்றார்.

45 அவன் புறப்படுவதற்குள் கார் முகில் சூழ, வானம் இருண்டது; காற்றும் அடித்தது. உடனே பெருமழை பெய்தது. ஆக்காப் தேரில் ஏறி ஜெஸ்ராயேலுக்குச் சென்றான்.

46 அந்நேரத்தில் ஆண்டவரின் கை எலியாசின் மேல் இருந்தது. அவரும் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு ஜெஸ்ராயேல் வரை ஆக்காபுக்கு முன்னே ஓடினார்.

அதிகாரம் 19

1 எலியாசு செய்த அனைத்தையும், அவர் பாவாலின் தீர்க்கதரிசிகள் அனைவரையும் கொன்று குவித்த விதத்தையும் ஆக்காப் ஜெசாபேலுக்கு அறிவித்தான்.

2 அப்பொழுது ஜெசாபேல் எலியாசிடம் தூதரை அனுப்பி, "நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போல் நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரை வாங்காதிருந்தால், தேவர்கள் எனக்குத் தகுந்த தண்டனை கொடுக்கட்டும்" என்று சொல்லச் சொன்னான்.

3 எனவே எலியாசு அதற்கு அஞ்சிப் பயணப்பட்டுத் தன் மனம் போனபோக்கில் சென்று யூதாவைச் சேர்ந்த பெர்சபியை அடைந்தார். அங்கே தம் ஊழியனை விட்டுவிட்டு,

4 பாலைவனத்தில் ஒருநாள் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து, தாம் சாகவேண்டுமெனக் கோரி, "ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும், ஏனெனில் நான் என் முன்னோரை விட நல்லவன் அன்று" என்று வேண்டினார்.

5 பின்னர் அச்சூரைச் செடியின் நிழலில் அவர் படுத்து உறங்கினார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் ஒருவர் அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு" என்றார்.

6 அவர் விழித்துப் பார்க்க, இதோ தணலிலே சுட்ட ஓர் உரொட்டியும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு குடித்தபின் திரும்பவும் படுத்துத் தூங்கினார்.

7 ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறையும் வந்து அவரைத் தட்டி எழுப்பி," எழுந்து சாப்பிடு. ஏனெனில், நீ இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது" என்றார்.

8 அப்பொழுது அவர் எழுந்து உண்டு குடித்தார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர் இரவு பகலாய் நாற்பது நாள் நடந்து, ஓரேப் என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

9 அவர் அங்கு வந்தபின், ஒரு குகைக்குள் தங்கியிருந்தார். அப்பொழுது ஆண்டவர் அவரை நோக்கி, "எலியாசு, நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று வினவினார்.

10 அதற்கு அவர் "சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் மாட்டு மிகுந்த ஆர்வ்ம் கொண்டவனாய் இருக்கிறேன். ஏனெனில் இஸ்ராயேல் மக்கள் உமது உடன்படிக்கையையும் புறக்கணித்து விட்டனர்; உமது பலிபீடங்களையும் தகர்த்து உம் இறைவாக்கினரையும் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டும் எஞ்சியிருக்க என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே" என்றார்.

11 அப்பொழுது அவர், "நீ வெளியே வந்து ஆண்டவருக்கு முன்பாக மலையின்மேல் நில்; ஏனெனில், ஆண்டவர் இதோ கடந்து செல்கிறார்" என்றார். அப்பொழுது ஆண்டவருக்கு முன்பாகக் குன்றுகளைப் பெயர்த்துக் கொண்டும், கற்பாறைகளைப் பிளந்துகொண்டும் வலுத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆயினும் அக்காற்றில் ஆண்டவர் இருக்கவில்லை. காற்றுக்குப் பின் நில நடுக்கம் ஏற்பட்டது; நில நடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை.

12 நில நடுக்கத்துக்குப்பின் தீ கிளம்பிற்று; தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் தென்றலின் மெல்லிரைச்சல் உண்டானது.

13 அதை எலியாசு கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது," எலியாசு, நீ அங்கே என்ன செய்கிறாய்?" என்ற குரல் கேட்டது. அதற்கு எலியாசு மறுமொழியாக,

14 சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்மாட்டு மிகுந்த ஆர்வம் கொண்டவனாய் இருக்கிறேன்; ஏனெனில் இஸ்ராயேல் மக்கள் உமது உடன்படிக்கையைப் புறக்கணித்துவிட்டனர்; உம் பலிபீடங்களையும் தகர்த்து உம் இறைவாக்கினரையும் வாளால்வெட்டிக் கொன்னு விட்டனர். நான் ஒருவன் மட்டும் எஞ்சியிருக்க, என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்றார்.

15 அப்பொழுது ஆண்டவர் அவரை நோக்கி, "பாலைவனம் மூலம் நீ வந்த வழியே திரும்பித் தமாஸ்குவுக்குச் செல். அவ்விடம் சேர்ந்தவுடன் சீரியாவுக்கு அரசனாக அசாயேலை அபிஷுகம் செய்.

16 பிறகு நாம்சியின் மகன் ஏகுவை இஸ்ராயேலுக்கு அரசனாகவும் அபேல்மேவுலா ஊரானான சாபாத்தின் மகன் எலிசேயுவை உனக்குப் பதிலாய் இறைவாக்கினராகவும் அபிஷுகம் செய்.

17 அசாயேலின் வாளுக்குத் தப்பினவன் எவனோ அவனை ஏகு கொன்று போடுவான். ஏகுவின் வாளுக்குத் தப்பினவனையோ எலிசேயு கொன்று போடுவான்.

18 ஆயினும் பாவால் முன்னிலையில் முழந்தாட்படியிடாதவர்களும், கையை முத்தி வணங்காதவர்களுமான ஏழாயிரம் பேரை நாம் இஸ்ராயேலில் விட்டு வைப்போம்" என்றார்.

19 அப்படியே எலியாசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, பன்னிரு ஏர் பூட்டி உழுத சாபாத்தின் மகன் எலிசேயுவைக் கண்டார். அவன் பன்னிரு ஏரில் ஒன்றை ஓட்டிக்கொண்டிருந்தான். எலியாசு அவனிடம் சென்று தம் போர்வையை அவன் மேல் போட்டார்.

20 உடனே எலிசேயு மாடுகளை விட்டுவிட்டு எலியாசைப் பின்சென்றார். "நான் என் தாய் தந்தையரிடம் விடைபெற்று வர அனுமதி கொடும்; அதற்குப் பின் உம்மைத் தொடர்ந்து வருகிறேன்" என்றார். அதற்கு அவர், "போய் வா; நான் செய்ய வேண்டியதை உனக்குச் செய்து விட்டேன்" என்றார்.

21 எலிசேயு எலியாசை விட்டு வந்து, ஒரு ஜோடி ஏர் மாடுகளைப் பிடித்து அடித்துத் தாம் உழுத கலப்பையைக் கொண்டு இறைச்சியைச் சமைத்து மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை அருந்தினர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாசைப் பின் சென்று அவருக்கு ஏவல் புரிந்து வந்தார்.

அதிகாரம் 20

1 சீரியாவின் அரசன் பெனாதாத் தன் எல்லாச் சேனைகளையும் குதிரைகளையும் தேர்களையும் முப்பத்திரண்டு அரசர்களையும் தன்னோடு கூட்டிக் கொண்டு சமாரியாவின் மேல் படையெடுத்து அதை முற்றுகையிட்டான்.

2 அப்பொழுது அவன் நகரில் இருந்த இஸ்ராயேலின் அரசன் ஆக்காபிடம் தூதரை அனுப்பி,

3 உன் வெள்ளியும் பொன்னும் என்னுடையவை. உன் மனைவியரும், உன் புதல்வரில் கெட்டிக்காரரும் என்னுடையவர்கள்' என்று பெனாதாத் சொல்லுகிறான்" என்று சொல்லச் சொன்னான்.

4 இஸ்ராயேலின் அரசன் அதற்கு மறுமொழியாக, "அரசராகிய என் தலைவ, உமது வார்த்தையின்படியே நானும், என் உடைமைகள் யாவும் உம்முடையவை தாம்" என்று சொல்லி அனுப்பினான்.

5 அத்தூதுவர்கள் திரும்பவும் வந்து, " உம்மிடம் எங்களை அனுப்பின பெனாதாத் சொல்லுகிறதாவது: 'உன் வெள்ளியையும் பொன்னையும், உன் மனைவியரையும் புதல்வர்களையும் நீ எனக்குக் கொடுக்க வேண்டும்.

6 ஆகையால் நாளை இந்நேரம் என் ஊழியரை உன்னிடம் அனுப்புவேன். அவர்கள் உன் வீட்டையும், உன் ஊழியரின் வீடுகளையும் சோதித்து அவர்கள் தமக்கு விருப்பமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வர் ' என்பதாம்" என்று சொன்னார்கள்.

7 அப்போது இஸ்ராயேலின் அரசன் நாட்டின் மூப்பரை எல்லாம் அழைத்து," இவன் நமக்குச் சதி செய்யும் விதத்தைக் கவனித்துப் பாருங்கள். இவன் என் மனைவியரையும் புதல்வர்களையும் என் பொன் வெள்ளியையும் கேட்டான். அதற்கு நான் தடை ஒன்றும் சொல்லவில்லையே" என்றான்.

8 அப்பொழுது எல்லா மூப்பரும் மக்கள் அனைவரும் அவனை நோக்கி, "நீர் அவனுக்குச் செவிகொடுக்கவும், அவன் கேட்டவற்றிற்கு இணங்கவும் வேண்டாம்" என்றனர்.

9 எனவே, ஆக்காப் பெனாதாத்தின் தூதுவரை நோக்கி, "நீங்கள் அரசராகிய என் தலைவருக்கு, ' நீர் முதல் முறை உம் அடியானாகிய எனக்குச் சொல்லி அனுப்பிய யாவற்றையும் நான் செய்வேன். இம் முறை நீர் கேட்பவற்றை நான் செய்ய இயலாது' என்று சொல்லுங்கள்" என்றான்.

10 தூதுவர்கள் திரும்பி வந்து இம்மறுமொழியைப் பெனாதாத்துக்குச் சொல்லவே, அவன் மறுபடியும் அவர்களை ஆக்காபிடம் அனுப்பி, "சமாரியாவின் சாம்பல் என்னைப் பின் தொடரும் எல்லா மக்களுடைய உள்ளங்கைகளிலும் அடங்காமற் போனால், தேவர்கள் எனக்குத் தகுந்த தண்டனை கொடுக்கட்டும்" என்று சொல்லச் சொன்னான்.

11 அதற்கு இஸ்ராயேலின் அரசன் மறுமொழியாக, "ஆயுதங்களை அணியும்போது பெருமை பாராட்டுவது நன்றன்று; அணிந்து கழற்றின பிறகு பெருமை பாராட்டுவதே நன்று' என்று உங்கள் தலைவனுக்குச் சொல்லுங்கள்" என்றான்.

12 இம்மறுமொழி வந்து சேர்ந்த நேரத்தில் பெனாதாத் மற்ற அரசர்களோடு தன் கூடாரத்தில் குடித்துக் கொண்டிருந்தான். இவ்வார்த்தையைக் கேட்டு அவன் தன் ஊழியரை நோக்கி, "நகரை முற்றுகையிடுங்கள்" என்றான். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

13 அப்பொழுது ஓர் இறைவாக்கினர் இஸ்ராயேலின் அரசன் ஆக்காபிடம் வந்து, "ஆண்டவர் சொல்கிறதாவது: 'அந்த ஏராளமான மக்கட் கூட்டத்தை எல்லாம் நீ கண்டாய் அன்றோ? இதோ நாமே உண் ஆண்டவர் என்று நீ அறியும்படி இன்று அதை உன் கையில் ஒப்படைப்போம்' என்பதே" என்றார்.

14 ஆக்காப் அவரைப் பார்த்து, "யார் மூலம் இது நடைபெறும்?" என்று கேட்க, "மாநில அதிபர்கள் மூலம்' என்று ஆண்டவர் சொல்கிறார்" என்றார். மறுபடியும் ஆக்காப், 'போரை யார் தொடங்க வேண்டும்?" என்று வினவ, அவர், "நீர் தான்" என்றார்.

15 ஆக்காப் மாநில அதிபர்களின் சேவகர்களை எண்ணிப் பார்க்க, அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டு பேர் என்று அறிய வந்தான். பின்பு இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் கணக்கிட, அவர்கள் ஏழாயிரம் பேர் என்று கண்டு கொண்டான்.

16 இவர்கள் நண்பகல் வேளையில் வெளியே புறப்பட்டனர். பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த ஏனைய முப்பத்திரண்டு அரசர்களும் பாசறையில் குடிவெறியில் இருந்தனர்.

17 மாநில அதிபர்களின் சேவகர் அணிவகுத்து எல்லாருக்கும் முதலில் வெளியே வந்தனர். பெனாதாத், "அவர்கள் யார்?" என்று பார்த்துவர ஆள் அனுப்பினான். "அவர்கள் சமாரியாவிலிருந்து வந்தவர்கள்" என்று அவனுக்கு அறிவித்தனர்.

18 அப்போது அவன், "அவர்கள் சமாதானம் நாடி வந்திருந்தாலும் சரி, போரிட வந்திருந்தாலும் சரி, அவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்றான்.

19 எனவே, மாநில அதிபர்களின் சேவர்கள் முன் செல்ல, எனைய படைகள் அவர்களைப் பின் தொடர்ந்தன.

20 அவர்களில் ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். சீரியர் புறமுதுகு காட்டி ஓட, இஸ்ராயேல் வீரர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். சீரியாவின் அரசன் பெனாதாத் குதிரை மீது ஏறித் தன்னோடு இருந்த வீரரோடு தப்பி ஓடிப்போனான்.

21 அந்நேரத்தில் இஸ்ராயேலின் அரசன் புறப்பட்டுக் குதிரைகளையும் தேர்களையும் முறியடித்துச் சீரியரில் பலரைக் கொன்று குவித்தான்.

22 பின்பு இறைவாக்கினர் இஸ்ராயேலின் அரசனிடம் வந்து அவனை நோக்கி, "நீர் போய் உம்மைப் பலப்படுத்திக் கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னது என்று கவனித்துப் பாரும். ஏனென்றால் அடுத்த ஆண்டில் சீரியாவின் அரசன் மறுபடியும் உமக்கு எதிராய்ப் போரிட வருவான்" என்றார்.

23 மேலும் சீரியாவின் அரச ஊழியர்கள் அரசனைப் பார்த்து, "அவர்களுடைய தேவர்கள் மலைக் கடவுளர். ஆகவே, அவர்கள் நம்மை வென்றனர். நாம் அவர்களோடு சமவெளியில் போரிடுவது நல்லது; அப்போது நாம் அவர்களை வெல்வோம்.

24 அதற்காக நீர் செய்ய வேண்டியது என்னவென்றால்: உமது படையிலிருந்து எல்லா அரசர்களையும் நீக்கி விட்டு, அவர்களுக்குப் பதிலாகப் படைத்தலைவர்களை நியமனம் செய்யும்.

25 உமது படைவீரரில் மடிந்தோரின் எண்ணிக்கைக்குச் சமமான வீரர்களையும், முன்பு நீர் கொண்டிருந்த குதிரைகள், தேர்களின் எண்ணிக்கைக்குச் சமமான குதிரைகளையும் தேர்களையும் சேர்த்து வையும். சமவெளியில் போரிடும் பொழுது நாம் அவர்களை மேற்கௌ;ள நீர் காண்பீர்" என்றனர். அவனும் அவர்களது பேச்சை நம்பி அவ்வாறே செய்தான்.

26 மறு ஆண்டில் பெனாதாத் சீரியரை அணிவகுத்து, இஸ்ராயேலோடு போரிட ஆபேக்குக்கு வந்தான்.

27 இஸ்ராயேல் மக்களும் தங்கள் படைகளை அணிவகுத்து, உணவுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, சீரியருக்கு எதிராய்ப் புறப்பட்டு வந்து அவர்களுக்கு எதிரே பாசறை அமைத்தனர். இவர்கள் இரண்டு சிறிய வெள்ளாட்டு மந்தைபோல் காணப்படச் சீரியரோ நாடு எங்கணும் நிரம்பி இருந்தனர்.

28 அப்போது கடவுளின் மனிதர் ஒருவர் வந்து இஸ்ராயேலின் அரசனைப் பார்த்து, "ஆண்டவருடைய வார்த்தையைக் கேளும்: ' ஆண்டவர் பள்ளத்ததாக்குகளின் கடவுள் அல்லர்; மலைகளின் கடவுளாய் இருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியால், நாம் இப்பெரிய மக்கட் கூட்டம் முழுவதையும் உன் கையில் ஒப்படைப்போம். அதனால் நாமே ஆண்டவர் என்று நீங்கள் அறிவீர்கள்' என்கிறார்" என்று கூறினார்.

29 ஏழு நாட்களாக இருபடைகளும் நேருக்கு நேர் அணிவகுத்து நின்றன. ஏழாவது நாளில் போர் மூண்டது. இஸ்ராயேல் மக்கள் ஒரே நாளில் சீரியரது காலாட் படையில் இலட்சம் பேரைக் கொன்று குவித்தனர்.

30 எஞ்சியோர் ஆபேக் நகருக்கு ஓடிப்போயினர். அங்கே அவர்களில் இருபத்தேழாயிரம் பேரின் மேல் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. பெனாதாத்தும் நகருக்குத் தப்பி ஓடி ஓர் அறையில் நுழைந்து அங்கே ஒளிந்து கொண்டான்.

31 அப்போது அவன் ஊழியர் வந்து அவனை நோக்கி, "இஸ்ராயேல் நாட்டு அரசர்கள் இரக்கம் உள்ளவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, நாம் கோணி உடுத்தித் தலைகளைக் கயிறுகளால் சுற்றிக் கொண்டு இஸ்ராயேலின் அரசரிடம் போவோம். ஒருவேளை நமக்கு அவர் உயிர்ப்பிச்சை அளிப்பார்" என்று சொன்னார்கள்.

32 அவ்விதமே அவர்கள் கோணி உடுத்தித் தலைகளைக் கயிறுகளால் சுற்றிக்கொண்டு இஸ்ராயேல் அரசனிடம் வந்தனர். "உம் ஊழியனான பெனாதாத் உம்மை மன்றாடி 'எனக்கு உயிர்ப்பிச்சை அளியும்' என்கிறார்" என்று அவர்கள் அரசனை வேண்டினர். அதற்கு அவன், "இன்னும் அவன் உயிரோடு இருந்தால், அவன் எனக்குச் சகோதரன்" என்றான்.

33 இது நன்மைக்கு அடையாளம் என்று சீரியர் கண்டு, அவன் சொற்களைக் கேட்ட ஆத்திரத்தில்,"உன் சகோதரர் பெனாதாத் உயிரோடு இருக்கிறார்" என்றனர். அப்பொழுது அவன், "நீங்கள் போய் அவனை அழைத்து வாருங்கள்" என்றான். எனவே பெனாதாத் அவனைக் காண வந்தான். ஆக்காப் அவனைத் தன் தேரில் ஏற்றினான்.

34 அப்பொழுது பெனாதாத் அவனைப் பார்த்து, "என் தந்தை உம் தந்தையிடமிருந்து பிடித்த நகர்களை நான் திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல் நீரும் தமாஸ்குவில் உமக்குத் தெருக்களை ஏற்படுத்திக் கொள்ளும். நாம் இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டபின் நான் விடைபெற்றுச் செல்வேன்" என்றான். அப்படியே ஆக்காப் அவனோடு உடன்படிக்கை செய்தபின் அவனை அனுப்பி வைத்தான்.

35 அப்பொழுது இறைவாக்கினரின் புதல்வர்களில் ஒருவர் ஆண்டவருடைய பெயரால் தம் தோழன் ஒருவனை நோக்கி, "நீ என்னை அடி" என்றார்.

36 அவனோ அதற்கு இணங்கவில்லை. அப்போது அவர் இவனைப் பார்த்து, "நீ ஆண்டவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனதால், நீ என்னைவிட்டு அகன்ற உடனே, ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும்" என்றார். அப்படியே அவன் இவரை விட்டுச் சிறிது தூரம் சென்றதும் ஒரு சிங்கம் அவனைக் கண்டு கொன்று போட்டது.

37 அதன் பிறகு அவர் வேறொருவனை நோக்கி, "நீ என்னை அடி" என்றார். அம்மனிதன் அவ்விதமே அவரைக் காயம்பட அடித்தான்.

38 அப்பொழுது அவ்விறைவாக்கினர் அங்கிருந்து சென்று, தம் கண்ணிலும் முகத்திலும் சாம்பலை வாரிப் போட்டுக் கொண்டு மாறு வேடத்தில் வழியிலே அரசனுக்காகக் காத்திருந்தார்.

39 அரசன் அவ்வழியே சென்ற போது அவர் அரசனைப் பார்த்துக் கூப்பிட்டு, "உம் அடியான் எதிரிகளோடு போரிடச் சென்ற போது அவர்களில் ஒருவன் தப்பி ஓட வேறு ஒருவன் அவனைப் பிடித்து என்னிடம் கொண்டு வந்து, 'இம்மனிதனைப் பத்திரமாய் வைத்திரு. இவன் உயிர் தப்பினால் உன் உயிர் போய்விடும்; அல்லது ஒரு தாலந்து வெள்ளி நீ கொடுக்க வேண்டும்' என்றான்.

40 ஆயினும், உம் அடியான் திகிலுற்று இங்குமங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென அம்மனிதன் மறைந்து விட்டான்" என்றார். இஸ்ராயேலின் அரசன் அவனைப் பார்த்து, "நீ சொன்னபடியே உனக்குத் தீர்ப்பாகும்" என்றான்.

41 உடனே அவர் தம் முகத்திலிருந்த சாம்பலைத் துடைக்க, இஸ்ராயேலின் அரசன் அவர் இறைவாக்கினரில் ஒருவர் என்று அறிந்து கொண்டான்.

42 அப்போது இறைவாக்கினர் அரசனை நோக்கி, "சாவுக்கு உரியவனை நீ உன் கையிலிருந்து தப்பிப் போகும் படி செய்ததால், அவன் உயிருக்கு பதிலாக உன் உயிரையும், அவன் மக்களின் உயிருக்குப் பதிலாக உன் மக்களின் உயிரையும் பழி வாங்குவோம்' என ஆண்டவர் திருவுளம்பற்றினார்" என்றார்.

43 இஸ்ராயேலின் அரசன் அதைக் கேட்க விரும்பாது வீடு நோக்கிப் புறப்பட்டுக் கோபவெறி கொண்டவனாய்ச் சமாரியா வந்து சேர்ந்தான்.

அதிகாரம் 21

1 நிற்க, ஜெஸ்ராயேலனாகிய நாபோத்துக்கு ஜெஸ்ராயேலில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அது சமாரியாவின் அரசன் ஆக்காபின் அரண்மனை அருகில் தான் இருந்தது.

2 ஆக்காப் நாபோத்தைப் பார்த்து, "உன் திராட்சைத் தோட்டம் என் வீட்டை அடுத்திருக்கிறதால், நான் அதைக் காய்கறித் தோட்டமாக்கும்படி எனக்குக் கொடு. அதை விட நல்ல திராட்சைத் தோட்டத்தை அதற்குப் பதிலாய் உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால் அதன் விலையைத் தருகிறேன்" என்றான்.

3 அதற்கு நாபோத், "நான் என் முன்னோரது உடைமையை உமக்குக் கொடாதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக" என்றான்.

4 இப்படி, "என் முன்னோரின் உடைமையை உமக்குக் கொடேன்" என்று ஜெஸ்ராயேலனாகிய நாபோத் தனக்குச் சொன்ன வார்த்தைக்காக ஆக்காப் சினந்து எரிச்சலோடு தன் வீட்டிற்கு வந்தான். அங்கே உண்ணாமல் தன் கட்டிலில் படுத்துத் தன் முகத்தைச் சுவர்ப் பக்கமாய்த் திருப்பிக் கொண்டிருந்தான்.

5 அப்போது அவனுடைய மனைவி எசாபேல் அவனிடம் வந்து, "நீர் ஏன் சாப்பிடவில்லை? உமது மனம் சஞ்சலப்படுவதேன்?" என்று அவனைக் கேட்டாள்.

6 அதற்கு அவன், "நான் ஜெஸ்ராயேலனாகிய நாபோத்தோடு பேசி, 'உன் திராட்சைத் தோட்டத்தை எனக்கு விலைக்குக் கொடு, அல்லது உனக்கு விருப்பமானால் அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன்' என்றேன். அதற்கு அவன் அவன் 'என் திராட்சைத் தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன்' என்று சொல்லிவிட்டான்" என்றான்.

7 அப்பொழுது அவன் மனைவி எசாபேல் அவனை நோக்கி, "உம்முடைய அதிகாரம் இவ்வளவுதானா? இஸ்ராயேலை இப்படித்தான் ஆட்சி செய்து வருகிறீர்களோ? எழுந்திருங்கள். சாப்பிட்டு விட்டு மன அமைதியுடன் இருங்கள். ஜெஸ்ராயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று சொன்னாள்.

8 எசாபேல் ஆக்காபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவற்றில் அவனது முத்திரையை இட்டு, அக்கடிதங்களை நாபோத் இருக்கும் நகரில் குடியிருக்கிற மூப்பரிடமும் பெரியோரிடமும் அனுப்பினான்.

9 அக்கடிதங்களில் அவள், "நீங்கள் ஒரு நோன்பைப் பறைசாற்றி, நாபோத்தைப் பெரியோர் நடுவில் அமரச் செய்யுங்கள்.

10 அவனுக்கு எதிராய்ப் பெலியாலின் மக்கள் இருவரை ஏவி விட்டு, 'நாபோத் கடவுளையும் அரசனையும் பழித்துரைத்தான்' என்று அவர்களைப் பொய்ச்சாட்சி சொல்லச் செய்யுங்கள். பின்னர் அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லால் எறிந்து கொன்று போடுங்கள்" என்று எழுதியிருந்தாள்.

11 நாபோத்தோடு அவ்வூரில் குடியிருந்த மூப்பர்களும் பெரியோர்களும் எசாபேல் தமக்கு அனுப்பியிருந்த கடிதங்களில் எழுதியிருந்தபடியே செய்தனர்.

12 அவர்கள் ஒரு நோன்பைப் பறைசாற்றி, நாபோத்தைப் பெரியோர் முன்னிலையில் அமர்த்தினர்.

13 அப்பொழுது அவர்கள் பேயின் மக்களாகிய இருவரை வரவழைத்து அவனுக்கு எதிராக அமர்த்தி வைத்தனர். இந்தப் பேயின் மக்களோ மக்கட் கூட்டத்தைப் பார்த்து, "நாபோத் கடவுளையும் அரசனையும் பழித்துரைத்தான்" என்று அவனுக்கு எதிராய்ச் சாட்சி சொன்னார்கள். அச்சாட்சியத்தின் பேரில் மக்கள் நாபோத்தை ஊருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்று போட்டனர்.

14 பிறகு, "நாபோத் கல்லால் எறியுண்டு மடிந்தான்" என்று எசாபேலுக்குச் செய்தி அனுப்பினர்.

15 நாபோத் கல்லால் எறியுண்டு மடிந்ததை எசாபேல் கேட்ட போது, அவள் ஆக்காபை நோக்கி, ' நீர் போய் ஜெஸ்ராயேலனாகிய நாபோத் உமது விருப்பத்துக்கு இசையாமல், 'உமக்கு விலைக்குக் கொடேன்' என்று சொன்ன திராட்சைத் தோட்டத்தை நீர் சொந்தமாய் எடுத்துக் கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை; அவன் இறந்து போனான்" என்றாள்.

16 நாபோத் இறந்துபோனதை ஆக்காப் கேட்டு எழுந்து, ஜெஸ்ராயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளப் போனான்.

17 அந்நேரத்திலேயே தெசுபித்தரான எலியாசுக்கு ஆண்டவர் திருவுளம்பற்றி,

18 சமாரியாவிலிருக்கிற இஸ்ராயேலின் அரசன் ஆக்காபை நீ சந்திக்கும்படி போ. அதோ அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ள அங்கே போகிறான்.

19 நீ அவனைப் பார்த்து, 'ஆண்டவர் சொல்வதாவது: "நீ நாபோத்தைக் கொன்றதுமன்றி அவனது திராட்சைத் தோட்டத்தையும் அபகரித்துக் கொண்டாய்" என்று சொல். மீண்டும் அவனை நோக்கி, 'ஆண்டவர் சொல்லுகிறதாவது: "நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலேயே உனது இரத்தத்தையும் நக்கும்" என்று சொல்" என்றார்.

20 அப்போது ஆக்காப் எலியாசை நோக்கி, "நான் உனக்கு எதிரியாக எப்போதாவது இருக்கக் கண்டதுண்டா?" என்றான். அதற்கு அவர், "ஆம்; நீ ஆண்டவர் திருமுன் தீயன புரியத் துணிந்துள்ளதை நான் அறியேனோ?

21 இதோ! நாம் உன்மேல் தீங்கு வரச் செய்வோம். உன் சந்ததியை அழித்து விட்டு, உன் வீட்டின் ஆண் மக்கள் அனைவரையும் இஸ்ராயேலில் கடைசியானவனையும், இன்னும் கருவில் அடைபட்டுள்ள குழந்தையையும் கொன்றொழிப்போம்.

22 நீ உன் தீச்செயல்களினால் நமக்குக் கோபமுண்டாக்கி இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கியதின் பொருட்டு நாம் உன் குடும்பத்தை நாபோத்தின் மகன் எரோபோவாமின் குடும்பத்துக்கும், ஆகியாவின் மகன் பாசாவின் குடும்பத்துக்கும் நிகராக்குவோம்" என்றார்;

23 எசாபேலைக் குறித்தும் ஆண்டவர் சொல்வதாவது: 'ஜெஸ்ராயேலின் நிலத்திலே நாய்கள் எசாபேலைத் தின்னும்.

24 ஆக்காப் நகரில் மடிந்தால் நாய்களுக்கு இரையாவான்; நகருக்கு வெளியே இறந்தால் வானத்துப் பறவைகளுக்கு இரையாவான்' என்பதாம்" என்றார்.

25 ஆண்டவர் திருமுன் தீயன புரியத் துணிந்த ஆக்காபைப் போல் கெட்டவன் ஒருவனுமில்லை; ஏனெனில், அவனுடைய மனைவி எசாபேல் அவனை ஏவி விட்டாள்.

26 அவன் எவ்வளவு வெறுப்புக்குரியவன் என்றால், இஸ்ராயேல் மக்கள் முன்னிலையில் ஆண்டவர் அழித்தொழித்த அமோறையரின் விக்கிரகங்களையும் அவன் தொழுது வந்தான்.

27 இவ்வார்த்தைகளை ஆக்காப் கேட்ட பிறகு தன் ஆடைகளைக் கிழித்துத் தன் உடலின் மேல் மயிராடையைப் போட்டுக் கொண்டு நோன்பு காத்து சாக்கின் மீது படுத்துறங்கினான். மேலும், அவன் தலை கவிழ்ந்தே நடந்து வந்தான்.

28 அப்பொழுது தெசுபித்தரான எலியாசுக்கு ஆண்டவர் திருவுளம் பற்றி,

29 நமக்கு முன்பாக ஆக்காப் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயன்றோ? அவன் நமக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதால் நாம் அவனது காலத்தில் அத்தீமைகளை வரச்செய்யாமல் அவனுடைய மகனின் நாட்களிலே அவன் சந்ததியின் மேல் அவைகளை வரச்செய்வோம்" என்றார்.

அதிகாரம் 22

1 சீரியருக்கும் இஸ்ராயேலருக்கும் இடையே மூன்று ஆண்டுகளாகப் போர் எதுவும் நடக்க வில்லை.

2 மூன்றாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ராயேலின் அரசனைக் காண வந்தான்.

3 (ஏனென்றால், இஸ்ராயேலின் அரசன் தன் ஊழியரை நோக்கி, "கலாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களோ? அதை நாம் சீரியாவின் அரசனிடமிருந்து கைப்பற்றாமல் வாளா இருந்துவிடலாமா?" என்று சொல்லியிருந்தான்.)

4 அவன் யோசபாத்திடம், "கலாத்திலுள்ள ராமோத்தைப் பிடிக்க என்னோடு சேர்ந்து போர்புரிய வருவீரா?" என்று கேட்டான்.

5 யோசபாத் இஸ்ராயேலின் அரசனை நோக்கி, "உம் காரியம் என் காரியமே. என் மக்களும் உம் மக்களும் ஒரே மக்கள் தாமே. என் குதிரைகளும் உன் குதிரைகளும் ஒன்றேதாம்" என்று சொன்னான். மீளவும் யோசபாத் இஸ்ராயேலின் அரசனைப் பார்த்து, "ஆண்டவருடைய திருவுளம் இன்னதென்று இன்று நீர் அறியும்படி உம்மை வேண்டுகிறேன்" என்றான்.

6 அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு போலி இறைவாக்கினரைக் கூட்டி வரச் செய்து அவர்களை நோக்கி, "நான் கலாத்திலுள்ள ராமோத்தின் மேல் போரிடப் போகலாமா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "போகலாம்; ஆண்டவர் அரசருக்கு அதைக் கையளிப்பார்" என்றனர்.

7 பின்பு யோசபாத், "நாங்களும் அறிந்து கொள்ளும்படி ஆண்டவரின் இறைவாக்கினர் யாராவது ஒருவர் இங்கில்லையா?" என்று கேட்டான்.

8 அப்போது இஸ்ராயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "ஜெம்லா மகன் மிக்கேயாசு என்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் மூலம் ஆண்டவரின் திருவுளத்தை நாம் அறிந்து கொள்ளலாம். ஆயினும் நான் அவனைப் பகைக்கிறேன். ஏனெனில், அவன் எனக்கு எப்பொழுதும் நன்மையாக அன்று, தீமையாகவே இறைவாக்கு உரைக்கிறான்" என்றான். அதற்கு யோசபாத், "அரசே, அப்படிச் சொல்ல வேண்டாம்" என்றான்.

9 அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் ஓர் அண்ணகனைக் கூப்பிட்டு, "ஜெம்லாவின் மகன் மிக்கேயாசை விரைவில் அழைத்து வா" என்றான்.

10 இஸ்ராயேலின் அரசனும் யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச ஆடைகளை அணிந்தவராய்த் தத்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் போலி இறைவாக்கினரும் அவர்களுக்கு முன்பாக இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தனர்.

11 கானானாவின் மகன் செதேசியாசு தனக்கென்று இரும்புக் கொம்புகளைச்செய்து, "இவற்றால் நீர் சீரியாவைக் கலங்கடித்து வேரறுத்துப் போடுவீர்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றான்.

12 போலி இறைவாக்கினர் அனைவரும் அதைப் போன்றே இறைவாக்கு உரைத்து, "கலாத்திலுள்ள ராமோத்துக்கு நலமே செல்வீர். ஏனெனில், ஆண்டவர் அதை அரசருக்குக் கையளிப்பார்" என்றனர்.

13 மிக்கேயாசை அழைக்கப்போன ஆள் அவனைப் பார்த்து, "இதோ இறைவாக்கினர் அனைவரும் ஒரே மாதிரியாக அரசருக்குச் சாதகமாய் இறைவாக்கு உரைத்துள்ளனர். அவர்களைப் போன்று நீரும் அரசருக்குச் சாதகமாகவே பேசும்" என்றான்.

14 அதற்கு மிக்கேயாசு, "ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் என்னிடம் சொல்லுவதையே நான் எடுத்துரைப்பேன்" என்றார்.

15 அவர் அரசன்முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி, "மிக்கேயாசு, நாங்கள் கலாத்திலுள்ள ராமோத்தின் மேல் போரிடப் போகலாமா, போகலாகாதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "நீர் நலமே போகலாம். ஆண்டவர் அதை உமக்குக் கையளிப்பார்" என்றார்.

16 மீளவும் அரசன் அவரை நோக்கி, "ஆண்டவர் பெயரால் உம்மைத் திரும்பவும் வேண்டிக் கொள்கிறேன். உண்மை அன்றி வேறு ஒன்றும் நீர் என்னிடம் உரைக்க வேண்டாம்" என்றான்.

17 அப்பொழுது அவர், "இஸ்ராயேலர் அனைவரும் ஆயன் இல்லா ஆடுகளைப் போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், 'இவர்களுக்குத் தலைவன் இல்லை. அனைவரும் அமைதியுடன் தத்தம் வீடு திரும்பட்டும்' என்று உரைத்தார்" என்று சொன்னார்.

18 அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "இவன் எப்பொழுதும் எனக்கு நன்மையாக அன்றித் தீமையாகவே இறைவாக்கு உரைப்பான் என்று முன்பே உம்மிடம் நான் கூறவில்லையா?" என்றான்.

19 மிக்கேயாசு மீண்டும் அரசனை நோக்கி, "ஆண்டவருடைய வாக்கைக் கேளும்: ஆண்டவர் தமது அரியனையில் வீற்றிருக்கவும், வானகச் சேனையெல்லாம் அவரது வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் நிற்கவும் கண்டேன்.

20 அந்நேரத்தில் ஆண்டவர், 'ஆக்காப் கலாத்திலுள்ள ராமோத்தின் மேல் படையெடுத்துப்போய் அங்கே மடியும்படி அவனுக்குக் கெடுமதி சொல்கிறவன் யார்?' என்று கேட்டார். அதற்குப் பலரும் பலவிதமாய் பதில் கூறினர்.

21 அப்பொழுது ஓர் அரூபி புறப்பட்டு வந்து ஆண்டவர் திருமுன் நின்று அவரை நோக்கி, 'நான் அவனுக்குக் கெடுமதி சொல்வேன்' என்றது. அதற்கு ஆண்டவர், 'அதெப்படி?' என்றார்.

22 அப்பொழுது அது, 'நான் போய் அவனுடைய (போலி) இறைவாக்கினர் எல்லாரிடத்திலும் நுழைந்து அவர்கள் பொய்யை உரைக்கும்படி செய்வேன்' என்றது. அதற்கு ஆண்டவர், 'நீ அவனை ஏமாற்றி வெற்றி பெறுவாய். போய் அப்படியே செய்' என்றார்.

23 ஆதலால் இங்கேயிருக்கிற உம்முடைய எல்லாப் (போலி) இறைவாக்கினரும் உம்மிடம் பொய் சொல்லும் படி ஆண்டவர் அரூபியை ஏவியிருக்கிறார். ஆண்டவர் உமக்கு எதிராகத் தீயனவே பகன்றுள்ளார்" என்றார்.

24 அப்பொழுது கானானாவின் மகன் செதேசியாசு, மிக்கேயாசு அருகே வந்து அவரைக் கன்னத்தில் அறைந்து, "ஆண்டவரின் ஆவி என்னைவிட்டு அகன்று விட்டதா? அது உன்னிடம் மட்டுந்தானோ பேசிற்று?" என்றான்.

25 அதற்கு மிக்கேயாசு, "நீர் ஒளிந்து கொள்வதற்காக அறை விட்டு அறை செல்லும் நாளில் இதை அறிந்து கொள்வீர்" என்றார்.

26 அப்பொழுது இஸ்ராயேலின் அரசன், "மிக்கேயாசைப் பிடித்து அவனை நகரத் தலைவன் ஆமோனிடமும், அமலேக்கின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.

27 'இவனைச் சிறையில் அடைத்து, நான் சமாதானத்தோடு திரும்பி வரும் வரை இவனுக்குத் துன்ப துயரம் எனும் அப்பமும் தண்ணீரும் கொடுங்கள்' என்று அரசர் சொல்லச் சொன்னார் என்று சொல்லுங்கள்" என்றான்.

28 அப்பொழுது மிக்கேயாசு, "நீர் சமாதானத்தோடு திரும்பி வருவீராகில் ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்று அறிந்து கொள்ளும்" என்று சொன்னார்; மேலும் அங்கு இருந்தோரை நோக்கி, "மக்களே, நீங்கள் எல்லாரும் இதற்குச் சாட்சி" என்றார்.

29 பின்பு இஸ்ராயேலின் அரசனும் யூதாவின் அரசன் யோசபாத்தும் கலாத்திலுள்ள ராமோத்தைப் பிடிக்க புறப்பட்டுப் போனார்கள்.

30 இஸ்ராயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, "நீர் உம் அரச ஆடைகளை அணிந்து, ஆயுதம் தாங்கிப் போரிடும்" என்று சொன்னான். இஸ்ராயேலின் அரசனோ மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.

31 அப்படியிருக்க, சீரியாவின் அரசன் தன் முப்பத்திரண்டு தேர்ப்படைத் தலைவர்களையும் நோக்கி, "நீங்கள் சிறியோர் பெரியோர் யாரோடும் போரிடாமல், இஸ்ராயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தான்.

32 ஆதலால் தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், "இவன் தான் இஸ்ராயேலின் அரசன்" என்று எண்ணி, அவன் மேல் பாய்ந்து போரிட்டனர். யோசபாத்தோ பெரும் கூக்குரலிட்டான்.

33 அதனால் அவன் இஸ்ராயேலின் அரசன் அல்லன் என்று அறிந்து கொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை விட்டு அகன்றனர்.

34 யாரோ ஒருவன் வில்லை நாணேற்றிக் குறிவைக்காது அம்பை எய்தான். அது தற்செயலாய் இஸ்ராயேல் அரசனின் உடலில் வயிற்றுக்கும் நுரையீரலுக்கும் இடையே பாய்ந்தது. அவனோ தன் தேரோட்டியை நோக்கி, "நீ தேரைத் திருப்பிப் போர்க்களத்திற்கு வெளியே என்னைக் கொண்டு போ; ஏனெனில் பெரிதும் காயம் அடைந்துள்ளேன்" என்றான்.

35 அன்று முழுவதும் போர் நடந்தது. இஸ்ராயேலின் அரசன் தன் தேரிலேயே நின்றுகொண்டு சீரியரை எதிர்த்துப் போர் புரிந்து மாலை வேளையில் உயிர் நீத்தான். அவன் பட்ட காயத்திலிருந்து இரத்தம் ஒழுகித் தேரின் மேல் வடிந்து கொண்டிருந்தது.

36 கதிரவன் மறையுமுன், "அனைவரும் தத்தம் நாட்டிற்கும் நகருக்கும் போகலாம்" என்று படை முழுவதற்கும் பறைசாற்றப்பட்டது.

37 இறந்த அரசனைச் சமாரியாவுக்கு எடுத்துச் சென்று அங்கே அடக்கம் செய்தனர்.

38 அவனது தேரையும் கடிவாளத்தையும் சமாரியாவின் குளத்தில் கழுவினர். அப்போது ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் வந்து அவனது இரத்தத்தை நக்கின.

39 ஆக்காபின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும், அவன் தந்தத்தால் கட்டிய வீடும். அமைத்த நகர்களும் இஸ்ராயேல் அரசர்களின் நடபடி நூலில் இடம் பெற்றுள்ளன.

40 ஆக்காப் தன் முன்னோரோடு துயிலுற்ற பின், அவன் மகன் ஒக்கோசியாசு அரியணை ஏறினான்

41 இஸ்ராயேலின் அரசன் ஆக்காப் ஆட்சி புரிந்து வந்த நான்காம் ஆண்டில் ஆசாவின் மகன் யோசபாத் யூதாவின் அரசன் ஆனான்.

42 அப்பொழுது அவனுக்கு வயது முப்பத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சலாயின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அசுபா.

43 அவன் அனைத்திலும் தன் தந்தை ஆசாவின் வழி நின்று வழுவாது ஒழுகினான். இவ்வாறு ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான்.

44 ஆயினும் (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப் பெற்றிருந்த) மேடைகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அம்மேடைகளில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தனர்.

45 யோசபாத் இஸ்ராயேலின் அரசனோடு சமாதானமாய் இருந்தான்.

46 யோசபாத்தின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் புரிந்த போர்களும், யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.

47 தன் தந்தை ஆசாவின் காலத்தில் எஞ்சியிருந்த பெண் தன்மையுள்ள ஆடவர்களை யோசபாத் அழித்துப் போட்டான்.

48 அப்பொழுது ஏதோமில் அரசன் இல்லை.

49 அரசன் யோசபாத் பொன் திரட்ட ஓபீருக்குப் போகும்படி கப்பல்களைக் கட்டினான்; ஆனால் அவைகள் போக முடியவில்லை; ஏனென்றால் அசியோன் கபேரில் கப்பல்கள் உடைந்து போயின.

50 அப்பொழுது ஆக்காபின் மகன் ஒக்கோசியாசு யோசபாத்தை நோக்கி, "என் வேலைக்காரர் உம் வேலைக்காரரோடு கப்பல்களில் போகவிடும்" என்று கேட்டான். அதற்கு யோசபாத் இணங்கவில்லை.

51 யோசபாத் தன் முன்னோரோடு துயிலுற்றுத் தாவீதின் நகரில் தன் முன்னோரோடு புதைக்கப்பட்டான். அவன் மகன் யோராம் அவனுக்குப் பிறகு அரியணை ஏறினான்.

52 யூதாவின் அரசன் யோசபாத் அரியணை ஏறிய பதினேழாம் ஆண்டில் ஆக்காபின் மகன் ஒக்கோசியாசு சமாரியாவின் அரசனாகி இஸ்ராயேலில் ஈராண்டுகள் ஆட்சி செலுத்தி வந்தான்.

53 அவன் ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து, தன் தாய் தந்தையர் வழியிலும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கின நாபோத்தின் மகன் எரோபோவாமின் தீய வழியிலும் நடந்தான்.

54 அத்தோடு பாவாலுக்கு ஊழியம் செய்து அதை வழிபட்டான். அவன் எல்லாவற்றிலும் தன் தந்தை வழி நின்று, இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வருவித்தான்.