அக்டோபர் 26

தேவ இரகசியங்களைச் சிந்திப்பதின் இலாபம்.

கிறிஸ்துவினுடைய ஒரே நோக்கம் உத்தமத்தனத்தைத் தேடிப் போவதாம். "பிரியமான குழந்தைகளைப் போல கடவுளைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள் " என்று அர்ச் சின்னப்பர் சொல்லவில்லையா? எவ்விதம் பின்பற்றுவது? இயேசுநாதரைக் கண்டு பாவிப்பதில்; "நானே வழி"என்றார் கிறிஸ்துநாதர். அர்ச் கிரகோரியார் ஒரு உவமை சொல்லுகிறார். ஓவியன் படம் தீட்டும்போது, தன் கண் எதிரே ஒரு மாதிரியைக் கொண்டு அதைப் பார்த்துத் தன் தூரிகையைக் கையாளுகிறான். அதுபோலவே இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் கையாள வேண்டும். அவரது புண்ணியங்களையும் தன் மனக்கண் முன் நிறுத்தி, அவரை ஓயாமல் உற்று நோக்கி தன் ஆத்துமமாகிய திரையில் இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் சித்தரிக்க வேண்டும் .அதற்கு செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைச் சிந்திப்பது சுலபமான வழி.

நமது ஈடேற்ற அலுவலில் தேவ தாய்க்கு அதிக கவலை. ஆதலால் செபமாலை சொல்லுகையில் இயேசுவின் சீவியத்தைச் சிந்திக்கும்படி பற்பல அர்சிஷ்டவர்களைத் தூண்டினார். இதனால் கிறிஸ்தவ மக்கள் இயேசுவை ஆராதித்து மகிமைப்படுத்துவார்கள் , தங்கள் வாழ்க்கையையும் அவருடைய வாழ்க்கையையும் ஒத்திருக்கச் செய்வார்கள் என்பது அவரது எண்ணமும் ஆசையும் .

பெற்றோர்கள் சொல்லுவதையும் செய்வதையும் குழந்தைகள் கவனித்து அவர்களைப் போல - சில சமயம் தங்களுக்குத் தெரியாமலே - நடக்கப் பிரயாசைப்படுகிறார்கள் . ஒரு தொழில் கற்றுக் கொள்ளுகிறவன் தன் ஆசிரியர் செய்வதைப் போல் செய்யத் தேடுவான். அதே போல் செபமாலை செய்யும் தேவதாயின் மக்கள் திருத்தாயும் சேயும் செய்வது போல ஒவ்வொன்றையும் செய்யத் தேடுவார்கள் . ஆதலால் இயேசுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்க்க வேண்டும் .

இறைவன் பொழிந்த கிருபைகளை மறக்க வேண்டாமென்று முன்காலத்தில் மோயீசன் இஸ்ராயேலருக்குக் கற்பித்திருந்தார் . தம் வாழ்க்கையையும் , மரணத்தையும் , உத்தானத்தையும் கிறிஸ்தவர்கள் தங்கள் கண் முன் எப்போதும் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இயேசுநாதர் எவ்வளவு அதிகாரத்தோடு சொல்லக் கூடும் . ஒவ்வொரு தேவ இரகசியமும் அவருடைய நன்மைத்தனத்தையும் நம் ஈடேற்றத்தின் மேல் அவருக்குள்ள ஆவலையும் காட்டுகிறது .அவர் நம் ஆத்துமத்தின் பத்தா; நமது நேசர் ; அவரது அன்பை நாம் மறக்காமலிருக்க வேண்டும் என்பது நியாயம் அல்லவா?

அவரது வாழ்க்கையில் எல்லாம் முக்கியமானவை , அவரது அன்பை மகாத் துலக்கமாய் அவரது பாடுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன . எப்பக்தி முயற்சியினால் அவருக்கு அதிக மகிமை வருவிக்கக் கூடும் என்று முத் ஆஞ்செலா ஒரு நாள் இயேசுவைக் கேட்டாள். வந்த பதில் என்ன ? "மகளே என் காயங்களைப் பார் ". பின்னர் சிரசிலும் மற்ற இடங்களிலும் அவர் பட்ட காயங்கள் யாவற்றையும் காட்டி "உன்னுடைய ஈடேற்றத்திற்காக நான் இவைகள் யாவற்றையும் அனுபவித்தேன் . நான் உனக்குக் காட்டிய அன்புக்கு நீ என்ன கைம்மாறு செய்வாய்  ? " என்றார் ஆண்டவர் . திவ்விய பூசை தானே அவரது மரணமும் பாடுகளும் . ஆதலால் தான் திவ்விய பூசை தமத்திருத்துவத்திற்கு அளவிறந்த மகிமையை அளிக்கிறது . பூசை நேரத்தில் மோட்ச வாசிகளுக்கும் சம்மனசுக்களுக்கும் மகா சந்தோசம்

தேவ ரகசியங்களை தியானித்து செய்யும் செபமாலையும் இறைவனுக்கு அளிக்கும் தோத்திரப்பலி எனலாம் . இயேசுவின் வாழ்க்கையை , பாடுகளை , மரணத்தை செபமாலை நினைப்பூட்டுகிறதன்றோ? இத்தகைய தியானம் மனிதனின் மனதை இளக்கி, மனஸ்தாபத்தை எழுப்பி , மனமாற்றுதளுக்குக் காரணமாகிறது . ஒரே ஒரு பாவியின் மனமாற்ற முதலாய் மோட்சத்தில் இறைவனுக்கும் சம்மனசுக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறதென்று இயேசுநாதர் சொல்லி இருக்கிறார் .

ஆதலால் தேவ இரகசியங்களைத் தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லி வருவோம்.

சரிதை.

நம் தமிழ்நாட்டில் பல வீடுகளிலும் ஆலயங்களிலும் போம்பேயி மாதா படத்தைக் காணலாம் . போம்பேயி இத்தாலி நாட்டில் உள்ள ஒரு பட்டணம் .அங்கு 1876 ஆம் ஆண்டில் ஒரு பேராலயம் எழுப்பப்பட்டது ; செபமாளைப் பக்திக்கு ஒருபுது உத்வேகத்தைக் கொடுத்தது . செபமாலையினால் அங்கு நடக்கும் புதுமைகளுக்குக் கணக்கில்லை . இங்கு ஒன்றைக் குறிக்கலாம் . நேபில்ஸ் நகரப் பெண்ணொருத்தி -  போர்த்துனா அக்ரெல்லி என்ற பெயர் கொண்டவள்  - வியாதியை வீழ்ந்து பெரும் வாதனைகளை அனுபவித்து வந்தால் .பிரபலிய வைத்தியர்கள் பார்த்து அந்த நோயைக் குணமாக்க முடியாதென்றனர்.

அவளுக்கு அவளது உறவினர்கள் சிலர் 1884 ஆம் ஆண்டு பெப்ருவரி 16 ஆம் தேதி நவநாள் சொல்லத் துவங்கினர் .நவநாள் தொடங்கி 15 நாள் சென்று நோயாளி காட்சி கண்டாள். செபமாலை இராக்கினி சிம்மாசனத்தில் வீற்றிருந்தார் . அவரது மடியில் குழந்தை .அர்ச் கத்தரீனம்மாளும் அர்ச் டோமினிக்கும் அவருக்கு அருகில் நின்றனர் . செபமாலை மாதா சொல்லுவார் :" குழந்தை என் பற்பல மகிமைகளைச் சொல்லி என்னை அழைத்திருக்கிறாய் . இப்பொழுது எனக்கு மிகவும் பிடித்தமான திருச்செபமாலையின் இராக்கினியே என்ற பட்டத்தைச் சொல்லி அழைப்பதனால் நீ கேக்கும் வரத்தைக் கொடுக்க நான் தாமதியேன் .இந்த பெயர் எனக்கு மகாப் பிரியம் . இந்த நவனாலை மூன்று முறை செய் . நீ கேட்பதை எல்லாம் அடைவாய் "தாய் சொன்னபடி அப்பெண் செய்தாள் . பூரண குணம் பெற்றாள்.

மறுமுறையும் செபமாலை இராக்கினி அப்பெண்ணுக்குத் தோன்றி சொன்னார் : " என்னிடமிருந்து கிருபைகளைப் பெற ஆசிக்கிறவர்கள் செபமாலை சொல்லி மூன்று நவநாள் செய்வார்களாக . கிருபை பெறுவார்கள் . பெற்ற பின் நன்றியறிந்த தோத்திரமாக மூன்று செபமாலை நவநாள் செய்வார்களாக "

உண்மையான செபமாலை பக்தி நம் நாட்டில் வளர்வதாக.

(ஒவ்வொரு நாளும் ஒரே கருத்துக்காக ஐம்பது மணியோ , நூற்றைம்பது மணியோ ஒன்பது நாள் சொல்லி வருவது ஒரு செபமாலை நவநாள் )

செபம்.

ஓ செபமாலை இராக்கினியே , அமலோற்பவ மாதாவே , சம்மனசுக்களின் அரசியே , மனுமக்களின் பாதுகாவலியே, ஈன சுகத்தின் வலையில் விழும் ஏழைகளின் மேல் இரக்கமாயிரும். எங்கள் பலவீனத்தில் எங்களுக்குப் பலனைக் கொடுத்தருளும் . சோதனைகளோடு (பேயோடு , உடலோடு ) போடும் சண்டையில் எங்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தருளும் . மெய்யான மனஸ்தாபப்பட வேண்டும் என்று எங்களுக்குள்ள ஆசையைச் சுத்திகரித்தருளும் . பரிசுத்த கற்பின் இலட்சியம் உலகில் புத்தொளி பெற வேண்டும் என்று உமக்குள்ள ஆவல் நாங்கள் அறிந்ததே.

மாசற்ற இருதயத்தின் மாதாவே , இன்றைக்கு என் இருதயத்தையும் என் புத்தியையும் என்னை முழுவதுமே உமக்கு நேர்ந்து கொள்ளுகிறேன் என்று உறுதி கூறுகிறேன் . தயங்காத பிரமாணிக்கத்தோடு உமக்கு ஊழியம் செய்வதில் நிலைத்து நிற்பேன் . உம்மிடத்திலிருந்து நான் கேட்கும் விசேச வரம் என்னவென்றால் சோதனையி முதல் நாட்டத்தையே எதிர்த்தோட்டக் கிருபை செய்யும் . எனக்குப் பாவத்திற்குக் காரணமாயிருந்த எல்லாவற்றையும் விட்டோடும்படி அனுக்கிரகம் செய்தருளும்.

செபமாலை இராக்கினியே என்னை இருதயத்தில் சுத்தமுள்ளவளாய்/வனாய் ஆக்கியருளும்.

ஆமென்.