அக்டோபர் 27

செபமாலை உத்தமத்தனத்தின் பாதை.

புனிதர்கள் இயேசுவின் வாழ்க்கையைத் தியானிப்பதே தங்கள் கதி எனக் கருதினார்கள் . அவருடைய புண்ணியங்களையும் பாடுகளையும் பற்றி தியானித்தனர் . இவ்விதம் கிறிஸ்தவ உத்தமத்தனத்தின் உச்சியில் சேர்ந்தனர் .

அர்ச் பெர்நார்து இவ்வித தியானத்தை ஒரு முறை தொடங்கிய பின் கடைசி நாள் வரை அத்தகைய தியானத்தில் நிலைத்திருந்தார் . அவர் சொல்லுகிறார் :" நான் மனம் மாறிய துவக்கத்தில் இயேசுவின் துக்கத்தை ஓர் மலர் கொத்தாக கட்டி என் இதயத்தின் மேல் வைத்தேன் . பாடுகளின் நேரத்தில் அவரை வாதித்த அடியையும் , ஆணிகளையும் முட்களையும் பற்றி நினைத்தேன் . என் மனதின் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்து ஒவ்வொரு நாளும் இந்த இரகசியங்களைப் பற்றி தியானித்தேன் "

வேத சாட்சிகளின் வழக்கமும் இதுதான்; அதனால் பெரும் வாதனை வருத்தங்கள் மத்தியிலும் அவர்கள் அசையாமல் நின்று வெற்றி கண்டனர் . வேத சாட்சிகளின் அதிசயத்துக்குரிய உறுதியான நிலைக்குக் காரணம் இயேசுவின் காயங்களை ஓயாமல் சிந்தித்தது தான் என அர்ச் பெர்நார்து மொழிகிறார் .

தேவ தாய் தன் வாழ்க்கை முழுதும் செய்தது என்ன ? அவருடைய தேவ மகனின் புண்ணியங்களையும் பாடுகளையும் தியானித்தார் . அவருடைய பிறப்பில் சம்மனசுக்கள் சந்தோசமாய்ப் பாடுவதைக் கேட்டதையும், இடையர்கள் அவரை ஆராதிப்பதைக் கண்டதையும் , மனதில் இருத்தி இந்த அதிசயங்களைப் பற்றி தியானித்தார் . மாமிசமான வார்த்தையின் மகிமையை அவரது ஆழ்ந்த தாழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தார் . மாட்டுக் குடிலில் தூங்குபவரை அவருடைய மகிமை சிம்மாசனத்தில் மோட்சத்தில் பிதாவோடு அமர்ந்திருப்பதை தரிசித்தார் . கடவுளின் வல்லமையையும் குழந்தையின் பலவீனத்தையும் நிறுத்துப் பார்த்தார் .

ஒரு நாள் அர்ச் பிரிஜித்தம்மாளுக்கு நமதாண்டவள் சொல்லுவார் :" என் மகனின் அழகையும் அடக்கத்தையும் ஞானத்தையும் நான் தியானித்த போது என் உள்ளம் மகிழ்ச்சியால் கரை கடந்து பொங்கியது . கூர்மையான ஆணிகள் துளைக்கப்போகும் அவரது கரங்களையும் கால்களையும் கருதிய போது கண்ணீர் சொரிந்தது ; துக்கத்தாலும் வாதனையாலும் என் இதயம் பிளந்தது "

ஆண்டவரின் மோட்ச ஆரோகணத்திற்குப்  பின் இயேசுவின் பாடுகளாலும் பிரசன்னத்தாலும் அர்ச்சிக்கப்பட்ட தலங்களை அடிக்கடி தரிசித்து வந்தார் . அத்தலங்களில் இருக்கும் போது அவரது அளவிறந்த அன்பையும் பயங்கரப் பாடுகளையும் பற்றி சிந்தித்தார்

முப்பதாண்டுகளாக மரிய மதலேனாள் இவ்வழக்கத்தை போமா என்ற ஊரில் தனிவாசத்தில் கையாண்டாள். திருச்சபையின் துவக்கத்தில் பரிசுத்த தலங்களைத் தரிசிக்கும் வழக்கம் சர்வ சாதாரணம் என்று அர்ச் ஜெரோம் சொல்லுகிறார் . கிறிஸ்தவர்கள் பற்பல நாடுகளில் இருந்தும் வந்து இந்த தலங்களைத் தரிசித்தனர் . இயேசு சபை ஸ்தாபகரான அர்ச் இஞ்ஞாசியார் எவ்வளவு இடைஞ்சல்களில் அவைகளைப் போய்த் தரிசித்தார் . குருக்களும் கன்னியர்களும் தான் விசுவாச சாத்தியங்களைப் பற்றியும் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் தியானிக்க வேண்டும் என்பது பெரும் தவறு . தங்கள் நிலைக்கேற்ற பிரகாரம் வாழ்வதற்கு குருக்களும் , துறவிகளும் இச்சத்தியங்களைப் பற்றி தியானிப்பது அவசியம் எனில் , சோதனை நிறைந்த உலகில் சிக்கிய இல்லறத்தார்களும் தங்கள் ஆத்துமத்தை இழந்து போகாவண்ணம் இச்சத்தியங்களைத் தியானிப்பது மகா அவசியம் அல்லவா ? திருச் செபமாலை தேவ இரகசியங்களில் இச்சத்தியங்கள் யாவும் எவ்வளவு நேர்த்தியாய்ப் பொதிந்திருக்கின்றன ! தேவ இரகசியங்களை தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லுவோமாக

சரிதை.

லெப்பன்தோ (Lepanto) சண்டையில் துருக்கியர் முறியடிக்கப்பட்டனர் ; அவர்களுடைய கடல் ஆதிக்கம் நொறுங்கியது ; ஆனால் அவர்களது தரைப்படை தளரவில்லை . தலையோங்கியே நின்றது . கத்தோலிக்க ஐரோப்பாவை முழுவதும் தங்கள் அதிகாரத்துக்குள் கொண்டு வருவதே அவர்களது நோக்கம் . 1682 ஆம் ஆண்டில் அவர்கள் ஹங்கேரி தேசத்தில் நுழைந்து முன்னேறிக் கொண்டே போயினர் . அடுத்த ஆண்டு ஆஸ்திரியா தேசத்துத் தலைநகரான வியான்னாவுக்கு முற்றுகையிட்டனர் . ஆஸ்திரியா தன் சேனைகளைத் திரட்டும் முன்னரே இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட சேனை 1683 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி தாக்குதலை ஆரம்பித்தது . கிறிஸ்துவர்கள் சேனையில் ஒவ்வொரு நாளும் உயிர்ச்சேதம் ஏராளம் . போதாக்குறைக்குப் பஞ்சமும் கொள்ளை நோயும் புகுந்தன . நிர்பாக்கியம்  ! மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன . வியன்னா துருக்கியர் கையில் விழுவதும் இன்றைக்கோ நாளைக்கோ என்றிருந்தது . ஆனால் லேயோப் பொல்து என்னும் சக்கரவர்த்தி தன் நம்பிக்கையை எல்லாம் செபமாலை மாதாவின் மேல் வைத்திருந்தார் . செபமாலை மாதா ஜெய மாதா அல்லவா ? திடீரென செப்டம்பர் 12 ஆம் தேதி போலந்து அரசன் துணைக்கு வந்து மூன்று தாக்குதலில் துருக்கி சேனையை தவிக்க வைத்துத் துரத்தி விட்டார் . இந்த வெற்றியின் நினைவாக செப்டெம்பர் 12 ஆம் தேதி மரிஎன்னும் நாமத்தின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது . செபமாலை இராக்கினியே வாழ்க.

செபம்.

செபமாலை இராக்கினியே , மாசில்லா மாமரியே , பாவிகளுக்கு அடைக்கலமே , எங்கள் அன்புள்ள அன்னையை விட்டு நாங்கள் வேறெங்கே அடைக்கலம் தேடுவோம் ? பாவத்தின் வெட்கம் எங்களை மென்று தின்னும்போது உம்மிடத்தில் அல்லாமல் வேறெங்கு எங்களுக்குத் தேவையான அடைக்கலத்தையும் ஆறுதலையும் அடைவோம் ? நிச்சயமான புகலிடமாகிய இயேசுவின் திரு இருதயத்துக்கு கொண்டு போய்ச் சேர்க்கும் பாதையில் பதனமாய் எங்களை நடத்திச் சேர்த்தருளும்

மாதாவே மாமரியே நான் பாவத்தை அடிக்கடி கட்டிக் கொண்டேன் . அச்சமயங்களில் நரகத்தையோ மோட்சத்தையோ , என் மேல் நீர் கொட்டிய அன்பையோ நான் நினைக்கவில்லை . கருதவும் இல்லை . என் குற்றங்களின் ஞாபகம் இப்போது என் மனதைத் துளைக்கிறது . என் எண்ணங்களை வாட்டுகிறது . எனினும் என்னை வதைக்கும் குத்தலையும் தள்ளி வைப்பேன் . உமது அடைக்கலத்தை நம்பி இருக்கும் நான் சமாதானத்தையும் நம்பிக்கையையும் என் பாவங்களுக்கு மன்னிப்பையும் நிச்சயமாகக் கண்டடைவேன் . மதலேனா , அகுஸ்தீன் போன்றவர்களை போல ஆயிரக்கணக்கானவர்களை புன்முறுவலோடு என் ஆண்டவர் ஏற்றுக் கொண்டது போல , உம்முடைய மன்றாட்டினால் என்னையும் ஏற்றுக் கொள்வார் என்பது என் அசையா நம்பிக்கை

செபமாலை இராக்கினியே , அயராமல் எனக்காக நீர் மனுப்பேசி வருவதற்காக நான் என் முழு மனதோடு உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஆமென்.