அக்டோபர் 25

மாமரி பரலோக பூலோக அரசியாக முடிசூட்டப்படுகிறார்.

எபேசு நகர் பொதுச்சங்க நாளில் இருந்து தாயின் மட்டில் பக்தியுள்ளவர்கள் எவ்விதம் அவரைச் சித்தரித்தார்கள் ? அரசியாக , சக்கரவர்த்தினியாக ராஜரீக சின்னங்களால் அலங்கரிக்கப்பட்ட அரியணையில் ஆடம்பரமாக வீற்றிருக்கிறார் . அவரது சிரசை ராஜரீக கிரீடம் ஜோடிக்கிறது. புனிதர்களும் சம்மனசுக்களும் அவரைச் சுற்றி நின்று வணக்கம் செலுத்துகின்றனர் . இயற்கை வளங்கள் வல்லமைகள் மேல் மட்டுமல்ல அவரது அதிகாரம், சாத்தானின் பொல்லாத தாக்குதலை அடக்குவதிலும் அவர் செல்வாக்கு செல்கின்றது . ஏன்? நான்காம் நூற்றாண்டில் இருந்து தானா தாய்க்குச் செல்வாக்கு ?

கபிரியேல் சம்மனசு மங்கள வார்த்தை சொன்ன சமயமே அவரை அரசியென்று குறிக்கவில்லையா? "உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார் . அவர்  தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய தேவன் அவருக்கு அளிப்பார் . யாக்கோபின் கோத்திரத்தில் அவர் என்றென்றும் அரசு புரிவார் . அவரது அரசுக்கு முடிவு இராது " என்று பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி அரசியான அன்னையிடம் தானே சொல்ல முடியும் ?

தேவ தாயைப் புகழ்வதில் கீழ்நாடுகள் தான் முன் நின்றன . கீழ் நாட்டில் சூசையப்பருக்குச் சொன்ன செபம் ஒன்று "மகாப் பாக்கியம் பெற்ற நீதிமானான சூசையப்பரே , நீர் அரச குலத்தில் பிறந்ததனாலே பழுதற்ற அரசியின் பர்த்தாவாயிருக்க மற்ற யாவருக்குள்ளும் நீர் தெரிந்து கொள்ளப்பட்டீர். அவர் சொற்கடந்த சுந்தரியாய் அரசனான இயேசுவைப் பெற்றெடுப்பார் " பின் மரியின் பக்கம் திரும்பி "அரசியான மரிக்கு நான் கவி பாடுவேன். அவருக்கு மகிமையும் வணக்கமும் செலுத்த போகும்பொழுது மகிழ்ச்சியினால் துள்ளி அவரில் நிறைவேறிய அதிசயங்களை ஆனந்தமாய் பாடுவேன் . ஓ ஆண்டவளே ! அரசியே ! என் நாவானது தகுதியான விதமாய் உம்மைப் புகழ்ந்தேற்ற ஆற்றல் அற்றது . கிறிஸ்து அரசரைத் தாங்கிய நீர் பக்தி சுவாலகர்களுக்கு மேல் உயர்த்தப் பட்டுள்ளீர் . அகில உலக அரசியே வாழ்க எங்களுக்கெல்லாம் ஆண்டவளான அரசியே அன்னையே வாழ்க ".

முதல் நூற்றாண்டில் இருந்து புனிதர்களும் எழுத்தாளர்களும் பாப்புமார்களும் வேத அறிஞர்களும் ஆராதனை சடங்கு முறைகளும் நம் அன்னையை அரசிஎனப் பாவித்தனர் , பா இசைத்தனர் , பிரார்த்தனை கோர்த்தனர் . ஏனெனில் அவர் தேவ தாய் , கடவுளின் தாய் , பரலோக அரசரின் அன்னை .இரட்சணிய அலுவலில் அவர் பெரும் பங்கு கொள்ள தேவன் சித்தமானார் . பேயோடு யுத்தம் தொடுத்து அவனை வீழ்த்தி அவன் கையில் இருந்த மக்களை மீட்டு அவர்களுக்கு இரட்சணியம் கொண்டு வந்ததனால் இயேசு நம் அரசர் அல்லவா ? இயேசு சபை பெரிய அறிஞரான சுவாரஸ் சொன்னார் : "கிறிஸ்துநாதர் நம்மை இரட்சித்தபடியினால் எவ்விதம் விசேச உரிமையில் நமக்கு அதிபதியும் அரசரும் ஆனாரோ அதே போல் கன்னி மரியும் நமக்கு அரசி . தம்முடைய சதையிலிருந்து இயேசுவை ஆக்கினபடியாலும் நமக்கு மனம் பொருந்தி அவரை நேர்ந்து கொண்டபடியாலும் நம் ஈடேற்றத்தை ஆசித்து அதற்காக மன்றாடி அதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறபடியாலும் விசேச விதமாய் நமது இரட்சணிய அலுவலில் அவர் பங்கு பெற்றவர் ஆனதாலும் அவர் நமக்கு அரசி ". இயேசுவோடு அவருக்கு உரிய - எவருக்கும் கிட்டாத சொல்லரிய - ஐக்கியத்தினால் அவர் இயேசு அரசரின் மகிமையைப் பகிர்ந்து கொண்டார் . இயேசுநாதர் மனிதர்களின் மனதிலும் , புத்தியிலும் ஆளுகிறார் அல்லவா ? அந்த ஆட்சியில் தேவ தாய்க்குப் பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா ? மெய்யாகவே நம் அன்னை பரலோக பூலோக அரசி . அவர் மோட்ச ஆரோபணமான நாள் பிதா சுதன் பரிசுத்த ஆவியால் முடி சூட்டப் பட்டார்

இந்த வைபவத்தை மாபெரும் திருநாளாக கொண்டாடச் சொன்ன நம் அன்புள்ள தந்தை 12ஆம் பத்திநாதருக்கு நாம் என்ன கைம்மாறு செலுத்துவோம் ?

நமது அன்னையும் , அருளும் இரக்கமும் நிறைந்த அரசியுமான மாமரியிடம் முழு நம்பிக்கையோடு சென்று இக்கட்டில் உறுதியையும் , இருளில் ஒளியையும் , துக்கத்தில் ஆறுதலையும் கேட்போமாக . பாவத்தின் அடிமைத் தனத்தினின்று விலகப் பிரயாசைப்படுவோமாக . நமது அன்னையும் அரசியுமானவருக்கு குழந்தைக்குரிய வணக்கத்தைச் செலுத்துவோமாக . அவரது திருத்தலங்களும் ஆலயங்களும் செபமாலை தாங்கிய கரத்தோடு தாயின் தாசர்களால் நிறைவதாக . கோவில்களிலும் வீடுகளிலும் நோயாளி சாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் கிறிஸ்துவர்கள் குழுமி வந்து செபமாலை சொல்லி அவர் துதியை பாடுவார்களாக. மாமரியின் நாமம் போற்றப்படுவதாக . அந்நாமம் தேனை விட இனிமையானதல்லவா ? பொன் ஆபரணங்களை விட விலை உயர்ந்ததல்லவா ? ஒவ்வொருவரும் தத்தம் நிலைக்கேற்ற பிரகாரம் அவரது அதிசய புண்ணியங்களைக் கண்டு பாவிப்பார்களாக.

சரிதை.

பிரான்ஸ் தேசத்து அரசியான காஸ்திஸ் பிளான்சம்மாளுக்கு மணமுடித்து 12 ஆண்டுகளாகியும் பிள்ளைப் பேறில்லை. அர்ச் சாமிநாதர் அவளைச் சந்தித்த போது தினம் செபமாலை செய்து கன்னித்தாயை மகிமைப்படுத்தித் தாயாகும் பாக்கியத்தைக் கேட்கச் சொன்னார் . அன்று முதல் அரசியும் பிரமாணிக்கமாய் செபமாலை சொல்லி வந்தாள். 1213 ஆம் ஆண்டு ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்து பிலிப்பு என்று பெயரிட்டாள். இப்பாக்கியம் வெகு நாள் நீடிக்கவில்லை . குழந்தைப் பருவத்திலேயே அம்மகன் இறந்தான்.

பக்தியில் பிரசித்தி பெற்ற அந்த அரசி , நம்பிக்கையை இழக்காமல் தினம் செபமாலை சொல்லி வந்தாள். எண்ணிக்கையில்லா செபமாலையைக் கட்டி ஆஸ்தான சபையில் உள்ள யாவருக்கும் கொடுத்தாள். தன் நாட்டில் பற்பல பட்டணங்களில் உள்ள சங்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்து தன்னோடு சேர்ந்து தன் கருத்துக்களுக்காக செபமாலை செய்து வர யாவரையும் கேட்டுக் கொண்டாள்.இத்தனை ஆயிரக்கணக்கான செபமாலைகள் பலனளிக்காமல் போகுமோ ? 1215 ஆம் ஆண்டில் உலகமே கொண்டாடப்போகும் அர்ச் லூயிஸ் பிறந்தார் (ஞானப் பிரகாசியார் ராஜா) .அவர் வளர்ந்து பிரான்ஸ் தேசத்துக்கு மகிமையாகவும் கிறிஸ்துவ அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மாதிரிகையாக விளங்கி அர்ச்சியசிஷ்டவராய் மரித்தார்.

செபம்.

இக்கண்ணீர்க் கணவாயிலிருந்து , பற்பல துன்பம் என்னும் அலைகள் குமுறி எழும் துக்க கடலில் இருந்து உம்மை நோக்கி ஏறெடுத்துப் பார்க்கிறோம். உமது மகிமையின் தரிசனத்தால் ஆறுதலை அடைந்து பரலோக பூலோக அரசியே , மனுக்குலத்தின் அன்னையும் அரசியுமான மாமரி , எங்களுக்குப் புண்ணியத்தின் பாதையைக் காட்டும் . அதை விட்டு விலகாமல் நடக்க எங்களுக்குத் துணையும் உதவியுமாக நின்று , அரசியான அன்னையே எங்களை ஆண்டருளும் . உமது மதுரமான அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும் திருச்சபையின் மேல் ஆதிக்கம் செலுத்தியருளும். இந்நாளின் இக்கட்டுகளில் நீர்தானே ஆதரவென்று அது உம்மை , உம் சலுகையைத் தேடி வருகிறது . வேத கலாபனைக்கு உட்பட்டிருக்கும் நாடுகள் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும் . மனிதர்கள் சத்தியம் ஒன்றையே தேடும்படி அவர்கள் புத்தியில் அரசாட்சி செய்தருளும் . நன்மையையே அவர்கள் என்றும் பின்பற்றும்படி அவர்கள் மனதை ஆண்டருளும் . தனிப்பட்ட ஆட்கள் மேலும் வல்லோருடைய கூட்டத்தின் மேலும் , ஞானிகளின் சங்கத்தின் மேலும் , எளியோருடைய ஆசைகளின் மேலும், உம் அரசாட்சி செல்வதாக . உம்மோடு மோட்சம் சேர்ந்து இயேசு கடவுளை நாங்கள் யாவரும் ஆராதிக்கும்படி எங்களை ஆண்டு நடத்தியருளும்.

ஆமென்.