அக்டோபர் 24

தேவ தாயின் மோட்ச ஆரோபணம்.

தேவ நற்கருணையைத் தாங்கும் பாத்திரத்தை பொன்னால் செய்தோ , பொன்முலாம் பூசியோ, அபிஷேகம் செய்யப்பட்ட கரங்களைத் தவிர வேறொன்றும் தொடா வண்ணம் எவ்வளவு பதனமாய் வைத்திருக்கிறோம்? பத்துமாதம் இயேசுவைச் சுமந்த பாத்திரத்தை இயேசுவின் சதையின் சதையும் ரத்தத்தின் ரத்தமுமாகிய தேவ தாயின் உடலைக் கல்லறையின் அழிவு அண்டத் திருமகன் சம்மதிப்பாரா ? மரிக்கக் கடன் இல்லாவிட்டாலும் மகனைக் கண்டு பாவித்து மரித்த மாமரியைச் சில தினங்களுக்குள் நேச குமாரன் ஆடம்பரத்தோடு மோட்ச மாளிகைக்கு ஏந்திச் செல்லுகிறார் . சூரியர்களை விட அதிகப் பிரகாசம் வீசி சோதி முகில்களிடை மாதா மெதுவாய் மிதந்து செல்லுகிறார். அவரைச் சுற்றி எத்தனை வானதூதர்களின் கணங்கள் ! அவர்கள் அசையும்போது அவர்களுடைய வெண் நெற்றியில் தணல் கொழுந்துகள் தாவுகின்றன . அவர்களது ரோசா சிறகுகளிலிருந்து அனல் பொறிகள் , இரையுங் கடலில் பல சூரியன் மின்னுவது போல தங்கக் கதிர்கள் போல் பறக்கின்றன . என்ன இனிமையான கீதங்கள் இசைக்கின்றனர்!

கன்னித்தாய் மனுக்குலத்திற்கு மாதிரிகை. மனுக்குலத்தின் பிரதிநிதியாக மேலோகம் செல்லுகிறார் . ஒரு நாள் அவரது மக்களாகிய நாமெல்லோரும் அவரோடு அவருடைய ஆனந்தத்தில் இருக்க வேண்டும் என்பது ஆண்டவரின் ஆசையல்லவா? இந்நோக்கத்தின் அறிகுறி ,அச்சாரம் தேவதையின் மோட்ச ஆரோபணம். இறைவனின் தாளத்தின் பெருக்கம் இது தான்!

ஏழாம் நூற்றாண்டில் அர்ச். தமாசின் அருளப்பர் நிகழ்த்திய சொற்பொழிவின் இரண்டொரு மொழிகளைக் கேட்பீர்களா ? உயிருள்ள தேவனின் பரிசுத்த பேழை , தம் உத்தரத்தில் தமது இரட்சகரைத் தாங்கிய பேழை , கரங்களால் ஆகாத ஆண்டவரின் ஆலயத்தில் இளைப்பாறுகிறது. அவரது முன்னோரான தாவீது மகிழ்கிறார் . அவரோடு சம்மனசுக்கள் நர்த்தனம் செய்கின்றனர் . அதிதூதர்கள் தோத்திரம் பாடுகின்றனர் . பரிசுத்தர் மரியின் மகிமையைப் புகழ்ந்து கானம் இசைக்கின்றனர் . சத்துவர்கள் மாற்றி மாற்றி பண் இசைக்கின்றனர் . ஞானாதிக்கர்கள் பல புகழ்கள் சமர்ப்பிக்கின்றனர் . பக்தி சுவாலகர்கள் அவர் புகழைச் சாற்றுகின்றனர்

இன்று புதிய ஆதாம் உயிருள்ள பூங்காவை ஏற்றுக் கொள்ளுகிறார் . சாபம் நீக்கபெற்றது . சீவிய விருட்சம் நடப்பட்டது . ஆதாமுக்கு வந்த சாபத்தால் தேவ அருளின் ஆடையை இழந்தோம் , நமது ஆடையில்லா கோலம் அலங்கரிக்கப்பட்டது.

இன்று உலக நாட்டத்தால் கறைபடாக் கன்னிகை மோட்ச எண்ணங்களால் ஊட்டம் பெற்றவள் - அவளே சீவிய மோட்சமானபடியினால் -  மண்ணுக்குத் திரும்பவில்லை . மோட்ச கூடாரங்களுக்குள் வரவேற்கப்பட்டார். அவரிடம் இருந்து அல்லவா யாவருக்கும் சீவியம் வழிந்தது . அவர் எவ்விதம் சாவை ருசிக்கலாம் ? உயிருள்ள தேவனின் தாய் அவரிடம் தூக்கிச் செல்லப்படுவது   எவ்வளவு நியாயம்! பாம்பின் சோதனைக்கு உட்பட்ட ஏவை குழந்தைப் பேற்றில் துன்பப்பட சபிக்கப்பட்டாள் ; சாவின் தண்டனை விதிக்கப்பட்டாள். அதல பாதாளத்தில் ஆழ்த்தப்பட்டாள். ஆனால் இறைவனுடைய குரலுக்குச் செவிசாய்த்தவர், பரிசுத்த ஆவியால் நிரப்பப் பெற்றவர் மானிட உதவியின்றி தன் மகனைக் கர்ப்பம் தரித்தார் , யாதொரு வாதனையின்றி ஈன்றெடுத்தார் . அவரை இறைவனுக்கு முழுமையும் நேர்ந்து கொண்டார் . அவரைச் சாவு அழிக்க முடியுமா? சீவியம் உருவெடுத்த உடலில் நாச நாற்றம் நுழைய முடியுமா? மோட்சத்துக்குச் செல்லும் நேர்  பாதை அவருக்கு வகுத்திருக்கிறது. " நான் இருக்கும் இடத்தில் என் ஊழியன் இருப்பான்" என்று உண்மையும் உயிருமான கிறிஸ்து சொல்லி இருக்கும் போது அவர் தாய் அவரோடு இருக்க வேண்டாமா?

தேவதை ஆரோபணமான திருநாளில் வாசிக்கும் நற்செய்தி மரியா மார்த்தா வீட்டில் இயேசு தங்கி இருந்த நாளைப் பற்றியதல்லவா ?ஏன் ? அர்ச் அகுஸ்தீன் பதில் இறுப்பார்: மார்த்தா விருந்து தயார் செய்தார் . மார்த்தா மாசற்றவள் , நமதாண்டவருக்கு உணவளிப்பதிலேயே கவனமாக இருக்கிறாள் மரியா ஆண்டவர் வார்த்தையைக் கேட்ட வண்ணமே இருக்கிறாள் . மரியா ஆண்டவரிடமிருந்து உணவு பெறுகிறாள். மார்த்தாளின் உயிர் உலகின் உயிர் . மரியாளது உயிர் மோட்சத்திற்கு உரியது

இந்நற்செய்தி கன்னித் தாய்க்கும் பொருந்தும் . அவர் மார்த்தாளும் மரியாளும் சேர்ந்தவர். நாசரேத்தூர் வாழ்நாள் முழுவதும் நம் ஆண்டவருக்கு உணவு ஊட்டினார் . நம் ஆண்டவரால் உணவு ஊட்டப்பட்டார். அவர் உழைத்தார் , இளைப்பாற்றினார் .மோட்ச வாழ்க்கையைப் பூமியில் நடத்தினார். இயேசுவின் மறைந்த மகிமையை இயேசு மறுரூபமானபோது அப்போஸ்தலர் கண்டனர் . தாயின் மறைந்த மகிமையை பரலோக ஆரோபணத்தில் கண்டனர். பூலோக வாழ்வில் தாயின் மகிமை திரையிடப்பட்டு இருந்தது.

இயேசுவின் ஆரோகணத்துக்குப் பின்னும் மார்த்தாளின் அலுவலை அன்னை விட்டுவிடவில்லை. அருளப்பரைப் போஷித்தார் . அவர் எப்போதும் தியானத்தில் புதைந்தவர். இரு சகோதரிகளும் வசித்த இல்லம் எது ? ஆண்டவரின் தாயாருடைய கன்னி உதரமாம். அங்கு அவர் தன் குழந்தையைப் போஷித்தார் . தன் குழந்தையிடம் உணவைப் பெற்றார். என்ன உணவை ? வார்த்தையையும் ஆண்டவரின் ஞானத்தையும்.

சரிதை.

அர்ச். ராபர்ட் பெல்லார்மின் ஒரு சரிதை சொல்லுகிறார். மூன்று சகோதரிகள் ஒரு குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்து புத்திமதி கேட்டுவந்தனர் . அக்குருவானவர் ஓர் ஆண்டு முழுதும் ஒவ்வொரு நாளும் தவறாமல் செபமாலை செய்து வர ஆலோசனை சொன்னார் . அவர்கள் சொல்லும் செபமாலையைக் கண்டு நமதாண்டவளுக்கு அழகிய மகிமையின் ஆடைகளைப் புனைவர் என்றார் குருவானவர் . மோட்சத்திலிருந்து அக்குருவானவர் தெரிந்து கொண்ட இரகசியம் இது.

அவ்வாறே அம்மூன்று சகோதரிகளும் ஓராண்டு முழுதும் தவறாமல் செபமாலை செய்து வந்தனர் . சுத்திகரத் திருநாளன்று இரவு ஆண்டவள் அவர்களுக்கு தரிசனை தந்தார் . அர்ச் கத்தரீனம்மாளும் அர்ச் அஞ்ஞேசம்மாளும் தேவ தாய் கூட வந்திருந்தனர் . தேவ தாய் மகா மகிமையுள்ள ஆடைகளை அணிந்திருந்தார் . அவைகள் எங்கும் பிரகாசம் வீசின ."அருள் நிறைந்த மரியே "என்னும் மொழிகள் அவ்வாடைகளில் பொன்னால் இழைத்திருந்தன . கன்னித்தாய் மூத்த சகோதரியை நெருங்கி "என் மகளே நீ வாழ்க ! நீ எத்தனையோ முறை வெகு நேர்த்தியாய் எனக்கு வாழி சொன்னாய் . நீ எனக்குச் செய்திருக்கும் இந்த என் ஆடைகளுக்கு நன்றி !" என்று தேவ தாய் வீணை நாதத்தினும் இனிய நாதத்தில் இசைந்தார் . கூட இருந்த இரு கன்னியரும் அவருக்கு வந்தனை புரிந்தனர் . பின் மூவரும் மறைந்தனர்

ஒரு மணி நேரம் சென்று நமதாண்டவளும் அந்த இரு அர்சிஷ்டவர்களும் இரண்டாம் முறை தோன்றினர் . இம்முறை தேவ தாய் ஒரு பச்சை ஆடை சூடி இருந்தார் . அதில் தங்க இழையோ பிரகாசமமோ இல்லை . நடுச் சகோதரியை அண்டிச் சென்று செபமாலை செய்து இந்த ஆடைகளை தனக்குப் புனைந்ததற்காக அவளைப் பாராட்டினார் . தன் அக்காளிடம் வந்த போது பொன்னாகத் துலங்கும் ஆடைகளோடு வந்ததற்குக் காரணம் ஏதென்று இரண்டாவது சகோதரி வினவினாள் .தேவ தாய் பதில் சொல்லுவார் "உன் அக்காள் உன்னை விட உத்தமமான விதமாய்ச் செபமாலை செய்து வந்த படியினால் வெகு அழகிய ஆடைகளை எனக்கு நெய்தாள் "

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து அழுக்குப் படிந்த கிழிந்த கந்தைகளைக் கட்டிக் கொண்டு கடைக்குட்டிக்கு தேவ தாய் தோன்றி "மகளே , நீ எனக்கு நெய்திருக்கும் இந்த ஆடைகளுக்கு நன்றி செலுத்துகிறேன்  " என்றார் . "ஓ என் அரசியே , இவ்வளவு அசங்கிதமாய் நான் உமக்கு எவ்விதம் உடுத்தி விடக் கூடும் ? தயவு செய்து என்னை மன்னியும் . செபமாலையை நன்றாய்ச் செய்வதினால் அழகிய ஆடைகளைச் செய்ய எனக்கு இன்னும் சிறிது அவகாசம் கொடும் " என்று கெஞ்சினாள் இளையவள் . மனம் உடைந்த அப்பெண்ணை விட்டு தேவ தாயும் இரு கன்னியர்களும் மறைந்தனர் . நடந்த யாவற்றையும் தன் ஆத்தும குருவானவரிடம் அப்பெண் சொன்னாள் . இன்னும் ஓர் ஆண்டு பிரமாணிக்கமாய் செபமாலை சொல்லவும் , நன்றாய்ச் சொல்லவும் அக்குருவானவர் அவளை எச்சரித்து அனுப்பினார் .

மறு ஆண்டு முடிந்தவுடன் சுத்திகரத் திருநாளன்று வெகு ஆடம்பரமாகவும் , அலங்காரமாகவும் உடுத்தி அர்ச் கத்தரீன் , அர்ச் அஞ்ஞேசம்மாள் கூடத் தேவ தாய் தோன்றினார். அவர் சிரசில் மணிமுடிகள் துலங்கின . "என் நேச குமாரத்திகளே ! நீங்கள் மூவரும் மோட்சத்தைச் சம்பாதித்து விட்டீர்கள் . அங்கு போகும் பெரும் பாக்கியமே உங்களுக்கு நாளைக்கு வரும் "என்றார் . "ஆண்டவளே , எங்கள் இதயம் ஏற்கனவே தயார் "என்று மூவரும் இசைந்தனர் . அன்றிரவே , அம்மூவரும் வியாதியை வீழ்ந்தனர் . தங்கள் ஆத்தும குருவை அழைத்தனர் . அவர் அவர்களுக்கு கடைசி தேவ திரவிய அனுமானங்களை வழங்கிய பின் , தங்களுக்குக் கற்றுக் கொடுத்த செபமாலை சொல்லும் வழக்கத்திற்காக அவருக்கு தோத்திரம் புரிந்தனர் . சிறிது நேரத்தில் எண்ணிக்கையில்லா கன்னியர்களோடு தேவ அன்னை தோன்றி பால் போன்ற வெண் அங்கியால் மூவரையும் உடுத்தி விட்டார் . "இயேசுக் கிறிஸ்துவின் பத்தினிகளே வாருங்கள் , நித்தியத்திற்கும் உங்களுக்குத் தயார் செய்து வைத்திருக்கும் மோட்சத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் "என்று சம்மனசுக்கள் பாடி முடித்ததும் அவர்கள் பரலோகம் சென்றனர்.

நல்ல ஆத்தும குருவைத் தெரிந்து கொண்டு அவர் சொன்னபடி கேட்டு பக்தியாய் கவனமாய் செபமாலை செய்து வருகிறவர்கள் பாக்கியவான்கள் அல்லவா?

செபம்.

சீவிய அப்பத்திற்குக் கோதுமையாகச் சிருஷ்டிக்கப்பட்டவரே , கிறிஸ்துவின் தாயே, நாங்கள் உம்மில் அகமகிழ்கிறோம் . கதிர் முற்றிய காட்டை , காற்றும் மழையும் தங்க மணிகள் நிரம்பிய தளமாக்கியது போல அவரது அன்பில் அடங்கினீர். என்னிக்கையில்லாக் கோதுமை மணிகளைப் போர்த்தது போல ஒப்புயர்வுற்றீர். ஓஸ்திக்கேற்ற தானியமாக நீர் நேர்ந்து கொள்ளப் பட்டீரே ,இப்போது கோதுமை அப்பத்தில் இருக்கிறது . புயல் காற்றில் உம்மைப் பாதுகாத்த கரங்கள் மோட்சத்திலிருந்த தெளிந்த ஆகாயத்தினூடே நீண்டு நித்திய பிரகாசத்திற்கு உம்மை எடுத்துச் செல்லுகின்றன.

செபமாலை இராக்கினியே , இயேசுவின் ஞான சரீரத்துக்கு ஆத்தும சரீர சேவை செய்து உணவளிக்கவும் , அவ்விதம் பிறருக்களிக்க அவசியமான உணவை உம்முடைய வல்லமையுள்ள மன்றாட்டால் இயேசுவிடமிருந்து நாங்கள் பெறவும் உதவி செய்வீராக.

ஆமென்.