இயேசு தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவுகிறார் 22-02-1923

எனது அப்போஸ்தல சீடர்களுடைய பாதங்களைக் கழுவும்போது என் இருதயத்தை நிரப்பிய நினைவுகளை உனக்கு முதலில் வெளிப்படுத்துவேன்.

எவ்விதம் பன்னிருவரும் கூடியிருந்தனர் என்பதை குறித்துக் கொள்: ஒருவரும் வெளியே விடப்படவில்லை . நேச சீடனாகிய யோவான் அங்கே இருந்தார். சீக்கிரம் என் எதிரிகளிடம் என்னைக் கையளிக்கக் காத்திருந்த யூதாஸ் அங்கே இருந்தான். ஏன் அவர்கள் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்தேன் என்றும், ஏன் அவர்களுடைய பாதங்களைக் கழுவினேன் என்றும் உனக்குச் சொல்வேன்.

எனது திருச்சபை உலகுக்கு அறிவிக்கப்பட வேண்டிய நேரமும் எல்லா ஆடுகளும் ஒரே மேய்ப்பனைக் கொண்டிருக்க வேண்டிய நேரமும் வந்து விட்டபடியால், அவர்கள் யாவரையும் நான் ஒன்றாய்ச் சேர்த்தேன்.

கனமான பாவத்துடனிருப்பவர்களுக்கு முதலாய் என் வரப்பிரசாதத்தைக் கொடுக்க நான் ஒருபோதும் மறுப்பதில்லை . நான் விசேட விதமாக நேசிக்கும் நல்லவர் - களின் கூட்டத்திலிருந்து அவர்களைத் தள்ளுவதில்லை என்று காண்பிக்க நான் விரும்பினேன். ஒவ்வொருவரும் தம் ஆத்தும் நிலைக்கு ஏற்றாற்போல் வரப்பிரசாதம் பெற்றுக் கொள்ளும்படிக்கு அவர்கள் யாவரையும் என் இருதயத்தில் வைத்துக் கொள்கிறேன்.

என் பாதத்தடியில் கூடியிருந்து என் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களின் கூட்டத்தில் இருந்த பாக்கியமிழந்தவனான சீடன் யூதாஸ் நித்திய கேட்டினை நாடிச் செல்வதை நான் துயரத்துடன் பார்த்தேன்.

இப்படிப்பட்டவர்கள் பாவத்தில் வாழ்வதால் என்னை விட்டு விலகிப் போயிருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். இவர்களுக்கு ஒரு மருந்தும் கிடையாது என்றும், ஒரு காலத்தில் இவர்களுக்குரியதாக இருந்த நேசத்தை எப்போதுமே இழந்து விட்டதாகவும் இவர்கள் நினைக்கக்கூடாது. பாக்கியமிழந்த ஆத்துமங்களான உங்களுக்காக தம் இரத்தத்தையெல்லாம் சிந்திய கடவுள் உங்கள்மீது இவ்வித எண்ணம் கொண்டிருப்பதில்லை.

என்னிடம் வாருங்கள், பயப்பட வேண்டாம், ஏனெனில் உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன். என் இரத்தத்தில் உங்களைக் கழுவுவேன். நீங்கள் பனிக்கட்டியிலும் வெண்மையாவீர்கள். இரக்க வெள்ளத்தில் உங்களுடைய பாவங்கள் மூழ்கடிக்கப்படும். என் இருதயம் உங்கள் மீது கொண்டிருக்கும் நேசத்தை அதிலிருந்து எதுவும் பிரிக்க முடியாது.

ஜோசபா, இந்த ஆத்துமங்கள் யாவும் தவம் செய்ய வருவதைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உன்னை ஆட்கொள்ளக்கடவது. பயமல்ல, ஆனால் நம்பிக்கையே அவர்களைத் தூண்ட வேண்டும். ஏனெனில் அவர்கள் என் இருதயத்தில் அடைக்கலம் புகும்படி அதைத் திறந்துவிடத் தயாராயிருக்கும் இரக்கத்தின் இறைவன் நான்!