நவம்பர் 21

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

இந்நாள் மட்டும் செய்த தியானங்களினாலே எல்லோரும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்கவேணுமென்றும், அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ண வேணுமென்றும் தீர்மானித்திருப்பீர்களென்பதற்குச் சந்தேகமில்லை. இப்போது அந்த உதவி சகாயம் ஆத்துமாக்களுக்குப் பலிக்கும்படியாகவும். உங்களுக்குப் பேறு பலனுள்ளதாகும்படியாகவும், அதை எப்படிச் செய்யலாமென்று காண்பிக்கவேண்டுமல்லவா? அதேதென்றால், அநேகம்பேர்கள் அந்த உதவி சகாயத்தைத் தக்க விதமாய்ப் பண்ணாதிருக்கிறதினால் அவர்கள் செய்கிறதெல்லாம் ஆத்துமாக்களுக்குப் பிரயேசனமில்லாமற் போகிறதாமே.

அதனாலே இப்பேர்ப்பட்ட முக்கியமான காரியத்தில் நீங்கள் மோசம் போகாதபடிக்கு நாம் சொல்லப்போகிறதைக் கவனமாய்க் கேளுங்கள். முதலில் கிறிஸ்துவனான ஒருவன் இறந்தபிற்பாடு அவனுடைய பிரேதத்தையும் அவனுடைய ஆத்துமத்தையும் நினைக்க வேணும். கிறிஸ்துவர்களுடைய சரீரமானது ஞானஸ்நானத்தினால் ஆசிர்வதிக்கப்பட்டு, உறுதிப் பூசுதலில்  இஸ்பிரித்துசாந்துவின் முத்திரை அடைந்து, திவ்விய நற்கருணையினால் அர்ச்சிக்கப்பட்டு, ஆத்துமாவோடு ஒன்றித்து என்றென்றைக்கும் மோட்சத்திலே வாழ நியமிக்கப்பட்டிருக்கிறதினாலே ,அந்த சரீரத்துக்கு வேண்டிய வணக்க மரியாதை பண்ணி ,அதைத் தகுந்த ஆரவார மரியாதையோடு அடக்கம் செய்ய வேணுமென்பது திருச்சபையின் கட்டளையாம்.

ஆயினும் ஆத்துமம் பிரிந்து போகிறபோதாவது, பிரேதத்தைக் குளிப்பாட்டுகிற போதாவது, குழியிலே வைக்கப்போகிறபோதாவது, புறமதத்தார் செய்யும் சடங்குகள் ஒன்றையும் செய்யக் கூடாதென்றும் உங்களுக்கு நன்றாகக் தெரியுமே. கிறிஸ்துவர்கள், விசேஷமாய்க் கிறிஸ்துவப் பெண் பிள்ளைகள், தகுமான அடக்கவொடுக்கத்துக்கு விரோதமாய் ஒன்றையும் அநுசரிக்க வேண்டாம். அதல்லாமலும் அந்தச் சமயத்தில் வேண்டிய சிறப்பும் வேண்டிய ஆரவாரமும் பண்ணுகிறது நல்லதாயினும், அதெல்லாவற்றையும் திருச்சபை வழக்கத்தின்படியே ஒவ்வொருவருடைய அந்தஸ்துக்குத்தக்கது நடத்த வேணுமல்லாமல், அதற்கு மிதந்தப்பிச் செய்தால் வெறும் ஆடம்பரமென்றும், வீணான பெருமையென்றும் சொல்லவேண்டியது. மேலும், கிறிஸ்துவனுடைய அடக்கமானது தேவசடங்காகையால் கூடுமான இடங்களிலே திருச்சபையில் வழங்குகிற சுகிர்த முறைமைகளை அநுசரிக்கவேண்டியது சரிதான்.

மரித்தவருடைய சரீரத்தை அடக்கம்பண்ண கடமைப்பட்டிருப்பதுபோல், அவருடைய ஆத்துமத்தை விசாரிக்க விசேஷ கடமையுண்டு. கிறிஸ்துவனுக்கு உண்டான பிரதான கடமைகளில் தங்களுடையவர்களின் ஆத்துமாக்களை விசாரிக்கிறது ஒரு விசேஷ கடமையென்பது நிச்சயமாம். அதாவது இறந்தவருடைய ஆத்துமத்துக்கு வேண்டிய உதவி சகாயம் தாமதமின்றியும் குறைச்சலின் றியும் பண்ணவேணும்.

சில நல்ல கிறிஸ்துவர்கள் ஆத்துமம் பிரிந்துபோனவுடனே தாங்களும் அந்த ஆத்துமத்துக்காக வேண்டிக் கொண்டு உபதேசிமார்கள் கோவில்பிள்ளைகள் பிச்சைக்காரர் முதலானவர்களையும் வேண்டிக்கொள்ளப் பண்ணுகிறதுமல்லாமல், வெகு தூரமென்கிலும் நடந்து குருப்பிரசாதிகளிடத்துக்குப் போய் உடனே திவ்விய பூசை நடக்கும்படிக்குச் செய்வார்கள் .அப்படியே எல்லோரும் செய்வார்களேயானால், அது பெரிய புண்ணியமாயிருக்கிறதுந்தவிர ஆத்துமாக்களுக்கும் பெரும் சகாயமாகும்.

அநேகம் கிறிஸ்துவர்கள் ஒரு முகாந்திரமில்லாமல் தாமதித்துப் பத்து நாளைக்குப் பிற்பாடு அல்லது ஒரு மாதத்துக்குப் பிற்பாடு அல்லது ஒரு வருஷத்துக்குப் பிற்பாடு மாத்திரமே இறந்தவர்களுடைய ஆத்துமத்துக்காக கையில் மோட்ச விளக்கு எடுப்பார்கள் . அது பொறுக்கத்
தகாத அசட்டைத்தனமும், ஆத்துமாக்களின் மட்டில் ஓர் பெரிய கொடுமையுமாம். அதனாலே உங்களுடையவர்களின் ஆத்துமாக்களுக்குக் கூடுமான மட்டும் சீக்கிரத்தில் வேண்டிய உதவி சகாயம் பண்ணவேனும்.

இந்த உதவிசகாயம் ஏதென்று கேட்டால் ஜெப வேண்டுதலும், பிச்சை தர்மமும், தவக்கிரியையும் ,திருச்சபையின் பலன்களும் , உன்னதமான திவ்விய  பூசையும் ஆகிய இவ்வைந்து விசேஷ உதவிகளே. இவை எல்லாம் பற்றும்பற்றாய் அந்தந்த தியானங்களில் விவரிக்குமுன்னே இவைகள் நினைத்த பலனைக் கொடுக்கும்படிக்கு ஒரு பரம சத்தியத்தை நன்றாய் ஆராய்ந்து கண்டுப்பிடிக்க வேண்டும். அந்தோ, இந்த சத்தியத்தை அறியாததினாலும் அதை அநுசரிக்காததினாலும் அவர்கள் ஆத்துமாக்களுக்காகச் செய்கிறதெல்லாம் ஆத்துமாக்களுக்கு உபயோகமில்லாமற் போவதுந்தவிர, செய்பவர்களுக்கு முதலாய் பலனில்லாமல் போகிறதென்பது நிச்சயம்.

அப்படியும் ஆத்துமாக்களுக்காக நாம் அதிகமாய்ச் செய்தோமென்றிருக்கையில், அந்த ஆத்துமாக்கள் நாம் செய்தவைகளினால் யாதோர் பரியோசனமும் பெறாமல், உத்தரிக்கிற ஸ்தலத்திலே இரட்சிப்பின்றி வருத்தப்பட்டுக் கிடப்பார்கள்.நற்கிரியை யாவும் பலனுள்ளதாய் இருக்கும்படிக்கு இஷ்டப்பிரசாதத்தோடு செய்திருக்கவேணுமென்பது வேத சத்தியம். அதெப்படியென்றால், சரீரத்துக்கு உயிர் ஆத்துமந்தான்;ஆத்துமத்துக்கு உயிர் இஷ்டப்பிரசாதந்தான் என்று அர்ச் அகுஸ்தீன் எழுதிவைத்தார் .

ஆத்துமம் பிரிந்துபோன பிற்பாடு சரீரம் ஏதாகிலும் செய்யக்கூடுமோ ? இல்லை. அப்படி சாவான பாவத்தினால் இஷ்டப்பிரசாதம் ஆத்துமத்திலிருந்து போன பிற்பாடு ஆத்துமம் செத்த பிணம்போல பலனுள்ள நற்கிரியை ஒன்றையும் செய்யக்கூடாது. அப்பேர்ப்பட்ட நற்கிரியையினாலே ஒன்றையும் பெறமாட்டாது, ஒன்றையும் அடைய மாட்டாது. அந்த நற்கிரியை செய்தும் செய்யாததுபோல வீணாய்ப்போகும். அதனாலே பாவிகளுடைய நற்கிரியைகளைச் சர்வேசுரன் கிருபையாய்ப் பார்க்கிறதுமில்லை, ஏற்றுக் கொள்கிறதுமில்லை என்று வேத புஸ்தகங்களிலே எழுதியிருக்கிறதாமே. அப்படியிருக்க, சாவான பாவத்தோடே செய்த நற்கிரியை யாவும் பலனற்றிருப்பதினாலும், சர்வேசுரனாலும் அங்கீகரிக்கப்படாதென்கிறதினாலும், இந்த நற்கிரியைகளால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு யாதோர் பிரயோசனம் வரப்போகிறதுமில்லை, அவர்களுடைய வேதனை குறையப்போகிறதுமில்லை, முடியப்போகிறதுமில்லை என்பது நிச்சயம்.

மேலும், இராஜ துரோகியான ஒருவன் இராஜாவுக்கு ஒரு விண்ணப்பம் செய்துகொண்டால் அந்த விண்ணப்பத்தை இராஜா அங்கீகரிப்பானோ என்ன சொல்லுங்கள். அப்படி பரம இராஜாவாகிய சர்வேசுரனுக்கு சாவான பாவத்தால் நாம் விரோதிகளாய் இருக்கும்போது ஜெபிக்கும் ஜெபங்களை அவர் ஒப்புக் கொள்வாரோ? நாம் ஆத்துமாக்களைக் குறித்து செய்யும் ஜெபத்துக்கு காது கொடுப்பாரோ? இது மிகவும் சந்தேகமாயிருக்கிறது. இப்பேர்ப்பட்ட வேண்டுதலினாலே அந்த ஆத்துமாக்களுடைய பயங்கரக்கடன் சற்றாகிலும் தீரமாட்டாது. அது இப்படியிருப்பதினால், ஆத்துமாக்களைக் குறித்து நாம் ஏதாகிலும் செய்யப்போகிறபோது நம்முடைய ஆத்துமத்தில் யாதோர் சாவான பாவமுண்டோ இல்லையோ என்று நன்றாய் சிந்தித்து, சாவான பாவமிருந்தால் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ண சமயமில்லாவிட்டாலும் உத்தம மனஸ்தாபமாவது படவேண்டியது. அப்போது நாம் செய்யும் நற்கிரியை பலனுள்ளதாகி நினைத்த காரியத்துக்கு உதவுமென்கிறதற்குச் சந்தேகமில்லை.

இப்போது சொன்னதெல்லாம் மற்ற நற்கிரியைகளுக்கு அவசரமானாலும், திவ்விய பூசைக்கு அவசரமில்லை. ஏனென்றால் திவ்விய பூசையினுடைய பலனானது சேசு கிறிஸ்துநாதரால் வருகிறதேயல்லாமல், திவ்விய பூசையைப் பண்ணுகிற குருவினாலாவது, திவ்விய பூசையைப் பன்னுவிக்கிற கிறிஸ்தவனாலாவது  அந்தப் பலன் வருகிறதில்லை. அதனாலே திவ்விய பூசை எப்போதும் அளவறுக்கப்படாத பலனுள்ளதாய் இருக்கிறதென்பது தப்பாது. ஆயினும் ஒருபாவியானவன் ஓர் ஆத்துமத்துக்காக திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்யும்போது அதனுடைய பலனை அவன் நினைத்த ஆத்துமத்துக்கு சர்வேசுரன் கொடுப்பாரோ இல்லையோ என்பது சந்தேகம் என்று வேத சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள் .

ஏனெனில் அவன் சர்வேசுரனுக்கு விரோதியாய் இருப்பதால்,சர்வேசுரன் அவனுடைய கருத்தை நிறைவேற்றினால், அது அவருடைய விசேஷ தயவினாலே நிறைவேறியதொழிய மற்றப்படியல்ல.

கிறிஸ்துவர்களே! இப்போது சொன்ன தெல்லாம் நிச்சயமாகையால் நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஏதாகிலும் செய்யும்போது சாவான பாவமில்லாத மனதோடு அதைச் செலுத்தவேனும்.

கடைசியிலே உங்களுடைய நற்கிரியையெல்லாம் ஆத்துமாக்களுக்கு நிச்சயமாய் உதவும்பொருட்டு நீங்கள் நினைத்த ஆத்துமாக்களை நன்றாய்க் குறிக்கவேண்டியது மல்லாமல், அந்தந்த நற்கிரியைகளுக்கும் ஜெபங்களுக்கும் உண்டான திருச்சபையினுடைய பலன்களையும் பெறவேணுமென்கிற கருத்தோடிருக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக \.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.

செபம் 

கிருபையுடைத்தான சர்வேசுரா (இந்தவூர்) அல்லது (இந்தப் பட்டனத்து) கல்லறையிலே அடக்கம் செய்யப் பட்டிருக்கிற ஸ்திரி பூமான்களான சகல கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களைக் கிருபையாய்ப் பார்த்து அவர்களுடைய பாவங்களை மன்னித்து உத்தரிக்கிற சிறைச்சாலையிலிருந்து அவர்களை மீட்டு என்றென்றைக்கும் உம்மிடத்திலே வாழும்படியாய்ச் சேர்த்துக் கொள்ள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.

இருபத்தோராம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து கோவிலுக்கு மெழுகுத்திரி வாங்கி வைக்கிறது.

புதுமை 

சாஸ்திரிகளுக்குத் தலைமையுமாய், திருச்சபைக்கு அலங்காரமுமாய் அர்ச் சாமிநாதருண்டுபண்னின சபைக்கு மகிமையுமாயிருக்கிற அர்: தோமாசென்கிறவர் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியாயிருந்ததுமல்லாமல் இடைவிடாத முயற்சியுடன் தமது தவக்கிரியைகளினாலும் திவ்விய பூசைகளினாலும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவார். அவர் பாரீஸ் பட்டணத்தில் தெய்வீக சாஸ்திரத்தை எல்லாரும் அதிசயப்படுமாறு போதிக்கும் போது, சிலநாளுக்கு முந்தி இறந்த தம்முடைய சகோதரியின் ஆத்துமத்தைக் கண்டார். இந்த சகோதரியானவள் கன்னியாஸ்திரிகளுடைய ஒரு மடத்துக்குச் சிரேஷ்டம்மாளாயிருந்து அநேகம் சுகிர்த புண்ணியங்களைப் பண்ணியிருந்தாலும், இறந்தபிற்பாடு உத்தரிக்கிற ஸ்தலத்திலே தள்ளப்பட்டு அதிலே அகோர வேதனைகளை அநுபவித்துக்கொண்டிருந்தாள்.

அதனாலே சர்வேசுரனுடைய உத்தாரப்படியே தன் சகோதரனான தோமாசென்பவருக்குத் தரிசனையாகி நான் இந்த   நெருப்பிலே அகோரமாய் வருத்தப்படுகிறேனே என்பேரில் இரக்கமாயிருந்து எனக்கு உதவி சகாயம் பண்ணவேணுமென்று மன்றாடுகின்றேன் என்றாள். இந்தப் பிரகாரமாய் அர்ச். தோமாசென்பவர் அந்த ஆத்துமத்தை மீட்கச் ஜெபம் பண்ணி, ஒரு சந்தியாயிருந்து தவக்கிரியைகளைச் செய்து, திவ்விய பூசையைப் பண்ணினார்.

அநேகநாள் கடந்தபிற்பாடு இந்த அர்ச்சியசிஷ்டவர் உரோமபுரியிலே இருக்கும்போது, தம்முடைய சகோதரி யானவள் மறுபடியும் அவருக்குத் தோன்றி என்னுடைய உத்தரிப்பு முடிந்தது. உம்முடைய பிரயாசையால் என் கடனெல்லாம் தீர்ந்தது. என்றென்றைக்கும் சர்வேசுரனிடத்தில் இளைப்பாறப்போகிறேன் என்றாள். அப்போது அர்ச் தோமாசென்பவர் அவளை நோக்கி நம்முடைய இரு சகோதரர்கள் இறந்திருக்கிறார்களே. மறுலோகத்தில் அவர்களுடைய நிலைமை எப்படி என்று அறிவாயோ? என்றார்.

அதற்கு அவள் அவர்களிலொருவரான அற்நால்தூசென்பவர் அர்ச்.பாப்பானவரையும் அர்ச்.  திருச்சபையையும் அநியாயமாய் விரோதித்த பிரத்தெரிக்கூஸ் என்ற அரசனோடு போர்ச்சண்டை செய்திருத்ததினாலும் அதனிமித்தம் வெகு வருத்தப்பட்டிருந்ததினாலும் அவருடைய ஆத்துமம் மோட்சத்திலே உன்னதமான மகிமையை அடைந்திருக்கிறது. வேறொருவரான லந்தோல்பூஸ் என்கிறவர் இன்னும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிறாரென்கிறதினாலே நீர் அவருக்கு உதவிசெய்யவேணும். நீரோவென்றால், என் பிரியமுள்ள சகோதரனே! நீர் ஆண்டவருக்குத் தோத்திரமாக உண்டாக்கத் துவக்கின சுகிர்த புஸ்தகங்களைக் சீக்கிரமாய் முடித்துக் கொள்ளும் என்னத்தினாலே என்றால் எங்களோடு கூட என்றென்றைக்கும் சொல்லிலும் நினைவிலும் அடங்காத செல்வ பாக்கியங்களை சுகிக்கத்தக்கதாகச் சில வருஷத்துக்குள்ளே மோட்சத்துக்கு வரவழைக்கப்படுவீர் என்று சொல்லி மறைந்து போனாள்.

இவைகளைக் கேட்டு அர்ச். தோமாசென்பவர் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து முன்னிலும் அதிகமாய்த் தேவ ஊழியத்தில் உழைத்து, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வருந்தி, சம்மனசுகளுக்கு ஒப்பவொழுகி, சம்மனசென்னும் மகிமையான பெயரையடைந்து கடைசியிலே மரித்தார்.

கிறிஸ்துவர்களே ! இந்தப் பெரிய சாஸ்திரியானவர் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகப் பிரயாசைப்பட்டாற் போல நீங்களும் பிரயாசைப்பட்டால் அந்த ஆத்துமாக்களாலே உங்களுக்கு அநேக பிரயோசனம்  வருமென்று அறியக்கடவீர்களாக.

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.