நவம்பர் 20

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியானது உத்தரிக்கிற ஸ்தலத்தில் நமக்கு முதலாய் உதவுமென்று காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருந்து அவர்களுக்கு உதவி சகாயம்பண்ணுகிறது சர்வேசுரனுக்கு உகந்த புண்ணியமென்றும், நமது பேரில் சுமந்த பெரிய கடனென்றும், நமக்கு வெகு பிரயோசனத்தைத் தரும் பக்தியென்றும் தெளிவாய்க் காண்பித்துவிட்டோம். முன் விவரித்த நியாயங்களை நன்றாய் ஆராய்ந்து உற்றுப் பார்ப்பீர்களேயானால், அந்தச் சுகிர்த பக்தியானது உங்களிடத்திலே மென்மேலும் வளருமென்று நம்பியிருக்கிறோம். ஆயினும் இவ்விஷயத்தில் பசாசினுடைய சோதனையினாலேயும், பதிதர் முதலான துர்ச்சனுடைய பொல்லாத புத்தினாலேயும், சிலபேர்களுடைய மனம் தத்தளித்து, அதென்னமோவென்று அசட்டையாயிருக்கிறார்களென்று அறிவோம். இப்பேர்ப்பட்டவர்கள் நாம் இப்போது சொல்லப்போகிறதைக் கவனமாய்க் கேட்டுச் சரியாய் ஆராய்ந்து யோசனை பண்ணக்கடவார்களாக.

சத்திய சுருபியாயிருக்கிற சேசுகிறிஸ்துநாதர் சுவாமி தமது திருவாய் மலர்ந்து, கூடியிருந்த திரளான ஜனங்களுக்குத் திருவுளம் பற்றின பரம வாக்கியமாவது: "கொடுங்கள், அப்போது உங்களுக்கு கொடுக்கப்படும். அமுக்கவும் குலுக்கவும் பட்டுச் சரிந்துவிழும் நல்லளவை உங்கள் மடியிலே போடுவார்கள். ஏனெனில் எந்த அளவைக்கொண்டு அளந்திருப்பீர்களோ, அதைக் கொண்டு தானே உங்களுக்கும், அளக்கப்படும்" என்றார்.

ஆண்டவர் திருவுளம் பற்றின இந்த வாக்கியத்தை கவனித்து தியானிக்க வேனும் அது எப்படியென்றால், ஏறக்குறைய எல்லா மனுஷரும் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போவார்களென்றும், அதில் அகோர வேதனைகளை அநுபவிப்பார்களென்றும், அதில் நீண்ட காலமாய்க் கிடப்பார்களென்றும், முன் சொன்ன நியாயங்களினால் உச்சிப்பகலினும் தெளிவாய் விளங்கியிருக்குமே. அது இப்படியிருக்க, விவேகமுள்ள மனுஷன் தனக்கு இப்படி சம்பவிக்குமென்று அறிந்து என்ன செய்யவேணுமென்றால், தான் இவ்வுலகத்தில் ஜீவிக்கும் போதே மறு உலகத்தில் தனக்கு நேரிடப்போகிற நிர்ப்பாக்கியத்தை விலக்கவாவது, அதனுடைய கடினத்தைத் தணிக்கவாவது, அதனுடைய காலத்தைக் குறைக்கவாவது, தகுந்த வழிபாடுகளைத் தேடிக் கொள்வானல்லவோ? ஏற்கனவே பிச்சைக் கொடுத்து, ஜெபத்தியானம்பண்ணி, தபசுசெய்து, மற்ற நற்கிரியைகளைச் செலுத்தி, இவைகளுடைய பேறுபலனைத் தனக்கு முன் ஒரு பொக்கிஷத்தை அனுப்பினாற்போல மறு உலகத்துக்கு அனுப்புவான்.

ஆயினும் அவன் தேவநீதிக்குச் செலுத்த வேண்டிய பரிகாரக் கடன் கனத்த கடனாகையால், அவன் தனக்குச் செய்ததெல்லாம் போதாமல் மிகவும் குறைச்சலாயிருக்குமென்கிறதற்குச் சந்தேகமில்லை. இதற்கு என்னத்தைச் செய்யவேண்டியதாயிருக்குமென்றால் எந்த அளவைக் கொண்டு அளந்திருப்பீர்களோ, அந்த அளவையைக் கொண்டுதான் உங்களுக்கும் அளக்கப்படும் என்று சுவாமி திருவுளம்பற்றினாரே. இதற்கு அர்த்தமேதெனில் நீங்கள் உயிரோடிருக்கும்போது உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு எந்த அளவையைக் கொண்டு உதவப் பிரயாசைப் பட்டிருப்பீர்களோ, அந்த அளவையைக்கொண்டுதானே சர்வேசுரன் உங்களுக்கு மன்னிப்பு கொடுப்பதுமல்லாமல், நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வருத்தப்படும்போது அந்த அளவையைக் கொண்டுதானே மற்றவர்கள் உங்களுக்கு உதவி பண்ணுவார்களென்று அர்த்தமாயிருக்கிறதாக வேதசாஸ்திரிகள் நிச்சயித்துச்சொல்லுகிறார்கள்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து அதிகமாய் செய்யவேணுமென்கிற ஆசையினாலே அதிக ஜெபதப தானங்களை நடப்பித்து, அதிக பேறுபலன்களைச் சம்பாதித்து, அநேகம் முறை திவ்விய பூசைகளைப் பண்ணுவித்து வந்திருப்பீர்களேயானால், நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும்போது அப்படித் தான் உங்களைக்குறித்தும் செய்யப்படும். அதிகமாய்க் கொடுக்கிறவனுக்கு அதிகமாய்க் கொடுக்கப்படும். குறைச்சலாய்க் கொடுக்கிறவனுக்கு குறைச்சலாய்க் கொடுக்கப்படுமென்பது வேதவாக்கியமாம். இப்போது சொன்னதெல்லாம் வேத வாக்கியங்களுக்கும், உள்ள நியாயத்திற்கும் ஒத்ததாயிருக்கிறதாகத் தோன்றுகிறதுமல்லாமல், எண்ணிறந்த புதுமைகளினாலும் சரித்திரங்களினாலும் அது மெய்யென்று நிரூபிக்கப்பட்டதாகும்.

இரக்கமற்றவன் பேரில் இரக்கமற்ற தீர்வை வரும் என்று அர்ச் யாகப்பர் எழுதிவைத்தார். மேலும் சேசுகிறிஸ்து நாதர் , ஒவ்வொருவனும் பிறர்பேரில் இரக்கமாயிருந்து அவர்களுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளவேணுமென்று ஒர் உவமையினால் காண்பித்த பிற்பாடு, இரக்கமில்லாதவனை அவனுடைய எஜமான் கோபித்து, கடனெல்லாம் செலுத்த மட்டும் உபாதைப் படுத்துகிறவர்களிடத்தில் அவனைக் கையளித்தான். உன்னில் ஒருவன் தன் சகோதரனை முழுமனதோடே மன்னிக்காவிட்டால், அப்படியே என் பரம பிதாவானவர் அவனுக்குச் செய்வார் என்று திருவுளம்பற்றினார். இதோ இரக்கமற்றவனுக்கு இரக்கமற்ற தீர்வை வருமென்றும் இரக்கமில்லாதவன் தன் கடன் எல்லாவற்றையும் செலுத்துமட்டும் உபாதிக்கப்படுவானென்றும், சேசு கிறிஸ்துநாதரும், அவருடைய அப்போஸ்தலருமான அர்ச் யாகப்பரும் சொல்லுகிறார்கள். இரக்கமில்லாதவன் எவனென்றால், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில்

இரக்கமில்லாதவன்தான். பிள்ளைகள் தங்கள் தாய் தகப்பன்மாரையும், தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளையும் , புருஷன் தன் பெண்ஜாதியையும், பெஞ்சாதி தன் புருஷனையும் ,  சிநேகிதர் தங்கள் சிநேகிதரையும், பந்துக்கள் தங்கள் பந்து ஜனங்களையும் மறந்து, அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் கொடிய வேதனைகளில் ஆறுதலுமின்றி உதவியுமின்றி அகோரமாய் உபாதிக்கப்படுகிறதை அறிந்தும், அவர்களைக் கை நெகிழ்ந்து ஒரு உதவியும் செய்யாவிட்டால், இவர்கள் தான் இரக்கமற்றவர்கள். இவர்களுக்குத்தான் இரக்கமற்ற தீர்வை கிடைக்கும். இவர்கள் தான் தங்களுடைய கடனெல்லாம் தீருமட்டும் அந்த பயங்கரமான சிறைச்சாலையில் உபாதிக்கப்படுவார்கள். மெய்யாகவே மெய்யாகவே, நாம் உத்தரிக்கற ஆத்துமாக்களின் அவதியைக் குறைக்கவும் அமர்த்தவும் என்னத்தைச் செய்திருப்போமோ அப்படித்தான் நமக்கும் செய்யப்படும். அந்த ஆத்துமாக்களின் பேரில் நமக்கு இரக்கமில்லாதிருந்தால் நாம் உத்தரிக்கும்போது ஒருவரும் நமக்கு இரங்கமாட்டார்களென்பது தப்பாத சத்தியமாம்.

செத்தவர்களுக்கு நீங்கள் எப்படி கிருபை செய்தீர்களோ அப்படித்தான் சர்வேசுரன் உங்களுக்கும் கிருபை செய்யக்கடவாராக என்று ரூத்தென்ற வேத புஸ்தகத்து முதல் அதிகாரம் 8-ம் வசனத்தில் எழுதியிருக்கிறது. மேலும் போர்ச்சண்டையிலே செத்த சவுல் இராஜாவையும் அவனுடைய மகனான யோனத் தாசென்பவனையும் ஷாபேஸ்காலாதென்ற ஊரார் நல்லடக்கம் பண்ணினதை தாவீது இராஜா அறிந்து அவர்களை வாழ்த்தினதுமல்லாமல், அதற்காக உங்களுக்கு சர்வேசுரன் கிருபை செய்வார் என்று சொல்லி அனுப்பினார்.

செத்தவர்களை அடக்கம் பண்ணுகிறது நல்லதாயினும், அவர்களுடைய ஆத்துமத்துக்கு இரங்கி நல்ல இடமாகிய மோட்சத்துக்கு அவர்களைச் சேர்ப்பிக்கிறது அதிக நல்லது என்பதில் சந்தேகப்படுவாருண்டோ ?ஆனதனாலே மனுஷனானவன் எப்படி அந்த ஆத்துமாக்களுக்குக் கிருபை காண்பித்திருப்பானோ அப்படித்தான் அவனுக்கும் கிருபை காண்பிக்கப்படும். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவன் பாக்கியவான். ஏனெனில் அவன் அந்த ஆத்துமாக்களுக்குக் கிருபை செய்தாற் போலே அவனும் கிருபை அடைவான். உத்தரிக்கின்ற ஆத்துமாக்களுக்குக் கிருபை செய்யாதிருந்தாற் போல, அவனும் கிருபை அடையப் போகிறதில்லை. தேவநீதிக்கு அவன் செலுத்த வேண்டிய கடனெல்லாம் தீருமளவும், அவன் உத்தரிக்கிறஸ்தலத்திலே கிடப்பானென்பது தப்பாது.

கிறிஸ்துவர்களே ! இதெல்லாவற்றையும் நீங்கள் கேட்டபின் உங்களுக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு இரக்கமும், பக்தியும் உண்டாகுமென்று நினைத்திருக்கிறோம். அந்த ஆத்துமாக்களுக்கு ஏராளமான உதவி சகாயம் பண்ணுகிறது நமக்கு பெரும் ஆதாயந்தான். அதெப்படி என்றால், நாம் ஆத்துமாக்களுக்காக ஒப்புக் கொடுக்கிறதெல்லாம் நமக்கே பேறுபலனாக திரும்பி வருகிறதுமல்லாமல், சாவுக்குப் பிற்பாடு ஒன்றுக்கு நூறாக நமக்குக் கொடுக்கப்படும் என்று அர்ச் அமிர்தநாதர் திருவுளம்பற்றினார், இது இப்படியிருக்க, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது எல்லாவற்றிலும் வெகு பிரயோசனமுள்ளதென்று கண்டறிந்து, முன்னும் பின்னும் யோசனை பண்ணாமல், உங்களாலே கூடுமான யாவற்றையும் அவர்களுக்குச் செய்யவேணுமென்று தீர்மானிக்கக்கடவீர்களாக

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மன வல்லயச் செபம்.

சேசுவின் திரு இருதயமே எங்கள் பேரில் இரக்கமாயிரும்

செபம் 

மரித்தவர்களுடைய ஆத்துமங்களுக்கு நித்திய ஜீவியத்தைத் தருகிறவரும் அவர்களுடைய சரீரங்களை உயிர்ப்பிக்கிறவருமாய் இருக்கிற சர்வேசுரா ! பாவிகளுடைய மன்றாட்டுகளுக்கு இரங்கச் சித்தமாயிருக்கிறீரே.! மரித்த ஸ்திரி பூமான்களுடைய ஆத்துமங்களைக் குறித்துப் பாவிகளாகிய நாங்கள் பொழிகிற செபங்களையும், சிந்துகிற காணிக்கைகளையும் மகாக்கிருபையோடு பார்த்தருளும். அந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற வேதனைகளிலிருந்து மீட்கப்பட்டு மோட்சத்தின் மங்காத மகிமையைத் தரித்துப் பேரின்ப வெள்ளத்தில் அமிழ்ந்து உம்மிடத்தில் என்றென்றைக்கும் வாழ வரும்படிக்குச் செய்யவேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.

இருபதாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது

ஒரு வியாதியஸ்தனைச் சந்தித்து அவனுக்கு ஆறுதலான வார்த்தை சொல்லி அந்தப் புண்ணியத்தை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக்கொடுக்கிறது.

புதுமை 

முத். லித்வினம்மாள் எல்லாப் புண்ணியங்களுக்கும் தெளிந்த கண்ணாடியாயிருந்தாலும் அவளிடத்திலே உண்டான பொறுமையென்கிற புண்ணியம் அதிகமாய்த் துலங்கும்படியாய்ச் சர்வேசுரன் அவளுக்கு கடின வியாதியை அனுப்பினார். மேலும் அவள் உத்திரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியுள்ள வளாய் இருந்ததினாலே அந்த ஆத்துமாக்கள் எவ்வளவு வேதனை அநுபவிக்கிறார்களென்று சர்வேசுரன் அவளுக்கு பலமுறை காண்பித்தார்.

அதைக்கண்டு முத். லித்வினம்மாள் பல வியாதிகளினாலேயும் பல ரனங்களினாலேயும் தனக்கு வந்த வருத்தமெல்லாவற்றையும் அந்த ஆத்துமங்களுக்கு ஆறுதலாக ஒப்புக் கொடுத்தாள். ஆண்டவருடைய சந்நிதியிலே அவளுடைய இரு கண்களில் இருந்து இரத்தம் சொரியுமட்டும் கண்ணீர் சிந்தி அந்த ஆத்துமங்களுக்காக வேண்டிக் கொள்ளுவாள் . அதற்க்கு மேற்பட்டு கடின தவத்தின் கிரியைகளைச் செய்தாள்.  இதெல்லாவற்றையும் செய்துகொண்டு வந்ததால் உத்தரிக்கிற ஸ்தலத்தினின்று எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்களை மீட்டு மோட்சத்துக்குப் போகப் பண்ணினாளென்று அவளுடைய சரித்திரத்திலே எழுதியிருக்கிறது.

அவள் இதெல்லாம் செய்திருக்கையில் அவளுடைய தாயானவள் இறந்துபோனாள். அவளுடைய ஆத்துமத்துக்காக முத். லித்வினம்மாள் தான் அந்நாள்மட்டும் அநுபவித்த இருத்தமெல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்ததுமல்லாமல் அந்த ஆத்துமத்துக்குத் தர்மம் செய்யத் தன் வீட்டிலே இருந்த தட்டு முட்டுக்களை விற்றுக் கொடுத்தாள் . அவள் சாகிறபோது அவளாலே மீட்டிரச்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் அவளுக்கு வெகு ஆறுதலை அளித்து அவளை மோட்ச பேரின்பத்துக்குக் கூட்டிக் கொண்டு போனார்களாம்.

பிரஞ்சு இராச்சியத்திலே ஆர்சென்னும் சிற்றுாரிலே ஒரு குரு சுவாமியார் சகல புண்ணியங்களையும் பண்ணி அநேக அற்புதங்களையும் செய்த பிற்பாடு, ஆயிரத் தெண்னுாற்றைம்பத்தொன்பதாம் ஆண்டில் அர்ச்சியசிஷ்ட வராக மரித்தார். அவரும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் இடைவிடாத பக்தியை வைத்து அந்த ஆத்துமாக் களுக்கு உதவிசகாயம்பண்ண எப்போதும் விரும்புவார். அவர் செய்கிற அருமையான கிருத்தியங்களையும், படுகிற பல வருத்தங்களையும், செய்யும் தவக் கிரியைகளையும் மூன்று பங்காய்ப் பிரித்து, தம்முடைய பாவங்களுக்காக ஒரு பங்கும், பாவிகளுடைய பாவங்களுக்காக ஒரு பங்கும் , உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒரு பங்கும் வைத்துக் கொண்டுவருவார்.

பாவிகள் மனந்திரும்பும்படிக்குப் பகலிலே வருத்தப்படவும், உத்தரிக்கிற ஆத்துமாக்கள் ஈடேறும்படிக்கு இராத்திரியிலே வருத்தப்படவும், சர்வேசுரனிடத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். அப்படித்தான் தேவசித்தத்தினாலே சம்பவித்தது. இராத்திரி தோறும் காய்ச்சலோடே வெந்து, இருமலினால் அவஸ்தைப்பட்டு, பசாசினாலே அடிப்பட்டு ஒரு மணி நேரமாவது நல்ல நித்தரை செய்யாமல் சொல்லிலடங்காத வருத்தங்களை அனுபவித்துக் கொண்டு வந்தார். அவர் அப்படிச் செய்துவருகையில் அவர் மனந்திரும்பின பாவிகள் எத்தனையென்றும், மீட்டிரச்சித்த பாவிகள் எத்தனையென்றும் சொல்லி முடியாது.

கிறிஸ்துவர்களே இப்போது சொன்ன இரண்டு புண்ணியாத்துமாக்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து செய்ததைக் கண்டு அதிசயப்படவேண்டியது மட்டுமல்லாமல், அந்த ஆத்துமாக்களுக்கு நீங்களும் அதிகமாய்ச் செய்யவேண்டுமென்று அறியக்கடவீர்களாக.

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.