நவம்பர் 22

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற முதல் வழி செபமாம்.

தியானம்.

தக்கபிரகாரமாய்ச் செய்கிற ஜெபமானது, சர்வ வல்லபமுள்ளதாகையால் , அதனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணலாமென்கிறதற்குச் சந்தேகமில்லை . ஜெபத்தினுடைய மட்டற்ற வல்லமையைத் சற்றுநேரம் யோசித்துப் பார்ப்போமாக. தேவையான நன்மையெல்லாம் அடைய விரும்புகிறவர்கள் என் பிதாவைக் கேளுங்களென்றும், அப்படிக் கேட்கிறவன் தான் கேட்டதை அடைவானென்றும், சேசுகிறிஸ்துநாதர் தாமே பலமுறை சுவிசேஷத்திலே திருவுளம்பற்றியிருக்கிறார். அதைப் பற்றி நிரந்த கர்த்தாக்களும் வேத சாஸ்திரிகளும் ஏகோபித்து மகா தாழ்ச்சியோடும் தளராத நம்பிக்கை விசுவாசத்தோடும் மாறாத நிலைமையோடும் செய்கிற வேண்டுதல் ஆண்டவருடைய சந்நிதியில் சர்வ வல்லமையுள்ளதென்று எழுதிவைத்தார்கள்.

தன் வேண்டுதலினாலேயல்லவோ யோசுவாவென்பவர் சூரியனை நில்லெனக் கூறி நிறுத்தினார். தன் வேண்டுதலினாலேயல்லவோ மோயிசனென்பவர் தன் பகைவருடைய சேனைகளைச் சங்கரித்தார். தன் வேண்டுதலினாலேயல்லவோ எலியாசென்பவர் மழை பெய்யாதபடிக்குத் தடுத்து, பின்பு பொழியப்பண்ணினார். தங்கள் வேண்டுதலினாலேயல்லவோ அர்ச்சிஷ்டவர்கள் மரித்தோர்களை எழுப்பி, வியாதிஸ்தரை குணப்படுத்தி, குருடருக்குப் பார்வையும், செவிடருக்குச் செவியும், முடவருக்கு நடையும் கட்டளையிட்டு, மட்டில்லாத ஆச்சரியத்துக்குரிய அற்புதங்களைச் செய்தார்கள். மேலும் ஜெபத்தினால் மலைகள் அசையவும் ,கற்கள் பணிந்து பழகவும் பண்ணினார்கள் என்று அறிவோம் .

ஆனதால் சுயஞ்சீவியரான சர்வேசுரன் தன் சுபாவத்தால் சர்வத்துக்கும் வல்லவராய் இருக்கிறார்போலே ,தன் வேண்டுதலால் மனுஷனானவன் சர்வ வல்லவனாயிருக்கிறான் எனத் தகும். ஆகையால் மனுஷனானவன் தன் ஜெப வேண்டுதலினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவியும் ஆறுதலும் வருவிக்கக்கூடுமென்பது தப்பாத சத்தியமாம்.

முன் காண்பித்தவண்ணமே, வரி வேதத்திலும் அருள் வேதத்திலும் எப்போதும் எங்கும் மரித்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிற சுகிர்த சகாயம் வராதிருந்தால், அப்படிச் செய்வது வீணான காரியமும் அபத்தமான வழக்கமுமாயிருக்குமே. இப்படிச் சொல்வது அபத்தமென்பதினாலே, நம்முடைய ஜெபங்களினாலும் வேண்டுதலினாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதலையும் உதவிகளையும் வருவிக்கக் கூடுமென்பது பரம சத்தியமாம்.

இதிலே அறியவேண்டிய விசேஷமாவது : ஜெபத்திலே இரண்டு வகை உண்டு. அதாவது ஒவ்வொருவன் தனித்தனியே செய்கிற ஜெபமும், அநேகர் கூடி பொதுவிலே செய்கிற ஜெபமுமாம். தனித்தனியே செய்கிற செபம் நல்லதென்றால், பொதுவிலே செய்கிற ஜெபத்துக்கு அதிக பலனுண்டு. ஆனதால் பக்தியுள்ள ஆத்துமாக்கள் தனித்தனியே ஜெபித்துக்கொண்டாலும், செய்யப்படுகிற ஜெப வேண்டுதலுக்கும் ஒருமித்திருக்க  விரும்புவார்கள். இப்போது சொன்ன வண்ணமே ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்கள் அந்த ஆத்துமாக்களுக்காக தனித்தனியே பல ஜெபங்களைப் பண்ணுகிறதுமல்லாமல், இந்த கருத்தோடு அடிக்கடி பல மனவல்லய ஜெபங்களையும் சொல்லுவார்கள்.

 பொதுவிலே செய்யப்படுகிற ஜெப வேண்டுதலானது தனி ஜெபத்துக்கும் மேற்பட்டதாயிருக்கும். அதெப்படி யென்றால், கோவிலிலேயாவது வீட்டிலேயாவது, மூன்று பேர் அல்லது பல பேர் கூடி எதை அடையப் பிரார்த்தித்துக் கொள்ளுவார்களோ, அதை அடைவார்கள் என்று நமது திவ்விய இரட்சகரான சேசுகிறிஸ்துநாதர் திருவுளம் பற்றினார். ஆகையால் பொதுவிலே செய்யப்படுகிற ஜெபமானது மெய்யாகவே சர்வ வல்லபமுள்ளதாய் இருக்கிறதென்பது குன்றாத சத்தியமாம்.

பொதுவிலே செய்யப்படுகிற ஜெபமானது மூன்று வகையாய்க் செய்யப்படும். முதல்வகை ஏதென்றால், அநேகர் கூடிச் செய்கிற ஜெபமாம். இரண்டாம் வகையாவது யாதொரு சபையைச் சேர்ந்தவர்கள் அச்சபையில் வழங்குகிற செபங்களைத் தனித்தனியே செபித்தாலும் ,அவைகள் சபையின் பொதுவான செபங்களாகையால் அநேகர் கூடி செபிக்கிற ஜெபத்துக்கிணையாகும். அதனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களை விசேஷமாய் விசாரிக்கிற நன்மரணச் சபையிலே நீங்கள் சேர்ந்தால் உத்தமந்தான். மூன்றாம் வகையாவது யாதோர் சபையில் சேராமலும் பொதுவிலே ஜெபம் பண்ணாமலும் இருக்கிறவன், சாதாரண சத்திய திருச்சபையில் எங்கும் செய்யப்படுகிற ஜெபங்களையும், தர்ம புண்ணியங்களையும் நினைவினால் கருதி, இதெல்லாவற்றையும் மெய்யான ஆசையுடன் தான் விரும்புகிற காயத்தை அடையத்தக்கதாகச் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கிறதேயாம்.(உதாரணம்:  உலகெங்கிலும் நடைபெறும் திருப்பலியை ஒப்புக் கொடுத்தல்)

உத்தரிக்கிற ஆத்துமாக்களை உண்மையான பட்சத்தோடு நேசித்து அவர்கள்பேரில் பக்தியாயிருக்கிறவர்கள் இம்மூன்றுவகை ஜெபங்களைக் கொண்டு அவர்களுக்கு உதவி சகாயம் பண்ண விரும்புவார்களாம். மேலும் அப்படி ஜெப  வேண்டுதலினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவது எவராலும் கூடுமான காரியந்தான். சாஸ்திரம் அறியாத நிர்மூடரும், அரைக்காசு  ஜவேசில்லா தரித்திரரும், இருந்தயிடத்தைவிட்டு அசையக் கூடாத வியாதிஸ்தரும், முதியோர்களும், கைம்பெண்களும் முதலாய் இந்தக் காரியத்தை நிறைவேற்றுவது அரிதல்லவே.

இதற்காக வெகு பணம் செலவு செய்யவும், சாஸ்திரங்களை அறியவும் வேணுமோ? உன் வீட்டை விட்டுப் புறப்படாமலும், உன் தொழிலைக் கொஞ்சமும் குறைக்காமலும், உன் பொருளை இழந்து வருந்தாமலும் செய்யத்தகுங் காரியம் இதல்லவோ? இதுகூட செய்யாது போனால் ஆத்துமாக்களின் பேரில் உங்களுக்குப் பக்தி நேசமும் தயவு இரக்கமும் பரிச்சேதம் இல்லையென்று காணப்படுமே. -

இன்னும் இவ்விஷயத்தில் சில காரியங்களைக் கவனித்து அறியவேனும்:

1-வது சகலமான உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துச் செப வேண்டுதல் பண்ணுவது நல்லதாயினும், மனுஷனானவன் தன்னுடையவர்களின் ஆத்துமாக்களை முதலில் நினைத்து அவர்களுக்காகச் செய்ய வேண்டியதைச் செலுத்தவேணுமென்கிறது நியாயமும் கடனுமாம்.

2-வது நல்ல கருத்தோடும் நல்ல பக்தியோடும் செய்த ஜெபம் நல்லதாயிருந்தாலும், பிரயோஜனமுள்ளதாயிருந்தாலும், திருச்சபையானது பலன்களைக் கொடுத்திருக்கிற ஜெபங்களைச் செபிக்கிறதே அதிக மேன்மையும் ஆத்துமாக்களுக்கு அதிக பலனுமுள்ளதென்று அறியவும்.

3-வது கூடிய திருச்சபையிலே செய்யப்படுஞ் செபம் தனிஜெபத்துக்கு மேற்பட்டதாகையால் உங்களுடைய மரித்தவர்களைக் குறித்துக் கோவிலிலே ஜனங்கள் கூடுகிறபோது அடிக்கடி வேண்டுதல் நடத்த வேணும்.

4-வது குருக்களும் சந்நியாசிகளும் கன்னியாஸ்திரிகளும் பிச்சைக்காரரும் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்பட்டவர்களாய் இருக்கிறபடியினாலே, அவர்களுடைய ஜெபங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்ளுக்கு அதிகமாய் உதவுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. அதனால் உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களுக்காக அவர்களுடைய ஜெபங்களை விசேஷமாய் ஒப்புக்கொடுக்கச் செய்ய வேணும்.

5-வது உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துச் சர்வேசுரன் சந்நிதியிலே நீங்கள் நேராய்ப் பொழிந்த ஜெபங்களையெல்லாம், அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணும்படிக்கு அர்ச். தேவமாதாவையும், அர்ச். சூசையப்பரையும் மற்ற மோட்சவாசிகளையும் வேண்டிக் கொள்ளுகிறது சுகிர்த வழக்கமாம்.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்

அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்கு ஆதரவாயிரும்

செபம் 

சுயஞ்சீவியமான சர்வேசுரா! இன்றுதானே மரித்தவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்துத் தேவரீருடைய கிருபையை வேண்டிக்கொள்ளுகிறோம். அந்த ஆத்துமாக்கள் பூமியிலே இருக்கும்போது செய்த குற்றங்களையெல்லாம் தேவரீர் மன்னித்து, அவர்களை நித்திய நரகத்துக்குத் தள்ளாமலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலே நிறுத்தாமலும், தேவரீருடைய பிரதாபமுள்ள சமூகத்துக்கு அழைத்துக்கொள்ளவேணுமென்று தேவரீருடைய மட்டற்ற தயாளத்தைப் பார்த்து தேவாரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்

இருபத்திரண்டாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:

இன்று மரித்தவர்களுடைய ஆத்துமாக்களுக்காகக் சேசு கிறிஸ்துநாதருடைய ஐந்து காய மந்திரம் வேண்டிக்கொள்ளுகிறது.

புதுமை 

பிரெஞ்சு இராச்சியத்தின் கர்பாந்திராசென்ற பட்டணத்தில் முத்திப்பேறுபெற்ற எஸ்பிரித்தம்மாள் வாழ்ந்து வந்தாள். அவள் சகல புண்ணியமும் நிறைந்தவளாயிருந்தாலும், அவளிடத்தில் விசேஷமாய் மனத்தாழ்ச்சியும் சாந்தகுணமும் துலங்கிக் கொண்டிருந்ததாம். அதனாலே அவளுடைய ஜெபவேண்டுதல் சர்வேசுரனுக்கு அதிக பிரியப்பட்டு கேட்டதெல்லாம் பெறுவிக்கும்.

அவளுடைய உதவியைக் கேட்ட உத்தரிக்கிற ஆத்துமாக்கள் அநேக முறை அவளுக்குத் தரிசனையானதுமல்லாமல், அவளுடைய வேண்டுதலினாலே திரளான ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போனதாக அவளுடைய சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

அப்பட்டணத்தில் கலியாணம் பண்ணாத மர்கரித்தம்மாளென்ற ஒரு பக்தியுள்ள பெண்மணி இருந்தாள். இவளும் எஸ்பிரித்தம்மாளும் ஒருவருக்கொருவர் வெகு பட்சமாயிருந்து புண்ணியத்தில் வளரத்தக்கதாக அந்நியோன்னியமாய்த் தங்களை ஏவிக்கொண்டு நானாவித புண்ணியங்களையும் தர்மங்களையும் செய்துகொண்டு வந்தார்கள். இவர்கள் இப்படி செய்துகொண்டு வருகையில் கொஞ்ச வயதுள்ளவயாயிருந்த  மர்கரித்தம்மாள் இறந்தாள். அவள் அத்தனை புண்ணியங்களையும் தர்மங்களையும் செய்திருந்தாலும், சில சொற்பக்குற்றங்களைப் பற்றியும் நீதியுள்ள சர்வேசுரனால் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு போகத் தீர்வையிடப்பட்டாள்.

அவளுடைய ஆத்துமத்துக்காக முத்திப்பேறு பெற்ற எஸ்பிரித்தம்மாள் செபத்தியானம் பண்ணும் போது, புலம்பல் சத்தங்களும் அழுகைக் கூக்குரலும் கேட்கப்பட்டு ஐயையோ வேகிறேன். எனக்குப் பிரியமுள்ள எஸ்பிரித்தம்மாளே! எனக்காக ஆண்டவரிடத்திலே வேண்டிக்கொள்ளும் என்ற வார்த்தையானது இவள் காதிலே விழுந்தது. இவையெல்லாம் கேட்டுத் திகிலடைந்த எஸ்பிரித்தம்மாள், போ எனக்கு பயம் வருவிக்காதே என்று உரத்தச் சத்தமாய் சொன்னாள் .

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அந்த ஆத்துமம் திரும்ப வந்து புலம்பி அழுகிறதை எஸ்பிரித்தம்மாள் கேட்டு மனந்தேறி, நீ யார், உன்னை எனக்கு காண்பி , உனக்கு என்ன செய்ய வேணும் சொல் " என்று கேட்டதற்கு மார்கரீத்தம்மாளுடைய ஆத்துமம் நெருப்பினால் சூழப்பட்டு பொறுக்கப்படாத வேதனை அனுபவிக்கிற பிரகாரமாய் அவளுக்குத் தன்னைக் காண்பித்து 'என்னை அறியீரோ ? மார்கரீத்தம்மாள் நான் தானே , உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு வேதனை அனுபவிக்கிறேனே , என்னை அவ்விடத்திலிருந்து மீட்டிரட்சிக்க உம்முடைய செபங்களை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்க மன்றாடுகிறேன் " என்று சொல்லி மறைந்து போனது .

எஸ்பிரித்தம்மாளோவென்றால் இந்த ஆத்துமத்துக்காக சில நாள் மகா பக்தியோடு தாம் செய்கிற செபங்களையும் பண்ணுகிற தவங்களையும் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்த பிற்பாடு மார்கரீத்தம்மாள் மோட்சத்துக்குப் போனதாக நிச்சயமாய் அறிந்தாள்.

வேறொரு சமயத்தில் முப்பது வருஷத்துக்கு முன் இறந்த ஒரு பெரிய படைத்தலைவனுடைய ஆத்துமம் அவளுக்குக் காணப்பட்டு இவ்வளவு வருஷம் நான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிறேனே, எனக்காக ஆண்டவரிடத்திலே வேண்டிக்கொள்ளவேணும்எென்று மன்றாடினதாம். இந்தப் படைத் தலைவனுடைய ஆத்துமத்தைக் குறித்து அநேக குருக்கள் பூசை பண்ணியிருந்தாலும், அவனுடைய பந்துஜனம் அநேக தர்மங்களச் செய்திருந்தாலும், முப்பதுவருஷத்திற்குப் பிற்பாடு அவனுடைய ஆத்துமம் இன்னும் உத்தரிக்கிற ஸ்தலத்திலேயே இருந்தது.

எஸ்பிரித்தம்மாள் இந்த நிர்ப்பாக்கியத்துக்கு இரங்கி அதிகபத்தி விசுவாசத்தோடு வேண்டிக்கொள்ளத் துவங்கினாள். இவளுடைய ஜெபங்களை சர்வேசுரன் கிருபாகடாகூடிமாய் ஏற்றுக்கொண்டு இந்தப் படைத் தலைவனுடைய ஆத்துமத்தை மோட்ச பேரின்பத்துக்குச் சேர்த்துக் கொண்டாராம். கிறிஸ்துவர்களே! பக்தி விசுவாசத்தோடு செய்த ஜெபமானது அவ்வளவு வல்லமையுள்ளதென்றறிந்து இடைவிடாமல் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ள வேணுமென்று அறியக்கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.