நவம்பர் 19

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவதால் நமக்கு மூன்று விசேச நன்மைகள் உண்டாகுமென்று காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நம்மாலே கூடுமான மட்டும் உதவிசகாயம் பண்ணுகிறது எவ்வளவு பிரயோசனமுள்ள புண்ணியமென்று போன தியானத்தில் பொதுவாய்க் காண்பித்தாயிற்று. இந்தச் சுகிர்த பக்தியினால் மூன்று விசேஷ பெரிய நன்மைகள் வருமென்று இப்போது விவரித்து ஒப்புவிக்கவேணும். மனுஷனானவன் பாவ மன்னிப்பையும், நன்மரணத்தையும், மோட்சத்துக்குப் போவேனென்கிற உறுதியான நம்பிக்கையும் இம்மூன்று பெரிய நன்மைகளை விரும்புவானல்லவோ?  இம்மூன்று நன்மைகளை அடைவதற்கு உத்தரிக்கற ஆத்துமாக்களின் பேரில் வைத்த விசேஷ பக்தியானது உத்தம வழியாமென்கிறதற்குச் சந்தேகமில்லை.

அதெப்படியென்றால்:
முதலாவது : இஸ்பிரித்து சாந்துவினால் ஏவப்பட்டு அர்ச். யாகப்பர் சொன்னதாவது தப்பிப்போகிற பாவியைத் திருப்புகிறவன், அவன் ஆத்துமத்தை சாகாதபடிக்கு காப்பாற்றுகிறது.மல்லாமல், தன் பாவத்திரளையும்  காணாதபடிக்குச் செய்வான் என்றார்.
இதே உங்களுடைய பாவக் கடனை யெல்லாம் துலைத்து கர்த்தர் சந்நிதியில் பரிசுத்தனாகிறதற்குப் பாவியை மனந்திருப்பப் பிரயாசைப்படுவது இஸ்பிரித்து சாந்துவினா காண்பிக்கப்பட்ட வழிதான். ஆயினும் ஒரு பாவியை மனந்திருப்புகிறதைவிட ஒர் ஆத்துமத்தை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டு மோட்சத்துக்கு, சேர்ப்பிக்கிறதே பெரிதான காரியமாம். ஆகையால் அப்படிச் செய்வது உங்களுடைய பாவக்கடனைத் தீர்க்கிறதற்கு உத்தம வழியென்று சொல்லவேனுமல்லவோ?

மேலும் தீர்க்கதரிசியான தனியேல் என்பவர் நபுக்கொதோனோசோர் இராஜாவை நோக்கிச் சொன்ன வாக்கியமாவது இராஜாவே, பிச்சைகளினாலே உம்முடைய பாவங்களைப் பரிகளியும், தரித்திரருக்கு தர்மங்களை கொடுத்து உம்முடைய அக்கிரமங்களைத் தீர்த்துக் கொள்ளும் என்றார். வேறொருவேத புத்தகத்திலே, தர்மமாவது பாவங்களை எதிர்த்துத் தடுக்குமென்று எழுதியிருக்கிறது. இதோ பிச்சையும் தர்மமும் பாவங்களைத் தீர்த்துவிடுகிறதென்றும், பாவங்களைப் பரிகரிக்கிறதென்றும், பாவங்களைத் தடுக்கிறதென்றும் வெளிப்படையாய்க் காணப்படுகிற சத்தியமாம்.

இவ்வுலகத்திலுள்ள நிர்பாக்கியருக்குச் செய்யும் பிச்சை தர்மம் அப்படிப் பாவங்களைத் தீர்க்க வல்லதாயிருந்தால், உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிற ஆத்துமாக்களுக்கு பண்ணும் சகாயம் அம்மாத்திரம் வல்லமையைக் கொண்டிருக்காதோயென்ன? உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இஷ்டப்பிரசாதத்தில் நிலைக் கொண்டு சர்வேசுரனுக்கு அதிகமாய்ப் பிரியப்பட்டிருக்கிற தினாலேயும், அந்த ஆத்துமாக்கள் அதிக வேதனை அநுபவிக்கிறதினாலேயும், அவர்களுக்குச் செய்யும் உதவி சகாயம் எல்லாப் பிச்சை தர்மங்களிலும் மேற்பட்டதாகையால், இந்த உதவி சகாயத்தினால் நம்முடைய பாவங்கள் அதிகமாய்த் தீருமென்றும் அதிகமாய்ப் பரிகரிக்கப்படுமென்றும் நினைக்கவும் வேணும்; சொல்லவும் வேணும். கிறிஸ்துவர்களே, நீங்கள் கட்டிக் கொண்ட பாவங்களை நினைக்கும்போது மிகவும் பயப்படுகிறீர்களே, இதோ! உங்களுடைய பாவங்கள் தீரவும் ,உங்களுடைய அச்சம் நீங்கவும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருப்பது உத்தமமான உபாயமாம்

இரண்டாவது : நன் மரணமாவது சகல நன்மைகளும் நிறைந்த மோட்சத்துக்குச் செல்லும் வழியாம் . அதுவே பேரின்ப இராஜ்ஜியத்துக்கு வாசல் ஆனதினாலே , அதை எல்லோரும் அடைய ஒருமனப்பட விரும்புவார்கள் அல்லவோ ? இந்த அதிர்ஷ்டம் தங்களுக்குக் கிடைக்கும்படியாக அநேகஞ் ஜெபங்களைப் பொழிந்தும் அநேகம் அற்சிஷ்டவர்களை மன்றாடியும், சில உத்தரியங்களைத் தரித்தும், இதுமுதலான நற்கிரியைகளைச் செய்துகொண்டு வருகிறார்களே. இதெல்லாம் நல்லதுதான், பிரியோசனமுள்ளதுதான். என்றாலும், தாங்கள் விரும்பின நன்மரணத்தை அடைய உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருத்தலே நிச்சயமான வழியென்னலாம்.

அதெப்படியென்றால் இஷ்டப்பிரசாதத்தோடே இருக்கிற மனுஷன் தேவ கிருபையைக் கொண்டு செய்யும் நற்கிரியையெல்லாம் பலனுள்ளதென்கிறதினாலே, அவன் பண்ணும் ஜெப தர்மங்களினாலும், அடைந்த திருச்சபைப் பலன்களினாலும்  செய்வித்த திவ்விய பூசைகளினாலும் அநேக ஆத்துமாக்கள்  உத்தரிக்கிற லதலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சக்கரை ஏறியிருப்பார்கள் என்று சொல்வதற்குச் சந்தேகமில்லை .  மோட்ச பேரின்பத்தில்  அமிழ்ந்திருந்த அந்த ஆத்துமாக்கள் தங்களை அவ்விடத்துச் சேர்ப்பித்த மனுஷர்பேரில் மகாபட்சத்தை வைத்திருப்பார்களாமே. பட்சமானது சிநேகந்தான், பட்சமுள்ளவன் சிநேகிதன்தான். ஆகையால் இரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாக்களை நமக்கு மெய்யான சிநேகிதன் எப்போதும் நேசிப்பானென்பதும், விசேஷமாய் ஆபத்துள்ள சமயங்களில் சகோதரனாகத் தோன்றுவானென்றும், வேதபுஸ்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது.

சாவானது மோட்சத்துக்காவது நரகத்துக்காவது துவக்கமாகையால், அதை எல்லா ஆபத்துக்களிலும் அதிக ஆபத்தான சமயமென்று சொல்லவேணுமல்லவோ அப்படியிருக்க, மோட்சத்தில் வாழும் நமது சிநேகிதரான ஆத்துமாக்கள் இந்த ஆபத்தான வேளையிலே நம்மைக் கைவிடுவார்களோ ?உதவி பண்ணாதிருப்பார்களோ ?அச்சமயத்தில் பசாசினால் வரும் சோதனைகளை  அகற்றாமலிருப்பார்களோ? அந்த ஆத்துமாக்கள் நமது பேரில் வைத்த பட்சத்தைப்பற்றி நமது மரண வேதனையிலே விசேஷமாய் அவர்களுடைய உதவியைச் செய்வார் களென்பது நிச்சயந்தான். எத்தனை ஆத்துமாக்களை நமது பிரயாசையால் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சித்திருப்போமோ, அத்தனை ஆத்துமாக்கள் பயங்கரமான மரண வேளையிலே நமக்கு உதவியாக நின்று நமக்கு அதிர்ஷ்டமான மரணம் கிடைக்க உதவுவார்களென்பது உறுதியான சத்தியமாம்.

அதனாலே மரித்தவர்களின் ஆத்துமாக்களுக்கு நாமும் ஈடேறும்படிக்கு அந்த ஆத்துமாக்களுக்கு ஆறுதலாகச் செய்யக் கூடுமானதெல்லாம் அசட்டையில்லாமல் நாம் சிரமப்பட்டாவது செய்யக்கடவோமென்று அர்ச் கிறிசோஸ்தோம் அருளப்பர் வசனித்தார்.  இது இப்படி யிருக்க உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த மெய்யான பக்தியானது நன்மரணத்தையும், மோட்ச பேரின்பத்தையும் அடைவதற்கு ஓர் அச்சாரமும் உறுதியான ஈடும் தப்பாத அடைமானமுமா மென்று வேத சாஸ்திரிகள் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள்.

மூன்றாவது: ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்கள் மோட்சத்துக்குப் போவார்களென்று உறுதியான நம்பிக்கை யிருக்கிறதென்பது நிச்சயம்தான் என்னத்தினாலே யென்றால், நடுத்தீர்வைநாளிலே எல்லா உலகங்களுக்கும் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் பல தர்மங்களைப் பண்ணினவர்களுக்கு நித்திய பேரின்பத்தை வெகுமதியாகக் கட்டளையிடுவாரல்லவோ? ஆயினும் முன்காண்பித்தாற்போல உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குச் செய்த உதவி சகாயம் எல்லா தர்மங்களிலும் மேற்பட்டதாகையால், இப்பேர்ப்பட்ட தர்மங்களைச் செய்பவர்களுக்கு மோட்ச பிரதாபமுள்ள இராச்சியம் நிச்சயமாகவே கொடுக்கப்படுமென்கிறதற்கு கொஞ்சமாகிலும் சந்தேகம் இருக்கக் கூடுமோ? மேலும் "உங்களை நித்திய கூடாரங்க ளிலே ஏற்றுக்கொள்ளும்படிக்கு உங்களுக்கு சிநேகிதரைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று சுவாமிதாமே திருவுளம் பற்றினார்.

அப்படியே நம்மை மோட்சத்துக்குச் சேர்ப்பிக்கத் தகுந்த சிநேகிதர் நம்மாலே மீட்டிரட்சிக்கப்பட்ட உத்தரிக்கிற ஆத்துமாக்களல்லவோ அந்த ஆத்துமாக்கள் தங்களுடைய உதவியினாலேயும், சர்வேசுரனிடத்திலே தங்களுடைய வேண்டுதலினாலேயும் நமக்கு ஒத்தாசையாக நின்று நம்முடைய ஆத்துமம் மோட்சகரை சேரும்வரையில் நம்மைக் கைவிடமாட்டார்களென்பது நிச்சயமாமே.

பிதாப்பிதாவாகிய தொபியாசென்கிறவர் தம்முடைய குமாரனுக்குப் புத்தி சொல்லும்போது வசனித்ததாவது: உன்னுடைய ஆஸ்தியைக்கொண்டு பிச்சைக் கொடுப்பாயாக யாதோர் பிச்சைக்காரனை அகற்றாதே, அப்படி நடந்தால் ஆண்டவரும் உன்னை அகற்றித் தள்ள மாட்டார்.

அதனால் வருத்தமுள்ள காலங்களிலே உனக்கு உதவும் ஒரு பொக்கிஷத்தை சம்பாதிப்பாய். அதேதெனில் பிச்சை யானது எல்லாப் பாவங்களினின்றும் மரணத்தினின்றும் உன்னை இரட்சிப்பதுமல்லாமல் உன்னை இருள் நிறைந்த இடங்களுக்கு போகவிடாது என்றார். இந்த தேவ வாக்கியத்தில் பாவமன்னிப்பும் நன்மரணமும் ஈடேற்றத்தின் நம்பிக்கையும் ஆகிய மூன்று விசேஷ வரங்கள் தர்மத்தினால் வருகிறதென்று உச்சிப்பகலினும் தெளிவாய்க் காண்பிக்கிறது. அதனாலே இம்மூன்று விசேஷ வரங்களை விரும்புகிற நீங்கள் எல்லாத் தர்மங்களிலும் மேலான தர்மமாகிய உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுகிற தர்மத்தைச் செய்யவேணுமென்று அறியக்கடவிர்களாக

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

சேசுவின் திரு இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

செபம் 

மூன்று சுத்தவாலிபர்களை நெருப்புச்சுவாலையிலிருந்து காப்பாற்றினவருமாய், தீர்க்கதரிசியான தனியேலைச் சிங்கக் கெபியிலிருந்து மீட்டிரட்சித்தவருமாய், எல்லா வேதனைகளிலும் வேதசாட்சிகளை ஸ்திரப்படுத்தினவருமாயிருக்கிற சர்வேசுரா ! நாங்கள் உமது சந்நிதியிலே பொழிகிற ஜெபங்களைக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பினின்றும் சகல வேதனைகளினின்றும் மரித்தவர்களுடைய ஆத்துமங்களை மீட்டுக் கொண்டு பிரதாபமுள்ள உமது சமூகத்துக்கு வரப்பண்ண வேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம். சுவாமி, ஆமென்.

புதுமை 

சாஸ்திரிகளுக்குள்ளே பேர் பெற்ற பாரோனியூஸ் என்கிறவர் எழுதின சரித்திரமாவது உரோமாபுரியிலே ஒரு புண்ணியவதி உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியாயிருந்து அவர்களுக்கு ஆறுதல் வருவிக்க வெகு பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தாளாம். அவள் வியாதியாய் விழுந்து அவஸ்தையாகிற தருணத்தில் துர்மனப் பசாசானது அச்சமும் பயமும் அவநம்பிக்கையும் கலக்கமும் இவை முதலான சோதனைகளை அவளுக்கு வருவித்தது.

அதனாலே அவள் கலங்கி நடுநடுங்கி என்ன வருமோ வென்று அதிகமாய்ப் பயந்திருக்கையிலே, இதோ மோட்சத்திலிருந்து தனக்கு ஒத்தாசையாக அநேகமாயிரம் பேர்கள் வருகிறதைக் கண்டாள். வந்தவர்கள் அவளுடைய படுக்கையைச் சுற்றிலும் சந்தோஷ முகத்தோடே நின்று, பயப்படாதே, ஜெயம் வரும்  என்று அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார்கள். அக்ஷணத்திலே துஷ்டப் பசாசானது ஓடிப்போகவே, அவள் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்தவர்களைப் பார்த்து  நீங்கள் எனக்கு இப்பேர்ப்பட்ட சகாயம் பண்ணினதற்கு முகாந்தரம் என்ன சொல்லுங்கள் என்று கேட்க, அவர்கள் "உன்னுடைய வேண்டுதலினாலே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போன ஆத்துமாக்கள் நாங்கள்தான் எங்களுடைய நன்றியறிதலை உனக்குக காண்பிக்கவும், உன்னுடைய ஆத்துமத்தை மோட்சத்துக்குக் கூட்டிப் போகவும் வந்தோம் என்றார்கள்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்தப் புண்ணியவதி சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து  மோட்சபாக்கியத்தை நுகரத்துவங்குகிறாற்போலே சிரித்த முகத்தோடு இன்பமாய் மரித்து, அந்த ஆத்துமாக்களுடன் பரலோகத்துக்குப் போனாளென்று மேற்சொன்ன சாஸ்திரி நிச்சயமாய் எழுதிவைத்தார்.

உரோமாபுரியிலே பிரபலமான பேரை அடைந்த அர்ச். பிலிப்புநேரி என்கிறவர், சகல உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருந்ததுமல்லாமல், தம்முடைய விசாரணை யிலிருந்தவர்களுடைய ஆத்துமாக்களை விசேஷமாய் நினைத்துக் கொள்ளுவாராம். அந்த ஆத்துமாக்களும் அவருக்கு அநேகம் முறை தோன்றி, தங்களுக்காக வேண்டிக் கொள்ளவேணுமென்று கேட்டதுந் தவிர, அவருக்கு அநேகம் சகாயங்களையும் பண்ணுவர்.

மீண்டும் அந்த ஆத்துமாக்கள் மோட்சத்துக்குப் போன்பிற்பாடு திரும்பவும் அவருக்குத் தோன்றி நன்றியறிந்த மனதோடே தோத்திரம் பண்ணுவார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சாகிறபோது அந்த ஆத்துமாக்கள் பெரும் படையாய் வந்து பரிவாரமாக நின்று அவரை மோட்சத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அவர் செத்தப்பிற்பாடு பக்தியுள்ள ஒரு சந்நியாசியார் அவர் மோட்சத்தில் சொல்லிலடங்காத பிரதாபத்தோடு விளங்குகிறதையும், அவருக்கு மகிமையாக அவரால் ஈடேறின ஆத்துமாக்கள் சூழ்ந்துநிற்கிறதையும் கண்டாரென்று அர்ச். பிலிப்பு நேரியுடைய சரித்திரத்தில் எழுதியிருந்தது.

கிறிஸ்துவர்களே !உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்கள் பேரில் வைத்த விசேஷ பக்தியினாலே எவ்வளவு பிரயோசனம் வருகிறதென்று இவ்விரண்டு புதுமைகளினாலே கண்டறிந்து அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம்பண்ண மென்மேலும் பிரியப்படக் கடவீர்களாக

​மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.