தேவமாதாவின் வணக்கமாதம் - மே 19

தேவமாதாவுக்கு வியாகுலம் உண்டாக்கின மூன்று முகாந்திரங்களின் பேரில்!

சேசுநாதர் படாத பாடுபட்டு மரிப்பாரென்று தேவமாதா அறிந்து மன வேதனைப்பட்டது.

தேவமாதா தமது குமாரனுக்குச் சம்பவிக்கப் போகும் அனைத்தையும் தூரதிருஷ்டியினால் முன் அறிந்திருந்தார்கள். ஆனதால் அவருடைய திருமுகத்தைப் பார்க்கும்பொழுது அந்தத் திருமுகம் இரத்தத்தினாலும் அசுத்தமான உமிழ்நீரினாலும் அவலட்சணமாகுமென்றும் அவருடைய திருக் கைகளைப் பார்க்கும்பொழுது அவைகள் இரும்பாணிகளினால் ஊடுருவப்படுமென்றும் அவருடைய திருச்சரீரம் காயம்பட்டுச் சிலுவையில் அறையப்படுமென்றும் அறிந்திருந்தார்கள். மீண்டும் தேவாலயத்துக்குப்போய் அதில் வேத முறைமையின்படி சர்வேசுரனுக்கு யாதோர் பலியை ஒப்புக்கொடுக்கிறதை பார்க்கும்போது, தம்முடைய குமாரனாகிய சேசுநாதர் தமது இரத்தமெல்லாம் சிந்தி மனிதர்களை மீட்க பிதாவாகிய சர்வேசுரனுக்குத் தம்மை ஒப்புக் கொடுப்பாரென்றும் நினைத்துக் கொண்டு வருவார்கள். இந்த வர்த்தமானங்கள் எல்லாம் தேவமாதா முன்னறிந்து மனதில் இடைவிடாமல் தியானித்ததினால் அன்னை சொல்லொண்ணா மனோ வியாகுலம் அனுபவித்தார்கள். ஆனால் நரகத்தினின்று நம்முடைய ஆத்துமங்களை மீட்பதற்கு இவையெல்லாம் வேண்டியிருப்பதால் தேவமாதா பட்ட கிலேசம் எவ்வளவாக இருந்தாலும் அதைப் பொறுமையோடு அனுபவித்து ஒருபோதும் முறைப்படாமல் இருந்தார்கள். அன்னை நமக்காக பட்ட கிலேசமானது வீணாகாதபடிக்கும் நமது ஆத்துமம் கெட்டுபோகாதபடிக்கும் அன்னையை நோக்கி வேண்டிக்கொள்ளுவோமாக.

சேசுநாதர் வேதம் போதிக்கிற வேளையில் மிகுந்த துன்பத்துயரங்கள் அனுபவிப்பாரென்று தேவமாதா அறிந்து மன வேதனைப் பட்டது.

தேவமாதா வியாகுலம் அனுபவித்ததற்கு இரண்டாம் முகாந்தரம் என்னவென்றால் தமது குமாரனாகிய சேசுநாதர் படுகிற வருத்தங்களையும் எளிமைத்தனத்தையும் அவருடைய விரோதிகள் அவர் போரில் வைத்த வர்மம் காய்மகாரத்தையும் அவருக்கு வருவித்த நிந்தை அவமானங்களையும், அவர் மீது சொன்ன அபாண்டம், பொய்சாட்சி முதலான துன்பங்களையும் கண்டு தேவமாதாவின் ஆத்துமத்தில் அதிக கஸ்தியுண்டானதுமல்லாமல், அதெல்லாவற்றையும் தமக்கு செய்தாற்போல் அனுபவித்தார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. ஆனால் இவை தேவ சித்தத்தின்படியே நடக்கிறதென்றும், இயேசுநாதர் அந்த துன்பங்களுக்கு மனப்பூர்வமாய் உட்படுகிறாரென்றும் அறிந்து, தேவ சித்தத்துக்கு கீழ்ப்படிந்து தமக்கு வந்த துன்பத்தை வெகு பொறுமையோடு சகித்து வந்தார்கள். நாமும் தேவமாதாவைப்போல் நமக்கு துன்பம் சலிப்பு வருத்தம் நோவு வியாதி வேதனை முதலியன வரும் வேளைகளில் அவையெல்லாம் சர்வேசுரனுடைய உத்தரவின்படியே சம்பவிக்குமென்று நினைத்து பொறுமையோடு சகித்து முறைப்படாது இருக்கக்கடவோம்.

அநேகம் பாவிகளுக்கும் அவர் பட்ட பாடுகள் வீணாகப் போகுமென்றும் தேவமாதா அறிந்து மன வேதனைப் பட்டது.

ஆனால் தேவமாதா மீளாத் துன்பங்கள் அனுபவித்ததற்கு விசேஷமான முகாந்தரமானது: சர்வேசுரன் அனுப்பின மீட்பரை மனிதர்கள் அறியாமல் அவருடைய திவ்விய போதனை முதலான உபகாரங்களை நிந்தித்து வருகிறதையும், தங்களை மீட்க வந்த இயேசுநாதருக்கு அவர்கள் காண்பித்து, நன்றிகெட்ட தனத்தையும். செய்த கொடூரத்தையும் கண்டு தேவமாதா பிரலாபித்து அதிக கஸ்திபட்டதுமன்றி தமது தேவக்குமாரனின் திருப்பாடுகள் பாவிகளில் அநேகருக்கு வீணாய்ப்போகும் என்றும், தமது சனங்களாகிய யூதர்கள் மூர்க்கத்தினாலும் பாதகங்களினாலும் சர்வேசுரனுடைய கோபத்தை தங்கள் பேரில் வருவித்து கொண்டு மெய்யான வேதத்தை இழந்து, சபிக்கப்பட்டு தள்ளப்படுவார்களென்றும், மோட்ச வழியை புறக்கணித்து கண்களை மூடிக்கொண்டு ஞானகுருடராய் திரிவார்களென்றும் தேவமாதா கண்டு சொல்லிலடங்காத வியாகுலம் அனுபவித்தார்கள்.

கிறிஸ்தவர்களே! நீங்கள் பாவம் செய்யும்போது இயேசுநாதர் பட்ட பாடுகள் உங்கள் மட்டில் வீணாய் போவதற்கு பாவமானது காரணமானதினால் தேவமாதாவுக்கு மறுபடியும் கஸ்தி வருவிக்கிறீர்கள். ஆதலால் யூதர்களுக்கு இடப்பட்ட ஆக்கினையை சர்வேசுரன் உங்களுக்கும் இடுவாரென்று பயப்பட்டு அவருடைய கோபத்தை அமர்த்த வேண்டுமென்று தேவமாதாவை மன்றாடுவீர்களாக.

செபம்

இயேசுநாதருடைய பரிசுத்த தாயாரே ! ஆண்டவர் எனக்கு செய்தருளிய எண்ணிறந்த, உபகாரங்களையும் நான் அவருக்கு காண்பித்த நன்றிகெட்டதனத்தையும் நினைக்கும்போது கொடூரமான தீர்வைக்குள்ளாவேனென்று பயப்படுகிறேன். ஆனால் பாவிகளுக்கு அடைக்கலமாகச் சர்வேசுரன் உம்மை வைத்திருக்கிறாரென்று நினைவுகூர்ந்து எனக்காக வேண்டிக்கொள்ளுவீரென்றும் நான் உமது திருக்குமாரனிடத்தில் கணக்கு சொல்லப்போகிற நாளில் எனக்காக மனுப்பேசுவீரென்றும் நம்பிக்கையாய் இருக்கிறேன். ஆகையால் முன் செய்த பாவங்களையெல்லாம் வெறுத்து இனிமேல் நான் அந்த பாவங்களை செய்யாதிருக்க எனக்கு உதவி செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

கிறிஸ்தவர்களுக்கு சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பத்தொன்பதாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:

சர்வேசுரன் உங்களுக்கு செய்த எண்ணிக்கையில்லாத உபகாரங்களை நினைத்து அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகிறது.

புதுமை!

கப்பல் ஒன்று கடலில் ஓடுகிற பொழுது லொரேத்தோ என்ற தேவமாதாவின் அற்புதமான கோவிலிருக்கிற அண்டைக்கு வந்தது. மறுநாளில் மாதாவின் திருநாட்களில் ஒன்று கொண்டாடப்படும் என்று அறிந்து, அந்த கப்பலிலே இருந்த சனங்கள் எல்லாரும் அந்த கோவிலுக்குச் சென்று திருப்பலி காணவேண்டுமென ஆசையுடன் இருந்தனர். இதற்கு எல்லாரும் சம்மதித்தார்கள். கப்பல் ஓட்டுகிற ஒருவன் மாத்திரம், சனங்களெல்லாரும் கப்பலைவிட்டு அப்புறம் போனால் தன் கப்பலுக்கு ஆபத்து வருமென்று சம்மதியாமல் இருந்தான். அப்படி இருக்கையில், கப்பல் ஓட்டுகிற அந்தோனி என்ற பெயருடைய ஒருவன், நீங்கள் எல்லாரும் கோவிலுக்கு சென்று திருப்பலி காணலாம். நான் தேவமாதாவின் உதவியைக் கேட்டு கப்பலுக்கு ஆபத்து வராதபடிக்கு காவலாய் இருப்பேனென்று உறுதியாகச் சொல்லி எல்லோரும் தேவமாதாவின் பேரில் நம்பிக்கையாய் இருக்கச் செய்தான். ஆகையால் அதிகாலையில் எல்லாரும் புறப்பட்டுபோன சிறிது நேரத்துக்கெல்லாம், கப்பலில் தனியாக இருந்த அந்தோனி தூரத்தில் ஓர் பெரிய கப்பல் வருகிறதைக் கண்டான். அது அருகில் வந்த பிற்பாடு அதில் பகைவர்களான பிறமதத்தினர், தான் இருக்கிற கப்பலை பிடிக்க வருகிறதை அறிந்து கலங்கினான். ஆனால் தேவமாதாவை உறுதியான விசுவாசத்தோடு நம்பி எல்லாரும் திருப்பலி காணப் போனதை அன்னை ஞாபகப்படுத்தி, ஒரு கோடாலியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கப்பலின் ஓரத்தில் ஓர் மூலையில் மறைந்து நின்றான். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒருவன் வந்து அந்தோனி ஒளிந்து கொண்டிருந்த கப்பலை ஓர் கையால் பிடித்து அதனுள் ஏற முயன்றான். அந்தோனி அதை அறிந்து எழுந்திருந்து கோடாலியால் அவனுடைய கையை வெட்டிப் போட்டுவிட்டு திரும்பவும் ஒளிந்து கொண்டான். கை வெட்டப்பட்டவனோவென்றால் அபயமிட்டு, இதோ இதில் அநேகர் கபடமாய் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். நாம் இந்தக் கப்பலில் போனால் எல்லோரும் கொல்லப்படுவோமென்று உரத்த சத்தமாய் சொல்லி மற்றவர்களுக்கு பயத்தை உண்டுபண்ணினான். ஆகையால் கடற்கொள்ளைக்காரர்கள் இந்த கப்பலை பிடிக்காமல் அதைவிட்டு ஓடிப்போனார்கள். சிறிது நேரத்திற்குப்பிறகு அந்தோனி தலையை உயர்த்தியபோது அவர்கள் தூரத்தில் ஓடுகிறதைக் கண்டு முழந்தாளிட்டு தேவமாதாவுக்கு தோத்திரம் பண்ணினான். மற்றவர்கள் திருப்பலி கண்டு வருகையில் அந்த கப்பல் ஓடுகிறதைக்கண்டு, ஐயோ! எங்கள் கப்பலுக்கு ஒருவேளை ஆபத்து வந்ததோ வென சந்தேகப்பட்டனர். ஆனால் அந்தோனி அவர்களிடம் வெட்டப்பட்ட கையையும் கோடாலியையும் அவர்களுக்காட்டி நடந்தவை அனைத்தையும் அவர்களுக்கு அறிவித்தான். இதைக் கேட்ட எல்லோரும் தேவமாதாவின் பிரார்த்தனையைச் சொல்லி கிறிஸ்தவர்களின் சகாயமாகிய அந்த பரம நாயகிக்கு நன்றி செலுத்தினார்கள்.

கொடிய புயல் உள்ள இவ்வுலக சமுத்திரத்தில் பயணம் செய்யும் கிறிஸ்தவர்களே! புயல் அடிக்காத துறையாகிய மோட்ச இராச்சியம் சேர வேண்டுமானால் விடியற்காலத்து நட்சத்திரமாகிற பரம நாயகியான பரிசுத்த கன்னிகையை எப்போதும் நம்பிக்கையுடன் மன்றாடுங்கள்.