நவம்பர் 18

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுவது நமக்கு மிகவும் பிரயோசனமுள்ளதென்று காண்பிக்கிற வகையாவது.

தியானம்.

முன்சொன்ன தியானங்களை தியானித்ததினால் உத்தரிக்கிற ஆத்துமங்களின் பேரில் அதிக பக்தி உங்களுக்கு உண்டாயிருக்குமென்று நம்புகிறோம் . இந்த பக்தி அதிகமதிகமாய் வளரும்படியாக உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிரயாசப்படுவதால் ,நமக்கு அநேக பிரயோசனங்கள் உண்டாகும் என்பதைப் பற்றி இப்போது தியானிப்போமாக

"இரக்கமுள்ளவர்கள் பாக்கிவான்கள், ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்" என்று நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் சுவாமி திருவுளம்பற்றினார். ஆகையினாலே, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரிலே இரக்கமாயிருந்து அவர்களுக்கு ஆறுதலையும் இளைப்பாற்றியையும் தங்களால் கூடின மட்டும் வருவிக்க விரும்புகிறவர்கள், தேவ இரக்கத்தையும், தேவ தயவையும், தேவ தயவினால் வருகிற நன்மைகளையும் ஆண்டவரிடத்திலே பெறுவார்களென்கிறதற்குச் சந்தேகமுண்டோ? யாதொருவன் பேரிலே ஓர் இராஜாவின் இரக்கமும் தயவும் இருக்குமேயாகில் அந்த மனுஷனுக்கு யாதோர் குறைவு நேரிடுமோ? குறைவு நேரிடாதென்றால் இராஜாதி இராஜாவாகிய சர்வேசுரனுடைய இரக்கமும் தயவும் நமக்கு இருந்தால் நமக்கு எந்த பொல்லாப்பு வரக்கூடும் ?

"தரித்திரப்பட்டவர் பேரிலும் எளியவர் பேரிலும் இரக்கமாயிருக்கிறவன் பாக்கியவான், ஏனெனில்: ஆபத்துள்ள வேளையில் ஆண்டவர்தாமே அவனை மீட்பார். ஆண்டவர் அவனைக் காப்பாற்றி, ஸ்திரப்படுத்தி, அவனுக்கு இவ்வுலக பாக்கியத்தைத் தந்து, சத்துருக்கள் கையிலே அவன் அகப்படாதபடிக்குச் செய்வார். அவன் வியாதியாய்க் கிடக்கும்போது அவனுக்கு ஆண்டவர் உதவியாய் இருப்பார்". என்று நாற்பதாம் சங்கீதத்திலே சொல்லப்பட்டுள்ளது. இவ்வுலகத்திலுள்ள தரித்திரவான்களுக்கு உதவி சகாயம் செய்கிறவர்களைத் தேவவாக்கியம் அவ்வளவு வாழ்த்தி அம்மாத்திரம் நன்மைவருமென்று நிச்சயித்துச் சொல்லுகிறபோது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுகிறவர்களுக்கு இன்னும அதிக நன்மை வருமென்றும், அவர்கள் அதிக பாக்கியவான்களென்றும் நிச்சயமாய்க் கூறவேண்டும்.

முன்சொன்ன தியானங்களில் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுதல், சர்வேசுரனுக்கும் இயேசுக்கிறிஸ்து நாதருக்கும், தேவமாதாவுக்கும் மற்ற மோட்சவாசிகளுக்கும் எம்மாத்திரும் உகந்த புண்ணியமென்று தெளிவாய்க் காண்பிக்கப்பட்டது. இவ்வுலக இராஜாக்களுக்கு உகந்த காரியங்களைச் செய்பவர்கள் அநேக முறை அவர்களால் ஒன்றையும் பெறாமல் போவார்களென்பது மெய்தான். ஆனால் சர்வேசுரனிடத்திலேயும், மோட்சவாசிகளிடத்திலேயும் அப்படியல்லவே. அவர்களைக் குறித்து ஒரு சொற்ப புண்ணியத்தையாவது, கொஞ்சம் தர்மத்தையாவது கொஞ்சம் தவத்தையாவது செய்துகொண்டு வருவோமேயானால் நமக்கு அநேகம் வெகுமதிகளை அவர்கள் கொடுப்பார்களென்கிறது தப்பாது.

​அதனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களின்பேரில் பக்தியுள்ளவர்களுக்கு சர்வேசுரன் விசேஷ கிருபை காட்டி அவர்களுக்கு விசேச உபகாரங்களைத் தருவாரென்பது குன்றாத சத்தியமாம். அவர் இவர்களை அநேகம் பொல்லாப்புகளிலிருந்து இரட்சித்து, அவர்கள் பசாசின் சோதனைகளிலே அகப்படாதபடி அவர்களைக் காப்பாற்றி உலககாரியங்களிலே முதலாய் அவர்களை ஆசீர்வதிப்பார்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களோவென்றால் தங்களுக்கு உதவிசகாயம் பண்ணினவர்களை நன்றியறிந்த மனதோடே நினைத்து, அவர்களுக்காக சர்வேசுரனிடத்தில் மகா ஆசையோடும் இடைவிடாத முயற்சியோடும் வேண்டிக் கொள்ளுவார்களென்று வேதசாஸ்திரிகள் எல்லோரும் சொல்லியுள்ளார்கள். அதெப்படியென்றால் அந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்குமளவும் தங்களுக்குத் தாங்களே யாதொன்றையும் பெறக்கூடாதிருந்தாலும், தங்களுக்கு உபகாரம் செய்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளக் கூடுமல்லாமல், அவர்கள் சர்வேசுரனுக்குப் பிரியாத பந்தனப்பட்டவர்களாய் இருப்பதினாலே அவர்களுடைய வேண்டுதல் அநுகூலமாகி அவர்கள் கேட்கிறதெல்லாம் கொடுக்கப்படுமென்பது உறுதியான நம்பிக்கையாகும்.

போலோனியாவென்ற அர்ச் கத்தரீனம்மாள் "நான் எதையாகிலும் நித்திய பிதாவினிடத்தில் பெற்றுக் கொள்ள விரும்பும்போது ,அதை எனக்காகக் கேட்கும்படிக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களை மன்றாடுவேன் . அப்படியே நான் விரும்புகிறதை எல்லாம் தப்பாமல் அடைகிறேன் " என்றாள். ஒரு பக்தியுள்ள சுவாமியானவர் நான் யாதோர் விசேச சகாயத்தை அடைய வேண்டியதாய் இருக்கும்போது உத்தரிக்கிற ஆத்துமாக்களைக்குறித்து பூசை பண்ணுவேன். அப்படியே நான் விரும்புகிறதெல்லாம் அநுகூலமாகிறது என்றார்.

இந்தச் சிந்து இராச்சியத்திலே முதலாய் அநேகம் பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் தாங்கள் செய்யப்போகிற யாதோர் பயணம் பொல்லாப்பின்றி நன்மையாய்ச் செய்யும்படிக்காவது தங்களுடைய வெள்ளாண்மை குறைவின்றி விளையும்படிக்காவது , ஒரு பிராது, ஒரு வியாச்சியம் தங்களுக்கு அநுகூலமாய் முடியும்படிக்காவது ஒரு வியாபாரம் சித்திக்கும்படிக்காவது, ஒரு வியாதி ஒரு பொல்லாப்பு நீங்கிப்போகும்படிக்காவது, ஒரு கலியாணம் நன்மையாய் முடியும்படிக்காவது வேறேதாகிலும் அநுகூலமாகும்படிக்காவது விரும்புகிறபோது உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒன்றிரண்டு பூசை செய்வித்து, தர்மங்களைக் கொடுத்துக் கோவிலிலே காணிக்கை செலுத்திக் கொண்டு வருகிறார்களென்று அறிவோம்.

அவர்கள் தானே தாங்கள் நினைத்த அனுகூலமாகும்படிக்கு அப்படிச் செய்வது நிச்சயமான வழியென்று உறுதியாகச் சொல்லுகிறார்கள். நிழல் போன்ற இவ்வுலகத்துக்கும் அழிந்து போகும் சரீரத்துக்கும் அடுத்த காரியங்களில் அப்படியானால் , பரலோகத்துக்கும் ஆத்துமத்துக்கும் சம்பந்தப்பட்ட ஞான காரியங்களில் அதிக அனுகூலங்கள் உண்டாகும் என்பது தப்பாது

எளிமையாய் இருக்கிறவன் பேரில் தயவாயிருந்து அவனுக்குச் சகாயம் பண்ணுகிறவன் சர்வேசுரனுக்குத் தானே கடனாகக் கொடுக்கிறான். அவரும் திரும்பி உத்தரிப்பாரென்று வேத புஸ்தகங்களில் எழுதியிருக்கிறதாமே. இது இப்படியிருக்கையில் உத்தரிக்கிற ஆத்துமாக்களைப்போல் இவ்வுலகத்தில் எளிமைப்பட்டவர்களும் அவசரமுள்ளவர்களும் கஷ்டப்படுகிறவர்களும் ஒருவருமில்லையே ஆனதினாலே இந்த ஆத்துமங்களுக்கு உதவி சகாயமாய்ச் செய்கிறதெல்லாம் சர்வேசுரனுக்கு கொடுத்த ஒரு கடன் போல் இருக்கும் என்றும் ,சர்வேசுரன் திரும்ப அந்தக் கடனை உத்தரிக்கும்போது அதற்கு நூறு பங்கு அதிகமாய்க் கொடுக்க வேணுமென்று யோசிக்க வேணும் .

இது இப்படி இருக்கக் கிறிஸ்தவர்களே ! நீங்கள் யாதோர் நல்ல வியாபாரம் பண்ண வேண்டுமானால் , நீங்கள் அனுசரிக்கிற புண்ணியங்கள் எல்லாம் , செய்கிற தர்மங்கள் எல்லாம் , நடத்துவிக்கிற தேவ காரியமெல்லாம் , படுகிற துன்ப வருத்தமெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்க வேணும் .

இவைகளில் அப்படி ஒப்புக் கொடுத்தாலும் அந்தப் புண்ணியத்துக்கும், தர்மத்துக்கும். நற்கிரியைகளுக்கும் உண்டாயிருக்கிற பேறுபலனையல்லாமல், பிற சிநேகமும் தேவ சிநேகமும் உத்தமமேரையாயிருக்குமல்லவோ? அதனாலே இவையெல்லாம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்படும், உங்களுக்கும் அதிகமாய்ப் பலிக்குமென்று வேத சாஸ்திரிகள் நிச்சயமாய்ச் சொல்லுகிறார்கள். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்கிற பக்தியானது எல்லாவற்றிலும் உதவுமென்று அறிந்து, நீங்கள் மென்மேலும் அந்த ஆத்துமாக்களின் பேரில் அதிக பக்திவைக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

சேசுவே எங்கள் பேரில் தயவாயிரும்.

செபம் 

பிதாவாகிய சர்வேசுரா சுவாமி ! தேவரீருக்கு உகந்த குமாரனுமாய் எங்களுக்கு கர்த்தருமாய் இருக்கிற சேசுக்கிறிஸ்து நாதர் இத்தனை பாடுகள் பட்டாரே , அவருடைய பாடுகளையும் துன்பத்தையும் ,சிலுவையையும் , மரணத்தையும் , அடக்கத்தையும் ,  துக்கத்தையும் அவருடைய திருக்காயங்களிலிருந்து வடிந்தோடின திரு இரத்தத்தையும் பார்த்து, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதியைக் குறைத்து அவர்களை உம்முடைய சமூகத்துக்கு அழைக்கக் கிருபை பண்ணியருளவேணுமென்று உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.

பதினெட்டாம்  தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:

நீங்கள் இன்று செய்யும் கிரியைகளை எல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து சுத்த கருத்தோடே செய்து சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறது.

புதுமை 

பழைய வேதத்தின் காலங்களிலே தம்முடைய பிரஜைகளுக்கு உதவி செய்யவும், அவர்களுடைய சத்துருக்களை சிதைக்கவும் சர்வேசுரன் சம்மனசுகளை அனுப்பினாரென்று வேத புத்தகங்களிலே எழுதியிருக்கிறது. அப்படியே இந்தக் காலங்களிலேயும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்களுக்குச் சகாயம் பண்ணவும், இவர்களுடைய எதிரிகளிடத்திலிருந்து இவர்களை மீட்கவும், சர்வேசுரன் உத்தரிக்கிற ஆத்துமாக்களைச் சில சமயங்களிலே அனுப்பினாரென்று நன்கு தெரியும். அதற்கு அத்தாட்சியாக நடந்த ஒரு சங்கதியைக் கேளுங்கள்.

சர்டீனியாவென்ற தீவுக்கு இராஜாவாயிருந்த உசேபியூஸ் என்கிறவர் உத்தரிக்கிற ஆத்துமாக்களின்பேரில் வெகு பக்தியாயிருந்து அந்த ஆத்துமாக்களைக் குறித்து வெகு தர்மங்களைப் பண்ணுவார். அந்த ஆத்துமாக்களுக்கு சகாயமாகத் தினந்தோறும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்க அநேக குருக்களை ஏற்படுத்தி நியமித்திருந்தார். அவர்களுக்கு வேண்டியவைகளை விசாரிக்கவும்,  மற்றத் தர்மங்களை நடப்பிக்கவும், ஒரு பட்டணத்திலே வரும் பகுதிப் பணமெல்லாவற்றையும் அதுக்காகக் குறித்துவிட்டிருந்தார். அதைக் கொண்டு அந்தப் பட்டணம் சர்வேசுரனுடைய பட்டணமென்று சொல்லப்படும். சிசிலியாவென்ற தீவுக்கு இராஜாவான அஸ்தோர்சியூஸ் என்கிறவன் பசாசினுடய காய்மகாரத்தால்  ஏவப்பட்டு அநேகம் படைகளோடு உசேபியூஸ் என்கிறவரோடே இடை செய்ய வந்தான். அஸ்தோர்சியூஸ் என்கிறவன் மேற்சொன்ன பட்டணத்தை முற்றுகைசெய்து அதைப் பிடித்தானாம். உசேபியூஸ் என்கிறவர் சேதி அறிந்து தன் சேனைகளைச் சேர்த்து அவனுக்கு எதிரே போனார். ஆனாலும் சத்துருக்களுடைய படை பெரும் படைகளாய் இருந்ததினாலும் தம்முடைய சேவகர் கொஞ்சம்பேர்களாய் இருந்ததினாலும் ஜெயம் வருமோ வராதோவென்று அங்கலாய்த்துப் பயந்து சர்வேசுரனை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

இதோ சண்டை செய்யப்போகிற சமயத்தில் வெள்ளை வஸ்திரத்தை அணிந்து வெண்மையான ஆயுதங்களைப் பிடித்து வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறியிருந்த இராணுவத்தாரும் காலாட்படைச் சேவகரும் தமக்கு ஒத்தாசையாக வருகிறதைக் கண்டார். இராஜா இவர்களை நோக்கி நீங்கள் யார் என்று கேட்க நாங்கள் பரலோக இராஜாவினுடைய சேனைகள்தான். நீர் பயப்படவேண்டாம் உம்முடைய சத்துருக்களோடே சண்டை செய்யவும் உம்மைக் காக்கவும் வந்தோம் என்றார்கள். இந்த அதிசயமான சேனைகளைக் கண்டு, அஸ்தோர்சியூஸ் என்கிறவன் மிகவும் பயந்து சமாதானத்தின் பொறுத்தல் கேட்டு செய்த பொல்லாப்புகளுக்கு உத்தரவாதம் பண்ணித் தான் பிடித்த மேற் சொன்ன பட்டணத்தைத் திரும்பக் கொடுத்து விலகிப்போனான்.

உசேபியூஸ் இராஜாவோவென்றால், சர்வேசுரனுக்கு நன்றியறிந்த மனதோடே தோத்திரம் பண்ணி, தமக்கு உதவியாக வந்த சேவகருக்கு உபசாரம் பண் ணி. நீங்கள் வந்ததெப்படியென்று சொல்லுங்கள் என்றார். இதற்கு அந்த படைகளின் தலைவன் மறுமொழியாக இராஜாவே உம்முடைய பிரயாசையால் மீட்டிரச்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் நாங்கள்தானென்று அறிந்துகொள்ளும், ஆண்டவர் உம்மை இந்த ஆபத்துள்ள வேளையிலே ஆதரிக்கத்தக்கதாக இங்கே எங்களை அனுப்பினார்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் எப்போதும் அப்படியே பக்தியாய் இருக்க வேணுமென்றும் நீர் மீட்டிரட்சிக்கும் ஆத்துமாக்கள் எல்லோரும் மோட்சத்தில் உமக்கு சிநேகிதரும் ஆதரவுள்ளவர்களுமாய் இருப்பார்கள் என்றும் சொல்லி ,அந்தத் தலைவனும் திரளான சேவகர்களும் மறைந்து போனார்கள் . அதைக் கண்ட இராஜாவானவர் முழந்தாளிட்டு தன்னைக் காப்பாற்றின சர்வேசுரனை வாழ்த்தி மேன்மேலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் அதிக பக்தியுள்ளவராய் இருந்தார்

கிறிஸ்துவர்களே ! ஜீவிய காலம் போர்க்களம் அல்லவோ ? உலகம் பசாசு சரீரம் என்ற இம்மூன்று சத்துருக்களால் உங்களுக்கு மோசம் வராதபடிக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களிடம் இருந்து உங்களுக்கு சகாயம் வரக் கூடும் என்று இப்போது சொன்ன புதுமையினாலே அறிந்து அந்த ஆத்துமாக்களின் பேரில் அதிக பக்தி வைக்க வேணுமென்று அறியக் கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.