நவம்பர் 17

உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இடும் பிரலாபங்களைக் காண்பிக்கிற வகையாவது.

தியானம்.

பிதாப்பிதாவாகிய யோபென்பவர் எவராலுங் கைவிடப்பட்டு எல்லாவற்றையும் இழந்து, சர்வாங்கத்திலும் நொந்து புழுத்து நாறி தம்மைச் சந்திக்கவந்த தம்முடைய மூன்று விசேஷ சிநேகிதருக்குத் தாம் அநுபவித்த நிற்பாக்கியங்களை அழுகையுடன் விவரித்தப்பின், பெருமூச்சு விட்டு சொன்னதாவது :'ஆண்டவருடைய கையானது என்னைத் தண்டிக்கிறதினாலே என் சினேகிதரே, நீங்கள் சற்றாகிலும் என்பேரில் இரக்கமாயிருங்கள், என்பேரில் இரக்கமாயிருங்கள்' என்பார்.

உத்தரிக்கிற ஆத்துமாக்கள் சகலராலும் மறக்கப்பட்டு தங்களுக்கு ஆறுதலாகத் தாங்களே ஒன்றுஞ் செய்யக்கூடாமல் நெருப்பிலே சர்வாங்கத்திலும் வேதனைப்பட்டுப் பிதாப் பிதாவாகிய யோபென்பவர் விம்மிச்சொன்ன புலம்பல்களைப் போலே உங்களை நோக்கி மிகுந்த துயரத்துடனே உச்சரிக்கிறதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதாவது "சர்வேசுரனுடைய கையானது எங்களைத் தண்டிக்கிறதென்கிறதினாலே எங்கள் சிநேகிதரான நீங்கள் சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்."

"எங்களுடைய ஞான சகோதரரான அனைத்து கிறிஸ்துவர்களே! எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள். என்னத்தினாலேயென்றால், பூமண்டலத்தில் இருக்கக் கூடுமான சகல வேதனைகளிலும் அதிக வேதனைப்பட்டு, அகோரமாய் எரியும் நெருப்பிலே வெந்து யாதோர் ஆறுதலுமின்றி, இளைப்பாற்றியுமின்றி, மனோவாக்குக் கெட்டாத வருத்தங்களை அனுபவிக்கிறோமே.

எங்களுக்காக நீங்கள் கொஞ்சம் ஜெபம்பண்ணி ஒரு தவக்கிரியையும் செய்து பிச்சையையுங் கொடுத்து எங்களைத் தேற்றி மீட்கிறது உங்களாலே கூடுமான சகாயந்தான். இவைகளைத் செய்வீர்களென்ற நம்பிக்கையல்லாமல் எங்களுக்கு வேறே நம்பிக்கையில்லை. ஒ சகோதரர்களே ஆண்டவருடைய திருமுகத்தைப் பார்த்து நீங்கள் சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்" என்பார்கள். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே, உத்தரிக்கிற ஆத்துமாக்களுடைய பிரலாபத்தைக் கேட்டு அவர்களுடைய வேதனை தீர என்னத்தைச் செய்வீர்கள்?

"எங்களுடைய ஊரார் தேசத்தாரும், சிநேகிதர், உபகாரிகளும், உறவின்முறையாருமானவர்களே! நீங்களாவது எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள். என்னத்தினாலேயென்றால், நாங்கள் எவ்வித வாதை வேதனைகளையும் யாதோர் ஆதரவின்றி அநுபவிக்கிறதுமல்லாமல் மட்டில்லாத அன்போடு நேசித்து விரும்புகிற சர்வேசுரன் தாமே எங்களைக் கோபமாய்ப் பார்த்து தூரமாய்த் தள்ளி, அகோரமாய்த் தண்டித்து வருத்தப்படுத்துகிறாரே,

 நாங்கள் உங்களுடன் பூமியிலே சஞ்சரிக்கும்போது, நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ, பட்சத்தைக் காண்பித்தீர்கள், எம்மாத்திரம் ஒத்தாசை பண்ணினீர்கள். எத்தனை உபகாரங்களைச் செய்தீர்களே, இப்போது எங்கள் பேரிலுள்ள அந்த பட்சம் அற்றுப் போச்சுதோ, உங்களுடைய தயவு மாறிப்போனதோ, உங்களுடைய தயாளஞ் சலித்ததோ, எங்களுடைய நிர்பாக்கியந் தீர கொஞ்சம் பிரயாசைப்படக்கூடாதோ, எங்களுக்காக ஒரு ஜெபத்தைச் செய்யமாட்டீர்களோ, பிச்சைக் கொடுக்க பணமில்லையோ, கொஞ்சந் தவம் பண்ணத் திராணியில்லாமற் போச்சுதோ? சொல்லுங்கள் ஒ சகோதரர்களே! ஆண்டவர் எங்களைக் கோபமா தண்டிக்கிறதினாலே நீங்களாவது எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள் " என்பார்கள்

 புண்ணியவான்களான கிறிஸ்தவர்களே, !  உத்தரிக்கின்ற ஆத்துமாக்களின் இந்த அபய சத்தத்தைக் கேட்டு அவர்களுடைய அவதி நீங்க என்னத்தைச் செய்வீர்கள்? " என் மக்களே , உங்களுடைய தகப்பனாகிய என் பேரில் இரக்கமாயிருங்கள். அதேதென்றால் இப்போது நெருப்பு நிறைந்த இந்தச் சிறைக்கூடத்தில் சிறைப்பட்டுச் சொல்லிலும் நினைவிலும் அடங்காத வேதனைகளை அனுபவிக்கிறேன். மோட்ச பேரின்பத்துக்குப் போகவேணுமென்று பொறுக்கப்படாத ஆசையாயிருந்தாலும், நான் அதற்குப் போகாதபடிக்கு நிறுத்தப்பட்டு, அதிக தாகத்தால் தவிக்கிற மனுஷன் தண்ணீரைக் காணாமல் வருத்தப்படுகிறதை விட நான் அதிகமாய் வருத்தப்படுகிறேன் .

என் அன்புள்ள பிள்ளைகளே! உங்கள் தகப்பனாகிய என்னை மறந்துப் போனீர்களே? உங்களைப் பெற்று வளர்த்து, உங்களுக்காகப் படாத பிரயாசையெல்லாம் பட்டு, நீங்கள் அநுபவிக்கிற எல்லாவற்றையும் நானே உங்களுக்குத் தேடிவைத்தேன். உங்களுக்கு யாதொரு கவலை பொல்லாப்பு நேரிட்டிருந்த  போது உங்களைத் தேற்றவும் , சொஸ்தமாக்கவும், காப்பாற்றவும் , இராப்பகலாய் உழைத்து ,அலைந்து செய்யக்கூடுமானதெல்லாம் செய்தேனே . ஐயையோ! உங்களுக்குத் திரண்ட ஆஸ்திகளை வைத்துப் போகவேணும் என்றும் , உங்களுடைய பாக்கியத்தையும் மகிமையையும் அதிகப்படுத்த வேண்டுமென்றும் எனக்கிருந்த மிகுந்த ஆசையினாலே அநேகம் குற்றங்களைப் பண்ணினேனே . அநேக பாவங்களையும் கட்டிக் கொண்டேன் . நான் உங்களை அதிகமாய் நேசித்ததனால் அல்லவோ இவ்வளவு தண்டிக்கப்படுகின்றேன். பிள்ளையாகிய நீங்கள், என் ஆஸ்திகளையெல்லாம் அடைந்திருக்கிற நீங்கள். நான் கட்டின வீட்டிலே குடியிருக்கிற நீங்கள், நான் உங்களுக்கு தேடி வைத்த சாப்பாட்டைச் சாப்பிடுகிற நீங்கள், என்னை மறந்து போகிறதெப்படி?

என் ஆத்துமத்தினுடைய நிர்பாக்கியத்தை தீர்த்து, என்னை மோட்ச பேரின்பத்தில் சேர்ப்பிப்பதற்காக சில பிச்சைக்காரருக்குப் பிச்சைத் கொடுக்கவும். கோவிலிலே காணிக்கை செலுத்தவும், சில தருமங்களைப் பண்ணுவிக்கவும் உங்களுடைய கையிலே காசில்லையென்பீர்களோ? உங்களுக்கு உண்டாயிருக்கிற பணம் காசெல்லாம் என்னுடையதென்று மறந்து போனீர்களோ? ஐயையோ !ஆண்டவருடைய கையானது என்னை அகோரமாய்த் தண்டிக்கிறதினாலே என் பிள்ளைகளாகிய நீங்களாவது சற்றாகிலும் என்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள் " என்று தகப்பன் சொல்லுவான். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே !இந்த பிரலாபமுள்ள வார்த்தைகளைக் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதி தீர என்னத்தைச் செய்ய மாட்டீர்கள் ?

" பிரியமுள்ள மக்களே !உங்களுடைய தாயார் நான்தான். நீங்களாவது என் பேரில் சற்று இரக்கமாயிருங்கள் ,ஏனென்றால் நான் உங்களை என் வயிற்றில் ஒன்பது மாதம் சுமந்து வெகு அபாயத்தோடு பெற்றேன். உங்களுக்கு இரண்டு வருஷம் தாய்ப் பாலூட்டினேன். உங்களை என் கையிலேந்தி, என் மடியிலே வளர்த்து, உங்களுக்கு சலியாத பட்சத்தைக் காட்டினேனே, நீங்கள் வியாதியாய் இருந்தபோது யாதோர் ஒய்வுமின்றி இரவிலும் விழித்துப் பகலிலும் உழைத்து உங்களைத் தேற்றி உங்களுக்கு வேண்டியவைகளைக் கொடுத்தேனல்லவோ? அப்போது என் பேரில் எவ்வளவு பட்சமாயிருந்தீர்கள் !இப்போது எல்லாவற்றையும் மறந்தது போலேயும், நான் உங்களுக்கு ஒரு பரதேசியாய் இருக்கிறாற்போலேயும், என்னையும் நினைக்கிறதில்லை, நான் படுகிற வருத்தங்களையும் பார்க்கிறதில்லை. எனக்கு உதவிசகாயமும் பண்ணுகிறதில்லை.

 என் மகனே , என் மகளே! அப்படிச் செய்வது உங்களுக்கு நல்லதோ? உங்களுடைய தாயான நான் இவ்வளவு துன்ப வேதனையினை அநுபவித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் சந்தோஷித்து விருந்து கொண்டாடி விளையாடிக்கொண்டிருக்கலாமோ? மகனே! மகளே என்பேரில் இரங்கி என்னை, சுடும் நெருப்பை அவிக்கக் கொஞ்சங் கண்ணீரைச் சிந்துங்கள். என் நிர்ப்பாக்கியத்தைத் தீர்க்க பிச்சைக்காரரை அழைத்து அவர்களுக்கு போஜனம் கொடுங்கள். என் பரிகாரக்கடனை செலுத்த ஒருசந்தியாயிருங்கள்; என்னை மோட்சத்துக்குச் சேர்ப்பிக்கத் தேவமாதாவை வேண்டிக்கொள்ளுங்கள். ஆண்டவருடைய கோபம் என்பேரில் இருக்கிறபடியினாலே, என் பிள்ளைகளான நீங்கள் சற்றாகிலும் உங்கள் தாயான என் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்")என்று தாயானவள் பரதவித்துச் சொல்லுவாள். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே! இப்பேர்ப்பட்ட பிரலாபத்தைக் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதி தீர ஏதேனும் செய்ய மாட்டீர்களா ?

"தாய் தகப்பன்மார்களே! நாங்கள் உங்களுடைய  பிள்ளைகள்தான். நீங்களாவது சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள். ஏனென்றால் நீங்கள் எப்போதும் எங்கள் பேரிலே பட்சமாய் இருந்து மகா தயவோடே எங்களை நடப்பித்து சொல்லில் அடங்காத நன்மைகளை செய்தீர்களே . ஐயையோ ! நாங்கள் சிறு வயதிலே செத்திருந்தாலும் அநேக பாவங்களையும் குற்றங்களையும் கட்டிக் கொண்டு மரணமடைந்தோம் . இந்தப் பாவங்களுக்குப் பரிகாரமாய் அநேக வருஷம் நாங்கள் இந்த அகோர நெருப்பிலே வேக எங்களுக்கு தீர்வை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆபத்திலே எங்களுக்கு உதவி பண்ண யாரைத் தேடுவோம் தாய் தகப்பன்மார்களான நீங்கள் எங்களைப் புறக்கணித்துத் தள்ளினால் யாருடைய அடைக்கலத்தில் போவோம்? உங்களுடைய பிள்ளைகளான நாங்கள் இவ்வளவு அவதிப் படுகிறது உங்களுக்கு நல்லதோ? நாங்கள் இந்த அகோர நெருப்பிலே வேகிற போது உங்களுக்கு வயிறெரியாதோ?

ஒ தகப்பனாரே ஒ தாயாரே உங்களுக்கு எங்கள் மன்றாட்டி லுள்ள பட்சத்தைப் பார்த்து உங்கள் பிள்ளைகளான எங்களை  கைவிடாதேயுங்கள். ஆண்டவருடைய கையானது எங்களைக் கண்டிப்பாய்த் தண்டிக்கிறதினாலே, சற்றாகிலும் எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்" என்று பிள்ளைகள் புலம்பித் தவிக்கிறார்களே. பக்தியுள்ள கிறிஸ்துவர்களே. இப்பேர்ப்பட்ட துயரத்தைக் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதிதீர ஏதேனும் செய்யமாட்டீர்களா? இப்படியே, புருஷன் பெண்சாதியிடத்திலும், பெண்சாதி புருஷனிடத்திலும் இப்படிப் பிரலாபித்து விம்மிப் பெரு மூச்சுவிட்டு முறைப்படுகிறதாக நினத்துப் பாருங்கள்.

கிறிஸ்துவர்களே! இப்போது சொன்ன புலம்பல்களையும் முறைப்பாடுகளையும் கேட்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் இரக்கம் வைக்கவேண்டியதுமல்லாமல், அவர்களுடைய அவதி தீர நீங்கள் இந்நாள் மட்டும் செய்தது போதாதென்று நன்றாய்க் கண்டுபிடித்து இனிமேல் என்னத்தைச் செய்யப்போகிறீர்களென்று உறுதியாய்த் தீர்மானிக்க வேணுமென்று அறியக் கடவீர்களாக,

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

சேசுவின் திரு இருதயமே ! எங்கள் பேரில் இரக்கமாய் இரும்

செபம் 

தயைக்காட்டவும் மன்னிப்பைக் கொடுக்கவும் எப்போதும் சார்பாயிருக்கிற சர்வேசுரா ! ஸ்திரிபூமான்களான எங்கள் பந்து ஜனங்களுடைய ஆத்துமாக்களைக் கிருபாகடாகமாய்ப் பார்த்து அவர்களுடைய சகலமான பாவங்களையும் பொறுத்துக் கொள்ளும் . இந்த ஆத்துமாக்களெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளிலிருந்து மீட்கப்பட்டு மெய்யான ஜீவியமாகிய உம்மிடத்திலே சேரப்பண்ணவேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.

பதினேழாந் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:

மரித்த உங்களுடைய நெருங்கிய உறவின் முறையார் இன்னாரின்னாரென்று நினைத்து ஒரு பூசையைப் பண்ணுவிக்கிறது, அல்லது அவர்கள் ஆத்துமத்துக்காக 5 பர பிரி, 5 திரி வேண்டிக்கொள்ளுகிறது.

புதுமை 

இத்தாலியா தேசத்திலுள்ள மிலான் என்னும் நகரத்திலே முத்திப்பேறு பெற்றவளாகிய அற்காஞ்சேலம்மாள் கன்னியாஸ்திரிகளுடைய ஒரு மடத்துக்கு சிரேஷ்டம்மாளாய் இருந்தாள். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியும் இரக்கமுமுள்ளவளாய் இருந்ததினாலே அவர்களுடைய அவதி தீர அடிக்கடி ஒருசந்தியாயிருப்பாள். அநேக செபங்களைப் பொழிவாள். கூடினமட்டும் தர்மங்களைப் பண்ணுவாள். அக்காலத்திலே அவள் மிகவும் நேசித்திருந்த அவளுடைய தகப்பனார் இறந்துபோனார். அவள் மற்ற ஆத்துமாக்களுக்குச் சகாயமாக மேற் சொன்னதெல்லாம் செய்துகொண்டுவந்தாலும், எந்த காரணத்தினாலேயே தன் தகப்பனுடைய ஆத்துமத்தை மறந்து போனாள்.

அநேகநாள் கடந்த பிற்பாடு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் திருநாளன்று அவள் தன்னுடைய சிற் றறையில் தியான ம் பண்ணிக்கொண்டிருந்தபோது அவளுடைய காவலான சம்மனசானவர் அவளுக்குத் தரிசனையாகி என் பின்னே வா' என்று அவளை உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு கூட்டிக் கொண்டுபோனார். அங்கே வேதனைப்பட்டுக்கொண்டிருந்த ஆத்துமாக்களுக்குள்ளே அவள் தகப்பனுடைய ஆத்துமம் அகோர வேதனைகளை அநுபவித்துக் கொண்டிருந்ததை அவளுக்குக் காண்பித்தார். அவள் தகப்பனாரோவென்றால் மகளைக் கண்ட க்ஷணத்திலே அபயச்சத்தமிட்டு "என் மகளே என் மகளே இம்மாத்திரம் வேதனைக்குள்ளே உன் தகப்பனான என்னை எப்படி இவ்வளவு நேரம் உபாதைப்பட விட்டுவிட்டாய். புறத்தி ஆத்துமாக்களின் பேரில் மிகவும், மிகவும் இரக்கமாயிருக்கிறாய்; உன்னுடைய வேண்டுதலினாலே அநேக ஆத்துமாக்கள் மீட்கப்பட்டு இந்த நிர்பாக்கியமான சிறைக்கூடத்திலிருந்து புறப்படக் கண்டேன்;

உன் தகப்பனான என்பேரில்மாத்திரம் இரக்கமின்றி என்னை மறந்து போனாயோ " என்றார் . இந்தத் துயர வார்த்தைகளைக் கேட்டு அற்காஞ் சேலம்மாள் வெகுவாய்த் துக்கித்து நடுநடுங்கி திரளாய் அழுது இனிமேல், என் பிரியமுள்ள தகப்பனாரே! நான் உம்மை இவ்விடத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் வரையில் ஆண்டவரைப் பிராத்தித்துக் கொள்ளுவேன் என்று வார்த்தைப்பாடு கொடுத்தாள்.

பின்பு தன் காவலான சம்மனசை நோக்கி: செம்மனசானவரே, நான் என் தகப்பனை மறந்துபோன காரணம் என்னவென்று சொல்லும்பனன்றாள். அதற்குக் காவலான சம்மனசு மறு மொழியாக உன்னுடைய தகப்பன் உயிரோடிருந்தபோது தன்னுடைய ஆத்தும காரியத்தில் அசட்டையாய் இருந்து வந்தபடியினாலேயும் சுறுசுறுப்பில் o சர்வேசுரனுக்கு ஊழியஞ்செய்துவந்ததினாலேயும் தண்டனையாக தேவ செய்கையால் நீ அவனை மறந்துபோனாய் தேவ காரியங்களிலே அசட்டையாய் இருக்கிறவர்களுக்கு அப்படித்தான் சம்பவிக்கும்.

தங்களுடைய ஆத்துமத்தை நினைக்காமல் இவ்வுலக செல்வ பாக்கியங்களை மாத்திரமே தேடிக்கொண்டு வருகிறவர்கள் தங்களுடைய பாவங்களுக்குப் பாவசங்கீர்த்தனத்தின் வழியாக மன்னிப்பை அடைந்திருந்தாலும், அந்தப் பாவங்களுக்குக் கனத்த ஒரு பரிகாரக்கடனை அவர்கள் செலுத்த வேண்டியதாயிருக்கிறது. அக்கடனைப் பூமியிலே செலுத்தாதிருந்தால், நூறுபங்கதிகமாய் உத்தரிக்கிற ஸ்தலத்திலே தப்பாமல் செலுத்தவேணும் என்று சொல்லி மறைந்துப் போனார் .

முத்திப்பேறுபெற்ற அற்காஞ்சேலம்மாளோவென்றால் தன் தகப்பனாரின் கொடிய வேதனைகளைக் கண்னாற் காண்கிறாற்போல ஓயாமல் அழுவாள், இடைவிடாமல் ஜெபிப்பாள். இரக்கமில்லாமல் தன்னை தண்டிப்பாள். தகப்பன் தேவ நீதிக்குச் செலுத்த வேண்டியக் கடனை எவ்வகையிலும் தீர்க்க ஏங்குவாள். இப்படி அநேகநாள் செய்தபிற்பாடு தன் தகப்பனுடைய ஆத்துமம் மிக்க சந்தோஷத்தோடும் மகிமைப்பிரதாபத்தோடும் மோட்சத் துக்குப் போகிறதைக் கண்டாளாம்.

கிறிஸ்துவர்களே நீங்களும் உங்களுடைய ஆத்துமக் காரியத்தில் அசட்டையாயிருப்பீர்களேயானால், மேற் சொன்ன மனுஷனுக்குச் சம்பவித்தாற்போல உங்களுக்கும் சம்பவிக்கும். உங்களுடைய பிள்ளைகள் உங்களை மறவாமல் நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிறபோது அவர்கள் உங்களுக்கு உதவி சகாயம் பண்னவேணுமென்று நீங்கள் விரும்பினால், உங்களுடைய முன்னோர்களை மறவாதேயுங்கள்.

ஒரு நாள் நீங்கள் சாப்பிடத் தவறிப் போனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒரு சின்ன செபத்தையாவது செபிக்க ஒருநாளும் தவறக் கூடாதென்று அறியக்கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.