அக்டோபர் 18

சேசுவின் திருச்சிரசில் முள்முடி சூட்டுகிறார்கள்.

குரூர கேளிக்கைகளைக் கண்டு ஆனந்தித்த மனிதன் புலியைப் போல மாறுகிறான் . குரூரச் செயல்களைப் பெருக்க ஆசிக்கிறான் . கற்றூணில் ஆண்டவர் அனுபவித்த வாதனையைக் கண்டு ஆனந்தித்த ரோமை மிலேச்ச சேவகர்கள் இன்னொரு வேடிக்கையைச் சிந்தித்தனர் . அவர்களுக்கு யூதர்கள் மேல் சொல்லொணா அலட்சியம் , அருவருப்பு ; தங்கள் அரசைத் துரத்தி விட தேடுகிறார்கள் என பகையும் வன்மமும் கூட . தாம் யூதர்களுக்கு அரசன் என்று இயேசுநாதர் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டார் அல்லவா ? அவருக்கு அரச மரியாதை காட்டி ஆகடியம் செய்ய வேண்டுமென இந்த அக்கிரமிகளின் வறண்ட சிரசில் சிந்தனை ஓடியது

தட்டுத் தடுமாறி மூச்சு விட கூட முடியாமல் தவிக்கு இயேசுவை , உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆயிரம் தேள் கொட்டியது போல வெந்த இயேசுவை ஒரு மண்டபத்திற்கு இழுத்துச் சென்றனர் . கரடு முரடாக சில்லிப்பு தட்டும் உடைந்து கிடந்த சிறு தூண் மேல் தள்ளி அமர்த்தினர் . அதுதான் சிங்காசனம் .கந்தலான ஒரு சிவப்புத் துணியை அவர் மேல் போர்த்தினார் . அது அரச பீதாம்பரம் . ஒரு மூங்கில் தண்டை இணைக்கப்பட்டிருந்த அவரது கரங்களின் இடுக்கில் பொருத்தினர் . அது செங்கோல் . முடி வேண்டுமே ! என்ன செய்வர்? பொன்னாலும் மணியாலுமான முடியல்ல , பூவாலான முடி கூட அல்ல . ஒரு முட்செடியை பறித்தனர் . முட்கள் தங்களைக் குத்தாதபடி பதனமாய்க் குல்லா போல் அதை வளைத்துப் புனைந்தனர் . அதை ஆண்டவரின் சிரசில் வைத்தனர் . தடியால் அழுத்தினர் . தலை முழுதும் காயம் , நெற்றி முழுதும் காயம் , முட்களில் சில கண்களில் பாய்ந்தன. சில செவிக்குள் செருகின. சிரசின் எப்பக்கமும் இருந்து இரத்தம் சொட்டுகிறது . நாகரீகமோ , மக்கள் மனப்பான்மையோ சிறிதும் இல்லா அந்த மாக்கள் இயேசுவின் இந்த எளிய பரிதாபக் கோலத்தைக் கண்டு கை தட்டினர் ; களித்தனர் . "இவர் தான் பெரிய அரசர் " என்று கோஷமிட்டனர் .

இக்காட்சியை கண்களால் காண்கிறோமா , காதால் கேட்கிறோமா ?உள்ளத்தில் எண்ணி எண்ணி உருகுகிறோமா? ஒரு விதத்தில் இக்கோலம் இவருக்குப் பொருந்தும் . இவர் பெரிய புரட்சி வீரர் அன்றோ ? மலைப் பிரசங்கத்தில் உலகம் மதிப்பதைஎல்லாம் புரட்டிப் போட்டு விட்டாரே ! தரித்திரம் , துன்பம் , இழிவு , மானபங்கம் ,அவமானம் , நிந்தை பரியாசம் தானே அவர் நிறுவ வந்த அரசின் சின்னங்கள் என்றார். இப்புரட்சி வீரரின் போதனையை நாம் கற்பதுமில்லை கையாளுவதுமில்லை . அப்போதகத்தைச் செயலளவில் காட்டுகிறார் , நம் உள்ளத்தில் பதிக்க.

எனினும் வியாகுலத் தாயே , இப்பரிதாபக் கோலத்தில் என் அன்பரை , என் மீட்பரைக் காண மனம் வேகுதே தாயே நீர் எங்கிருந்தீர் ? எங்கிருந்தாலும் இதைத் தெளிவாய்த் தரிசித்தீர் . மனம் நைந்தீர் கண்ணீர் பெருக்கினீர்

சேவகர்கள் அவருக்கு முன் முழந்தாட்படியிடுகிறார்கள் . அவர் வதனத்தில் துப்புகிறார்கள் . கன்னத்தில் அறிகிறார்கள் . தடியால் ஓங்கி முள்முடி மேல் அடித்துக் காயத்தைப் புதுப்பிக்கிறார்கள் . வேதனையைப் பெருக்குகிறார்கள் . அவரது சிம்மாசனத்திலிருந்து அவரைத் தட்டி விடுகிறார்கள் அதைக் கீழே சாய்க்கிறார்கள் . என்ன அவமானம் ! என்ன அலங்கோலம் ! அவரது தலை உரோமம் சடை பிடித்துக் கண்களில் விழுகிறது . கண் இரத்தம் பாய்ந்து கிடக்கிறது . சிரசின் எப்பக்கமும் இருந்து இரத்தம் ஒழுகி நெற்றியையும் , தலையையும், முகத்தையும் நனைக்கிறது

தாயே இங்கு அமர்ந்திருக்கிறவர் யாரென்று நான் முதலாய் முழுதும் உணர்ந்தேனா ? இந்த மிலேச்சர்கள் மத்தியில் இருந்து இக்கூரிய வாதனைகளை அனுபவிப்பவர் கோமாளி அரசனைப் போல் பகடி செய்யப்படுகிறவர். ஞானத்திலும் மகிமையிலும் மேலானவர் . ஆண்டவர் கிருபையால் பிரசித்தி பெற்ற சாலமோன் அரசரை விட பெரியவர் அல்லவா ? அருகில் அண்டவும் அரசிகள் முதலாய்ப் பயந்தரண்ட கீர்த்தி வேய்ந்த அசூவேரஸ் மன்னனை விட மகாப்  பிரதாபம் உள்ளவர் அல்லவா? படையணியில் பராக்கிரம வீரரைத் துலங்கிய தாவீதரசனை விட கம்பீரமும் ஆரோக்கியமும் வாய்ந்தவரல்லவா? இவர் சுயஞ்சீவியான மெய்யங் கடவுள்.

இந்நேரம் முதலாய்க் கோடிக்கணக்கான வடிவும் வல்லமையும் பூண்ட வானதூதர்கள் மேல் தம் செங்கோலாட்சியைச் செலுத்துகிறார். அவரது ஓர் அடையாளத்தை எதிர்பார்த்து , அவர் பாதத்தில் அவர்கள் விழுந்து கிடக்கின்றனர் . ஆகிலும் வெறிகொண்ட ஈனமக்கள் மத்தியிலே அவர்கள் குவிக்கும் அவமரியாதையூடே வெட்கத்திலும் வாதனையிலும் வெந்து நொந்து அமர்ந்திருக்கிறார்.

இவர்தான் மெசியா . நீண்ட காலமாக மக்கள் காத்துக்கிடந்த மீட்பர் ; அவர்களுடைய அன்பையும் பாத காணிக்கையையும் ஏற்றுக் கொள்ள தம் செங்கரத்தை நீட்டிய தினத்தில் அவர் மக்கள் அவரை இவ்விதம் நடத்துகிறார்கள்.

அநியாயமான கேலியும் பரியாசமும் எவ்வளவு ஆழமாக மக்களின் உள்ளத்தைக் குத்திப் புண்ணாக்குகின்றன என்று நமக்குக் கற்பிக்கச் சித்தமானார் . வீண் பழிச் சொற்களாலான வேலால் நம் சகோதரர்களை வருத்தலாகாது .நமக்கு வரும் ஏச்சு பேச்சுக்களை அவரைப் போல் பொறுமையாக ஏற்றுக் கொள்ள இயேசு நம்மிடம் கேட்கிறார்

சரிதை.

முத் ஹெர்மன் தன் வாய்ப்படச் சொல்லுகிறார் . நான் பக்தியாகவும் கவனமாகவும் வாய்ச் செபங்களைச் சொல்லி தேவ இரகசியங்களைக் கொஞ்சம் யோசிக்கும் போது தேவதாய் பார்ப்பவர்கள் பரவசமாகும்படி மகா சோதிப் பிரதாபத்தோடும்அழகு சுந்தரத்தோடும் எனக்குத் தரிசனமாவார்கள் . சிலகாலஞ்  சென்று என்னிடம் அசமந்தம் வளரவே பக்தி உருக்கம் குறைந்தது . பதட்டத்தோடு வேகமாக கவனக்குறைவாக செபமாலை சொல்லத் தொடங்கினேன் . அப்போது தேவதாய் அழகின்றி வதனமெல்லாம் வாடி வதங்கி நீண்டு தொங்க தரிசனமானார்கள் . நான் இதைக் கண்டு அச்சமும் விசனமுமுற்றேன்

தேவ தாய் சொன்னார்கள் "என்னுடைய தோற்றம் உனக்கு இவ்விதம் தான் இருக்கும் போலும் .அலட்சியம் செய்யப்படவேண்டியவளைப் போல என்னைப் பாவித்து நீ நடத்துகிறாய் . என் வாழ்க்கை வரலாறுகளைத் தியானித்து என் பெருமையைப் புகழ்ந்து கவனத்தோடும் மேரை மரியாதையோடும் என்னை வரவேற்பதில்லை"

நாம் எவ்வளவு பக்தியாய்ச் செபமாலை சொல்லவேண்டும் ! செபமாலை சொல்லும் போது வீண் பராக்கும் அசமந்தமும் வேண்டாம்.

செபம்.

முள்முடி தாங்கிய திவ்விய ஏசுவே , யோசித்துப் பார்க்கவும் , நன்மையையும் தீமையையும் பிரித்து உணரவும் ஒவ்வொன்றையும் அளக்கவும் ,நிறுக்கவும் , அவசியமாகில் நரக தூதரோடு மல்யுத்தம் தொடுக்கவும் உண்மையைத் தேடி அலையும் போது சந்தேகம் இருந்தால் நிச்சயமான வழி போகவும் எங்களுக்குத் துணிவையும் தைரியத்தையும் தந்தருளும் . எங்கள் கண் இருளடிக்கப்பட்டாலும்உமது பிரகாசக் கதிர்களால் எங்கள் பக்திக்கு ஒளியூட்டியருளும் . பிரகாசத்தின் கர்த்தரான அதிபதிக்குத் தகுதியானது ஒரே முடி , அந்த முள் முடியை உமது ஊழியர்களாகிய எங்கள் சிரசில் பதித்தருளும் .

செபமாலை இராக்கினியே , பரியாச அரசரின் அன்னையே , இவ்வுலகில் எங்களுக்கு வரும் நிந்தனைகளைத் தாங்க உமது செபமாலை எங்களுக்கு தைரியத்தைத் தந்தருள்வதாக.

ஆமென்.