அக்டோபர் 19

திவ்விய சேசு சிலுவை சுமந்து செல்கிறார்.

தாமே தெரிந்து கொண்ட கிரீடத்தை அணிந்து மகிமையின் அரசர் எருசலேம் நகர் வீதி வழியாய் பவனி செல்கிறார். கல்வாரி மலையில் அவரது சிங்காசனத்தைத் தயாரிப்பர். அதை நோக்கிச் செல்லுகிறார். என்ன கொடிய வாதனை , கொள்ளும் நடை ! சிலுவையின் தாங்கொணாப் பாரத்தினால் தயங்கித் தடுமாறி பற்பல முறை கீழே விழுந்து எழுகிறார் . போகப் போக சன வெள்ளம் பெருகுகிறது . அங்கிருந்து அவச் சொல்லும், பழி வசனமும் அலை அலையாய் ஆண்டவர் மேல் விழுகின்றன . பேயோடு கடைசி முறை போராடி வெற்றிமுடி சூடவே போய்க் கொண்டிருக்கிறார்.

இப்பவனியின் பாதையில் பற்பலர் தோன்றி மறைகின்றார்கள் . அவர்களைப் பார்க்கலாம் . அக்காட்சிகளைப் பற்றி யோசிக்கலாம் . வெரோணிக்காள் பயத்தைப் பாராட்டாமல் கூட்டத்திற்குமுன் பாய்ந்து , இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறார். உடனே கைம்மாறும் பெறுகிறார் . எருசலேம் மாநகர் புண்ணியவதிகள் தனித்தும் கூட்டமாகவும் வந்து ஆண்டவரின் அநியாய அக்கிரம அகோர வாதனையைக் கண்டு கண்கலங்கிக் கதறி அழுகிறார்கள் . சிமியோன் நம்மில் ஒருவனாகத் தோன்றுகிறான் அல்லவா ? வேறு எண்ணங்களும் உதிக்கலாம் . அச்சமயம் அப்போஸ்தலர்களின் எண்ணம் என்ன ? உணர்ச்சி என்ன ? அவர்கள் ஓடி விட்டார்கள் என நாம் அறிவோம் . எங்கே ஓடி இருப்பார்கள் ? இந்நகரில் தான் வீடுகளில் நுழைந்து நடப்பதைக் கதவு இடுக்கு வழியும், ஜன்னல் வழியும் இலேசாய் எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள் . என்ன யோசித்துக் கொண்டிருந்தார்கள் என்பது தான் கேள்வி . இயேசுவின் வலது பக்கம் ஒருவரும் இடது பக்கம் ஒருவரும் வீற்றிருக்க வேண்டும் என்று அர்ச் யாகப்பரும் அருளப்பரும் கேட்ட போது ஆண்டவர் சொன்ன பதில் அவர்களது உள்ளத்தை உறுத்தியிருக்கலாம் . " நீங்கள் கேட்பது யாதென நீங்கள் அறியீர்கள் . நான் பானம் செய்யும் பாத்திரத்தை நீங்கள் பானஞ் செய்ய முடியுமா ? " என்ற கேள்விக்கு " முடியும் " என்றார்களே . ஆனால் அர்ச் யாகப்பர் மட்டும் அன்று அவரது விண்ணப்பத்தைக் கேட்டு சீறி விழுந்த இதர சீடர்களும் ஆண்டவர் தனியே அக்கசப்பான பாத்திரத்தைக் குடிக்க விட்டு ஓடி ஒளிந்தனர்

இயேசு மொழிந்த வேறு புத்திமதியும் அவர்கள் நினைவுக்கு இப்பொழுது வந்திருக்கும் . "யார் யார் தன் சிலுவையைச் சுமந்து என் பின் வராமலிருக்கிறாரோ  அவர் என் சீடனாயிருக்க முடியாது " அவ்வார்த்தை அப்பொழுது கடினமாயிருந்தது . இப்பொழுது முன்னரை விடச் சந்காமாகத் தோன்றியது

எனினும் தாங்கள் தவறினோம் , தங்களுக்குத் தோல்வி என்று மனம் நொந்தனர் . யோசிக்க யோசிக்கத் தங்கள் தவறைப் பெரிதும் உணர்ந்தாலும் தாங்கள் பதுங்கிய இடத்திலிருந்து வெளிவர அவர்களுக்குத் துணிவில்லை . ஆகிலும் பின்னொரு நாள் ஆண்டவருக்கு உயிரைக் கொடுக்கத் தயாராயிருப்பார்கள் .

"எவனாவது என்னைப் பின்பற்றி வர ஆசிப்பானேயாகில் அவன் தன் சிலுவையைத் தினம் தினம் தூக்கிக் கொண்டு என் பின் வருவானாக " என்றது யாவருக்கும் பொருந்தும் . விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாவரும் தங்கள் வாழ்நாளில் சிலுவையைச் சுமந்தாக வேண்டும் . நல்ல மனதோடு தூக்கிச் சென்றால் நித்திய மகிழ்ச்சி அவர்களை வரவேற்கும் . வேண்டா வெறுப்பாய் தூக்கிச் செல்வது நித்திய கேட்டுக்குள் அவர்களை இறக்கி விடும் . பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வுத் தளம் வெவ்வேறு துன்பங்களாலும் பாவங்களாலும் சிலுவைகளாலும் பாவப்பட்டிருக்கிறது . இயேசுவோடு பாவத்தின் சிலுவையைத்தான் சுமந்து செல்கிறோம் . தவறி விழுவோமேயாகில் சிலுவையின் கீழ் இயேசு விழுந்ததை நினைவுற்று விழும் ஒவ்வொரு முறையும் மிகவும் ஆழ்ந்த மனஸ்தாப வரத்தை நமக்குப் பெற்றுக் கொடுக்கிறார் என்பதை உணர வேண்டும்

சிலுவையின் பாதையில் தம் மகனைச் சந்தித்தாரே தேவ தாய் , அவரது வியாகுலப் பெருக்கை அறியக் கூடியவன் யார் ?

இக்காலத்தில் வேத விரோதிகளால் பறித்துக் கொண்டு போகப்படுகிறார்களே மக்கள் , அவர்கள் படும் பாட்டை நினைக்கும்போதே தாய்மார்களின் மனம் நடுங்குகிறது . சில சமயம் அதைச் சகிக்க முடியாதென்றே நமக்குத் தோன்றுகிறது .மகனின் பாடுகளைக் கண்ட மாமரி எவ்விதம் மனம் உடைந்திருக்க வேண்டும் .நமதாண்டவர் செய்ததை நன்றாய்க் கண்டறிந்தவர் தேவதாய் ஒருவரே . அவர் யாருக்காக இந்தக் கொடிய பாடுகளை அனுபவித்தார் என்றும் அவருக்குத் தெரியும் (கன்னித்தாய் உலகின் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடும் ) யாருக்காக இயேசு பாடுபடுகிறார் என்றறிந்து அதை ஏற்றுக் கொண்டார் . அவர் கிறிஸ்துவின் தாய் , கிறிஸ்துவின் ஞான சரீரத்தின் தாய் . அவர் வழியாகத்தான் நாம் கடவுளின் பிள்ளைகள் ஆனோம் .

சரிதை.

பக்தியுள்ள பெருங்குலத்துத் தகப்பன் ஒருவனுக்குப் பல பெண் மக்கள் இருந்தனர் . அவர்களில் ஒருத்தியை ஒரு மடத்தில் கன்னியராகச் சேர்த்து விட்டார் . ஆனால் அந்த மடமோ துர்வசமாக பக்தி ஒழுக்கத்தில் மகா குறைவாக இருந்தது . உலக நாட்டமே அவர்களது முகமூடி . அகங்காரமே அவர்களது முக்காடு . திரிதெந்தின் சங்கத்திற்கு முன் பிரபு வம்சங்களில் அநேக பெண்கள் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக கன்னியர் ஆனவர்கள் தான்

புதிதாய்ச் சேர்ந்த கன்னிகைக்கு இம்மடத்தின் ஒழுங்கற்ற தனம் ஒத்துப் போகவில்லை . தன் ஆத்தும குருவானவரிடத்தில் இதை அறிவித்து ஆலோசனை கேட்டாள். அம்மடத்து ஆத்தும குருவோ பக்திமான் , ஆத்தும ஆவல் நிறைந்தவர் , செபமாலை மேல் அதிக பக்தியுள்ளவர் . இப்புதுக் கன்னிகையை பக்தியின் வழியில் செலுத்தும்படி சொன்ன வழி என்னவெனில் " கன்னித்தாய்க்குத் தோத்திரமாக தினமும் செபமாலை சொல்லி வா . செபமாலை சொல்லும்போது இயேசுவின் வாழ்க்கைப் பாடுகள் மகிமையை பற்றிச் சிறிதளவு தியானித்து வா " என்பதாம் . அக்கன்னியாஸ்திரி பிரியத்தோடு இப்புத்திமதியை ஏற்றுக் கொண்டு அதுபோல நடந்து வந்தாள். தன் கூட இருக்கும் சகோதரிகளின் ஒழுக்கம் தவறிய நடத்தையின் மேல் அருவருப்பு கொண்டாள் .இதர சகோதரிகள் அவளைப் பரிகாசம் செய்தனர் . அவமதித்து அலட்சியம் செய்தனர் . பைராகினி என்றனர் . இந்த இழி சொல்லுக்கெல்லாம் அசையாமல் செபத்திலும் மௌனத்திலும் மேலும் மேலும் அதிகமதிகம் ஈடுபட்டாள்

இவ்வாறு நடந்து வரும்போது ஒரு பரிசுத்த குருவானவர் அம்மடத்திற்குத் தரிசகராக நியமிக்கப்பட்டார் . அவர் மடத்தை பரிசீலனை செய்து வரும் நாளில், தான் தியானம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு காட்சி கண்டார். அந்த கன்னிகை தன் அறையில் செபத்தில் ஈடுபட்டு பரவசமாயிருந்தாள். சொல்லொண்ணா சுந்தரவதி ஒருத்தி சம்மனசுகள் தன்னைச் சூழ அக்கன்னிகை முன் கம்பீரமாக நின்றாள். சம்மனசுக்களின் கரத்தில் அக்கினி வேல்கள் மின்னின . அந்த வேல்களால் அந்த அறைக்குள் நுழையத் தேடிய பெரும் பேய்க் கணங்களை அடித்து விரட்டினர் . அப்பேய்க் கூட்டங்கள் இழிவான மிருகங்களின் கோலத்தைப் போர்த்தி மற்ற கன்னியரின் அறைக்குள் ஓடிப் பதுங்கின

இக்காட்சியால் மடத்தின் நிலையை தரிசகர் ஒருவாறு அறிய வந்தார் . இந்த ஒழுங்கீனத்தை நினைக்கவே அவருக்கு மிகவும் கலக்கம் . கலக்கத்தினாலும் விசனத்தினாலும் அங்கயே மரித்துப் போவாரோ என்று கூடத் தோன்றியது . அவர் அப்பக்தியுள்ள கன்னிகையை அழைத்து அவளது புண்ணிய பாதையில் நடக்க ஊக்கமளித்தார்

செபமாலையின் பெருமையை நிதானித்து யோசித்து அதைக் கொண்டாவது அம்மடத்தை சீர்திருத்தலாம் எனக் கருதலானார் . வேறு எத்தனையோ வழிகளைக் கையாண்டும் பலனில்லை . நேர்த்தியான செபமாலைகளைக் கட்டுவித்தார் . ஒவ்வொரு கன்னியருக்கும் ஒவ்வொன்று கொடுத்தார் . "தினம் செபமாலை சொல்லி வாருங்கள் . பக்தியாய்ச் செய்து வாருங்கள் . அங்ஙனமே செய்து வந்தால் நான் எண்ணியபடி உங்களை வலுவந்தமாக சீர்திருத்தப் போவதில்லை என வாக்களிக்கிறேன் " என்றார்

சிறுகச் சிறுக கன்னியரின் நடத்தையில் மாற்றம் நடந்தது . உலக நாட்டத்தையும் பற்றுதலையும் விட்டுவிட்டு மௌனத்திலும் செபத்திலும் ஈடுபட்டனர் . ஈராண்டுக்குள் அவர்களே மனம் மாறி சீர்திருத்தத்தைக் கொண்டு வர தரிசகரை வலியக் கேட்டுக் கொண்டனர்

செபமாலையின் வலிமை தான் என்னே !

செபம்.

ஆண்டவரே நாங்கள் சிலுவையைத் தூக்குவோமாக . எங்கள் அகங்காரம் , பேராசை , உலக நாட்டம் முதலிய அதன் பாரத்தால் தாங்கொணாப் பாரம் தான் அச்சிலுவை . அதன் பாரத்தால் நசுங்கும் மாசற்றவர்களின் தோளை விட்டு அகற்றும் கடமையில் எங்கள் யாவருக்கும் பங்கு உண்டு . நாங்கள் உட்கொள்ளும் திவ்விய நற்கருணை உம்மோடும் ஒவ்வொருவரோடும் சேர்ந்து துன்பப்பட எங்களுக்குள்ள தீர்மானத்தில் அவ்வொற்றுமை விளங்குவதாக . இவ்விதம் எல்லாக் கரங்களும் ஒன்று சேர்ந்து அப்பாரக்கட்டையை தூக்குவதனால் ஒவ்வொருவருடைய பாரமும் குறையும் . எங்கள் சிலுவையை நாட்கணக்காய்ச் சுமப்பதனால் சிரேனிய சீமோனை போல் நாங்கள் உமக்கு உதவுவோமாக .

செபமாலை நாயகியே , வியாகுல மாதாவே , சிலுவையில் தான் இயேசுவைக் கண்டடைவோம் என்பதை நாங்கள் நன்குணர்ந்து , வரும் சிலுவைகளைப் பொறுமையோடு , கூடுமானால் வரப்போகும் சிலுவைக்குக் காத்திருந்து சந்தோசத்தோடு ஏற்றுக் கொள்ளும் கிருபையை , சிலுவை சுமந்து சென்ற உம் மகனிடமிருந்து பெற்றுத் தாரும்.

ஆமென்.