இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 18-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் கிறிஸ்துவினிடத்தில் விளங்க வேண்டிய திடத்துக்கு மாதிரிகை.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தகுணமுமுள்ள இயேசுவை இறைவனுடைய செம்மறியென்று புனித திருமுழுக்கு யோவானை அழைக்கிறார். ஆனால் விவிலியத்தின் வேறோரிடத்தில் அவரை யூதாவின் சிங்கமென்று சொல்லியிருக்கிறதை வாசிக்கிறோம். பிதாவினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட அலுவலை எவ்வளவு விடாமுயற்சியோடும் தைரியத்தோடும் நிறைவேற்றினாரென்று நமக்குத் தெரியும். தமது விரோதிகளால் விளைந்த இடையூறுகளின் நடுவில் தமது பிதாவின் புகழ்ச்சியையும், அன்பையும் தமது ஆத்தும் மீட்பையுமே முன்னிட்டு உழைத்துப் பாடுபட்டு மரித்து இறைப்பணியில் பிரமாணிக்கமாயிருந்தார்.

அருட்சாதனங்கள் வழியாய், விசேஷமாய் உறுதிபூசுதல் வழியாய் இயேசுவின் திருஇருதயமானது ஞான தைரியத்தை நமது ஆத்துமத்தில் ஏற்படுத்தி உலகம், பசாசு, சரீர்மென்கிற மூன்று எதிரிகளோடு, நாம் எதிர்த்துப் போராடவும், நம்முடைய ஆசைபற்றுதல்களை ஜெயித்து கிறிஸ்தவனுக்குரிய புண்ணியங்களை கடைபிடித்து நமது ஆத்துமத்தையும், இன்னும் அநேகருடைய ஆத்துமங்களையும் மீட்கவும் பண்ணுகிறது.

சம்சோனிடத்தில் விளங்கின உடல் பலம் கிறிஸ்தவர்களுடைய ஞானத் திடனுக்கு சாயலாயிருக்கிறது. கடவுள் இம்மனிதனுக்கு மிக அதிகமான வலுவை கொடுத்ததாக விவிலியத்தில் வாசிக்கிறோம். இவர் சிங்கங்களைக் கொன்றதாகவும், பகைவர்கள் தன் கைகால்களைக் கட்டப் பயன்படுத்திய பெரிய வடங்களை நூலைப்போல் அறுத்து எறிந்ததாகவும், உபயோகமில்லாத சாதனங்களால் தன் விரோதிகளில் அநேகரைக் கொன்றதாகவும், தேவாலயத்தின் பலமான பெரும் தூண்களை அசைத்துப் பிடுங்கினால் அந்தக் கட்டிடம் கீழே விழுந்து விரோதி மாண்டுபோனதாகவும் நாம் அறிகிறோம். இதேவிதமாய் நாம் நமது ஆத்தும் விரோதிகளை வென்று, பசாசின் தந்திர சோதனைகளையும், உலக துர்மாதிரிகைகளையும், திருச்சபை விரோதிகளின் தொந்தரவுகளையும் எதிர்த்து நின்று ஜெயித்து வேதசாட்சிகள், புனிதர்களுடைய மாதிரிகைகளைத் தாராள குணத்தோடு பின்பற்ற இயேசுவின் திரு இருதய அருட்கொடைக்கு நம்மை ஏற்றவர்களாகச் செய்யும். புதுநன்மை வாங்கின அந்த பாக்கியமான நாளிலே நமது திருமுழுக்கு வார்த்தைப்பாட்டைப் புதுப்பித்து உறுதிப்படுத்தினோம். உலகம் பசாசை விட்டுவிட்டோமென்று யாவரும் அறிய வார்த்தைப்பாடு கொடுத்தோம். கிறிஸ்தவர்களெல்லோரும் இந்த வார்த்தைப்பாட்டின்படி உலகத்தைத் துறந்து, துறவற அந்தஸ்தில் பிரவேசிக்கவேண்டுமென்று நாம் சொல்லவில்லை. ஆனால் சகலரும் உலகம் படிப்பிக்கிற தப்பான போதகங்களையும் தீய அலுவல்களையும் விலக்கி, தங்கள் ஆசாபாசங்களை ஜெயித்து தங்களுடையவும், தங்கள் குடும்பத்தாருடையவும் ஆத்தும் மீட்பைத் தேடி, கிறிஸ்தவனுக்குரிய கடமைகளையெல்லாம் நிறைவேற்றி, திவ்விய மாதிரிகையாகிய இயேசுக்கிறிஸ்துவின் வாழ்வையும், புண்ணியங்களையும் தங்களிடத்தில் பிறப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கடமையை நிறைவேற்ற புனிதர்கள் கையாண்ட வழிகளை நாமும் பின்பற்றினாலொழிய மற்றப்படி நம்மால் இயலாது. அந்த வழிகள் எவை?

முதலாவது செபம் :- ஜெபத்தால் ஆகாத காரியம் ஒன்றுமேயில்லை. ஜெபமானது நமது ஆத்துமத்தை மேலே எழுப்பி சகல கொடைகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாகிய இயேசுவின் திரு இருதயத்தோடு நம்மை ஐக்கியப்படுத்துகிறது. இந்த புனித நீரால் நாம் தேறுதலடைந்து, இறைப்பணியில் உத்தமர்களாய் தாராள குணத்தோடு நடந்து, சாத்தானுடைய தந்திர சோதனைகளையெல்லாம் வென்று ஜெபங்கொள்வோம். சோதனை வேளையில் நமது ஆத்துமத்தை இயேசுவின் திருஇருதயத்தின் பக்கமாய் எழுப்பி அப்போஸ்தலரோடு சீடர்கள் அவரிடம் வந்து, ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகி றோம் என்று சொல்லி அவரை எழுப்பினார்கள் (மத்தேயு 8:25 என்றும் அல்லது ஒலோபெர்னஸ் என்பவனுடைய தலையை வெட்டுமுன் யூதித் என்பவன்: அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும்" யூதித்து13:7 என்று கேட்டதுபோல் நாமும் கேட்போமாக.

இரண்டாவது :- அடிக்கடி தேவநற்கருணை உட்கொள்ளுதல். உணவானது எப்படி உடலின் உயிரைக் காப்பாற்றுகின்றது. கடைசி யுத்தத்தில் ஆத்துமத்திற்குத் திடன் உண்டாகும் படியாய்ச் சாகப்போகிற கிறிஸ்தவர்களுக்கு தேவநற்கருணை கொடுக்கத் திருச்சபையானது படிப்பிக்கிறது. திருச்சபையின் துவக்கத்தில் கிறிஸ்தவர்கள் நாள்தோறும் தேவநற்கருணை வாங்குவது வழக்கம். அதனால் ஞான சுறுசுறுப்பும், உத்தமதனமுமுள்ள வாழ்வு வாழ்ந்தார்கள்.

வேத கலாபனை காலத்தில் வேதசாட்சிகள் அடைபட்டிருந்த சிறைக்கூடத்திற்கு ரகசியமாய்த் தேவநற்கருணை கொண்டுபோய்க் கொடுக்கப்படும். புனிதர்கள் இயேசுகிறிஸ்துவின் திரு உடலாலும் இரத்தத்தாலும் உறுதியடைந்து, தங்கள் உறவினர்களுடைய கண்ணீரையும், கொடுங்கோலருடைய கொடுமையையும் கவனியாமல் புனிதர்கள் முடி பெறும் இடத்துக்கு மகிழ்ச்சியாக சென்றனர். இக்காலத்திலே குருக்களும், வேத போதகர்களும், அருட்சகோதரிகளும் தங்கள் சுயநாட்டையும், உறவினர்களையும் விட்டு அயல் நாட்டுக்குப்போய் ஆத்தும் மீட்புக்காக உழைக்கிறதைக் காண்கிறோம். இன்னும் கிறிஸ்தவர்களுக்குள்ளே ஞான சுறுசுறுப்பும், ஆத்தும் மீட்பில் ஆவலுமுள்ள பலர் தங்கள் சகோதரர்களுடைய ஆத்தும் மீட்புக்காக புண்ணியப் பயிற்சியிலும் வாழ்நாளை நற்செயல்களிலும் செலவழிக்கிறார்கள். மனிதர்களும் வானதூதர்களும் ஆச்சரியப்படத்தக்க விதமாய் இவ்வளவு ஞானத் தைரியத்தைக் காண்பிக்கிறதற்குக் காரணம், தங்கள் ஆத்துமத்தில் அவர்கள் உட்கொள்ளும் தேவநற்கருணையிலுள்ள இயேசுவின் திரு இருதயந்தான். ''இயேசுக்கிறிஸ்துவை ஆத்துமங்களில் விதை, வெற்றியை அறுப்பாய்'' என்ற ஒரு மேதகு ஆயருடைய வாக்கியம் இதற்கு சரியாய் ஒத்திருக்கும்.

ஆதலால் சுறுசுறுப்பும் ஞான ஆவலுமுள்ள கிறிஸ்துவர்களாய் நடக்க ஆசையிருந்தால் தக்க ஆயத்தத்தோடும் பக்தியோடும் அடிக்கடி தேவநற்கருணை உட்கொள்ளுங்கள். ஆதலால் சகல மனிதர்களும், தாய் தகப்பன், சகோதரன் சகோதரிகள், ஆண் பெண் அனைவரும் கிறிஸ்தவர்களுடைய திடனுக்கும் தேவ அன்புக்கும் ஊற்றாகிய தேவநற்கருணையை அடிக்கடி அண்டிப் போகவேண்டும்.

வரலாறு.

இயேசுசபைக் குருவானவராகிய லெலூ என்பவர் இயேசுவின் திரு இருதயத்தின் பேரில் வெகு பக்தியுள்ளவராயிருந்தார். முதிர்ந்த வயதினாலும், நோயின் கஷ்டத்தாலும் தளர்ந்துபோனதால் கையில் கோலூன்றி நடப்பார். ஒருநாள் தம்முன்னால் நடந்து சென்ற ஓர் வாலிப துறவியை நோக்கி : சகோதரரே, இந்தக் கோலைப்பாரும், நான் நடக்க இது உதவி செய்கிறது. நாம் மோட்சத்துக்குப்போக நமக்கு உதவிசெய்ய ஓர் கோல் அவசியம். இயேசுவின் திருஇருதயமே அந்தக்கோல். அத்திரு இருதயத்தின் மேல் சாய்ந்து அதோடு ஒன்றித்திருப்போமாக. அதன் அருட்கொடையின் உதவியால் நம்முடைய ஆத்துமத்தையும், நமது சகோதரர்களின் ஆத்துமங்களையும் மீட்போமென்பது நிச்சயம்.

ஆர்ஸ் பட்டணத்து பரிசுத்த குருவாகிய புனித வியான்னி (என்னும் கூரேதார்ஸ் என்பவர் இயேசுவே! எவ்வளவு அன்பு நிறைந்த இருதயத்தை நீர் எங்களுக்குக் காட்டுகிறீர்; சகலரும் இந்தத் திரு இருதயத்தில் உட்சென்று என்றென்றைக்கும் அங்கே வாழ்வோமாக என்று மிக உருக்கமான அன்போடு சொல்வது வழக்கம். இவ்வுலகத்தில் இயேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்யாமல் வேறெதை அன்பு செய்வோம்? இவ்வளவு நன்மையும் அன்புக் குரியதுமான திரு இருதயத்தை அன்பு செய்யாமல் இருப்பது எப்படி?

சிந்தனை.

நாம் நிர்ப்பாக்கியத்தின் பாதாளத்தில் இருப்பதாக அறிந்தால் இரக்கத்தால் வழிந்தோடுகிற ஆராதனைக்குரிய இருதயத்தினிடமாய் ஆறுதலைத் தேடுவோமாக. பயத்தின் பாதாளத்தில் நாம் இருப்பதைக் கண்டால் நம்பிக்கையோடு திருஇருதயத்தை அண்டிப் போவோமாக. அங்கே பயமானது அன்பினால் வெல்லப்படும். யாதொன்றும் உன்னைக் கலங்கச் செய்யாதிருக்கட்டும். உன் குற்றங்களைப் பற்றி முதலாய் நீ உன் மன அமைதியை இழந்து போகக் கூடாது. உன் குற்றங்களின் நிமித்தம் உன்னைத் தாழ்த்திக்கொள். அமைதியோடு அக்குற்றங்களைத் திருத்திக்கொள். அவதைரியப்படாதே. சிலுவையை அநுபவிக்க இவ்வுலக வாழ்வும், மகிழ்ச்சியும் அநுபவிக்க மறு உலக வாழ்வும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

செபம்.

இயேசுவின் இனிய திருஇருதயமே! நான் உம்மை அதிகமதிகமாய் அன்பு செய்ய செய்தருளும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.