தேவமாதாவின் வணக்கமாதம் - மே 17

திருக்குடும்பமாகிய சேசுநாதர், தேவமாதா, சூசையப்பர் இந்த உலகத்தில் சஞ்சரித்ததின் பேரில்!

திருக்குடும்பத்தில் தரித்திரத்தின் நேசம்!

திருக்குடும்பமாகிய சேசுநாதரும், தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் உலக சம்பத்துக்களை விரும்பாமல், சர்வேசுரனை மாத்திரமே விரும்பித் தரித்திரத்தையும், தரித்திரத்துக்கடுத்த இக்கட்டுகளையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. ஆகிலும் உலக செல்வங்களைப் பயன்படுத்தாமல் ஞான நன்மைகளை மட்டும் தேடிச் சகல புண்ணியங்களையும் செய்து கொண்டு வந்ததினால், மற்றக் குடும்பங்களைவிட அத்திருக் குடும்பமானது பேரின்ப பாக்கியமுள்ளதுமாய்ச் சர்வேசுரனுக்கு உகந்ததுமாய்ச் சம்மனசுக்களால் வணங்கப்படுவதற்குப் பாத்திரமானதுமாக இருந்தது. ஆதலால் இந்த உலகில் சர்வேசுரனுடைய வரப்பிரசாதமும், புண்ணியமும், சம்பத்து முதலான உலக நன்மைகளால் மெய்யான பாக்கியம் வரமாட்டாதென்று அறியக்கடவீர்களாக.

உலக மகிமையின் வெறுப்பு!

பிறந்த நாள் முதற்கொண்டு சேசுநாதர் அற்புதங்களைச் செய்யும் வல்லபமுள்ளவராய் இருந்த போதிலும், அற்புதங்களைச் செய்யத் தாம் குறித்த காலம் இன்னும் வராததினால், நமக்குத் தாழ்ச்சியென்னும் புண்ணியத்தைக் காண்பிக்கிறதற்காகத் தமது வல்லமையை மறைத்துக்கொண்டு, உலக கீர்த்தியை வெறுத்து, வெளிச் செல்லாமல் மனிதர்களுக்கு அறியாதவர் போல் இருந்தார். திவ்விய சேசு தமது திருமாதாவுடன் வளர்ப்புத் தந்தையாகிய அர்ச். சூசையப்பருடனும் தங்கியிருந்து முப்பது வயது வரையில் அவர்கள் சொற்கேட்டு அவர்களுக்கு உதவியாக அவர்களோடுகூட வேலை செய்து, அவர்கள் வருத்தப்படும் சமயத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, பணிவான குணமுள்ள மகன் தன்னைப் பெற்ற தாய் தந்தையர்க்கு கீழ்ப்படிவதுபோல் இருவருக்கும் கீழ்ப்படிந்து வந்தார். கன்னிமாமரியும் அர்ச். சூசையப்பருமோவென்றால், மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான சேசுநாதர் தங்களுக்கு மிகுந்த தாழ்ச்சியோடு கீழ்ப்படிவதைக்கண்டு எவ்வளவு அதிசயப்பட்டார்களென்று எடுத்துரைக்க முடியாது. சகல உலகங்களுக்கும் ஆண்டவரான சேசுநாதர் தம்மால் உண்டாக்கப்பட்ட இரண்டு சிருஷ்டிகளின் சொற்கேட்டு அதிசயத்துக்குரிய தாழ்ச்சியோடு கீழ்ப்படிந்தாரென்று நினைத்து நீங்களும் அவருக்குப் பதிலாகச் சர்வேசுரனால் வைக்கப்பட்ட பெரியோர்களுக்குக் கீழ்ப்படியக்கடவீர்களாக.

பிறர் சிநேகம் ஆகிய இம் மூன்று புண்ணிய மாதிரிகையும் காணப்பட்டது.

சேசுநாதர், கன்னிமரியாள், அரச்.சூசையப்பர் இம்மூவரும் இருந்த வீட்டில் சமாதானமும், பக்தியும், சிநேகமும் எந்த அளவில் சிறந்திருந்ததென்று யாரால் சொல்லக்கூடும்? அதில் முப்பது ஆண்டளவாக நடந்த புதுமைக்கடுத்த சம்பவங்களை சுலபமாக வெளிப்படுத்த முடியாது. இந்தத் திருக்குடும்பத்தில் சண்டை கோபம் மனஸ்தாபம் முதலான துர்க்குணங்களாவது மரியாதைக் குறைச்சல், ஆசாரக்க குறைச்சல், சிநேகம் பக்தி அன்பு குறைச்சலாவது காணப்பட்டதில்லை. மூவரும் எப்போதும் மலர்ந்த முகத்தோடும், அன்போடும் சந்தோஷத்தோடும் பேசிப் புழங்கி வந்தபடியால் அடுத்த வீட்டுக்காரர் இத்திருக்குடும்பத்தின் வீட்டில் பரலோகத்துக்குச் சரியான பாக்கியம் விளங்குகிறதை அறிந்து, தாங்கள் மனக்கிலேசப்படும் வேளையில் அத்திருக் குடும்பத்தினிடத்தில் வந்து சேரும், அர்ச். சூசையப்பர் கன்னிமாமரியாயைக் கண்டு அவர்களிடம் மகிழ்ச்சியையும் மன ஆறுதலையும் அடைந்தார்கள்.

நீங்கள் கிறிஸ்தவர்களானதால் திருக்குடும்பத்தில் நடந்தது போலவே, சண்டை கோபம் வர்மம் முதலான துர்க்குணங்களை அடக்கித் தகாத வார்த்தைகளை விலக்கி, உங்கள் பொறுமையினால் சமாதானம், பிறர் சிநேகம், ஞானசந்தோஷம் இவை முதலான புண்ணியங்களை விளைவிக்கும்படிக்குப் பிரயாசைப்படக்கடவீர்கள்.

செபம்

என் இரட்சகருடைய தாயாரே! உமது திருக்குமாரனாகிய சேசுநாதரைப் பார்க்கும்பொழுதெல்லாம் நீர் அடைந்த சந்தோஷத்தைக் குறித்து நான் இந்த உலகில் நல்ல ஒழுக்கத்துடன் நடக்கும்படிக்கு எனக்கு உதவிசெய்தருளும். பகை, கோபம் முதலான துர்க்குணங்களை என் ஆத்துமத்தில் நுழையவிடாமலும் எவ்விடத்திலும் எக்காலத்திலும் எவருக்காகிலும் மனஸ்தாபம் வருவியாமலும், எல்லாரோடும் சமாதானமாயிருந்து, நான் கஸ்திப்படும் வேளையில் அதைப் பொறுமையோடு அனுபவித்துச் சமாதானமுள்ளவர்களுக்குச் சர்வேசுரனால் கொடுக்கப்படுகிற சம்பாவனை எனக்கும் கிடைக்கும்படிக்கு மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

உம்மிடத்தில் பிறந்து எங்களை மீட்க வந்த சேசுநாதர் வழியாக எங்களுடைய வேண்டுதலை ஏற்றுக்கொள்ள அருள் புரிவாராக.

பதினேழாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

தங்களுடைய உறவின் முறையாரில் யாரேனும் கிறிஸ்துவை அறிந்து மனந்திரும்ப வேண்டிய வழிகளை ஆராய்கிறது.

புதுமை!

ஓர் கள்ளன் கொள்ளையிடுவதற்காக காட்டில் திரியும்பொழுது ஓர் பெண்ணைக் கண்டான். அவளைப் பிடித்து அவளிடத்திலிருந்த பொருளை பிடுங்கப் போகும் பொழுது அந்தப் பெண் அவனை நோக்கி, நீ எனக்கு ஒரு தீமையும் செய்யாதபடிக்கு தேவமாதாவைப் பார்த்து மன்றாடுகிறேன் என்றாள். அதற்கு அவன், நீ தேவமாதாவின் பேர் சொல்லி என்னை மன்றாடினதினால் நான் உனக்கு ஒரு தீமையும் செய்யமாட்டேனென்று சொன்னதும் தவிர, அவளோடு துணையாக போய் வழிகாட்டிக் கொடுத்துக் காட்டுக்கு அப்பால் சரியான இடத்தில் கூட்டிக்கொண்டு போய்விட்டான். அந்த இராத்திரியில் அவன் நித்திரை செய்யும் பொழுது தேவமாதா அவனுக்குத் தோன்றி, நீ நம்மைக் குறித்து அந்தப் பெண்ணுக்குச் செய்த உபகாரத்துக்கு நாம் தகுந்த சமயத்தில் உனக்கு உபகாரம் செய்வோம் என்றாள். ஆனால் அந்தக் கள்ளன் தேவமாதா தனக்கு இப்படிச் சொல்லியிருந்தாலும், தான் செய்கிற களவு தொழிலை விடாமல் பன்முறை கொள்ளையிட்ட பிறகு, சேவகர் கையில் அகப்பட்டான்.

தீர்ப்பிடப்பட்டு அவனைத் தூக்கிலிடுவதற்கு முந்தின இரவில் தேவமாதா அவனுடைய நித்திரையில் திரும்பக் காண்பித்து நீ நம்மை அறிந்திருக்கிறாயோவென்று கேட்டதற்கு அவன் ஆமாம், நான் முன்னே உம்மைக் கண்டேனென்று நினைக்கிறேன் என்றான். அப்போது தேவமாதா அவனுக்குச் சொன்னதாவது: நாம் உபகாரம் செய்வோமென்று சொன்னோமே, அதை, இப்போது அறிவாய். நாளைக்கு நீ மரிப்பாயானால் நீ செய்த பாவத்தின் பேரில் நாம் எனக்கு அடைந்து கொடுக்கப்போகிற உத்தம மனஸ்தாப மிகுதியினால் நீ மரித்தவுடன் மோட்சமடைவாய் என்றாள் அன்னை. அந்தக் கள்ளன் விழித்து தான் செய்த பாவத்தை நினைத்து வெகுவாய் அழுத பிறகு, ஒரு குருவானவரிடத்தில், தேவமாதா தனக்கு காண்பித்த காட்சியைச் சொல்லி, அதை வெளிப்படுத்தும் படிக்கு கேட்டதுமன்றிப் பாவசங்கீர்த்தனம் பண்ணினான். அவன் தூக்கில் போடப்பட்டவுடன் மிக்க மகிழ்ச்சியோடும் மலர்ந்த முகத்தோடும் மரித்தான். இதைக்கண்ட அனைவரும் பாவ மன்னிப்பு பெற்று மோட்சத்தை அடைந்தார்கள் என்று அறிந்துகொண்டார்கள்.

மீளவும் ஒரு கள்ளன் மலையில் திரியும் பொழுது ஒரு குருவானவரைக் கண்டான். அவருக்கு எதிராக வந்தபோது, குருவானவர் அவனை நோக்கி, இந்தக் கெட்ட வேலையைச் செய்யாதே. இந்த துர்வழியில் நடந்தால் நரகத்தில் விழுவாய் என்றார். அதற்கு கள்ளன், நரகத்தில் விழுவேன் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அந்த வேலை எனக்குப் பழகிப் போய்விட்டபடியால் அதை விட்டுவிட என்னால் கூடாதென்றான். மீண்டும் குருவானவர் அவனைப் பார்த்து நீர் தேவமாதாவைக் குறித்து சனிக்கிழமை தோறும் ஒருசந்தி பிடித்து அன்றைய தினம் ஒரு தீமைப்பும் செய்யாது போனால், தேவமாதாவின் இரக்கத்தால் உன் துர்வழக்கத்தை வென்று நரகத்துக்குப் போவதினின்றும் தப்புவாய் என்றார். குருவானவர் சொன்னபடியே செய்வேன் என்று கள்ளன் பிரதிக்கினை செய்து, வழக்கத்தை முற்றிலும் விட்டு நல்ல கிறிஸ்தவனாக மாறினான், என்றாலும் பழைய குற்றங்களுக்காக சேவகர் கையில் அகப்பட்டான்.

அவன் தீர்வையிடப்பட்டு சிறையில் இருக்கும் பொழுது அவன் அதிக வயதுள்ளவனாயிருந்தபடியால் அவனைத் தூக்கிலிடக்கூடாதென்று சனங்கள் சொல்லுகையில், அவன் தான் செய்த பாவங்களையெல்லாம் எல்லாருக்கு முன்பாக வெளிப்படுத்தி வெகு உத்தம மனஸ்தாபத்துடனே அறியாமல் செய்தேன் என்று சொல்லி அவைகளுக்குத் தக்க மரண ஆக்கினை இடவேண்டுமென மன்றாடினான். ஆகையால் அவனைத் தூக்கிலிட்டு அவனுடைய பிரேதத்தைக் குழியில் புதைத்த பிறகு அந்த இடத்தில் சில புதுமைகள் நடந்ததினால் தேவமாதாவின் இரக்கத்தினால் அவன் மோட்சம் அடைந்தானென்று நம்பி சனிக்கிழமைதோறும் ஒருசந்தி பிடித்து வந்தார்கள்.

இதிலிருந்து நீங்கள் தேவதாயைக் குறித்துச் செய்யும் செபம், அனுசரித்த தபம் ஒருக்காலும் வீண்போகாதென்று அறியக்கடவீர்களாக.