அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 15

மிருகத்தையும், அதன் உருவத்தையும், அதன் முத்திரையையும் வென்று ஜெயங்கொண்டவர்கள் சர்வேசுரனை ஸ்துதிப்பதும், தேவகோபத்தால் நிறைந்த ஏழு கலசங்கள் ஏழு தூதர்களுக்குக் கொடுக்கப்படுவதும் வருமாறு.

1. பின்பு வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளத்தைக் கண்டேன். அதாவது: ஏழு தூதர்கள் கடைசியான ஏழு வாதைகளை வைத்திருந்தார்கள். அவைகளிலே சர்வேசுரனுடைய கோபம் நிறைவு பெற்றது.

2. அல்லாமலும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்தையும், அதன் உருவத்தையும், அதன் நாமத்தின் இலக்கத்தையும் ஜெயித்தவர்கள் சர்வேசுரனுடைய சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடல்மேல் நிற்கிறதையும் கண்டேன்.

3. அவர்கள் சர்வேசுரனுடைய ஊழியனாகிய மோயீசன் பாடின பாட்டையும், செம்மறிப்புருவையானவருடைய பாட்டையும் பாடி: சர்வ வல்லப தேவனாகிய கர்த்தாவே, உமது கிரியை கள் மகத்துவமும், அதிசயமுமானவை கள். சதாகாலங்களின் இராஜனே, தேவரீருடைய வழிகள் நீதியும் உண்மை யுமானவைகள். (யாத். 15:1.)

4. கர்த்தாவே, உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப் படுத்தாமலும் இருப்பவன் யார்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர்; சகல ஜனங்களும் உமது சமுகத்தில் வந்து, உம்மை நமஸ்கரிப்பார்கள். ஏனெனில் உமது நீதித்தீர்ப்புகள் வெட்டவெளியாயின என்றார்கள். (எரே. 10:7.)

5. அதற்குப்பின் நான் கண்டதாவது: இதோ, வானத்தில் சாட்சியக் கூடார மாகிய ஆலயம் திறக்கப்பட்டது.

6. அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் புறப்பட்டார்கள். அவர்கள் தூய்மையான வஸ்திரம் அணிந்து, மார்பினருகே பொற்கச்சையைக் கட்டியிருந்தார்கள்.

7. அப்போது நான்கு ஜீவஜெந்துக் களில் ஒன்று சதாகால ஜீவியராகிய சர்வேசுரனுடைய கோபாக்கினையால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்கும் கொடுத்தது.

8. சர்வேசுரனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது. ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் தேவா லயத்திற்குள் ஒருவரும் பிரவேசிக்கக் கூடாதிருந்தது. (யாத். 40:32, 33.)