அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 14

இஸ்ராயேலர் முத்திரையிடப்பட்டுச் செம்மறிப்புருவையானவரோடு நிற்பதும், சுவிசேஷம் எங்கும் பிரசங்கிக்கப்படுவதும், பபிலோன் அழிவும், உலக சங்காரமும் வருமாறு.

1. இன்னும் நான் கண்டதேதெனில்: இதோ, சீயோன் மலையின்மேல் செம்மறிப்புருவையானவர் நின்றார். அவரோடேகூட தங்கள் நெற்றிகளில் அவருடைய நாமமும் அவருடைய பிதாவின் நாமமும் எழுதப்பட்டிருந்த லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரும் நின்றார்கள்.

2. அப்போது பெரும் வெள்ளத்தின் இரைச்சலையும் பலத்த இடிமுழக்கத்தையும்போன்ற ஓர் சத்தம் வானத்தி லிருந்து சப்திக்கக் கேட்டேன். நான் கேட்ட அந்தச் சத்தம் சுரமண்டலக் காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.

* 2. வெள்ளத்தின் இரைச்சல் இடிமுழக்கத்துக்கு ஒப்பிட்டிருப்பது அதன் வலிமையைக் காட்டவும், சுரமண்டலத்துக்கு ஒப்பிட்டிருப்பது அதன் இனிமையைக் காட்டவுமாமே.

3. அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும் நான்கு ஜீவஜெந்துக்களுக்கும் வயோதிகர்களுக்கும் முன்பாகவும் ஓர் புதுப் பாட்டைப் பாடிக்கொண்டிருந் தார்கள். அந்தப் பாட்டைப் பூமியிலி ருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் தவிர வேறெவனும் பாடக்கூடாமலிருந்தது.

4. ஸ்திரீகளோடு தங்களை அசுத்தப்படுத்தாதவர்கள் இவர்களே; ஏனெ னில் இவர்கள் கன்னியர்கள். செம்மறிப் புருவையானவர் போகும் இடங்கள் தோறும் அவரைப் பின்செல்லுகிறவர்கள் இவர்களே. இவர்கள் சர்வேசுரனுக்கும், செம்மறிப்புருவையானவருக்கும் முதற் பலனாக மனிதர்களிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்.

5. இவர்களுடைய வாயிலே பொய்காணப்பட்டதில்லை: இவர்கள் சர்வேசுரனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசற்றவர்களாயிருக்கிறார்கள்.

6. பின்பு, வேறொரு தூதன் வானத் தின் நடுவே பறக்கக் கண்டேன்: அவர் பூமியின்மேல் குடியிருக்கிற சகல தேசத்தாருக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் போதிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தைக் கையிலே வைத்திருந்தார்.

7. அவர் மகா சத்தமிட்டு: கர்த்த ருக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள். ஏனெனில் அவர் தீர்வையிடும் நேரம் வந்தது. பரலோகத்தை யும், பூலோகத்தையும், நீரூற்றுகளை யும் உண்டாக்கினவரை நமஸ்கரி யுங்கள் என்றார். (சங். 145:6; அப். 14:14.)

8. வேறொரு தூதன் அவருக்குப் பின் வந்து: மகா பபிலோன் விழுந்தது, விழுந்தது. கோபாக்கினைக்கு ஏதுவான தன் வேசித்தனமாகிய மதுவைச் சகல ஜனங்களுக்கும் குடிக்கக் கொடுத்த நகரம் அதுவே என்றார். (இசை. 21:9; எரே. 51:8.)

9. அவர்களுக்குப்பின் மூன்றாம் தூதன் வந்து மகா சத்தமாய்க் கூப்பிட்டு: மிருகத்தையும், அதன் உருவத்தையும் நமஸ்கரித்து, தன் நெற்றியிலாவது, தன் கையிலாவது அதன் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவன் எவனோ,

10. அவன் சர்வேசுரனுடைய கோபாக்கினையின் பாத்திரத்தில் ஒரு கலப்புமின்றி வார்க்கப்பட்ட அவருடைய கோபாக்கினையாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், செம்மறிப்புருவையான வருக்கு முன்பாகவும் அக்கினியிலும், கந்தகத்திலும் உபாதிக்கப்படுவான்.

* 10. கலப்புமின்றி என்பது கடைசிநாளில் ஆண்டவர் பாவிகளுக்குத் தீர்வையிடும்போது எவ்வளவும் இரக்கம் பாராட்டாமல், கோணாத நீதியையே செலுத்துவாரென்பது கருத்து.

11. அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பிக் கொண்டிருக்கும். மிருகத்தையும், அதன் உருவத்தையும் நமஸ்கரிக்கிற வர்களுக்கும், அதன் நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவ னாகிய எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாற்றி இராது.

12. சர்வேசுரனுடைய கற்பனைகளையும், சேசுநாதர்மேலுள்ள விசுவா சத்தையும் காத்துக்கொள்ளுகிற அர்ச் சியசிஷ்டவர்களுடைய பொறுமை இதிலே விளங்குகின்றது என்று கூறினார்.

* 12. நித்திய நரக ஆக்கினைகளை யோசித்து அர்ச்சியசிஷ்டவர்கள் தேவ கற்பனைகளையும் விசுவாசத்தையும் பொறுமையோடு காத்துவருவார்கள்.

13. பின்பு வானத்திலிருந்து ஓர் சத்தமுண்டாகக் கேட்டேன். அது என்னை நோக்கி: ஆண்டவருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று எழுது. ஆம், இதுமுதல் அவர்கள் தங்கள் வேலை முடிந்து இளைப் பாறுவார்கள். ஏனெனில் அவர்க ளுடைய கிரியைகள் அவர்களைப் பின்பற்றும் என்று இஸ்பிரீத்துவானவர் சொல்லுகிறார் என்றது.

14. அன்றியும் இதோ, வெண்மையான மேகத்தையும் அந்த மேகத்தின் மேல் மனுமகனுக்கு ஒப்பான ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன். அவருடைய சிரசில் பொற்கிரீடமும் கையில் கருக்கான அரிவாளும் இருந்தது.

15. அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முற்றிப்போனது, அறுப்பதற்குக் காலமாயிற்று. ஆகையால், உம்முடைய அரிவாளைப் போட்டு அறுத்துவிடும் என்று மகா சத்தத்தோடே கூப்பிட்டுச் சொன்னார். (யோவேல். 3:13; மத். 13:39.)

16. அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் பூமியிலே தமது அரிவாளைப் போடவே, பூமியின் விளைவு அறுப்பாயிற்று.

17. பின்பு பரலோகத்திலுள்ள தேவா லயத்திலிருந்து வேறொரு தூதனும் கருக்கான அரிவாளைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்தார்.

18. அன்றியும் அக்கினியின்மேல் அதி காரமுள்ள வேறொரு தூதன் பலிபீடத்தி லிருந்து புறப்பட்டு, கருக்கான அரி வாளை வைத்திருக்கிறவரை நோக்கி: பூமியின் திராட்சக் தோட்டத்திலுள்ள திராட்சக் கனிகள் பழுத்திருக்கின்றன; உமது கருக்கான அரிவாளை வீசி, அதன் குலைகளை அறுத்துவிடும் என்று உரத்த சத்தமாய்க் கூவினார்.

* 18. திராட்சத் தோட்டம்: - உலகமெங்கும் ஒரு திராட்சத் தோட்டமாகவும், அதிலுள்ள மனிதர் திராட்சச் செடியாகவும் பாவிக்கப்படுகிறார்கள்.

19. அப்படியே அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேல் வீசி, பூமியின் திராட்சைப் பழங்களை அறுத்து, சர்வேசுரனுடைய கோபாக்கினை யென்னும் பெரிய ஆலைத்தொட்டியிலே போட்டார்.

20. பட்டணத்துக்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது. அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாது தூரத்துக்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.

* 20. பட்டணத்துக்குப் புறம்பே என்பது, சர்வேசுரனுடைய இராச்சியத்தினின்று, அதாவது, பரலோகத்தினின்று பாவிகள் தள்ளுண்டு ஆக்கினைப்படும் ஸ்தலமாம். ஒரு ஸ்தாது என்பது 675 ஜாதி அடிகொண்ட தூரம்.