அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 16

வாதைகள் நிறைந்த ஏழு கலசங்களையும் தூதர் பூமியின்மேல் வார்த்ததினால் உண்டாகிய ஆக்கினைகளாவன.

1. அப்போது தேவாலயத்திலிருந்து ஓர் பெருஞ்சத்தம் உண்டாகி அந்த ஏழு தூதர்களையும்நோக்கி: நீங்கள் போய், சர்வேசுரனுடைய கோபாக்கினையா கிய கலசங்களைப் பூமியின்மேல் ஊற் றுங்கள் என்று சொல்லக் கேட்டேன்.

2. அப்பொழுது முதலாம் தூதன் போய்த் தன் கலசத்தைப் பூமியின் மேல் ஊற்றவே, மிருகத்தின் முத்திரையை உடையவர்களிடத்திலும், அதன் உருவத்தை நமஸ்கரித்தவர்களிடத்திலும் மகா பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று. (யாத். 9:9.)

3. இரண்டாம் தூதன் தன் கலசத் தைச் சமுத்திரத்தில் ஊற்றவே, அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று. சமுத்திரத்திலுள்ள உயிர்ப்பிராணிக ளெல்லாம் மடிந்து போயின.

4. மூன்றாம் தூதன் தன் கலசத்தை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றவே, அவைகள் இரத்தமாய் மாறிப்போயின. (யாத். 7:17.)

5. அப்போது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும், இருந்தவருமான பரி சுத்த கர்த்தாவே, தேவரீர் இந்தத் தீர்ப்புச் செய்தீரே, தேவரீர் நீதியுள்ளவர்.

6. அவர்கள் அர்ச்சியசிஷ்டவர்களின் இரத்தத்தையும், தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் சிந்தினதினாலே தேவரீர் அவர்களுக்கு இரத்தத்தைக் குடிக்கக் கொடுத்தீர்; அதற்கு அவர்கள் பாத்திரவான்களா யிருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டேன்.

7. அப்பொழுது வேறொரு தூதன் பலிபீடத்திலிருந்து: ஆம், சர்வ வல்லப தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத் தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமுள்ளவைகள் என்று சொல்லக் கேட்டேன்.

8. நான்காம் தூதன் தன் கலசத்தைச் சூரியன்மேல் ஊற்றவே, உஷ்ணத்தினாலும் அக்கினியினாலும் மனுஷர்களைத் துன்பப்படுத்த அதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது.

9. அப்போது மனிதர்கள் மிகுந்த உஷ்ணத்தால் வெந்து, இந்த வாதைகளின்மேல் வல்லபமுள்ள ஆண்டவருடைய நாமத்தைத் தூஷணித்தார்களேயல்லாமல் அவரை மகிமைப் படுத்தும்படி தவஞ்செய்தவர்களல்ல.

10. ஐந்தாம் தூதன் தன் கலசத்தை மிருகத்தின் சிம்மாசனத்தின் மேல் ஊற்றவே, அதன் இராச்சியம் இருண்டு போயிற்று. மனிதர்கள் வருத்தத்தினால் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு, (யாத். 10:21.)

11. தங்கள் உபாதைகளையும், காயங்களையும்பற்றிப் பரலோக தேவனைத் தூஷணித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளைவிட்டுத் தவஞ்செய்தவர்க ளல்ல.

12. ஆறாம் தூதன் தன் கலசத்தை எப்பிராத்தென்னும் அந்தப் பெரிய நதியில் ஊற்றவே, சூரியன் உதிக்கும் திசையிலுள்ள இராஜாக்களுக்கு வழி ஆயத்தமாக்கப்படும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

13. அப்பொழுது பறவை நாகத்தின் வாயிலும், மிருகத்தின் வாயிலும் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த அரூபிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.

14. அவைகள் அற்புதங்களைச் செய் கிற பேயரூபிகள். அவைகள் பூலோக மெங்குமுள்ள இராஜாக்களிடத்தில் போய், சர்வ வல்லமையுள்ள சர்வே சுரனுடைய மகாநாளிலே நடக்கப் போகிற யுத்தத்திற்கு அவர்களைக் கூட்டிச் சேர்க்கும்படி புறப்பட்டுப் போகின்றன.

15. இதோ, திருடனைப்போல் வருகின்றேன். தன் மானத்தை (மனிதர்) காணும்படி நிர்வாணமாய் நடவாமல் விழிப்பாயிருந்து, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். (மத். 24:43; காட்சி. 3:3; லூக். 12:39.)

16. அப்பொழுது எபிரேய பாஷையில் அர்மகேதோன் என்னப்பட்ட இடத்தில் அவர்களைக் கூட்டிச் சேர்ப்பான்.

* 16. அர்மகேதோன் என்பது மனாஸ்ஸே கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு ஊரிலுள்ள மாகிதோன் என்னும் மலையின் பெயராம். அந்த ஸ்தலத்திலே இஸ்ராயேலர் கனானையரென்னும் சத்துருக்களோடு போராடி இருமுறை கனத்த தோல்வியை அடைந்ததினால், அந்த ஸ்தலம் தோல்விக்கும் சங்காரநாசத்துக்கும் அடையாளமாம்.

17. பின்பு ஏழாம் தூதன் தன் கல சத்தை ஆகாயத்தில் ஊற்றவே, தேவா லயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தமுண்டாகி: முடிந்து போயிற்று என்றது.

18. உடனே மின்னல்களும் குமுறல் களும், இடிகளும் உண்டாகிப் பூமி மிகவும் அதிர்ந்தது. பூமியின் மேல் மனுஷன் உண்டான நாள் முதற் கொண்டு அப்படிப்பட்ட பூமியதிர்ச்சி ஒருபோதும் உண்டானதில்லை; அது அம்மாத்திரம் பெரிதாயிருந்தது.

19. அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காக்கப்பட்டது; புறஜாதியாருடைய பட்டணங்களும் தகர்ந்து விழுந்தன. மகா பபிலோனுக்குச் சர்வேசுரனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும் படி அது அவருக்கு ஞாபகத்தில் வந்தது.

20. தீவுகளெல்லாம் பறந்து போயின; பர்வதங்களும் காணப்படவில்லை.

21. அன்றியும் தாலெந்து நிறையுள்ள பெருங் கல்மழை வானத்திலிருந்து மனிதர்கள்மேல் விழுந்தது. அந்தக் கல்மழையினால் உண்டான வாதை மகா கொடிதானதினாலே அதனிமித்தம் மனிதர்கள் சர்வேசுரனைத் தூஷணித்தார்கள்.