தேவமாதாவின் வணக்கமாதம் - மே 12

தேவமாதா எலிசபெத்தம்மாளைச் சந்தித்தபோது இயேசுக்கிறிஸ்துநாதரால் செய்யப்பட்ட அற்புதங்களின் பேரில்!

தமது திருத்தாயைக் குறித்து செய்யப்பட்டவைகள்.

உலக மீட்பர் தமது நேச அன்னையின் வழியாக சென்மப்பாவத்தின் அடிமைத்தனத்தினின்றும் அர்ச். அருளப்பரை மீட்டு அவரைச் சுகிர்த அற்புதங்களாலும் நன்மைகளாலும் நிரப்பினார். இப்படியே தம்முடைய திருத்தாயைக் கொண்டு, தாம் இவ்வுலகிற்கு கொடுக்கப்போகிற மீட்பினுடைய முந்தின பலனை அளிக்க திருவுளங் கொண்டார். அந்தப் பரமநாயகி மனிதர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்குத் தம்முடைய மன்றாட்டினால் தேவ வரப்பிரசாதங்களைப் பங்கிடும் வேலையை ஆரம்பித்தார்கள். சேசுக்கிறிஸ்துநாதர் தமது திருத்தாயாரை பாவிகளுக்கு அடைக்கலமும், புண்ணியவான்களுக்கு தாபரமும், எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தஞ்சமும் தேவ நன்மைகளெல்லாம் வருவிக்கிறவளுமாக நமக்கு பிரசித்தமாய்க் காண்பிக்கிறார். இத்தகைய கிருபாகரியின் மேல் உறுதியான நம்பிக்கை வைக்காமல் இருக்கக்கூடுமோ?

அர்ச். ஸ்நாபக அருளப்பரைக் குறித்து நிகழ்ந்தவைகள்.

உலக மீட்பர் அர்ச்.ஸ்நாபக அருளப்பரிடம் சென்மப் பாவத்தின் தோஷத்தை நீக்கி, அவருக்கு விசேஷமான வரங்களை அளித்து அவருடைய மனதில் பரிசுத்த ஆவியின் ஒளியை உதிக்கும்படி செய்து, அவருடைய இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை எரியப்பண்ணி, அவருடைய ஆத்துமத்தை மனோவாக்குக் கெட்டாத சந்தோஷத்தினால் பூர்ப்பித்தார். அப்போது அந்த புனிதர் தம்முடைய தாயாரின் உதரத்திலிருந்து தேவமாதாவினுடைய சத்தத்தைக் கேட்டுச் சர்வேசுரனை அறிந்து, வணங்கி அவர் அண்டையில் சந்தோஷமாகக் குதித்தார். நாமும் தக்க ஆயத்தத்தோடு திவ்விய நற்கருணையை வாங்கி, பரிசுத்தாவியாகிய சர்வேசுரனுடைய ஏவுதலுக்கு இணங்கி நடப்போமானால் ஆண்டவர் நம்மை வரப்பிரசாதங்களால் நிரப்பி, நம்மிடத்தில் திவ்விய ஒளியையும் தேவ சிநேக அக்கினியையும் இருக்கச் செய்து, எவ்வித புண்ணியங்களையும் செய்வதற்குத் துணிவும் தைரியமும் அளிப்பார். நாம் திவ்விய நற்கருணையை வாங்கின பின்பு இந்தச் சுகிர்த உணர்ச்சிகளை அடையாமல், புண்ணியத்தைச் செய்ய சுறுசுறுப்பில்லாதவர்களாய் இருப்போமானால், இது நம்முடைய தவறு என்றெண்ணி நாம் திவ்விய நற்கருணையைத்தக்க ஆயத்தத்தோடு வாங்கும்படியாக தேவமாதாவின் அனுக்கிரகத்தை மன்றாடக்கடவோம்.

அர்ச். அருளப்பருடைய தாய் தந்தைக்கு நிகழ்ந்தனைகள்.

சேசுக்கிறிஸ்துநாதர் மகாத்துமாக்களான அர்ச். சக்கரியாசுக்கும் அர்ச். எலிசபெத்தம்மாளுக்கும் அளித்த நன்மைகளை சிந்தித்துப் பார்க்ககடவோம். அந்தப் பரம இரட்சகர் அவர்களைச் சந்தித்து அவர்களுடைய வீட்டில் வாசம் செய்ய சித்தமாகித் தமது நேச அன்னை காட்டின மனத்தாழ்ச்சியையும் மனக்கீழ்ப்படிதலையும் தேவ பக்தியையும் பிறர் சிநேகத்தின் சுகிர்த மாதிரிகைகளையும் அவர்கள் கண்களுக்கு முன்பாக வைக்கத் திருவுளங்கொண்டார். சேசுக் கிறிஸ்துநாதருடைய திருத்தாயாருடன் வாசம் செய்கிற குடும்பங்களும் சபைகளும் மிகுந்த பாக்கியமுள்ளவைகளே, அவர்களோடுகூட எல்லா வித நன்மைகளும் வருமென்பது சாத்தியமே. அவர்களுக்கு சேசுக்கிறிஸ்துநாதர் தேவகிருபை தந்து ஞான சந்தோஷத்தைப் பொழிந்து சுகிர்த குணத்தை வருவித்து ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் கொடுக்கிறார். நீங்கள் பாவத்தினால் சேசுகிறிஸ்துநாதரையும் அவரது அன்னையையும் உங்களிடமிருந்து அகற்றாமல், உங்களுடைய ஞான சுறுசுறுப்பினாலும், மாறாத புண்ணிய சாங்கோபாங்க நடத்தையினாலும், வற்றாத தேவ பக்தியினாலும், உங்களுடைய இதயத்தில் அவர்களுக்கு இருப்பிடத்தை அமைத்துக் கொடுங்கள்.

செபம்.

எனது திவ்விய தாயே! எனது நல்ல உபகாரியே ஆண்டவருடைய அன்னையாக இருக்க பாத்திரமானவர்களே, நான் அநேக கனமான பாவங்களைக் கட்டிக் கொண்டதால் உமது அருகில் வர அற்பமும் பேறு பெற்றவன்(ள)ல்ல, ஆகிலும் நீர் என்னைப் புறக்கணித்துத் தள்ளினாலும், நான் உமது கிருபையை உறுதியாக நம்பி உம்மிடத்தில் அபயமிட்டு ஒரு நாளாகிலும் உம்மை மன்றாடாமல் போகிறதில்லை. நீர் கரை காணாத தயை சமுத்திரமாய் இருக்க நான் உம்மிடத்தில் தேவசகாயத்தை அடையாதிருந்தால் யாருடைய அடைக்கலத்தில் ஓடுவேன்? அன்புள்ள தாயே! சர்வேசுரன் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கைக்குப்பிறகு எல்லா நம்பிக்கையையும் உம்மிடத்தில் வைக்கிறேன். உம்முடைய ஆதரவை மன்றாடி உம்முடைய அடைக்கலத்தில் சேருவேனாகில் பேரின்ப இராச்சியத்தில் உம்முடைய உதவியைக் கொண்டு மீட்புப் பெற்று மோட்சவாசிகளுடன் நான் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

எங்களுடைய ஆண்டவளே, எங்களுடைய உபகாரியே, எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனிடத்தில் வேண்டிக்கொள்ளும்.

பனிரெண்டாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

பரிசுத்த கன்னிகையான தேவமாதாவின் பேரில் சொல்லப்படுகிற தூஷணங்களுக்குப் பரிகாரமாக செபங்கள் சொல்லுகிறது.

புதுமை!

1604-ஆம் ஆண்டில் ஒரு பெரிய பட்டணத்தில் இரண்டு வாலிபர்கள் சாஸ்திரங்களை படித்துக்கொண்டிருந்தனர். ஆனால் தங்களிடமுள்ள துர்க்குணத்தினால் அதிகமாய்ப் படியாமல் கெட்ட வழியில் நடந்து அநேக பாவங்களைக் கட்டிக்கொண்டார்கள். இருவரும் ஓர் இரவில் ஒன்றாகச் சாப்பிட்டபின் ரிக்கார்துஸ் என்னும் அவர்களில் ஒருவன் தன் தோழனை விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தான். படுக்கப்போகும் நேரத்தில் தான் வழக்கமாய்த் தேவமாதாவைக் குறித்துச் சொல்லுகிற அருள்நிறை செபத்தை செபிக்க மறந்துபோனதை நினைத்து அதிக களைப்பாய் இருந்தாலும் உடனே முழங்காலில் இருந்து எப்பொழுதும் சொல்வது போல சொல்லி நித்திரைக்குச் சென்றான். நித்திரை செய்யும்பொழுது நடுநிசியில் கதவைப் பலமாகத் தட்டும் சப்தம் கேட்டு உடனே விழித்து கதவு தானாக திறப்பதையும், அவலட்சண முகத்தோடும் பயங்கரமான ரூபத்தோடும் தன் கெட்ட தோழன் உள்ளே வருகிறதைக் கண்டான். அதைக்கண்டு அவன் பயப்படும் பொழுது, இந்தப் பூதம் அவனை நோக்கி ரிக்கார்துஸ் என்னை அறிவாயோ? என்றது. அதற்கு ரிக்கார்துஸ் நீயா? ஆனால் எவ்வளவு மாறிப்போய்ப் பசாசைப்போல் இருக்கிறாய்? என்றான். அதற்குப் பூதமானது, அதிக நிர்ப்பாக்கியமான நான் உன்னோடு கூடியிருந்த இடத்தை விட்டுப் பிரிந்த பொழுது ஓர் பசாசு எனக்கு எதிராக வந்து என்னைக் கொன்று விட்டது. இப்பொழுது என் பிரேதம் தெரு வீதியில் கிடக்கிறது. என் ஆத்துமாவோ நரக பாதாளத்தில் புதைந்து இருக்கின்றது. எனக்கு ஏற்பட்ட தீமைக்கு நிகரான தீமை உனக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் நீ படுக்கப்போகும் நேரத்தில் பரிசுத்த கன்னிகையை நோக்கி வேண்டிக்கொண்டதால் அன்னை உன்னைக் காப்பாற்றினாள். நான் சொல்வதைக் கேட்டு நீர் நல்லவனாக மாறினால் பாக்கியம் உள்ளவன் ஆவாய் என்று தன் வஸ்திரங்களைக் கிழித்துத் தன்னைச் சுடும் நெருப்பையும், தன்னைக் கடிக்கும் பாம்புகளையும் அவனுக்குக் காண்பித்து மறைந்தான்.

ரிக்கார்துஸ் இதைக்கண்டு பயந்து தன் மார்பில் பிழைதட்டி சாஷ்டாங்கமாக விழுந்து, தன்னை காப்பாற்றிய பரம தாய்க்கு நன்றி அறிந்த மனதோடு ஸ்தோத்திரம் சொல்லி, தான் எவ்வாறு நல்லவனாகக் கூடும் என்று நினைத்து சிந்திக்கும் பொழுது, புனித பிரான்சிஸ்கு சபை மடத்தில் நடுநிசி செபத்துக்கு மணி அடிக்கிறதைக் கேட்டான். உடனே புறப்பட்டு அம்மடத்துக்குப் போய் சந்நியாசியாக தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு மன்றாடினான். ஆனால் அந்த சந்நியாசிகள் இவனுடைய துர் நடத்தைகளை அறிந்திருந்ததால் இவனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொழுது, இவன் தனக்கு நிகழ்ந்தவை அனைத்தையும் அவர்களுக்கு அறிவித்தான். உடனே இரு சந்நியாசிகள் இவன் சொன்னது மெய்யோ, பொய்யோ என்று அறிவதற்கு, வெளியே புறப்பட்டு, ரிக்கார்துஸ் தோழனுடைய பிரேதத்தைத் தேடிப்போனார்கள். குறித்த இடத்தில் கரியைப் போல் கறுப்பாய் இருக்கிற அந்தப் பிரேதத்தைக் கண்டார்கள். அதன்பின் ரிக்கார்துஸ் அச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடின தபசு செய்து சுகிர்த புண்ணியங்களையும் அனுசரித்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் பிற சமயத்தாருக்கு திருமறையைப் போதிக்க அனுப்பப்பட்டார். இறுதியாக ஜப்பான் தேசத்துக்குச் சென்று அங்கு வேதசாட்சியாக மரித்தார்.

இவைகளையெல்லாம் கேட்கும் சகோதரர்களே, தேவ மாதாவை நோக்கி நீங்கள் வழக்கமாய்ச் சொல்லுகிற செபங்களை ஒருநாளும் தப்பாமல் சொல்லக்கடவீர்கள்.