தேவமாதாவின் வணக்கமாதம் - மே 13

தேவமாதா உலக மீட்பர் வருகைக்கு காத்திருக்கிறார்கள்!

மிகுந்த ஆவலுடன் மீட்பர் பிறக்க வேண்டுமென்று காத்திருக்கிறார்கள்.

உலக மீட்பர் எப்பொழுது வருவாரோ என 4000 ஆண்டுகளாக பிதாப் பிதாக்களும், தீர்க்கத்தரிசிகளும் புண்ணியவான்கள் எல்லோரும் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருந்தது போல அவர்களுக்கு இராக்கினியாகிய தேவமாதாவும் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். தமது திருமைந்தன் ஜோதியுள்ள சூரியனைப்போல பாவ இருளை நீக்கிச் சுகிர்த புண்ணியங்களை விளைவிக்க வரவேண்டுமென ஆசித்திருந்தார்கள். நீங்களும், தினந்தோறும் சர்வேசுரனைப் பார்த்து, உமது இராச்சியம் வருகவென்று சொல்லுகிறீர்களே! ஆனால் இந்த மன்றாட்டைத் தக்க பக்தியோடும் மிகுந்த ஆசையோடும் கேட்கிறீர்களோ? உங்களிடத்திலும் மற்ற மனிதர்களிடத்திலும் இந்தப் பரம இராச்சியம் வரவேண்டுமென அதிக ஆசையோடு விரும்பக்கடவீர்கள்.

அதற்கு தம்மை ஆயத்தப்படுத்துகிறார்கள்.

தேவமாதா எல்லாவித புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாய் இருந்தபோதிலும் தமது திரு மைந்தன் சீக்கிரத்தில் பிறப்பார் என்று அறிந்து அதிக சுறுசுறுப்புடன் அந்தப் புண்ணியங்களெல்லாம் தம்மிடத்தில் பெருகச் செய்தார்கள். அதனால் தம்மிடத்தில் தேவ மகிமை துலங்கவும், தேவ வல்லமை காணப்படவும், மனோவாக்குக் கெட்டாத முயற்சியை அடையவும் பேறுபெற்றவர்களாய் இருந்தார்கள். நாமும் சாங்கோபாங்கத்தை அடைய வேண்டும் என்று ஆசையுள்ளவர்களாய் இருப்போமாகில், புண்ணிய நெறியில் சலிப்பில்லாமலும் அசட்டை இல்லாமலும் நாளுக்கு நாள் அதிக சுறுசுறுப்போடு தீவிரித்து நடக்கக்கடவோம். நாம் நம்மைத் தேவ ஊழியத்துக்கு முழுமையும் அர்ப்பணிப்போமானால் சர்வேசுரன் நமக்கு அளவு கடந்த நன்மை உபகாரங்களைக் கொடுப்பார் என்பது குன்றாத சத்தியம்.

தமது திரு உதரத்தில் இருக்கிற இயேசுக்கிறிஸ்துநாதர் தமக்குக்கொடுத்த நன்மைகளால் பூரிக்கப்படுகிறார்கள்.

தேவமாதா ஒன்பது மாதம் மட்டும் தம்முடைய திருமைந்தனை தமது உதரத்தில் தரித்து அற்ப வருத்தம் இல்லாமலும் கஸ்தி இல்லாமலும் அவர் பிறப்பிற்காகக் காத்திருந்ததுடன் மிகுந்த பாக்கியமுள்ள சந்தோஷத்தையும் அடைந்திருந்தார்கள். நெருப்பைத் தன்னருகில் வைத்திருப்பவன் உஷ்ணமடைகிறது போலவும், பரிமள தைலத்தை தன் கையில் கொண்டிருப்பவன் அதன் மணத்தை நுகருவது போலவும், பொக்கிஷங்களைப் பெற்றிருக்கிறவன் திரவியங்களை அடைந்திருப்பது போலவும், தேவமாதா தேவ சிநேகமானவருமாய்த் தேவ பரிமளமுமாய், தெய்வீகத்தின் திரவியங்கள் எல்லாம் உடையவருமாய் இருக்கிற தமது திரு மைந்தனை ஒன்பது மாதமளவும் தமது திருஉதரத்தில் தரித்திருக்கும் பொழுது எவ்வளவு ஞான நன்மைகளை அடைந்தார்களென்று சொல்லவும் வேண்டுமோ? திவ்விய நற்கருணை ஸ்தாபித்திருக்கிற கோவில்களில் வாசம் செய்கிற இயேசுக்கிறிஸ்துநாதர் நம்மிடத்தில் திவ்விய நற்கருணை வழியாக அடிக்கடி வரும்போது ஞான நன்மைகளை நாம் அடையாமல் போவோமா? தேவமாதாவின் பக்தி நமக்கிருந்தால் நாம் இந்த ஞான நன்மைகளை அடைவோம் என்பது நிச்சயம்.

செபம்.

மீட்பரின் மகிமைநிறை அன்னையே! எங்களுக்கு அன்னையாகவும், அடைக்கலமாகவும், ஆதரவாகவும் இருக்க சித்தமானீரே. நீர் மீட்பருடைய அன்னையாக இருப்பதால் அவர் உமது மன்றாட்டைப் புறக்கணிக்கமாட்டார். நீர் எங்களின் அன்னையாய் இருப்பதால் எங்களிடம் மிகுந்த தயையும் பட்சமும் வைத்திருக்கிறீர். அதிசயத்துக்குரிய மாதாவே! ஏக சர்வேசுரனை அதிக பக்தியோடு சேவிக்கும் பொருட்டு தங்களை முழுதும் அர்ப்பணிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் அத்தியந்த பாக்கியவான்களாம். தான் செய்த பாவங்களை வெறுத்து இஷ்டப்பிரசாதத்தை அடையும்படிக்கு உம்முடைய அடைக்கலத்தில் ஓடிவருகிற பாவி எவனோ, அவனும் பாக்கியவானாம் பரிசுத்த கன்னிகையே உம்முடைய தயாளத்தினால் ஏவப்பட்டு உமது அண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து நான் செய்த குற்றங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பிரலாபத்தோடு அழுகிறேன். என் நிர்ப்பாக்கியமான ஆத்துமத்தின் பேரில் இரக்கமாயிரும். என் பாவங்களுடைய கட்டுகளை அவிழ்த்தருளும். என்னுடைய துர்க்குணங்களையும் ஆசாபாசங்களையும் அடக்கியருளும். நான் உம்மோடு கூட சர்வேசுரன் அண்டையில் எப்பொழுதும் வாழ்ந்திருக்க எனக்கு வேண்டிய உபகாரங்களைச் செய்தருளும் தாயே.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதிமூன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

தேவமாதாவைக் குறித்து ஐம்பத்து மூன்றுமணி செபம் சொல்கிறது.

புதுமை!

இவ்வுலகில் மனிதருக்கு ஏற்படும் தீமைகளில் பாவம் செய்ய நம்மை தூண்டிவிடும் பசாசின் தந்திரங்கள் அதிக தீமையாக இருப்பதால் பக்தி விசுவாசமுள்ளவன் இவைகளுக்கு விசேஷமாய் பயப்படுவான். ஆனால், இவைகளுக்கு இடங்கொடாது தேவ மாதாவினுடைய விசேஷ அடைக்கலத்தைத் தேடுகிறது மிகவும் உத்தமமான வழி. தமது சாந்த குணத்தினாலும், பொறுமையினாலும் மகா பேர்பெற்ற சலேசியுஸ் என்னும் அர்ச். பிரான்சீஸ்கு இளைஞராக இருக்கும் பொழுது பாரீஸ் நகர் இயேசு சபை மடத்தில் படித்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது சர்வேசுரன் தம்மைக் கைவிட்டாரென்றும் தாம் மோட்சத்துக்குச் சென்று கடவுளை காணமாட்டோமென்றும் பசாசின் தந்திரத்தினால் எந்நேரமும் நினைத்து மிகவும் வாதைப்பட்டார். அவருடைய மனதில் ஞான இருள் சூழ்ந்து வரவே, அவருடைய இருதயத்தில் அதிக கவலை தோன்ற அவர் உள்ளத்தில் கொடிய சந்தேகங்கள் உண்டாகி அவ நம்பிக்கையென்ற பாவத்தில் விழ இருந்தார். அப்பொழுது ஞானக்காரியங்களின் மீது பிரியப்படாமலும், தாம் செய்கிற செபங்களினாலும், வாசிக்கிற நல்ல புத்தகங்களினாலும் ஓர் நல்ல உணர்வை முதலாய் அதனை நினைக்காமல் இருந்தார். அப்பொழுது பசாசானது, நீ என்ன செய்தாலும், 'என்ன பிரயாசைப்பட்டாலும் நரகத்துக்கே போவாய் என்ற சந்தேகத்தை அவர் மனதில் ஸ்திரமாய் இருக்கச் செய்தது. அவரோவென்றால் சர்வேசுரனை நேசித்து அவரை மோட்சத்தில் நேரில் கண்டு கொள்வேன் என்றும் அவரிடத்தில் பாக்கியமுள்ளவனாக இருப்பேன் என்ற உறுதியான நம்பிக்கையோடு, எப்பொழுதும் இருந்தார்.

ஆனால் நரகத்தில் தள்ளப்பட்டால் எப்பொழுதும் சர்வேசுரனைப் பகைக்க வேண்டுமே என்ற நினைவினால் அதிக கஸ்தியை அடைந்தார். இரவு பகலாக அழுது புலம்பி அபயமிட்டு சாப்பிடாமலும் சரியாக நித்திரை செய்யாமலும் இருந்தார். கொஞ்ச காலத்துக்குள் இந்த துன்பத்தினால் அவருக்குக் கடின வியாதியுற்று மரணத் தறுவாயிலிருந்தார். அவ்விடத்திலிருந்த குருவானவர் அவர் அப்படி மெலிந்து போனதையும் அதிக வருத்தப்படுகிறதையும் கண்டு, அதற்கு காரணம் என்ன என்று விசாரித்தாலும், பிரான்சீஸ்கு நான் நரகத்துக்கு நியமிக்கப்பட்டவனாய் இருக்கிறேன் என்ற நினைவை வெட்கத்தினால் சொல்ல முடியாது தவித்தார். அப்படி ஒரு மாதம் அளவாக இந்தக் கொடிய துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார். கடைசியில் அளவில்லாத கிருபையுள்ள சர்வேசுரன் தமது திருத்தாயைக் கொண்டு இந்த கடும் சோதனையில் நின்று அவரை மீட்கத் திருவுளங்கொண்டார்.

அது எவ்வாறெனில், அவர் முன்பு தேவமாதாவின் பரிசுத்த கன்னிமையைக் குறித்து வீரத்தனாய் இருப்பேன் என ஓர் கோவிலில் தேவமாதாவின் பீடத்தண்டையில் வார்த்தைப்பாடு கொடுத்திருந்தார். மேற்சொல்லிய நினைவினால் கொடிய வருத்தப்படும் பொழுது, தாம் முன் தேவமாதாவை நினைத்து வேண்டிக்கொள்ளும்படி உள்ளே நுழைந்தார். அக்கோவிலில் பிரவேசித்தவுடனே தேவமாதாவின் பீடத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து கண்ணீர்விட்டு அழுது அன்னையை நோக்கி, என் தாயே என் பேரில் இரக்கமாயிரும், நான் என்றென்றும் நரகத்தில் தள்ளப்பட்டு சர்வேசுரனை தூஷித்து பகைக்க நியமிக்கப்படுவதற்கு பாத்திரமுள்ளவனா யிருக்கிறேன். சற்றாகிலும் என் ஆயுள் காலமெல்லாம் அவரை நேசிக்கும்படியாக நீர் கிருபை செய்தருளுமென்று திரளான கண்ணீர் சிந்தி, புனித பெர்நந்து இயற்றிய மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற செபத்தை சொன்னார். இந்தச் செபம் முடிந்தவுடனே அந்த பசாசுதந்திரமெல்லாம் மறைய அமைதியான சந்தோஷமும் மாறாத பாக்கியமும் அவர் மனதில் உண்டாயிற்று. இந்த ஞான சந்தோஷம் தேவமாதாவின் அனுக்கிரகத்தால் அவருக்கு எப்படி உண்டானதோ அப்படியே அப்பரம நாயகியின் உதவியினால் அச்சந்தோஷம் அவரை விட்டு நீங்கவில்லை.

நீங்களும் கிறிஸ்தவர்களே, இவ்வுலகில் அனுபவிக்கும் சோதனை தந்திரங்களில் தளராத நம்பிக்கையோடு, புனித பெர்நர்து இயற்றிய செபத்தை பக்தியுடன் சொல்லி தேவமாதாவினுடைய விசேஷ உதவியைக் கேளுங்கள்.