அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 11

புனித சூசையப்பரும், கன்னிமரியாவும் குழந்தை இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானிப்போம்.

தியானம்.

குழந்தை இயேசு பிறந்த நாற்பதாவது நாளில் மறைநூலில் கற்பித்த சடங்குபடி புனித சூசையப்பரும் மரியன்னையும் திருக்குழந்தையை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர். குழந்தை பிறந்த நாற்பதாவது நாளில் அவரது பெற்றோர் குழந்தையை காணிக்கை அளித்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது மதக் கோட்பாடாக இருந்தது. ஆண்பிள்ளையைப் பெற்ற தாய் நாற்பது நாட்களும், பெண் பிள்ளையைப் பெற்ற தாய் எண்பது நாட்களும் வீட்டிலே ஒதுங்கி இருந்து விரதத்தோடு காணிக்கையாக ஒரு ஆட்டுக்குட்டி அல்லது இரண்டு மாடப்புறாக்களை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று மறைநூலில் கூறப்பட்டுள்ளது.

புனித சூசையப்பரும் மரியன்னையும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள். மரியன்னை மற்றப் பெண்களைப்போலல்ல. இருப்பினும் உலக நியதிக்கு கட்டுப்பட்டு சடங்குகளை கடைப்பிடித்தார்கள். சில காசுகளையும் இரண்டு மாடப்புறாக்களையும் காணிக்கை அளித்து இயேசுவை மீட்டனர். அவரோ உலக மக்கள் அனைவரையும் தன் மரணத்தால் மீட்டு இரட்சிக்க வந்தவர். எனினும் மறைநூல் ஒழுங்குகளை கடைப்பிடித்தார்.

இத்தருணத்தில் தீர்க்கத்தரிசியான சிமியோனென்கிறவர் ஆலயத்திற்கு வந்து பாசத்துடன் குழந்தையை கையிலெடுத்து மகிழ்ந்து மரியன்னையிடம் இக்குழந்தை இவ்வுலகில் படப்போகும் துன்பங்களால் உமது இதயம் வாளால் ஊடுருவும் அளவு வேதனை அடையும் என்றார். புனித சூசையப்பரும் மரியன்னையும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இதயம் கலக்கமுற்று சொல்ல முடியாத அளவு வேதனை அடைந்தனர்.

புனித சூசையப்பரும் மரியன்னையும், குழந்தை இயேசுவும் வேத கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டியதில்லை என்றாலும் சாதாரண மனிதர்களைப்போல் கடைப்பிடித்தார்கள். கடைபிடிக்க வேண்டிய நாம் அசட்டையாக இருக்கிறோம். இனிமேல் அவ்வாறு இல்லாமல் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்போம். மரியன்னை மற்ற பெண்களைப் போல் அல்லாமல் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருந்தபோதும் தாழ்ச்சி, கீழ்ப்படிதல், தூய்மைப்படுத்துதல் இவற்றிற்கு தன்னை உட்படுத்தினார்கள். நாம் அவ்வாறு இல்லாவிட்டாலும் பரிசுத்தவானைப் போல் அகங்காரம் கொள்கிறோம். நமக்கு தாழ்ச்சியைத் தர மரியன்னையிடம் கேட்போம்.

இயேசு, மரி, சூசை மூவரும் நமக்காக வரங்களை அருளும்போது நாம் மகிழ்ந்து அவர்களைப் போற்றிப் புகழ வேண்டும். திவ்விய நற்கருணை மூலமாக நம்மிடையே இயேசு வரும்போது அவரை புகழ்ந்து நன்றி கூறி திருப்பலியை பக்தியோடு அடிக்கடி ஒப்புக்கொடுக்க வேண்டும்.

புதுமை

தூய நோர் பேர்த்துஸ் என்பவர் ஏற்படுத்திய துறவற சபையில் ஏர்மான் என்ற குரு இருந்தார். இவர் புனித சூசையப்பர்மேல் மிகுந்த பக்தியோடு இருந்து நற்செயல்களை செய்து, இடைவிடாது புனித சூசையப்பரின் புகழ் பரப்பினார், வெகுவிரைவில் தூய குரு என்ற பெயர் பெற்றார். புனித சூசையப்பர் மரியன்னையிடம் பக்தியும் வணக்கமும் வைத்திருந்ததுபோல் இவரும் மரியன்னையிடம் ஈடுபாடும் பக்தியும் வைத்திருந்தார். மரியன்னையும் தன்னுடைய பிரியமுள்ள மகனாக ஏற்றுக் கொண்டு சகல வரங்களையும் நிறைவாக அளித்தார். ஒருதடவை மரியன்னை இவருக்குத் தோன்றி எனது கணவராகிய சூசையப்பரிடம் நீர் அளவிடமுடியாத பக்தி வைத்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தோம். இனி உம்முடைய பெயரின் பின்னே சூசை என்றப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் என்றார்.

இதன்படி அவர் எழுதிய திருமுகங்களில் எல்லாம் ஏர்மான் சூசை என்றே கையெழுத்திட்டார். இன்னொரு தடவை தோன்றி கையில் இருந்த குழந்தை இயேசுவை இவரிடம் கொடுத்தார். இவர் அக்குழந்தையை அரவணைத்து மகிழ்ந்தார். இவர் இயேசு மரி சூசையிடம் பக்தியை கொண்டு அதனை உலகெங்கும் பரப்பியும், பெரும் ஆவல் கொண்டும் இருந்தார். அவரது மரணத்திற்கு முன் இயேசு மரி சூசை அவருக்குத் தோன்றி அவரைத் தேற்றி அவரை விண்ணக இன்பத்தை அனுபவிக்க செய்தனர். அம்மகிழ்ச்சியை அவரால் தாங்கிக்கொள்ள இயலாமல் அவர்களுடைய திருக்கரங்களிலே தன்னுடைய ஆத்மாவை ஒப்படைத்து நன்மரணம் அடைந்தார்.

நாம் புனித சூசையப்பரை பின்பற்றுவதால் நமக்கு சகல ஞானமும் அருளும் கிடைக்கிறது என்ற நம்பிக்கையோடு செபிப்போம். (3 பர, அரு, பிதா)

செபம்

இயேசுபாலன் பிறந்த நாற்பதாம் நாள் மரியன்னையோடு பாலனையும் கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த புனித சூசையப்பரே! உம்மை பக்தியோடு வணங்கி புகழ்கிறோம். இயேசுநாதரை சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்ததால் எங்களுக்கு மீட்பு கிடைத்ததை எண்ணி உமக்கு நன்றி கூறுகிறோம். இயேசுகிறிஸ்து எங்களுக்கு முடிவில்லா வாழ்வு அளிக்கும்படி எங்களுக்காக மன்றாடும். சிமியோன் தீர்க்கதரிசி, இந்த குழந்தை பலருக்கு எழுச்சியாகவோ, வீழ்ச்சியாகவோ கருதப்படுவார், மரியன்னையின் இதயத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று கூறியபோது புனித சூசையப்பர் மிகுந்த மனத்துயர் அடைந்தார். உமது மனத்துயரை உமது பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் எங்களுக்குரியதான நித்திய வாழ்வை அளிக்க வேண்டுகிறோம். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

எல்லா புண்ணியங்களுக்கும் நன்மாதிரிகையாயிருக்கிற புனித சூசையப்பரே! உமக்கு புகழ் உண்டாவதாக. இயேசு கிறிஸ்துவை மனிதர்களுக்காக ஒப்புக்கொடுத்த புனித சூசையப்பரே! உமக்கு புகழ் உண்டாவதாக. மனக்கஷ்டம் / மனச்சுமை நிறைந்த புனித சூசையப்பரே உமக்கு வாழ்த்துதல் உண்டாவதாக.

செய்ய வேண்டிய நற்செயல்

ஏதாவது ஒரு ஆலயத்தில் காணிக்கை அளிப்பது.