கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபம் - அதிகாரம் 12

சேசுநாதர் தம்முடைய ஞானச் சரீரமாகிய திருச்சபையிலே இஸ்பிரீத்துசாந்துவின் பற்பல வரங்களுடையவர்களை ஏற்படுத்தியிருக்கிறாரென்று காண்பிக்கிறார்.

1. இப்போது சகோதரரே, இஸ்பிரீத்து சாந்துவின் வரங்களைப்பற்றி நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.

2. நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்த போது, நீங்கள் ஏவி நடத்தப்பட்ட படிக்கு, ஊமையான விக்கிரகங்களிடத்திற்குப் போனீர்களென்று அறிந்திருக்கிறீர்கள். (அபாகூக். 2:18.)

3. சர்வேசுரனுடைய இஸ்பிரீத்துவினாலே பேசுகிற எவனும்: “சேசு நாதருக்குச் சாபம்” என்று சொல்ல மாட்டானென்றும், இஸ்பிரீத்துவி னாலேயன்றி, சேசுநாதர் ஆண்டவர் என்று ஒருவனும் சொல்லமுடியா தென்றும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். (மாற். 9:38, 39; 1 அரு. 4:2, 3)

* 2-3. சகோதரரே! இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களைக்குறித்து உங்களுக்குப் போதிக்க விரும்புகிறேன். நீங்கள் அஞ்ஞானிகளாயிருக்கும்போது வழக்கத்தினாலும் மற்றவர்களுடைய மாதிரிகையினாலும் பசாசின் ஏவுதலினாலும் அடிக்கடி ஊமையான விக்கிரகங்களிடத்திலேபோய், அதிலே பேய் ஆவேசமுள்ளவர்கள் காண்பிக்கிற பற்பல மாய்கையின் சேஷ்டைகளைக் கண்டீர்கள். இப்படிப்பட்ட பேய் ஏவுதல்களையும் இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களையும் நீங்கள் பகுத்தறியும்படிக்கு ஒரு காரியம் அறிந்து கொள்ளுங்கள். அதாவது: இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலினாலே பேசுகிற எவனும் சேசுநாதர்பேரில் தூஷணஞ் சொல்லான். அன்றியும் இஸ்பிரீத்துசாந்துவின் அனுக்கிரகமின்றி அந்தத் திருநாமத்தை வணக்கத்தோடு உச்சரிக்கக்கூடாததினாலே விசுவாசத்தோடும் பக்தியோடும் என் ஆண்டவராகிய சேசுவே என்று உச்சரிக்கிற எவனும் இஸ்பிரீத்துசாந்துவை அடைந்திருக்கிறவ னென்று அறிந்துகொள்ளுங்களென்று அர்த்தமாம்.

4. வரங்களிலே வித்தியாசங்களுண்டு; ஆயினும் இஸ்பிரீத்துவானவர் ஒருவர் தான். (உரோ. 12:6; எபே. 4:4.)

5. அலுவல்களிலும் வித்தியாசங்க ளுண்டு; ஆயினும் ஆண்டவர் ஒருவரே. (1 கொரி. 12:28; எபே. 4:11.)

6. செய்கைகளிலும் வித்தியாசங்களுண்டு; ஆயினும் எல்லாரிடத்திலும், எல்லாவற்றையும் நடப்பிக்கிற கடவுள் ஒருவரே.

7. ஒவ்வொருவனிடத்திலே இஸ்பிரீத்துவானவர் வெளிப்படுகிற வரமானது (பொது) நன்மைக்காக அளிக்கப்படுகின்றது.

* 7. அறியாத பாஷைகளைப் பேசுவதும்., வியாதிக்காரரைப் புதுமையாகச் சுகப்படுத்துவதும், மரித்தோரை எழுப்புவதும், இனிவருங் காரியங்களைத் தீர்க்தரிசனமாக அறிவிக்கிறதும், இவை முதலான அற்புதங்களை ஒருவன் செய்யும்படி இஸ்பிரீத்துசாந்து வரங் கொடுக்கும்போது, எப்போதும் அந்த வரங்கள் சர்வேசுரனுடைய தோத்திரத்துக்காகவும் திருச்சபையின் பிரயோசனத்துக்காகவும், பிறருடைய சரீரத்தின் அல்லது ஆத்துமத்தின் நன்மைக்காகவும் உபயோகிக்கப்படுமொழிய, பேய்களால் பண்ணப்படுகிற மாய்கையான கிரியைகளைப்போல வீணானதும் வேடிக்கைக்குரியதுமான அற்புதங்களைச் செய்கிறதுக்குக் கொடுக்கப்படுகிறதில்லை. இதுவே இஸ்பிரீத்துசாந்துவினால் பண்ணப்படுகிற புதுமைகளுக்கும் பசாசின் மாய்கையினால் நடக்கிற அதிசயக் கிரியைகளுக்கும் உண்டாயிருக்கிற பிரதான வித்தியாசம். பேய் ஆவேசமுள்ளவர்கள் ஒருவேளை அறியாத பாஷைகளைப் பேசுவார்கள். மனுஷரால் தூக்கக் கூடாத பாரமான வஸ்துக்களைத் தூக்குவார்கள், சீமோனென்பவனைப்போல தாங்களாய் ஆகாயத்தில் ஏறுவார்கள்; மாய்கை வித்தையினால் ஒருவனைப் பாவத்துக்கு இணங்கப்பண்ணுவார்கள். திடீரென புலி, சிங்கம், பாம்பு, கோட்டை, கொத்தள முதலானவைகளைத் தோன்றப் பண்ணுவார்கள். ஆனால் இவையெல்லாம் வீண் வேடிக்கைக்காவது மனிதர்களைக் கெடுக்கிறதற்காவது பாவ அக்கிரமத்துக்காவது பண்ணப்படுகிறதொழிய ஒரு நன்மையான காரியத்துக்காக அல்ல. சிலவிசை பசாசின் ஏவலினாலே வந்த வியாதி பசாசினாலே தீருமென்று சொன்னாலும் அது உண்மையல்ல. பசாசின் ஆவேசம் அல்லது ஏவல் நீங்கினால் ஆவேசங்கொண்டவன் அல்லது ஏவப்பட்டவன் தன் சுபாவ அந்தஸ்தை அடைகிறதினால் செளக்கியமாகிறான். ஆனால் அந்தச் செளக்கியம் பசாசினாலே கொடுக்கப்பட்டதென்று சொல்லக்கூடாது. காலிலே தைத்த முள்ளினால் வலியும் நோவுமுண்டாகிறது; முள்ளைப் பிடுங்கினால் செளக்கியமாகிறது. ஆகையால் அந்தச் செளக்கியம் முள்ளினாலுண்டாகிறதென்று சொல்லுவாருண்டோ? இல்லையே. பசாசு நீங்குவதற்காகிலும், வியாதி குணமாவதற்கென்கிலும் பசாசை மன்றாடி, பசாசுக்குப் பூசை, பலி, பொங்கலிட்டு, கோணங்கி முதலானவர்களைக் கொண்டு பிரயாசைப்படலாமோ? பரிச்சேதங் கூடாது. ஏனென்றால், அந்தக் கிரியைகளெல்லாம் பசாசின்பேரில் பக்தி நம்பிக்கை வைக்கிற விலக்கப்பட்ட கிரியைகளா யிருக்கிறபடியினாலே அவைகளைக்கொண்டு சரீர செளக்கியத்தையடையத் தேடுகிறவன் தன் ஆத்துமத்தைப் பசாசுக்கு அடிமையாக்கிக்கொள்ளுகிறான் என்றறிக.

8. அப்படியே இஸ்பிரீத்துவினாலே ஒருவனுக்கு ஞானத்தின் வாக்கும், ஒருவனுக்கு அந்த ஒரே இஸ்பிரீத்துவினாலே பகுத்தறியும் வாக்கும்,

9. ஒருவனுக்கு அந்த இஸ்பிரீத்துவினாலே விசுவாசமும், ஒருவனுக்கு அந்த ஒரே இஸ்பிரீத்துவினாலே செளக் கியப்படுத்தும் வரமும்,

10. ஒருவனுக்கு அற்புதங்களைச் செய்கிற வரமும், ஒருவனுக்குத் தீர்க்க தரிசன வரமும், ஒருவனுக்கு அரூபிக ளைப் பகுத்தறியும் வரமும், ஒருவனுக் குப் பலபாஷை வரமும், ஒருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானஞ் செய்யும் வரமும் கொடுக்கப்படுகிறது. (அப். 2:4.)

11. இப்படியிருந்தாலும், இவையெல்லாவற்றையும் அந்த ஒரே இஸ்பிரீத்துவே நடப்பித்துத் தமதிஷ்டப்படி ஒவ்வொருவனுக்கும் பகிர்ந்து கொடுக் கிறார். (உரோ. 12:3, 6; எபே. 4:7)

12. எப்படியெனில் சரீரம் ஒன்றானா லும், அதற்கு அவயவங்கள் அநேகம். சரீரத்தின் அவயவங்கள் பலவாயிருந் தாலும், அவைகள் ஒரே சரீரமாகவே யிருக்கின்றன. அப்படியே கிறீஸ்துநாதரு மிருக்கிறார். (1 கொரி. 12:27; 10:17.)

* 12. கிறீஸ்துநாதருடைய ஞானச் சரீரமாகிற திருச்சபையிலே அப்போஸ்தலர், வேதபாரகர், மேய்ப்பர், தீர்க்கதரிசிகள் முதலான கிறீஸ்தவர்கள் அந்த ஞானச் சரீரத்துக்குப் பற்பல அவயவங்களாயிருக்கிறார்கள். சேசுநாதரோ அந்த ஞானச் சரீரத்துக்குத் தலையாயிருக்கிறார் என்றர்த்தமாம்.

13. அதெப்படியென்றால், நாம் யூத ரானாலும், புறஜாதியாரானாலும், அடிமைகளென்றாலும், சுயாதீனரானாலும் எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவி னாலே ஒரே சரீரமாயிருக்கும்படிக்கு ஞானஸ்நானம் பெற்று, எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவில் பானம் பண்ணுகி றோம். (கலாத். 3:28; எபே. 2:13, 14.)

* 13. எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவில் பானம்பண்ணுகிறோமென்பதற்கு அர்த்த மாவது: இஸ்பிரீத்துசாந்து ஆத்துமத்திலே பாய்ந்தோடுகிற ஜீவ ஜலமாயிருக்கிறாரென்று அப்போஸ்தலர் நடபடி 2-ம் அதிகாரம் 17, 18-ம் வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் இஸ்பிரீத்துசாந்துவில் பானம்பண்ணுகிறதென்கிறது இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களால் நிரப்பப்படுகிறதென்றறிக.

14. எவ்வாறெனில், சரீரமானது ஒரே உறுப்பாயிராமல், பற்பல உறுப்பு களாயிருக்கின்றது. (1 கொரி. 12:20.)

15. காலானது, நான் கையாயிராததினாலே, நான் சரீரத்தின் உறுப்பல்ல என்றால், அதனாலே அது சரீரத்தின் உறுப்பாயிராதோ?

16. காதானது, நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பல்ல என்றால், அதனாலே அது சரீரத்தின் உறுப்பாயிராதோ?

17. சரீரமெல்லாம் கண்ணாயிருந்தால், கேள்வி எங்கே? எல்லாம் செவி யாயிருந்தால், மோப்பம் எங்கே?

18. ஆனால் சர்வேசுரன் உறுப்புகளில் ஒவ்வொன்றையும் தமது சித்தத்தின்படி சரீரத்தில் வைத்திருக்கிறார்.

19. அவையெல்லாம் ஒரே உறுப்பாயிருந்தால் சரீரம் எங்கே?

20. உறுப்புகள் அநேகமாயினும் சரீரம் ஒன்றே. (1 கொரி. 12:14.)

21. கண்ணானது கரத்தைநோக்கி: உன் உதவி எனக்கு வேண்டியதில்லையென்றும், தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு அவசரமில்லையென்றுஞ் சொல்லக் கூடாதே.

22. ஆனால் சரீரத்தின் அவயவங்களுக்குள்ளே எவைகள் அதிகப் பலவீனமாகக் காணப்படுகிறதோ, அவைகளே அதிக அவசியமாயிருக்கின்றன.

23. மேலும் நமக்கு அதிக ஈனமாகத் தோன்றுகிற சரீரத்தின் அவயவங்களை அதிகக் கனம்பண்ணுகிறோம். நம்மில் மானமற்றவைகளையும் அதிக யோக்கியமாக நடத்துகிறோம்.

24. நம்மில் மகிமையான அவயவங்களுக்கு ஒன்றும் வேண்டுவதில்லை. ஆனால் சர்வேசுரன் இலட்சணங் குன்றிய உறுப்புக்கு அதிக மகிமையைக் கொடுத்துச் சரீரத்தைச் சீர்ப்படுத்தினார்.

25. சரீரத்தில் பிரிவினை உண்டாகாமல் உறுப்புகள் ஒன்றையயான்று கரிசனமாய்ப் பார்க்கும்படி இவ்விதஞ் செய்தார்.

26. ஆதலால் ஒரு அவயவம் ஏதாகிலும் வருத்தப்பட்டால் அத்தோடு கூட எல்லா அவயவங்களும் வருத்தப்படும். ஒரு அவயவம் பெருமையடைந்தால் அத்தோடுகூட எல்லா அவயவங்களும் மகிழுகின்றன.

27. நீங்களோ கிறீஸ்துநாதருடைய சரீரமும், அவயவத்தின் அவயவங்களு மாயிருக்கிறீர்கள். (உரோ. 12:5; எபே. 5:30.)

28. அவ்வண்ணமே சர்வேசுரன் திருச்சபையிலும் சிலரை ஏற்படுத்தியிருக்கிறார். முதலாவது அப்போஸ்தலர்கள், இரண்டாவது தீர்க்கதரிசிகள், மூன்றாவது வேதபாரகர், பிறகு புதுமை வரங்கள், அதன்பின் ஆரோக் கியம் அளிக்கும் வரங்கள், தர்ம உதவிகள், ஆளுகை வரங்கள், பாஷை வரங்கள், வியாக்கியானம்பண்ணும் வரங்களுமாம். (எபே. 4:11.)

29. எல்லோரும் அப்போஸ்தலர்களோ? எல்லோரும் தீர்க்கதரிசிகளோ? எல்லோரும் வேதபாரகரோ?

30. எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களோ? எல்லோரும் வியாதிகளைக் குணமாக்குகிற வரத்தையுடையவர்களோ? எல்லோரும் பாஷைகளைப் பேசுகிறவர்களோ? எல்லோரும் வியாக்கியானம் பண்ணுகிறவர்களோ?

31. இப்படியிருக்க, அதிக மேலான வரங்களை நாடித் தேடுங்கள்; இன்ன மும் இதோ, அதி உத்தமமான வழி யை உங்களுக்குக் காண்பிக்கிறேன். (1 கொரி. 14:1; 13:2; மத். 7:22; 17:20.)