கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபம் - அதிகாரம் 13

சின்னப்பர் சிநேகத்தின் அவசியத்தையும், கடமையையும், நிலைமையையும், மேன்மையையும் போதிக்கிறார்.

1. மனிதருடைய பாஷைகளையும், தேவதூதர்களுடைய பாஷைகளையும் நான் பேசினாலும், என்னிடத்திலே தேவசிநேகமில்லாவிட்டால் ஓசையிடுகிற வெண்கலம்போலவும், கிண்கிணீரென்கிற கைத்தாளம் போலவும் ஆனேன்.

2. நான் தீர்க்கதரிசன வரத்தைக் கொண்டிருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லாக் கல்விகளையும் அறிந்தவனாயிருந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசத்தையுமுடையவனா யிருந்தாலும் என்னிடத்திலே தேவசிநேகமில்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை. (மத். 21:21.)

3. அன்றியும் என் ஆஸ்திபாஸ்திகளெல்லாவற்றையும் நான் ஏழைகளுக்குப் போஜனமாகப் பகிர்ந்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கும்படி கையளித்தாலும் என்னிடத்தில் தேவசிநேக மில்லாவிட்டால், எனக்குப் பிரயோசனம் ஒன்றுமில்லை. (மத். 6:2, 3.)

4. தேவசிநேகமோ பொறுமையுள்ளது, தயவுள்ளது. தேவசிநேகம் பொறாமைப்படாது, துடுக்காய்ச் செய்யாது, அகங்காரப்படாது.

5. பெருமையைத் தேடாது, சுயநலத் தை விரும்பாது, கோபங்கொள்ளாது, தீங்கு நினையாது.

6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்திலே சந்தோஷப்படும்.

7. சகலத்தையும் சகிக்கும், சகலத்தை யும் விசுவசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் தாங்கிக்கொள்ளும்.

* 7. சகலத்தையும் விசுவசிக்குமென்பது வேத விசுவாச சத்தியத்துக்கடுத்தவைகளை யல்ல; பிறர் பேசுவதின்பேரில் சந்தேகப்படாமல், அதை உண்மையென்று எளிதாய் ஏற்றுக்கொள்ளுகிறது. எல்லாவற்றையும் நம்புகிறதென்பது பிறரிடத்தில் ஒன்றிலும் அவநம்பிக்கைப்படாமல், கெட்டவனாயிருக்கிறவன் முதலாய் நல்லவனாய்ப் போவானென்று நம்பிக்கொள்ளுகிறது.

8. சிநேகம் ஒருகாலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்கள் ஒழிந்தாலும், பலபாஷை பேசுகிறது நின்றுபோனாலும், கல்வி நீர்மூலமானாலும், சிநேகம் ஒருக்காலும் ஒழியாது.

* 8. தீர்க்கதரிசன வரம், பாஷை பேசுகிற வரம், சாஸ்திரங்கள் முதலியவைகள் இவ்வுலகத்திலே மாத்திரஞ் செல்லுமொழிய மறுலோகத்திலே அவைகளுக்கு இடமிராது. சிநேகமோவென்றால் மோட்சத்திலே மோட்சவாசிகளுக்குள் என்றென்றைக்கும் நிலைகொண்டிருக்கும்.

9. எப்படியெனில் நமது அறிவும் அரைகுறையானது. நமது தீர்க்கதரிசன மும் அரைகுறையானது.

10. ஆனால் உத்தமமானது வரும்போது, அரைகுறையானது அற்றுப்போம்.

11. நான் குழந்தையாயிருக்கும் போது குழந்தைபோல் பேசி, குழந்தைபோல் உணர்ந்து, குழந்தைபோல் நினைத்துவந்தேன். பெரியவனான பின்போ, குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன்.

12. இப்பொழுது நாம் கண்ணாடியில் மங்கலாய்க் காண்கிறோம். அப்பொழுது முகமுகமாய்க் காண்போம். இப்பொழுது அரைகுறையாய் அறிகி றேன். அப்பொழுது நான் எப்படி அறி யப்பட்டிருக்கிறேனோ, அப்படியே அறிந்து கொள்ளுவேன். (இயா. 1:23.)

13. இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் இம்மூன்றும் நிலை கொண்டிருக்கிறது. ஆகிலும் இவை களில் தேவசிநேகமே சிரேஷ்டமானது.