அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 11

தேவாலயத்தின் அளவும், இரு சாட்சிகள் தீர்க்கதரிசனஞ் சொல்வதும், மிருகம் அவர்களைக் கொன்றும், அவர்கள் உயிரோடெழுந்திருக்கிறதும் வருமாறு.

1. பின்பு ஊன்றுகோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என் கையில் கொடுக்கப்பட, என்னை நோக்கிச் சொல்லப்பட்டதாவது: நீ எழுந்து சர்வேசுரனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் ஆராதனை செய்கிறவர்களையும் அளந்துபார். (எசே. 40:3.)

* 1. அளவுகோல் என்பதற்கு மூலபாஷையில் வைத்திருக்கிற வார்த்தையை உள்ளபடி மொழிபெயர்த்தால், நாணல் குச்சி என்கவேண்டும். நாணல் குச்சி இயல்பாய் நேராகவும் இலேசாகவும் இருப்பதினால் பூர்வீகத்திலே நாணல் குச்சியை அளவுகோலாகப் பிரயோகிப்பார்கள். ஆகையால் அளவுகோலென்று மொழிபெயர்க்கப்பட்டது.

2. ஆலயத்துக்குப் புறம்பேயிருக்கிற ஆசார முற்றத்தை அளக்காமல் புறம் பாக்கிப்போடு; ஏனெனில் அது புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டது. பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்தி ரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.

3. அப்போது என்னுடைய இரண்டு சாட்சிகளும் கம்பளியணிந்தவர்களாய் ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு வரங்கொடுப்பேன். அவர்களும் அப்படியே செய்வார்கள்.

4. பூலோகத்தில் ஆண்டவருடைய சமுகத்தில் நிற்கிற இரண்டு ஒலிவ மரங்களும், இரண்டு குத்துவிளக்குகளும் இவர்களே. (சக். 4: 2-14.)

* 4. இந்த அதிகார முழுவதும் உலக முடியுங்காலத்தில் மகாத்துமாக்களாகிய ஏனோக், எலியாஸ் என்பவர்கள் வருவதைப்பற்றியும், அந்தக்காலத்தில் உலகத்தில் தோன்றும் அந்திக்கிறீஸ்துவுக்கு விரோதமாய் இவர்கள் வேதத்தைப் பிரசங்கித்து, கிறீஸ்துவர்களை உறுதிப்படுத்தி, யூதர்களை மனந்திருப்பிக் கடைசியாய் அந்திக்கிறீஸ்துவினால் வேதசாட்சிகளாய்க் கொல்லப்படுவதைப்பற்றியும் விவரிக்கின்றது. (கிராம்போன்.)

5. ஒருவன் அவர்களுக்குப் பொல்லாங்கு செய்ய நினைத்தால், அவர்கள் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர் களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும். அவர்களுக்குப் பொல்லாங்கு செய்ய நினைக்கிற எவனும் இவ்விதமாய்க் கொல்லப்படவேண்டியதாமே.

6. அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாட்களிலே மழை பெய்யாத படிக்கு வானத்தை அடைக்க அவர் களுக்கு அதிகாரம் உண்டு. அவர்களுக்கு இஷ்டமானபோதெல்லாம் தண்ணீரை இரத்தமாக மாற்றவும், பூமியை எவ்வித உபாதைகளாலும் உபாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.

* 5-6. இந்த வசனங்களில் அவர்கள் வாயிலிருந்து மெய்யான அக்கினி புறப்படுமென்று அர்த்தமல்ல. ஆனால் அவர்களுக்கு அற்புதங்களைச் செய்ய உண்டான வல்லபத்தைக் காட்ட இவைகள் உருவகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

7. அவர்கள் தங்கள் சாட்சியஞ் சொல்லி முடித்தபின்பு பாதாளத்திலிருந்து ஏறிவருகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து அவர்களைக் கொன்று போடும். (காட்சி. 13:1.)

8. அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோமா என்றும், எஜிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும். அதிலே அவர்களுடைய கர்த்தரும் சிலுவையிலே அறையுண்டார்.

9. அந்தந்தக் கோத்திரங்களையும், ஜனங்களையும், பாஷைக்காரரையும், ஜாதிகளையும் சேர்ந்த ஜனங்கள் மூன்றரை நாளளவாக அவர்களுடைய உடல்களைப் பார்ப்பார்கள். அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளிலே வைக்கவொட்டார்கள்.

10. இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத் தினதினால், அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.

11. மூன்றரை நாளைக்குப்பிறகு சர்வேசுரனிடத்திலிருந்து ஜீவாத்துமம் அவர்களுக்குள் பிரவேசித்தது. உடனே அவர்கள் காலூன்றி நிற்க, அவர்களைக் கண்டவர்களுக்கு மகா திகிலுண்டாயிற் று.

12. அன்றியும்: இங்கே ஏறி வாருங்க ளென்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்துக்குப் போனார்கள். அவர்களுடைய சத்துருக்களும் அவர்களைக் கண்டார்கள்.

13. அந்நேரத்தில் பூமி மிகவும் அதிர்ந்தது. அந்த நகரத்தில் பத்திலொரு பாகம் இடிந்து விழுந்தது. பூமியின் அதிர்ச்சியால் மனிதர்களில் ஏழாயிரம்பேர் மடிந்தார்கள். மீதியானவர்கள் பயமடைந்து, பரம தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

14. இரண்டாங் கேடு முடிந்து போயிற்று. இதோ, மூன்றாங் கேடு சீக்கிரத்தில் வரப்போகிறது.

15. ஏழாம் தூதன் எக்காளமூதினான். அப்போது வானத்திலே, கெம்பீரத் தொனிகள் உண்டாகி: இவ்வுலக இராச்சியம் நம்முடைய ஆண்டவருக்கும் அவருடைய கிறீஸ்துவுக்கும் சொந்தமாயிற்று. அவர் அநவரதகாலங்களிலும் அரசாளுவார், ஆமென் என்று சப்தித்தது.

16. அப்பொழுது சர்வேசுரனுடைய சமுகத்திலே தங்கள் ஆசனங்களில் உட்கார்ந்திருந்த இருபத்து நான்கு வயோதிகரும் முகங்குப்புற விழுந்து:

17. இருக்கிறவரும், இருந்தவரும், இனி வருபவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய சர்வேசுரா, உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஏனெனில் தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு அரசாட்சி செய்கிறீர்.

18. ஜனங்கள் கோபங்கொண்டார்கள்; அதனாலே உமது முனிவுண்டாயிற்று. மரித்தோரை நடுத்தீர்க்கவும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியருக்கும், பரிசுத்தவான்களுக்கும், உமது நாமத்துக்குப் பயப்படுகிறவர்களாகிய சிறியோர் பெரியோர்களுக்கும் சம்பாவனையளிக்கவும், பூமியைக் கெடுத்தவர்களை நிர்மூலமாக்கவும் காலம் வந்ததென்று சொல்லி சர்வேசுரனை நமஸ்கரித்தார்கள்.

19. அப்போது பரலோகத்திலே சர்வே சுரனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கை பெட்டகம் தோன்றினது. உடனே மின்னல்களும், குமுறல்களும், பூமியதிர்ச்சியும், பெருங் கல்மழையும் உண்டாயிற்று.