அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 10

மகா வல்லமையுள்ள ஒரு தூதன் ஒரு புஸ்தகத்தை விழுங்கச்சொல்லி, அருளப்பருக்குக் கொடுக்கிறார்.

1. பின்பு மேகத்தை ஆடையாக அணிந்த பராக்கிரமமுள்ள ஒரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவருடைய சிரசின் மேல் வானவில் இருந்தது. அவருடைய முகம் சூரியனைப்போலவும் அவருடைய கால்கள் அக்கினி ஸ்தம்பம் போலவும் இருந்தன.

2. அவர் தம்முடைய கையிலே ஒரு சிறு புஸ்தகத்தைத் திறந்து வைத்திருந்தார். அவர் தமது வலது பாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், இடது பாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

3. சிங்கம் கர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய்க் கூப்பிட்டார். அவர் கூப்பிட்டவுடனே ஏழு இடிகளும் அதிர்ந்து முழங்கின.

4. அவ்வேழு இடிகளும் அதிர்ந்து முழங்கினபோது நான் எழுதவேண்டு மென்றிருந்தேன். அப்போது வானத்தி லிருந்து ஓர் சத்தம் உண்டாகி: அவ் வேழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல், முத்திரை யிட்டுக்கொள் என்று என்னை நோக்கிச் சொல்லக் கேட்டேன்.

* 4. முத்திரையிட்டுக்கொள்:- இரகசியமாய் வைத்துக்கொள்.

5. சமுத்திரத்தின்மேலும் பூமியின் மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன் தன் கையை வானத்தை நோக்கி உயர்த்தி, ( தானி. 12:7.)

6. வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகால ஜீவியருமாயிருக்கிறவர் பேரால் ஆணையிட்டு: இனி காலமென்பது இராது.

* 6. இனி காலமிராது: - யூதர்கள் ஒரு இராச்சியமாகவும், ஜனமாகவும் இருக்கமாட்டார்களென்றும், அவர்களுடைய வேதத்துக்குப் பதிலாய் சேசுநாதர்சுவாமி புதிய ஏற்பாடாகிய மெய்யான வேதத்தை ஸ்தாபிப்பாரென்றும் அர்த்தமாம்.

7. ஆனாலும் சர்வேசுரன் தம்முடைய ஊழியராகிய தீர்க்கதரிசிகளைக் கொண்டு அறிவித்தபடியே, ஏழாம் தூதன் எக்காளமூதி, தன்னுடைய சத்தம் முழங்கப்பண்ணும் நாளிலே தேவரகசியம் நிறைவேறும் என்றார்.

8. வானத்திலிருந்து உண்டான சத்தம் மீண்டும் என்னுடனே பேசி: நீ போய், சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற அந்தத் தூதனுடைய கையிலே திறந்திருக்கிற புஸ்தகத்தை வாங்கிக்கொள் என்று சொல்லக்கேட்டு,

9. நான் அந்தத் தூதனிடத்திலே போய்: அந்தப் புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்று கேட்டேன். அதற்கு அவர்: நீ இந்தப் புஸ்தகத்தை வாங்கி விழுங்கு. இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆயினும் உன் வாய்க்குத் தேனைப்போல் மதுரமா யிருக்கும் என்றார். (எசே. 3:1.)

* 9. புஸ்தகத்தை வாங்கி விழுங்கு: - புஸ்தகத்திலுள்ள யாவையும் நன்றாய்க் கற்றறிந்துகொள் என்பதாம்.

10. நான் அந்தப் புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி அதை விழுங்கினேன். அது என் வாய்க்குத் தேனைப்போல் மதுரமாயிருந்தது. நான் அதை விழுங்கினவுடனே என் வயிறு கசப்பாயிற்று.

* 10. என் வயிறு கசப்பாயிற்று:- இந்தத் தீர்க்கதரிசனத்தில் யூதருடைய அழிவும் கிறீஸ்துவேதத்தின் உயர்வும் குறிக்கப்பட்டிருந்ததால், அர்ச். அருளப்பர் யூதனாகிய மட்டும் கஸ்திப்பட்டதுக்கு அடையாளமாக அவர் வயிறு கசப்பாயிற்றென்றும், கிறீஸ்துவனாகிய மட்டும் அவருடைய சந்தோஷத்தைக் காட்ட அவருடைய வாய்க்குத் தேன்போல் மதுரமாயிருந்ததென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

11. அப்பொழுது அவர் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக் காரர்களையும், இராஜாக்களையுங் குறித்துத் தீர்க்கதரிசனஞ் சொல்ல வேண்டும் என்றார்.