அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 12

சூரியனை ஆடையாக அணிந்த ஓர் ஸ்திரீயின் காட்சியும், அவளைத் துன்பப் படுத்தின பறவைநாகமும்.

1. அன்றியும் வானத்திலே ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது; அதாவது: ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள். அவளுடைய பாதங்களின்கீழ் சந்திரனும், அவளுடைய சிரசின்மேல் பன்னிரு நட்சத்திரங்களுள்ள ஓர் கிரீடமும் இருந்தது.

* 1. இந்த அதிகாரத்தில் சோபன சிறப்போடு வர்ணிக்கப்பட்டிருக்கிற ஸ்திரீ திவ்விய கர்த்தராகிய சேசுநாதரைப் பெற்றெடுத்த பரம நாயகிதான் என்று அர்ச். அகுஸ்தீன், கிரகோரியார் முதலியவர்கள் நிச்சயித்திருக்கிறார்கள். இந்த ஆச்சரியத்துக்குரிய ஆண்டவள் அடைந்த ஞானத்துக்கு அடையாளமாய்ச் சூரியனை ஆடையாக அணிந்திருக்கிறதாகவும், அவளுடைய மாறாத தயாளத்துக்கு அடையாளமாகச் சந்திரனைப் பாதத்தின்கீழ் மிதித்திருக்கிறதாகவும், இஸ்ராயேல் பன்னிரு கோத்திரத்தாராலும், பன்னிரு அப்போஸ்தல ராலும் குறிக்கப்பட்ட திருச்சபையானது அவளுடைய மகிமையென்பதற்கு அடையாளமாக அவள் பன்னிரு நட்சத்திரங்களைக் கிரீடமாகச் சூடியிருப்பதாகவும் அர்ச். அருளப்பருக்குக் காட்சியில் காண்பிக்கப்பட்டது. இன்னும் இந்த ஆண்டவள் திருச்சபைக்கு உருவகமா யிருக்கிறாள். அவள் கர்ப்ப வாதைப்படுவது கிறீஸ்துவர்கள் உள்ளத்தில் சேசுநாதர்மேலுள்ள பக்தி விசுவாசத்தைப் பிறப்பித்து, ஸ்திரப்படுத்துவதற்குத் திருச்சபையானது படும் அரும் பிரயாசைக்கு அடையாளமாம். அவளைப் பறவைநாகம் பகைத்துக் கெடுக்கத் தேடுவதும், அவள் அதற்கு எட்டாத தொலைவில் ஒதுங்கிச் சர்வேசுரனால் போஷிக்கப்படுவதும், திருச்சபையானது வேதவிரோதிகளால் பகைக்கப்படுவதற்கும், தேவ கிருபையால் காப்பாற்றப்பட்டு வெற்றியடைவதற்கும் அடையாளமாம்.

2. அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவ வேதனையடைந்து, குழந்தை பெறும்படி அம்பாயப்பட்டு அலறினாள்.

3. அப்போது வானத்தில் வேறொரு அடையாளம் காணப்பட்டது; அதாவது: ஏழு தலைகளையும், பத்துக் கொம்பு களையுமுடைய சிவப்பான ஒரு பெரிய பறவைநாகம் தோன்றினது. அதன் தலைகளின் மேல் ஏழு முடிகளிருந்தன.

* 3. பறவைநாகம் என்பது சாத்தான். அதன் சிவந்த நிறம், மனுஷருடைய இரத்தத்தைச் சிந்துவதற்கு அதற்குள்ள கொடிய ஆசை. ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும், அதன் தந்திர யோசனைகளும், கெடுதி செய்வதற்கு அதற்குள்ள வல்லமையுமாம்.

4. அதன் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியிலே விழத்தள்ளிற்று. பிரசவ வேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையை விழுங்கிப்போடும்படிக்கு அந்தப் பறவைநாகம் அவளுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தது.

5. சகல ஜனங்களையும் இருப்புக் கோலால் அரசாட்சிசெய்யும் ஆண் குழந்தையை அவள் பெற்றாள். அவளுடைய பிள்ளை சர்வேசுரனிடத்திற்கும், அவருடைய சிங்காசனத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

6. அந்த ஸ்திரீயானவள் வனாந்தரத்துக்கு ஓடிப்போனாள். அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிக்கும்படி சர்வேசுரன் அவளுக்கு ஓரிடம் ஆயத்தம்பண்ணி வைத்திருந்தார்.

7. அன்றியும் வானத்திலே ஒரு பெரிய யுத்தம் உண்டாயிற்று. மிக்க யேலும் அவருடைய தூதர்களும் பறவை நாகத்தோடே யுத்தஞ் செய்தார்கள். பறவை நாகமும் அவனுடைய தூதர் களும் யுத்தஞ் செய்தார்கள்.

8. அவர்கள் ஜெயங்கொள்ளவும் இல்லை, வானத்திலே அவர்களிருந்த இடம் அதுமுதல் காணப்படவும் இல்லை.

9. அப்படியே ஆதி சர்ப்பமாகிய அந்தப் பெரிய பறவை நாகம் வெளி யே தள்ளப்பட்டது. அதற்குப் பேய் என்றும், சாத்தான் என்றும் பெயர். அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது. அத்தோடேகூட அதன் தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.

10. அப்பொழுது வானத்திலே ஒரு பெருஞ் சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும், வல்லமையும், நமது சர்வேசுரனுடைய இராச்சியமும், அவ ருடைய கிறீஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது. இரவும் பகலும் நம்முடைய சர்வேசுரனுக்கு முன்பாக நம்முடைய சகோதரருக்கு விரோதியாய் அவர்கள்மேல் குற்றஞ்சாட்டிக்கொண் டிருந்தவன் தள்ளுண்டுபோனான்.

11. அவர்கள் தாங்கள் செத்தாலும் சரி, உயிரைப் பாரோம் என்று, செம்மறிப்புருவையின் இரத்தத்தைக் கொண்டும், தங்கள் சாட்சியத்தின் வாக்கியத்தைக் கொண்டும் அதை ஜெயித்தார்கள்.

12. ஆகையால் பரலோகங்களே, அகமகிழுங்கள்; அவைகளில் வசிக்கிற வர்களே, அகமகிழுங்கள். பூமிக்கும் சமுத்திரத்துக்கும் ஐயோ கேடு! இதோ, பசாசானவன் தனக்குச் சொற்பக் காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த ஆங்காரங்கொண்டவனாய் உங்களிடத்தில் இறங்கியிருக்கிறான் என்று சொல்லக்கேட்டேன்.

13. பறவை நாகம் தான் பூமியிலே தள்ளப்பட்டதைக்கண்டு, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.

14. அந்த ஸ்திரீ வனாந்தரத்திலே தனக்குரிய ஸ்தலத்துக்குப் பறந்து போகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. அவ்விடத்திலே அவள் அந்தப் பாம்புக்கு எட்டாத்தொலையில் காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படுகிறாள்.

15. அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளம் கொண்டுபோகும்பொருட்டு அவளுக்குப்பிறகே நாகமானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோல் ஜலம் பாயும்படி செய்தது.

16. பூமியானது அந்த ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து பறவைநாகம் தன் வாயிலிருந்து பாயச் செய்த வெள்ளத்தை உரிஞ்சிக் கொண்டது.

* 15-16. திருச்சபையை அழிக்கும்படி பசாசானது பற்பல துன்ப துரிதங்களையும், வேதகலாப உபத்திரவங்களையும் வெள்ளம்போல் பெருகிவரச் செய்தாலும், அவைகள் மிஞ்சாதபடி சர்வேசுரன் இயல்பான பற்பல வழிபாடுகளைக்கொண்டு அவைகளை அடக்கி வருகிறாரென்று அறிக.

17. ஆதலால் பறவை நாகமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, சர்வேசுரனுடைய கற்பனைகளை அநுசரிக்கிறவர்களும் சேசுக்கிறீஸ்துவின் சாட்சியத்தையுடைவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனேகூட யுத்தம்பண்ணப் புறப்பட்டுப் போய்,

18. கடற்கரை மணல்மேல் நின்றது.