கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 09

தர்மங் கொடுக்கச்சொல்லி அதன் பலன்களை வர்ணித்துக் காட்டுகிறார்.

1. பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படுகிற தர்ம உதவியைக் குறித்தோவெனில், நான் உங்களுக்கு அதிகமாய் எழுதுவது அவசியமில்லை. 

2. ஏனென்றால் நான் உங்கள் மன உற்சாகத்தை அறிந்திருக்கிறேன். இதனாலே அக்காயா நாட்டிலுள்ளவர்கள் போனவருஷந்தொடங்கி (இந்தத் தர்ம காரியத்துக்கு) ஆயத்தமாயிருக்கிறார்களென்றும் உங்களிடத்திலுள்ள இந்த வேகமான பற்றுதல் அநேகரைத் தூண்டிவிட்டதென்றும் நான் மக்கேதோனியரிடத்தில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசுகிறேன்.

3. இப்படியிருக்க, நாங்கள் உங்களைக் குறித்துப் பாராட்டுகிற பெருமை இதுகாரியத்திலே வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடிக்கு நீங்கள் தயாராயிருக்கத்தக்கதாக இந்தச் சகோதரர்களை உங்களிடத்தில் அனுப்புகி றேன்.

4. அன்றியும் மக்கேதோனியர் எங்களுடனேகூடவந்து, நீங்கள் தயாரில்லா திருக்கக் கண்டால், இதுகாரியத்திலே நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நான் சொல்லாதபடி நாங்களே வெட்கப்பட வேண்டியதாயிருக்குமே.

5. இதனிமித்தம் உங்களாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மம் உலோபித்தனமாயல்ல, உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படி அதைத் தயாரித்து ஆயத்தஞ் செய்வதற்காகச் சகோதரர் முன்னதாக உங்களிடத்தில் வரும்படி அவர்களை கேட்டுக்கொள்வது அவசியமென்று எண்ணினேன்.

6. பின்னும் நான் சொல்லுகிறதாவது: சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான். பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். (கலாத். 6:8, 9.)

7. ஆகிலும் மனவருத்தத்தோடுமல்ல, கட்டாயத்தினாலுமல்ல, அவனவன் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கக்கடவான். ஏனென்றால் முகமலர்ந்து கொடுக்கிறவனிடத்தில் சர்வேசுரன் பிரியப்படுகிறார். (சர்வப். 35:11.)

8. மேலும் நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் உங்களுக்குப் போதுமான யாவற்றையுங் கொண்டிருந்து, எவ்வித நற்கிரியைகளிலும் சம்பூரணமுள்ளவர்களாகும்படி சர்வேசுரன் உங்களிடத்தில் எவ்வித நன்மைகளையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

9. இதற்கொத்தவண்ணம்: வாரி இறைத்தான்; தரித்திரர்களுக்குக் கொடுத்தான். அவனுடைய நீதி காலாகாலத்துக்கும் நிலைநிற்கிறது என்று எழுதியிருக்கின்றது. (சங். 111:8.)

10. ஆகையால் விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறவர் உங்களுக்குப் புசிப்பதற்கு அப்பத்தையுங் கொடுத்து, உங்கள் விதையையும் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் பலன்களையும் வர்த்திக்கப்பண்ணுவார்.

11. இந்தப்பிரகாரமாய் நீங்கள் சகலத்திலும் நிறைந்தவர்களாகி, எங்களாலே சர்வேசுரனுக்குத் தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாகச் சகல நேர்மையான தர்மத்திலும் பெருகி வளருவீர்கள்.

12. ஏனெனில் இந்தத் தர்ம ஊழியத்தின் பணிவிடையானது பரிசுத்தவான்களுடைய குறைகளை நிவர்த்தியாக்குகிறதுமல்லாமல், கர்த்தருக்கு அநேகாநேக தோத்திரஞ் செய்யப்படுவதற்கும் பூரண வழியாயிருக்கின்றது.

13. அவர்கள் இந்தத் தர்ம ஊழியத்தின் நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறீஸ்துநாதருடைய சுவிசேஷத்தின்மட்டில் பிரசித்தமாய்க் காண்பிக்கிற கீழ்ப்படிதலைப்பற்றியும், தங்களுக்கும் மற்றெல்லோருக்கும் நீங்கள் நேர்மையாய்ச் செய்கிற தர்மத்தைப்பற்றியும் சர்வேசுரனை மகிமைப்படுத்தி,

14. உங்களுக்காக வேண்டிக்கொள் வதுந்தவிர, சர்வேசுரன் உங்களுக்கு அளித்த உன்னத வரப்பிரசாதத்தினிமித்தம் உங்கள்மேல் மிகவும் பிரியப்படுவார்கள்.

15. சர்வேசுரன் செய்தருளின வாக்குக்கெட்டாத உபகாரத்துக்காக அவ ருக்குத் தோத்திரமுண்டாகக்கடவது.