கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 10

சின்னப்பர் தம்மைப் புறக்கணித்த கள்ளப் போதகர்களுடைய ஆங்காரத்தை மறுத்து, தம்முடைய அப்போஸ்தலத்துவத்தின் ஞான வல்லமையை விளக்கிக் காட்டுகிறார்.

1. உங்கள் நடுவிலிருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலிருக்கும் போது உங்கள்மேல் துணிவாயுமிருக்கிற சின்னப்பனாகிய நான் கிறீஸ்துநாதருடைய சாந்தத்தையும், பொறுமையையும் முன்னிட்டு உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறதாவது:

2. எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்களென்று எண்ணுகிற சிலருக்கு விரோதமாய் நான் கண்டிப்பாயிருக்கிறதாக எண்ணப்படுகிறேனே; அந்தக் கண்டிப்பை நான் உங்களிடத்தில் வரும்போது பிரயோகிக்காதபடி நீங்கள் நடந்துகொள்ள உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

3. ஏனெனில் நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்துக்கொத்தபடி போராடுகிறவர்களல்ல.

4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்குரியவைகளல்ல: கொத்தளங்களை நிர்மூலமாக்குவதற்குத் தேவ சமூகத்தில் வல்லமையுள்ளதாயிருக்கின்றது. (எபே. 6:13.)

5. அவைகளைக்கொண்டு நாங்கள் யுக்திகளையும், சர்வேசுரனை அறியும் அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எவ்விதப் பெருமையையும் நிர்மூலமாக்கி, எல்லா அறிவையும் கிறீஸ்துநாதருக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறோம்.

6. அன்றியும் உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறியபின், எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் நீதியுள்ள ஆக்கினையிடவும் ஆயத்தமாயிருக்கிறோம்.

7. வெளிப்பார்வைக்குத் தோன்றுகிறபடி பாருங்கள். ஒருவன் தன்னைக் கிறீஸ்துவுக்குள்ளானவன் என்று நம்பு வானாகில், தான் கிறீஸ்துவுக்குள்ளா யிருக்கிறதுபோல, நாங்களும் கிறீஸ்து வுக்குள்ளாயிருக்கிறோம் என்று தனக் குள்ளே மறுபடி சிந்தித்துக்கொள்ளக் கடவான்.

8. ஏனெனில் உங்களை இடித்துத் தள்ளுவதற்கல்ல; உங்களைக் கட்டியெழுப்புவதற்கு ஆண்டவர் எங்களுக்குத் தந்தருளின அதிகாரத்தைப்பற்றி நான் சற்றே அதிகமாய் மேன்மை பாராட்டினாலும், அதற்காக நான் வெட்கப்படமாட்டேன். 

9. நான் நிருபங்களால் உங்களைப் பயமுறுத்துகிறதாக நீங்கள் நினைக்க வேண்டுவதில்லை.

10. சிலரோ: அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும், பலமுமுள்ள வைகள், சரீரத்தின் தோற்றமோ பலவீன மானதென்று, வாக்கு புறக்கணிப்புக் குரியதென்றும் சொல்லுகிறார்களே.

11. அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது நிருபங்களின் வழியாய் வாக்கியத்தில் எப்படியிருக்கிறோமோ அப்படியே முகதாவிலிருக்கும்போது கிரியையிலும் இருப்போமென்று நினைத்துக் கொள்ளக்கடவான்.

12. அப்படியிருந்தும், தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளுகிற சிலருக்கு எங்களை இணையாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம். ஆனால் எங்களைக்கொண்டே எங்களை அளந்து, எங்களோடு எங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிறோம்.

13. அப்படியும் நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டுகிறதில்லை. உங்களிடம் வரைக்கும் வந்து சேரத்தக்கதாகச் சர்வேசுரன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மை பாராட்டுகிறோம். (எபே. 4:7.)

14. உங்களிடத்தில் வந்து சேராதவர்களைப்போல நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை. நாங்கள் கிறீஸ் துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே.

15. மற்றவர்களுடைய வேலைகளினிமித்தம் எங்கள் அளவைக் கடந்து மேன்மை பாராட்டமாட்டோம். ஆனால் உங்கள் விசுவாசம் விர்த்தியாகும்போது, உங்கள் மத்தியில் நாங்கள் எங்கள் அளவில் மிகவும் பெருகி விர்த்தியடைவோமென்றும்,

16. இன்னும் மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே அவர்களால் ஆயத்தம் செய்யப்பட்டவைகளினிமித்தம் நாங்கள் பெருமை பாராட்டாமல், உங்களுக்கு அப்பாலிருக்கும் இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்போமென்றும் நம்பியிருக்கிறோம்.

17. எப்படியிருந்தும், மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரிடத்திலே மேன்மைபாராட்டுவானாக. (எரே. 9:23; 1 கொரி. 1:31.)

18. ஏனெனில் தன்னைத்தானே புகழுகிறவன் புகழ்ச்சிக்குரியவனல்ல. சர்வேசுரனாலே புகழப்படுகிறவனே புகழ்ச்சிக்குரியவன்.