ஜெருசலேமிலுள்ள தரித்திரரான கிறீஸ்தவர்களுக்காகத் தர்மப்பணங்களைத் தங்களுக்குள்ளே சேகரித்து வைக்கும்படி கொரிந்தியரைக் கேட்டுக்கொள்ளுகிறார்.
1. இப்போது சகோதரரே, மக்கேதோனியா நாட்டுத் திருச்சபைகளுக்குச் சர்வேசுரன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2. எப்படியெனில், அவர்கள் பட்ட துன்ப உபத்திரவ சோதனைகளிலே அவர்களுடைய சந்தோஷம் பூரணமாயிருந் ததுமன்றி, அவர்களுடைய அட்டத் தரித்திரமும் அவர்களுடைய இயல்பான உதாரத்துவ செல்வமாய்ப் பெருகிற்று.
3. அதெப்படியென்றால், அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாகவும், சக்திக்கு மேலாகவும் மனப்பூர்வமாய்க் கொடுக்க மனதாயிருந்தார்கள் என்று நானே அவர் களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.
4. தாங்கள் செய்யும் உபகாரத்தையும், அர்ச்சிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் மன்றாடினார்கள்.
5. அன்றியும் அவர்கள் நாங்கள் எண்ணியிருந்ததுபோல் மாத்திரம் செய் யாமல், தேவ ஏவுதலின்படி முந்த முந்தத் தங்களை கர்த்தருக்கும், பின்பு எங்க ளுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
6. ஆனதால் தீத்து என்பவர் இந்தத் தர்மக் கிரியையை முன் உங்களிடத்தில் துவக்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டோம்.
7. இதன்றியே நீங்கள் விசுவாசத்திலும், வாக்கிலும், அறிவிலும், எவ்வித ஜாக்கிரதையிலும், எங்கள்மேல் உங்களுக்குள்ள அன்பிலும், இன்னும் மற்றச் சகலத்திலும் விசேஷித்திருக்கிறதுபோல, இந்தத் தர்ம காரியத்திலும் விசேஷித்திருப்பீர்களாக.
8. இதை நான் உங்களுக்குக் கட்டளையாக சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையின் வழியாய் உங்களுடைய அன்பின் எதார்த்த குணத்தைச் சோதிக்கும்பொருட்டுச் சொல்லுகிறேன்.
9. நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய கிருபையை அறிந்திருக்கிறீர்களே. அவர் ஐசுவரிய ராயிருந்தும், அவருடைய தரித்திரத்தால் நீங்கள் ஐசுவரியராகும் பொருட்டு, அவர் உங்கள்நிமித்தம் தரித்திரரானார். (மத். 8:20.)
10. இவ்விஷயத்திலே நான் உங்களுக்குக் கொடுக்கிற ஆலோசனையேதென்றால், நீங்கள் இந்தத் தர்ம காரியத்தைச் செய்வதற்குமாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று சென்ற வருஷமுதல் மன உற்சாகங்கொள்ளத் துவக்கினவர்களாகையால், இது உங்களுக்குத் தகுதியாயிருக்கும்.
11. ஆகையால் இப்போது இதைச் செய்து நிறைவேற்றுங்கள். இவ்வண்ண மாய்க் கொடுக்கவேண்டுமென்று உங்க ளுக்கு மன உற்சாகமிருப்பதுபோல உங்க ளுக்குள்ளவைகளில் எடுத்துக் கொடுத்து, நிறைவேற்றவும் உற்சாகமிருக்கக்கடவது.
12. கொடுக்கும்படி ஒருவனுக்கு நல்ல மனமிருந்தால், அவன் சக்திக்கு மிஞ்சினதல்ல, அவன் சக்திக்குத் தக்கது (கொடுப்பது) அங்கீகரிக்கப்படும்.
13. ஏனெனில் மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்குக் கஷ்டமும் உண்டாகும்படி அல்ல; சரிசமானம் உண்டாயிருக்கும்படியாகவே இதைச் சொல்லுகிறேன்.
14-15. ஆகையால் அதிகமாய்ச் சேர்த்த வனுக்கு மிச்சமானதுமில்லை; கொஞ்ச மாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானது மில்லை என்று எழுதியிருக்கிறபடியே இந்தச் சரிசமானம் உண்டாகும்படி அவர்களுடைய செல்வப் பெருக்கம் உங்களுடைய வறுமைக்கு உதவத்தக்க தாக இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவக்கடவது. (யாத். 16:18.)
16. உங்களைப்பற்றித் தீத்துவின் இருதயத்திலும் இப்படிப்பட்ட கவலையுண்டாகச் செய்தருளின சர்வேசுரனுக்குத் தோத்திரம்.
17. ஏனெனில் நான் கேட்டுக் கொண்டதை அவர் ஏற்றுக்கொண்டதுமல்லாமல், அவரே இதைப்பற்றி அதிக ஜாக்கிரதையுள்ளவராயிருந்து தமது விருப்பத்தின்படியே உங்களிடம் வரப் பயணப்பட்டார்.
18. அவரோடுகூட ஒரு சகோதரனையும் அனுப்பியிருக்கிறோம்; இவர் சுவிசேஷத்தினிமித்தம் எல்லாச் சபைகளிலும் புகழ்பெற்றிருக்கிறார்.
19. இதுவுமன்றி கர்த்தருக்குத் தோத்திரமாகவும் எங்கள் நல்ல மனதிற்கு அத்தாட்சியாகவும் நாங்கள் செய்துவருகிற இந்தத் தர்ம காரியத்திலே இவர் எங்களுடைய பயணத்துக்குத் துணையாகத் திருச்சபையால் நியமிக்கப்பட்டவராகவும் இருக்கிறார்.
20. ஏனெனில் எங்கள் ஊழியத்தால் சேர்க்கப்படுகிற மிகுதியான இந்தத் தர்மத்தைப்பற்றி ஒருவனும் எங்கள்மேல் குற்றஞ்சாட்டாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,
21. கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனிதர்களுக்கு முன்பாகவும் நன்மையானவைகளை முன்னிட்டு நடக்கிறோம். (உரோ. 12:17.)
22. மேலும் அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்போது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய மற்றொரு சகோதரனையும் அவர்களோடு அனுப்பியிருக்கிறோம்.
23. இவ்விதமாகத் தீத்து என்பவர் எனக்குத் துணைவரும், உங்களுக்காக என்னோடு உடன்வேலையாளுமாயிருக்கிறார். மற்றச் சகோதரர்களோ திருச்சபைகளால் அனுப்பப் பட்டவர்களும், கிறீஸ்துநாதருடைய மகிமையுமாயிருக்கிறார்கள்.
24. ஆகையால் சபைகளின் முன்பாக உங்கள் அன்பையும், உங்களைப் பற்றி நாங்கள் கொண்ட பெருமையையும் அவர்களுக்கு அத்தாட்சியாகக் காண்பியுங்கள்.