தேவமாதாவின் வணக்கமாதம் - மே 08

கர்த்தர் மனித அவதாரம் எடுத்த பரம இரகசியத்தில் பரிசுத்த கன்னிமரியாயின் மகிமையை விளக்குகிறது!

1. இந்தப் பரம இரகசியத்தில், பரிசுத்த கன்னிமரியாயி உலகத்துக்கெல்லாம் இராக்கினியாக நியமிக்கப்பட்டார்கள்.

சுதனாகிய சர்வேசுரன் கன்னிமரியாயின் உதரத்தில் மனித உருவை எடுத்து அன்னைக்கு மெய்யான மைந்தனானார். அன்னையுடைய மைந்தன் அரசர்க்கெல்லாம் அரசருமாய் சகலருக்கும் ஆண்டவருமாய் அளவில்லாத மகிமைப் பிரதாபம் உடையவருமாய் இருந்தாலும், அவர் மற்றப் பிள்ளைகளைப் போல் தமது தாயாகிற கன்னிமரியாயிக்குக் கீழ்ப்படிந்ததினால் அந்தப் பரிசுத்த கன்னிகை ஆண்டவருக்கு ஆண்டவளுமாய் எல்லோருக்கும் இராக்கினியுமாய் எண்ணரிய மகிமை பெற்றவராக இருக்கிறார்கள் என்று சொல்ல அவசியமில்லை. ஆகையால் அதிசயத்துக்குரிய தேவமாதா உயர்ந்த அரியணையில் இருக்கிறதையும் சம்மனசுகள் மாத்திரமல்ல, மோட்ச அரசராகிய சேசுநாதர் முதலாய் அவர்கள் விருப்பத்திற்கு இசைந்து நடப்பதைக் குறித்து மகிழ்ச்சியுற்று அன்னைக்கு கீழ்ப்படிந்த குமாரனை ஆராதித்துத் தேவமாதாவுக்குக் கொடுக்கப்பட்ட மகிமையைப்பற்றித் தோத்திரம் சொல்லுவோமாக.

2. சகல வரப்பிரசாதங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட பரம இரகசியம்.

கன்னிமரியாள் தமது திரு உதரத்தில் சுதனாகிய, சர்வேசுரனைக் கர்ப்பந்தரித்த வேளையில் உலக செல்வங்களை அடையாமல், சகல ஞான செல்வங்களையும் சம்பூரணமாய் பெற்றுக் கொண்டார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. இதில் அறிய வேண்டியதாவது இந்தப் பரிசுத்த கன்னிகையானவர்கள் சர்வேசுரனுடைய தாயாவதற்கு முன்னே சகல வரப்பிரசாதங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், ஞான செல்வமாகிய இந்த வரப்பிரசாதங்கள் அன்னைக்கு சொந்தப் பொருள் என்று எண்ணாமல் சர்வேசுரனுக்குச் சொந்த நன்மை என்று சொல்ல வேண்டியிருந்தது. அன்னை தேவதாயார் ஆன பின்னர் சகல ஞான செல்வங்களையும் உடையவருமாய் சர்வ வரப்பிரசாதங்களுக்குக் காரணமுமாய் இருக்கிற சுதனாகிய சர்வேசுரன் அன்னையின் மைந்தனாதலால் அவர் கொண்டிருக்கிற ஞான நன்மைகளையெல்லாம் பங்கிடும் மத்தியஸ்தியாக விளங்குகின்றார்கள் அன்னை. அப்படி இருக்க, கன்னிமரியாள் மோட்ச நன்மைகளை நமக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்கள் என்பது பற்றி நம்பிக்கையோடு நமக்குத் தேவையான வரப்பிரசாதங்களை மிகுந்த தாழ்ச்சியுடன் அன்னையிடம் கேட்போமாக.

3. சர்வேசுரனுடைய தாயாக உயர்த்தப்பட்ட பரம இரகசியம்.

சுதனாகிய சர்வேசுரன் மனித அவதாரம் எடுத்து உற்பவித்த நேரத்தில் கன்னிமரியாள் மற்ற மனிதர்களைப்போல் ஆண்டவருக்கு அடிமையாய் இருந்தாலும் தமது தேவதாய் தத்துவத்தில் தன்னைச் சுதந்திரத்தினால் சகல மோட்சவளால் வணங்கப்படவுள்ளார். அப்படிப்பட்ட தன்மை எவ்வளவு மேன்மையாய் இருக்கிறதென்று சொல்ல வேண்டுமானால் சர்வேசுரன் அன்றி வேறொருவராலும் சொல்ல முடியாது. சம்மனசுகள் முதலாய் அன்னையைக் குறித்து சதாகாலமும் பிரசங்கம் செய்து அன்னையுடைய உன்னத தன்மையை சொல்லிக் காட்டுவதற்கு துடிதுடித்தாலும் தகுந்த விதமாய் அன்னையைக் கொண்டாடவும் புகழவும் சக்தியற்றவர்களாய் இருப்பார்கள். இப்பேர்ப்பட்ட மகிமையும் வல்லபமுள்ள பரம தேவதாயை நாமும் நம்மால் கூடினமட்டும் ஸ்துதிப்போமானால் அன்னை நமக்குத் தேவையான உதவிகளைக் கொடுக்கத் தவறமாட்டார்களென நம்பிக்கையாய் இருக்கக்கடவோம்.


செபம்.பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளே! சகல வரப்பிரசாதங்களுக்கும் காரணமாயிருக்கிற சேசுநாதரை நீர் பெற்றதினால் சகல ஞான செல்வங்களும் உடையவர்களாகி அவைகளை மனிதருக்குக் கொடுக்க உமக்கு வல்லபமும் மனதும் இருக்கிறதைப்பற்றி நான் மகிழ்ச்சியுற்று ஆறுதலடைகிறேன். ஆகையினால் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமக்கு ஒப்புக்கொடுத்து தேவரீர் என் எளிமைத்தனத்தைப் பார்த்து இரங்கி என் ஜீவிய காலத்திலும் மரண வேளையிலும் எனக்கு வேண்டிய அனுக்கிரகங்களைக் கொடுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக. தேவதாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எட்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

முடிந்தால் ஓர் எளியவருக்கு துணி கொடுக்கிறது. முடியாவிட்டால் ஆறுதலாவது சொல்லுகிறது.

புதுமை

பரிசுத்த திருச்சபை தனக்கு நேரிடும் சகல தீமைகளிலும் தேவமாதாவின் ஆதரவைத் தேடுகிறது வழக்கம். பரிசுத்த கன்னிகையோவெனில், தம்மிடம் வருகிறவர்களை மறுத்துத்தள்ளாமல் எப்பொழுதும் தமது வல்லபத்தையும் கிருபையையும் காண்பிக்கச் சித்தமானார். லெப்பாந்தோ என்னும் போரில் தேவ இராக்கினி கிறிஸ்தவர்கள்மேல் வைத்த கிருபை விசேஷமாய் விளங்கித் துலங்கினது.

எவ்வாறெனில் 1571-ஆம் ஆண்டில் முகம்மதியர் தாங்கள் அடைந்த வெற்றிகளைக்கண்டு மிகுந்த கர்வங்கொண்டு சகல கிறிஸ்தவர்களையும் தங்களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டுமென்றும், சகல தேவாலயங்களின் மீதும் தங்கள் வேதத்தின் அடையாளக் கொடியைத் திருச்சிலுவைக் கொடிக்குப் பதிலாய் வைக்க வேண்டுமென்றும், தங்களுடைய அரசனை உலகில் எங்கும் ஏகாதிபதியாய் நியமிக்க வேண்டுமென்றும் தீர்மானித்தார்கள்.

இந்த அகங்கார எண்ணத்தை நிறைவேற்றி வைக்க பெருமளவில் படைகளைச் சேர்த்து, அநேக போர் கப்பல்களைச் சேகரித்து, பல இராச்சியங்களை அழித்து, பட்டணங்களையும் பிடித்துக் கடைசியாய் இத்தாலிய நாட்டை தங்கள் கைவசமாக்க வேண்டுமெனத் துணிந்தார்கள். அக்காலத்தில் திருச்சபையை ஆண்டுவந்த 5-ம் பத்திநாதர் பாப்பரசர் அத்தகைய தீமையை களையும்படியாக தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடித் திருச்சபையில் எங்கும் பக்தியுள்ள ஜனங்கள் யாவரும் 153 மணிச் செபத்தைச் செய்யக் கற்பித்து கிறிஸ்தவர்களுக்கு வெற்றி வருமென்று தளராத விசுவாசத்தோடிருந்தார்.

யுத்தகளத்தில் சிலுவைக் கொடியை உயர்த்தும்படி கிறிஸ்தவர்களுடைய சேனாதிபதிக்கு அவர் அனுப்பும்போது, தேவமாதாவின் உதவியினால் வெற்றி வருமென்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்று சொல்லி அனுப்பினார். அதனால் மிகுந்த சந்தோஷப்பட்டுத் தளவாய் கப்பலேறி பகைவர்களுக்கு எதிராகப் போனார். கிறிஸ்தவர்கள் தங்களுடைய போர் கப்பல்கள் பகைவர்களுடைய கப்பல்களுக்கு, அதிகக்குறைவாய் இருந்த போதிலும் பின் வாங்காமல் போருக்கு நின்றார்கள்.

போர் தொடங்கும் நேரத்தில் பாப்பானவர் அனுப்பின சிலுவைக் கொடி உயர்த்தப்படுகிறதைக்கண்டு கிறிஸ்தவர்களுடைய போர்வீரர் எல்லோரும் சாஷ்டாங்கமாக விழுந்து இயேசுகிறிஸ்து நாதருடையவும் பரிசுத்த கன்னிமரியாவுடையவும் திருநாமங்களை உச்சரித்து தேவகாரியத்துக்காக எங்களுடைய இரத்தமெல்லாம் சிந்தத் தயாராயிருக்கிறோம், என்று வார்த்தைப்பாடு கொடுத்து, மிக்க மகிழ்ச்சியோடும் தைரியத்தோடும் எழுந்திருந்து பகைவர்கள் மேல் சிங்கங்களைப்போல் விழுந்தார்கள்.

போர் துவக்கத்தில் காற்று இவர்களுக்கு விரோதமாய் இருந்தது. ஆனால் தேவ வல்லபத்தினால் மாறிக் கிறிஸ்தவர்களுக்கு சாதகமாயிற்று. அப்படியிருந்தாலும் ஐந்து மணி நேரம் வீரத்தோடு போராடினார்கள். கடைசியில் முகமதியர் கலங்கிப் பயந்து தோல்வியடைந்தார்கள். அவர்களுடைய கப்பல்கள் ஏறக்குறைய எல்லாம் தண்ணீரில் அமிழ்ந்திப்போய், அநேகாயிரம் போர்வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய கப்பலில் அடிமை வேலை செய்திருந்த 15,000 கிறிஸ்தவர்கள் மீட்கப்பட்டனர். அத்துடன் அந்த தோல்வியினால் அவர்களுடைய அகங்காரமும் வல்லபமும் தரைமட்டமாக்கப்பட்டது.

இத்தகைய பெரிய யுத்தம் நடக்கும் வேளையில் அர்ச். பாப்பானவர் தமது ஆலோசனையாளருடன் உரோமாபுரியில் சில காரியங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது பரிசுத்த தந்தை திடீரென ஆலோசனையாளரை நோக்கி, கிறிஸ்தவர்கள் வெற்றியடைந்தார்கள். சர்வேசுரனுக்குத் தோத்திரம் சொல்வோம் வாருங்கள் என்றார். இவர் தூரதிருஷ்டியினால் கண்டறிந்தது மெய்யாகவே அதே நிமிடத்தில் நிறைவேறியது, பரம தேவதாயின் அனுக்கிரகத்தினால் இந்த அற்புத வெற்றி கிட்டியது என அறிந்து கிறிஸ்தவர்களின் சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வார்த்தைகளைத் தேவமாதாவின் பிரார்த்தனையில் சேர்க்கவும். புனித செபமாலை மாதாவின் திருநாள் அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அதற்காகக் கொண்டாடப்படவும் வேண்டுமென கட்டளையிட்டார்.

கிறிஸ்தவர்களே, நீங்கள் படும் இன்னல், இடைஞ்சல்களில் உங்களுக்கு அடைக்கலமான செபமாலை மாதாவைப் பக்தியோடு மன்றாடக்கடவீர்கள்.