தேவமாதாவின் வணக்கமாதம் - மே 07

சம்மனசானவர் தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதின் பேரில்!

1. இந்தப் பரம இரகசியத்தில் சர்வேசுரனுடைய நேசம் விளங்குகிறது.

சர்வேசுரன் உலகத்தை மீட்பதற்காக நமக்குச் சரிசமானமாய் இருக்கிற தம்முடைய ஏக குமாரன் மனித அவதாரம் எடுக்க சித்தமாகி கன்னிமரியாயிடத்தில் ஓர் சம்மனசை அனுப்பித் தமது சித்தத்தை வெளிப்படுத்தினார். இந்தக் கன்னிகை தமக்குச் சொன்ன மங்கள வார்த்தைகளை மிகுந்த தாழ்ச்சியோடு கேட்டு தேவசித்தத்துக்கு உட்பட்டுச் சுதனாகிய சர்வேசுரனைத் தமது திரு உதரத்தில் பிள்ளையாகத் தரித்தார்கள் என்பது சத்தியம். இந்தப் பரம இரகசியத்தில் சர்வேசுரன் தமது அளவில்லாத நேசமும், மிகுதியான தயாளமும், அளவறுக்கப்படாத ஞானமும் விளங்கச் செய்தார். ஆகையால் பாவ விமோசனம் செய்வதற்குச் சுதனாகிய சர்வேசுரன் மனித அவதாரம் எடுத்து தமது இரத்தமெல்லாம் சிந்த வேண்டியதிருந்ததால் பாவமானது சகல பொல்லாப்புகளிலும் மிகப்பெரிய பொல்லாப்பாய் இருக்கிறதென்று அறியக்கடவோம். அத்துடன் நமது மீட்பருக்கு தாயாக சர்வேசுரன் கன்னிமரியாயைத் தெரிந்து கொண்டதினால் அவருடைய தயாளத்துக்காக தோத்திரம் சொல்லி தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன வானதூதருடன் சேர்ந்து அன்னையை நாம் வணங்குவோமாக.

2. தேவ சுதனுடைய மனத்தாழ்ச்சி விளங்குகிறது.

தேவமாதாவின் திரு உதரத்தில் மனித அவதாரம் எடுத்த சுதனாகிய சர்வேசுரன் தம்மை மிகவும் தாழ்த்திக்கொண்டார். எப்படியெனில் நோவுக்கும் சாவுக்கும் எட்டாதவருமாய்ச் சர்வத்துக்கும் வல்லவருமாய் அளவில்லாதவருமாய் இருக்கிறவர் மனித அவதாரத்தின் வழியாக சாவு நோவு வேதனை முதலான நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு பாவத்தினால் தமது பிதாவாகிய சர்வேசுரனுக்கு வந்த அவமானங்களைப் பரிகரிக்க வேண்டுமென்று தம்மை அளவின்றித் தாழ்த்திக் கொண்டார். தாழ்ச்சியாகிற புண்ணியத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கும்படியாக அளவின்றித் தம்மை தாழ்த்திக்கொண்ட சர்வேசுரன் சமூகத்தில் நீசப்புழுவாகிய மனிதன் அகங்காரங்கொள்ளுகிறது எவ்வளவு அநியாயமும் அக்கிரமுமாயிருக்கிறது. ஆனால் தாழ்ச்சியில்லாதவன் கரையேறக் கூடாது என்பதினால் மிகவும் அவசியமான இந்தப் புண்ணியத்தை உங்கள் ஆத்துமத்தில் விளைவிக்க வேண்டுமென்று தேவமாதாவையும் அவர்களுடைய திரு மைந்தனையும் நோக்கி மன்றாடுவீர்களாக.

3. தேவமாதா பெற்ற மகிமை விளங்குகிறது.

இந்தப் பரம இரகசியத்தில் கன்னி மரியாள் அடைந்த உன்னத மகிமையைப்பற்றி தியானிப்போம். சுதனாகிய சர்வேசுரன் அவர்களிடத்தில் மனிதவதாரம் எடுத்த வேளையில் அந்தப் பரிசுத்த கன்னிகை ஒருக்காலும் கன்னி மகிமை கெடாமல் சர்வேசுரனுடைய மெய்யான தாயாகி மனிதர்களுக்கும் சகல சம்மனசுகளுக்கும் மேலானார்கள். சர்வேசுரன் அளவில்லாத வல்லமையுள்ளவராய் இருந்தாலும், இந்த மேன்மையைவிட அதிகமான மேன்மை வேறு எவருக்கும் அவரால் கொடுக்க முடியாது. வேதபாரகர் சொல்லியுள்ளபடி சர்வேசுரன் இந்த உலகத்தைக் காட்டிலும் மேன்மையான வேறு உலகை உண்டு பண்ணலாம். ஆனால் தேவமாதாவைப் பார்க்க அதிக உத்தமமான மாதாவை உண்டு பண்ண முடியாது. ஆகையால் அத்தகைய மேலான மகிமையைப் பெற்ற கன்னிமரியாள் திருப்பாதம் பற்றி அவர்களை உற்சாகத்தோடு வணங்கி அன்னையின் அடைக்கலத்தை தேடிச் செல்வோமாக.

செபம்.

சர்வேசுரன் மேன்மையான மகிமைப் பிரதாபத்துக்குத் தெரிந்து கொண்ட நிகரில்லாத பரிசுத்த கன்னிகையே! பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியே, தாழ்ச்சியுள்ள மாமரியே! என் அகங்கார கர்வத்தோடு உமது அண்டையில் நிற்க வெட்கப்பட்டு நான் உம்மிடத்தில் பேச அஞ்சி நடுங்குகிறேன். ஆகிலும் பாவியாயிருந்தாலும் வானதூதரோடு உமக்கு மங்கள வார்த்தை சொல்ல ஆசையாயிருக்கிறேன். ஆகையால் அருள் நிறைந்த மரியாயே வாழ்க! நீர் பூரணமாய் அடைந்த இஷ்டப்பிரசாதத்தில், ஏதாகிலும் எனக்குக் கொடுத்தருளும். சர்வேசுரன் உம்மிடத்தில் இருக்கிறாரே அவர் என்னிடத்தில் இருக்கவும் நான் அவருடன் மோட்சத்தில் வீற்றிருக்கவும் எனக்கு தயை செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது : 

எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே, வாழ்க.

ஏழாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

ஒவ்வொருவரும் தான் பாவசங்கீர்த்தனம் எப்போது செய்ததென்றும், தன் குடும்பத்திலுள்ளவர்கள் எப்போது செய்தார்களென்றும் விசாரிக்கிறது.

புதுமை!

கர்த்தர் பிறந்த 1300-ஆம் ஆண்டில் எத்தகைய நன்மைக்கும் பகைவனாகிய பசாசு திருமறையை அழிக்க பிரயாசைப்பட்டதாம். வேத அறியாமையினாலும் மனிதருடைய துர்நடத்தையினாலும் இயேசு கிறிஸ்துநாதருடைய பரிசுத்த வேதம் மறைந்து போகிறதுபோல் இருந்தது. அச்சமயத்தில் அதிகக் கெடுதல் செய்வதற்கு அல்பிஜேன்ஸ் என்னும் பக்தியற்ற பதித மார்க்கமானது பிரான்சு நாட்டில் அனைத்தையும் நாசமாக்கக் கூடிய ஓர் வெள்ளப் பிரவாகம்போல் பரம்பியது, இந்தத் துஷ்டப்பதிதர் திருச்சபையின் பேரில் கொண்ட பகையினாலும் வேத முறைமைகளையெல்லாம் அழிக்க வேண்டுமென்ற மூர்க்கத்தினாலும் தேவாலயங்களை நிர்மூலமாக்கவும், குருக்களைக் கொன்று போடவும், எங்கும் கொள்ளையடிக்கவும் துணிந்தார்கள்.

ஆனால் தாம் உண்டாக்கின் திருமறையை எந்நாளும் காப்பாற்றி வருகிறவராகிய இயேசு கிறிஸ்துநாதர் இந்தத் துன்மார்க்கத்தை நீக்கி ஜனங்களின் துர்க்குணங்களை ஒழுங்கு செய்யும் பொருட்டு தம்முடைய அப்போஸ்தலருக்கு நிகரான புனித சாமிநாதரை தெரிந்துகொண்டார். அவர் அதிகம் முயன்று அந்தத் துன்மார்க்கம் பரம்பின நாடுகள் எல்லாம் சுற்றித் திரிந்து ஒன்றுக்கும் அஞ்சாத மனத்துணிவோடு வேத சத்தியங்களைப் பிரசங்கித்தார். அவரது உத்தம நடத்தையினாலும் அவர் செய்த கணக்கற்ற புதுமைகளாலும் தாம் போதிக்கும் சத்தியங்களின் உண்மையை உறுதி பெறச் செய்தார். அவர் சொன்னதெல்லாம் தேவசிநேகத்தின் அக்கினிப் பொறிகளைப் போலிருந்தது.

மேலும் புனித சாமிநாதர் பரிசுத்த கன்னிகையின் பேரில் மிகவும் பக்தி விசுவாச நம்பிக்கையுள்ளவராய் இருந்து அன்னையுடைய அடைக்கலத்தை தேடி அன்னை மூலமாக விசேஷமாய்ப் பாவிகளையும் பதிதர்களையும் மனந்திருப்பிக் கொண்டு வந்தார். தான் செய்கிற சகல பிரசங்கங்களிலும் தேவமாதாவின் பாத கமலங்களைப்பற்றி சிரம் தாழ்த்தி வணங்க பரிசுத்த கன்னிகையே நான் உம்மைச் சிநேகித்துக் கொண்டாடவும், உம்முடைய எதிரிகளை எதிர்த்து வெற்றி பெற உதவியருள உம்மை மன்றாடுகிறேன் என்பார்.

அவர் எவ்வளவு பிரயாசைப்பட்டு சில துர்மார்க்கங்களையும் பதிதரையும் திருப்பியிருந்தாலும், தாம் நினைத்தபடி சத்திய வேதத்துக்கு முன்பிருந்த ஞான நன்மை மீண்டும் வரவில்லையெனக் கண்டு அதிகக் கஸ்திப்பட்டு அடிக்கடி தம்முடைய பரம ஆண்டவளிடத்தில் தாழ்ச்சியுடன் முறையிட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் அந்தக் கிருபையுடைத்தாள பரம தாயானவள் தம்மை அவருக்குக் காண்பித்து மகா தயாளத்தோடு அவரை நோக்கி, நீ நம்மைக் குறித்து வழக்கமாய்ச் செய்த 153 மணிச் செபமாலையை எங்கும் வழங்கும்படி அறிவிக்கக் கடவாய். நீ அதைச் செய்வாயாகில் அந்த மூர்க்கமான ஜனங்கள் மனம் திரும்ப தேவ உதவியை அடைவாய் என்றாள்.

இதன்படி புனித சாமிநாதர் எவருடனும் தர்க்கம் செய்யாமல் 153 மணிச் செபத்தை ஜனங்களுக்கு அறிவிக்கவும், அச்செபத்தைப் பக்தியோடு செபிக்கிற வகையைக் காண்பிக்கவும். அதில் வழங்குகிற தேவ இரகசியங்களை பக்தியோடு தியானிக்கிற மேரையை விவரிக்கவும் தொடங்கினார். உடனே சர்வ ஜீவ தயாபர சர்வேசுரனுடைய கிருபாகடாட்சத்தாலும் பரிசுத்த கன்னிமரியாளின் மன்றாட்டினாலும் தேவ வரப்பிரசாதம் இந்த ஜனங்கள் பேரில் ஏராளமாக இறங்கி வந்தது. இந்த அனுக்கிரகத்தினால் ஒரு இலட்சத்துக்கு மேல் பதிதர்கள் தங்கள் துன்மார்க்கங்களை விட்டுத் திருமறையில் சேர்ந்தார்கள். கணக்கற்ற பாவிகள் தங்களுடைய பொல்லாத அக்கிரமங்களை விட்டு நல்லவர்களானார்கள். அப்பொழுது செபமாலை செபிக்கும் வழக்கம் திருச்சபை முழுவதும் பரம்பினதுமன்றி எங்கும் சுகிர்த நன்மைகளை பெறுவித்தது.

தேவமாதாவின் பேரில் பக்தியுள்ள கிறிஸ்தவர்களே, நீங்களும் தேவ வரப்பிரசாதத்தை முழுவதும் அடைய செபமாலையை தினமும் தவறாமல் செபிப்பீர்களாக.