மெய்விவாக அந்தஸ்தின் மேன்மையையும், விரத்தத்துவம், கன்னிமை அந்தஸ்தின் மேன்மையையுங் குறித்து மிகவும் சிறந்த மேரையாய்ப் போதிக்கிறார்.
1. நீங்கள் எனக்கு எழுதிய காரியங்களைக் குறித்து நான் சொல்லுகிறதாவது: ஸ்திரீயைத் தொடாதிருப்பது மனுஷனுக்கு நலமாம்.
2. ஆயினும் வேசித்தனத்தை விலக்கும்பொருட்டு அவனவன் தன் மனைவியையும், அவளவள் தன் புருஷனையும் உடையவர்களாயிருக்கட்டும்.
* 2. இந்த வாக்கியத்தில் விவாகஞ் செய்துகொண்ட ஸ்திரீபூமான்களைப்பற்றிப் பேசியிருக்கிறதல்லாதே சகலரையுங் குறித்துப் பொதுப்படையாகப் பேசவில்லை. சகலரும் விவாகஞ் செய்துகொள்வது அர்ச். சின்னப்பருடைய நோக்கமானால், 8-ம் வசனத்தில் கலியாணஞ் செய்யாத வாலர்களையும் கன்னிகைகளையுங் குறித்து அவர்கள் தம்மைப்போல் இருக்கவேண்டுமென்று அவர் ஆசிப்பதேன்? அப்படியானால் தாம் சொன்னதைத் தாமே மறுத்துப் பேசுகிறாரென்கவேண்டும். ஆகையால் இந்த வசனத்தில் கலியாணஞ் செய்துகொண்டவர்களாகிய ஸ்திரீபூமான்கள் ஒருவரோடொருவர் ஐக்கியமாய் இருக்கவேண்டியதைப்பற்றி மாத்திரம் பேசுகிறாரென்று அறியவும்.
3. புருஷன் தன் மனைவிக்குத் தன் கடமையைச் செலுத்துவானாக. அவ்விதமே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவாள். ( 1 இரா. 3:7.)
4. மனைவியின் சரீரத்தின்மேல் புருஷனுக்கேயன்றி அவளுக்கு அதிகாரமில்லை. அப்படியே புருஷனுடைய சரீரத்தின்மேல் மனைவிக்கன்றி அவனுக்கு அதிகாரமில்லை.
5. வேண்டுமானால், செபத்தியானஞ் செய்வதற்காகச் சிலகாலம் இருவரும் சம்மதித்தாலொழிய மற்றப்படி ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள். அன்றியும் உங்களுடைய இச்சையடக்கமில்லாமையைப்பற்றிச் சாத்தான் உங்களைச் சோதிக்காதபடிக்கு திரும்பவுங் கூடிவாழுங்கள்.
6. ஆகிலும் நான் இதை உங்களுக்குக் கட்டளையாகச் சொல்லாமல், தாட்சண்யமாகச் சொல்லுகிறேன்.
7. ஏனெனில் நீங்கள் எல்லோரும்என்னைப்போலிருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவன் சர்வேசுரனிடத்திலிருந்து தனக்குரிய வரத்தைப் பெற்றுக் கொள்ளுகிறான். அது ஒருவனுக்கு ஒரு விதமாயும், மற்றொருவனுக்கு வேறு விதமாயும் இருக்கின்றது. (மத். 19:12.)
8. விவாகம் இல்லாதவர்களுக்கும், விதவைகளுக்கும் நான் சொல்லுகிறதாவது: நானிருக்கிறதுபோலவே அவர்களும் இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாமே.
9. தங்களை அடக்கிக்கொள்ளாதவர்கள் விவாகம்பண்ணிக்கொள்ளட்டும். ஏனெனில் வேகிறதைவிட விவாகம் பண்ணிக்கொள்கிறது நலமாம். (1 தீமோ. 5:14.)
10. ஆனால் விவாகபந்தனமாயிருக்கிறவர்களுக்கு நானல்ல, கர்த்தர் தாமே கட்டளையிடுகிறதேதென்றால்: மனைவி புருஷனைவிட்டுப் பிரிந்து போகக்கூடாது. (மத். 5:32; 1 கொரி. 7:12.)
11. அப்படிப் பிரிந்துபோனால், ஒன்றில் விவாகமில்லாதிருக்கவேண்டும்; ஒன்றில் தன் புருஷனோடே ஒப்புரவாக வேண்டும். புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடாதிருப்பானாக.
12. மற்றவர்களுக்கோவெனில் ஆண்டவரல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனான ஒருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடன் வாழ்ந்திருக்கச் சம்மதிப்பாளாகில், அவன் அவளைத் தள்ளிவிடாதிருப்பானாக.
13. அப்படியே விசுவாசியான ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடன் வாழ்ந்திருக்கச் சம்மதிப்பானேயாகில், அவள் அவனைத் தள்ளிவிடாதிருப்பாளாக.
14. ஏனெனில் அவிசுவாசியாயிருக்கிற புருஷன் விசுவாசியாயிருக்கிற மனைவி யினால் சுத்தமாக்கப்படுகிறான். அவிசு வாசியாயிருக்கிற மனைவியும் விசுவாசி யாயிருக்கிற புருஷனாலே சுத்தமாக்கப் படுகிறாள். இல்லாவிட்டால், உங்கள் பிள்ளைகள் அசுத்தராயிருப்பார்கள்; இப்பொழுதோவெனில் அவர்கள் சுத்தரா யிருக்கிறார்கள். (உரோ. 11:16.)
15. ஆகிலும் அவிசுவாசியாயிருக்கி றவன் பிரிந்துபோனால், பிரிந்துபோ கட்டும்; ஏனெனில் இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரி யாவது அடிமைப்பட்டவர்களல்ல. சர்வேசுரன் நம்மைச் சமாதானத்தில் அழைத்திருக்கிறார். (உரோ. 14:19.)
16. ஏனெனில் ஸ்திரீயே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயென்று உனக்கு எப்படித் தெரியும்? அல்லது புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயென்று உனக்கு எப்படித் தெரியும்?
17. ஆதலால் ஆண்டவர் அவனவனுக்குப் பகிர்ந்துகொடுத்தது எப்படியோ, சர்வேசுரன் அவனவனை அழைத்தது எப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவான். எல்லாச் சபைகளிலும் நான் இந்தப்பிரகாரமே போதித்துக் கொண்டு வருகிறேன்.
18. விருத்தசேதனம் பெற்றவனாக ஒருவன் அழைக்கப்பட்டிருக்கிறானோ, அவன் விருத்தசேதனமில்லாதவனாகத் தன்னைக் காட்டவேண்டியதில்லை. விருத்தசேதனமில்லாத ஒருவன் அழைக் கப்பட்டிருக்கிறானோ, அவன் விருத்த சேதனம் பெறாதிருப்பானாக.
19. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில் லை. சர்வேசுரனுடைய கற்பனைகளை அநுசரித்துவருவதே காரியம். (கலாத். 5:6.)
20. அவனவன் தான் எந்த ஸ்திதியிலே அழைக்கப்பட்டானோ, அந்த ஸ்திதியிலே நிலைநிற்பானாக. (எபே. 4:1.)
21. அடிமையாயிருந்த நீ அழைக்கப்பட்டாயோ, கவலைப்படாதே. நீ சுயாதீனனாகக்கூடுமானாலும், அதை நலமாக உபயோகித்துக்கொள்.
22. கர்த்தருக்குள் அழைக்கப்பட்டவ னாகிய அடிமை கர்த்தருடைய சுயாதீன னாயிருக்கிறான். அவ்வண்ணமே அழைக் கப்பட்ட சுயாதீனன் கிறீஸ்துவின் அடிமையாயிருக்கிறான். (எபே. 6:6.)
23. நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப் பட்டிருக்கிறீர்கள். மனிதருக்கு அடிமைகளாகாதிருங்கள். (1 இரா. 1:18.)
24. சகோதரரே, அவனவன் தான் எந்த ஸ்திதியிலே அழைக்கப்பட்டானோ, அந்த ஸ்திதியிலே சர்வேசுரனுடைய சமுகத்தில் நிலைத்திருக்கக்கடவான்.
25. கன்னிகைகளைக் குறித்தோவெ னில், கர்த்தர் எனக்குக் கட்டளை கொ டுக்கவில்லை; ஆகிலும் நான் பிரமாணிக் கமுள்ளவனாயிருக்கும்படிக்கு ஆண்டவ ரிடம் கிருபை பெற்றுக்கொண் டதுபோல ஆலோசனையாகச் சொல்லுகிறேன்.
26. அதாவது: நம்மை தொடர்ந்து வருகிற துன்பத்தினிமித்தம் இப்படியே (விவாகமில்லாமல்) இருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன். (1 கொரி. 10:11.)
27. நீ மனைவியோடு பந்திக்கப்பட்டிருக்கிறாயோ, பந்தனத்தை அவிழ்க்கக் தேடாதே; நீ மனைவியில்லாதிருக்கிறாயோ, மனைவியைத் தேடாதே.
28. ஆகிலும் நீ ஒரு மனைவியைக் கொண்டிருந்தால், பாவமல்ல. ஒரு குமரி விவாகம் பண்ணினாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபாதைப்படுவார்கள். நீங்கள் இவைகளுக்கு உள்ளாகாதபடி ஆசிக்கிறேன். (லூக். 21:23.)
29. ஆதலால் சகோதரரே, நான் சொல்லுகிறதாவது: காலமானது குறுகினதாயிருக்கிறது: ஆகையால் மனைவியை உடையவர்கள் இல்லாதவர்களைப்போலவும், (உரோ. 13:11.)
30. அழுகிறவர்கள் அழாதவர்களைப் போலவும், சந்தோஷிக்கிறவர்கள் சந்தோஷியாதவர்களைப்போலவும், விலைக்குக் கொள்ளுகிறவர்கள், ஒன்றையும் சுதந்தரியாதவர்களைப் போலவும்,
31. இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதை அனுபவியாதவர்களைப் போலவும் இருக்கவேண்டும். இவ்வுலகத் தின் கோலம் மாயமாய்ப்போகின்றது.
32. ஆதலால் நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். மனைவி யில்லாதவன் ஆண்டவருக்கு எப்படிப் பிரியப்படலாமென்று கர்த்தருக்குரிய வைகளின்மேல் கவலையுற்றிருக்கிறான்.
33. மனைவியோடிருக்கிறவனோ, தன் மனைவிக்கு எப்படிப் பிரியப்படலாமென்றும், உலகத்துக்குரியவைகளில் கவலையுற்று, இருமனப்பட்டிருக்கிறான். (லூக். 14:20.)
34. அத்தன்மையே விவாகமில்லாத கன்னிகை கர்த்தருக்குரியவைகளைச் சிந்தித்து, சரீரத்திலும் ஆத்துமத்திலும் பரிசுத்தமுள்ளவளாயிருக்கப் பிரயாசைப் படுகிறாள். விவாக ஸ்திரீயோவென் றால், தன் புருஷனுக்கு எப்படிப் பிரியப் படலாமென்று உலகத்துக்குரியவை களைக் குறித்துக் கவலைப்படுகிறாள்.
35. ஆகிலும் நான் உங்களுக்குக் கண்ணிவைக்கிறதற்கல்ல, யோக்கியமாயிருக்கிறதையும், தடையின்றி ஆண் டவருக்கு ஊழியஞ்செய்ய வழியாயிருக் கிறதையும் உங்கள் பிரயோசனத்துக் காகச் சொல்லுகிறேன். (லூக். 10:39, 42.)
36. ஆனால் ஒருவன் தன் குமரியின் வயது முற்றினதைப்பற்றித் தனக்கு வெட்கமாயிருக்கிறதென்றும், அவளுக்கு மணம் முடிப்பது அவசியமென்றும் எண்ணினால், அவன் மனம்போல் செய்துகொள்ளட்டும். அவள் விவாகம் பண்ணினால் பாவமில்லை.
37. ஆயினும் அப்படிக்கு அவசியமில்லாதிருக்கையில், அவன் தன் மனதின்படி செய்ய அதிகாரமுடையவனாயிருந்து, தன் இருதயத்தில் உறுதியாய்த் திட்டம்பண்ணி, தன் கன்னிகையை அப்படியே காப்பாற்றிக்கொள்ள மன தில் தீர்மானித்தால், அவன் செய்வது நல்ல காரியந்தான்.
38. ஆதலால் தன் குமரியை விவாகம் பண்ணிக் கொடுக்கிறவன் நல்ல காரியஞ் செய்கிறான். அவளை விவாகம் பண்ணிக் கொடாதிருக்கிறவன் அதிக நல்ல காரியஞ் செய்கிறான்.
39. மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங் காலமளவும் பிரமாணத்துக்குக் கட்டுப்பட்டவளாயிருக்கிறாள். அவளுடைய புருஷன் இறந்து போனால், விடுதலையாகிறாள். அவள் தனக்கு இஷ்டமானவனை விவாகம் பண்ணிக்கொள்ளட்டும். ஆயினும் அவன் கர்த்தருக்குட்பட்டவனாய் இருக்க வேண்டும். (உரோ. 7:2.)
40. ஆகிலும் என் ஆலோசனைப் பிரகாரம் அவள் அப்படியே இருந்துவிட்டால், அதிக பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவ ஞானசிந்தை உண்டென்று எண்ணுகிறேன். (1 கொரி. 7:25.)
* 40. “நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக் குறித்து” என்று அர்ச். சின்னப்பர் அந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் சொல்லுகிறபடியினாலே கொரிந்தியர் அவருக்கு எழுதியிருந்த கேள்விகளுக்கு இதில் மாறுத்தரஞ் சொல்லுகிறாரென்று விளங்குகிறது.
இந்த அதிகாரத்தில் விவாக சம்பந்தமான ஆறு கேள்விகளுக்கு மாறுத்தரஞ் சொல்லுகிறார். ஆகையால் கொரிந்தியர் அந்த ஆறு கேள்விகளைப்பற்றி அவருக்கு எழுதியிருக்க வேண்டும். அந்த 6 கேள்விகளாவன:
1-வது, கலியாணக்காரர்களாயிருக்கிற கிறீஸ்தவர்கள் சமுசார வாழ்க்கையில் இருக்கலாமா? அதை விலக்கவேண்டுமா?
2-வது. கலியாணமில்லாத கிறீஸ்தவர்கள் கலியாணம் பண்ணுகிறது நல்லதா, கலியாணம் பண்ணாதிருக்கிறது நல்லதா?
3-வது. கிறீஸ்தவர்கள் தங்கள் மனைவிகளைத் தள்ளி வேறே விவாகம் பண்ணக் கூடுமா, கூடாதா?
4-வது. ஞானஸ்நானம் பெற்றவள் அஞ்ஞானியாயிருக்கிற தன் புருஷனைத் தள்ளிவிடலாமா, தள்ளாதிருக்கவேண்டுமா?
5-வது. கன்னிமை அல்லது சந்நியாச அந்தஸ்து கிறீஸ்தவர்களுக்குள்ளே நல்லதா, நல்லதில்லையா?
6-வது. கைம்பெண்கள் மறுபடி கலியாணஞ் செய்யலாமா? செய்யப்படாதா?
என்கிற இந்த ஆறு கேள்விகளாம். இவைகளுக்கு அர்ச். சின்னப்பர் எவ்வித பதில் சொல்லுகிறாரென்று இவ்வதிகாரத்தைக் கவனமாய் வாசிக்கிறவர்களுக்குத் தெளிவாக விளங்கும்