கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபம் - அதிகாரம் 08

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகள் மனசாட்சிக்கு விரோதமாயும் பிறருக்கு இடறலாயுமிருப்பதால், அவைகளைப் புசிக்கவொண்ணாதென்று போதிக்கிறார்.

1. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளின் விஷயத்தில் நம்மெல்லோருக்கும் அறிவுண்டென்று நமக்குத் தெரியும். அறிவு கர்வமுண்டாக் கும்: பரம அன்போ நல்விர்த்தியைப் பயக்கும். (அப். 15:29.)

2. தான் ஒன்றை அறிந்தவனென்று யாதொருவன் எண்ணினால், ஒன்றை யும் அறியவேண்டிய விதமாய் அவன் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. (கலாத். 6:3.)

3. சர்வேசுரனை சிநேகிக்கிறவன் எவனோ, அவன் அவராலே அறியப்பட் டிருக்கிறான். (கலாத். 4:9.)

4. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒரு பொருட்டல்லவென்றும், கடவுள் ஒருவரேயன்றி வேறில்லை யென்றும் அறிவோம். (1 கொரி. 10:19.)

5. ஏனென்றால் (தேவர்களும் கர்த்தாக்களுமென்று அநேகர் இருக்கிறார்கள்.) அப்படியே வானத்திலும் பூமியிலும் தேவர்களென்று சொல்லப்படுகிறது உண்டானாலும், (அரு. 10:34.)

6. உள்ளபடி பிதாவாகிய ஒரே தெய்வம் நமக்கு உண்டு. அவராலே சகலமும் உண்டானது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். சேசுக் கிறீஸ்துநாதராகிய ஒரே கர்த்தரும் உண்டு. அவர் மூலமாய்ச் சகலமும் படைக்கப்பட்டிருக்கிறது. நாமும் அவர் மூலமாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். (அரு. 1:2, 3; மலக். 2:10; கொலோ. 1:16.)

7. ஆனாலும் இந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை; ஏனெனில் சிலர் இன்னமும் விக்கிரகத்தின்மேல் மதிப்புள்ளவர்களாய்ப் (படைக்கப் பட்டதைப்) பிரசாதமாகப் புசிக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுத்தப்படுகின்றது. (1 கொரி. 10:28; உரோ. 14:14.)

8. போஜனமானது நம்மைச் சர்வேசுரனுக்கு உகந்தவர்களாக்குவதில்லை. ஏனெனில் நாம் புசித்த தினாலே நமக்கு ஒன்றுங் கூடி வந்ததுமில்லை; புசியாததினாலே நமக்கு ஒன்றுங் குறைந்துபோவது மில்லை. (உரோ. 14:17.)

9. ஆனால் இது காரியத்திலே உங்களுக்குள்ள உத்தரவு எவ்விதத்திலும் பலவீனருக்கு இடறலாகாபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். (உரோ. 14:20.)

10. ஏனெனில் அறிவுள்ளவன் விக்கிரகக் கோவிலிலே பந்தியமர்ந்திருக்கிறதை ஒருவன் கண்டால், அவனுடைய மனச்சாட்சி பலவீனமாயிருக்கக்கொள்ள, விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கும் படி அவனுக்குத் துணிவுண்டாகு மல்லவோ?

11. பலவீனமுள்ள உன் சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப் போகலாமா? அவனுக்காகக் கிறீஸ்துநாதர் மரித்தாரே. (உரோ. 14:15.)

12. இப்படி நீங்கள் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பல வீனமான அவர்களுடைய மனச் சாட்சியைக் குத்துகிறதினாலே கிறீஸ்து நாதருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்கிறீர்கள்.

13. இப்படியிருக்க, போஜனமானது என் சகோதரனுக்கு இடறலுண்டாக்குமாகில், என் சகோதரனுக்கு இடறலுண்டாகாதபடிக்கு நான் என்றென்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன். (உரோ. 14:21.)

* 13. இந்த அதிகாரத்திலே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பதார்த்தங்களின்பேரில் அர்ச். சின்னப்பர் போதிக்கிறதாவது: அஞ்ஞானிகளுக்குள்ளே அநேக தேவர்களும், தேவர்களுடைய விக்கிரகங்களும் இருந்தாலும், எல்லாவற்றையும் படைத்த சர்வேசுரன் ஒருவரே உண்டென்றும், நம்மை இரட்சித்த சேசுக்கிறீஸ்துவாகிய ஆண்டவர் ஒருவரேயென்றுஞ் சகல கிறீஸ்தவர்களும் அறிந்திருக்கிறார்கள். ஆகையால் விக்கிரகமென்னப்பட்டதெல்லாம் ஒன்றுமில்லை எனபதும், அந்த விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட பொருட்கள் மற்றப் பொருட்களைப்போலிருக்கிறதல்லாதே, விக்கிரகங்களுக்குப் படைத்ததினாலே எவ்விதத்திலும் அவைகள் திருப்பொருளாய் அல்லது பிரசாதமாய்ப் போகிறதில்லை என்பதும் நிச்சயமாம். ஆகையால் அப்படிப் படைக்கப்பட்ட பொருட்களை படைக்கப்படாத மற்ற பொருட்களைப்போல யாதொரு வித்தியாசமுமின்றி, அற்பக் குற்றமுமில்லாமல் புசிக்கலாம்; என்றாலும், இந்த நியாயத்தை அறிவுடையோரல்லாமல், சாமானிய கிறீஸ்தவர்களும் விசேஷமாய்ப் புதிதாய் ஞான ஸ்நானம் பெற்ற படிப்பில்லாத கிறீஸ்தவர்களும் கண்டுபிடியாமல், அவைகளை ஏதோ திருப்பொருளாகவும், பிரசாதமாகவும் எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை முன்னிட்டு அந்தப் பொருட்களைப் பிரசாதமாகப் புசிக்கத் துணிவார்களானால், தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாய் நடக்கிறதினாலே குற்றவாளிகளாய்ப் போகிறார்கள். ஆகையால் அப்படிப் பட்ட பொருட்கள் அவர்களுக்கு முழுவதும் விலக்கப்பட்ட பொருட்களாயிருக்கிறது. அந்தப் பொருட்களைத் திருப்பொருட்கள் அல்லவென்று அறிகிற அறிவுடையோர் அந்த அறிவின் நிமித்தம் அவைகளை யாதொரு குற்றமுமின்றிப் புசிக்கத்தக்க மற்றப் பதார்த்தங்களைப்போல் சாப்பிடக்கூடுமானாலும், மேற்சொல்லப்பட்ட அறிவீனருக்கு இடறலுண்டாகாதபடி இவர்களும் அதை ஒருபோதும் புசிக்கவொண்ணாது. ஆகையால் திருச்சபை எங்கும் ஒரே தன்மையாய்ப் போதிக்கிறதுபோலக் கிறீஸ்தவர்களில் ஒருவரும் விக்கிரகங்களுக்குப் படைத்த சோறு, தேங்காய் முதலான பதார்த்தங்களை அஞ்ஞானிக ளிடத்தில் முகத்தாக்ஷணியத்தைப்பற்றியாவது மற்ற எந்த முகாந்தரத்தைப்பற்றியாவது வாங் கவும் புசிக்கவுங் கூடாதென்று அர்ச். சின்னப்பர் போதிக்கிறார். அவர் இன்னும் இதற்கு வேறே முகாந்தரங்களை இந்த நிருபத்தின் 10-ம் அதி. 20-ம் வசனமுதல் துவக்கிக் கடைசி மட்டுஞ் சொல்லிக்கொண்டு வருகிறார். அவைகளையும் அதில் 23-ம் வசனத்தின் வியாக்கியானத்தையும் காண்க.