ஜனவரி 07

அர்ச். லுாசியான் - குரு, வேதசாட்சி (கி.பி.312). 

இவர் சீரியா தேசத்தில் பிறந்தார். இவர் வாலிபனாயிருந்தபோதே இவருடைய தாய் தந்தையர் இறந்து போனபடியால், தனக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, புண்ணிய வாளனான மக்காரியுஸ் என்பவருக்கு சீஷனாகி, வேதாகமங்களை வாசிப்பதிலும் புண்ணியக் கிரிகைகளைச் செய்வதிலும் காலத்தைச் செலவிட்டார். 

இவர் சாஸ்திரங்களைப் படித்தபின், குருப்பட்டம் பெற்று வேதம் போதித்துவந்தார். அக்காலத்தில் எழும்பிய வேத கலகத்தில் அர்ச். லூசியான் பிடிபட்டு, சிறைபடுத்தப்பட்டு, வெகு கொடூரமாய் உபாதிக்கப்பட்டார். 

அநேக நாட்களாய் அவருக்கு உணவு கொடுக்கப்படாததால், அவர் இளைத்து, களைத்துக் குற்றுயிராயிருக்கும் தருணத்தில், பேய்க்குப் படைக்கப்பட்ட பண்டங்களை அவருக்குக் கொடுக்க, அவர் அவைகளை உண்ணாமல் தள்ளிவைத்தார். 

மேலும் இவர் சங்கிலியால் கட்டப்பட்டு சிறையிலிருந்தபடியால், கிறிஸ்தவர்கள் கொண்டு வந்த அப்பத்தையும் இரசத்தையும் தமது நெஞ்சின்மேல் வைத்து தேவ வசீகரஞ் செய்து கிறிஸ்தவர்களுக்கு கொடுத்துவந்தார். 

மறுபடியும் அவர் நடுவனுக்கு முன் நிறுத்தப்பட்டு, வேதத்தை மறுதலிக்கும்படி பயமுறுத்தி உபாதிக்கப்பட்டபோது இவர் எதற்கும் அஞ்சாமல் தாம் கிறீஸ்தவனென்று தைரியத்துடன் சாட்சி கூறினார். 

இவரை சித்திரவதை செய்துக் கொலை செய்யும்படி நடுவன் தீர்ப்பிட்டான் அதன்படியே சேவகர் இவரை வதைத்துக் கொல்லும்போது, தான் கிறீஸ்தவனென்று சொல்லிக்கொண்டே உயிர்விட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை

நமது சத்திய வேதத்தை சாக்குபோக்குச் சொல்லி ஒருபோதும் மறைக்காதிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஸெத், மே. 
அர்ச். கெண்டிஜெர்னா, வி. 
அர்ச். ஆல்ட்ரிக், மே. 
அர்ச். தில்லோ , து. 
அர்ச். கணுாட், இ.