ஜனவரி 06

கர்த்தர் முன்று இராஜாக்களுக்குத் தம்மைக் காட்டியத் திருநாள்.

நமது கர்த்தராகிய சேசு கிறிஸ்துநாதர் பிறந்தபோது நடந்த பல அற்புத அதிசயங்களை தீர்க்கதரிசிகள் அவர் பிறப்பதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். 

அவைகளுள் ஒன்று புது நட்சத்திரம். கர்த்தர் பிறந்தபோது அற்புதமாய்க் காணப்பட்ட புது நட்சத்திரத்தை சகல மனிதருங் கண்டபோதிலும், சோதிட சாஸ்திரிகளான மூன்று இராஜாக்கள் மாத்திரம், பிறந்த உலக இரட்சகரை உடனே சந்திக்கத் தீர்மானித்தார்கள். 

இவர்கள் இந்த நெடும் பிரயாணத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல், நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து பெத்லகேம் என்னும் ஊருக்குச் சென்று, சிறு குடிசையில் சேசு பாலனைக் கண்டு மகிழ்ந்தார்கள். 

அங்கு காணப்பட்ட வறுமையையும், தரித்திரத்தையும் பார்த்து சற்றும் மனம் சோர்ந்து சந்தேகியாமல் அந்த பாலனே பரலோக பூலோக இராஜாவென்றும், மெய்யான தேவனென்றும் நம்பி விசுவசித்து, பொன், தூபம், மீறை முதலியவைகளை அவர் பாதத்தில் சமர்ப்பித்து அவரை ஆராதித்தார்கள். 

கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் அப்போஸ்தலரான அர்ச். தோமையாரால் இவர்கள் ஞானஸ்நானமும், பிறகு மேற்றிராணியார் பட்டமும் பெற்று, வேதத்தைப் போதித்து, வேதத்துக்காக இரத்தம் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.

யோசனை 

நமக்கு சர்வேசுரன் பலவிதமாய் அருளும் ஞானப்பிரகாசத்தில் பிரமாணிக்கமாய் நடப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மெலானியுஸ், மே. 
அர்ச். நிலாம்மன், வ. 
அர்ச். இராயப்பர், ம.